வியாழன், 8 நவம்பர், 2012

நிலுவை வரிகளை வசூலித்தாலே விலையேற்றம் தேவையில்லை...!

           இந்திய சமூக விஞ்ஞான கழகம் சார்பில் சென்னையில் நேற்று முன் தினம்  6 - ஆம் தேதியன்று  நடைபெற்ற வி.பி.சிந்தன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் ‘12 - வது ஐந்தாண்டுத் திட்டமும் சாமானிய மக்களும்’ என்ற தலைப்பில் உரையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம்யெச்சூரி எம்.பி., கூறியது வருமாறு: 
           ஆவடி மாநாட்டில் சோசலிசம் பேசிய காங்கிரஸ் இன்று தனியார் மயமே சகலத்திற்கும் தீர்வு என்ற பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த போது முதல் ஐந்தாண்டு திட்டத்தை அரசு தீட்டவில்லை. டாடா, பிர்லா போன்ற பெரும் தொழிலதிபர்கள் தான் தீட்டினர். அப்போதிலிருந்தே அரசு எப்படி செயல்படவேண்டும் யாருக்காக திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதை முதலாளி வர்க்கம் கட்டளையிடத் துவங்கி விட்டது.
          
விலை உயர்வின் பின்னணி

       கடந்த ஞாயிற்றுக்கிழமை தில்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி தனது தோல்விகளை மறைக்க பேரணி நடத்தியுள்ளது. சோனியா காந்தியும் மன்மோகன்சிங்கும் இளவரசர் ராகுல் காந்தியும் பொருளாதார சீர்திருத்தங்கள் செய்யாவிட்டால் நாட்டை முன்னேற்ற முடியாது என்றுகூறியிருக்கிறார்கள். அரசு நலத்திட்டங்களில் பொது முதலீட்டை குறைத்து தனியார் முதலீட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இப்படி தனியார் முதலீடு அதிகரிக்கப்பட்டதால் தான் நெடுஞ்சாலையில் நுழைவு வரி என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மின்சாரம் உள்பட பல அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் அதிக விலை கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 12வது ஐந்தாண்டு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இது அனைத்து மாநில முதலமைச்சர்களை கொண்ட தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் (என்டிசி) இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. இதற்கான தேதியையும் மத்திய அரசு இதுவரை இறுதிப்படுத்தவில்லை. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள அந்த திட்டத்திற்கான வரைவு அறிக்கை பொது வலைத்தளங்களிலும் வெளியிடப்படவில்லை. இந்தத் திட்டத்திற்கான அணுகுமுறை அறிக்கையை திட்டக்குழு 2011 ஆம் ஆண்டே வெளியிட்டுவிட்டது. ஆனால் கடந்த ஏப்ரல் 1 முதல் துவங்கிய 2012-13 - ஆம் நிதியாண்டில் இருந்து இது அமலுக்கு வந்திருக்கவேண்டும். ஆனால் அரசு அதற்கு விடுமுறை விட்டுவிட்டது போலும். தனியார் முதலீட்டை ஊக்கப்படுத்தும் பல அம்சங்கள் அதில் அடங்கியிருப்பதால் தான் திட்ட அறிக்கையை மத்திய அரசு மறைக்கிறது. 1950-ஆம் ஆண்டு முதல் திட்டக்குழு அமைக்கப்பட்டபோது நாட்டில் உள்ள அனைத்து மக்களும் சமமான உரிமைகளை பெற்று வாழ உறுதி அளிக்கப்பட்டது. நாட்டில் உள்ள அனைத்து வளங்களையும் அரசு கையகப்படுத்தி பொது நோக்கங்களுக்காக பயன்படுத்தும் என்று அதில் கூறப்பட்டடது. ஆனால் வெட்கக்கேடான விஷயம் என்ன வென்றால் 12-வது ஐந்தாண்டு திட்டத்தை நாடாளுமன்றத்தில் கூட இது வரை விவாதிக்க அரசு தயாராக இல்லை என்பதுதான். தனியார் முதலீட்டை பெற்றால் தான் நிதிப்பற்றாக் குறையை போக்க முடியும் என்றும் அரசாங்கப் பொது செலவு குறையும் என்றும், அரசு வாதிடுகிறது. தனியார் பெருநிறுவனங்களுக்கு கடந்த பட்ஜெட்டில் அரசு 5.25லட்சம் கோடிக்கு வரிச்சலுகை அளித்தது. ஆனால் நாட்டின் நிதிப் பற்றாக்குறை எவ்வளவு என்றால் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.9 சதவீதம். அதாவது 5.22 லட்சம் கோடி. அந்த வரிச்சலுகையை நிறுத்தியிருந்தால் இந்த பற்றாக்குறையை போக்கியிருக்கமுடியும். நிலுவை வரியை வசூலித்தாலே அரசுக்கு ஏராளமான நிதி கிடைக்கும். பெட்ரோல், டீசல், சமையல் எரி வாயு விலையை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை. நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் 25 கிலோ அரிசி அல்லது கோதுமையை இலவசமாக வழங்கமுடியும். இதற்கு ஆண்டுக்கு வெறும் 8000கோடி ரூபாய் தான் செலவாகும்.

பிபிபி - முக்கியத்துவம்

          ஆனால் பிபிபி எனப்படும் அரசு - தனியார் கூட்டு முதலீட்டை அதிகரிப்பதற்கே முக்கியத்துவம் அளிக்கிறது. இதன் காரணமாக டில்லி விமான நிலையம் உலகிலேயே அதிக கட்டணம் வசூலிக்கும் விமான நிலையமாக தற்போது மாறியுள்ளது. காரணம் அந்த விமான நிலைய புதுப்பிக்கும் பணியை ஒரு தனியார் நிறுவனம் தான் மேற்கொண்டது. ஐநா சபையின் புத்தாயிரதாண்டு குறிக்கோள்படி உலகில் அனைத்து நாடுகளிலும் வறுமையை குறைக்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதிகார பூர்வ புள்ளி விவரங்கள் படி கிராமபுறத்தில் நாள் ஒன்றுக்கு 2200 கலோரிகளும் நகர்ப்புறத்தில் 2100 கலோரி உணவும் மக்கள் உட்கொள்ளவேண்டும் என்று அப்படிப்பட்டவர்களே வறுமையில்லாத மக்கள் என்று கூறப்பட்டது. நம் நாட்டில் இரு பிரிவு மக்களும் 2400 கலோரி உணவை உட்கொண்டல் வறுமையில்லாத மக்கள் என்று திட்டக்குழு கூறியது. ஆனால் திட்டக்குழுவே எடுத்த கணக்கெடுப்பின் படி கிராமப்புற பகுதிகளில் உள்ள 69 விழுக்காட்டினரும் நகரப் புறத்தில் உள்ள 64.5 விழுக்காட்டினரும் அந்த அளவுக்கு கலோரிகளை அடையவில்லை என்பது தெரியவந்துள்ளது. இது 2004-2005ஆம் ஆண்டு கணக்கு. 2009-10ஆம் நிதியாண்டில் இது மேலும் வீழ்ச்சி அடைந்து முறையே 76 மற்றும் 68 விழுக்காடாக அதிகரித்துவிட்டது. வேலைவாய்ப்பை பொறுத்த வரை அதிகாரப்பூர்வ புள்ளிவிவரப்படி 2004-2005 ஆம் ஆண்டு மற்றும் 2009-10 ஆம் ஆண்டு 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் அனைத்து சுயவேலை வாய்ப்பு உள்பட ஆண்டு வளர்ச்சி விகிதம் 0.82 விழுக்காடு தான். இதற்கு முந்தைய ஐந்தாண்டுத் திட்ட சர்வேயின் படி இது 2.7 விழுக்காடாக இருந்தது. ஆண்டு பொருளாதார வளர்ச்சி 8 விழுக்காடு உயர்ந்துள்ள போதிலும் உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பு சரிந்துள்ளது. உலக வறுமை குறித்த உலக வங்கியின் அறிக்கையில் 2012ஆம் ஆண்டு இந்தியா மொத்தமுள்ள 79 நாடுகளில் 65வது இடத்தில் உள்ளது. சமீபத்திய புள்ளிவிவரப்படி உலகில் எடை குறைவான குழந்தைகள் உள்ள 129 நாடு களின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தை பிடித்துள்ளது. மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட பசிபிக் பகுதியில் உள்ள தைமூர் என்ற தீவு நாடு கூட இந்தியாவை விட முன்னேறியுள்ளது.

மறுக்கப்படும் சுகாதாரம்

        12வது ஐந்தாண்டு திட்டம் சுகாதாரத்துறையிலும் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் அரசு நிதி தனியார் மருத்துவமனைகளுக்கும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்குத் தான் செல்கிறதே தவிர. மக்களுக்கு தேவையான சுகாதார வசதிகள் கிடைக்கவில்லை. அதாவது அரசாங்கப் பணத்தை கொண்டு தனியார் மருத்துவமனைகள் கொழுத்து வருகின்றன. இந்தியாவில் உள்ள 500 பெரும் நிறுவனங்கள் கடந்த மார்ச் மாதத்தோடு 3 ஆண்டுகளில் வைத்துள்ள ரொக்க கையிருப்பு ரூ.9.3 லட்சம் கோடியாகும். இந்த நிதியே இந்தியாவில் ஆண்டுக்கு 40ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு ஆறு வழிச்சாலைகளை அமைக்க போதுமானது. ஆனால் தற்போது நிதியில்லை என்றுகூறி ஆண்டுக்கு வெறும் 800 கி.மீ நீளத்திற்கே 6 வழிச்சாலைகள் அமைக்கமுடிகிறது. இப்படி முதலாளித்துவம் பெரும் நிதியை திரட்டிவைத்துள்ளது. மறுபுறம் மக்கள் நாள்தோறும் வாங்கும் சக்தியை இழந்து வருகிறார்கள். உலக பொருளாதார மந்தநிலை நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிட் டது. உலக பொருளாதார மந்தநிலையால் உலக நாடுகளுடனான இந்தியாவின் ஏற்றுமதி கடுமையாக பாதித்துள்ளது. எனவே நிதியாண்டு முடிவில் இந்தியா ஏற்கனவே திட்டமிட்டுள்ளபடி வளர்ச்சி விகிதத்தை எட்டமுடியாது. முதலாளிகள் வைத்துள்ள பெரும் நிதி ஆக்கப்பூர்வமான முறையில் முதலீடாக மாறாமல் ஊக வணிபத்தில் முதலீடு செய்யப்பட்டு சூதாட்டம் நடத்தப்படுகிறது. இதனால் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் நிலங்களின் விலையும் தங்கத்தின் விலையும் மாறி மாறி உயர்ந்துவருகிறது. இதனால் வேலை வாய்ப்பை பெருக்காத, மக்களின் வாழ்க்கைதரத்தை மேம்படுத்தாத முன்னேற்றம் தான் ஏற்பட்டுள்ளது. பெருமளவிலான மக்கள் இயக்கங்கள் மூலமே அரசின் புதிய தாராளமய பொருளதார கொள்கையை முறியடிக்கமுடியும். இந்தியாவில் தற்போது போதுமான வளமும் போதுமான அறிவுச் சொத்தும் உள்ளது. நாட்டை வளப்படுத்தே இதுவே போதுமானது. தோழர் வி.பி.சிந்தன் நினைவு சொற்பொழிவில் இந்த இலக்கை எட்ட மேலும் சக்தியாக நாம் போராட உறுதி ஏற்போம். 
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.

கருத்துகள் இல்லை: