வெள்ளி, 9 செப்டம்பர், 2011

மக்கள் பிரச்சனைகளை பேசாமல் பாராளுமன்ற நேரத்தை வீணடிக்கும் போக்கு கண்டிக்கத் தக்கது..!

                  நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று முன் தினம் வியாழக்கிழமை முடிவடைந்தது. இல்லை.. இல்லை.. முடித்துக்கொள்ளப்பட்டது.  நாடாளுமன்றம் நடைபெற்ற மொத்தம் 26 அலுவல் நாள்களில் பாதிக்கும் மேற்பட்ட நாள்கள் பாரதீய ஜனதா கட்சி திட்டமிட்டு செய்த கலாட்டாவினால்  இருஅவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன என்பது தான் இந்த மழைக்காலக் கூட்டத்தொடரின் சிறப்பம்சமாகும். இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகளே முடங்கிப்போயின என்பது தான் நாம் வேதனையோடு கவனிக்கவேண்டியுள்ளது. நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் செய்ததில் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் சம பங்கு உண்டுஎன்பதை யாராலும் மறுக்க முடியாது. நாடாளுமன்றம் நடத்துவதற்கு ஒரு நாளைக்கு சுமார் ரூ. 2 கோடிக்கும் மேல் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை முடக்குவதால் மக்களின் வரிப்பணமான அத்தனை கோடிகளும் வீண் விரயமாகிவிடும்.
                    நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே,  அண்ணா ஹசாரே உண்ணாவிரதம், குஜராத் லோக் ஆயுக்த தலைவர் நியமனம், நாடாளுமன்றத்தில் வாக்களிக்க பணம் அளித்தது ஆகிய விவகாரங்களால் இரு அவைகளும் இறுதி நாள் வரை அடிக்கடி ஒத்தி வைக்கப்பட்டன என்பதை இந்த நாடே உற்று நோக்கியது. நாடாளுமன்ற அலுவல்கள் முடங்கியது குறித்து, இது போன்ற போக்கைக் கண்டித்து   மக்களவைத் தலைவர் மீரா குமாரும், மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரியும் கவலை தெரிவித்தனர். 
                     பாரதீய ஜனதாக் கட்சியை பொறுத்தவரை நாடாளுமன்ற ஜனநாயக முறையிலேயே  நம் பிக்கை இல்லாதவர்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பின் அறிவுரைப்படி அதிபர் ஆட்சி முறை கொண்டுவர வேண்டும் என்று விரும்புபவர்கள். நாடாளுமன்றம் நடத்தமுடியவில்லை என்று மக்களின் ஒரு  கருத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே  ஏதாவது ஒரு பிரச்சனையை கையில் எடுத்து ரகளை செய்து அவையை முடக்குவதில் ஆனந்தம் காண்கிறார்கள் பாரதீய ஜனதாக் கட்சியினர்.
                         காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டாளிக் கட்சிகளோ   நாடாளுமன்றம் சுமூகமாக நடந்தால் பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கிறது   என்பதால் பாரதீய ஜனதாக் கட்சியினர் செய்யும் ரகளைகளை ரசித்துக்கொண்டு அவை முடக்குவதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
                இன்றைக்கு நாட்டு மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் கடுமையான விலைவாசி உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு, காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதாக்  கட்சிகள்   சம்பந்தப்பட்ட ஊழல்கள், பயங்கரவாத தாக்குதல்கள், வேளாண்துறை வீழ்ச்சி என பல்வேறு பிரச்சனைகளை பற்றிக் கவலைப்படாமலும்   விவாதிக்கப்படாமலும் பாரதீய  ஜனதாக் கட்சியின் சொந்த இலாபத்திற்காக ரகளைகள் செய்து இரு அவைகளும் முடக்கப்பட்டன. 
                  அன்னா ஹசாரே போன்றவர்கள் ஊழலுக்கு எதிராக மட்டுமின்றி, நாடாளுமன்றம் என்ற அமைப்புக்கே எதிராக குரல் கொடுக்கின்றனர். ஹசாரே உண்ணாவிரதத்தின்போது பலரும் நாடாளுமன்றத்தின் மீது புழுதி வாரி தூற்றினர். சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உண்டு என்பதை கூட இவர்கள் மறுதலிக்க முயல்கின்றனர். இது ஆபத்தான போக்காகும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
                   பாஜகவின் ரகளையும், காங்கிரசின் அலட்சியமும் ஹசாரே குழுவினர் போன்றவர்களுக்கே ஊக்கம் அளிக்கும் என்பதையும்,  நாடாளுமன்ற அமைப்பு முறை குறித்து மக்களிடம் அதிருப்தி ஏற்படவும் வழிவகுக்கும் என்பதையும் யாரும் மறந்துவிடக் கூடாது.

கருத்துகள் இல்லை: