''இந்தியாவில் மரணதண்டனைக்கு ஒரு மரணம் வாராதா...?'' என்று பல ஆண்டுகளாக மனிதநேயமிக்கவர்களும், சமூக சிந்தனையாளர்களும் வருந்தி ஏங்கி கொண்டிருக்கும் நேரத்தில், இரண்டு நாட்களுக்கு முன்னர், சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகளாகக் கருதப்படும் நான்கு பேர் உள்ளிட்ட 15 பேரின் மரண
தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சதாசிவம் அவர்கள் அளித்துள்ள தீர்ப்பு என்பது சற்று ஆறுதலைத் தருகிறது. அதுவும் இன்றைய சூழ்நிலையில் இந்த தீர்ப்பு என்பது மிகவும்
முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகவும் கருதப்படுகிறது. இந்த தீர்ப்பின் மூலம் குடியரசுத்தலைவர் தவறவிட்ட ''மனிதத்தை'' நீதியரசர் சில சட்ட நுணுக்கங்கள் மூலம் காப்பாற்றிவிட்டார். அவரை நெஞ்சார பாராட்டவேண்டும்.
நீதிமன்றத்தில் இருக்கும் நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டு. கையில் தராசுக் கொடுக்கப்பட்டு நிற்க வைக்கப்பட்டிருக்கும். நீதியின் முன் நிற்பவர் தன் குடும்பத்தை சார்ந்தவரா, உறவினரா, வேண்டியவரா, வேண்டாதவரா, பணக்காரரா, ஏழையா, கருப்பா, சிவப்பா, பெரிய மனிதரா, பதவியில் உள்ளவரா, சாதாரண மனிதரா என்றெல்லாம் பாராமலும், பாரபட்சமில்லாமலும் தராசு முள்போல் நடுநிலையோடு நீதி வழங்கவேண்டும் என்ற பொருளில் தான் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டிருக்கும் நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட நீதி தேவதைக்கு இதுவரையில் நீதியின் முன் நிற்பவர் ஒரு உயிருள்ள மனிதன் என்பதும் கூட தனது கட்டப்பட்ட கண்களுக்கு புலப்படாமல் போய்விட்டதே என்பது தான் வேதனையளிக்கக்கூடிய விஷயமாக இருந்தது.
ஒரு கொலைக்கு இன்னொரு கொலை தீர்வாகாது. கொலையாளியாக இருந்தாலும் ஒருவரின் போக்குவது என்பது நீதிமன்றத்திற்கோ அல்லது அரசுக்கோ எந்தவிதமான உரிமையும் கிடையாது. மரணதண்டனை என்பது மனித குலத்திற்கு எதிரானது என்றெல்லாம் நீதியரசர் வி. ஆர். கிருஷ்ணய்யர் உட்பட பல்வேறு சமூக சிந்தனையாளர்கள் இன்று வரையில் போராடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் நீதியரசர் சதாசிவம் அவர்கள் வழங்கிய இந்த தீர்ப்பு என்பது மரணதண்டனைக்கு மரணதண்டனை அளிக்கும் தீர்ப்பை நோக்கி இந்திய நீதிமன்றம் செல்கிறது என்ற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துகின்றது. அந்த இனிய நாளுக்காக மனிதநேயமிக்க இந்த சமூகம் ஆவலாய் காத்துக்கொண்டிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக