“ஒரு
பொய்யை நூறு தடவை சொல், அது மெய்யாகிவிடும்” என்பது ஹிட்லரின்
அமைச்சர்களில் ஒருவரான கோயபல்ஸின் தத்துவம்;. இதை அப்படியே கடைப்பிடித்து,
தேவையில்லாத ஃஷாம்பு, சிகப்பழகு கிரீம், முடி முளைக்கும் தைலங்கள் என
கார்ப்பரேட் கம்பெனிகள் கடைவிரித்து கோடி கோடியாய் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றன. அதே கார்ப்பரேட் கம்பெனிகளும், ஹிட்லரின் ஆத்மார்த்ததாசர்களான பிஜேபி-யினரும் அதே யுக்தியை கடைப்பிடித்து இந்திய அரசியலில்
மோடி தாயத்தை சந்தைப்படுத்த முயற்சிக்கிறார்கள்.
மோடியின்
கூட்டங்களுக்கு இருக்கை முன்பதிவுகள், ஆன்லைன் புக்கிங், எஸ்.எம்.எஸ்
அழைப்பு என தினம் தினம் பில்டப் ஏறிக்கொண்டேயிருக்கிறது. காங்கிரஸ்
கடைப்பிடிக்கும் அதே கடைந்தெடுத்த கேடுகெட்ட கொள்கைகள், முடைநாற்றமடிக்கும்
ஊழல்கள், சமூகத்தை பிளவுப்படுத்தும் வஞ்சகம் ஆகியவற்றால், மக்கள் ஆதரவை
இழந்து வந்த பிஜேபி, ஒருகாலத்தில் இதேபோல அவதார புருஷராக ரதத்தில் தூக்கி
கொண்டாடிய அத்வானியை தரையில் உட்கார வைத்துவிட்டு, மோடியை முன்னிறுத்தி
இந்தியர்களை ஏமாற்றப் பார்க்கிறது. குஜராத் இந்தியாவிலேயே முதன்மை
மாநிலமாக மாறிவிட்டது என துவங்கினார்கள். ஏற்கனவே பருத்தி, ஜவுளி, மருந்து,
பெட்ரோலியப் பொருட்கள், மோட்டார், இயந்திர உதிரி பாகங்கள் தயாரிக்கும்
பெரும் வர்த்தக குடும்பங்களால் குஜராத் நகரங்கள் வளர்ச்சி பெற்றிருந்தன.
மோடி முதலமைச்சராக வந்த பின், பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு குஜராத்
மக்களின் செல்வங்களான நிலம், நீர், மின்சாரம் ஆகிய அனைத்தையும்
வாரியிறைத்தார் என்றாலும் அன்னிய முதலீட்டிலோ, வேலை வாய்ப்பிலோ,
சுகாதாரத்திலோ மருத்துவத்திலோ, அம்மாநிலம் முதன் மை நிலையில் இல்லை.
ஏழை மக்களைப் பற்றி மோடி கவலைப்பட்டதே இல்லை. நிலமற்றோருக்கு நிலம் தரவோ, கிராமத்து கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கோ மோடி எதையும் செய்யவில்லை
என்பதே உண்மை. அடுத்து, ஊடகங்களையும் வலைத்தளங்களையும் வைத்து புருடாக்களை
கட்டவிழ்த்தார்கள். உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கின் போது தத்தளித்த 15000
குஜராத்தியர்களை சூப்பர்மேன் மோடி ஒரே தூக்காக தூக்கி கரை சேர்த்துவிட்டார்
என பிரச்சாரம் செய்தார்கள். நாட்டின் முப்படை வீரர்கள் படாத பாடுபட்டு
ஹெலிகாப்டர்கள், படகுகள் உதவியோடு ஒவ்வொருவராக மீட்டுக்கொண்டு வந்ததை
தொலைக்காட்சிகளில் பார்த்த மக்கள், சூப்பர்மேன் அதிசயம் எப்போது நடந்தது
என கேட்டபோது தலையை கவிழ்த்துக் கொண்டார்கள். ராமர் கோவிலைச் சொல்லி இனி
வாக்கு கேட்க முடியாது. “கிடைத்தார் பட்டேல்” என இரும்பு மனிதர் சர்தார்
வல்லபாய் பட்டேலை கையிலெடுத்து, அவருக்கு உலகிலேயே உயரமான இரும்பு சிலை,
செங்கலுக்கு பதில் நாடுமுழுவதிலுமிருந்து இரும்பு சேகரிப்பு கரசேவை என
அடுத்த அஸ்திரத்தை எடுத்தார் மோடி.
பட்டேலுக்கு பின் இரும்பு
நான்தான் என சுயதம்பட்ட மடித்து போஸ் கொடுத்து வலைத்தளங்களில் மிதக்கிறார்.
இப்படி இல்லாததைச் சொல்லி மக்களை ஏமாற்றும் வாய்ச்சவுடால் பேர்வழியான
மோடியைப் பற்றி பிஜேபி பிரசுரம் ஒன்று இப்படி குறிப்பிடுகிறது. “அழிவுப்
பாதையிலிருந்து நாட்டைக் காப்பாற்ற திறமையான, துணிச்சல்மிக்க, தன்னலம்
கருதாத, மக்களுக்காக மட்டுமே வாழ்கின்ற நரேந்திரமோடி பிரதமராக வர வேண்டும்
என மக்கள் முடிவெடுத்துள்ளார்கள்”. ஜாதி, மதம், அரசியல், பிராந்திய
பாகுபாடுகளைக் கடந்து அனைத்து மக்களையும் நேசிக்கும் நரேந்திர மோடி பிரதம
மந்திரி வேட்பாளராக ஆக்கவேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள். மக்களின்
விருப்பமா அது? ஆர்எஸ் எஸ்ன் விருப்பமல்லவா? பாரதிய ஜனதா கட்சியும்
மக்கள் விருப்பத்தை ஏற்று நரேந்திர மோடியை பிரதம மந்திரி வேட்பாளராக
அறிவித்துள்ளது. நரேந்திரமோடியை ஏற்றுக் கொண்ட தமிழக மக்களுக்கு பாரதிய
ஜனதா கட்சி நன்றி தெரிவிக்கிறது. ஆங்கிலத்தில் “டேக்கன் ஆஸ் கிராண்டட்” என
ஒரு சொல்லடை உண்டு. அவர்களே முடிவுசெய்துவிட் டார்கள். தமிழக மக்கள் மோடியை
ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்று. அதற்கு நன்றியும்
சொல்லிவிட்டார்கள். என்னே புத்திசாலித்தனம்.
இப்போது மோடி அவருக்கு ஓட்டு
கேட்பதில்லை. கட்சிக்கும் ஓட்டுக் கேட்பதில்லை. நாட்டுக்காக
ஓட்டுப்போடுங்கள் என்கிறார். நாட்டில் திறமையான தலைமை இல்லை, ஊழல்
பெருத்துவிட்டது, அன்னிய நாடுகள் ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டன. எனவே,
இந்தியாவை பாதுகாக்க எனக்கு ஓட்டு என்கிறார். டீ விற்றவன் நான் என
திரும்பத்திரும்ப சொல்லி ஏழை அவதாரம் எடுக்கிறார். டீ விற்பது தவறில்லை,
நாட்டை விற்க கூடாது என தத்துவம் உரைக்கிறார். என்னே வினோதம்! இவர்களின்
பிதாமகனான வாஜ்பாய் ஆட்சியில்தான் நாடே விற்கப்பட்டது. கிராமங்களில்
விவசாயிகள் லட்சக்கணக்கில் தற்கொலை செய்து மடிந்து கொண்டிருந்தபோது
“இந்தியா ஒளிர்கிறது” என்று கிண்டலடித்தார்கள். சுதேசி என சொல்லிக்கொண்டே
எல்லாவற்றையும் அன்னிய கம்பெனிகளுக்கு அள்ளிக் கொடுத்தார்கள்.
பொதுத்துறைகள் அனைத்தையும் சீரழித்தார்கள்.
பெட்ரோல், டீசல், விலை
நிர்ணயம் உட்பட அனைத்தையும் தனியாருக்கு தந்து விலைவாசி கட்டுக்கடங்காமல்
போக வழிவகுத்தார்கள். இதுதான் அவர்களின் திறமையான தலைமை. நாடாளுமன்றத்தில்
கேள்விக்கு பணம், எம்.பி நிதி முறைக்கேடு, கார்கில் தியாகிகளின்
சவப்பெட்டியில் ஊழல், பிஜேபியின் அகில இந்திய தலைவர் பாங்காரு லட்சுமணன்
கையும் களவுமாக தெகல்கா வீடியோவில் பிடிபட்டார். அடுத்த அகில இந்திய தலைவர்
நிதின்கட்காரி முறைகேடுகளில் சிக்கி பதவியிழந்தார். கர்நாடக மாநிலத்தையே
மொத்தமாக கொள்ளையடித்தது எடியூரப்பா குடும்பம். இவர்கள் ஆட்சி செய்த எந்த
மாநிலத்தில் ஊழலும், முறைகேடுகளும் இல்லை? ஏற்கனவே இருந்த அரசுகளாலும்,
பெருமைக்குரிய நமது விஞ்ஞானிகளாலும் செய்து பொறுப்பாக ரகசியமாக தயாராக
வைக்கப்பட்டிருந்த அணு குண்டுகளை வெடிக்கச் சொல்லி “வீரர்கள்” என தங்களை
தாங்களே பாராட்டிக் கொண்டவர்களே தவிர நிஜத்தில் கந்தகரில், கார்கிலில்
கையாலாகா தனத்தை தானே காட்டினார்கள். அமெரிக்கதாசர்களாகி அணிசேரா
பெருமைகள் அனைத்தையும் கைவிட்டார்களே. அதனால்தானே வாஜ்பாய் தலைமையிலான
அரசை மக்கள் 2004-ல் அரபிகடலில் வீசி எறிந்தார்கள்.
இப்போது வாஜ்பாய்
ஆட்சி அதிசய ஆட்சி என்பது எத்துனை மோசடித்தனம். இந்திய மக்களுக்கு
நினைவாற்றலே இல்லை என முடிவுக்கட்டிவிட்டார்கள் பிஜேபியினர். ஓரிரு
தினங்களுக்கு முன் மும்பையில் பேசிய மோடி, “சிறுபான்மை மக்களுக்கு
ஒதுக்கப்பட்ட சிறப்புத்திட்டங்களை காங்கிரஸ் அரசு அமல்நடத்தவில்லை. அதன்
மூலம் சிறுபான்மை மக்களுக்கு துரோகமிழைத்துவிட்டது” என்று
வருத்தப்பட்டிருக்கிறார். சிறுபான்மையினர் மீது மோடியின் பாசத்தை
பார்த்து ஊடகங்கள், வலைத்தளங்கள் எல்லாம் புளகாகிதமடைகின்றன. மோடி சொல்லும்
சிறுபான்மை திட்டத்தில் ஒன்றுதான் கல்வி உதவித்தொகை. அதை கொடுப்பதற்கு
எதிராகத்தான் இவர்கள் ஆண்டுதோறும் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
என்னே அரசியல் நேர்மை. இப்படியெல்லாம் பித்தலாட்டம் செய்யும் பிஜேபியினர்
தற்போது “ஒருஓட்டு, ஒரு நோட்டு” என்று முழங்கஆரம்பித்திருக்கிறார்கள்.
என்னேவிந்தை!
பன்னாட்டு, இன்னாட்டு பகாசூர கம்பெனிகள் தங்களை சுமக்கப்போகும் குதிரையாக
மோடியை சுவீகரித்து, தத்தெடுத்துக் கொண்ட பின்பு, இவர்களுக்கு தேர்தலுக்கு
பணமில்லையாம். நீங்கள் ஓட்டும் போடுங்கள், நோட்டும் தாருங்கள் என
நாடகமாடுகிறார்கள். இந்த நயவஞ்சக நாடகங்களும், ஊடகங்கள் ஊதிப்பெருக்கும்
மாய தோற் றங்களும், வலைத்தளங்கள் விரிக்கும் சதிவலைகளும், ஒருபகுதி மக்களை
கவருகின்றன என்பது உண்மையே. இந்த மாய தோற்றத்தில் மயங்கி பெரியார், அண்ணா
என மூச்சுக்கு மூச்சு, பேச்சுக்கு பேச்சு பேசும் வைகோ, மாமேதை
கார்ல்மார்க்ஸ், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், ஜோதிராம்பாபுலே என
வர்ணாசிரமத்தின் எதிராளர்கள் அனைவரையும் போஸ்டரில் வைத்துக் கொண்டு, ஜாதி
அரசியல் நடத்தி சமூகத்தை பிளவுபடுத்தும் டாக்டர் ராமதாஸ் ஆகியோர்
தமிழகத்தில் அதற்கு வலுசேர்க்க முனைந்திருப்பது கடைந்தெடுத்த
சந்தர்ப்பவாதம் மட்டுமல்ல, தமிழ் சமூகத்திற்கு இழைக்கும், துரோகமுமாகும்.
இப்படி
மதவெறி, ஜாதிவெறி, வெற்றுக்கூச்சல் சக்திகளையெல்லாம் கோர்த்துக் கட்டி
தமிழ்ச் சமுதாயத்தை பாழ்படுத்த நினைக்கும் தமிழருவி மணியன்
போன்றவர்களையும் வரலாறு மன்னிக்கப் போவதில்லை.
இந்தியாவின் இப்போதைய தேவை
மாற்று பிரதமரல்ல, மாற்றுக் கொள்கையே. பொருளாதார வீழ்ச்சியிலிருந்து
மீட்டு, நாட்டை வளர்ச்சிக்கு உந்தித்தள்ளும்,… ஒருங்கிணைந்த வளர்ச்சியை
உத்தரவாதப்படுத்தும், விவசாயம், தொழில் வளம் பெருகச்செய்யும்… பொதுத்துறை
கட்டமைப்புகளை வலுப்படுத்தும்,… தாராளமய பொருளாதாரத்தின் உடன் பிறப்பான
ஊழலை வேரறுக்கும்…. அண்டை நாடுகளுடன் நட்புறவைப் பேணும்… மக்கள் ஒற்றுமையை
கட்டிக் காக்கும்… அறிவுச் சார்ந்த கொள்கையே…தற்போதைய தேவை என உரக்கச் சொல்வோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக