தமிழக காங்கிரஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழக காங்கிரஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 4 நவம்பர், 2014

காங்கிரஸ் கட்சி ஒரு வாசனைப்போன காலி பெருங்காய டப்பா...!

                
                                                                                                                                 
          காங்கிரஸ் கட்சியின் டெல்லி மேலிடத்திற்கும், தமிழக தலைமைக்கும் உட்பூசல் ஏற்பட சென்ற வாரம் வரை தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த ஞானதேசிகனை  விடுவித்து  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை  தமிழக கட்சித் தலைவராக டெல்லி தலைமை நியமனம் செய்தது. திண்ணை காலி ஆச்சினா தனக்குத்தான் கிடைக்குமுன்னு காத்துக்கிடந்த ஜி.கே.வாசனுக்கு இந்த நியமனம் மிகப்பெரிய ஏமாற்றத்தை உண்டாக்கியது. ஜி.கே.வாசன் பொங்கி எழுந்தார். சத்தியமூர்த்தி பவனை விட்டு வெளியேறினார். தன்னோடு வெளிவந்த நான்கு பேரை வைத்துக்கொண்டு புதுக்கட்சியை தொடங்கப்போவதாக அறிவித்துவிட்டார். 
             இதில என்ன ஒரு சிரிப்புன்னா...? ஆளில்லாத கடையில டீ ஆத்துறதே ஒரு பெரிய நகைச்சுவைன்னா. அதுல போயி டீ மாஸ்டரை மாத்துறது. பட்ஜி மாஸ்டரை மாத்துறதுன்னு  செய்தால் அது அதை விட நகைச்சுவையானது. ஏற்கனவே இந்தியாவில் காங்கிரஸ் கட்சி காலியான கூடாரம். இதுல தமிழ்நாட்டுல சொல்லவே வேண்டாம். வாசனை போன காலி பெருங்காய டப்பா. சுதந்திரம் அடைந்தபிறகு இந்திய தேசிய காங்கிரஸ் என்பது தேசபக்தி, சுதேசி, ஒற்றுமை, ஒருமைப்பாடு, மதச்சார்பின்மை, சமூகநீதி இவைகளை தூக்கி எறிந்து, பதவிக்கும்  பணத்திற்கும்  அடிமைப்பட்ட சுயநலவாதிகளின் கூடாரமாக மாறிப்போனது. அதனால் தான் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரா, மேற்குவங்கம், புதுச்சேரி  போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியானது வெவ்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு துண்டுகளாக சிதறிப்போனது. இந்திரா காந்தி, காமராஜர், மூப்பனார், சரத் பவார், அந்துலே, வாழப்பாடி ராமமூர்த்தி, திண்டிவனம் ராமமூர்த்தி, மம்தா பானர்ஜி, கருணாகரன், பங்காரப்பா, ப.சிதம்பரம், என்.ரங்கசாமி என இன்று வாசன் வரையில் நீண்டுகொண்டே போகிறது. இதற்காக தான் காந்தி அன்றே சொன்னார், சுதந்திரம் கிடைத்தவுடன் காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடுங்கள் என்று.  அந்த வேலையை தான் அன்றும்  இன்றும் இந்திரா காந்தி முதல் வாசன் வரை  செய்துகொண்டிருக்கிறார்கள். இன்று காங்கிரஸ் கட்சி என்பது வாசனைப்போன காலி பெருங்காய டப்பாவாக போய்விட்டது. இவர்களின் இதுபோன்ற வேலைகள் தேசபக்தியும், மதச்சார்பின்மையும், சுதேசியமும், சமூகநீதியும் துளியும் இல்லாத எதிர்க்குத்தான் இலாபம் தரும் என்பதை இவர்கள் நினைத்துப்பார்க்கவில்லை என்பது தான் உண்மை.