கருத்துக்கணிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருத்துக்கணிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 15 மே, 2014

இந்திய ஊடகங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை...!

                   அடடடா...  இந்திய ஊடகங்களை என்னவென்று பாராட்டுவது என்றே தெரியவில்லை. என்னா நேர்மை...! என்னா நியாயம்...! வாங்கின காசுக்கு கடைசி வரையில் ஊதுராங்கப்பா...! மோடியே நேர்ல வந்து வேணா... போதும்.... நிப்பாட்டுங்கன்னு சொன்னாக்கூட  நிப்பாட்டமாட்டாங்க போலிருக்கே...! நாடு முழுதும் தேர்தல் முடிந்து கடந்த மூன்று நாட்களாக ஊடகங்கள் போடுகிற கூப்பாடு இருக்கே... தாங்க முடியல... வெட்கமே இல்லாம  மோடிக்கு ஆதரவாக இவர்கள் போடுகிற கூச்சலும், கூப்பாடும் இருக்கே அடேங்கப்பா நம்மால தாங்க முடியலடா சாமி. 
              தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என மோடியிடம் காசை வாங்கிக்கொண்டு தேர்தல் வருவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஊடகங்கள் மக்கள் மத்தியில் மோடி தான் அடுத்த பிரதமர் என்ற கருத்தை திணிக்க ஆரம்பித்துவிட்டன. என்ன ஒரு வெட்கக்கேடு என்றால், இன்னும் தேர்தல் முடிவே வரவில்லை. ஓட்டுகளையே நாளை தான் எண்ணப்போகிறார்கள். யார் வெற்றி பெறுவார்கள் என்பது பெட்டியை திறந்தால் தான் தெரியும். ஆனால் ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பை வைத்துக்கொண்டே நரேந்திர மோடி புதிய பிரதமராக பதவி ஏற்க தயாராகி விட்டார். பாரதீய ஜனதாக் கட்சியின் மேல்மட்ட தலைவர்கள் கூடி ''மந்திராலோசனை'' செய்கிறார்கள். எப்போது பதவி ஏற்பது...? யார் யாரெல்லாம் மத்திய மந்திரிகளாக பதவி ஏற்பார்கள்...? அத்வானிக்கு மந்திரிசபையில் இடம் உண்டா இல்லையா...? நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றப்பின் குஜராத் மாநிலத்தின் முதல்வராக யாரை நியமிப்பது...?  இப்படியெல்லாம் பாஜக தலைவர்கள் மத்தியில் ஆலோசனை நடப்பதாக செய்திகள் வெளியே கசிந்து கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் பங்குச் சந்தையில் பங்குச் சந்தைக் குறியீடுகளை முன்பு இல்லாத அளவிற்கு உயர்த்தி, மத்தியில் மோடி தலைமையில் ஆட்சி அமைவதற்கான தங்களது விருப்பத்தையும், ஆர்வத்தையும் இந்திய பெருமுதலாளிகள் ''குறிப்பாக'' காட்டியிருக்கிறார்கள்.
                 இந்த ''கருத்துத்திணிப்பை'' பார்த்து தேர்தல் முடிவுகள்  வருவதற்கு முன்பே ''காங்கிரஸ் கூடாரம்'' காலியாகிக்கொண்டே இருக்கிறது. மன்மோகன் சிங் தனது அரசு வீட்டையும் பிரதமர் சீட்டையும் காலி செய்துவிட்டு  சென்றுவிட்டார். தனக்கு நெருக்கமான அண்டை நாடுகளின் தலைவர்களிடமும், தன்  அலுவலக ஊழியர்களிடமும் ''டாடா'' காண்பித்துவிட்டு பிரிய மனசில்லாமல் பிரியாவிடை பெற்று சென்று விட்டார். இப்படியெல்லாம் ''கருத்துத்திணிப்பு'' செய்கிற பாட்டை பாருங்கள். ஊடகங்கள்  ஒரு புறம் ஒருவரை நன்றாக சந்தோஷப்படுத்துவதும், மறுபுறம் வேறு ஒருவரை  துரத்தி அடிப்பதுமான வேலைகளைத் தான் செய்கின்றன. மக்கள் தான் மிகுந்த குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். ஏதோ.... இந்த பாராளுமன்றத்தேர்தலில் நரேந்திர மோடியிடம் ஊடகங்கள் வாங்கின காசுக்கு இறுதிவரையில் ரொம்ப நல்லாத்தான் ஊதுகின்றன...!
             இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஒரு நல்ல யோசனை.... இனிமேல் நாட்டுல பாராளுமன்றத் தேர்தலையே நடத்தவேண்டாம். காசுக்கு கூவுற ஊடகங்களிடம் ''கருத்துக்கணிப்பை'' வாங்கியே பிரதமர் மற்றும் மந்திரிகளையும், எம்.பி-க்களையும் தேர்ந்தெடுத்துக்கலாம். தேர்தல் ஆணையம் எதுக்கு பல ஆயிரம் கோடிகளை செலவு செய்து தேர்தலை நடத்தி கஷ்டப்படனும். கருத்துக்கணிப்புத் தேர்தலே சுலபமானது. அதுமட்டுமல்ல,  பண பலம், பெருமுதலாளிகள் பலம் உள்ள அரசியல் கட்சிகளுக்கு தான் செலவு. தேர்தல் ஆணையத்திற்கு ஒரு பைசா செலவும் இல்லை.  வேலையும் இல்லை. எல்லாவற்றையும் ஊடகங்களே பார்த்து புதிய ஆட்சியாளர்களை உட்கார வைத்துவிடுவார்கள். அப்புறம் தேர்தல் ஆணையம் என்று ஒன்று எதற்கு...? அதுவும் வேண்டாம். இதைஎல்லாம்  தேர்தல் ஆணையம் யோசித்துப்பார்க்கட்டும். ஜனநாயகமாவது... மக்களாவது... தேர்தலாவது....?           

சனி, 1 மார்ச், 2014

கண்டம் விட்டு கண்டம் பாயும் மோடியின் சித்து வேலைகள்...!

                              
                அமெரிக்க பத்திரிகை ஒன்றுதான் முதன்முதலாக இந்தியப் பிரதமராக தகுதியானவர் மோடியா, ராகுலா என்ற ''ஆரோக்கியமற்ற, ஜனநாயக விரோத'' விவாதத்தை கிளப்பிவிட்டது. இந்தப் பின்னணியில்தான் ஆர்எஸ்எஸ் அமைப்பு அத்வானி வயிற்றில் புளியைக் கரைக்கும் வகையில் மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துமாறு பாஜகவுக்கு உத்தரவிட்டது.
          அன்று துவங்கி மோடி தான் பிரதமர் என்கிற பிரச்சார சுனாமியை பாஜக மட்டுமல்ல, கார்ப்பரேட் ஊடகங்களும், வாடகைக்கு அமர்த்தப்பட்ட பல்வேறு நிறுவனங்களும் காது ஜவ்வை கிழிக்கும் வகையில் செய்து வருகின்றன. தமிழ்நாட்டில் கூட வைகோ, தமிழருவி போன்றவர்கள் மோடி அலை நாடு முழுவதும் வீசுகிறது என்று புல்லரித்து புளகாங்கிதம் அடைந்தார்கள். பல்வேறு தளங்களில் இந்த மோசடிப் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
            நாட்டில் எங்கும் மோடி அலை வீசவில்லை. மாறாக கோடை காலத்தின் துவக்கமாக வெப்பஅலை தான் வீசத்துவங்கியுள்ளது. இந்நிலையில் வியாழனன்று வெளிவந்த நாளேடுகளில் ''பாஜகவுக்கு 63 சதவீத இந்தியர்கள் ஆதரவு - அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல்'' என்ற செய்தி பிரதானமாக இடம் பெற்றுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ‘பெவ்’ என்ற நிறுவனம் தான் இந்த ஆய்வை நடத்தியதாம். அவர்கள் நடத்திய ஆய்வில் பத்தில் ஆறு பேர் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்றும் பத்தில் இரண்டு பேர் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் இந்த நிறுவனத்திடம் கூறினார்களாம்.
             விரிந்து பரந்த இந்தியாவின் வாக்காளர்கள் எண்ணிக்கை தற்போது 81.4 கோடியாக உள்ளது. இது பல நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள் தொகையை விட பல மடங்கு உயர்வு. இவ்வளவு பெரிய வாக்காளர் எண்ணிக்கை கொண்ட இந்தியாவில் அமெரிக்க நிறுவனம் 2464 பேரிடம் ஆய்வு நடத்திதாம். அவர்களில் 63 சதவீதம் பேர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தார்களாம்.
            மூளை வேலை செய்கிற யாரும் இத்தகைய முட்டாள்தனமான ஆய்வுகளை ஏற்றுக் கொள்வார்களா? இந்த செய்தியை மிகப்பெரிய செய்தியாக வெளியிட்டு இந்திய பத்திரிகைகளும் தங்கள் மோடிவிசுவாசத்தையும், அமெரிக்க விசுவாசத்தையும் ஒரு சேர காட்டிக்கொள்கின்றன. திறந்த வீட்டில் ஆளாளுக்கு நுழைந்து அகப்பட்டதை சுருட்டுவது போல யார் வேண்டுமானாலும் இந்த நாட்டில் நுழைந்து ஆய்வு நடத்தலாம். முடிவைத் தெரிவிக்கலாம். மக்களை திசை திருப்பலாம்.
             இதேபோன்று இந்திய நிறுவனம் ஒன்று அமெரிக்காவில் ஆய்வு நடத்தி அந்த நாட்டில் உப்புமாவுக்கு இருக்கும் மரியாதை கூட ஒபாமாவுக்கு இல்லை என்று செய்தி வெளியிட்டால் அந்த நாடு சும்மா இருக்குமா? இந்தியா என்றால் இளக்காரமா? இன்னொரு செய்தியும் பத்திரிகைகளில் வெளியானது. அது என்னவென்றால் ''மோடி பிரதமரானால் பொருளாதாரம் வளரும்'' என்று ''மூடிஸ்'' தரச்சான்று நிறுவனம் சான்றிதழ் வழங்கியுள்ளதாம்.
          சைபால் களிம்பு அரிப்பு, சொறியை நன்றாக குணமாக்கும் என்று தரச்சான்று வழங்குவது போல மோடிக்கு சான்று வழங்கியுள்ளது அந்த நிறுவனம். இதுவும் பிரபலமான நிறுவனம் தானாம். தொழில்துறையினருக்கு மோடி மிகுந்த நண்பனாகத் திகழ்வதால் பொருளாதாரம் வளரும் என்று மூடிஸ் என்கிற அந்த நிறுவனம் தனது ஆய்வை திறந்து காட்டியுள்ளது. இத்தகைய நிறுவனங்கள் பெருமுதலாளிகளால் நடத்தப்படுவதுதான்.
              டாடா எனும் பெருமுதலாளிக்கு நானோ கார் தொழிற்சாலை அமைக்க அடிமாட்டு விலைக்கு நிலம் கொடுத்த மோடி பதவிக்கு வரவேண்டும் என்றே முதலாளிகள் விரும்புகின்றனர். அம்பானிக்கு எதிராக தான் எடுத்த நடவடிக்கை குறித்து உங்கள் கருத்து என்ன? என்று தில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் கேட்டதற்கு மோடி இன்று வரை வாய்திறக்கவில்லை. ஆனால் ஊர்ஊராகச் சென்று தசாவதாரம் கமலஹாசன் போல பல்வேறு கெட் -அப்புகளில் தோன்றி முழக்கம் செய்துகொண்டிருக்கிறார்.
           கருத்துக்கணிப்புகள் என்ற பெயரில் பல்வேறு தருணங்களில் நிகழ்த்தப்பட்ட கருத்துத் திணிப்புகளை தகர்த்தெறிந்து இந்திய வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக முதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். மோடி குறித்த மோசடியான பிரச்சாரப் புயலை இந்திய வாக்காளர்கள் புறந்தள்ளுவார்கள் என்பது உறுதி.
        அமெரிக்க நிறுவனமாக இருந்தாலும் சரி, அனகோண்டா நிறுவனமாக இருந்தாலும் சரி அப்போது தங்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்கள் என்று அறிய இப்போதே ஆவலாக இருக்கிறது. 
-மதுரை சொக்கன்           
நன்றி :