| தனியார் பள்ளிகளில் தடையற்ற கட்டணக்கொள்ளை : தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள சூழலில், தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கல்விக்கட்டணம் பெற்றோர்களை மிகப்பெரும் அளவிற்கு பாதித்துள்ளது. இதனால் மாநிலத்தில் ஆங்காங்கே கல்விக் கட்டண உயர்வை எதிர்த்து முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணங்களை முறைப்படுத்திட, நீதிபதி கோவிந்தராஜன் குழு அமைக்கப்பட்டு, கட்டண விகிதம் தீர்மானிக்கப்பட்டது. அதுவே அதிகமாக இருந்ததாக பெற்றோர்கள் கஷ்டப்பட்டனர். மறுப்பக்கம், இக்கட்டணம் தங்களுக்கு போதாது என 6400 பள்ளி நிர்வாகங்கள் முறையீடு செய்தனர். அதனால் அன்றைய திமுக அரசு கட்டணத்தை மறுபரிசீலனை செய்திட நீதிபதி ரவிராஜபாண்டியன் குழுவை புதிதாக நியமித்தது. இந்தக்குழு ஆறுமாத கால அவகாசத்தை எடுத்துக்கொண்டும் கூட, இந்தாண்டு பள்ளிகள் திறக்கும் வரையிலும் கட்டண விபரங்களை அறிவிக்கவில்லை. இதற்கிடையில் அக்குழுவின் தலைவராக இருந்த நீதிபதி ரவிராஜபாண்டியன் ராஜினாமா செய்துவிட்டார். இப்போது அறிவிக்கப்பட்டுள்ள புதியக் கல்விக் கட்டணமோ முந்தைய கட்டணத்தை விட மிக அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, சென்னை எஸ்பிஓஏ மெட்ரிக் பள்ளியின் 11வது வகுப்பிற்கான கட்டணம் ரூ.11 ஆயிரம் என்பதை ரூ.25 ஆயிரம் என உயர்த்தி அறிவித்துள்ளது. கட்டண உயர்வைக் கண்டித்து பெற்றோர்கள் போராடினால், தனியார்ப் பள்ளி கட்டண வசூலில் அரசு தலையிடாது என்று பள்ளிக் கல்வி அமைச்சர் மாண்புமிகு சி. வி. சண்முகம் பொறுப்பில்லாமல் சொல்கிறார். புதிய கட்டணம் குறித்த விபரங்களை பொதுமக்கள் அறியும் வகையில் அரசு வெளியிடாததால், பெற்றோர்கள் குழம்பிப்போய் இருக்கிறார்கள். பள்ளி நிர்வாகங்களோ புதிய கட்டண விபரங்களை ரகசியமாக வைத்துக் கொண்டு தங்கள் விருப்பத்திற்கேற்ப கட்டணத்தை வசூலித்து வருகின்றன. இதற்கும் மேலாக சீருடைகள், நோட்டுப்புத்தகங்கள் கட்டணத்தை சம்பந்தப்பட்ட பள்ளிகளே தீர்மானித்துக்கொள்ளலாம் என்று தடையற்ற கொள்ளைக்கும் இந்தக் குழு வாய்ப்பளித்துள்ளது. மக்களை மிக மோசமாக பாதிக்கும் நீதிபதி ரவிராஜபாண்டியன் குழுவின் கல்விக் கட்டண அறிவிப்பில் அரசு தலையிடுவதில் சட்டக்குறுக்கீடுகள் இருக்குமானால், அவசரச் சட்டத்தின் மூலம் திருத்தம் கொண்டு வந்து, அரசு தலையிட்டு திரும்பப் பெற வேண் டும். கடந்த ஆண்டின் கல்விக் கட்டணத்தை இந்த ஆண்டும் அமல்படுத்திட வேண்டும். வங்கிக் காசோலைகள், வரைவோலைகள் மூலம் மட்டுமே கட்டணம் பெறுவதை கட்டாயப்படுத்த வேண்டும் என்பதே கல்வியின் மீது அக்கறை உள்ளவர்களின் எதிர்பார்ப்பாகும். காற்றில் பறக்கும் கல்வி உரிமைச்சட்டம் : அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2010 - ம் ஆண்டு ஏப்ரலில் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் ஏழைகளுக்கு கல்வி தருவதற்கு சில திட்டங்களை உருவாக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக, அனைத்து மட்ட தனியார் கல்வி நிறுவனங்களிலும் 25 சதவிகித இடங்களை இலவச கல்விக்கு ஒதுக்கிட வேண்டும் என இச்சட்டம் குறிப்பிடுகிறது. இப்படிப்பட்ட சட்டத்தை தமிழகத்தில் அமலாக்கிட அதற்கான விதிகள் தமிழகத்தில் இதுகாறும் உருவாக்கப்படவில்லை. காலதாமதமின்றி விதிகளை உருவாக்கி, இச்சட்டப் பயன்கள் தமிழகக் குழந்தைகளுக்கு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கேள்விக்குறியாகும் சமச்சீர்க் கல்வி : சமச்சீர் கல்வி திட்டத்தில் பொதுப் பாடத்திட்டத்தை முற்றிலுமாக நிறுத்தி வைப்பது என்ற அதிமுக அரசின் முடிவு பொருத்தமானது அல்ல என்று ஆரம்பம் முதலே பல கல்விச் சிந்தனையாளர்களும், பல கல்வியாளர்களும் வலியுறுத்தி வருகிறார்கள். இப்பிரச்சனை நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு உச்சநீதிமன்றம் 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு ஏற்கனவே உள்ள பொதுப் பாடத்திட்டத்தை அமலாக்க வேண்டும் என்றும், 10 வரையிலான இதர வகுப்புகளுக்கு நிபுணர் குழு அமைக்கப்பட்டு, குழு அளிக்கும் பரிந்துரைகளைப் பெற்று மூன்று வாரங்களுக்குள் சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளது. அதன் படி தமிழக அரசு நிபுணர் குழுவை நியமித்தது. அந்தக் குழுவில் கல்வியாளர்கள் என்றப் பெயரில் இரண்டு தனியார் பள்ளி உரிமையாளர்களை அறிவித்துள்ளது என்பது ஏற்கக்கூடியதல்ல. சமூக அக்கறையுள்ள பொருத்தமான கல்வியாளர்கள் தான் இக்குழுவில் இணைக்கப்பட வேண்டும். கடந்த திமுக அரசு சமச்சீர் கல்வித் திட்டத்தில் பல்வேறு அம்சங்களை அமலாக்காத சூழ்நிலையில், பல்வேறு எதிர்பார்ப்புகளோடு அனைவரது ஆதரவோடு அமைந்த புதிய அதிமுக அரசு . ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பொதுப்பாடத்திட்டம் என்ற முதல் படியை இந்தாண்டு அமுலாக்கிக் கொண்டே, அதிலுள்ள குறைகளை நீக்கி சமச்சீர் கல்வியை அமலாக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்என்பது தான் தமிழக மக்களின் - பெற்றோர்களின் - மாணவ-மாணவியரின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் ஆகும். |
சமச்சீர்கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமச்சீர்கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 19 ஜூன், 2011
தமிழகத்தில் சிக்கித்தவிக்கும் கல்வி....
லேபிள்கள்:
சமச்சீர்கல்வி
திங்கள், 23 மே, 2011
குழந்தைகளின் எதிர்காலத்தோடு விளையாடாதீர்கள்.
முதல் கோணல் : ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவைக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு
நேற்று மே 22 ஞாயிற்றுக்கிழமை தமிழக அமைச்சரவையின் முறைப்படியான முதலாவது கூட்டம் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையில் கூடியது. இந்தக் கூட்டத்தில் தங்கள் கூட்டணிக்கு பெருவாரியான இடங்களை அள்ளித் தந்து தன்னை முதலமைச்சர் நாற்காலியில் அமரச்செய்த தமிழக மக்களுக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அன்பாக பரிசினை அள்ளிக்கொடுத்திருக்கிறார்.
முதல் கூட்டத்திலேயே அதிரடி நடவடிக்கையாக, இந்த கல்வியாண்டிலிருந்து அமலாகும் என்று பெற்றோர்களும் மாணவ - மாணவியரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்த சமச்சீர்க்கல்வி திட்டத்தை குப்பைத்தொட்டியில் தூக்கி எறிந்தார்கள். அமைச்சரவையின் தான்தோன்றித்தனமான முடிவு என்பது அரசியல் காழ்ப்புணர்வைத் தான் வெளிப்படுத்துகிறது. ஆட்சி இழந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி செய்த அத்துணை காரியங்களும் - அத்துணை திட்டங்களும் சரியானது என்றோ, உள்நோக்கம் இல்லாதது என்றோ, குறைபாடுகள் இல்லாதது என்றோ சொல்லவில்லை. அந்த திட்டங்களை நடைமுறைப் படுத்திக்கொண்டே அதில் உள்ள குறைகளை நீக்க வேண்டுமேத் தவிர, இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவெடுத்து நடந்துகொண்டால் மக்களின் அதிருப்திக்கும், சந்தேகத்திற்கும் கோபத்திற்கும் ஆளாகவேண்டிவரும்.
பள்ளிக் கட்டணக் கொள்ளையில் சிக்கித்தவிக்கும் பெரும்பாலான பெற்றோர்கள், ஒரே மாதிரியான கல்வி முறைக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் கிராமப்புற மாணவ - மாணவியர், சமச்சீரான கல்விக்காக பலகாலமாய் போராடி வெற்றிபெற்ற இந்திய மாணவர்கள் சங்கம் மற்றும் சமூக சிந்தனையாளர்கள் மத்தியில் அரசின் இந்த முடிவு அதிர்ச்சியை தந்திருக்கிறது. இன்றைக்கு பல பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பிலிருந்து தேர்ச்சிபெற்று பத்தாம் வகுப்புக்குச் சென்ற பிள்ளைகளெல்லாம் ஒரு மாத காலமாக காலாண்டு வரையிலான பாடங்களை படித்து முடித்திருக்கிறார்கள்.
சமச்சீர்க்கல்வி படங்களோடு பழகிவிட்டனர். கிராமப்புற பிள்ளைகளும் புதிய பாடத்திட்ட புத்தகத்திற்காக ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படிப்பட்டச் சூழ்நிலையில் அரசின் இந்த முடிவு என்பது அந்த குழந்தைகளுக்கெல்லாம் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. இந்த செயல் என்பது அந்தக் குழந்தைகளுக்கு மன உளைச்சலையும், மனஇறுக்கத்தையும் தான் அளிக்கும் என்பதை தமிழக அரசு மறந்துவிடக்கூடாது.
அது மட்டுமல்ல, இந்த சமச்சீர்க்கல்வி முறை என்பது தங்களின் கட்டணக் கொள்ளைகளுக்கு எதிரானது என்று நீதிமன்றம் சென்றிருக்கும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அரசின் இந்த முடிவு என்பது கொண்டாட்டத்தைக் கொடுக்கும்.
கடந்த காலங்களில் சமச்சீர்க் கல்விக்காக போராடிய பொதுப்பள்ளிக்கான மாநில மேடை என்ற அமைப்பின் பொறுப்பாளர் ப்ரின்ஸ் கஜேந்திர பாபு அரசின் இந்த முடிவைப்பற்றிக் கூறுகையில், “அமைச்சரவையின் முடிவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மிகவும் துரதிர்ஷ்டவசமான முடிவு இது. கல்வியாளர் அடங்கிய வல்லுனர் குழு ஆராய்ந்து அளித்த அறிக்கையை, அரசு குப்பையில் போட்டுள்ளது வேதனையானது. இப்போது உள்ள பாடத் திட்டத்தில் தவறுகள் இருக்கலாம். அந்தக் தவறுகளுக்கு திருத்தத்தை அச்சடித்து அனுப்புவதில் சிரமமே இருக்காது. மேலும் சீர் செய்ய வேண்டும் என்று அரசு கருதினால், அடுத்த ஆண்டு பாடப் புத்தகங்களை தாராளமாக மாற்றலாமே.. இந்த சமச்சீர் கல்வியை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற, மெட்ரிகுலேஷன் லாபியினர் மகிழும் வகையில் இந்த உத்தரவு அமைந்துள்ளது. இது வெறும் பண நட்டம், பொருளாதாரம் மட்டும் சம்பந்தப்பட்ட முடிவு அல்ல. மாணவர்களின் உளவியல் சம்பந்தப் பட்டது. இரண்டு மாதகாலமாக 10ம் வகுப்பு பாடத்தை படித்து வரும் மாணவனுக்கு, புதிய பாடம் என்றால் எப்படி இருக்கும் ? இது மாணவர்களுக்கு கடும் மன உளைச்சலை தரும். ஜெயலலிதா அரசு, பெருந்தன்மையோடு, இந்த முடிவை மாற்றும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.
குறிப்பிட்ட தேதியில் கட்டாய ஹெல்மெட் என்று உத்தரவு வந்த போது, உண்மையோ இல்லையோ, கருணாநிதி அரசு ஹெல்மெட் தயாரிப்பாளர்களிடமிருந்து லஞ்சம் பெற்று விட்டதென்று அப்போது பேச்சு எழுந்தது.அதேப்போல் இப்போதும், கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளி நிறுவனர்களிடமிருந்து லஞ்சம் பெற்றுத் தான் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுவதற்கான வாய்ப்பை செல்வி ஜெயலலிதாவின் இந்த முடிவு ஏற்படுத்தியிருக்கிறது என்பது தான் உண்மை. அந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லாமலேயே இருந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை, அன்றாடம் லஞ்சம் - ஊழல் என்கிறச் செய்திகளிலேயே ஊறிப்போன மக்களுக்கு அத்தகைய சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியாது.
எனவே தமிழக அரசு எடுத்த இந்த முடிவை மறுபரிசீலனைச் செய்து, தொடங்கப்பட்ட சமச்சீர்கல்வி முறையை நடைமுறைப்படுத்திக் கொண்டே அதில் உள்ளக் குறைகளை களைவதற்கு ஏற்பாடுகள் செய்யலாம் என்பது தான் தமிழக மக்களின் உடனடி வேண்டுகோளாகும்.
லேபிள்கள்:
சமச்சீர்கல்வி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


