ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

தலைநகரில் தொழிலாளர்களின் எழுச்சிமிக்க பேரணி..                    கடந்த பிப்ரவரி 23 அன்று நமது தலைநகர் புதுடெல்லியில் நாடுமுழுதுமிருந்து வந்திருந்த பல்வேறு தொழில்களை செய்யக்கூடிய லட்சகணக்கான  தொழிலாளர்கள் எழுச்சிமிக்க  போராட்டத்தை நடத்திக்  காட்டினர். ஒன்பது மத்திய தொழிற்சங்கங்கள் சேர்ந்து நடத்திய பாராளுமன்றத்தை நோக்கி நடத்தப்பட்ட பேரணிதான் அது. அதில் தொழிலாளர்கள் மட்டுமல்ல மாதர் அமைப்பைச்சார்ந்த பெண்கள், இளைஞ்ர்கள், மாணவர்கள் என ஆட்சியாளர்களின் தவறான போக்கின் காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்துத்தரப்பட்ட மக்களும் தலைநகரில்  லட்சக்கணக்கில் ஒன்றாக கூடி போராடியது என்பது சமீபகாலங்களில் இது தான் மிகப்பெரிய போராட்டமென்று டெல்லி மக்களே சொல்லக்கேட்டு புல்லரித்துப்போனோம்.
                  கட்டுப்பாடில்லாமல் உயர்ந்துவரும் விலைவாசி, தொழிலாளர் சட்டமீறல்கள், பெருகிவரும் வேலையின்மை, புதிய பென்ஷன் திட்டம் போன்ற சமூக பாதுகாப்பின்மை போன்ற கோரிக்கைகளை முழங்கிக்
கொண்டு பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள், இன்சூரன்ஸ் - வங்கி -பி எஸ் என் எல் போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் வேலைசெய்யும் ஊழியர்கள், பாதுகாப்புத்துறை - இரயில்வேத்துறை போன்ற அரசுத்துறையில் பணிபுரியும் ஊழியர்கள், எல் ஐ சி முகவர்கள்  என பல்வேறு தொழிலாளர்கள் ஒன்றாக அணிவகுத்தது போராடியது  மெய்சிலிர்க்க வைத்தது.
                அந்த லட்சக்கணக்கான தோழர்களின் விண்ணதிரும்  முழக்கங்கள் பாராளுமன்றத்தையும்  அதிரசெய்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இத்தனையும் பார்த்துக்கொண்டு எந்தவிதமான சலனமும் உணர்வும் அசைவுமில்லாமல் ஒரு பாறைபோல் பிரதமர் இருக்கிறாரென்பது  இந்த தேசத்தின் சாபக்கேடு. வாஜ்பாய்க்கு அடுத்து   ஒரு மிக  மோசமான பிரதமரை இந்த நாடு தேர்ந்தெடுத்திருக்கிறது என்பது துரதஷ்டவசமானது. 
               தனது தவறான கொள்கையினால் - தனது அமெரிக்க எஜமான விசுவாசத்தால் தருதளைத்தனமாக தான்தோன்றித்தனமாக செய்யும் ஆட்சியினால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை சந்திக்க தைரியமில்லாத , வக்கில்லாத பிரதமர் மன்மோகன்சிங் ஊடகங்களின் பத்திரிக்கைகளின் கைகளை கட்டிப்போட்டார் என்பது வெட்கக்கேடானது. டெல்லி மக்களே பிரமித்துப்போன மிகப்பெரிய பேரணி அங்கே பாராளுமன்றத்தை நோக்கி நடக்கிறது. அனால் அந்த இடத்தில் தொலைகாட்சி காமிராக்களும் பத்திரிக்கையாளர்களும் மிக சிலரே பார்க்கமுடிந்தது.  இந்த பேரணி
பற்றிய செய்தியோ படமோ தொலைகாட்சிகளிலும்   பத்திரிக்கைகளிலும் வராமல் தடுக்கப்பட்டிருக்கிறது என்பது தான் உண்மை. 
               பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு ஒரு விஷயம் புரியவேண்டும். எகிப்து, லிபியா போன்ற அரபு நாடுகளில் எழுந்த மக்கள் எழுச்சி இங்கேயும் எழுவதற்கு ரொம்ப காலம் ஆகாது. மன்மோகன்சிங் தான்  கண்ணைமூடிக்கொண்டால் இந்தியாவே இருண்டுவிடும் என்று நினைத்தால்... அது முட்டாள்தனம்.