சமீபத்தில் இந்திய விமான போக்குவரத்துத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான வெளிநாடுகளில் சேவை அளிக்கும் ஏர்-இந்தியா நிறுவனத்தைப் பற்றியும், உள்நாட்டில் சேவை அளிக்கும் இந்தியன் ஏர்-லைன்ஸ் நிறுவனத்தைப் பற்றியும் தலைமை கணக்கு தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.) வெளியிட்டுள்ள அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மோசமான நிர்வாகம், தவறான முடிவுகள், சரியான உத்தி இல்லாத எதிர்கால திட்டங்கள் மூலம் இந்தியன் ஏர்-லைன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய அழிவைத் தேடிச் செல்ல வழிவகுத்துவிட்டது விமான போக்குவரத்துத் துறை என்றும், வெளிநாடுகளில் சேவை அளிக்கும் ஏர்-இந்தியா நிறுவனத்தையும் உள்நாட்டில் சேவை அளிக்கும் இந்தியன் ஏர்-லைன்ஸ் நிறுவனத்தையும் ஒரே நிறுவனமாக இணைப்பது என்ற முடிவையும் 111 விமானங்களைப் புதிதாக ஒரே மூச்சில் கடனில் வாங்குவது என்ற முடிவையும் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் விமான போக்குவரத்துத் துறை எடுத்திருப்பதாகவும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
பல ஆண்டுகளாக இந்தியாவில், இன்சூரன்ஸ், வங்கி, தொலைத்தொடர்பு, விமானப்போக்குவரத்து போன்ற சேவைத் துறை என்பது மக்களுக்கு சிறந்த முறையில் செவையளித்தது மட்டுமல்ல. அரசின் மக்கள் நலப்பணிகளுக்கு நிதியுதவி அளிக்கும் பொதுத்துறை நிறுவனமாக விளங்கி வந்திருக்கிறது. ஆனால் இதேத் துறைகளில் அந்நிய நேரடி முதலீடு என்ற பெயரில் இந்தப் பொதுத்துறை நிறுவனங்களுக்கு போட்டியாக அந்நிய-இந்திய தனியார் நிறுவனங்களை மத்திய அரசு அனுமதித்தது மட்டுமல்ல. அந்த நிறுவனங்கள் கொள்ளை இலாபம் அடிப்பதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் மத்திய அரசே செய்வதன் விளைவுகள் தான், இன்றைக்கு ஏர்-இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் இதுபோன்ற நெருக்கடிகளுக்குக் காரணம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மக்களின் சொத்துக்களான பொதுத்துறை நிறுவனங்களை அழித்துவிட்டு தனியார் நிறுவனங்களை வாழவைக்கும் வேலைகளை தான் மத்திய அரசு செய்கிறது.
மத்திய அரசின் உலகமயம், தாராளமயம். தனியார்மயம் என்கிற தவறான பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக, இதுபோன்ற தேசவிரோத செயல்களை ஆட்சியாளர்களே செய்ததால் தான் இன்றைக்கு இந்திய விமானப் போக்குவரத்துத்துறை என்பது ஒரு பேரழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பதைத் தான்அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
நாடாளுமன்றத்தில் சென்ற வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கையில் "ஏர்-இந்தியா நிறுவனத்துக்குக் கடன் மூலமே புதிதாக 111 விமானங்களை வாங்குவது என்ற மிகத் தவறான முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் அரசு விமான போக்குவரத்து நிறுவனத்துக்கு நன்மைகளைவிட தீமைகளே அதிகம். ஏர்-இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களை ஒன்றாக இணைப்பது என்ற முடிவு உயர்நிலையில் எடுக்கப்பட்டது. இதனால் இரு நிறுவனங்களுக்கும் என்ன நிதி ஆதாயம் கிடைக்கும் என்று ஆராயாமலே, தவறான நேரத்தில் எடுக்கப்பட்டது. இணைப்பே இரு நிறுவனங்களின் இப்போதைய தேவை என்று தவறாகக் கணிக்கப்பட்டது.
அதிக எண்ணிக்கையில் விமானங்களைக் கடனில், தேவைக்கும் அதிகமாக வாங்கியதாலேயே மிகப்பெரிய கடன்தாரராக நிறுவனம் மாறியது. 2010 மார்ச் 31-ம் தேதியுடன் முடிந்த நிதி ஆண்டில் நிறுவனத்தின் கடன் சுமை ரூ.38,423 கோடியாக இருந்தது.விமானங்களை வாங்குவதற்குத் தேவைப்பட்ட முழுத் தொகையையும் கடனாக வாங்குவது என்றும் கடனை அசலும் வட்டியுமாக திருப்பிச் செலுத்த, விமான போக்குவரத்திலிருந்து கிடைக்கும் வருவாயைப் பயன்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இவ்வளவு பெரிய நிறுவனத்துக்கு கூடுதல் பங்கு மூலதனமாக ரூ.325 கோடி மட்டும் திரட்டப்பட்டது. 111 விமானங்களைக் கடன் மூலம் வாங்குவது என்று முடிவு செய்யப்பட்ட உடனேயே மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை, பொது முதலீட்டு வாரியம், மத்திய திட்டக்கமிஷன் ஆகியவற்றில் எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு ஒரு பொதுத்துறை நிறுவனம் தானே அழிந்து போகும் அளவிற்கு மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவுகளை அந்த அறிக்கை கண்டிக்கிறது.
அந்த இரண்டு விமான நிறுவனங்களும் இந்த நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பது என்பது அந்த நிறுவனங்களின் தலைமை மட்டும் பொறுப்பல்ல. அந்த ஆண்டுகளில் பதவிலிருந்த மத்திய விமான போக்குவரத்து அமைச்சராகவும், நிதி அமைச்சரும் தான் பொறுப்பாவார்கள். எனவே முன்னாள் விமான போக்குவரத்து அமைச்சரையும், முன்னாள் நிதி அமைச்சரையும் விசாரணையில் உட்படுத்தவேண்டும் என்று மக்கள் கேட்கவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக