வெள்ளி, 30 செப்டம்பர், 2011

ஒரு தொழிற்சங்கப் போராளியின் பணி நிறைவு - புரட்சிகர நல்வாழ்த்துகள்...

                       கடந்த 1951 - லிருந்து இந்திய இன்சூரன்ஸ் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு - குறிப்பாக பொதுத்துறை எல். ஐ. சி மற்றும் பொது இன்சூரன்ஸ் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதுகாப்பாய் - பக்கபலமாய் இருக்கும் அகில் இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்று இன்சூரன்ஸ் ஊழியர்கள் அனைவரையும் வழிநடத்திச்செல்லும் எங்கள் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய தோழர் கே. வேணுகோபால் அவர்கள் 30  செப்டம்பர் 2011 அன்று 41 ஆண்டு கால எல் ஐ. சி பணி நிறைவு செய்கிறார்.  
               கடந்த 11 ஆண்டுகாலமாக அவர் ஆற்றிய சங்கத்தின்  பொதுச்செயலாளர் பணி என்பது மிகவும் பாராட்டத்தக்கப் பணியாகும். மண்டல மற்றும் கோட்டச்சங்க மாநாடுகள் மட்டுமின்றி சங்கத்தின் அனைத்து மனிதநேய பணிகளுக்கும் சிரமம் பாராமல் பல்வேறு வேலைகளுக்கு நடுவில் ஓடோடி வந்து தோழர்களோடு சேர்ந்து  அந்த தொழிற்சங்கப் பணிகளை செய்திருக்கிறார்.
              2004  - ஆம் ஆண்டு தமிழகம் சுனாமியால் பாதிக்கப்பட்ட போதும், 2005 - ஆம் ஆண்டு காஷ்மீர்   பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட போதும் அங்கெல்லாம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  அனைத்து உதவிகளையும் செய்துகொண்டிருந்த AIIEA சங்கத்  தோழர்களோடு சேர்ந்து களப்பணிகளை செய்யக்கூடியவர். தோழர்கள் செய்த வேலைகளை பாராட்டவும் தயங்கமாட்டார். அவர் இரண்டு முறை சுனாமி சம்பந்தப்பட்ட  நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக புதுவைக்கு வருகை புரிந்தது என்பது  மறக்க முடியாத நிகழ்வுகளாகும். புதுச்சேரியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட  மக்களுக்காக சங்கத்தின் சார்பில் நான் செய்த பணிகளை குறிப்பிட்டு சங்க மாநாடுகளிலும், என்னிடம் நேரிலும் அவர் பலமுறை பாராட்டியது என்பது மறக்கமுடியாததாகும்.
               வெறும் சம்பள உயர்வு வாங்குவதற்கு மட்டுமே தொழிற்சங்கம் என்ற பிற்போக்குத்தனமான சுயநல சங்கங்களுக்கு மத்தியில் சமூக அக்கறை கொண்ட - தேச பக்தி கொண்ட தொழிற்சங்கமாக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தை மாற்றிய தலைவர்களில் இவரும் ஒருவர். எல். ஐ. சி. ஊழியர்களுக்கு அரசியல் விழிப்புணர்வையும், சமூக பார்வையையும், தேசபக்தியையும் ஊட்டியவர்.
               இன்று செப்டம்பர் 30 -இல்   எல். ஐ. சி.  பணி  நிறைவு செய்யும் தோழர். கே. வேணுகோபால் அவர்களை வாழ்த்தி வழியனுப்புகிறோம். புரட்சிகர வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். தோழர். கே. வேணுகோபால் வாழ்க..

வியாழன், 29 செப்டம்பர், 2011

வாச்சாத்தி வழக்கு - காலம் கடந்தும் நீதி கிடைத்தது.

வாச்சாத்தி பாலியல் பலாத்கார வழக்கில் தீர்ப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்
ட் கட்சி வரவேற்பு

              1992ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டம், வாச்சாத்தி மலைவாழ் மக்கள் சந்தன மரங்களை கடத்துவதாக வந்த புகாரின் மீது வனத்துறையைச் சார்ந்த அதிகாரிகள், காவல்துறையினர், வருவாய்த்துறையினர் உள்ளிட்டு 269 பேர் கொண்ட கூட்டுக்குழு அதிரடி சோதனையில் ஈடுபட்டு அக்கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் பலரை பாலியல் பலாத்காரம் செய்து வன்கொடுமைக்கு ஆளாக்கினர். அவர்களின் வீடுகள் நொறுக்கப்பட்டு, உடைமைகள் சூறையாடப்பட்டன. ஆண்கள் 15 பேர், குழந்தைகள் 28 பேர், பெண்கள் 90 பேர் என 133 பேரை கைது செய்து பொய்வழக்கு புனைந்தனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வாச்சாத்தி கிராம மலைவாழ் மக்கள் கொடுத்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை.
              இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் பாலியல் வன்கொடுமைக்கும், பல்வேறு பாதிப்புகளுக்கும் ஆளாகி நிராயுதபாணியாக நின்ற வாச்சாத்தி கிராம மலைவாழ் மக்களை நேரில் சந்தித்து விபரம் அறிந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியது. நீதிவிசாரணை கோரி நீதிமன்றம் சென்றது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அரூர் காவல்துறையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
                 1993இல் சிபிஐ விசாரணை கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய மாநிலச் செயலாளர் மறைந்த தோழர் ஏ. நல்லசிவன் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் 1995ஆம் ஆண்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு குற்றவாளிகள் 269 பேர் கைது செய்ப்பட்டனர். கடந்த 19 ஆண்டுகாலமாக நடைபெற்ற இவ்வழக்கில் இன்று தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
              இந்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில் இக்காலத்தில் இறந்தவர்கள் 54 பேர் போக மீதமுள்ள வனத்துறை அதிகாரிகள், காவல்துறையினர், வருவாய்த்துறையினர் உள்ளிட்டு 215 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதில் மண்டல வனப்பாதுகாவலர் ஹரிகிருஷ்ணன் முதல் குற்றவாளி எனவும், 11 பேர் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
                 வாச்சாத்தி மலைவாழ் மக்கள் மீது பாலியல் வன்கொடுமை நிகழ்த்திய வனத்துறை அதிகாரிகள், காவல்துறையினர், வருவாய்த்துறையினர் மீதான இந்த வழக்கில் தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது. 19 ஆண்டுகாலமாக நியாயத்திற்காக விடாப்பிடியாக போராடிய வாச்சாத்தி கிராம மக்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக நின்று போராடிய தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்திற்கும் மார்க்சிஸ்ட் கட்சி தனது பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறது.
                மேலும், வாச்சாத்தியில் அரசுத்துறையினரால் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளான மலை கிராம மக்களுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய இழப்பீட்டை காலதாமதப்படுத்தாமல் உடனடியாக கிடைத்திட உரிய நடவடிக்கைகள் எடுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.
                இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர். ஜி. ராமகிருஷ்ணன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

மம்தா - மாவோயிஸ்ட் மோதல் : வளர்த்த கடா மார்பில் பாயுதோ..?

மாவோயிஸ்ட்கள் என்னை கொலை செய்ய முயற்சி : மம்தா அலறல் 
                 மாவோயிஸ்டுகள் என்னையும், மத்திய அமைச்சர் முகுல் ராய் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை கொலை செய்ய  முயற்சி செய்கின்றனர் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திடீரென அலறியுள்ளார். சமீபத்தில்  மூன்று திரினாமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் மாவோயிஸ்ட்டுகளால் கொல்லப்பட்டதை தொடர்ந்து மாவோயிஸ்டுகள் மீது மம்தா கொபமடைந்திருக்கிறார்.
                 கொலையும் பேச்சுவார்த்தையும் ஒரே சமயத்தில் நடத்த முடியாது.  இரண்டில் எது  வேண்டும் என்பதை மாவோயிஸ்டுகளே முடிவு செய்யட்டும் என்றும், அரசு செய்யும் வளர்ச்சிப் பணிகளில் மாவோயிஸ்ட்கள் தலையிடக்கூடாது என்றும் மாவோயிஸ்ட்கள் மீது சீறிப் பாய்ந்திருக்கிறார்.
                  தன்னுடைய கட்சித் தொண்டர்களை கொன்றதன் மூலம் மனித உரிமையைப் பற்றி பேசுவதற்கு மாவோயிஸ்ட்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்றும் மாவோயிஸ்ட்களை கடித்து கொதறியிருக்கிறார்.
                 மாவோயிஸ்ட்களுக்கு வெளிநாட்டிலிருந்தும், உள்நாட்டிலுள்ள அரசு சார்பற்ற நிறுவனங்களிடமிருந்தும் நிதியுதவி செய்யப்படுகிறது என்பதை இப்போது தான் ஒப்புக்கொண்டு புலம்புகிறார்.
                 மேற்கு வங்கத்தில் கடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி அரசுக்கு எதிராக வளர்க்கப்பட்ட மாவோயிஸ்டுகள் இன்று தனக்கு எதிராக திரும்புவார்கள் என்று மம்தா எதிர்பார்க்கவில்லை. வளர்த்த கடா மார்பில் பாய்வதால் இன்று பதறுகிறார். 

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற முதல் ஆப்பிரிக்கப் பெண் வன்கரி மாதாய் காலமானார்

           அமைதிக்கான நோபல் விருதை வென்ற முதல் ஆப்பிரிக்கப் பெண்மணியான  வன்கரி மாதாய் நீண்டகாலமாக புற்று நோயில் அவதிப்பட்டு நேற்று   திங்கட்கிழமை மாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71. அவர் நிறுவிய சுற்றுச் சூழல் நிறுவனம் ( Green Belt Movement ) அவரது மறைவைத் தெரிவித்தது.
       வன்கரி மாதாய் 2004ம் ஆண்டு நோபல் பரிசு வென்றார். சுற்றுச்சூழல் மற்றும் சமூக நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து சிறந்த சேவை ஆற் றியதற்காக அவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. பசுமை வளைய இயக்கத்தின் நிறுவனராக அவர் இருந்தார். இந்த பசுமை இயக்கம் மூலம் ஏழைப் பெண்களை திரட்டி, 3 கோடி மரங்களை நட்டு, சுற்றுச்சூழலின் நண்பனாக திகழ்ந்தார்.
             பசுமை இயக்க நிறுவனத்தின் துணைச் செயல் இயக்குநரான எட்வர்டு வாகெனி கூறுகையில், மாதாய் திங்கட்கிழமை மாலை நைரோபி மருத்துவமனையில் மரணம் அடைந்தார். இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து அவர் புற்றுநோய்க்காக இந்த மருத்துவமன யில் சிகிச்சை பெற்றார் என்றார்.
          கென்யாவில் அடக்கு முறை ஆட்சி நடைபெற்ற தருணத்தில் உறுதியுடன் செயல்பட்டு சேவையாற்றியவர் மாதாய் என நோபல் கமிட்டி புகழாரம் சூட்டியது. ஜனநாயகப் போராட்டத்திற்கு மரம் ஒரு அடையாளம் என்ற அடையாளத்தை ஏற்படுத்தியவர் மாதாய் ஆவார். அவர் 2004ம் ஆண்டு நோபல் பரிசைப் பெற்ற பின்னர் நிகழ்த்திய ஏற்புரையில் கென்யாவின் கிராமப்புறப் பகுதிகளில் கிடைத்த உந்துதல் காரணமா கவே சுற்றுச்சூழலில் மிகுந்த ஆர்வம் ஏற்பட காரணமாக அமைந்தது என்றார்.

இளமைப் பருவத்தில் பணப் பயிர்களுக்காக வனப்பகுதிகள் அழிக்கப்பட்டன. இதன் காரணமாக பல்லுயிரிப் பெருக்க சேதம் அடைந்தது. நீர்நிலையைப் பாதுகாப்பதற்கான வனப் பகுதித் திறனும் அழிந்தது. இந்த நிலையில் மாதாய் தனது பசுமை இயக்கம் மூலம் பல லட்சம் மரங்களை நட்டு, இயற்கையை பாதுகாத்தார். அந்த இயக்கம் மூலம் அமைதி மற்றும் ஜனநாயகத்தை வலியுறுத்தினார்.
         மாதாய் மறைவுக்கு கென்யா மக்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். மாதாய் மறைவை ட்விட்டரில் கண் ணீருடன் எழுதிய நபர் ஒருவர் சூரியன் இன்று உதிக்காததில் ஆச்சரியம் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. மாதாய்க்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

நன்றி : தீக்கதிர் 

திங்கள், 26 செப்டம்பர், 2011

இளைஞர்கள் - குழந்தைகள் இன்றைய நவீன கருவிகளுக்கு அடிமையாவது ஆபத்தானது...!

பேராசிரியர் கே. ராஜு அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து...

       சென்ற ஆண்டு கொல்கத்தாவில் 10-ஆம் வகுப்பு  படித்த  ஒரு மாணவி தண்டவாளத்தைக் கடக்கும் போது ரயில் மோதியதில் அவளது உடல் கூழாகிவிட்டது. அலைபேசியைக் காதில் வைத்தபடி மூடப்பட்டிருந்த ரயில்வே கேட்டைக் கடந்து சென்ற அச்சிறுமி, 100 மீட்டர் தூரத்தில் வேகமாக ஒரு ரயில் வந்து கொண்டிருந்ததைக் கூட கவனிக்கவில்லை. மற்றவர்கள் போட்ட சத்தமும் அவள் காதில் விழவில்லை. 
      இந்த ஆண்டு ஹெளராவில் 10-வது படித்துக் கொண்டிருந்த நெருங்கிய நண்பர்களான இரு சிறுமிகளும் செல்போனைக் காதில் வைத்தபடி தண்டவாளத்தைக் கடந்தபோது வேகமாக நெருங்கிக் கொண்டிருந்த ரயிலையோ, அருகிலிருந்தவர்கள் எச்சரிக்கை செய்து போட்ட கூச்சலையோ கவனிக்கும் நிலையில் இல்லை. இவர்களெல்லாம் தங்கள் அலட்சியத்திற்கு விலையாக தங்கள் உயிரையே தர வேண்டியிருந்தது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
           சிங்கப்பூரில் ஒரு சிறு பெண் குழந்தையின் பெற்றோர்கள் கணினியில் மூழ்கியிருந்தபோது, பசியால் துடித்துக்கொண்டிருந்த   அக்குழந்தை இறந்தே போய்விட்டது. தென் கொரியாவில் கணினி விளையாட்டிலேயே நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருந்ததற்காகத் திட்டிய அம்மாவை ஒரு சிறுவன் கொலை செய்துவிட்டுப் பின்னர் தற்கொலையும் செய்து கொண்டான். உலகெங்கிலும் வயது வித்தியாசமின்றி பலரைப் பிடித்து ஆட்டும் இந்த மோகத்திற்கு ‘தொழில்நுட்ப அடிமைத்தனம்’ என்ற பெயர் கூட வைக்கப்பட்டது.
           மின்னணுக் கருவிகள் நுகர்வோர் பற்றிய ரிட்ரீவோ என்ற இணையதளம் நடத்திய ஓர் ஆய்வில் ஃபேஸ்புக் அல்லது டிவிட்டரில் மூழ்குவதைக் கட்டுப்படுத்த இயலாத பல பெற்றோர்கள் தங்களது கடமைகளைப் புறக்கணிப்பதாக ஒத்துக் கொண்டுள்ளனர். தொழில்நுட்பக் கருவிகளுக்கு அடிமைகளாவது பெரும்பாலும் இளைஞர்கள்தாம் என்பது கவலையளிக்கக்கூடிய விஷயமாகும். தங்களுடைய சமூக வலைத்தளங்களுக்குள் 15 நிமிடங்களுக்கொரு முறை செல்வதென்பது பலருக்கு பழக்கமாகிவிட்டது. சிறிது நேரம் அந்த வலைத்தளங்கள் செயலிழந்து போனாலும் அவர்களால் பொறுக்க முடிவதில்லை. உணவையும் உறக்கத்தையும் கூட இதற்காக மறப்பவர்கள் இருக்கிறார்கள். ஆன்லைன் உரையாடல்களிலோ செல்போன் விளையாட்டுகளிலோ ஈடுபட்டிருக்கும்போது, கழிப்பறைக்குச் செல்ல வேண்டிய அவசரத் தேவையைக் கூட தள்ளிப் போடக் கூடிய அளவு சிலர் கிறுக்குப் பிடித்தவர்களாக இருப்பது கவலைக்குரியது.
              இத்தகைய அளவுகடந்த தீவிரமான ஈடுபாட்டை உடற்கூறு வல்லுநர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாவதோடு ஒப்பிடுகின்றனர். தொழில்நுட்ப அடிமைகளை சிறிது நேரம் அவர்களுக்குப் பிரியமான கருவிகளிலிருந்து பிரித்து வைத்தபோது, போதைப் பொருள் கிடைக்காத போதைப் பொருள் அடிமைகள் படும் பாட்டினை ஒத்ததாக அவர்கள் நிலை இருந்ததாக வல்லுநர்கள் அந்த ஆய்வில் கண்டுபிடித்தனர். மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் ஊடகங்கள் பற்றிய சர்வதேச மையம் 10 நாடுகளைச் சேர்ந்த 1000 பல்கலைக்கழக மாணவர்களிடம் ஓர் ஆய்வை மேற்கொண்டது. கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள், செல்போன்கள், எம்.பி.3 பிளேயர்கள் போன்ற சாதனங்களிலிருந்து 24 மணி நேரத்திற்கு விலகியிருக்குமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோரால் அது இயலவில்லை. துக்கம். தனிமை, கவலை போன்ற மன அழுத்தங்களுக்கும் இதயப் படபடப்பு போன்ற உடல்நலப் பாதிப்புகளுக்கும் ஆளானதாக பல மாணவர்கள் தெரிவித்தனர். செல்போன் அருகில் இல்லாவிட்டாலும், செல்போன் ஒலி கேட்பதைப் போன்ற பிரமை ஏற்பட்டதாகக் கூட ஒரு மாணவன் தன் அனுபவத்தை விவரித்தான்! அன்றாடம் தொழில்நுட்பக் கருவிகளோடு இருக்கும் தீவிரப் பிணைப்பு காரணமாக குடும்ப உறவுகள் சீர்கெட்டு வருவதாக பிரபல உளவியல் நிபுணர் ஆண்டனி கிட்மேன் தெரிவிக்கிறார்.
                     தொழில்நுட்பமும், தொழில்நுட்பக் கருவிகளும் உலகில் பல அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, அவற்றின் அடிமைகளாக நாம் மாறிவிடக் கூடாது. அப்படி மாறினால் நம்முடைய உடல்நலம், சமூக உறவுகள், ஏன், சமயத்தில் உயிரையே கூட அதற்கு விலையாகத் தர வேண்டியிருக்கும். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷம் என்ற முதுமொழி நம் வாழ் வின் ஒவ்வோர் அம்சத்திற்கும் பொருந்தி வருவதை நாம் கவனத்தில் கொள்வது நல்லது.

(உதவிய கட்டுரை : ஆகஸ்ட் மாத சயன்ஸ் ரிப்போர்ட்டர் தலையங்கம்)

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது..!

                சென்ற ஏப்ரல் 2011 - னில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில்  வெற்றி பெற்றது. அதிலும் அதிமுக அறுதிபெரும்பான்மையோடு ஆட்சிலமர்ந்தது அனைவருக்கும் தெரியும். திமுகழகமோ இரண்டாவது இடம் கூட கிடைக்காமல் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மக்கள் ஒரு பெரிய மாற்றத்தை தமிழகத்தில் அரங்கேற்றினார்கள். 
             அதிமுகவின் மாபெரும் வெற்றிக்கு என்ன காரணம்..? முதல் காரணமே.. கருணாநிதியின் குடும்ப அரசியல்.. குடும்ப ஆதிக்கம்.. 2 - ஜி ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல்..இதனால் மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பு தான் என்பதை தமிழக  மக்கள்  மறுக்கமாட்டார்கள்..அதேப்போல்,   மிகப்பெரிய பலம் வாய்ந்த மாபெரும்  கூட்டணி என்பது  இரண்டாவது காரணம்.. இதையும் யாராலும் மறுக்க முடியாது. இவைகளால்  தான் ஜெயலலிதா கூட முதலமைச்சராக அமர முடிந்தது. 
               மனசாட்சி என்று ஒன்றிருந்தால், ஜெயலலிதாவிற்கும் இந்த வெற்றியின் பின்னணி தெரியும். ஆட்சியில் இல்லாத காலத்தில் மக்களையே சந்திக்காமல், வீட்டிலேயே முடங்கி, ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தவரை கூட்டணி கட்சிகள் தான் முதலமைச்சர் பதவியில் அமரச் செய்தார்கள் என்பதை ஜெயலலிதா நல்ல மனசாட்சியோடு ஒப்புக்கொள்ளவேண்டும்.
             ஆனால் இன்றைக்கு ஆட்சிக்கு வந்தவுடன், கூட்டணி இல்லையென்றாலும்  நாங்கள் தான் வெற்றிபெற்றிருப்போம் என்று சொல்வதும், எங்களுடன் கூட்டணி வைத்ததால் தான் மற்றக் கூட்டணி கட்சிகள் வெற்றிப் பெற்றார்கள் என்று சொல்வதும் ஆணவத்தின் போக்கைத் தான் குறிக்கிறது. இது அழிவுக்கான அறிகுறி என்பதை அதிமுக மறந்துவிடக்கூடாது.
             தன் கட்சியின் பலத்தின் மீதுள்ள அலாதியான - அதீதமான  நம்பிக்கையின் காரணமாக,  உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக்கட்சிகளை கலந்தாலோசிக்காமலேயே கழட்டி விட்டது மட்டுமல்லாமல், தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டது என்பது, ஜெயலலிதாவின் ஆணவமும், திமிர்பிடித்தத் தனமும் இன்னும் குறையவே இல்லை என்பதைத் தான் காட்டுகிறது.
            எப்போதுமே கருணாநிதி செய்ததை அப்படியே எதிர்மறையாக செய்யக்கூடிய ஜெயலலிதா,  கூட்டணி கட்சிகளை கழட்டிவிடும் செயலில் மட்டும்  கருணாநிதியோடு  எப்படி ஒத்துப்போகிறார் என்பது தான் நமக்குப்  புரியவில்லை. ''வேதாளம்'' எப்படி சரியா போயிட்டிருக்குன்னு மக்கள் ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டிருந்த வேளையில், வேதாளம் மீண்டும் முருங்கை  மரத்தில் ஏறியது. எல்லாம் ''சோ'' - வுக்கு தான் வெளிச்சம்.

திட்டக்குழு போடும் வறுமைக்கோடு - யாரை ஏமாற்றும் வேலை..?

                 இன்றைக்கு நாட்டில் எங்கும் எதிலும் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பொருளாதாரக் கொள்கையை  ஆட்சியாளர்கள் மூர்க்கத்தனமாக நடைமுறைப்படுத்தி வரும் சூழ்நிலையில் இந்திய மக்கள் தொகையில் சுமார் 47 சதமானத்திற்கும் அதிகமான மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே வசிப்பவர்கள் என்கிற அவலம்.
           உச்சநீதிமன்றத்தில் கடந்த செவ்வாயன்று (செப்.20) ஒரு விசாரணைக்காக தனது வாக்குமூலம் ஒன்றைத் தாக்கல் செய்த திட்டக்குழு,
ஒரு நாளைக்கு கிராமப்புறத்தில் ரூ.25-க்கும், நகர்ப்புறத்தில் ரூ.32-க்கும்  மிகாமல் வருமானம்  இருப்பின் அவர்கள் வறுமைக் கோட்டுக்கு க் கீழ் உள்ளவர்கள்  சொல்லி இருக்கிறது. ஒருவர் தனது உணவுக்காகவும் கல்விக்காகவும் மருத்துவத்துக்காகவும் செலவிட கிராமப்புறமாக இருந்தால் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.25 வரை ஈட்டினால் போதும் என்று கூறியிருக்கிறது. இதன் பொருள் என்னவென்றால், 25 ரூபாய்க்கு மேல் ஒரே ஒரு ரூபாய் கூடுதலாகக் கிடைக்கக்கூடிய எவரும் வறுமைக் கோட்டுக்கு மேலே வாழ்கிறவர்களாகவே கருதப்படுவார்கள் என்பதுதான். நகர்ப்புறத்தில் ஒரு பிச்சைக்காரர் கூட 32 ரூபாய்க்கு மேல் ஒரே ஒரு ரூபாய் கூடுதலாக கிடைத்துவிட்டால் அவர் வறுமைக்கோட்டுக்கு மேலே வந்துவிடுவார். 
          வறியவர்களை நேரடியாக ஒழித்துக்கட்டவோ, நாட்டை விட்டு வெளியேற்றவோ வழியில்லை என்பதால், வறியவர்கள் என்பதற்கான அடையாளத்தை அழித்து விடுவது என்ற வழிமுறையில் திட்டக்குழுவின் மூலமாக இறங்கியிருக்கிறது மத்திய அரசு என்பது தான் உண்மை.
                குடிமக்களின் உணவுப் பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்வோருக்கான அரசின் புதிய திட்டத்தால் பயனடையக் கூடியவர்கள் எத்தனை பேர் என்ற விவரத்தையே கேட்டிருந்தது. அதை நேரடியாகத் தெரிவிக்காத மாண்டேக்சிங் அலுவாலியா தலைமையிலான திட்டக்குழு, இப்படி சுற்றி வளைத்துக் கூறியிருக்கிறது.
                 இதன் உண்மையான நோக்கம், ஏழைகளுக்கான அரசுத்திட்டங்களின் பயனாளிகள் எண்ணிக்கையை கணிசமாகக் குறைப்பதுதான். குடிமக்களின் வாழ்வாதாரத் தேவைகள் உணவுப் பொட்டலத்தோடும், பாடப்புத்தகத்தோடும், விலை மலிவான மாத்திரைகளோடும் நின்று விடுவதில்லை. ஆகப் பெரும்பாலான அடித்தட்டு மக்கள் தங்களது வாழ்விடங்களிலிருந்து வெகுதொலைவுக்குச் சென்றுவருவதன் மூலமாகவே இந்த குறைந்தபட்ச வருவாயை ஈட்ட முடிகிறது. சாதாரண நகரப்பேருந்துகளிலும், புறநகர் ரயில்களிலும் கூட்டத்தில் தொற்றிக் கொண்டு வேலைக்குச் சென்று வருகிற முறைசாராத் தொழிலாளர் உள்ளிட்டோரைப் பணக்காரர்கள் என்று திட்டக்குழு கருதுகிறது போலும்!                இது போல் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோரின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதன் மூலம், ஏழை மக்களுக்கான நலத்திட்ட நிதிகளை குறைத்துக் கொள்வதற்கும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கான பொது விநியோக முறையை முற்றிலும் ஒழித்துக் கட்டுவதற்கும், இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் உலகமயம், தாராளமயம், தனியார்மயம் காரணமாக வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருந்த மக்கள் மேலேவந்துவிட்டனர் என்று எடுத்துக் காட்டுவதற்கும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் குறைந்துவிட்டனர் என்கிற பொய்யை சொல்வதற்கும் இந்த வாக்குமூலத்தை மத்திய அரசு பயன்படுத்திக் கொள்ளும் அபாயம் இருக்கிறது.
              இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட இடதுசாரி கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆனால் பொது மக்கள் போராடாமல் அரசின் இந்த முயற்சியை மாற்றமுடியாது.

சனி, 24 செப்டம்பர், 2011

சிதம்பரத்தின் யோக்கியதை இப்போதாவது புரியட்டும்..!

                சமீபத்தில் தான்  உயர் நீதிமன்றத்தில் குண்டுவெடித்து ஓய்ந்து தலைநகரம் அமைதியாகி  இருக்கிறது. அதற்குள் இன்னொரு குண்டு வெடித்திருக்கிறது. நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பிரதமருக்கு எழுதிய கடிதம் வெளியாகியிருக்கிறது. யோக்கியன் சிதம்பரத்தின் வேஷம் கலைந்திருக்கிறது. ''சிதம்பர ரகசியம்'' இப்போது தான் மக்களுக்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது.
                 சென்ற ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசின் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தால்  2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த ஊழலைத் தடுத்திருக்க முடியும் என்று கடந்த மார்ச் 2011-ல் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தற்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கடிதம் எழுதியிருப்பது வெளிவந்திருக்கிறது. நிதி அமைச்சக அதிகாரி ஒருவரின் கடிதத்தில் அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் நடவடிக்கை குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரத்தின் விலை மற்றும் ஒதுக்கீடு தொடர்பாக நிதி அமைச்சகத்தில் துணை இயக்குநராக உள்ள டாக்டர் பி.ஜி.எஸ்.ராவ் என்பவர் பிரதமர் அலுவலக இணை இயக்குநர் வினி மகாஜனுக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். பிரணாப் முகர்ஜி இந்த 11 பக்க கடிதத்தை ஆய்வுசெய்து ஒப்புதல் அளித்துள்ளார். இந்த கடிதம் குறித்து சமூக ஆர்வலர் விவேக் கார்க் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம்  மூலம் கேள்வி கேட்டு தகவல் பெற்றிருக்கிறார். இந்த கடிதத்தில் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் , 2ஜி உரிமங்களை ரத்து செய்ய தொலைத்தொடர்புத் துறையை நிர்பந்தம் செய்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யாமல் அ.  ராசாவின் முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார் என அந்த கடிதத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அலைக்கற்றை உரிமங்களுக்காக 2001ல் விதிக்கப்பட்ட நுழைவுக் கட்டணமே 2008 டிசம்பர் 31 வரை அமலில் இருந்துள்ளது என அந்த கடிதம் குறிப்பிடுகிறது. இந்த கடிதம் குறித்து தகவல் பெற்ற விவேக் கார்க் கூறுகையில் நிதி அமைச்சகம் மற்றும் இதர அமைச்சகங்களின் தொடர்பு இல்லாமல் இவ்வளவு பெரிய ஊழல் நடக்க சாத்தியமில்லை. ஆர்டிஐ மூலம் பிரதமர் அலுவலகத்திடம் இருந்து பெற்ற ஆவணம் இதை வெளிப்படுத்தியுள்ளது. சிதம்பரத்துக்கும் வேறு சிலருக்கும் இந்த ஊழலில் தொடர்புள்ளதை இந்த கடிதம் தெளிவாகக் குறிப்பிடுகிறது என கார்க் தெரிவித்தார்.
                இன்னொரு பக்கம், 2ஜி ஊழல் வழக்கில் ப.சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். உடனே மத்திய அரசு பதறுகிறது. லட்சுமணக் கோட்டை தாண்டக்கூடாது என உச்சநீதிமன்றத்தையே மிரட்டும் வகையில் மத்திய அரசு வாதிடுகிறது. ஏன் இந்த பதற்றம்..? ஏன் இந்த மிரட்டல்..? மடியில் கனம் இல்லையென்றால் வழியில் பயம் எதற்கு?. ஊழலில் பங்கு இல்லை என்றால் வழக்கை சந்திக்கலாமே!.
                  யார் லட்சுமணக்கோட்டை தாண்டியது..? மக்களிடம் வாக்குகளை வாங்கி அமைச்சர்களானவர்கள் தானே  மக்கள் பணத்தை பாதுகாக்க வேண்டும். அதை விட்டுவிட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரும் இணைந்து கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டது எந்தக் கோட்டிற்கு உட்பட்டது ?. ஊழல் மலிந்தும், சிபிஐ அதனை ஒழுங்காக விசாரிக்காமல் விடுவதும், பரவலான தீமை, சீர்கேடுகளுக்கு காரணமாக இருக்கிறது என மீண்டும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது.
       இவ்வளவு தகவல்கள் கிடைத்தப்பின்னும்,  2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் பங்கு குறித்து மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்காமல்  அவரை பாதுகாத்து வருவது மட்டுமல்லாமல், சிதம்பரத்தின் நேர்மை மீது முழு நம்பிக்கை வைத்திருப்பதாக  பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருப்பது என்பது மக்களுக்கு பலத்த சந்தேகத்தை வரவழைக்கிறது.
               எனவே 2ஜி ஊழலில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் விசாரித்து, உண்மையை கண்டறிவதன் மூலமே 2ஜி வழக்கின் ஆழத்தை கண்டறிய முடியும். அதன் மூலம் நீதியை நிலைநாட்ட முடியும். உள்துறை அமைச்சரானாலும் சட்டத்திற்கு உட்பட்டவரே. ஆக சிதம்பரம் தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
             ஊழல் புகாரில் சிக்கி குற்றம் சாட்டப்பட்டுள்ள ப. சிதம்பரம் நேர்மையான முறையில் பதவி விலகி, மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு உட்படவேண்டும். இதற்கான நடவடிக்கைகளை பிரதமர் மன்மோகன் சிங் எடுக்கவேண்டும் என்பது தான் மக்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.
              நாட்டின் முதலாவது நிதியமைச்சராக இருந்த ஆர்.கே.சண்முகம் செட்டியாரும், பின்னர் நிதியமைச்சராக இருந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரியும், தங்கள் மீது ஊழல் புகார்கள் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டவுடன் தாமதிக்காமல், தங்கள் பதவிகளைவிட்டு விலகி, விசாரணையை எதிர்கொண்டனர் என்பது இந்த நாட்டின் கடந்த கால வரலாறு. அந்த இரு தமிழர்களும் காட்டிய நேர்மையான பாதையை ப.சிதம்பரம் பின்பற்ற வேண்டும் என்பது தான் நம்முடைய இன்றைய எதிர்ப்பார்ப்பு. நடக்குமா...?

பெண் கருக்கொலை - சமுதாயத்தின் அவமான சின்னம்

                 இன்றைக்கு  ஆணாதிக்க சிந்தனை என்பது கொடிகட்டிப் பறக்கும் சமூக சூழ்நிலையில் பெண்களுக்கு எட்டு வகையான உரிமைகள் ஆண்களால் மறுக்கப்படுகின்றன என்று நான் சொல்லவில்லை.  எட்டு ஆண்டுகளுக்கு முன்பே ஐக்கிய நாடுகள் சபை தனது ஆய்வுகளின் மூலம் இந்த உலகத்திற்கு எடுத்துக் காட்டியது.
                      (1) பெண்கள் பிறப்பதற்கே உரிமை கிடையாது.
                      (2) பெண்கள் சாப்பிடுவதற்கு உரிமை கிடையாது.
                      (3) பெண்கள் படிப்பதற்கு உரிமை கிடையாது.  
                      (4) பெண்கள் தன் விருப்பப்படி ஆடைகளை அணிவதில் உரிமை  
                           கிடையாது.
                      (5) பெண்களுக்கு சம ஊதியம் உரிமை கிடையாது. 
                      (6) பெண்களுக்கு சொந்தமாக கருத்து சொல்லும் உரிமை கிடையாது.
                      (7) பெண்களுக்கு சொத்துரிமை கிடையாது.
                      (8) ஆணும் பெண்ணும் சமம் என்ற உரிமை கிடையாது.
              இது உலக நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளிலிருந்து கண்டெடுக்கப்பட்ட உண்மை. ஆனால் இவையனைத்தும் நம் நாட்டில் - நம் சமூகத்தில் கொஞ்சம் கூட குறையாமல் வளர்ந்து கொண்டே போகிறது என்பதும் உண்மை தான் என்பதை மிகுந்த வருத்தத்துடன் பார்க்கவேண்டி இருக்கிறது.
                ஆணாதிக்க சிந்தனை என்பது இன்றைக்கு  நாடு முழுவதும் மக்களிடம் ஆழமாக வேரூன்றி இருப்பத்தை  பெண் பிறப்பு விகிதம் குறைவதிலிருந்து நம்மால் காண முடியும்.
               யூனிசெப் புள்ளி விவரங்களின்படி,  இந்தியாவில் நாளொன்றுக்கு ஏழாயிரம் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுகிறார்கள் என்பதும்,   ஆறு வயதிற்குட்பட்ட பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பதும் இந்த தேசத்திற்கே ஆபத்தானது.  1991ல் 1000 ஆண் குழந்தைகளுக்கு 945 பெண் குழந்தைகள் என்ற நிலை மேலும் மோசமாகி, 2011ல் 911 பெண் குழந்தைகள் என்ற அளவில்தான் உள்ளன.
               தமிழ்நாட்டில் 2011ம் ஆண்டு கணக்குப்படி 13 மாவட்டங்களில் 6 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கைக் குறைந்துள்ளதை தமிழக அரசு மிகுந்த கவலையோடு பரிசீலிக்க வேண்டும். கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் நிலைமை மிக மோசமாக உள்ளது. 900த்திற்கும் கீழேதான் பெண் குழந்தை விகிதம் உள்ளது. பெரம்பலூர், கடலூர், குமரி, நாகை, திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கடந்த பத்தாண்டுகளாக நிலைமையில்  பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
                  பொதுவாக தமிழகத்தில் 1991ம் ஆண்டு 948 பெண் குழந்தைகள் என்று இருந்தது. 946 என 2011ல் சற்று குறைந்துள்ளது. அகில இந்திய சராசரியோடு ஒப்பிடும்போது இந்த இழப்பு மிகக்குறைவு தான். ஆயினும், இந்தச் சிறு இழப்பையும் அரசு அனுமதிக்கக்கூடாது. மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள 13 மாவட்டங்களில் அரசின் கவனம் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
                பெண் குழந்தை பிறந்தவுடன் கள்ளிப் பால் ஊற்றிக் கொல்லுவது என்பது இன்றைக்கும்  கிராமப்புறங்களில்  கொடூரமான  நடைமுறையாக இருந்து வருகிறது. அதே போன்று, இன்றைய நவீன அறிவியல் வளர்ச்சியையும் பெண்களுக்கு எதிராகவே பயன்படுத்துவதுதான் மிகவும் ஆபத்தான போக்காக பெருகியுள்ளது. கருவிலே உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை ஸ்கேன் செய்து அறிந்திட முடியும். காசு கொடுத்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிற இன்றைய சூழ்நிலையில், அறிவியல்பூர்வமாக பெண் கரு என்பதை உறுதி செய்து கருவிலேயே அழிக்கும் கொடுமை இன்றைக்கு அதிகரித்துள்ளது. “பிறக்கும் உரிமை” கூட பெண்களுக்கு மறுக்கப்படுகிறது என்பது மிகவும் மோசமான மனித உரிமை மீறலாகும். ஆணாதிக்கச் சிந்தனையின் குரூர வெளிப்பாடாகும்.
            ஆண்களுக்குத்தான் முதல் உரிமை என்கிற சமூக அவலத்தை அடியோடு நீக்குவது நாகரீக சமுதாயத்தின் அடிப்படை நியதியாகும். வரும் ஆண்டுகளில் ஆணும் பெண்ணும் சமமாய்ப் பிறக்கும் வாய்ப்பு நோக்கி மக்கள் மனம் திருந்த  எல்லா வகையிலும் விழிப்புணர்வையும் சட்டத்தின் பற்களையும் பலப்படுத்துவோம்.   

புதன், 21 செப்டம்பர், 2011

கூடங்குளம் அணுமின் நிலையம் - மக்களின் அச்சமும் போராட்டமும் நியாயமானதே..!

             அண்மையில் நிகழ்ந்த சுனாமியினால் ஏற்பட்ட ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலை விபத்துக்குள்ளான  பிறகு, உலக அளவில் அணு மின் நிலையங்கள் குறித்து மக்களுக்கு  பயமும், பதற்றமும் ஏற்பட்டுள்ளன என்பது அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மையாகும்.  இந்தப் பின்னணியில் தான்  இந்தியாவின் தென்கோடியில் உள்ள  கூடங்குளத்தில் மிக விரைவில் மின் உற்பத்தியை தொடங்கவிருக்கும் அணுமின் நிலையத்திற்கு எதிராக பல்வேறு அமைப்புகளும், அங்குள்ள பொது மக்களும் கடந்த பதினொரு நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
                ஜப்பானில் நேரிட்ட ஆழிப்பேரலைத் தாக்குதல் மற்றும் நிலஅதிர்வின் காரணமாக புகுஷிமா அணுஉலை விபத்துக்குள்ளாகி, கதிர்வீச்சு கசியத் தொடங்கிய நிகழ்வு மட்டுமே அந்த மக்களை பாதிக்கவில்லை. பிரான்ஸ், ஜெர்மன் போன்ற மேலை நாடுகளெல்லாம்  அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மின் உற்பத்திச் செய்யும் அணுஉலைகள் படிப்படியாக மூடப்படும் என அறிவித்திருப்பது என்பதும் கூட , கூடங்குளம் பகுதி மக்களுக்கு அச்சத்தை மேலும் அதிக படுத்தியுள்ளது என்பதும் உண்மை. அதனால் தான் இத்தனை காலமாக இல்லாத அளவுக்குப் போராட்டம் தீவிரமடைந்தது .
                 அணுமின் நிலையம் அமையுமானால், அணுஉலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் என்பது கதிரியக்கம் உள்ள கனநீர் ஆகும். எதிர் காலத்தில் இந்த கன நீரென்பது கடலில்தான் கலக்க விடப்படும். அதனால் அப்பகுதியில் மீன்வளம் குறைந்துவிடும். மீன்வளத்தை நம்பிவாழும் கடலோர மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதுபோன்ற அச்சமும்  இப்பகுதி மக்களிடையே எழுந்து அது எதிர்ப்பாக மாறியுள்ளது. மேலும், எதிர்காலத்தில்  அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்படுமானால் அதன் பின்விளைவுகள் பற்றிய அச்சமும் அதனோடு  சேர்ந்துகொண்டுவிட்டது என்பதும் தான் உண்மை.
                கூடங்குளம் அணுமின் நிலையம் கூடாது. அது மூடப்படவேண்டும் என்று அப்பகுதி மக்கள் போராடுவதில் நியாயம் இருக்கிறது. அதே சமயத்தில்  அந்த மக்களின் நியாயமான அச்சத்தை போக்குவதிலும் மத்திய - மாநில அரசுகளுக்கு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது.            
              அணு ஆற்றல் ஆணைய முன்னாள் தலைவர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன் அவர்கள் இந்த போராட்டம் குறித்து பேசுகையில்,
             கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான பிரசாரத்தை முறியடிக்க, தீவிர மக்கள் தொடர்பு பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும். ஜப்பானில் ஃபுகுஷிமாவில் நடந்த விபத்தால், கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டம் பற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் மனதில் தவறானக் கருத்து குடிகொண்டுள்ளது.  அணு ஆற்றல் துறை, அணுமின் கழகம், அணு ஆற்றல் ஒழுங்குமுறை வாரியம் ஆகியவை மேற்கொண்ட விரிவான சோதனையில், ஃபுகுஷிமா விபத்து போன்ற சூழல் கூடங்குளத்தில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  
                 அணு மின்னாற்றலைத் தொடர்ந்து எதிர்த்து வருபவர்கள்தான், அணு உலைகளால் மனித உயிர்களுக்கு ஆபத்து என்று கூறி வருகிறார்கள். கூடங்குளத்தில் கூடுதல் நிலங்களைக் கையகப்படுத்துவதாகவும், அதனால் மீனவர்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்படுவார்கள் என்றும் வதந்திகள் உலா வருகின்றன.  பல அணு உலைகளை நிறுவ நேர்ந்தாலும், கூடுதல் நிலத்தைக் கையகப்படுத்த வேண்டிய அவசியமில்லை. தாராப்பூர் மற்றும் கல்பாக்கத்தில் எவ்வித இடைஞ்சலும் இன்றி மீன்பிடி பணிகள் நடந்து வருகின்றன.  புதிய அணுமின் நிலையங்களைக் கட்டமைப்பதில் சீனா வேகமாகச் செயலாற்றுகிறது. மகாராஷ்டிர மாநிலம், ஜெய்தாபூரில் அணு உலை அமைக்க வேண்டும்.  கூடங்குளத்தில் ஒரு அணு உலை செயல்படும் நிலைக்கு வந்துள்ளது. மற்றொன்று அடுத்தாண்டு முதல் இயக்கப்படும். கூடங்குளத்தில் அதிகளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதை முடக்குவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அணு மின்னாற்றல் இந்தியாவுக்கு தவிர்க்க முடியாதது. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் மின் தட்டுப்பாடு இருக்கிறது. இதைப்போக்க அணு மின்னாற்றல்தான் சிறந்த வழி என்றார் அவர்.
                 அவர் கூறிய தகவல்களையும் அச்சத்தில் உள்ள மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். முதலில் மக்களின் அச்சத்தை போக்கவேண்டும். அது தான் அரசின் முதல் கடமை ஆகும்.
 
 

திங்கள், 19 செப்டம்பர், 2011

மூத்த கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர் சி.எஸ்.சுப்பிரமணியம் மறைந்தார் - அஞ்சலி

                ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன தலைவர்களில் ஒருவரான தோழர். சி.எஸ்.சுப்ரமணியன் அவர்கள் தனது  102 -ஆவது  வயதில் நேற்று சென்னையில் காலமானார். இவரது சொந்த ஊர்   மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் உள்ள கோமல் கிராமம் ஆகும்.  இவரின் தந்தை சுந்தரம் அய்யர்  பிரிட்டிஷ் ஆட்சியில் கல்வி அதிகாரியாகப் பணியாற்றியவர். தாய் மீனாட்சி. இத்தம்பதியின் நான்கு மகன்களில், சி.எஸ்.சுப்ரமணியன் ஒருவர். இரண்டு சகோதரிகளும் உடன் பிறந்தவர்கள்.
             அந்தக் காலத்திலேயே, ஐ.சி.எஸ். படிக்க லண்டன் சென்ற தோழர்.சுப்ரமணியன், இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியில் தொடர்பு ஏற்பட்டு, அக்கட்சியின், "டெய்லி ஒர்க்கர்'' என்ற பத்திரிகையில், இந்திய விவகாரங்கள் பற்றி எழுதி வந்தார். ரஷ்யப் புரட்சியின் நினைவாக, "அக்டோபர் கிளப்'' என்ற மாணவர் அமைப்பை லண்டனில் உருவாக்கி நடத்தி வந்தார். எனவே, ஐ.சி.எஸ்., படிப்பை முடிக்காமல், 1933 - ஆம் ஆண்டு  கம்யூனிஸ்ட்டாகவே  இந்தியா திரும்பினார். 
                தோழர் அமீர் ஹைதர்கானுடன் பாஷ்யம் (ஆர்யா) மூலம் சி.எஸ்.1934ல் தொடர்பு கொண்டார். அமீர் ஹைதர்கான் அமைத்த குழுவில் சி.எஸ்.- ம் சேர்ந்து கொண்டார். அந்தக் குழுதான் தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளையாகும். தோழர்கள் ஜீவா, பி.ராமமூர்த்தி, பி.சீனிவாசராவ், கே.முருகேசன், ஏ.எஸ்.கே.அய்யங்கார் ஆகியோர் கொண்ட அந்தக் கிளைக்கு தோழர் சி.எஸ். தான் செயலாளர். 
              1940ல் ரகசிய மாநில மையத்தில் இயங்கிய தோழர் . சி.எஸ்., பி.ராமமூர்த்தி மற்றும் சிலருடன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 1941ல் தோழர்கள் பி.ராமமூர்த்தி, மோகன் குமாரமங்கலம், சி.எஸ்.சுப்ரமணியம், சுப்ரமணிய சர்மா, கேரளீயன், ஹனுமந்தராவ், உமாநாத் ஆகிய தோழர்கள்   மீது சென்னை சதிவழக்கு போடப்பட்டது. அதில் கடும் தண் டனை விதிக்கப்பட்டது. எனினும் 1942ல் தண்டனை ரத்து செய்யப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பூர்வமாக்கப்பட்டது. அது முதல் ஜனசக்தி நாளிதழ் அச்சகம் கட்சியின் மாநில மையம் ஆகியவற்றுக்குப் பொறுப்பாக செயல்பட்டார். தோழர்கள் பி.ராமமூர்த்தி, பி.சீனி வாசராவ் ஆகியோருடன் மிக நெருக்கமாக இருந்தார்.
                 இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று, பலமுறை சிறைத் தண்டனை அனுபவித்தவர். ஆந்திராவைச் சேர்ந்த மருத்துவர் ஜுகுனாபாயை திருமணம் செய்து கொண்டார்.
1943ல் நடைபெற்ற முதல் அகில இந்திய மாநாட்டிற்குச் சென்றார். 1945ல் மார்க்சிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 1950க்குப்பின் தென்னிந் திய ஆய்வுக் கழகத்தின் பொறுப்பாளராகச் செயல்பட்டு பல்வேறு நூல்களை பதிப்பித்தும் வெளியிட்டும் வந்தார். பின்னர் கோபிச்செட்டி பாளையம் சென்று அங்கு மனைவியுடன் தங்கியிருந்தார்.
               நூறு வயதுக்குப்பின்னால் சிபிஐ மாநில தலைமையால் சென்னைக்கு அழைத்துச்செல்லப்பட்டு பராமரிக்கப்பட்டார். தன் இறுதி மூச்சுவரை ஒரு கம்யூனிஸ்ட்டாகவே வாழ்ந்த தோழர்.சுப்ரமணியன், "தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிங்காரவேலர், இந்திய கம்யூனிஸ்ட் வரலாறு' போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
              தோழர் சி.எஸ். கண்டிப்பானவர், நேர்மையானவர், சோசலிசம்தான் மாற்று, மார்க்சியம் வெற்றிபெறும் என உறுதியாக நம்பியவர். இளைய தோழர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் நடந்து கொண்டவர்.
               மறைத்த தோழர். சி எஸ். அவர்களுக்கு எங்களின் வீரவணக்கத்தையும், அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.




ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

செப்டம்பர் 18 - இன்று உலக மூங்கில் தினம் -

       உலக மூங்கில் தினம் ஒவ்வொரு ஆண்டும்  செப்டம்பர் மாதம் 18 - ஆம்  தேதி உலகளவில் கொண்டாடப்படுகிறது. மூங்கில் உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது  இடத்திலும் உள்ளன. ஆனால் உலக வர்த்தக அளவான   10 பில்லியன் டாலர் தொகையில் சீனா சுமார் 50% பங்கை பெற்று முன்னணியிலுள்ளது. 2015 ஆண்டுகளில் இதன் அளவு 20 பில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய உள்ளூர் வர்த்தகம் ரூ.6505 கோடியாக உள்ளது  எனவும்,  அது 2015 ஆண்டில் ரூ.26,000 கோடியாக வளர வாய்ப்புள்ளதாகவும்   இந்திய விவசாயத்துறை  அமைச்சகம் கூறுகின்றது. 
        மூங்கிலை பச்சைத் தங்கம் என்றும், ஏழைகளின் மரம் என்றும், வனவாசிகளின் வாழ்வதாரம் என்றும் அழைக்கபடுகின்றது. மற்ற மரங்களைக் காட்டிலும் மூங்கில் மரம் அதிக அளவு கரியமில வாயுவை ( கார்பன் டை ஆக்சைட் ) எடுத்துக்கொண்டும்,   அதிக அளவிலான  பிராணவாயுவை (ஆக்சிஜன்) வெளியேற்றும் தன்மை கொண்டது. மூங்கில் அதிகமாக வளர்ந்த இடம் குளிர்ச்சியாக இருக்கும். ஆனால் மூங்கில் வளர்ப்பில்நம் நாட்டு மக்கள் ஏனோ ஆர்வம் காட்டுவதில்லை என்பது தான் உண்மை. மூங்கில் வளர்ப்பை ஏனோ மக்கள் விரும்புவதில்லை.     
       நம் நாட்டைப் பொறுத்தவரை,  இன்னும் கூடை, ஏணி, தடுப்பு போன்ற சாதாரண உபயோகத்திற்குத் தான்  மூங்கில் பயன்படுத்தப்படுகிறது.  சில மாநிலங்களில்  நாற்காலி, மேசை, ஒட்டுப் பலகை. ஜன்னல் மறைப்புகள்  என்ற அளவில் சில  முன்னேற்றம் உள்ளது.
    வடகிழக்கு மாநிலங்களில் பள்ளிக்கூடங்களை மூங்கிலைக் கொண்டு கட்டுகின்றனர் என்பது மகழ்ச்சி தரும் செய்தி.
    உலக அளவில் தரை, சுவற்றிற்கான ஒட்டுப் பலகை, கூரை கூட மூங்கிலில் செய்கின்றனர் என்பது வியப்பளிக்கும்   செய்தியாகும். ஐரோப்பாவின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான  ஸ்பெயின் நாட்டின் மார்டிரிட் நகர விமான நிலைய T 4 பயணிகள் பகுதியின் கூரையை மூங்கிலால் செய்துள்ளனர் என்பது ஆச்சரியமான செய்தியாகும். 
     இயற்கை இந்தியாவிற்கு கொடுத்த கொடை மூங்கில்”.  மத்திய அரசாங்கம் தேசீய மூங்கில் இயக்கம் (National Bamboo Mission) என்ற இயக்கத்தின் மூலம் பிரபலப்படுத்துகிறது. அதை மக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

சனி, 17 செப்டம்பர், 2011

மோடியின் உண்ணாவிரதத்தால் கலவரத்தில் படிந்த ரத்தக்கறையை கழுவிடமுடியாது..

               பாரதீய  ஜனதா கட்சி 2014 - ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கான வேலையை ஆரம்பித்துவிட்டது என்று தான் சொல்லவேண்டும். இன்று அடுக்கடுக்கான ஊழல் புகார்,   விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, தொடர் குண்டுவெடிப்புகள் என சிலந்தி வலைக்குள் தப்பிக்க முடியாத அளவிற்கு சிக்கி மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு என்பது  மக்களின் அதிருப்தியில் இருக்கும் சூழ்நிலையை பாரதீய ஜனதா கட்சி ஓட்டுக்களாக  அறுவடை செய்ய துடிக்கிறது. 
         ''இரத யாத்திரை'' புகழ் லால் கிருஷ்ண அத்வானி ஊழலை ஒழித்துக்கட்டப் போவதாக சொல்லிக்கொண்டு மீண்டும் மற்றுமொரு     இரத யாத்திரையை  நடத்தப் போவதாக சொல்லிக்கொண்டிருக்கும் போதே, குஜராத்தில் ''இரத்த யாத்திரை'' நடத்திய நரவேட்டை நரேந்திர மோடி,     ''அமைதி, ஒற்றுமை, மதநல்லிணக்கம்''  இவைகளை வலியுறுத்தி இன்னொரு பக்கம் இன்று முதல் மூன்று நாட்களுக்கு உண்ணாவிரதம் இருக்கப்போவதாக சொல்லிக்கொண்டு ஒரு நாடகத்தை இன்று காலையிலிருந்தே அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார். இவரது உண்ணாவிரதத்தை வாழ்த்துவதற்கு இவரே பல மாநிலக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்புவிடுத்திருக்கிறார். அதன் மூலம் தனக்குள்ள பலத்தையும் ஆதரவையும் தன் கட்சியினர்க்கே எடுத்துக் காட்டுவதற்கான ஏற்பாடு தான் இது. மோடியை வாழ்த்துவதற்கு  தமிழக முதலமைச்சர் கூட தன் பங்குக்கு இரண்டு பேரை  அனுப்பி வைத்துள்ளார்.
        இதில் என்ன வேடிக்கை என்றால், மோடியிடம் இல்லாத - அவர் கட்சியிடம் இல்லாத - அவர் ஆட்சியிலேயே இல்லாத ''அமைதி, ஒற்றுமை, மதநல்லிணக்கம்'' ஆகிய மூன்றுக்காகவும் உண்ணாவிரதம் இருப்பது தான் நகைப்புக்குரியதாக இருக்கிறது.
                    2002 - ஆம் ஆண்டில் குஜராத்தில் நடந்த சிறுபான்மை இன மக்களின் திட்டமிட்ட படுகொலையை இவர் வேண்டுமானால்  மறந்திருக்கலாம். ஆனால் இவர் அமைதியை குலைத்து, ஒற்றுமையை சிதைத்து, மத நல்லிணக்கத்தை சீரழித்ததை   இந்த நாடு மறந்திருக்காது. மக்கள் நிச்சயம் மறந்திருக்க மாட்டார்கள். 
                   உலகமய - தாராளமயக் கொள்கைகளின் காரணமாக 2002 - ஆம் ஆண்டுக்கு முன்பு  தன் ஆட்சிக்காலத்தில் மூடப்பட்ட பஞ்சாலைகளில் பணிபுரிந்து  வேலைவாய்ப்பை இழந்த  தொழிலாளர்கள் இந்த கொலை பாதகச் செயலுக்கு பயன்படுத்தப்பட்டார்கள் என்பதை யாரும் மறந்திருக்கமுடியாது. வேலைவாய்ப்பை இழந்து வருமானத்தையும் இழந்த தொழிலாளர்களுக்கு ''மனித கொலை''களை செய்வது எப்படி என்பது பற்றி பயிற்சி  அளிக்கப்பட்டதை இன்று நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது. அந்த பயிற்சி காலத்தில் அவர்களுக்கு சம்பளமும் கொடுக்கப்பட்டது. இதில் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம் என்னவென்றால், அந்தக் ''கொலைப்பயிற்சி''யில் பெண்களும் கலந்துகொண்டது தான் அதிர்ச்சியளிக்கும் விஷயமாகும். தொழிலாளர்களின் வறுமையை இன்னொரு தொழிலாளிக்கு எதிராக அரசு எப்படி பயன்படுத்திக்கொண்டது என்பதற்கு இதுவே உதாரணம்.
      

அது மட்டுமல்ல, பயிற்சியளிக்கப்பட்ட அந்த தொழிலாளர்களுக்கு வாக்காளர் பட்டியல் கொடுக்கப்பட்டு சிறுபான்மை மக்கள் வசிக்கும் வீடுகளை அடையாளம் காட்டப்பட்டது என்பது இன்னொரு அதிர்ச்சி தரும் விஷயமாகும். ஆனால் கொலை செய்வதற்கும் நேரமும், நியாமும் அவர்களுக்குத் தேவைப்பட்டது. அதற்காகத் தான் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.
                 அப்படியாக அந்த ரயில் எரிப்பு சம்பவத்தை காரணம் காட்டித் தான், கொலைப்பயிற்சி பெற்றவர்கள் வாக்காளர் பட்டியலை வைத்துக்கொண்டே சிறுபான்மை மக்களை அடையாளம் கண்டு ஆயிரக்கணக்கான பேர்களை வெட்டிச் சாய்த்தும், தீயிட்டுக் கொளுத்தியும் கொன்று குவித்தார்கள். காவல் துறை கூட கொலையை தடுப்பதற்கு பதிலாக, கொலையாளிகளை பாதுகாப்பதையே தங்கள் பணியாக செய்தார்கள்.
                   இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம். பி - யின் வீட்டுக்கு வெளியே கொலையாளிகள் தீப்பந்தத்தொடு  கூட்டமாக கூடிவிட்டார்கள். உள்ளே இருக்கும் முன்னாள்  எம். பி. பதற்றத்தோடு தொலைபேசியில் அருகில் உள்ள காவல் நிலையத்தொடு தொடர்பு கொண்டு காவலர்களை அழைத்த போது, அவர்கள் அந்த இடத்திற்கு வராமல் புறக்கணித்ததால் அந்த எம். பி. தீயிட்டுக் கொளுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இஸ்லாமிய மக்களின் வீடுகளும், குடிசைகளும், கடைகளும், உடமைகளும் தீயிடப்பட்டு நாசமாக்கப்பட்டது.
               இதன் மூலம் நமக்கு விளங்குவது என்னவென்றால்,  2002 - ஆம் ஆண்டில் நடந்த  ஆயிரக்கணக்கான சிறுபான்மை  மக்களின்  படுகொலை என்பது - குழந்தைகள் என்றும், பெண்கள் என்றும் வயதானவர்கள் என்றும் பாராமல் அனைவரையும் கொன்றுகுவித்த செயல் என்பது   நரேந்திர மோடி அரசாலேயே  திட்டமிட்டு நடத்தப்பட்டது  என்பதை இந்த நாடும், இந்த நாட்டு மக்களும் அறிவார்கள்.
             அன்று சிந்திய அந்த இரத்தக்கறை என்பது இன்னும் மோடியின் மீதும், மோடி அரசின் மீதும் படிந்து தான் இருக்கிறது. அந்த இரத்தக்கறையை துடைப்பதற்கு இந்த உண்ணாவிரதம் எந்த விதத்திலும் பயன் தராது என்பதை மோடியோ அவரின் கட்சியை சேர்ந்தவர்களோ அறிந்திருக்கவில்லை என்பது தான் உண்மை.

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

காவல்துறையின் அத்துமீறலே பரமக்குடி துப்பாக்கிச்சூட்டிற்குக் காரணம்

              கடந்த செப்டம்பர் 11ம் தேதி பரமக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காவல்துறையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து ஆய்வு நடத்திய  பிறகு அந்த அதிர்ச்சி மேலும் கூடுதலாகியுள்ளது என்று தான் சொல்லவேண்டும். துப்பாக்கிச் சூடு நடத்தியது  என்பது காவல்துறையின் முதிர்ச்சியற்ற தன்மையைத் தான் அந்த ஆய்வு நமக்கு எடுத்து காட்டுகிறது.
             படுகொலை செய்யப்பட்ட மண்டலமாணிக்கம் பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த த.பழனிகுமார் என்ற தலித் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என ஜான்பாண்டியன் காவல் துறை அனுமதி  கேட்ட போது  காவல் துறை அனுமதி அளித்திருந்தால் அந்த நிகழ்ச்சி அமைதியாக முடிந்திருக்கும். ஆனால். அவர் சென்றால் கலவரம் நடக்கும் என்று  சொல்லி அனுமதி மறுத்து விட்டார்கள். ஆனால், அவர் கைது செய்யப்பட்டப் பின் தான் தேவையற்ற பிரச்சனையே  ஏற்பட்டுள்ளது. இதற்கு காவல்துறையின் அத்துமீறலும், உளவுத்துறையின் பொறுப்பற்ற தன்மையுமே காரணமாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத்தலைவர் அ.சவுந்தரராசன் கூறினார்.
              இச்சம்பவம் நடந்த போது, சில நூறு பேர் தான் அந்த இடத்தில் இருந்துள்ளனர். அவர்கள் ஆயுதம் ஏதும் வைத்திருக்கவும் இல்லை. காவல்துறையின் ''வஜ்ரா'' வாகனத்தின்  அருகிலேயே காவலுக்கு காவலர்கள் இருந்திருக்கிறார்கள். அப்படி  இருக்கும் போது அதில் எப்படி தலித் மக்கள் தீ வைத்திருக்க முடியும்? காவல்துறையினர் தான் திட்டமிட்டு அவ்வாகனத்திற்கு தீ வைத்ததாக சிலர் கூறுகிறார்கள். தமிழகஅரசு நியமித் துள்ள நீதிபதியின் விசாரணையில் நிச்சயம் அந்த உண்மைகள் வெளி வரக்கூடும்.
                பரமக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு என்பது தவிர்க்க முடியாதது என அரசால் சொல்ல முடியாது. அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட போது அவர்களின் மார்பிலும், கைகளிலும் குண்டுகள் பாய்ந்துள்ளன. காலுக்குக் கீழே யாரும் சுடப்படவில்லை. கூட்டத்தைக் கலைக்க காவல்துறை நினைக்கவில்லை என்பதை இத்தாக்குதல் உறுதிசெய்துள்ளது. துப்பாக்கிச்சூட்டிற்குப் பிறகு காவல்துறை தடியடியும் நடத்தியுள்ளது என்பது அதிர்ச்சியை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

                  கூடிய கூட்டதைக் கலைக்க முன்னறிவிப்பின்றி தலித் மக்களின் நெஞ்சைக் குறி வைத்து காவல்துறை சுட்டது ஏன் என்ற வினாவையும் அவர் எழுப்பினார்.  காவல்துறை கடுமையாக சீர்த்திருத்தம் செய்யப்பட வேண்டிய துறையாக மாறியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
                  இந்த மரணத்திற்கு காரணமான - பலர் படுகாயம் அடைவதற்கு  காரணமான காவல்துறை அதிகாரிகளை உடனடியாக தமிழக அரசு இடைநீக்கம் செய்ய வேண்டும். ஆனால். இதுவரை எந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்காத நிலையில், அவர்களை வைத்துக் கொண்டு நீதி விசாரணை நடத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்? என்பது தான் தமிழக மக்களின் கேள்வி.

என்ன கொடுமை சார் இது..! வரி கட்டுகிறவனையும், வாகனம் வெச்சிகிறவனையும் இப்படி தாக்குறாங்க..!

நம்ம கோவணத்தையும் உருவிடுவாங்களோ...!

            நேற்றும் இன்றும் இரண்டு நாட்களாக நடப்பதை பார்த்தா...  கடனை  வாங்கி வண்டி வாங்கினவங்களையும், கடனை வாங்கி வீட்டைக்கட்டினவங்களையும்  என்னமா அடிக்கிறாங்க..  போகிற போக்கப் பாத்தா.. ஏன்டா கோவணத்தைக் கட்டியிருக்கேன்னு அதையும் உருவிடுவாங்களோன்னு  பயமா தான் இருக்கு.       
            நேற்று மாலை தான் பெட்ரோல் விலை மூன்று ரூபாய்  உயர்வுன்னு ஒரு பெட்ரோல் குண்டைத் தூக்கி தலையில்  போட்டார்கள். இரவு பார்த்தாக்கா.. நிலைமை இன்னும் மோசமா போயிடுத்து..!
              நீங்க வருமான வரி கட்டுபவரா..? சொந்தமா வீடு இருக்கா..? வாகனம் வெச்சிருக்கீங்களா..? அப்படீனா.. இனிமே உங்களுக்கு வருஷத்துக்கு நாலு கேஸ் சிலிண்டர் தான் மான்யவிலையில கிடைக்கும்.... அதுக்கும் மேல வேணும்னா மான்யம் கிடையாது.. முழு விலை 740 ரூபாய் கொடுத்து தான் வாங்கனுமாம். பெட்ரோல் குண்டுக்கே தலை சுத்தி கீழே விழுந்து கிடந்து எழுந்திருக்க முடியாம திணறிக்கொண்டிருந்த போது, மத்திய அரசு இப்படி ஒரு சிலிண்டர் குண்டையும் போட்டு மனுஷன எழுந்திருக்க முடியாம பண்ணிட்டாங்க..
               மறு நாள் ஆகியும் இன்றைக்கு மயக்கமே தெளியாம கிடக்கிறப்போது, பாரத ரிசர்வ் வங்கி தன் பங்குக்கு அவிங்க ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாங்க.. வீடு கட்டுறத்துக்கும் வண்டி வாங்குறதுக்கும் வாங்கின கடனுக்கு இதுவரை கட்டிவந்த வட்டி விகிதத்தை உயர்த்தப் போறாங்களாம்... ஏன்னு கேட்டா.. பணவீக்கம்ன்றாங்க... இத்தனை அடி அடிச்சதாலே ஏற்பட்ட  நம்ப உடம்பு வீக்கத்தை யார் தான் பார்க்கிறது..?
               மக்களைப் பற்றிக் கொஞ்சம் கூட அக்கறையில்லாத அரசு.. வருமானம் என்பது நாட்டுல யாருக்குமே உயரல.. அப்படியேதான் இருக்குது.. ஆனா அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிங்க, பள்ளி-கல்லூரிக் கட்டணங்க - என  இவைகளின் விலைகளெல்லாம்  நாளுக்கு நாள் ஏறிகிட்டே இருக்கு.. இது போதாதுன்னு அரசாங்கமே ஒரு பொழுதுபோக்கா பெட்ரோல்,  டீசல், சமையல் எரிவாயு விலைகளை கண்மூடித்தனமாக உயர்த்துவது மட்டுமல்லாமல், மேலே சொன்ன விலைகளை குறைப்பதற்கும் மத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பது நாமெல்லாம் வருந்தத்தக்க  விஷயமாகும்.
             போகிறப் போக்கைப் பார்த்தா, ஏண்டா கோவணம் கட்டியிறக்க என்று சொல்லி, கட்டியிருக்கிற  ஒரு கோவணத்தையும் உருவிகிட்டு விட்டுடு வாங்களோன்னு  பயமா இருக்கு. எல்லாத்தையும் இழந்தாச்சி.. இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை.. அதைத் தவிர...!

புதன், 14 செப்டம்பர், 2011

2014 - ஆம் ஆண்டு பிரதமர் வேட்பாளர்களை அமெரிக்கா அறிவித்தது - கண்டிக்கத்தக்கது...!

       சென்ற 2009 - ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்றத் தேர்தலிலே முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவின் முழு தலையீடு என்பது இருந்தது. தேர்தல் அறிவித்தவுடனேயே அமெரிக்காவின் உளவுத்துறை சி. ஐ. ஏ-வின் தலைவர் வெளிப்படையாகவே தலைநகருக்கு வந்து ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கினார். அவரை இந்த நாட்டின் உள்துறை அமைச்சர் ஓட்டல் அறைக்கு சென்று சந்தித்தார் என்பதை நாம் மறந்திருக்க முடியாது.  அமெரிக்க உளவுத்துறையும், இந்தியாவில்  உள்ள அமெரிக்க தூதரகமும் தான் காங்கிரஸ் கட்சிக்கான தேர்தல் வேலைகளை செய்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. அதுவும் குறிப்பாக இடதுசாரிகள் ஆட்சி செய்த மேற்குவங்கம்  மற்றும்  கேரளாவில் இடதுசாரிகளுகெதிராக  இவர்கள் கடுமையாக வேலை செய்தது மட்டுமல்ல,  அமெரிக்க பணம் ஒரு இலட்சம் கோடிக்கு மேல் இங்கே கொட்டி இரைத்தார்கள். காங்கிரஸ் கட்சிக்காக மற்ற மாநிலக் கட்சிகளோடு கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு பற்றிய பேச்சுவார்த்தைகளையும் கூட  இவர்களே நடத்தினர். சிவகங்கையில் தோற்றுப்போனவரை வெற்றிபெற்றதாக அறிவித்ததில் அமெரிக்க தூதரகத்தின் பங்கு அதிகம்.
             இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால், நாங்கள் ஆட்சிக்கு வந்தால்  அமெரிக்காவுடன் மன்மோகன் சிங்கினால் போடப்பட்டிருக்கும் ''அமெரிக்க அணுசக்தி  ஒப்பந்தம்'' ரத்து செய்யப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகள்  வெளிப்படையாகவும் தைரியமாகவும்  தங்களின் தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது தான் அமெரிக்கவின்  இந்த தலையீட்டுக்கு  மிகப் பெரிய  காரணம்.
              இந்த சூழ்நிலையில் தான், அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வுச் சேவை (Congressional Research Service) மன்ற உறுப்பினர்களுக்காக இந்திய அரசியல் சூழல் குறித்து 94 பக்க அறிக்கையொன்றைத் தயாரித்துள்ளது. உறுப்பினர்களின் கவனத்துக்காக மட்டும் தயாரிக்கப்படும் இது போன்ற குறிப்பறிக்கைகள் வெளியில் உள்ள எவருக்கும் தரப்படுவதில்லை. ஆயினும் செப்டம்பர் 1-ம் தேதி வெளியான இந்த அறிக்கை அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு (Federation of American Scientists) மூலம் பொதுமக்கள் பார்வைக்கு வந்துள்ளது. இது வரும் 2014 - ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கிற இந்திய பாராளுமன்றத் தேர்தலுக்கு இந்திய மக்களை மூளைச் சலவைச் செய்து தயார்படுத்துவதற்கான வேலையை அமெரிக்கா தொடங்கிவிட்டது.   
             அந்த அறிக்கையில் வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்கான முக்கிய போட்டி என்பது , பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த நரேந்திர மோடிக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்திக்கும் இடையே தான் இருக்கும். இந்த இருவர் மட்டும்  தான்  பிரதமர் பதவிக்கான பிரதான வேட்பாளர்களாக இருப்பார்கள் என்று அமெரிக்கா ஆரூடம் சொல்கிறது. நரேந்திர மோடி தான் பாரதீய ஜனதா கட்சிக்கு பலம் வாய்ந்த வேட்பாளர் எனவும் குறிப்பிடுகிறது.
                மேலும் அந்த அறிக்கையில்,  குஜராத் முதல்வர் நரேந்திர மோடி செயலாற்றல் மிக்க நிர்வாகத்துக்கு  சிறந்த உதாரணமாக உள்ளார். ஊழலைக் கட்டுப்படுத்துவதிலும் அரசு நிர்வாகத்தில் தாமதத்தை ஒழிப்பதிலும் வெற்றி பெற்றுள்ளார். குஜராத்தின் பொருளாதார வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாக 11 சதவீதமாக உள்ளது. எனவே  இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் மோடி முக்கிய பங்கு வகிக்கிறார் இப்படியாக நரேந்திர மோடிக்கு அமெரிக்கா  நற்சான்றிதழ் வழங்கியிருக்கிறது.
             இந்திய பாராளுமன்ற தேர்தலுக்கான வேலையை அமெரிக்கா இப்போதே தொடங்கிவிட்டது. இனி தேர்தல் முடியும் வரை இந்திய மக்கள் பல்வேறுவிதமாக மூளைச் சலவை செய்யப்படுவார்கள்.
             ஊழலுக்கு அப்பாற்பட்ட இடதுசாரிகள் பக்கம் மக்களின் பார்வை திரும்பி விடாமல் இருப்பதற்கான வேலைதான் இது. ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்த அன்னா அசாரேக்கு, உண்ணாவிரத நாடகம் அரங்கேற்ற   அமெரிக்க ஆதரவுடன் இயங்கும் உலகவங்கி நிதியுதவி அளித்ததையும், அன்னா அசாரேயும் நரேந்திர மோடியை புகழ்ந்து தள்ளினார் என்பதையும் பொருத்திப் பார்த்தால் நம் நாட்டில் யார் பிரதமராக வரவேண்டும் என்பதைப் பற்றியும், யார் ஆட்சி செய்யவேண்டும் என்பது பற்றியும் ஏன் அமெரிக்கா கவலைப்படவேண்டும் என்ற இந்திய அரசியல் நிகழ்வு போக்குகளை மக்கள் தான்  உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

நம்ப நரவேட்டை நரேந்திர மோடி புனிதர் ஆயிட்டாருடா டோய்...!

        கடந்த 2002 - ஆம் ஆண்டு  குஜராத்தில் கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ் பிரஸ் ரயில் எரிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் முஸ்லிம் சிறுபான்மை மக்களை குறிவைத்து, நரேந்திரமோடி அரசின் முழு ஆதரவோடு, பாஜக-ஆர்எஸ்எஸ் - விஎச்பி - பஜ்ரங்தள் உள்பட மதவெறிப் பரிவாரம் கொடிய வெறியாட்டம் போட்டதை நாடு மறந்திருக்க முடியாது. சுமார் 3 ஆயிரம் இஸ்லாமிய சிறுபான்மை மக்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப் பட்டதையும் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.  இந்த நரவேட்டை தொடர்பாக 10 முக்கிய வழக்குகள் கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. அவற்றில் ஒரு வழக்கு குர்பர்க் வீட்டு வசதிக்கழக பகுதியில் 37 பேர் எரித்து படுகொலை செய்யப்பட்ட வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
                 கடந்த 2002 பிப்ரவரி 28ம்தேதி அகமதாபாத்தில் உள்ள குல்பர்க் வீட்டுவசதிக்கழக வளாகத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈசான் ஜாப்ரி உள்பட 37 பேர் உயிரோடு எரித்து படுகொலை செய்யப்பட்டனர் என்பது நமது ரத்தத்தையே உறைய வைக்கும் சம்பவமாகும். அது மட்டுமல்லாது, சம்பவம் நடந்தபோது காவல் துறையினர் அருகிலேயே இருந்தபோதிலும், மதவெறியர்களால் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் தங்களை காப்பாற்றுமாறு கதறியபோதும், எரித்துக் கொல்லப்படுவதை காவல் துறையினர் பார்த்துக் கொண்டே இருந்தனர் என்பதும் நெஞ்சை பதறவைக்கும் சம்பவமாகும்.
            மேலும்  கொல்லப்பட்ட ஈசான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி, முதலமைச்சர் நரேந்திரமோடி மற்றும் 62 பேர் மீது வழக்கு பதிவு செய்யுமாறு மாநில டிஜிபியிடம் புகார் அளித்தார். ஆனால், மோடி அரசின் காவல்துறை அதை கண்டுகொள்ளாமல் தட்டிக்கழித்தது. இதையடுத்து அவர், குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். குஜராத் உயர் நீதிமன்றமோ அதை  நிராகரித்தது என்பது அதைவிட கொடுமையானது.
         இதற்கிடையே 2008 மார்ச் 26ம்தேதி, குஜராத்தில் நடந்த குர்பர்க் வீட்டு வசதிக்கழக  படுகொலை உள்பட 10 பெரும் படுகொலை வழக்குகள் குறித்து புலனாய்வு செய்வதற்காக சிபிஐயின் முன்னாள் இயக்குநர் ஆர்.கே. ராகவன் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. ஆனால், இந்தக் குழு தனது விசாரணையில் குல்பர்க் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவான நிலையை எடுப்பதாக புகார் கூறி சிறப்பு பொது வழக்கறிஞர் ஆர்.கே.ஷா மற்றும் அவரது துணை வழக்கறிஞர் நைனா பட் ஆகியோர் பதவிகளிலிருந்து ராஜினாமா செய்தனர். இந்தப் பின்னணியில் அதே ஆண்டு மார்ச் 27ம் தேதி குல்பர்க் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதலமைச்சர் நரேந்திர மோடியை சிறப்பு புலனாய்வுக் குழு நேரில் அழைத்து விசாரணை நடத்தியது. இதன் பின்னர் மே 14ம் தேதி உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
                   இந்த அறிக்கையை ஆய்வு செய்த உச்சநீதிமன்றம், இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் குறித்தும், பிரதான குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நரேந்திர மோடியின் நடவடிக்கைகள்  பற்றியும்  எதுவுமே குறிப்பிடப்படாததது  குறித்தும் அதிருப்திகளும், சந்தேகங்களும் வலுவாக எழுந்த நிலையில், சிறப்பு விசாரணை அதிகாரியாக நீதிபதி ராஜு ராமச்சந்திரனை நியமித்தது. அவர், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடமும், சாட்சிகளிடமும், மனுதாரர்களிடமும் நேரடியாகவும், சுயேட்சையாகவும் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தர விட்டது. அதன் அடிப்படையில் தான், கடந்த 2011 ஜூலை 25ம்தேதி, மேற்கண்ட சிறப்பு விசாரணை அதிகாரி ராஜு ராமச்சந்திரன், தனது விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்செய்தார். இந்த அறிக்கையின் மீது தான் செப்டம்பர் 12ம்தேதி திங்களன்று தனது உத்தரவை வெளியிட்ட உச்சநீதிமன்றம், ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவானது இந்த வழக்கில் மேலும் விசாரணையை விரிவு படுத்தி நடத்த வேண்டும் என்றும், அதன்பின்னர் தனது இறுதி அறிக்கையை அகமதாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறியுறுத்தி  உத்தரவு பிறப்பித்தது.
                கடந்த 9 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் சிறப்பு விசாரணை அதிகாரி அளித்த அறிக்கையை தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் விசாரணையை தொடராமல், வழக்கை சம்பந்தப்பட்ட சிறப்பு நீதிமன்றமே நடத்த வேண்டும் என்றும், அதன் முடிவுக்காக காத்திருக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியதை,   2002 மதக்கலவர கொலை   வழக்கில் நரேந்திரமோடியை குற்ற மற்றவராக உச்சநீதிமன்றமே  அங்கீகரித்து விட்டதாக ஒரு பிரம்மையை உருவாக்கி பாரதீய ஜனதா கட்சியின் கூடாரத்தில் ஒரு கொண்டாட்டமே நடந்து வருகிறது.
             பா.ஜ.க - குள்ளேயே தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கிடையே குடுமிபிடி சண்டை ஒரு பக்கம். மக்களுக்கு நன்கு அறிமுகமான  பிரபலமான தலைவருக்கு ஏற்பட்டுள்ள பஞ்சம் இன்னொரு பக்கம். கட்சியில் இளைஞர்களே இல்லாத சூழ்நிலையில் அவர்களை ஈர்ப்பதற்கு ஏதாவது மாயஜாலம் செய்யவேண்டிய கட்டாயம் மற்றொரு புறம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் உச்ச நீதிமன்றத்தின் அறியுறுத்தலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, ''ஆயிரம் தலை வாங்கிய  அபூர்வ சிந்தாமணி'' நரவேட்டை நரேந்திர மோடிக்கு புனித நீராட்டுவிழா நடத்தி, ''இவரு ரொம்ப நல்லவரு''ன்னு  ஒரு பட்டத்தைச் சூட்டி, பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக பட்டாபிஷேகம் நடத்தி எதிர்வரும் தேர்தலில் ''எப்படியாவது'' ஆட்சியை பிடித்துவிடலாமென்று கனவு காண்கிறார்கள் பாரதீய ஜனதா கட்சியினரும், நரவேட்டை நரேந்திர மோடியும் என்பது தான் வெளிப்படையாக மக்களுக்கு தெரிகின்ற உண்மையாகும்.

சனி, 10 செப்டம்பர், 2011

மதம் பிடித்தவருக்கு மனிதம் பிடிக்காது - தேவை மதக்கலவர தடுப்பு மசோதா..!

                 இந்த முகம் நினைவிருக்கிறதா..? இது திரைப்படத்திலோ.. தொலைக்காட்சியிலோ வரும் சோகக்காட்சியல்ல..! கடந்த  பிப்ரவரி 2002 - இல் குஜராத்தில் பாரதீய ஜனதா கட்சியின் முதலமைச்சர் திருவாளர் நரேந்திர மோதி அரங்கேற்றிய  மதவெறி - நரவேட்டை  கோரத்தாண்டவத்தை நேரில் கண்டு  பாதிக்கப்பட்ட   குதுபுதீன் அன்சாரி என்கிற இஸ்லாமிய இளைஞர் தான் இவர்.
              சுமார் 1044 சிறுபான்மை மக்களை நரவேட்டையாடி, அவர்களின் சொத்துக்களை தீயிட்டு நாசப்படுத்தி விட்டு சாதனை படைத்த வெற்றி களிப்பில் சங் பரிவார் என்ற மதவெறி கூட்டத்தை சேர்ந்த இளைஞர் தான் இவர். மதவெறி இஸ்லாமிய குழந்தைகளைக்கூட  விட்டு வைக்கவில்லை.  
            ஒரு இந்து இளைஞனின் இஸ்லாமிய காதல் மனைவியின் வயிற்றில் வளர்ந்த சிசுவை - ஒரு இந்துவின் குழந்தை ஒரு முஸ்லிம் பெண் வயிற்றில் வளரக்கூடாது என்று கூறி கூரிய வாளால் அந்தப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து ஒரு பாவமும் அறியா அந்த சிசுவை வெளியே எடுத்து துண்டுத் துண்டாக வெட்டி நெருப்பில் போட்டிருக்கிறார்கள் இரக்கமில்லா மதவெறிக் கூட்டத்தினர்.
                  சிறுபான்மை இனத்தவரான எசன் ஜப்ரி என்கிற முன்னாள் காங்கிரஸ் எம். பி ஒருவர் இந்த குஜராத் மதக்கலவரத்தில் வெட்டி வீழ்த்தப்பட்டதை  நாடு மறந்திருக்க முடியாது. மனித நேயம் இல்லா மதவெறிக்கூட்டம்,  ''பெஸ்ட் பேக்கிரி'' என்ற ரொட்டிக் கடையை  நடத்தி வந்த இஸ்லாமிய குடும்பத்தினர் 14 பேரை அப்படியே அந்த பேக்கிரி கட்டிடத்திலேயே பூட்டி, தீயிட்டு கொளுத்தி கொலை செய்ததை இன்று நினைத்துப் பார்த்தாலும் நெஞ்சம் பதறுகிறது.
                 ஆர். எஸ். எஸ் - பாரதீய ஜனதா கட்சியின் மற்றொரு மதவெறி அமைப்பான    பஜ்ரங்  தல்  என்கிற மதவெறிக்  கூட்டம் 1999 - ஆம் ஆண்டு ஜனவரி 23 அன்று,  ஒரிசா மாநிலத்தில் மனோஹர்பூர் கிராமத்தில் மலைவாழ் மக்களுக்கு சேவை புரிந்து வந்த கிருத்துவ பாதிரியார் கிரகாம் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவரது இரண்டு மகன்கள் மூன்று பேரையும், இரவில் தூங்கிக் கொண்டிருந்த போது வேனோடு சேர்த்துக் கொளுத்தப்பட்டு கொல்லப்பட்டதையும்  இந்த   நாடு மறந்திருக்க முடியாது.
                  இந்து மதத்தைச் சேர்ந்தவர்களின் ஓட்டுக்களை பெறுவதற்காக, ஆர்.எஸ்.எஸ் பல்வேறு பா.ஜ.க., சங்பரிவார், பஜ்ரங் தல், இந்து   முன்னணி போன்ற பல்வேறு இந்து மதவாத அமைப்புகள், மக்களின் மத உணர்வுகளைத் தூண்டி அதில் குளிர் காய நினைக்கிறார்கள்.
              எதிர்காலத்தில்  இது  போன்ற மதக் கலவரங்களை தடுத்து சிறுபான்மை  மக்களை காக்கும் பொருட்டு, மத்திய அரசு மதக் கலவர தடுப்பு மசோதாவை கொண்டு வரப் போவதாக,  இன்று  சனிக்கிழமை புதுடெல்லியில் கூடிய தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் அறிவித்தார். உடனே மதவாத அமைப்புகளான பா.ஜ.க உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகளும் அதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகளும் இந்த  மதக் கலவர தடுப்பு மசோதாவை அறிமுகக் கட்டத்திலேயே எதிர்த்துள்ளன. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே இந்த மசோதாவை வரவேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேரழிவை நோக்கிப் பறக்கும் இந்திய விமானத் துறை..!

               சமீபத்தில் இந்திய விமான போக்குவரத்துத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான வெளிநாடுகளில் சேவை அளிக்கும் ஏர்-இந்தியா நிறுவனத்தைப் பற்றியும், உள்நாட்டில் சேவை அளிக்கும் இந்தியன் ஏர்-லைன்ஸ் நிறுவனத்தைப் பற்றியும் தலைமை கணக்கு தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.) வெளியிட்டுள்ள அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்  வெளியாகியுள்ளன.
               மோசமான நிர்வாகம், தவறான முடிவுகள், சரியான உத்தி இல்லாத எதிர்கால திட்டங்கள் மூலம் இந்தியன் ஏர்-லைன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய அழிவைத் தேடிச் செல்ல வழிவகுத்துவிட்டது விமான போக்குவரத்துத் துறை என்றும்,  வெளிநாடுகளில் சேவை அளிக்கும் ஏர்-இந்தியா நிறுவனத்தையும் உள்நாட்டில் சேவை அளிக்கும் இந்தியன் ஏர்-லைன்ஸ் நிறுவனத்தையும் ஒரே நிறுவனமாக இணைப்பது என்ற முடிவையும் 111 விமானங்களைப் புதிதாக ஒரே மூச்சில் கடனில் வாங்குவது என்ற முடிவையும் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் விமான போக்குவரத்துத் துறை எடுத்திருப்பதாகவும் அந்த  அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. 
                       பல ஆண்டுகளாக இந்தியாவில், இன்சூரன்ஸ், வங்கி, தொலைத்தொடர்பு, விமானப்போக்குவரத்து போன்ற சேவைத் துறை என்பது மக்களுக்கு சிறந்த முறையில் செவையளித்தது மட்டுமல்ல. அரசின் மக்கள் நலப்பணிகளுக்கு நிதியுதவி அளிக்கும் பொதுத்துறை நிறுவனமாக விளங்கி வந்திருக்கிறது. ஆனால் இதேத் துறைகளில் அந்நிய நேரடி முதலீடு என்ற பெயரில் இந்தப் பொதுத்துறை நிறுவனங்களுக்கு போட்டியாக அந்நிய-இந்திய தனியார் நிறுவனங்களை மத்திய அரசு அனுமதித்தது மட்டுமல்ல. அந்த நிறுவனங்கள் கொள்ளை இலாபம் அடிப்பதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் மத்திய       அரசே செய்வதன் விளைவுகள் தான், இன்றைக்கு ஏர்-இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் இதுபோன்ற நெருக்கடிகளுக்குக் காரணம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மக்களின் சொத்துக்களான பொதுத்துறை நிறுவனங்களை அழித்துவிட்டு தனியார் நிறுவனங்களை வாழவைக்கும் வேலைகளை தான் மத்திய அரசு செய்கிறது.
                  மத்திய அரசின் உலகமயம், தாராளமயம். தனியார்மயம் என்கிற தவறான பொருளாதாரக்  கொள்கைகளின் காரணமாக,  இதுபோன்ற தேசவிரோத செயல்களை ஆட்சியாளர்களே செய்ததால் தான் இன்றைக்கு இந்திய விமானப் போக்குவரத்துத்துறை என்பது ஒரு பேரழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பதைத் தான்அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
                 நாடாளுமன்றத்தில் சென்ற வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கையில்  "ஏர்-இந்தியா நிறுவனத்துக்குக் கடன் மூலமே புதிதாக 111 விமானங்களை வாங்குவது என்ற மிகத் தவறான முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் அரசு விமான போக்குவரத்து நிறுவனத்துக்கு நன்மைகளைவிட தீமைகளே அதிகம். ஏர்-இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களை ஒன்றாக இணைப்பது என்ற முடிவு உயர்நிலையில் எடுக்கப்பட்டது. இதனால் இரு நிறுவனங்களுக்கும் என்ன நிதி ஆதாயம் கிடைக்கும் என்று ஆராயாமலே, தவறான நேரத்தில் எடுக்கப்பட்டது. இணைப்பே இரு நிறுவனங்களின் இப்போதைய தேவை என்று தவறாகக் கணிக்கப்பட்டது. 
                 அதிக எண்ணிக்கையில் விமானங்களைக் கடனில், தேவைக்கும் அதிகமாக வாங்கியதாலேயே மிகப்பெரிய கடன்தாரராக நிறுவனம் மாறியது. 2010 மார்ச் 31-ம் தேதியுடன் முடிந்த நிதி ஆண்டில் நிறுவனத்தின் கடன் சுமை ரூ.38,423 கோடியாக இருந்தது.விமானங்களை வாங்குவதற்குத் தேவைப்பட்ட முழுத் தொகையையும் கடனாக வாங்குவது என்றும் கடனை அசலும் வட்டியுமாக திருப்பிச் செலுத்த, விமான போக்குவரத்திலிருந்து கிடைக்கும் வருவாயைப் பயன்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இவ்வளவு பெரிய நிறுவனத்துக்கு கூடுதல் பங்கு மூலதனமாக ரூ.325 கோடி மட்டும் திரட்டப்பட்டது. 111 விமானங்களைக் கடன் மூலம் வாங்குவது என்று முடிவு செய்யப்பட்ட உடனேயே மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை, பொது முதலீட்டு வாரியம், மத்திய திட்டக்கமிஷன் ஆகியவற்றில் எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு ஒரு பொதுத்துறை நிறுவனம்   தானே அழிந்து போகும் அளவிற்கு மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவுகளை அந்த அறிக்கை கண்டிக்கிறது.
                             அந்த இரண்டு விமான  நிறுவனங்களும்  இந்த நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பது என்பது அந்த நிறுவனங்களின் தலைமை மட்டும் பொறுப்பல்ல. அந்த ஆண்டுகளில் பதவிலிருந்த மத்திய விமான போக்குவரத்து அமைச்சராகவும், நிதி அமைச்சரும் தான் பொறுப்பாவார்கள். எனவே முன்னாள் விமான போக்குவரத்து அமைச்சரையும், முன்னாள்  நிதி அமைச்சரையும் விசாரணையில் உட்படுத்தவேண்டும் என்று மக்கள் கேட்கவேண்டும்.