கல்யாணசுந்தரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்யாணசுந்தரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 11 அக்டோபர், 2011

புதுச்சேரி மந்திரியை காணவில்லை...!

''அய்யா... எங்க ஊரு மந்திரிய காணளிங்கய்யா...''
''யோவ்... இது போஸ்ட் ஆபிஸ்யா.. போலீஸ் ஸ்டேஷன்ல போய் 
   சொல்லுயா...''
'' ஓ... சாரி...சாரி... சந்தோசத்துல எங்க சொல்லுறதுன்னே     
    மறந்துபோச்சிங்கைய்யா...''
             இப்படித் தான் பாண்டிச்சேரியில் இருக்கும்  காங்கிரஸ் கட்சிக்காரங்களும் அதிமுக கட்சிக்காரங்களும் கடந்த பத்து நாட்களாக ரொம்ப சந்தோசத்துல இருக்காங்க...
             ஏன்னா... புதுவை காமராசர் ரங்கசாமி எதுல மாட்டுவார்னு எதிர்பாத்துகிட்டே இருந்தாங்களா... எலிப்பொறியில தானே போய் மாட்டிகிட்ட
பெருச்சாலி மாதிரி எங்க அண்ண கல்யாணசுந்தரம் வகையா மாட்டிக்கிட்டாருங்க.. 
            அவரு ஒன்னும் இந்த 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன் வெல்த் விளையாட்டு ஊழல்... இப்படி எதிலும் மாட்டலீங்க .. பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதறது தப்புங்களா...பத்தாம் வகுப்பு தனித் தேர்வு பத்து நாளுக்கு முன்னாடி நடந்துச்சிங்க.. அதுல அறிவியல்.. சமூக அறிவியல் .. இந்த ரெண்டேரெண்டு பாடத்தை தாங்க அவர் எழுத இருந்தாரு... இன்னா ஒன்னு.. அத இவரு எழுதலைங்க.. வேற ஒரு பையன் இவருக்காக எழுதனாங்க...அதுவும் எதுக்குன்னா.. இவரு கல்வி அமைச்சருங்களா... ரொம்போ பிசீங்களா... அதனால இவரு போய் தேர்வு எழுதமுடியளைங்க... ஒரு கல்வி அமைச்சரு இதைக்கூட செய்யக்கூடாதுங்களா... இதப்போய் தப்புன்னு சொல்றாங்க படுபாவிப் பசங்க...
             எங்க அண்ணன் எப்பவோ பத்து வருஷத்துக்கு முன்னாடி பத்தாம் வகுப்பு எழுதுனாருங்க.. ஆனா அதுல ரெண்டு பாடத்துல பெயில் ஆயிட்டாருங்க... அதுக்காக அவர முட்டாள்ன்னு  நெனச்சிடாதீங்க.. ரொம்ப பெரிய புத்திசாலி தானுங்க... ரொம்ப நல்லா படிச்சவருங்க...
              ஆனா அவரு அம்புட்டு படிப்பு படிக்கலனாலும் தன்னுடைய திறமையினாலும், புத்திசாலித்தனத்தினாலும் தாங்க அவரு ஒரு தொழிலதிபரா உயர்ந்தாரு.... அப்படி என்ன தொழில செயதாருன்னு நீங்க கேட்கறது என் காதுல விழுதுங்க... சொல்லுறேன் எழுதிகோங்க..
            முதல்ல அவரு செய்தது ''ரௌடி தொழில்'' தானுங்க.. அதுக்கு இவர மாதிரியே இருக்கிற புத்திசாலிப் பசங்கள செத்து வெச்சிக்கிடாருங்க... அமோகமா தொழில் நடந்ததும்...அடுத்து ''கட்டப்பஞ்சாயத்து'' தொழில்ல ஈடுபட ஆரம்பித்தாருங்க... அதிலேயும் நல்ல வருமானங்க.. 
               இப்படி நல்ல வளர்ச்சி ஆனதும், மது பாட்டில் கடத்தல், வீடு - நிலம் அபகரிப்பு... இப்படியெல்லாம் செய்து படிப்படியா உயந்துகிட்டே போனாருங்க... அப்புறம்.... தன் கூட இருக்கிற ரௌடிங்க  கூட்டத்துக்கு ''மனித உரிமைகள்  கழகம்'' - ன்னு பேரை வெச்சி ''அதிகாரப்பூர்வமா'' ரௌடி தொழில நடத்தினாருங்க...  . பாரதீய ஜனதா கட்சியில சேர்ந்து தேர்தல வேற நின்னாருங்க எங்க அண்ணன். ஆனா ஜெயிக்கலிங்க..
               அதுக்கப்புறமா.. போலீஸ்காரங்க கூட நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அதனால போலீஸ்காரங்கள கையில போட்டுக்கிட்டு பொண்ணுங்கள வெச்சி ''பாலியியல் தொழில்'' செய்தார்ன்னா  பாத்துக்கோங்களேன். அவ்வளவு நல்லவருங்க எங்க அண்ணன்... இப்படி தான், அவரு ஒரு பெரிய ''தொழிலதிபராக''  வளர்ந்து  பல்வேறு ''சமூக நலப்பணி''களையும்    செய்துக்கிட்டு வர்ராருங்க.... ''மக்கள் சேவகர்'' ன்னு  பட்டத்தைக்கூட அவரா தான் வெச்சிக்கிடாருங்க.....
               இடையல சட்டமன்றத் தேர்தல் வந்ததா.. ஏற்கனவே காலாப்பட்டு தொகுதியில அண்ணனோட ''தொழில்'' ரொம்ப விஸ்தாரமா.. லாபகரமா நடக்குதுங்களா.... நல்ல பிரபலமான பிரமுகரா ஆயிட்டாருங்க... ரங்கசாமி வேற புது கட்சி ஆரம்பிச்சாரா.. அண்ணனும் அப்படியே அதுல போய் ஒட்டிகிட்டாருங்க..  அதுக்கு தகுந்த மாதிரி வீணாப்போன காங்கிரஸ் கட்சி சார்புல ஷாஜகான்னு ஒரு மூதேவிய நிக்க வெச்சாங்கங்க... அவரு பேருல மக்களுக்கு பெரிய அதிருப்திங்க... ஏன்னா.. எலக்சனுக்கு எலக்சன் தானுங்க அவரு தொகுதி பக்கமே வருவாரு... அதனால தான்  காலாபேட்டு ஜெனங்களும் அந்த மூதேவிக்கு இந்த மூதேவி பரவா இல்லைன்னு.. இந்த மூதேவிய ஓட்டு   போட்டு   தேர்ந்தேடுத்தாங்கங்க..
              எப்பவுமே பாண்டிச்சேரி மக்கள் நல்லவங்களுக்கு ஓட்டு போடமாட்டங்கங்க.. மொள்ளமாரி, முடிச்சவிக்கி, சாராய வியாபாரி, ஆள் கடத்தறவன், வழிப்பறி செய்யறவன், கட்டப்பஞ்சாயத்து செய்யறவன்.... இப்படிப்பட்டவங்கள தான் இந்த மக்கள் தேர்ந்தேடுப்பாங்கங்க...
                 அப்படி ஜெயிச்சவரு தான் எங்க அண்ணன் கல்யாணசுந்தரம்... ரங்கசாமிக்கும் தனியா கட்சி நடத்துவதற்கு,  ஆட்சி நடத்துவதற்கும் இப்படிப்பட்ட ஆளு தான் தேவை.. ஒரு மந்திரி பதவியைக் கொடுத்து பக்கத்துலேயே வெச்சிகிட்டாருங்க...
                   ஒரு அமைச்சரு.. அதுவும் ஒரு கல்வி அமைச்சரு... பத்தாவது கூட தாண்டலன்னா கேவலம்ன்னு நெனச்சி தான் எங்க அண்ணன் ரொம்ப திட்டம் போட்டு இந்த திருவிளையாடல நடத்தினாருங்க... அண்ணன் வரலாற்றிலேயே ''தனக்காக'' தானே திட்டம் போட்டு செய்த ஆள்மாறாட்ட திருவிளையாடளுங்க இது... கடைசியில வகையா மாட்டிகிட்டாருங்க... விழுப்புரம் மாவட்ட கல்வி அதிகாரி ஆள்மாறாட்டம் நடந்திருப்பதை உறுதி செய்து காவல் துறையில் புகார் செய்த பிறகு, அண்ணன் பேர்ல எட்டு வழக்குகள் பதிவாகியிருக்குதுங்க.. தமிழ்நாடு போலீஸ் புதுவையில  எங்க அண்ணன் பாத்துபோகலாம்னு வந்து தேடுறாங்கன்னு  தெரிஞ்ச  பிறகு  தான்  எங்க அண்ணன காணலைங்க..
                   ரங்கசாமி வீட்டுலேயும், சட்டமன்றத்திலேயும் எங்க அண்ணன் ஒளிஞ்சிகிட்டிருந்தாருன்னு சொல்லுராங்கங்க... இதெல்லாம் நான் தான்  சொன்னேன்னு எங்க அண்ணன்கிட்ட சொல்லிடாதீங்க அய்யா...

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

10 - ஆம் வகுப்பு தேர்வு எழுதிய ஒழுக்கசீலரான கல்வி அமைச்சர்..!

                     புதுச்சேரியில் ஆளும் ரங்கசாமி தலைமையிலான  என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பில் இருக்கும் 
பி. எம். எல்.  கல்யாணசுந்தரம், 10-ம் வகுப்பு கூட நிறைவு செய்யவில்லையாம்.  ஒரு கல்வி அமைச்சர் பத்தாம் வகுப்புக் கூட முடிக்கவில்லை என்கிற லட்ச்சணம் இப்போது தான் தெரிய வந்திருக்கிறது. இன்னும் அவரைப் பற்றிய வரலாறு என்னன்னா..இவர் ஏற்கனவே கடந்த 1991-ல் அரசு பள்ளியில் படித்து 10-ம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கிறார் என்றும், அந்த தேர்வில்  தமிழ் பாடத்தில் 48 மதிப்பெண்ணும், ஆங்கிலம் பாடத்தில் 47 மதிப்பெண்ணும் , கணிதம் பாடத்தில் 75 மதிப்பெண்ணும் பெற்று மூன்று  பாடங்களில் மட்டுமே  தேர்ச்சி அடைந்திருக்கிறார் என்றும், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் குறைவான மதிப்பெண்களை பெற்று தோல்வி அடைந்தார் என்றும் சொல்லப்படுகிறது.  
                இருபது ஆண்டுகளுக்கு முன்பு பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்த கல்யாணசுந்தரம், புதுச்சேரி கல்வித்துறை அமைச்சரான பிறகு தோல்வியடைந்த அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை  மீண்டும் எழுதி  10-ம் வகுப்பை நிறைவு செய்ய முடிவு செய்து, விழுப்புரம் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட - புதுச்சேரியிலிருந்து 40 கி. மீ. தொலைவிலுள்ள  திண்டிவனத்தில் உள்ள தாகூர் மெட்ரிக்குலேஷன் பள்ளி என்கிற தனியார் பள்ளியில் தேர்வு எழுத விண்ணப்பித்திருக்கிறார். இதற்கானத் தேர்வு சென்ற வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடந்திருக்கிறது.  
                கல்வி அமைச்சராக பணியாற்றக்கூடியவர்  10 - ஆம் வகுப்பு கூட நிறைவு செய்யவில்லையே என்று அதை நிறைவு செய்ய முயற்சி செய்ததை பாராட்டத்தான் வேண்டும். தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போது காமராசருக்குக் கூட இப்படி ஒரு எண்ணம் வந்ததில்லை.
                 இதில் என்ன பார்க்கவேண்டி இருக்குன்னா...புதுவையை சேர்ந்த அமைச்சர் ஏன் தமிழ்நாட்டிற்கு சென்று எழுதவேண்டும்..:? அங்கே என்ன ''விசேஷம்''..?  திண்டிவனத்தில் சில தனியார் பள்ளிகளில் 10 - ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு நேரங்களில், காசை வாங்கிக்கொண்டு புத்தகத்தை பார்த்து பதில் எழுதவும், ஆள் மாறாட்டம் செய்து பதில் எழுதவும் அனுமதிக்கிறார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். புதுவையை சேர்ந்த சில பெற்றோர்கள் படிப்பில் நாட்டமில்லாத தன் பிள்ளைகள் எப்படியாவது தேர்ச்சி  பெறவேண்டும் என்கிற நோக்கில்  திண்டிவனத்தில் உள்ளப் பள்ளிகளில் விண்ணப்பிப்பது இன்றும் வழக்கமாக தான் உள்ளது.
                 அதுவும் ஒரு கல்வி அமைச்சராக இருக்கக்கூடியவர் தன் சொந்த ஊரிலேயே விண்ணப்பித்து தேர்வு எழுதாமல், வேற்று மாநிலத்தில் விண்ணப்பித்து தேர்வு எழுதுவது என்பது நமக்கெல்லாம் சந்தேகத்தை வரவழைக்கிறது.
                அது மட்டுமல்ல, நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை சமூக அறிவியல் தேர்வின் போது அந்த பள்ளியில் இவருக்காக தேர்வு எழுதிய ஒரு இளைஞன் கல்வித் துறையின் பறக்கும் படையால் பிடிபட்டிருக்கிறான் என்றும், பிறகு பள்ளி நிர்வாகம் தலையிட்டு அந்த இளைனை தப்பவைத்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது. பத்திரிக்கையாளர்களுக்கும், தொலைகாட்சியாளர்களுக்கும் செய்தி பரவி அந்தப் பள்ளியில் ஒரே பரபரப்பாகியிருக்கிறது.
               அந்த பரபரப்பு புதுச்சேரியிலும் பரவி, ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய அமைச்சர் பதவி விலக வேண்டுமென்று அமைச்சரின் தொகுதியிலேயே மறியல் போராட்டமெல்லாம் நடந்திருக்கிறது. 
               கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம்,  தான் தேர்வு எழுத அந்தப் பள்ளியில் விண்ணப்பித்தது உண்மைதான் என்றும், வியாழக்கிழமை நடந்த அறிவியல் தேர்வு மட்டுமே நான் நானே அந்தப்  பள்ளிக்கு சென்று தேர்வு எழுதியதாகவும், வெள்ளிக்கிழமை ஆளுநருடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்று இருந்ததால் சமூக அறிவியல் எழுத செல்லவில்லை என்றும் ஒரு வாக்குமூலத்தை திருவாய் மலர்ந்திருக்கிறார்.
                    அப்படி இவரால் தேர்வு எழுத செல்ல முடியவில்லை என்றால், சமூக அறிவியல் பாடத் தேர்வு இவர் பெயரில் எழுதியது யார்..?  இவருக்கே தெரியாமல் இவரது தேர்வு அனுமதி சீட்டை எடுத்துக்கொண்டு சென்று இவருக்காக இவரது ''சீடர்கள்'' எழுதினார்களா..? தெரியவில்லை. 
               திண்டிவனத்தில் கல்வித் துறை அதிகாரிகளை அணுகியபோது, இந்த சம்பவம் பற்றி விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்றத் தகவலை தெரிவித்தார்கள்.
               கல்யாணசுந்தரம் அமைச்சராக பதவியேற்ற போதே, எதிர்கட்சிகளிடமிருந்து - குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து பலத்த எதிர்ப்பு வந்தது. கல்யாணசுந்தரம் ஏற்கனவே சட்டவிரோதச்  செயல்களிலும், சமூகவிரோதச் செயல்களிலும் ஈடுபட்டு கிரிமினல் வழக்குகளை சந்தித்துக் கொண்டிருப்பவர் என்கிற குற்றச்சாட்டு அவர்மீது இருக்கிறது.
                இந்த சூழ்நிலையில் தான் இப்படிப்பட்ட வேலைகளில் ஈடுபட்டு வகையாக சிக்கிகொண்டிருக்கிறார். இந்த தேர்வு முறைகேடு என்பது நிருபிக்கப்பட்டால், கல்யாணசுந்தரம் தானாக பதவி இறங்கவேண்டும் அல்லது பதவி நீக்கம் செய்யப்படவேண்டும். அதுமட்டுமல்லாது, சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கப்படவேண்டும். ஒழுக்கமற்ற ஒருவர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பது கூட சமூகத்திற்கு கேடுவிளைக்கும்.