சனி, 17 செப்டம்பர், 2011

மோடியின் உண்ணாவிரதத்தால் கலவரத்தில் படிந்த ரத்தக்கறையை கழுவிடமுடியாது..

               பாரதீய  ஜனதா கட்சி 2014 - ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கான வேலையை ஆரம்பித்துவிட்டது என்று தான் சொல்லவேண்டும். இன்று அடுக்கடுக்கான ஊழல் புகார்,   விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, தொடர் குண்டுவெடிப்புகள் என சிலந்தி வலைக்குள் தப்பிக்க முடியாத அளவிற்கு சிக்கி மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு என்பது  மக்களின் அதிருப்தியில் இருக்கும் சூழ்நிலையை பாரதீய ஜனதா கட்சி ஓட்டுக்களாக  அறுவடை செய்ய துடிக்கிறது. 
         ''இரத யாத்திரை'' புகழ் லால் கிருஷ்ண அத்வானி ஊழலை ஒழித்துக்கட்டப் போவதாக சொல்லிக்கொண்டு மீண்டும் மற்றுமொரு     இரத யாத்திரையை  நடத்தப் போவதாக சொல்லிக்கொண்டிருக்கும் போதே, குஜராத்தில் ''இரத்த யாத்திரை'' நடத்திய நரவேட்டை நரேந்திர மோடி,     ''அமைதி, ஒற்றுமை, மதநல்லிணக்கம்''  இவைகளை வலியுறுத்தி இன்னொரு பக்கம் இன்று முதல் மூன்று நாட்களுக்கு உண்ணாவிரதம் இருக்கப்போவதாக சொல்லிக்கொண்டு ஒரு நாடகத்தை இன்று காலையிலிருந்தே அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார். இவரது உண்ணாவிரதத்தை வாழ்த்துவதற்கு இவரே பல மாநிலக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்புவிடுத்திருக்கிறார். அதன் மூலம் தனக்குள்ள பலத்தையும் ஆதரவையும் தன் கட்சியினர்க்கே எடுத்துக் காட்டுவதற்கான ஏற்பாடு தான் இது. மோடியை வாழ்த்துவதற்கு  தமிழக முதலமைச்சர் கூட தன் பங்குக்கு இரண்டு பேரை  அனுப்பி வைத்துள்ளார்.
        இதில் என்ன வேடிக்கை என்றால், மோடியிடம் இல்லாத - அவர் கட்சியிடம் இல்லாத - அவர் ஆட்சியிலேயே இல்லாத ''அமைதி, ஒற்றுமை, மதநல்லிணக்கம்'' ஆகிய மூன்றுக்காகவும் உண்ணாவிரதம் இருப்பது தான் நகைப்புக்குரியதாக இருக்கிறது.
                    2002 - ஆம் ஆண்டில் குஜராத்தில் நடந்த சிறுபான்மை இன மக்களின் திட்டமிட்ட படுகொலையை இவர் வேண்டுமானால்  மறந்திருக்கலாம். ஆனால் இவர் அமைதியை குலைத்து, ஒற்றுமையை சிதைத்து, மத நல்லிணக்கத்தை சீரழித்ததை   இந்த நாடு மறந்திருக்காது. மக்கள் நிச்சயம் மறந்திருக்க மாட்டார்கள். 
                   உலகமய - தாராளமயக் கொள்கைகளின் காரணமாக 2002 - ஆம் ஆண்டுக்கு முன்பு  தன் ஆட்சிக்காலத்தில் மூடப்பட்ட பஞ்சாலைகளில் பணிபுரிந்து  வேலைவாய்ப்பை இழந்த  தொழிலாளர்கள் இந்த கொலை பாதகச் செயலுக்கு பயன்படுத்தப்பட்டார்கள் என்பதை யாரும் மறந்திருக்கமுடியாது. வேலைவாய்ப்பை இழந்து வருமானத்தையும் இழந்த தொழிலாளர்களுக்கு ''மனித கொலை''களை செய்வது எப்படி என்பது பற்றி பயிற்சி  அளிக்கப்பட்டதை இன்று நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது. அந்த பயிற்சி காலத்தில் அவர்களுக்கு சம்பளமும் கொடுக்கப்பட்டது. இதில் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம் என்னவென்றால், அந்தக் ''கொலைப்பயிற்சி''யில் பெண்களும் கலந்துகொண்டது தான் அதிர்ச்சியளிக்கும் விஷயமாகும். தொழிலாளர்களின் வறுமையை இன்னொரு தொழிலாளிக்கு எதிராக அரசு எப்படி பயன்படுத்திக்கொண்டது என்பதற்கு இதுவே உதாரணம்.
      

அது மட்டுமல்ல, பயிற்சியளிக்கப்பட்ட அந்த தொழிலாளர்களுக்கு வாக்காளர் பட்டியல் கொடுக்கப்பட்டு சிறுபான்மை மக்கள் வசிக்கும் வீடுகளை அடையாளம் காட்டப்பட்டது என்பது இன்னொரு அதிர்ச்சி தரும் விஷயமாகும். ஆனால் கொலை செய்வதற்கும் நேரமும், நியாமும் அவர்களுக்குத் தேவைப்பட்டது. அதற்காகத் தான் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.
                 அப்படியாக அந்த ரயில் எரிப்பு சம்பவத்தை காரணம் காட்டித் தான், கொலைப்பயிற்சி பெற்றவர்கள் வாக்காளர் பட்டியலை வைத்துக்கொண்டே சிறுபான்மை மக்களை அடையாளம் கண்டு ஆயிரக்கணக்கான பேர்களை வெட்டிச் சாய்த்தும், தீயிட்டுக் கொளுத்தியும் கொன்று குவித்தார்கள். காவல் துறை கூட கொலையை தடுப்பதற்கு பதிலாக, கொலையாளிகளை பாதுகாப்பதையே தங்கள் பணியாக செய்தார்கள்.
                   இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம். பி - யின் வீட்டுக்கு வெளியே கொலையாளிகள் தீப்பந்தத்தொடு  கூட்டமாக கூடிவிட்டார்கள். உள்ளே இருக்கும் முன்னாள்  எம். பி. பதற்றத்தோடு தொலைபேசியில் அருகில் உள்ள காவல் நிலையத்தொடு தொடர்பு கொண்டு காவலர்களை அழைத்த போது, அவர்கள் அந்த இடத்திற்கு வராமல் புறக்கணித்ததால் அந்த எம். பி. தீயிட்டுக் கொளுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இஸ்லாமிய மக்களின் வீடுகளும், குடிசைகளும், கடைகளும், உடமைகளும் தீயிடப்பட்டு நாசமாக்கப்பட்டது.
               இதன் மூலம் நமக்கு விளங்குவது என்னவென்றால்,  2002 - ஆம் ஆண்டில் நடந்த  ஆயிரக்கணக்கான சிறுபான்மை  மக்களின்  படுகொலை என்பது - குழந்தைகள் என்றும், பெண்கள் என்றும் வயதானவர்கள் என்றும் பாராமல் அனைவரையும் கொன்றுகுவித்த செயல் என்பது   நரேந்திர மோடி அரசாலேயே  திட்டமிட்டு நடத்தப்பட்டது  என்பதை இந்த நாடும், இந்த நாட்டு மக்களும் அறிவார்கள்.
             அன்று சிந்திய அந்த இரத்தக்கறை என்பது இன்னும் மோடியின் மீதும், மோடி அரசின் மீதும் படிந்து தான் இருக்கிறது. அந்த இரத்தக்கறையை துடைப்பதற்கு இந்த உண்ணாவிரதம் எந்த விதத்திலும் பயன் தராது என்பதை மோடியோ அவரின் கட்சியை சேர்ந்தவர்களோ அறிந்திருக்கவில்லை என்பது தான் உண்மை.

4 கருத்துகள்:

Thamizhan சொன்னது…

அரசியல் விளம்பரத்திற்கு இன்றைய பெரும் விபச்சாரம் உண்ணா விரதம்.
இதில் அடையும் ஆதாயம் அப்படியே நேரே தேர்தலில் வாக்குகளாக மாறும் என்ற கணக்கீடு.
தீயினால் கொளுத்தப் பட்டவர்கள், திட்டமிட்டுக் கொல்லப் பட்டவர்களுக்காக ஏதாவது செய்யப் பட்டிருந்தால் அது மனித நேயமாக இருந்திருக்கும் ஆனால் விளம்பரம் கிடைக்காது.இந்த உண்ணா விரதத்தில் அரசியல் இருக்கும் மனித நேயம் இருக்காது.

palani subramanian சொன்னது…

katturai sirappaga ulladhu

palani subramanian சொன்னது…

political gimmicks by Modi

puduvairamji.blogspot.com சொன்னது…

மிக்க நன்றி...Thamizhan & palani subramanian