வாச்சாத்தி பாலியல் பலாத்கார வழக்கில் தீர்ப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
1992ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டம், வாச்சாத்தி மலைவாழ் மக்கள் சந்தன மரங்களை கடத்துவதாக வந்த புகாரின் மீது வனத்துறையைச் சார்ந்த அதிகாரிகள், காவல்துறையினர், வருவாய்த்துறையினர் உள்ளிட்டு 269 பேர் கொண்ட கூட்டுக்குழு அதிரடி சோதனையில் ஈடுபட்டு அக்கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் பலரை பாலியல் பலாத்காரம் செய்து வன்கொடுமைக்கு ஆளாக்கினர். அவர்களின் வீடுகள் நொறுக்கப்பட்டு, உடைமைகள் சூறையாடப்பட்டன. ஆண்கள் 15 பேர், குழந்தைகள் 28 பேர், பெண்கள் 90 பேர் என 133 பேரை கைது செய்து பொய்வழக்கு புனைந்தனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வாச்சாத்தி கிராம மலைவாழ் மக்கள் கொடுத்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை.
இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் பாலியல் வன்கொடுமைக்கும், பல்வேறு பாதிப்புகளுக்கும் ஆளாகி நிராயுதபாணியாக நின்ற வாச்சாத்தி கிராம மலைவாழ் மக்களை நேரில் சந்தித்து விபரம் அறிந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியது. நீதிவிசாரணை கோரி நீதிமன்றம் சென்றது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அரூர் காவல்துறையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
1993இல் சிபிஐ விசாரணை கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய மாநிலச் செயலாளர் மறைந்த தோழர் ஏ. நல்லசிவன் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் 1995ஆம் ஆண்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு குற்றவாளிகள் 269 பேர் கைது செய்ப்பட்டனர். கடந்த 19 ஆண்டுகாலமாக நடைபெற்ற இவ்வழக்கில் இன்று தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில் இக்காலத்தில் இறந்தவர்கள் 54 பேர் போக மீதமுள்ள வனத்துறை அதிகாரிகள், காவல்துறையினர், வருவாய்த்துறையினர் உள்ளிட்டு 215 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதில் மண்டல வனப்பாதுகாவலர் ஹரிகிருஷ்ணன் முதல் குற்றவாளி எனவும், 11 பேர் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வாச்சாத்தி மலைவாழ் மக்கள் மீது பாலியல் வன்கொடுமை நிகழ்த்திய வனத்துறை அதிகாரிகள், காவல்துறையினர், வருவாய்த்துறையினர் மீதான இந்த வழக்கில் தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது. 19 ஆண்டுகாலமாக நியாயத்திற்காக விடாப்பிடியாக போராடிய வாச்சாத்தி கிராம மக்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக நின்று போராடிய தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்திற்கும் மார்க்சிஸ்ட் கட்சி தனது பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறது.
மேலும், வாச்சாத்தியில் அரசுத்துறையினரால் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளான மலை கிராம மக்களுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய இழப்பீட்டை காலதாமதப்படுத்தாமல் உடனடியாக கிடைத்திட உரிய நடவடிக்கைகள் எடுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.
இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர். ஜி. ராமகிருஷ்ணன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக