காந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 30 ஜனவரி, 2014

காந்தியின் ரத்தம் இன்னும் காயவில்லை...!

          

   கட்டுரையாளர் : மதுக்கூர் இராமலிங்கம், பத்திரிக்கையாளர்                   

       “இது காந்தி பிறந்த நாடு, இங்கு வன் முறைக்கு இடமில்லை” என்று முகத்தை, சாந்தமாகவும், பாந்தமாகவும் கஷ்டப்பட்டு வைத்துக்கொண்டு நரேந்திர மோடி பேசுகிறார். இவருடைய சித்தாந்த குருவான நாதுராம் கோட்சேயும், பிரார்த்தனைக்கு வந்துகொண்டிருந்த மகாத்மா காந்தியை வணங்குவதுபோல நடித்துத்தான் அவரை வதை செய்தான். காந்தியை கொன்று முடித்துவிட்ட இவர்கள் இப்போது அவர் விதைத்துச்சென்ற மதச்சார்பின்மை, மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை போன்ற தத்துவக்கோட்பாடுகளை அறுத்து முடித்துவிட முயல்கிறார்கள்.
                குஜராத்தில் மோடியின் ஆட்சியில்தான் சிறுபான்மை இஸ்லாமிய மக்கள் கொஞ்சம் கூட மனிதத்தன்மையின்றி நர வேட்டையாடப்பட்டார்கள். ஆனால் இவரோ காந்தியத்தின் கடைசி வாரிசு போல தன்னை வரித்துக்கொண்டு வார்த்தைப்பந்தல் போடுகிறார். 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் நாள் மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே சுட்டுக்கொலை செய்தான் என்பது ஒற்றைவரி வரலாறு. ஆனால் கோட்சேயின் பின்னால் ஒரு வெறிபிடித்த கும்பலே இருந்தது என்பது மறைக்கப்பட்ட, ஆனால் மறக்கக்கூடாத வரலாறு. ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து மகாசபை ஒருபோதும் காந்தியை ஏற்றுக் கொண்டதில்லை. அவர்கள் கடல் கடந்து பாசிச ஹிட்லரையும், முசோலினியையும் தங்கள் நெஞ்சப்பரப்பில் வைத்து நேசித் தார்கள். ஹிட்லர் அப்பாவி யூதர்களை வேட்டையாடியதுபோல இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்களை ஒரேயடி யாக ஒழித் துக்கட்ட வேண்டும் என்றுவிரும்பினார்கள். அதற்கு காந்தி முன் வைத்த மதச்சார்பின்மை கோட்பாடு இவர்களுக்கு தடைக்கல்லாக இருந்தது. காந்தி கொலையின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு பங்கு உண்டு என்று கூறும்போதெல்லாம் அவசரமாக மறுக்கிறார்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பினால் இயக்கப்படுகிற பாஜகவினர்.
              என்னுடைய அண்ணன் நாதுராம் கோட்சேவுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் தொடர்பில்லை என்று கூறுவது அயோக்கியத்தனம். நாங்கள் இருவரும் வீடுகளில் வளர்ந்ததைவிட ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஷாகாவில் வளர்ந் ததுதான் அதிகம் என்கிறான் நாதுராமின் தம்பி கோபால் கோட்சே. காந்தியே ஆர்எஸ்எஸ் அமைப்பை பாராட்டினார் என்று உண்மை சற்றும் கலவாத அண்டப்புளுகை அவ்வப்போது அவிழ்த்து விடுகின்றனர் அவர்கள். ஆர்எஸ்எஸ் நடத்திய கூட்டம் ஒன்றில் காந்தி பங்கேற்றது உண்மை. ஆனால் அங்கு சென்றபோதும் (1925) காந்தி அவர்கள் தலையில் ஓங்கி குட்டிவிட்டுத்தான் வந்தார். “இந்தியாவில் இந்துக்களைத் தவிர வேறு யாருக்கும் இடமில்லை என்று நினைத்தால், இந்துக்கள் அல்லாத பிறர் குறிப்பாக முஸ்லிம்கள் இங்குவசிக்க விரும்பினால் இந்துக்களுக்கு அடி மைகளாக மட்டுமே இருக்க முடியும் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் இந்துமதத்தை கொன்றுவிடுவீர்கள்” என்றார் காந்தி. ஆர்எஸ்எஸ் முன்வைத்த இந்துத்துவா கோட்பாட்டின்படி சிறுபான்மை முஸ்லிம்-கிறிஸ்தவ மக்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே இருக்க வேண்டும் என்பதே விதி. அப்படி இருக்க முடியாது. அப்படி நினைத்தால் நீங்கள் இந்து மதத்தை கொன்றுவிடுவீர்கள் என்று காந்தி கூறியதால்தான், அவரையே இவர்கள் கொன்றுவிட்டார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பின் அபாயகரமான முகம் குறித்து காந்தியின் சீடரான நேருவுக்கு ஒரு தெளிவான பார்வை இருந்தது. தேசப்பிரிவினையின்போது ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து பட்டேலிடம் நேரு இப்படி கூறினார்,
              “தில்லியில் மட்டுமின்றி மற்ற இடங்களிலும் நடைபெற்ற கலவரங்களில் ஆர்எஸ்எஸ்-க்கு பெரும் பங்கு உண்டு. அமிர்தசரஸில் அவருடைய செய்கைகள் தெளிவாக தெரிந்தன”. கோட்சே நீதிமன்றத்தில் அளித்த வாக்கு மூலத்தில் காந்தியை கொலை செய்ததை முற்றாக நியாயப்படுத்தினான். காந்தியின் தொடர்ந்த நிலையான முஸ்லிம்களுக்கு ஆதரவான இழிந்த போக்கே தன்னை கொலைசெய்ய தூண்டியதாக கூறிய அவன், கடைசிவரை முஸ்லிம்களுக்கு ஆதரவாக அவர் மேற்கொண்ட உண்ணாவிரதமே உடனடியாக அவரைக் கொல்ல வேண்டும் என்ற முடிவுக்கு தன்னைத் துரத்தியதாக கூறியிருக்கிறான்.இவ்வாறு கோட்சேயை கொலைக்களம் நோக்கி துரத்திய வார்த்தைகள் ஆர்எஸ் எஸ் தலைவர் கோல்வார்க்கருக்கு சொந்தமானவை. 1939ல் கோல்வார்க்கர் இப் படிக் கூறினார், “துரோகிகள் தேசியத் தலைவர்களாக முடிசூட்டப்படுவதும், தேச பக்தர்கள் இழிவுபடுத்தப்படுவதும் விசித்திரமானது, மிக மிக விசித்திரமானது”. கோட்சேயின் குலகுருவான கோல் வார்க்கர் 1947ல் இப்படிச் சொன்னார். “இந்து-முஸ்லிம் ஒற்றுமையில்லாமல் சுதந்திரமில்லை என்று அறிவித்திருப்பவர்கள் அதன் மூலம் நமது சமுதாயத்திற்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார்கள். மகத்தான, தொன்மைமிக்க மக்களின் ஜீவாத்மாவை கொலை செய்கிற கொடும்பாவத்தை செய்து விட்டார்கள்”. இந்து - முஸ்லிம் ஒற்றுமை மிகவும் இன்றியமையாதது என்பதில் அழுத்தமான நம்பிக்கை கொண்டிருந்த காந்தியைத்தான் இவ்வாறு ஜாடை பேசினார் அவர். கோல்வார்க்கரின் வார்த்தைகளில் ஜீவாத்மாவை கொலைசெய்த, மக்களால் மகாத்மா என்று அழைக்கப்பட்ட காந்தியை கொலை செய்வது கோட்சேவுக்கு குற்றமாகப்படவில்லை.
            மாறாக இந்துத்துவாவிற்கு செய்யும் மிகப்பெரிய தொண்டாகவே பட்டது. கோட்சேவின் கைகளில் கொலைக் கருவியை தந்ததில் வி.டி.சாவர்க்கருக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு. 1944ம் ஆண்டில் சாவர்க்கர் இப்படி எழுதினார், “காந்திஜிக்கு ஒரு பத்தானிய ஆட்சியோ அல்லது நிஜாம் முஸ்லிம் ஆட்சியோதான் நூறு சதவீத சுயராஜ்யமாக தெரிகிறது”. இவ்வாறு காந்திக்கு எதிராக கோல் வார்க்கர், சாவர்க்கர் போன்றவர்களால் ஊட்டிவளர்க்கப்பட்ட வெறுப்புத்தான் கோட்சேவின் கைகளில் துப்பாக்கியாக உருவெடுத்தது. காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சாவர்க்கரும் ஒருவர். ஆனால் சந்தர்ப்ப சாட்சியங்களால் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் மரண தண்டனை விதிக்கப்பட்ட கோட்சே உள்ளிட்ட கைதிகள் சாவர்க்கரின் கால்களில் விழுந்து ஆசி பெற்று தாங்கள் செய்த கொலையை புனிதப்படுத்திக் கொண்டார்கள். விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இந்துத்துவா கும்பலுக்கு போற்றத்தக்க பங்கு எதுவும் இல்லை என்பதும், வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் அந்நியரிடம் வாய்தா கேட்கவும், மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டு மண்டியிடவும் அவர்கள் தயாராக இருந்தார்கள் என்பதே உண்மை. ஆனால், சுதந்திரப்போராட்டத்தின் விளைவாக மக்களிடம் உருவாகியிருந்த ஒற்றுமையை, சமயம் கடந்த தேசப்பக்தியை சிதைப்பதிலேயே அவர்கள் குறியாக இருந்தார்கள். அதற்கு தடையாக இருந்த காந்தியை கொலை செய்யவும் அவர்கள் தயங்கவில்லை. காந்திஜியைப் பொறுத்தவரை அவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்தான். ஆனால் அவருடைய மதம் இந்துத்துவாவாதிகள் முன்னிறுத்திய மதம் அல்ல. “என்னைப் பொறுத்தவரை ராமனும், ரஹீமும் ஒன்று தான். ஒரே கடவுள் தான். வாய்மை மற்றும் நியாயம் என்ற கடவுளைத்தவிர வேறு எந்தக் கடவுளையும் நான் அங்கீகரிக்கவில்லை” என்றார் காந்தி.
          ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்போ மனுவின் நவீன பதிப்பு. மக்களிடம் மூடநம்பிக்கைகளை, பய உணர்ச்சியை பரப்புவதன் மூலம் மதத்தை நிலை நிறுத்த வேண்டும் என்றவன் மனு. அவனை மனதிற்குள் கோவில்கட்டி கொண்டாடிய இந்துத்துவா கும்பலுக்கு காந்தி சொன்ன சத்தியம் எட்டிக்காயாய் கசக்கத்தானே செய்யும். அரசியலில் மதத்தைக் கலப்பதை காந்தி அடியோடு நிராகரித்தார். மதம் கடவுளுக்கும் மனிதனுக்குமான தனிப்பட்ட விஷயம் என்றார் அவர். “நான் ஒரு சர்வாதிகாரியாக இருந்தால் மதமும் அரசியலும் தனித்தனியாகவே இருக்கும். என் மதத்தின் மேல் உறுதியாகக் கூறுகிறேன். அதற்காக என் உயிரையும் தருவேன்“ என்பது காந்தியின் கருத்தோட்டமாக இருந்தது. `உலகில் எந்த பகுதியிலும் தேசிய இனமும், மதமும் ஒரே வரையறைக்கு உட்பட்டதாக இல்லை. இந்தியாவிலும் அப்படி ஒருபோதும் இருந்ததில்லை’ என்பதுதான் காந்தியின் கருத்தாக இருந்தது. ஆனால் இவர்களோ இந்தியா முழுவதும் இந்து சாம்ராஜ்யம் விரிந்து பரந்து இருந்ததாகவும், முகலாயர்கள் வந்த பிறகுதான் அந்த சாம்ராஜ்யம் தகர்ந்து விட்டதாகவும் பொய்யான வரலாற்றை மெய் போல காட்டி வந்தவர்கள். எனவேதான் காந்தியின் மீது இவர்களுக்கு அளக்க முடியாத அளவுக்கு ஆத்திரம் இருந்தது.
               காந்தியை கொலை செய்த கைத்துப்பாக்கி தற்போது கார்ப்பரேட் கைக்கூலி விளம்பர மினுமினுப்பில் வளர்ச்சி வேடம் போடுகிறது. காந்தியின் உருவப்படத்தின் மீது மலர்தூவி மவுனம் சாதிப்பது மட்டுமல்ல அவருக்கு செலுத்தும் அஞ்சலி. அவர் காத்துநின்ற, அதற்காக உயிரையும் தந்த மதச்சார்பின்மையை பாதுகாக்க உரக்க முழங்குவதும், ஒன்றுபட்டு களமிறங்குவதும் தான் அவரை நினைக்கும் பொருத்தமான வழியாகும்...!
நன்றி :

வெள்ளி, 23 மார்ச், 2012

காந்தி நினைத்திருந்தால் பகத்சிங்கை காப்பாற்றியிருக்கலாம்... ஆனால்...!

மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!      


       அன்றைக்கும் இன்றைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு காந்தி மட்டுமே முகமூடியாக தேவைப்பட்டார். காந்திக்கு இணையாக வேறு ஒரு தலைவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையே காந்தியும் விரும்பினார். சுதந்திரப்போராட்ட காலத்தில், தனக்கு நிகராகவோ அல்லது தன்னை விட அதிகமாகவோ வேறு ஒரு தலைவர் வளர்வதை காந்தி விரும்பமாட்டார். அதனால் தான் பகத்சிங், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் அம்பேத்கர் போன்ற தேசத்தலைவர்களை விலக்கியே வைத்திருந்தார். இவர்களெல்லாம் வன்முறையாளர்கள் போலவும், அகிம்சைக்கு எதிரானவர்கள் போலவும் சித்தரித்துக்காட்டுவார்.  
                  இப்படித்தான் இந்த தேசத்தின் விடுதலையை போராட்டத்தின் மூலமாகவும், புரட்சியின் மூலமாகவும் தான் பெறமுடியும் என்று பிரிட்டிஷாருடன் சினங்கொண்டு போராடிய பகத்சிங் என்ற மாவீரனை இழந்துவிட்டோம். காந்தி நினைத்திருந்தால் அன்றைக்கிருந்த பிரிட்டிஷ் அரசுடன் பேசி பகத்சிங்கை தூக்குமேடையிலிருந்து காப்பாற்றியிருக்க முடியும். அதைத்தான் அன்றைக்கு நாட்டில் பலரும் எதிர்ப்பார்த்தார்கள். இன்னும் சொல்லப்போனால் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பல தலைவர்களும் தொண்டர்களுமே எதிர்ப்பார்த்தார்கள். 
                  இதை புரிந்துகொண்ட காந்தி, 1931 - ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கராச்சியில் நடைபெறவிருக்கும்   காங்கிரஸ் மாநாட்டிலும் இந்த பிரச்சனை எதிரொலிக்கும் என்று எதிர்ப்பார்த்தார். மாநாட்டில் கலந்துகொள்பவர்கள் பகத்சிங்கை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்றுங்கள் என்று தன்னை நிர்பந்தம் செய்வார்கள் என்று முன் கூட்டியே அறிந்துகொண்டார். அப்படி நடக்கும் பட்சத்தில் அவர்கள் கட்டளைப்படி,  தான் பிரிட்டிஷ் அரசிடம் பேசி பகத்சிங்கை  தூக்கு தண்டனையிலிருந்து  காப்பாற்ற வேண்டி வரும் என்பதை உணர்ந்தார். அப்படியெல்லாம் ஒன்றும் நடந்துவிடக்கூடாது என்பதில் காந்தி தீவிரம் காட்டினார்.  
            அதனால்  அன்றைய பிரிட்டிஷ் வைஸ்ராய் இர்வினை ( Irwin) சந்தித்து, கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு முன் பகத்சிங்கை தூக்கில் போடும்படி   கேட்டுக்கொண்டவர் தான் ''மகாத்மா'' என்று சொல்லக்கூடிய காந்தி என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. அதனால் தான் பிரிட்டிஷ் அரசாங்கம் கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பே   பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்றவர்களை தூக்கிலிட முடிவு செய்து, 1931  மார்ச் மாதம் 24  - ஆம் தேதியை தூக்கிடும் தேதியாக அறிவித்தது. 
              ஆனால் அந்த 24 - ஆம் தேதிவரைக் கூட காத்திருக்க முடியாமல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அவர்களை தூக்கிலிடுவதற்கு துடித்தார்கள். அதனால் 23 - ஆம் தேதியே இரவு 7.04 மணிக்கே வழக்கத்திற்கு மாறாக - மரபுக்கு மாறாக மூவரையும் தூக்கிலிட்டார்கள். 
வழக்கமாக தூக்கு தண்டனை என்பது விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாகவே நிறைவேற்றுவது தான் மரபு. ஆனால் அந்த மரபைக்கூட அன்றைய ஆட்சியாளர்கள் மீறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 24  - ஆம் தேதி விடியற்காலை தூக்கிலிட வேண்டியவர்களை 23 - ஆம் தேதி இரவே அவசர அவசரமாக தூக்கிலிட்டனர். பகத்சிங்கை கொல்வதில் காந்தியை விட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இன்னும் ஒரு மடங்கு  வேகம் காட்டினர்.
                 லாகூர் சிறையிலிருந்த பகத்சிங்கை தூக்கிலிடுவதற்கு தயார்படுத்துவதற்காக சிறைக்காவலர்கள் முன் கூட்டியே 23 - ஆம் தேதி மாலையே அழைத்தார்கள். மறுநாள் தான் தூக்கு தண்டனை என்று அறிந்திருந்த பகத்சிங், முன்கூட்டியே முதல் நாளே தூக்கிலிடப் போகிறார்கள் என்பதை அறிந்திருக்கவில்லை. அதனால் காவலர்கள் அழைத்த போது, '' நான் இங்கே ஒரு போராளியுடன் உரையாடிக்கொண்டிருக்கிறேன். அதனால் தொந்தரவு செய்யாதீர்கள்'' என்று சிறைக்குள்ளிருந்து குரல் கொடுக்கிறார். வேறு யாரோ போராளி சிறைக்குள்ளே புகுந்து இருவரும் ஏதோ திட்டம் தீட்டுகிறார்களோ என்று காவலர்கள் பயந்துவிட்டனர். சிறிது நேரம் கழித்து அவரே வெளியே வருகிறார். உள்ளே பார்த்தால் அவரோடு வேறு யாரும் இல்லை. ஆனால் அவர் கையில் ஒரு புத்தகம் இருந்தது.  மாமேதை லெனின் எழுதிய '' அரசும் புரட்சியும் '' ( STATE AND REVOLUTION ) என்ற புத்தகம் தான் அது. அதுவரையில் அந்த புத்தகத்தை படித்துக்கொண்டிருந்ததால், நான் ஒரு போராளியுடன் உரையாடிக்கொண்டிருக்கிறேன்  என்று சொன்னார். 
               அந்த புத்தகத்தை காவலர்கள் வாங்கிப்பார்த்த போது, அந்த புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் '' இந்த புத்தகத்தை இந்திய மக்கள் அனைவரும் படிக்கவேண்டும் '' என்று எழுதி கையெழுத்திட்டிருந்தார். இது தான் இந்திய மக்களுக்கு அவர் கடைசியாக விடுத்த வேண்டுகோள்......   இன்னும் எழுதுகிறேன்....