நேற்றைய தினம் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தன்னை, ஆளுமை திறனும், தலைமைப் பண்பும், பதவிக்கான மரியாதையும், பொறுப்புக்கேற்ற மதிப்பும் இல்லாததொரு செயலிழந்த பிரதமராக மன்மோகன் சிங் வெளிப்பட்டிருக்கிறார். மத்தியஅமைச்சரவைக் கூட்டத்தில் தேசிய விளாயாட்டு மசோதாவை அறிமுகப் படுத்தும் போது, அறிமுகக் கட்டத்திலேயே தன்னுடைய அமைச்சர்களாலேயே பலத்த எதிர்ப்புக்குள்ளானார். இந்தச் சட்ட மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளவர்களில் முதன்மையானவர் மூத்த அமைச்சரும், வேளாண்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான சரத் பவார் தான். அவருடன் சேர்ந்து, அவரது கட்சியைச் சேர்ந்த அமைச்சர் பிரபுல் பாட்டீல் மற்றும் மாநில அளவில் கிரிக்கெட் சங்கங்களுக்கு தலைமை வகித்து வரும் அமைச்சர்கள் சி.பி.ஜோஷி, பரூக் அப்துல்லா, விலாஸ்ராவ் தேஷ்முக் ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது இந்திய பாராளுமன்ற வரலாற்றில் வெட்கக்கேடான போக்காகும்.
இந்த ''மகா திருடர்கள்'' எதிர்ப்பு தெரிவித்ததில் காரணமில்லாமலில்லை. அதில் எந்தவிதமான ஆச்சரியமும் இல்லை. விளையாட்டுக் கழகங்களால் கொள்ளை லாபம் ஈட்டும் தங்களது அதிகாரம் தங்கள் கையை விட்டுப்போய்விடுமோ என்ற அச்சம் தான் இவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததற்கான காரணம். இப்படிப்பட்டவர்களை தனது அதிகாரத்தினால் வாயடைத்துப் போகச் செய்ய வேண்டிய பிரதமர், இந்த மசோதாவை இன்னும் கொஞ்சம் திருத்தி, பிறகு எடுத்துக்கொள்ளலாம் என்று கூறி, விளையாட்டு அமைச்சகத்திற்கே திருப்பி அனுப்பியிருப்பது பிரதமர் செயலிழந்திருக்கிறார் என்பதையே காட்டுகிறது.
இந்தியாவில் மற்ற விளையாட்டுக் கழகங்கள், விளையாட்டு சம்மேளனங்களைக் காட்டிலும் அதிக வருமானம் உள்ள அமைப்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் உள்ளது என்பதை அனைவரும் அறிவார்கள். இந்த அமைப்புகளை கிரிக்கெட் வீரர்கள் தான் தலைமையேற்க வேண்டுமென்ற விதிமுறை இல்லாததால், அரசியல்வாதியான சரத் பவார் மட்டுமே தொடர்ந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்து வருவதிலிருந்து இதில் எந்த அளவுக்கு வருவாய் இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். கிரிக்கெட் விளையாட்டு ஒளிபரப்பு உரிமையை ஊடகங்களுக்கு வழங்குதல் முதற்கொண்டு, வீரர்கள் தேர்வு ( திறமையை பார்க்காமல், வீரர்களின் அரசியல் மற்றும் மாநிலம் இவைகளை பார்த்து தேர்வு செய்வது ) அதேப்போல் விளையாட்டு அரங்கத் தேர்வு, வசூல், மேச் பிக்ஸிங், பயிற்சியாளர் நியமனம் என எல்லாவற்றிலும் பல நூறு கோடி ரூபாய் ஊழல் செய்ய வாய்ப்பளிக்கும் இடமாக கிரிக்கெட் வாரியம் உள்ளது தான் இதற்கு காரணம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் மிகப்பெரும் ஊழலுக்கு வழிவகுத்தன என்பதை யாரும் மறந்திருக்க முடியாது. முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் தனது மனைவி சுனந்தா புஷ்கருக்கு ரூ.70 கோடியை கொச்சி ஐபிஎல் நிறுவனத்தில் (4.5 விழுக்காடு) பங்காகத் தர வேண்டும் என்று கூறியதாக ஐபிஎல் தலைவராக இருந்த லலித் மோடி வெளிப்படையாகப் பேசியதால் மிகப்பெரும் சர்ச்சை கிளம்பியது நினைவிருக்கலாம். லலித் மோடி பதவியிலிருந்து நீக்கப்பட்டதோடும், சசி தரூர் மத்திய அமைச்சர் பதவி விலகியதொடும் இந்த விவகாரம் அனைவராலும் மறக்கப்பட்டுவிட்டது.
அதுமட்டுமல்ல, இந்திய கிரிக்கெட் வாரியம் என்பது வெளிநாட்டுப் பணம் புழங்கும் இடமாகவும், விளையாட்டின் மூலம் வெளிநாட்டுப் பணத்தை இந்தியாவில் உருமாற்றிக்கொள்ளும் இடமாகவும், இவர்கள் நடத்தும் இந்த வணிக நோக்கிலான விளையாட்டுகளுக்கு வருமானவரி விலக்கு பெற்று கொள்ளை லாபம் அடிக்கும் இடமாகவும் இந்திய கிரிக்கெட் வாரியம் இருப்பது தான் இந்த எதிர்ப்புக்குக் காரணமாகும்.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு விளையாட்டுக்கும் தற்போது தனித்தனியாக சங்கங்கள் மற்றும் சம்மேளனங்கள் உள்ளன. அவைகளை ஒழுங்குபடுத்துவதும், அவைகள் மக்கள் பணத்தைப் பயன்படுத்துவதால் அரசுக்கு முறையான கணக்குகள் காட்டவும், வெளிப்படைத் தன்மையுடன் செயல்படவும் தான் இந்த தேசிய விளையாட்டு மேம்பாட்டு மசோதா விளையாட்டு அமைச்சகத்தால் கொண்டுவரப்பட இருந்தது.
அதுமட்டுமல்ல, விளையாட்டுக் கழகம், சங்கம் அல்லது சம்மேளனம் ஆகியவற்றின் நிர்வாகக் குழுவில் 25 சதவீதத்தினர் அந்த விளையாட்டைச் சேர்ந்த வீரர்களாக இருக்க வேண்டும் என்கின்ற நிபந்தனையையும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு இந்தச் சங்கங்களை உட்படுத்தும் கட்டுப்பாடும், 70 வயதுக்குள் இருப்பவர் மட்டுமே இந்த அமைப்புகளில் இடம்பெறலாம் என்கிற விதிமுறையும் இந்த மசோதாவில் கூறப்பட்டிருப்பது தான் இந்த ''மகா திருடர்களின்'' மிகப் பெரிய எதிர்ப்புக்குக் காரணம்.
இப்படிப்பட்ட இந்த மசோதாவின் ஆரம்பக்கட்டத்திலேயே, பிரதமரை அவரது அமைச்சர்களே எதிர்க்கும் போது, அவர்களை தூக்கி எறிந்துவிட்டு மசோதாவை நிறைவேற்றத் துணியாமல், மாறாக பிரதமர் வாயடைத்துப் போய் செயலிழந்துப் போனது வெட்கக்கேடான விஷயமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக