வெள்ளி, 17 ஜனவரி, 2014

''குட்டித்தலைவர்'' ராகுல் காந்திக்கு ஒரு கடிதம்...!


                                                                                                                                                                        
''குட்டித்தலைவர்'' ராகுல்ஜி அவர்களே...!
          
                 அண்மையில் நீங்கள் கேரளாவிற்கு சென்றிருந்த போது வீரசாகசங்களை செய்து காட்டினீர்கள். என்னத்தான் உங்க கட்சி ஆட்சி செய்யற மாநிலமா இருந்தாலும், அதுக்காக ஓடும் போலீஸ் வண்டியிலேயா உட்கார்ந்து கொண்டு பயணம் செய்வது...? இந்திய மக்கள் இந்த வீரசாகசத்தைப் பார்த்து பரவசப்படுவார்கள் என்று எதிர்ப்பார்த்தீர்கள். ஆனால் மக்கள் முகம் சுளித்தார்கள். நீங்கள் செய்த அந்த செயல் சிறுபிள்ளைத்தனமானது என்று விமர்சனம் செய்தார்கள்.
                இது ஒரு புறமிருக்க, அங்கே பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது, ''காங்கிரஸ் கட்சி விரும்பினால், எத்தகைய பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன்'' என்று பேசியிருக்கிறீர்கள். இத்தனைக் காலமாக உங்களை சுற்றியிருப்பவர்கள் தான் உங்களை உசுப்பேற்றித் திரிந்துகொண்டிருந்தார்கள். இப்போது தான் நீங்கள் முதல் முறையாக ''பிரதமர் பதவிக்கு நான் தயார்'' என்று உங்களது இந்த சின்ன(த்தனமான) ஆசையை திருவாய் மலர்ந்திருக்கிறீர்கள். ஏதோ இந்த நாட்டு மக்களெல்லாம் தங்களுக்கு வழிநடத்துவதற்கு ஏற்ற சரியான தலைவர்கள் இல்லாதது போல, ஆளாளுக்கு ''நான் தான்  பிரதமர்... நான் தான் பிரதமர்'' - ன்னு சொல்லிக்கிட்டு திரியிறீங்களே, உங்களுக்கு கூச்சமாக இல்லை. நீங்களெல்லாம் கொஞ்சம் கூட வெட்கப்படவே மாட்டீங்களா மிஸ்டர் ராகுல்...?
                எந்த முகத்தோடு நீங்கள் ஒட்டுக்கேட்க வருவீர்கள்...? கடந்த 10 ஆண்டுகளில் நீங்கள் செய்த சாதனைகள் தான் என்ன...?
              சிறப்பாக செயல்படுகின்ற அரசுடைமை செய்யப்பட்ட வங்கிகளை நாசப்படுத்தி, வங்கித்துறையை தனியாருக்கு திறந்துவிட்டீர்கள். இது 42 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வசமிருந்த வங்கிகளை தேசவுடைமை செய்த உங்கள் பாட்டி இந்திரா காந்திக்கு நீங்கள் செய்த துரோகமில்லையா மிஸ்டர் ராகுல்...?
               தேசவுடைமை செய்யப்பட்ட எல்.ஐ.சி - யை ஒழித்துக்கட்டி தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளை வாழவைப்பதும், இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை மேலும் மேலும் உயர்த்தி அந்நிய கம்பெனிகள் கொள்ளையடிக்க துணை போவதுமான உங்கள் செயல், 57 ஆண்டுகளுக்கு முன் தனியார் வசமிருந்த 245 இன்சூரன்ஸ் கம்பெனிகளை தேசவுடைமை செய்து, எல்.ஐ.சி - யை தோற்றுவித்தாரே உங்கள் கொள்ளு தாத்தா நேருவுக்கு நீங்கள் செய்த துரோகமில்லையா மிஸ்டர் ராகுல்...?
            உங்களை நம்பி நாட்டை ஒப்படைத்தால், இந்தியாவில் எல்லாத் துறைகளிலும் அந்நிய நேரடி முதலீடு நுழைவதற்கு அனுமதி அளித்து, அந்நிய முதலாளிகள் இந்த தேசத்தின் வளங்களையும், பொருளாதாரத்தையும் சுரண்டுவதற்கும், கொள்ளையடிப்பதற்கும் தாராளமாக அனுமதி அளித்தீர்களே....? ''பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு போகவோ.  நாங்கள் சாகவோ'' என்று இடதுசாரிக்கட்சிகள் எல்லாம் பாராளுமன்றத்திலும், வெளியிலும் போராடினாலும், அதையும் மீறி பாரதீய ஜனதாக் கட்சியோடு கூட்டு சேர்ந்து அந்நிய நேரடி முதலீட்டிற்கு இரத்தின கம்பளம் விரித்தீர்களே...? இது ஒட்டு மொத்த தேசத்திற்கே நீங்கள் செய்த துரோகமில்லையா மிஸ்டர் ராகுல்....?
            1991 - ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக இந்திய அரசியலில் உள்ளே நுழைந்த மன்மோகன் சிங்கை, 2004 - ஆம் ஆண்டு பிரதமராக பதவியுயர்வு கொடுத்து, அவரால் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட LPG - தாராளமயம், தனியார்மயம், உலகமயம் போன்ற மயங்களை படிப்படியாக கூர் சீவிவிட்டு, சாதாரண மக்களின் கண்களில் மண்ணைத்தூவி அவர்களின் வாழ்வாதாரத்தையே மாயமாக்கி ஒழித்து கட்டிவிட்டீர்களே. இது உங்களை நம்பி வாக்களித்த ''ஆம் ஆத்மி'' என்ற சாதாரண மக்களுக்கு நீங்கள் செய்த துரோகமில்லையா மிஸ்டர் ராகுல்...?
                      கடந்த  ஐந்து ஆண்டுகளில் தேசத்திற்கெதிராக - மக்களுக்கெதிராக நீங்கள் செய்த ''அமெரிக்க சார்பு திருவிளையாடல்களை'' இன்னும் சொல்லிகிட்டே போகலாம். இவ்வளவும் செய்துவிட்டு, இதே மக்களைப் பார்த்து ''நான் பிரதமர் பதவிக்கு தயார்'' என்று எப்படி கொஞ்சம் கூட கூச்சமில்லாமல், வெட்கமில்லாமல் அறிவிக்கிறீர்கள்.  அரசியல் காரணத்திற்காக கொலைசெய்யப்பட்டு கொல்லப்பட்ட உங்கள் பாட்டி இந்திரா காந்தி மற்றும் உங்கள் அப்பா ராஜீவ் காந்தி ஆகியோர்களை நினைவுப்படுத்தி மக்களின் அனுதாபத்தை பெற்று எப்படியாவது வெற்றிபெற்றுவிடலாமென்று பகற்கனவு காணாதீர்கள் மிஸ்டர் ராகுல். நீங்களும், உங்கள் அம்மாவும் மன்மோகன் சிங்குடன் சேர்ந்து நேருவுக்கும், இந்திராவுக்கும் நீங்கள் செய்த துரோகங்களையும், மக்களுக்கும், நாட்டிற்கும் எதிராக நீங்கள் செய்த துரோகங்களையும் மக்கள் மறக்கமாட்டார்கள். உங்களை மன்னிக்கமாட்டார்கள். இனியும் மக்கள் ஏமாறமாட்டார்கள் மிஸ்டர் ராகுல்.
                                                                  இப்படிக்கு உங்கள் ஆட்சியினால் மோசம் போன
                                                                                          சாதாரண குடிமகன்   

கருத்துகள் இல்லை: