சீத்தாராம் யெச்சூரி எம்.பி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சீத்தாராம் யெச்சூரி எம்.பி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 11 மே, 2014

இடது திசை பயணம் ( LEFT HAND DRIVE )

 கட்டுரையாளர் : தோழர். சீத்தாராம் யெச்சூரி, எம்.பி.,           
                                 அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்,             
                            மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி                                                                             
               ''இடது திசை பயணம்'' (லெஃப்ட் ஹேண்ட் டிரைவ்) என்ற தொடர் தலைப்பில் இந்த நாளேட்டில் நான் எழுதும் 200-வது கட்டுரை இது. 100 பௌர்ணமிகளும், 100 அமாவாசைகளும் வந்து போயிருக்கும் இந்த இடைப்பட்ட காலத்தில், எனது கட்டுரைகளைப் பிரசுரித்த `ஹிந்துஸ்தான் நாளேட்டின் ஆசிரியருக்கும், ஆசிரியர் குழுவிற்கும், வாசகர்களுக்கும் எனது நன்றியினை உரித்தாக்கிக் கொள்கிறேன். காரல் மார்க்சின் தீர்க்கதரிசனம்...! இந்த 200-வது கட்டுரை எழுதும் நேரத்தில் காரல் மார்க்சினுடைய 196-வது பிறந்த நாளில் இணைவது ஒரு மகிழ்ச்சிக்குரிய நிகழ் வொற்றுமை. மனிதகுல நாகரீக வளர்ச்சியில் பங்களித்தவர்கள் அனைவரையும் மக்கள் நன்றியுடன் நினைவு கூர்கிறார்கள்.
              நமது அறிவினையும், புரிதலையும் விரிவுபடுத்திய விஞ்ஞானிகள் பலரும் இன்றும் நினைக்கப்படுகிறார்கள். இருப்பினும், இத்தகைய பங்களிப்பாளர்களில் மார்க்ஸ் முதல் இடத்தினை வகிக்கிறார். ஒட்டுமொத்த மனிதகுலத்தின் புரிதல் நிலையை உச்சத்திற்கு எடுத்துச் செல்வதில் அவர் செலுத்தியிருக்கும் பன்முகப் பங்களிப்பிற்காக மட்டுமல்லாமல், மனிதர்களின் அன்றாடப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவுகிறார் என்ற வகையிலும் அவர் நினைவு கூறப்படுகிறார். கடந்த ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்து உலகப் பொருளாதாரத்தை சூழ்ந்து நிற்கும் நெருக்கடியின் வேர்களை அறிந்து கொள்வதற்கும், பொருளாதார ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும், மனிதகுலத்தை தொடர்ந்து சித்ரவதை செய்துவரும் பல்வேறு சமூக முரண்பாடுகள் குறித்து ஆழமாகப் புரிந்து கொள்வதற்கும், தவிர்க்க இயலாதவாறு மார்க்சையே நாட வேண்டியுள்ளது.
                இன்றைக்கு நடைபெறும் தேர்தல்களில் பணபலம் ஒரு புறம் என்றால், ஒரே குடும்பத்தின் உடன்பிறப்புக்களை ஒருவருவருக்கு ஒருவர் மோதுவதற்கு நிர்ப்பந்திப்பது உட்பட, தேர்தல் வக்கிரம் உச்சத்திற்குச் சென்றிருக்கிறது. அதையெல்லாம் பார்க்கும் போது, சமகாலத்திற்கும் மார்க்ஸ் எப்படி பொருந்துகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கையில் அவர் கூறுவதைப் பாருங்கள் : “மக்களால் மிகவும் மரியாதைக்குரியதாகக் கருதப்பட்ட ஒவ்வொரு தொழிலின் மரியாதையினையும் பூர்ஷ்வாக்கள் அழித்து விட்டனர். டாக்டர்கள், வழக்கறிஞர்கள், மத குருமார்கள், விஞ்ஞானிகள் என அனைவரையும் தங்களது கூலித் தொழிலாளிகளாக மாற்றிவிட்டனர். குடும்பங்களில் நிலவும் உறவுகள், உணர்வுகள் என்ற திரைச்சீலையினைக் கிழித்தெறிந்து, குடும்ப உறவினை வெறும் பண உறவாக மாற்றிவிட்டனர்.” இன்றைய நிலை குறித்து எத்தனை தீர்க்க தரிசனமான வார்த்தைகள் பாருங்கள்!

போலி அலை...!            

                மோடி அலை அடிக்கிறதென்றும், அது சுனாமியாக மாறி நாடு முழுவதையும் சுருட்டப் போகிறது என்றும் செய்யப்பட்ட ஊடகங்களின் பெருங்குரல் இப்போது சற்றுக் குறைந்துவிட்டதாகத் தோன்றுகிறது. ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும், வருங்காலப் பிரதமர் என மோடியின் உருவம் வரையப்பட்ட விளம்பரங்களை கடந்த ஓராண்டாகப் பார்த்து வந்திருக்கிறோம். இதுவே மோடிக்கு எதிரான உணர்வுகளையும் உருவாக்கியிருக்கிறது. பிஜேபிக்கு தெளிவான வெற்றி என்று ஊடகங்கள் பலவும் கூறி வருகின்றன. ஆனால், களச் செய்திகளைத் தொகுத்து நிருபர்கள் தரும் அறிக்கைகள், ஊடகங்கள் வெளியிடும் கருத்துக் கணிப்புக்களிடம் இருந்து, கள எதார்த்தம் முற்றிலும் வேறுபட்டிருப்பதை உணர்த்துகின்றன.

பிஜேபியின் விரக்தி...!                  

             இந்தி பேசும் மாநிலங்களில், “என்னதான், மோடி என்று சொன்னாலும், ஸ்தல மட்ட நிலைமைகளே விஷயங்களைத் தீர்மானிக்கின்றன” என்ற செய்தி, ஆர்.எஸ்.எஸ்சுக்கும் பிஜேபிக்கும் கவலை அளிப்ப தாகும். பீகார் மாநிலத்தின் தேர்தல்களில், பிஜேபியின் ‘ரதத்தினை’ இப்போது மீண்டும் லாலு பிரசாத் தான் தடுத்து நிறுத்துகிறார் என்றும், அரசின் வளர்ச்சித் திட்டங்களின் பயன்களை நித்தீஷ் குமார் அறுவடை செய்யவிருக்கிறார் என்றும் செய்திகள் வருகின்றன. உத்தரப் பிரதேசத்திலோ, முலாயம் சிங் யாதவ் மற்றும் மாயாவதி என இருவரைச் சுற்றிய, சாதி ஆதரவு அணி சேர்க்கையாக, தேர்தல்கள் மாறி வருகின்றன என்பதும் செய்தி.இவ்வாறு அந்தந்த மாநிலங்களின் பிரச்சனைகளே மக்களின் வாழ்வில் பெருமளவில் செல்வாக்கு செலுத்தும் நிலையின் காரணமாக ஆர்எஸ்எஸ்சும், பிஜேபியும் விரக்தியடைந்திருக்கின்றன. எதிர்பார்த்ததைப் போல, மதவெறியினைத் தூண்டும் முயற்சியில் அவை இறங்கி வருகின்றன. உத்தரப்பிரதேசத்தில் பிஜேபி தலைவரின் வலது கரம் எனக் கருதப்படும் ஒருவர் அதில் பெரும் பங்காற்றி வருகிறார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் போட்டியிடும் ஆசம்கார் தொகுதி “பயங்கரவாதிகளின் தளமாக” செயல்பட்டு வருகிறது என்றெல் லாம் மதவெறியினைத் தூண்டும் வகையில் அவர் பேசி வருகிறார்.

மோடியின் மதவெறிப் பேச்சு...!                

                இந்துக்களின் வாக்குக்களை மத ரீதியில் திரட்டும் மிகவும் மோசமான வாக்கு வங்கி அரசியல் இப்போது அங்கே மேலோங்கி வருகிறது. மே மாதம் 4ம் தேதி மேற்குவங்கத்தில் அசன்சால் நகரில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில், தான் பிரதமராகிவிட்டால், பங்களாதேஷிகள் நாட்டை விட்டு வெளியேறும் வகையில், மூட்டை கட்டி தயாராக இருக்க வேண்டும் என்றார். பங்களாதேஷிகளில் முஸ்லிம் மக்களுக்கு மட்டுமே இந்த எச்சரிக்கை எனவும், பங்களாதேஷிகளில், இந்துக்களையும், முஸ்லிம்களையும் வேறுபடுத்தி, மதவெறியின் உச்சத்திற்குச் சென்றிருக்கிறார். சட்டப்பூர்வமாக இந்தியாவில் வசிக்கும் வங்காளி முஸ்லிம்களுக்கு எதிரான மதவெறிப் பேச்சு இது. அண்மையில், அசாம் மாநிலத்தில் போடோ பயங்கரவாதிகளின் தாக்குதல்களில் 31 முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்தக் கொலைகளுக்கு, மதவெறித் தூண்டுதல்களும் காரணம் என சில ஊடகங்கள் குறிப்பிட்டிருக்கின்றன. புனிதமாகக் கருதப்படும் மனித உரிமைகள் இன்று தேர்தல் லாபத்திற்காக, பலி கொடுக்கப்பட்டு வருகின்றன.

பந்தய சூதாட்ட ஒப்பந்தம்...!               

             இதே போன்று, மேற்கு வங்கத்தில் பிஜேபிக்கும் திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையில் பந்தய சூதாட்ட ஒப்பந்தம் (மேட்ச் ஃபிக்சிங்) ஒன்று உருவாகியிருக்கிறது. மக்களின் மத ரீதியான இடைவெளிகளை விரிவுபடுத்திக் கொண்டு, தத்தம் வாக்கு வங்கிகளை ஒன்று திரட்டும் ஏற்பாடே அது. தன் பின்னால் அணிதிரண்டிருக்கும் இந்துத்துவா தளத்தினை பிஜேபி இழந்து விடக்கூடாது, அதே வேளையில், திரிணாமுல் மீது நம்பிக்கை இழந்து வரும் மைனாரிட்டி மக்கள் திரிணாமுல் ஆதரவு நிலையிலிருந்து வெளியேறி, இடதுமுன்னணி பக்கம் போய்விடக் கூடாது. இந்த அடிப்படையில்தான் அந்த ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மறுபுறத்தில், தேர்தல்களுக்குப் பின் னர் பெரும்பான்மை எண்ணிக்கை என வரும்போது, தனக்கு கூட்டாளிகள் தேவைப்படு வார்கள் என்ற எதிர்பார்ப்பில், பிஜேபி தலைவர் மேற்குவங்கத்திற்கான ஒரு சிறப்புத் திட்டம் (பெங்கால் பேக்கேஜ்) குறித்துப் பேசி வருகிறார். ஆர்எஸ்எஸ் / பிஜேபி வழக்கம் போன்று இந்த இரட்டை நாக்குப் பேச்சுக் களில் ஈடுபட்டு வருகின்றன.

மக்கள் கேட்பது நிவாரணங்களே...!                    

          இந்த வகை ஏமாற்றுக்களின் பின்னணியில், மக்களுடைய மிக முக்கியமான அடிப்படைப் பிரச்சனைகள் மறக்கப்படுகின்றன. அவர்களுக்கு பல நிவாரணங்கள் தேவைப்படுகின்றன. கடுமையான பணவீக்கம், வேலையின்மை, அன்றாட வாழ்க்கையில் அனுபவிக்கும் பல்வேறு துன்ப துயரங்களிலிருந்து அவர்களுக்கு நிவாரணம் தேவைப்படுகிறது. அத்தகைய நிவாரணம் ஒரு மாற்றுக் கொள்கைகளின் மூலம் தான் கிடைக்க முடியும். அதாவது, இன்று காங்கிரசும் பிஜேபியும் முன் வைப்பதற்கு மாற்றான கொள்கைகளின் மூலம் மட்டுமே அது சாத்தியம். இந்தத் தேர்தல்களில் அலை என்று ஏதாவது ஒன்று இருக்குமானால், அது நிவாரணம் கோருகின்ற மக்களுடைய அலையே அது.

மக்களின் அலையே வெல்லும்...!                   

              வெளி நிர்ப்பந்தங்கள், வாக்குகளுக்காக லஞ்சம் போன்ற ஏதுமின்றி, மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் வகையில் தேர்தல்கள் நேர்மையாக நடந்தால் மட்டுமே இது சாத்தியம். ஏழாவது கட்ட வாக்குப் பதிவில், வன்முறை, அச்சுறுத்தல், தசை பலம், பண பலம் இவை அனைத்தும் தேர்தல் களத்தில் – குறிப்பாக, மேற்கு வங்கத்தில் - விளையாடுவது குறித்து இன்று செய்திகள் பல வந்து கொண்டிருக்கின்றன. ஆளும் கட்சிக்கு எதிரான காங்கிரஸ், பிஜேபி உள்ளிட்ட அனைவரின் குற்றச் சாட்டுக்களையும் தேர்தல் கமிஷன் பரி சீலித்து ஏற்பட்டிருக்கும் தவறுகளைத் திருத்த வேண்டும். முக்கியமாக, மீதியிருக்கும் இரண்டு கட்ட வாக்குப்பதிவில், ஜனநாயக நடைமுறைகள் மீறப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மீண்டும் நாம் சந்திப்பதற்கு முன், மக்களின் அலை வென்றிருக்கும் என நாம் நம்பலாம்.

தமிழில் : தோழர்.இ.எம்.ஜோசப்
நன்றி : `ஹிந்துஸ்தான் டைம்ஸ் 5.5.2014’

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

நாடு முழுவதும் `மோடி அலை’ எனில் இரண்டு தொகுதிகளில் போட்டி ஏன்?


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி, எம்.பி கேள்வி

          “நாடு முழுவதிலும் மோடி அலை வீசுகிறது என்றால், வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதியை சல்லடை போட்டு சலித்தெடுத்தது ஏன்...? வெற்றிநிச்சயம் எனில் வாரணாசி தொகுதியிலிருந்து மட்டும் போட்டியிடாமல் இரண்டாவது தொகுதியை தேர்வு செய்தது ஏன்...?” 
என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி எர்ணாகுளத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பினார்.

         மக்களவை தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத ஒரு மாற்று அரசினை அமைத்திட இடதுசாரிக்கட்சிகள் பிராந்திய கட்சிகளுடன் செயல்பட்டு வருகின்றன என்ற யெச்சூரி, 2009 தேர்தல்களை விட கூடுதலான எண்ணிக்கையில் இடதுசாரிக் கட்சிகள் வெற்றிபெறும் என்றும் கூறினார். மேற்குவங்கத்தில், அடக்குமுறையும், அச்சுறுத்தலும் பெரிய அளவில் திரிணாமுல் காங்கிரசால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார்.
                 “மதவாத சக்திகள் ஏன் இன்றைக்கு இந்த அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளன? இதற்கு யார் பொறுப்பு” என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், இன்றைய இத்தகையதொரு அபாயகரமான சூழலுக்கு காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளே காரணம் எனயெச்சூரி சாடினார். தாங்கள் மதவாத சக்திகளுக்கு எதிரானவர்கள் என்பதனை மக்கள் முன் காங்கிரஸ் கட்சி நிரூபித்திட வேண்டும் என்றார்.

கேரளம் வழிகாட்டும் :      
            மேலும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது: விலைவாசி உயர்வு, வேலையின்மை, பாதுகாப்பின்மை போன்ற நாடு சந்திக்கும் பிரச்சனைகளுக்கு காங்கிரஸ்-பாஜக அல்லாத அரசு அமைவதன் மூலம்தான் தீர்வுகாண முடியும்.
             இந்த சூழ்நிலையில், வாக்குச்சீட்டு மூலம் கம்யூனிஸ்ட் அரசை அதிகாரத்தில் அமர்த்தி வரலாற்றுக் கடமையை நிறைவேற்றிய கேரளம் தான் மத்தியில் மாற்று அரசு அமைவதற்கான பாதையை உருவாக்கி வழிகாட்டப்போகிறது. ஒரு சில பெரும் செல்வந்தர்களின் ஒளிரும் இந்தியா, மிகப் பெரும்பான்மையான சாமானிய மக்கள் துயரத்தில் வாழ்கின்ற அவதிப்படும் இந்தியா என இரண்டு இந்தியா இப்போது உள்ளது. நாட்டின் வளங்கள் அனைத்தையும் மக்களுக்காக பயன்படுத்தி அனைவருக்குமான ஒரே இந்தியாவை உருவாக்கு வதுதான் இடதுசாரி மாற்று அணியின் லட்சியமாகும்.
             ஊழல், மக்கள் விரோத கொள்கைகள் ஆகியவற்றை மக்கள் தலையில் திணிப்பதிலும் பாஜகவும் காங்கிரசும் இணைந்து செயல்படுகின்றன. அதனால் தான் 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் குறித்துவிசாரணை நடத்திய பி.சி. சாக்கோ தலைமையிலான நாடாளுமன்றக்குழுவிடம் குறிப்பிட்ட காலகட்டங்களை விசாரணையிலிருந்து தவிர்க்க வேண்டும் என்று இவர்கள் கோரினார்கள்.
                ஊழலில் மூழ்கிய காங்கிரஸ் தலைவர் அசோக் சவாண், பாஜக தலைவர் எடியூரப்பா ஆகியோர் மீண்டும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். ஊழல் விஷயத்தில் இந்த இருகட்சிகளுக்கும் உள்ள அணுகுமுறையையே இது எடுத்துக் காட்டுகிறது.
               
யார் பிரதமர் : 
          மூன்றாவது அணிக்கு பிரதமர் வேட்பாளர் இல்லை என்ற வாதம் அர்த்தமற்றதாகும். 1977ல் அமைந்த ஜனதா அரசின் காலம் முதல் முன்கூட்டியே நிச்சயிக்கப்பட்ட பிரதமர்கள் நாட்டில் இருந்ததில்லை.
              தன்னைத்தானே பிரதமர் வேட்பாளராக அறிவித்துக் கொண்ட இந்திரா காந்தி அன்று தோல்வியடைந்தார். பிற்காலத்தில் வி.பி.சிங், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் போன்றவர்களும் முன் கூட்டி நிச்சயக்கப்பட்டு பிரதமர் ஆனவர்கள் அல்ல. 2004ல் மன்மோகன் சிங் பிரதமர் ஆவார் என்று யாராவது நினைத்திருப்பார்களா? காங்கிரசோ, பாஜகவோ அல்ல, பிரதேச கட்சிகள்தான் இப்போது அதிக பலத்துடன் உள்ளன. தேர்தலுக்கு பின் இவர்களிடையே ஒற்றுமை வலுப்பெறும். வகுப்புவாத சக்திகள் நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாக வளர்ந் திருப்பதற்கு காங்கிரஸ்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

               இதிலிருந்து ஏ.கே.அந்தோணி தப்பிக்க முடியாது. தேர்தல் கணிப்புகள் எல்லாம் பெரும் ஏமாற்றும் வித்தையாகும். “மாற்றி வாக்களித்து விட்டீர்களா? கவலைப்படாதீர்கள். கருத்துகணிப்பில் நான் சரி செய்து விடுகிறேன்” என்று கூறுகின்ற ஆ.கே.லட்சுமணின் கார்ட்டூன் கதாப்பாத்திரத்தைத்தான் இது நினைவூட்டுகிறது.இவ்வாறு யெச்சூரி கூறினார்.

சனி, 22 ஜூன், 2013

ராஜீவ் - ஜெயவர்த்தனே உடன்பாட்டைச் செயல்படுத்த இந்தியா தலையிட வேண்டும்....!

 பிரதமருக்கு சீத்தாராம் யெச்சூரி எம்.பி., கடிதம்                       
         இந்திய - இலங்கை ஒப்பந்தத்தைச் செயல்படுத்த இந்திய அரசு முன்வரவேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலமைப்புக்குழு உறுப்பினரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சீத்தாராம் யெச்சூரி கடிதம் எழுதியுள்ளார்.அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
          ஊடகங்களில் வெளியிட்டிருப்பது போல் இலங்கையின் வடக்கு மாநில கவுன்சில் தேர்தலுக்கு முன் இலங்கை அரசியல் சட்டத்தின் 13-வது திருத்தத்தின் சில முக்கிய பகுதிகள் திட்டமிட்டே நீர்த்துப் போகும் வகையில் சில ஆலோசனைகளை இலங்கை அரசு முன் வைத்திருப்பதைக் கண்டு உங்கள் கவலையினை வெளியிட்டிருப்பது முற்றிலும் சரியானதே. 13-வது திருத்தத்தையும் அதற்கு மேலும் சென்று ஒரு அரசியல் தீர்வினை கொடுப்பதாக இந்திய அரசிடமும் சர்வதேச சமூகத்திடமும் இலங்கை அரசு கொடுத்த வாக்குறுதிகள் பற்றிய சந்தேகத்தினை தற்போது இலங்கை அரசால் முன்வைக்கப்படும் மாற்றங்கள் எழுப்புகின்றன.
           போர்ப் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கக்குழு தன்னுடைய பரிந்துரையாக வைத்திருந்த மாநிலங்களுக்கு அதிகாரப் பகிர்வினை அளிக்கும் அரசியல் தீர்வு என்ற நோக்கத்துக்கு தற்போது இலங்கை அரசு முன்வைக்கும் மாற்றங்கள் எந்த வகையிலும் பொருந்துவதாக இல்லை. இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நல்வாழ்வு குறித்தும் அங்கு வாழும் தமிழ் சமூகம் இலங்கையில் கண்ணியமான வாழ்வும், சம உரிமையும் பெற்று குடிமக்களாக வாழ வேண்டும் என்பதிலும் இந்தியாவில் ஆழ்ந்த அக்கறை உள்ளது. நீங்கள் தெரிவித்துள்ள கருத்தின் வழியே நின்று, எதிர்காலத்தில் சமத்துவம், நீதி, சுயமரியாதையுடன் இலங்கையில் உள்ள தமிழ் சமூகம் வாழ்வதற்கான உறுதிப்பாட்டினைப் பெற இந்திய அரசு தனது அரசியல் உறவினை செயலூக்கத்தோடு பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். 13-வது திருத்தம் என்பது வரலாற்று ரீதியாக ஏற்கனவே உருவான ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக உருவானது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இறையாண்மை மிக்க இந்த இரு நாடுகளும் அவர்களுக்கிடையேயான நல்லுறவை வலுப்படுத்திக்கொண்டே, அந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான ஊக்கமுடன் இந்திய அரசு செயல்படவேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------------------


Sri Lankan Tamil issue - Yechury's Letter to PM

Dear Dr. Manmohan Singhji,

It was a relief to hear your comments expressing dismay, as reported by the media, at the suggestion that the Government of Sri Lanka planned to dilute certain key provisions of the 13th Amendment to the Sri Lankan Constitution ahead of elections to the Northern Provincial Council.

It was noted that the proposed changes raised doubts about the commitments made by the Sri Lankan Government to India and the international community, including the United Nations, on a political settlement in Sri Lanka that would go beyond the 13th Amendment. The changes would also be incompatible with the recommendation of the Lessons Learnt and Reconciliation Commission (LLRC), set up by the Government of Sri Lanka, calling for a political settlement based on the devolution of power to the provinces.

There is deep concern in India about the welfare and well being of the Tamil community in Sri Lanka and hoping that the Sri Lankan Tamil community would lead a life of dignity, as equal citizens, in Sri Lanka.

I would urge you to ensure that the Government of India plays a proactive diplomatic role in discharging its commitment for a future for the Sri Lankan Tamil community marked by equality, justice and self-respect. Needless to add, this 13th Amendment was the consequence of the historic Rajiv-Jayawardene Accord. It is, thus, expected that India plays a role in the implementation of the provisions of the Accord, while strengthening the best of relations between our two sovereign countries.

With regards,

Yours sincerely

Sd/-

(Sitaram Yechury)
 

வியாழன், 8 நவம்பர், 2012

நிலுவை வரிகளை வசூலித்தாலே விலையேற்றம் தேவையில்லை...!

           இந்திய சமூக விஞ்ஞான கழகம் சார்பில் சென்னையில் நேற்று முன் தினம்  6 - ஆம் தேதியன்று  நடைபெற்ற வி.பி.சிந்தன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் ‘12 - வது ஐந்தாண்டுத் திட்டமும் சாமானிய மக்களும்’ என்ற தலைப்பில் உரையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம்யெச்சூரி எம்.பி., கூறியது வருமாறு: 
           ஆவடி மாநாட்டில் சோசலிசம் பேசிய காங்கிரஸ் இன்று தனியார் மயமே சகலத்திற்கும் தீர்வு என்ற பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த போது முதல் ஐந்தாண்டு திட்டத்தை அரசு தீட்டவில்லை. டாடா, பிர்லா போன்ற பெரும் தொழிலதிபர்கள் தான் தீட்டினர். அப்போதிலிருந்தே அரசு எப்படி செயல்படவேண்டும் யாருக்காக திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதை முதலாளி வர்க்கம் கட்டளையிடத் துவங்கி விட்டது.
          
விலை உயர்வின் பின்னணி

       கடந்த ஞாயிற்றுக்கிழமை தில்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி தனது தோல்விகளை மறைக்க பேரணி நடத்தியுள்ளது. சோனியா காந்தியும் மன்மோகன்சிங்கும் இளவரசர் ராகுல் காந்தியும் பொருளாதார சீர்திருத்தங்கள் செய்யாவிட்டால் நாட்டை முன்னேற்ற முடியாது என்றுகூறியிருக்கிறார்கள். அரசு நலத்திட்டங்களில் பொது முதலீட்டை குறைத்து தனியார் முதலீட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இப்படி தனியார் முதலீடு அதிகரிக்கப்பட்டதால் தான் நெடுஞ்சாலையில் நுழைவு வரி என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மின்சாரம் உள்பட பல அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் அதிக விலை கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 12வது ஐந்தாண்டு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இது அனைத்து மாநில முதலமைச்சர்களை கொண்ட தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் (என்டிசி) இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. இதற்கான தேதியையும் மத்திய அரசு இதுவரை இறுதிப்படுத்தவில்லை. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள அந்த திட்டத்திற்கான வரைவு அறிக்கை பொது வலைத்தளங்களிலும் வெளியிடப்படவில்லை. இந்தத் திட்டத்திற்கான அணுகுமுறை அறிக்கையை திட்டக்குழு 2011 ஆம் ஆண்டே வெளியிட்டுவிட்டது. ஆனால் கடந்த ஏப்ரல் 1 முதல் துவங்கிய 2012-13 - ஆம் நிதியாண்டில் இருந்து இது அமலுக்கு வந்திருக்கவேண்டும். ஆனால் அரசு அதற்கு விடுமுறை விட்டுவிட்டது போலும். தனியார் முதலீட்டை ஊக்கப்படுத்தும் பல அம்சங்கள் அதில் அடங்கியிருப்பதால் தான் திட்ட அறிக்கையை மத்திய அரசு மறைக்கிறது. 1950-ஆம் ஆண்டு முதல் திட்டக்குழு அமைக்கப்பட்டபோது நாட்டில் உள்ள அனைத்து மக்களும் சமமான உரிமைகளை பெற்று வாழ உறுதி அளிக்கப்பட்டது. நாட்டில் உள்ள அனைத்து வளங்களையும் அரசு கையகப்படுத்தி பொது நோக்கங்களுக்காக பயன்படுத்தும் என்று அதில் கூறப்பட்டடது. ஆனால் வெட்கக்கேடான விஷயம் என்ன வென்றால் 12-வது ஐந்தாண்டு திட்டத்தை நாடாளுமன்றத்தில் கூட இது வரை விவாதிக்க அரசு தயாராக இல்லை என்பதுதான். தனியார் முதலீட்டை பெற்றால் தான் நிதிப்பற்றாக் குறையை போக்க முடியும் என்றும் அரசாங்கப் பொது செலவு குறையும் என்றும், அரசு வாதிடுகிறது. தனியார் பெருநிறுவனங்களுக்கு கடந்த பட்ஜெட்டில் அரசு 5.25லட்சம் கோடிக்கு வரிச்சலுகை அளித்தது. ஆனால் நாட்டின் நிதிப் பற்றாக்குறை எவ்வளவு என்றால் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.9 சதவீதம். அதாவது 5.22 லட்சம் கோடி. அந்த வரிச்சலுகையை நிறுத்தியிருந்தால் இந்த பற்றாக்குறையை போக்கியிருக்கமுடியும். நிலுவை வரியை வசூலித்தாலே அரசுக்கு ஏராளமான நிதி கிடைக்கும். பெட்ரோல், டீசல், சமையல் எரி வாயு விலையை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை. நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் 25 கிலோ அரிசி அல்லது கோதுமையை இலவசமாக வழங்கமுடியும். இதற்கு ஆண்டுக்கு வெறும் 8000கோடி ரூபாய் தான் செலவாகும்.

பிபிபி - முக்கியத்துவம்

          ஆனால் பிபிபி எனப்படும் அரசு - தனியார் கூட்டு முதலீட்டை அதிகரிப்பதற்கே முக்கியத்துவம் அளிக்கிறது. இதன் காரணமாக டில்லி விமான நிலையம் உலகிலேயே அதிக கட்டணம் வசூலிக்கும் விமான நிலையமாக தற்போது மாறியுள்ளது. காரணம் அந்த விமான நிலைய புதுப்பிக்கும் பணியை ஒரு தனியார் நிறுவனம் தான் மேற்கொண்டது. ஐநா சபையின் புத்தாயிரதாண்டு குறிக்கோள்படி உலகில் அனைத்து நாடுகளிலும் வறுமையை குறைக்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதிகார பூர்வ புள்ளி விவரங்கள் படி கிராமபுறத்தில் நாள் ஒன்றுக்கு 2200 கலோரிகளும் நகர்ப்புறத்தில் 2100 கலோரி உணவும் மக்கள் உட்கொள்ளவேண்டும் என்று அப்படிப்பட்டவர்களே வறுமையில்லாத மக்கள் என்று கூறப்பட்டது. நம் நாட்டில் இரு பிரிவு மக்களும் 2400 கலோரி உணவை உட்கொண்டல் வறுமையில்லாத மக்கள் என்று திட்டக்குழு கூறியது. ஆனால் திட்டக்குழுவே எடுத்த கணக்கெடுப்பின் படி கிராமப்புற பகுதிகளில் உள்ள 69 விழுக்காட்டினரும் நகரப் புறத்தில் உள்ள 64.5 விழுக்காட்டினரும் அந்த அளவுக்கு கலோரிகளை அடையவில்லை என்பது தெரியவந்துள்ளது. இது 2004-2005ஆம் ஆண்டு கணக்கு. 2009-10ஆம் நிதியாண்டில் இது மேலும் வீழ்ச்சி அடைந்து முறையே 76 மற்றும் 68 விழுக்காடாக அதிகரித்துவிட்டது. வேலைவாய்ப்பை பொறுத்த வரை அதிகாரப்பூர்வ புள்ளிவிவரப்படி 2004-2005 ஆம் ஆண்டு மற்றும் 2009-10 ஆம் ஆண்டு 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் அனைத்து சுயவேலை வாய்ப்பு உள்பட ஆண்டு வளர்ச்சி விகிதம் 0.82 விழுக்காடு தான். இதற்கு முந்தைய ஐந்தாண்டுத் திட்ட சர்வேயின் படி இது 2.7 விழுக்காடாக இருந்தது. ஆண்டு பொருளாதார வளர்ச்சி 8 விழுக்காடு உயர்ந்துள்ள போதிலும் உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பு சரிந்துள்ளது. உலக வறுமை குறித்த உலக வங்கியின் அறிக்கையில் 2012ஆம் ஆண்டு இந்தியா மொத்தமுள்ள 79 நாடுகளில் 65வது இடத்தில் உள்ளது. சமீபத்திய புள்ளிவிவரப்படி உலகில் எடை குறைவான குழந்தைகள் உள்ள 129 நாடு களின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தை பிடித்துள்ளது. மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட பசிபிக் பகுதியில் உள்ள தைமூர் என்ற தீவு நாடு கூட இந்தியாவை விட முன்னேறியுள்ளது.

மறுக்கப்படும் சுகாதாரம்

        12வது ஐந்தாண்டு திட்டம் சுகாதாரத்துறையிலும் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் அரசு நிதி தனியார் மருத்துவமனைகளுக்கும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்குத் தான் செல்கிறதே தவிர. மக்களுக்கு தேவையான சுகாதார வசதிகள் கிடைக்கவில்லை. அதாவது அரசாங்கப் பணத்தை கொண்டு தனியார் மருத்துவமனைகள் கொழுத்து வருகின்றன. இந்தியாவில் உள்ள 500 பெரும் நிறுவனங்கள் கடந்த மார்ச் மாதத்தோடு 3 ஆண்டுகளில் வைத்துள்ள ரொக்க கையிருப்பு ரூ.9.3 லட்சம் கோடியாகும். இந்த நிதியே இந்தியாவில் ஆண்டுக்கு 40ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு ஆறு வழிச்சாலைகளை அமைக்க போதுமானது. ஆனால் தற்போது நிதியில்லை என்றுகூறி ஆண்டுக்கு வெறும் 800 கி.மீ நீளத்திற்கே 6 வழிச்சாலைகள் அமைக்கமுடிகிறது. இப்படி முதலாளித்துவம் பெரும் நிதியை திரட்டிவைத்துள்ளது. மறுபுறம் மக்கள் நாள்தோறும் வாங்கும் சக்தியை இழந்து வருகிறார்கள். உலக பொருளாதார மந்தநிலை நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிட் டது. உலக பொருளாதார மந்தநிலையால் உலக நாடுகளுடனான இந்தியாவின் ஏற்றுமதி கடுமையாக பாதித்துள்ளது. எனவே நிதியாண்டு முடிவில் இந்தியா ஏற்கனவே திட்டமிட்டுள்ளபடி வளர்ச்சி விகிதத்தை எட்டமுடியாது. முதலாளிகள் வைத்துள்ள பெரும் நிதி ஆக்கப்பூர்வமான முறையில் முதலீடாக மாறாமல் ஊக வணிபத்தில் முதலீடு செய்யப்பட்டு சூதாட்டம் நடத்தப்படுகிறது. இதனால் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் நிலங்களின் விலையும் தங்கத்தின் விலையும் மாறி மாறி உயர்ந்துவருகிறது. இதனால் வேலை வாய்ப்பை பெருக்காத, மக்களின் வாழ்க்கைதரத்தை மேம்படுத்தாத முன்னேற்றம் தான் ஏற்பட்டுள்ளது. பெருமளவிலான மக்கள் இயக்கங்கள் மூலமே அரசின் புதிய தாராளமய பொருளதார கொள்கையை முறியடிக்கமுடியும். இந்தியாவில் தற்போது போதுமான வளமும் போதுமான அறிவுச் சொத்தும் உள்ளது. நாட்டை வளப்படுத்தே இதுவே போதுமானது. தோழர் வி.பி.சிந்தன் நினைவு சொற்பொழிவில் இந்த இலக்கை எட்ட மேலும் சக்தியாக நாம் போராட உறுதி ஏற்போம். 
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.

வியாழன், 6 செப்டம்பர், 2012

காங்கிரஸ் - பாரதீய ஜனதா கட்சி அலமாரிகளில் எலும்புக்கூடுகள்....!

இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டின் மதுரை பொதுக்கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரியின் எழுச்சி உரை :
           ''இந்தியாவிற்கு விதவிதமான கட்சிகளால் அமைக்கப்படுகிற விதவிதமான அரசாங்கங்கள் தேவையில்லை; வேறுபட்ட கொள்கைகளே உடனடித்தேவை” என்று முழக்கமிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி., நாட்டின் வளமிக்க இளைய தலைமுறையின் ஒட்டுமொத்த திறனையும் முழுமையாகப் பயன்படுத்தி இந்தியாவை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்வதற்கான மாற்றுக்கொள்கைகள் இடதுசாரிக்கட்சிகள் வசமே உள்ளன என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இந்திய மாணவர் சங்கத்தின் 14 வது அகில இந்திய மாநாட்டு பேரணி-பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய சங்கத்தின் முன்னாள் தலைவருமான சீத்தாராம் யெச்சூரி, உலகிலேயே மிக அதிகமான இளைய தலைமுறையை பெற்றிருக்கும் ஒரே நாடு இந்தியாவே என்றும், மொத்த மக்கள் தொகையில் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 54 சதவீதம் என்றும் குறிப்பிட்டார். இத்தனை மிகப்பெரிய இளைய சக்தியின் திறமைகள், ஆளும்வர்க்கத்தால் வீணடிக்கப்பட்டு வருகின்றன என்று குற்றம் சாட்டிய அவர், ஆளும் வர்க்க கட்சிகளால் நாட்டின் நலன்கள் சூறையாடப்படுவது, இந்த இளைய சக்தியின் மீதான கடுமையான தாக்குதலும் ஆகும் என்றும் கூறினார்.
        ஊழல்களும், மிகப்பெரிய அளவில் நடக்கும் கொள்ளைகளும் வெறுமனே ஒரு தவறான செயல் என்ற அளவில் மட்டும் பார்க்கப்படுவதைத் தாண்டி, நாட்டின் இயற்கை வளத்தையும், மனித வளத்தையும் ஒட்டுமொத்தமாக சூறையாட புறப்பட்டிருக்கிற மிகப்பெரும் தீமைகள் என்று உணர்ந்து, அவற்றை எதிர்த்து நிற்க வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நாடாளுமன்றத்தை காங்கிரசும், பாரதீய ஜனதா கட்சியும் முடக்கி வருகின்றன. இந்த கூட்டத்தொடர் முழுவதையும் அவை முடக்கப்போகின்றதே என்பதே உண்மை. நிலக்கரி ஊழலில் தங்களது ரகசியங்கள் வெளிவந்து விடக்கூடாது என்பதில் இரண்டு கட்சிகளுமே ஒற்றுமையாக இருக்கின்றன. நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அனுமதித்தால், இவர்களது அலமாரிகளிலிருந்து ஏராளமான எலும்புக்கூடுகள் புறப்பட்டு வரும் என்பதால் தான், விவாதத்தைத் தவிர்ப்பதற்காக நாடாளுமன்றத்தை முடக்குகிறார்கள். ஒவ்வொரு கூட்டத் தொடரையும் இதே போல் முடக்குவதே இவர்களது திட்டமாக இருக்கிறது. மேட்ச் பிக்சிங் என்று கூறப்படும் சூதாட்டத்திற்கு, நாடாளுமன்றத்தில் பாரதீய ஜனதா கட்சியும், காங்கிரசும் சேர்ந்து நடத்தும் நாடகமே மிகச்சிறந்த சான்று என மிகக்கடுமையான முறையில் யெச்சூரி சாடினார். கல்வி உரிமைச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு மூன்றாண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனால், இன்று வரையில் இச்சட்டம் அமல்படுத்தப்படவில்லை. இச்சட்டத்தின்படி நாடு முழுவதும் பள்ளிக்கூடங்கள் கட்டப்படவேண்டும். ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் உட்பட அனைத்து வசதிகளையும் செய்து தரப்படவேண்டும். இதையெல்லாம் செய்வதற்கு ஒரு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி செலவாகும். ஐந்தாண்டு காலத்திற்கு ரூ.1 இலட்சத்து 50 ஆயிரம் கோடி செலவாகும். ஆனால், இதற்கு பணமில்லை என்று கைவிரிக்கிறது மன்மோகன் அரசு; மறுபுறத்தில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் இந்த நாட்டு மக்களின் சொத்து ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவிற்கு சூறையாடப்பட்டுள்ளது. மன்மோகன் சிங் அரசு பதவியேற்கும் போது, அடுத்த நூறு நாட்களில் உணவுப் பாதுகாப்புச்சட்டத்தை கொண்டு வருவோம் என்று உறுதியளித்தது. ஆனால், மூன்றாண்டுகள் ஓடிவிட்டன. இதுவரை அச்சட்டம் நிறைவேற்றப்படவில்லை. நாடு முழுவதும் அனைத்துக் குடும்பங்களுக்கு மாதம் ஒன்றுக்கு 35 கிலோ அரிசி, கிலோ 2 ரூபாய் விலையில் அளிக்கப்பட வேண்டும் என்று இடதுசாரிக்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதை அமல்படுத்துவதற்கு மொத்தம் ரூ. 1 லட்சம் கோடி இந்த அரசுக்கு செலவாகும். ஆனால், பணமில்லையென்று கைவிரிக்கிறது. மறுபுறத்தில் நிலக்கரி ஊழலில் ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி அளவிற்கு நாட்டின் வளம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்று சீத்தாராம் யெச்சூரி குறிப்பிட்டார். இந்தியாவில் தொடர்ச்சியாக அரசு அமலாக்கி வரும் புதிய பொருளாதார கொள்கைகள், மேலும் மேலும் மெகா ஊழல்களுக்கு புதிய பாதைகளைத் திறந்து விட்டுள்ளது மட்டுமல்ல, பெரும்பணக்காரர்களின் லாபத்திற்காக ஏழைகளின் வயிற்றில் ஓங்கி அடிக்கிறது.
     கடந்த ஆண்டு பட்ஜெட்டில் பெரும் பணக்காரர்களுக்கு ரூ.5.28 லட்சம் கோடி வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டது. அதே பட்ஜெட்டில் ரூ.5.21 லட்சம் கோடி அரசுக்கு பற்றாக் குறை என்று காட்டப்பட்டது. ஏழைகளுக்கு மானியத்தை வெட்டிவிட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அந்தப் பணத்தை வாரி வழங்குகிற நாசகார கொள்கை, அரசின் கொள்கையாக அமலாக்கப்பட்டு வருகிறது என்றும் சீத்தாராம் யெச்சூரி சாடினார். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசா கைது செய்யப்பட்டார்; ஐபிஎல் ஊழலில் அமைச்சர் சரத்பவார் சிக்கினார். இன்றைக்கு நிலக்கரி ஊழலில் நாட்டின் பிரதமரே நேரடியாக பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அலிபாபாவும், 40 திருடர்களைப் போல மன்மோகன் அமைச்சரவை நாட்டையே கொள்ளை யடித்துக் கொண்டிருக்கிறது என்றும் யெச்சூரி குற்றம்சாட்டினார்.  
          இவர்களுக்கு மாற்றாக ஆட்சியைப் பிடிக்க பாரதீய ஜனதா கட்சி  தீவிரமாக முயற்சிக்கிறது. ஆனால், அக்கட்சிக்கு அந்த களம் இல்லை என்பதே உண்மை. ஆனாலும் கூட, நரேந்திரமோடியும், நிதின்கட்காரியும் பிரதமர் பதவிக்கு இப்போதே தயாராகிவிட்டார்கள் என் றும் அவர் கிண்டலாகக் குறிப்பிட்டார்