பிரதமர் வேட்பாளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரதமர் வேட்பாளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 17 ஜனவரி, 2014

''குட்டித்தலைவர்'' ராகுல் காந்திக்கு ஒரு கடிதம்...!


                                                                                                                                                                        
''குட்டித்தலைவர்'' ராகுல்ஜி அவர்களே...!
          
                 அண்மையில் நீங்கள் கேரளாவிற்கு சென்றிருந்த போது வீரசாகசங்களை செய்து காட்டினீர்கள். என்னத்தான் உங்க கட்சி ஆட்சி செய்யற மாநிலமா இருந்தாலும், அதுக்காக ஓடும் போலீஸ் வண்டியிலேயா உட்கார்ந்து கொண்டு பயணம் செய்வது...? இந்திய மக்கள் இந்த வீரசாகசத்தைப் பார்த்து பரவசப்படுவார்கள் என்று எதிர்ப்பார்த்தீர்கள். ஆனால் மக்கள் முகம் சுளித்தார்கள். நீங்கள் செய்த அந்த செயல் சிறுபிள்ளைத்தனமானது என்று விமர்சனம் செய்தார்கள்.
                இது ஒரு புறமிருக்க, அங்கே பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது, ''காங்கிரஸ் கட்சி விரும்பினால், எத்தகைய பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன்'' என்று பேசியிருக்கிறீர்கள். இத்தனைக் காலமாக உங்களை சுற்றியிருப்பவர்கள் தான் உங்களை உசுப்பேற்றித் திரிந்துகொண்டிருந்தார்கள். இப்போது தான் நீங்கள் முதல் முறையாக ''பிரதமர் பதவிக்கு நான் தயார்'' என்று உங்களது இந்த சின்ன(த்தனமான) ஆசையை திருவாய் மலர்ந்திருக்கிறீர்கள். ஏதோ இந்த நாட்டு மக்களெல்லாம் தங்களுக்கு வழிநடத்துவதற்கு ஏற்ற சரியான தலைவர்கள் இல்லாதது போல, ஆளாளுக்கு ''நான் தான்  பிரதமர்... நான் தான் பிரதமர்'' - ன்னு சொல்லிக்கிட்டு திரியிறீங்களே, உங்களுக்கு கூச்சமாக இல்லை. நீங்களெல்லாம் கொஞ்சம் கூட வெட்கப்படவே மாட்டீங்களா மிஸ்டர் ராகுல்...?
                எந்த முகத்தோடு நீங்கள் ஒட்டுக்கேட்க வருவீர்கள்...? கடந்த 10 ஆண்டுகளில் நீங்கள் செய்த சாதனைகள் தான் என்ன...?
              சிறப்பாக செயல்படுகின்ற அரசுடைமை செய்யப்பட்ட வங்கிகளை நாசப்படுத்தி, வங்கித்துறையை தனியாருக்கு திறந்துவிட்டீர்கள். இது 42 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வசமிருந்த வங்கிகளை தேசவுடைமை செய்த உங்கள் பாட்டி இந்திரா காந்திக்கு நீங்கள் செய்த துரோகமில்லையா மிஸ்டர் ராகுல்...?
               தேசவுடைமை செய்யப்பட்ட எல்.ஐ.சி - யை ஒழித்துக்கட்டி தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளை வாழவைப்பதும், இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை மேலும் மேலும் உயர்த்தி அந்நிய கம்பெனிகள் கொள்ளையடிக்க துணை போவதுமான உங்கள் செயல், 57 ஆண்டுகளுக்கு முன் தனியார் வசமிருந்த 245 இன்சூரன்ஸ் கம்பெனிகளை தேசவுடைமை செய்து, எல்.ஐ.சி - யை தோற்றுவித்தாரே உங்கள் கொள்ளு தாத்தா நேருவுக்கு நீங்கள் செய்த துரோகமில்லையா மிஸ்டர் ராகுல்...?
            உங்களை நம்பி நாட்டை ஒப்படைத்தால், இந்தியாவில் எல்லாத் துறைகளிலும் அந்நிய நேரடி முதலீடு நுழைவதற்கு அனுமதி அளித்து, அந்நிய முதலாளிகள் இந்த தேசத்தின் வளங்களையும், பொருளாதாரத்தையும் சுரண்டுவதற்கும், கொள்ளையடிப்பதற்கும் தாராளமாக அனுமதி அளித்தீர்களே....? ''பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு போகவோ.  நாங்கள் சாகவோ'' என்று இடதுசாரிக்கட்சிகள் எல்லாம் பாராளுமன்றத்திலும், வெளியிலும் போராடினாலும், அதையும் மீறி பாரதீய ஜனதாக் கட்சியோடு கூட்டு சேர்ந்து அந்நிய நேரடி முதலீட்டிற்கு இரத்தின கம்பளம் விரித்தீர்களே...? இது ஒட்டு மொத்த தேசத்திற்கே நீங்கள் செய்த துரோகமில்லையா மிஸ்டர் ராகுல்....?
            1991 - ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக இந்திய அரசியலில் உள்ளே நுழைந்த மன்மோகன் சிங்கை, 2004 - ஆம் ஆண்டு பிரதமராக பதவியுயர்வு கொடுத்து, அவரால் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட LPG - தாராளமயம், தனியார்மயம், உலகமயம் போன்ற மயங்களை படிப்படியாக கூர் சீவிவிட்டு, சாதாரண மக்களின் கண்களில் மண்ணைத்தூவி அவர்களின் வாழ்வாதாரத்தையே மாயமாக்கி ஒழித்து கட்டிவிட்டீர்களே. இது உங்களை நம்பி வாக்களித்த ''ஆம் ஆத்மி'' என்ற சாதாரண மக்களுக்கு நீங்கள் செய்த துரோகமில்லையா மிஸ்டர் ராகுல்...?
                      கடந்த  ஐந்து ஆண்டுகளில் தேசத்திற்கெதிராக - மக்களுக்கெதிராக நீங்கள் செய்த ''அமெரிக்க சார்பு திருவிளையாடல்களை'' இன்னும் சொல்லிகிட்டே போகலாம். இவ்வளவும் செய்துவிட்டு, இதே மக்களைப் பார்த்து ''நான் பிரதமர் பதவிக்கு தயார்'' என்று எப்படி கொஞ்சம் கூட கூச்சமில்லாமல், வெட்கமில்லாமல் அறிவிக்கிறீர்கள்.  அரசியல் காரணத்திற்காக கொலைசெய்யப்பட்டு கொல்லப்பட்ட உங்கள் பாட்டி இந்திரா காந்தி மற்றும் உங்கள் அப்பா ராஜீவ் காந்தி ஆகியோர்களை நினைவுப்படுத்தி மக்களின் அனுதாபத்தை பெற்று எப்படியாவது வெற்றிபெற்றுவிடலாமென்று பகற்கனவு காணாதீர்கள் மிஸ்டர் ராகுல். நீங்களும், உங்கள் அம்மாவும் மன்மோகன் சிங்குடன் சேர்ந்து நேருவுக்கும், இந்திராவுக்கும் நீங்கள் செய்த துரோகங்களையும், மக்களுக்கும், நாட்டிற்கும் எதிராக நீங்கள் செய்த துரோகங்களையும் மக்கள் மறக்கமாட்டார்கள். உங்களை மன்னிக்கமாட்டார்கள். இனியும் மக்கள் ஏமாறமாட்டார்கள் மிஸ்டர் ராகுல்.
                                                                  இப்படிக்கு உங்கள் ஆட்சியினால் மோசம் போன
                                                                                          சாதாரண குடிமகன்   

வியாழன், 2 ஜனவரி, 2014

மோடி ஒரு மோசடி...!

  கட்டுரையாளர் : அ.வ.பெல்லார்மின்,            
                                  தென்மண்டலத்தலைவர்,            
                                  அகில இந்திய எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம்,           
             “ஒரு பொய்யை நூறு தடவை சொல், அது மெய்யாகிவிடும்” என்பது ஹிட்லரின் அமைச்சர்களில் ஒருவரான கோயபல்ஸின் தத்துவம்;. இதை அப்படியே கடைப்பிடித்து, தேவையில்லாத ஃஷாம்பு, சிகப்பழகு கிரீம், முடி முளைக்கும் தைலங்கள் என கார்ப்பரேட் கம்பெனிகள் கடைவிரித்து கோடி கோடியாய் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றன. அதே கார்ப்பரேட் கம்பெனிகளும், ஹிட்லரின் ஆத்மார்த்ததாசர்களான பிஜேபி-யினரும் அதே யுக்தியை கடைப்பிடித்து இந்திய அரசியலில் மோடி தாயத்தை சந்தைப்படுத்த முயற்சிக்கிறார்கள்.
               மோடியின் கூட்டங்களுக்கு இருக்கை முன்பதிவுகள், ஆன்லைன் புக்கிங், எஸ்.எம்.எஸ் அழைப்பு என தினம் தினம் பில்டப் ஏறிக்கொண்டேயிருக்கிறது. காங்கிரஸ் கடைப்பிடிக்கும் அதே கடைந்தெடுத்த கேடுகெட்ட கொள்கைகள், முடைநாற்றமடிக்கும் ஊழல்கள், சமூகத்தை பிளவுப்படுத்தும் வஞ்சகம் ஆகியவற்றால், மக்கள் ஆதரவை இழந்து வந்த பிஜேபி, ஒருகாலத்தில் இதேபோல அவதார புருஷராக ரதத்தில் தூக்கி கொண்டாடிய அத்வானியை தரையில் உட்கார வைத்துவிட்டு, மோடியை முன்னிறுத்தி இந்தியர்களை ஏமாற்றப் பார்க்கிறது. குஜராத் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாறிவிட்டது என துவங்கினார்கள். ஏற்கனவே பருத்தி, ஜவுளி, மருந்து, பெட்ரோலியப் பொருட்கள், மோட்டார், இயந்திர உதிரி பாகங்கள் தயாரிக்கும் பெரும் வர்த்தக குடும்பங்களால் குஜராத் நகரங்கள் வளர்ச்சி பெற்றிருந்தன. மோடி முதலமைச்சராக வந்த பின், பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு குஜராத் மக்களின் செல்வங்களான நிலம், நீர், மின்சாரம் ஆகிய அனைத்தையும் வாரியிறைத்தார் என்றாலும் அன்னிய முதலீட்டிலோ, வேலை வாய்ப்பிலோ, சுகாதாரத்திலோ மருத்துவத்திலோ, அம்மாநிலம் முதன் மை நிலையில் இல்லை.
         ஏழை மக்களைப் பற்றி மோடி கவலைப்பட்டதே இல்லை. நிலமற்றோருக்கு நிலம் தரவோ, கிராமத்து கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கோ மோடி எதையும் செய்யவில்லை என்பதே உண்மை. அடுத்து, ஊடகங்களையும் வலைத்தளங்களையும் வைத்து புருடாக்களை கட்டவிழ்த்தார்கள். உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கின் போது தத்தளித்த 15000 குஜராத்தியர்களை சூப்பர்மேன் மோடி ஒரே தூக்காக தூக்கி கரை சேர்த்துவிட்டார் என பிரச்சாரம் செய்தார்கள். நாட்டின் முப்படை வீரர்கள் படாத பாடுபட்டு ஹெலிகாப்டர்கள், படகுகள் உதவியோடு ஒவ்வொருவராக மீட்டுக்கொண்டு வந்ததை தொலைக்காட்சிகளில் பார்த்த மக்கள், சூப்பர்மேன் அதிசயம் எப்போது நடந்தது என கேட்டபோது தலையை கவிழ்த்துக் கொண்டார்கள். ராமர் கோவிலைச் சொல்லி இனி வாக்கு கேட்க முடியாது. “கிடைத்தார் பட்டேல்” என இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலை கையிலெடுத்து, அவருக்கு உலகிலேயே உயரமான இரும்பு சிலை, செங்கலுக்கு பதில் நாடுமுழுவதிலுமிருந்து இரும்பு சேகரிப்பு கரசேவை என அடுத்த அஸ்திரத்தை எடுத்தார் மோடி.
             பட்டேலுக்கு பின் இரும்பு நான்தான் என சுயதம்பட்ட மடித்து போஸ் கொடுத்து வலைத்தளங்களில் மிதக்கிறார். இப்படி இல்லாததைச் சொல்லி மக்களை ஏமாற்றும் வாய்ச்சவுடால் பேர்வழியான மோடியைப் பற்றி பிஜேபி பிரசுரம் ஒன்று இப்படி குறிப்பிடுகிறது. “அழிவுப் பாதையிலிருந்து நாட்டைக் காப்பாற்ற திறமையான, துணிச்சல்மிக்க, தன்னலம் கருதாத, மக்களுக்காக மட்டுமே வாழ்கின்ற நரேந்திரமோடி பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவெடுத்துள்ளார்கள்”. ஜாதி, மதம், அரசியல், பிராந்திய பாகுபாடுகளைக் கடந்து அனைத்து மக்களையும் நேசிக்கும் நரேந்திர மோடி பிரதம மந்திரி வேட்பாளராக ஆக்கவேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள். மக்களின் விருப்பமா அது? ஆர்எஸ் எஸ்ன் விருப்பமல்லவா? பாரதிய ஜனதா கட்சியும் மக்கள் விருப்பத்தை ஏற்று நரேந்திர மோடியை பிரதம மந்திரி வேட்பாளராக அறிவித்துள்ளது. நரேந்திரமோடியை ஏற்றுக் கொண்ட தமிழக மக்களுக்கு பாரதிய ஜனதா கட்சி நன்றி தெரிவிக்கிறது. ஆங்கிலத்தில் “டேக்கன் ஆஸ் கிராண்டட்” என ஒரு சொல்லடை உண்டு. அவர்களே முடிவுசெய்துவிட் டார்கள். தமிழக மக்கள் மோடியை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்று. அதற்கு நன்றியும் சொல்லிவிட்டார்கள். என்னே புத்திசாலித்தனம்.
         இப்போது மோடி அவருக்கு ஓட்டு கேட்பதில்லை. கட்சிக்கும் ஓட்டுக் கேட்பதில்லை. நாட்டுக்காக ஓட்டுப்போடுங்கள் என்கிறார். நாட்டில் திறமையான தலைமை இல்லை, ஊழல் பெருத்துவிட்டது, அன்னிய நாடுகள் ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டன. எனவே, இந்தியாவை பாதுகாக்க எனக்கு ஓட்டு என்கிறார். டீ விற்றவன் நான் என திரும்பத்திரும்ப சொல்லி ஏழை அவதாரம் எடுக்கிறார். டீ விற்பது தவறில்லை, நாட்டை விற்க கூடாது என தத்துவம் உரைக்கிறார். என்னே வினோதம்! இவர்களின் பிதாமகனான வாஜ்பாய் ஆட்சியில்தான் நாடே விற்கப்பட்டது. கிராமங்களில் விவசாயிகள் லட்சக்கணக்கில் தற்கொலை செய்து மடிந்து கொண்டிருந்தபோது “இந்தியா ஒளிர்கிறது” என்று கிண்டலடித்தார்கள். சுதேசி என சொல்லிக்கொண்டே எல்லாவற்றையும் அன்னிய கம்பெனிகளுக்கு அள்ளிக் கொடுத்தார்கள். பொதுத்துறைகள் அனைத்தையும் சீரழித்தார்கள்.
             பெட்ரோல், டீசல், விலை நிர்ணயம் உட்பட அனைத்தையும் தனியாருக்கு தந்து விலைவாசி கட்டுக்கடங்காமல் போக வழிவகுத்தார்கள். இதுதான் அவர்களின் திறமையான தலைமை. நாடாளுமன்றத்தில் கேள்விக்கு பணம், எம்.பி நிதி முறைக்கேடு, கார்கில் தியாகிகளின் சவப்பெட்டியில் ஊழல், பிஜேபியின் அகில இந்திய தலைவர் பாங்காரு லட்சுமணன் கையும் களவுமாக தெகல்கா வீடியோவில் பிடிபட்டார். அடுத்த அகில இந்திய தலைவர் நிதின்கட்காரி முறைகேடுகளில் சிக்கி பதவியிழந்தார். கர்நாடக மாநிலத்தையே மொத்தமாக கொள்ளையடித்தது எடியூரப்பா குடும்பம். இவர்கள் ஆட்சி செய்த எந்த மாநிலத்தில் ஊழலும், முறைகேடுகளும் இல்லை? ஏற்கனவே இருந்த அரசுகளாலும், பெருமைக்குரிய நமது விஞ்ஞானிகளாலும் செய்து பொறுப்பாக ரகசியமாக தயாராக வைக்கப்பட்டிருந்த அணு குண்டுகளை வெடிக்கச் சொல்லி “வீரர்கள்” என தங்களை தாங்களே பாராட்டிக் கொண்டவர்களே தவிர நிஜத்தில் கந்தகரில், கார்கிலில் கையாலாகா தனத்தை தானே காட்டினார்கள். அமெரிக்கதாசர்களாகி அணிசேரா பெருமைகள் அனைத்தையும் கைவிட்டார்களே. அதனால்தானே வாஜ்பாய் தலைமையிலான அரசை மக்கள் 2004-ல் அரபிகடலில் வீசி எறிந்தார்கள்.
          இப்போது வாஜ்பாய் ஆட்சி அதிசய ஆட்சி என்பது எத்துனை மோசடித்தனம். இந்திய மக்களுக்கு நினைவாற்றலே இல்லை என முடிவுக்கட்டிவிட்டார்கள் பிஜேபியினர். ஓரிரு தினங்களுக்கு முன் மும்பையில் பேசிய மோடி, “சிறுபான்மை மக்களுக்கு ஒதுக்கப்பட்ட சிறப்புத்திட்டங்களை காங்கிரஸ் அரசு அமல்நடத்தவில்லை. அதன் மூலம் சிறுபான்மை மக்களுக்கு துரோகமிழைத்துவிட்டது” என்று வருத்தப்பட்டிருக்கிறார். சிறுபான்மையினர் மீது மோடியின் பாசத்தை பார்த்து ஊடகங்கள், வலைத்தளங்கள் எல்லாம் புளகாகிதமடைகின்றன. மோடி சொல்லும் சிறுபான்மை திட்டத்தில் ஒன்றுதான் கல்வி உதவித்தொகை. அதை கொடுப்பதற்கு எதிராகத்தான் இவர்கள் ஆண்டுதோறும் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். என்னே அரசியல் நேர்மை. இப்படியெல்லாம் பித்தலாட்டம் செய்யும் பிஜேபியினர் தற்போது “ஒருஓட்டு, ஒரு நோட்டு” என்று முழங்கஆரம்பித்திருக்கிறார்கள்.
             என்னேவிந்தை! பன்னாட்டு, இன்னாட்டு பகாசூர கம்பெனிகள் தங்களை சுமக்கப்போகும் குதிரையாக மோடியை சுவீகரித்து, தத்தெடுத்துக் கொண்ட பின்பு, இவர்களுக்கு தேர்தலுக்கு பணமில்லையாம். நீங்கள் ஓட்டும் போடுங்கள், நோட்டும் தாருங்கள் என நாடகமாடுகிறார்கள். இந்த நயவஞ்சக நாடகங்களும், ஊடகங்கள் ஊதிப்பெருக்கும் மாய தோற் றங்களும், வலைத்தளங்கள் விரிக்கும் சதிவலைகளும், ஒருபகுதி மக்களை கவருகின்றன என்பது உண்மையே. இந்த மாய தோற்றத்தில் மயங்கி பெரியார், அண்ணா என மூச்சுக்கு மூச்சு, பேச்சுக்கு பேச்சு பேசும் வைகோ, மாமேதை கார்ல்மார்க்ஸ், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், ஜோதிராம்பாபுலே என வர்ணாசிரமத்தின் எதிராளர்கள் அனைவரையும் போஸ்டரில் வைத்துக் கொண்டு, ஜாதி அரசியல் நடத்தி சமூகத்தை பிளவுபடுத்தும் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் தமிழகத்தில் அதற்கு வலுசேர்க்க முனைந்திருப்பது கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம் மட்டுமல்ல, தமிழ் சமூகத்திற்கு இழைக்கும், துரோகமுமாகும்.
            இப்படி மதவெறி, ஜாதிவெறி, வெற்றுக்கூச்சல் சக்திகளையெல்லாம் கோர்த்துக் கட்டி தமிழ்ச் சமுதாயத்தை பாழ்படுத்த நினைக்கும் தமிழருவி மணியன் போன்றவர்களையும் வரலாறு மன்னிக்கப் போவதில்லை. ந்தியாவின் இப்போதைய தேவை மாற்று பிரதமரல்ல, மாற்றுக் கொள்கையே. பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்டு, நாட்டை வளர்ச்சிக்கு உந்தித்தள்ளும்,… ஒருங்கிணைந்த வளர்ச்சியை உத்தரவாதப்படுத்தும், விவசாயம், தொழில் வளம் பெருகச்செய்யும்… பொதுத்துறை கட்டமைப்புகளை வலுப்படுத்தும்,… தாராளமய பொருளாதாரத்தின் உடன் பிறப்பான ஊழலை வேரறுக்கும்…. அண்டை நாடுகளுடன் நட்புறவைப் பேணும்… மக்கள் ஒற்றுமையை கட்டிக் காக்கும்… அறிவுச் சார்ந்த கொள்கையே…தற்போதைய தேவை என உரக்கச் சொல்வோம்!     
நன்றி :






செவ்வாய், 17 செப்டம்பர், 2013

பிரதமர் வேட்பாளர் என்று ஒன்று உண்டா?


கட்டுரையாளர் : ஞாநி, மூத்த பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர்
  
            குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைத் தங்கள் பிரதமர் வேட்பாளர் என்று பாரதிய ஜனதா கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. பிரதமர் வேட்பாளரை 1998-லிருந்தே ஒவ்வொரு மக்களவைத் தேர்தலின்போதும் இப்படி அறிவித்துவருவதாக அந்தக் கட்சித் தலைவர் சொல்லியிருக்கிறார்.
          இதற்கு முன்பு அறிவித்த எந்த அறிவிப்பும் இந்த முறை மோடியை அறிவிக்க அந்தக் கட்சி செய்த ஆயத்தங்களுக்கு நிகராகாது. ஏறத்தாழ ஓராண்டுக்கும் மேலாக மோடிதான் தங்கள் பிரதமர் வேட்பாளர் என்று நிறுவுவதற்கு அக்கட்சியின் பல பிரமுகர்களும் ஆர்.எஸ்.எஸ். அனுதாபிகளும் விதவிதமான முயற்சிகள் செய்துவந்திருக்கின்றனர். மோடிக்கு எதிராக உங்கள் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என்று அறிவிக்க முடியுமா என்று காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து சீண்டியும் வந்துள்ளனர். காங்கிரஸ் இதுவரை அந்த வலைக்குள் சிக்கவில்லை என்பது சற்றே ஆறுதலான விஷயம்தான்.
         ஏனெனில், பிரதமர் வேட்பாளர் என்று ஒருவரை அறிவிப்பது என்பதே இந்திய பாராளுமன்ற ஜனநாயக முறைக்கும் இந்திய அரசியல் சட்டத்துக்கும் விரோதமானதாகும். பெரும் அனைத்திந்திய கட்சிகளில் ஒரு கட்சி அப்படிச் செய்வது என்பது ஆபத்தான போக்கு.
இந்திய அரசியல் சட்டப்படியும் நாடாளுமன்ற, சட்டமன்ற நடைமுறைகள், மரபுகள்படியும், பிரதமர் வேட்பாளர் என்றோ முதலமைச்சர் வேட்பாளர் என்றோ ஒருவர் மக்களிடம் நேரடியாக வாக்குக் கேட்க இடமே கிடையாது. மக்களிடம் வாக்குக் கேட்டுத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் மக்களவை உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர்கள் மட்டும்தான். நான் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்று சொல்லித்தான் தேர்தலில் நின்று ஜெயித்து வந்திருக்கிறேன். என்னைப் பிரதமர் பதவி ஏற்கும்படி குடியரசுத் தலைவர் அழைக்க வேண்டும் என்று எந்த மக்களவை உறுப்பினரும் தனியே அவரிடம் கோர முடியாது. “நீங்கள் மக்களவை உறுப்பினர் பதவித் தேர்தலில் ஜெயித்திருக்கலாம். ஆனால், உங்கள் கட்சி பெரும்பான்மை பெறவில்லை. தனிப் பெரும் கட்சியாகவும் ஜெயிக்கவில்லை. அப்படியே தனிப் பெரும் கட்சியாகவோ, அறுதிப் பெரும்பான்மையோ பெற்றிருந்தாலும்கூட, இப்போது உங்கள் கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உங்களைத் தங்கள் நாடாளுமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்தால்தான் நான் உங்களைப் பிரதமர் பதவிக்குப் பரிசீலிக்க முடியும்” என்றே குடியரசுத் தலைவர் பதில் சொல்ல முடியும்.
              எனவே பிரதமர் வேட்பாளர் என்று ஒருவரை ஒரு கட்சி அறிவித்து தேர்தலில் நிறுத்தச் சட்டத்தில் இடமே இல்லை. அப்படி அறிவித்து நிறுத்துவதன் பின்விளைவுகள் தேவையற்ற சிக்கல்களையும் ஏற்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக, நரேந்திர மோடி ஜெயிக்கிறார், பா.ஜ.க-வுக்குத் தனிப் பெரும் கட்சி நிலைகூடக் கிட்டவில்லை என்று வைத்துக்கொள்வோம். மோடி பிரதமராக முடியாது. அவர் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லி ஜெயித்திருந்தாலும் பிரதமராக முடியாது என்றால், என்ன அர்த்தம்? தனி நபர் வெற்றி அடிப்படையில் பிரதமர் பதவி தரப்பட மாட்டாது என்ற சட்டப்படியான நிலையை மறைத்துத் தேர்தலைச் சந்திப்பது எப்படி நியாயமாக முடியும்? அடுத்து, நாங்கள் ஆட்சி அமைக்கும் அளவுக்கு இடங்களைப் பெற்றால் மோடியைப் பிரதமராக்குவோம் என்றுதான் சொல்கிறோம் என்று வாதாடலாம். இதுவும் தவறானது. தேர்வாகி வரும் சுமார் 252 பா.ஜ.க. உறுப்பினர்களில் பெரும்பாலோர் மோடி பிரதமராகக் கூடாது என்று, அத்வானியோ சுஷ்மாவோதான் ஆக வேண்டும் என்றும் அப்போதுகூட மாற்றி முடிவு செய்யலாம். அரசியலில் அப்படியெல்லாம் நடக்காது என்று எதையும் சொல்ல முடியாது.
            அப்படிச் செய்தால், மோடி பிரதமராவார் என்று சொல்லித்தானே என் ஓட்டை வாங்கினீர்கள், அத்வானி, சுஷ்மா என்றால் நான் உங்கள் கட்சிக்கு ஓட்டே போட்டிருக்க மாட்டேனே என்றுகூட வாக்காளர்கள் கருதலாம். இன்னொரு சாத்தியமாக, கட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்தாலும், மோடி மட்டும் மக்களவைத் தேர்தலில் தோற்றுப் போய்விட்டால், வேறொருவரைத்தான் பிரதமராக்க வேண்டியிருக்கும். ஆறு மாதத்துக்குள் வேறு தேர்தலில் நிற்கவைத்து அவரை ஜெயிக்க வைக்கலாம் என்று தோற்றவரைப் பிரதமராக்க முயற்சித்தால் அது தார்மிகமாகாது.
          இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை இப்போதுள்ள சட்டங்களின்படி தனிநபரை முன்னிறுத்துவதல்ல. கட்சியை முன்னிறுத்தியே விதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் கட்சிகளில் ஒரு கட்சியைப் பெரும்பான்மைக்குரியதாகத் தேர்வு செய்கிறார்கள். அப்படித் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் தங்கள் தலைவரை அதன் பின் தேர்வு செய்யலாம் என்பதே இந்த நடைமுறை.
            இதை மாற்றித் தனிநபரை பா.ஜ.க. முன்னிறுத்த முயற்சிப்பது ஏன்? பெருவாரியான மாநிலக் கட்சிகளும் இப்படித் தனிநபரையே மாநில அளவில் முன்னிறுத்துகின்றன. அதையே மத்திய அரசுக்கும் விரிவுபடுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது. கட்சியைவிட தனி நபரே கவர்ச்சியானவர் என்று காட்டுவதுதான் பாசிஸத்தின் ஆதார வேர். தவிர மாநில அளவில் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் இந்திய அளவில் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் வேறுபாடுகளும் உள்ளன.
          தனிநபரை முன்னிறுத்தும் போக்கு, இந்திய அளவில் அனைத்திந்திய கட்சிகளுக்கு மட்டுமே சாத்தியமானது. மாநிலக் கட்சிகள் தங்கள் தலைவர்களை இந்திய அளவிலான தலைவர்களாக முன்னிறுத்துவது கடினம். ஆனால் கட்சியின் கொள்கை அடிப்படையில் ஒரு மாநிலத்தில் என்னவெல்லாம் சாதித்தோம், மத்தியிலும் வாய்ப்பு வந்தால் என்ன செய்வோம் என்று கட்சியாக தன்னை முன்னிறுத்துவது சாத்தியமானது.
அது மட்டுமல்ல, பிரதமர் வேட்பாளர் என்று தனிநபர் சார்ந்த போக்கைச் சட்டவிரோதமாக மக்களவைத் தேர்தலின்போதே ஊக்குவிப்பது வேறு வகையிலும் ஆபத்தானது. இந்த அடிப்படையை எல்லாக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டால், வி.பி.சிங், குஜ்ரால், தேவ கவுடா, சந்திரசேகர், நரசிம்மராவ், மன்மோகன்சிங் ஆகிய நபர்கள் ஒருபோதும் பிரதமராகியிருக்கவே முடியாது. பண பலம் உள்ள தனிநபர் வழிபாட்டை ஊக்குவிக்கும் சக்திகள் மட்டுமே வலிவடையும்.
               அமெரிக்க அதிபர் தேர்தல் முறையை இந்தியாவிலும் ஏற்படுத்த விரும்பும் கட்சிகளில் பா.ஜ.க-வும் ஒன்று. நாடாளுமன்றத்தில் போதுமான பலம் இல்லாவிட்டாலும்கூட, அதிபராகிவிட்டால், சில அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும் என்பது அமெரிக்க அதிபர் அமைப்பின் விசித்திரங்களில் ஒன்று. அப்படிப்பட்ட தனிநபர் அதிகாரத்தை இப்போதுள்ள இந்திய முறைக்குள்ளேயே புகுத்தும் முயற்சியாகவே பிரதமர் வேட்பாளர் அறிவிப்பைக் கருத வேண்டும். இது நம் ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல.
நன்றி :
Return to frontpage

செவ்வாய், 18 ஜூன், 2013

மோடி குறித்து அத்வானி கூறியது சரிதானே....?

ஹரிஷ் தாமோதரன் 

     குஜராத் முதல்வர் மோடியை பிரதமர் வேட்பாளர் என முன்னிறுத்துவது நாட்டிற்கும் நல்லதல்ல, பி.ஜே.பிக்கும் நல்லதல்ல. அதே போன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட 1992 டிசம்பர் 6-ம் நாள் தான், தனது வாழ்க்கையிலேயே சோகமான நாள் என அத்வானி கூறியதையும் நான் என்றும் நம்பியதில்லை. அத்வானி ஒரு ‘ஹிந்துத்வா மிதவாதி என்று சொல்வதையும் நான் ஏற்பதில்லை. அது என்ன ‘ஹிந்துத்வா மிதவாதி? ‘நல்ல தாலிபான்கள்’ என்று சொல்லி அமெரிக்கர்கள் தங்கள் தேவைக்காக தாலிபான்களின் ஒரு பகுதியினரைப் பயன்படுத்தி வருகிறார்களே அது போன்றது தான் இந்த மிதவாதி வர்ணனையும். ‘ஹிந்துத்வா என்பது மக்களை பிளவுபடுத்தும் சித்தாந்தம். மகாத்மா காந்தி, பண்டித நேரு, பாபா சாகேப் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் பிரதிபலித்த உயர்ந்த கருத்தோட்டங்களுக்கு எவ்வகையிலும் பொருந்தாத சித்தாந்தம் அது. அத்வானியிடம் நாம் ஒரு விஷயத்தினை மட்டும் சந்தேகிக்க முடியாது. அது கட்சியின் மீது அவருக்கு இருக்கும் விசுவாசம். குப்பையாய்க் கிடந்ததை பெரும் அமைப்பாக மாற்றியவர். இதுதான் அவரை 2014 மக்களவைத் தேர்தல்களில் மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதை எதிர்க்க வைத்தது. 86 வயதில் அவர் பிரதமராக ஆசைப்படுவதாக கூட எடுத்துக் கொள்ள முடியாது. குஜராத்திற்கு வெளியேயுள்ள இந்திய வாக்காளர்களின் நாடித் துடிப்பை அறிந்தவர் என்பதால் தான் அவர் மோடியை எதிர்க்கிறார்.   
         சரிந்த காவி !:        
         1999ல் மக்களவைத் தேர்தல்களில் 182 இடங்களைப் பெற்ற பி.ஜே.பி 2004ல் 138, அதைத் தொடர்ந்து 2009ல் 116 எனத் தேய்ந்து கொண்டே வந்திருக்கிறது. இடங்கள் மட்டுமல்லாது, இதே காலத்தில் தேசிய அளவில் அதனுடைய வாக்கு விகிதங்களும் 23.75 சதவீதத்திலிருந்து 18.88 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. இந்த செல்வாக்குச் சரிவிற்கு யாராவது ஒரு குறிப்பிட்ட நபரைக் குற்றம் சாட்டலாம் என்றால் அது மோடியாக மட்டுமே இருக்க முடியும். 2002ம் ஆண்டில் குஜராத்தில் மோடியின் ஆட்சியில் நடைபெற்ற அந்தப் படுகொலைகள், முதன் முதலாக தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் வெளிப்படுத்தப்பட்ட முஸ்லிம் மக்களின் கோபம், இவை அனைத்தும் தேர்தல்களில் வெளிப்பட்டன. சிறுபான்மை மக்கள் மத்தியில் அது ஒரு புதுவிதமான எதிர்ப்பு வடிவத்தினை உருவாக்கியது. பி.ஜே.பிக்கு வாக்களிப்பது இல்லை என்பதைத் தாண்டி, அக்கட்சியினைத் தோற்கடிக்கும் வாய்ப்புள்ள கட்சிக்கு வாக்களிப்பது என்ற புதிய வாக்களிப்பு உத்தியும் தோன்றியது. 2004 தேர்தல்களில் இது தெளிவாக வெளிப்பட்டது. மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு இருக்கும் உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் பி.ஜே.பி கடுமையான தோல்வியினைச் சந்தித்தது. அது மட்டுமல்லாமல், அக்கட்சியுடன் கூட்டணியில் இருந்த தெலுங்கு தேசம், திரிணாமூல், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளும் தத்தம் மாநிலங்களில் மண்ணைக் கவ்வின. முஸ்லிம்களின் இந்த வாக்களிப்பு உத்தியின் காரணமாக, கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை பயனடைந்தன.
        கூட்டாளிகளை இழந்து தனிமையில் ... :                 
      15 முதல் 20 சதவிதம் வரையிலான சிறுபான்மை மக்கள் இவ்விதம் வாக்களிக்கத் தொடங்கிவிட்டனர் என்றவுடனேயே, கூட்டாளிகள் பி.ஜே.பியைக் கைகழுவிவிட்டனர். சிவசேனா, அகாலிதளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மட்டுமே பி.ஜே.பியுடன் சேர்ந்து நின்றன. ஆனால் ஐக்கிய ஜனதா தளமும் கூட, மோடியை பீகாரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதிக்க மறுத்து விட்டது. 2009 தேர்தல்களும் ஏறக்குறைய 2004 முடிவுகளை மீண்டும் உறுதி செய்யும் வகையில் தான் இருந்தன. இந்தத் தேர்தல்களில் மோடியை விட வருண் காந்தியின் மதவெறிப் பேச்சுக்கள் குறைந்த பட்சம் உத்தரப்பிரதேசத்தில் பி.ஜே.பியின் தோல்விக்கு பெரும் காரணமாக அமைந்தன. இந்தியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் பி.ஜே.பி அநேகமாக இல்லை என்றே சொல்ல வேண்டும். நேற்று வரை தெற்கில் ஆட்சியில் இருந்த ஒரே மாநிலமான கர்நாடகாவில், அது தூக்கி வீசப்பட்டுவிட்டது. உத்தரப்பிரதேசத்தில் இப்போது மூன்றாவது இடத்திற்காக காங்கிரசுடன் போட்டியில் இருக்கிறது. மோடி பிரதமர் வேட்பாளர் என்ற பிரச்சனையில் பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்துடன் உறவு முறியும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் அது பல இடங்களில் தோல்வியைத் தழுவும். 2009 தேர்தல்களில் கூட, பி.ஜே.பி வெற்றி பெற்ற இடங்களில் பாதி எண்ணிக்கை முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இல்லாத மேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் இருந்து தான் என்பது குறிப்பிடத்தக்கது. விவரங்களை கீழ்வரும் பட்டியலில் காணலாம்.
          குஜராத்துக்கு வெளியே பிஜேபிக்கு சுமை யாக இருப்பவர் மோடிதான். பிஜேபி கட்சிக் குள் இருப்பவர்களில் இந்த உண்மையினை அறிந்த ஒரே நபர் அத்வானிதான். பிஜேபி கட் சிக்கு தனது கூட்டணியின் தளத்தை விரிவு படுத்திட அனைவராலும் பெருமளவில் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு நபரை முன்னிறுத்த வேண்டிய தேவை உள்ளது. ஏனெனில் கடந்த காலத்தில் அத்தகைய ஒரு நபரை முன் னிறுத்தியதால்தான் தமிழகம், ஒடிசா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் வெற்றி பெற முடிந்தது. பல தேர்தல் களங்களை சந்தித்த அனுபவத்தின் பின்னணியில்தான் அத்வானி இவ்வாறு கருதுகிறார். மோடியின் ஆட்சியில் கடந்த பத்தாண்டுகளில் குஜராத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, 2002 படுகொலைகள் என்ற பிசாசினை விரட்டி அடித்துவிடுமென பிஜேபியின் தத்து வார்த்த ஆசானான ஆர்எஸ்எஸ் நம்புகிறது. அதனால்தான் அத்வானியின் அறிவார்ந்த ஆலோசனையை ஏற்காததோடு, அவரை அவமானப்படுத்தியும் உள்ளது. “வளர்ச்சியின் சிற்பி” என்ற மிகைத் தோற்றம் மோடிக்கு இருப்பதன் காரணமாக பிஜேபிக்கு இந்தியா முழுவதும் 175லிருந்து 200 வரையிலான இடங்கள் அக்கட்சிக்கு மட்டுமே கிடைக்குமென நம்புகிறார்கள். மேலும், கூட்டணியில் முன்பிருந்த கட்சிகள் மீண்டும் பிஜேபியை நோக்கி வருவதற்கான நிர்பந்தத்தை இது ஏற்படுத்தும் எனவும் நம்புகிறார்கள்.
          வளர்ச்சி குறித்த மாயை! :          
        குஜராத்தின் வளர்ச்சி குறித்து பேசும் போது இரண்டு விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். மோடி குறித்து சரடு விடுபவர்கள் அவரது ஆட்சிக் காலத்தில்தான் குஜராத் வளர்ச்சியடைந்தது என்றும் பி.டி. பருத்தியின் வெற்றி குஜராத்துக்கு மட்டுமே சொந்தமானது என்றும் மிகைப்படுத்துகின்றனர். ஆனால் ராஜ்கோட் மெசின் டூல்ஸ், டீசல் என்ஜின் தொழில் மற்றும் சூரத், பாவ்நகரிலுள்ள செயற்கை வைரத்தொழிற்சாலைகள் மட்டுமின்றி அமுல், அம்பானி, அதானி, நிர்மா, டோரெண்ட், ஜைடஸ் கேடிலா, ஐபிசிஎல், ஜிஎஸ்எப்சி அல்லது ஜிஎன்எப்சி போன்ற தொழிற்சாலைகள், மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அம்மாநிலத்தில் இருந்தன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தங்களது ஆட்சிக் காலத்தில் மாநிலத்தில் படிப்படியான வளர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக எவரேனும் உரிமை கொண்டாட முடியுமென்றால் அது ஏற்கனவே பின்தங்கிய மாநிலங்களாக உள்ள மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரின் முதலமைச்சர்களாக மட்டுமே இருக்க முடியும். சிவராஜ் சிங் சௌகான் முதல்வராக பதவி ஏற்பதற்கு முன்பு மத்தியப்பிரதேசத்தில் வெறும் 5 இலட்சம் டன்னாக இருந்த கோதுமை கொள்முதல், அவரது ஆட்சிக் காலத்தில் 85 இலட்சம் டன்னாக அதிகரித்தது. அது மட்டுமின்றி மத்திய அரசு அளிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையைக் காட்டிலும் கூடுதலாக குவிண்டாலுக்கு நூறு ரூபாயை விவசாயிகளுக்கு அவரது அரசு அளிக்கிறது. இதே போன்று, சத்திஸ்கரில் அரிசி கொள்முதலில் முன்னேற்றத்தை ராமன் சிங் அரசு சாதித்துள்ளது. மேலும் ரேசன் கடைகளே இல்லாதிருந்த அந்த மாநிலத்தில் செயல்படுகின்ற பொது விநியோக அமைப்பினை அவர் உருவாக்கியுள்ளார்.
           குஜராத் ஒன்றும் பீகார், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உத்தரப் பிரதேசம் போன்று பின்தங்கிய மாநிலம் அல்ல. குஜராத் வளர்ச்சி குறித்த மோடியின் படாடோபமான பேச்சுகளுக்கு அத்வானி இதனையே எதிர்வாதமாக வைத்தார். இரண்டாவதாக, பழைய கால பாவங்கள் அதைச் செய்தவர்களை பழி தீர்க்காமல் விடுவதில்லை என்பது வரலாறு உணர்த்தும் செய்தி. இதுவும் அத்வானிக்குத் தெரியும். பாபர் மசூதி இடிப்பிற்கு இட்டுச் சென்ற அத்வானியின் 1990 ரதயாத்திரை அவப்பெயரிலிருந்து அவர் இன்னும் மீள முடியவில்லை என்பதை அவர் நன்கு அறிந்தவர் தானே? அதைத் துடைத்தெறியும் முயற்சியில் அவர் முகமது அலி ஜின்னாவைப் பாராட்டப் போக, ஆர். எஸ்.எஸ் கோபத்தை சம்பாதித்துக் கொண்டதும் அதன் காரணமாக அதன் கட்டளைக்குப் பணிந்து அவர் பிஜேபி தலைவர் பதவியினை ராஜினாமா செய்ததும் தானே மிச்சம்? வரலாற்றினை மறுபடைப்பு செய்வதே அல்லது அதன் போக்கை மாற்றுவதே மோடியினால் கண்டிப்பாக இயலாது. அவர் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் பட்சத்தில் அது கண்டிப்பாக பிஜேபிக்கு பாதகமாகவும், மூழ்கும் கப்பலான காங்கிரசுக்கு ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றாகவும் மாறும் என்பதில் ஐயமில்லை.
தமிழில் : எம். கிரிஜா நன்றி - பிசினஸ் லைன் 12-06-2013