சனி, 31 ஜனவரி, 2015

தேனி நியுட்ரினோ நோக்குக்கூடம் - வதந்திகளை நம்பாதீர்கள்...!

 
 

                      தேவாரத்தில் தேனி நியுட்ரினோ நோக்குக்கூடம் பற்றிய அறிவியல் கூட்டத்தில் இந்திய விஞ்ஞானி திரு.த.வி.வெங்கடேஸ்வரன் அவர்கள் அளித்த பதில்கள் கீழே தரப்பட்டுள்ளன. இதை முழுமையாக படிப்பதன் மூலம் அறியாமையினாலும், மேதாவித்தனத்தாலும் குழம்பிப்போனவர்களுக்கும், மற்றவர்களை குழப்புபவர்களுக்கும் ஒரு தெளிவு கிடைக்கும்.                                                                                                                      

கேள்வி : நியூட்ரினோ என்பது என்ன...?                  

பதில் :     அணுவின் அடிப்படைத் துகளான புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் போல ஓர் அடிப்படைத் துகள் நியூட்ரினோ ஆகும். பல கோடி கோடி நியூட்ரினோக்கள் நொடிக்கு நொடி நம்மை சுற்றிப் பாய்ந்து ஊடுருவிச் சென்று கொண்டே உள்ளன. இவை எந்தப் பொருளையும் ஊடுருவிச் செல்லக்கூடியவை. விண்ணிலிருந்தும் காலுக்கு அடியில் பூமியிலிருந்தும் வெளிப்படும் நியூட்ரினோ துகள்கள் கோடி கோடியாக எந்நேரமும் நம்மைச் சுற்றிப் பாய்ந்து கொண்டே உள்ளன. ஆனாலும் இந்தத் துகளை இனம் காண்பது எளிதல்ல. இப்படி ஓர் அடிப்படைத்துகள் இருக்கிறது என்ற யூகம் தர்க்க ரீதியாக 1930களில் வெளிப்படுத்தப்பட்டாலும் தற்காலத்தில்தான் இந்தத் துகள் குறித்து நுணுக்கமாக ஆராய கருவிகள் படைக்க முடிந்துள்ளது. இன்றும்கூட இந்தத் துகள் குறித்த அறிவை விட அறியாமைதான் அதிகம்.

கேள்வி : இந்தியாவில் நியூட்ரினோ ஆய்வு என்பது என்ன....?         

பதில் :       ஜப்பான், கனடா, இத்தாலி மற்றும் பூமியின் தென்துருவம் ஆகிய இடங்களில் தற்போது நியூட்ரினோ ஆய்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் நடத்தப்படும் நியூட்ரினோ ஆய்வுக்கு ஐஎன்ஓ (India-based Neutrino Observatory - INO) என்று பெயரிடப்பட்டுள்ளது. நியூட்ரினோ துகளைக் குறித்த நுண் ஆய்வு தான் தேனியில் அமையவிருக்கிற இந்திய நியூட்ரினோ நோக்குக்கூடத்தின் பணி. இரும்பின் வழியே ஊடுருவும் நியூட்ரினோக்களை சென்சார் கருவிகள் மூலம் உணர்ந்து, ஆய்வு செய்யப் போகிறர்கள். இந்தப் புதிய முறையிலான ஆய்வுக் கூடம் உலகிலேயே இந்தியாவில்தான் முதன்முதலாக அமைக்கப்படுகிறது.
கேள்வி : இதை ஏன் சுரங்கம் அமைத்து ஆராய்ச்சி செய்ய வேண்டும்...?        

பதில் : 
நியூட்ரினோவை தனியாக ஆய்வு செய்ய வேண்டுமானால், அதனுடன் வேறு எந்த துகளும் உணர்விக் கருவியில் படக்கூடாது. சூரியன் மற்றும் அண்டவெளியிலிருந்து வரும் நியூட்ரினோக்கள் தனியாக வருவதில்லை. காஸ்மிக் கதிர் போன்ற பல்வேறு துகள்கள் இணைந்து கலந்துதான் வருகின்றன. மலையைக் குடைந்து அதில் நியூட்ரினோவை உணரும் ஆய்வுக் கருவியை வைக்கும் போது, அந்த ஆய்வுக்கருவியில் நியூட்ரினோ மட்டும் வந்து விழும். மற்ற பொருட்களை எல்லாம் மலை வடிகட்டி விடும். காஸ்மிக் கதிர்களின் பாதிப்பு இல்லாமல் நியூட்ரினோ துகள்களை மட்டும் ஆய்வு செய்ய வேண்டுமானால், எல்லா திசைகளிலிருந்தும் குறைந்தது 1,000 மீட்டர் கற்களால் சூழப்பட்ட நிலையில், மலையின் உள்ளே அமைந்த குகைக்குள் மட்டுமே ஆய்வு நடத்த முடியும்.

கேள்வி : இதற்கு ஏன் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள தேனியைத் தேர்வு செய்தார்கள்...? இந்தியாவின் வேறு மலைகளை ஏன் தேர்வு செய்யவில்லை....?           
        
பதில் :            நியூட்ரினோவை மட்டும் ஆய்வு செய்வதற்கு வேறு துகள்களை வடிகட்ட காலத்தால் மிகப்பழைய மலையாக இருக்க வேண்டும். இமயமலை உயரமானதுதான். ஆனால் கடினமானது அல்ல. பழைய மலைகள்தான் கடினமாக இருக்கும். இமயமலைப் பகுதி பெரும்பாலும் படிமப் பாறைகளால் ஆனது. சிறு சிறு பாறைகளால் ஆன தொகுப்பாக அந்த மலைப் பகுதி உள்ளதால், அங்குள்ள பாறைகளில் உறுதித்தன்மை மிகவும் குறைவு. மற்ற மாநிலங்களிலும் பாறைகளின் தன்மை இந்த ஆய்வுக்கு ஏற்றதாக இல்லை. ஆனால், தேனி மாவட்டத்தின் மேற்கு போடி மலையிலுள்ள பாறைகள் மிகவும் கடினமான சார்னோக்கைட் பாறைகளால் ஆனவை. அதுமட்டுமல்ல காடுகள் அடர்ந்த பகுதி என்றால் மரங்களை வெட்ட வேண்டிவரும். விவசாய நிலம் இருக்கும் பகுதி என்றால் விவசாய நிலத்தை கையகப்படுத்த வேண்டி வரும். அவ்வாறு விவசாய நிலமற்ற, மரங்கள் அடர்ந்து இல்லாத இடமாக தேடித் தேடித் தான் இந்த மலை இறுதிசெய்யப்பட்டது. நேரடியாக இந்தக் கருவியால் மனிதன், விலங்கு, பறவை எதற்கும் பாதிப்பு இல்லை. விவசாயம் போன்ற பயன்பாட்டில் உள்ள நிலத்தை கையகப்படுத்தக் கூடாது, மரங்கள் செறிவாக உள்ள பகுதிகள் தவிர்க்கப்படவேண்டும் என கவனத்தில் கொள்ளப்பட்டது. எனவே இறுதியில் தேனி மாவட்டத்தில் பயனற்ற தரிசுப் பகுதியாக உள்ள குறிப்பிட்ட மலைப் பகுதிதான் பொருத்தமானது எனத் தேர்வு செய்யப்பட்டது.

கேள்வி : கோலார் தங்கச்சுரங்கத்தில் நடந்த ஆய்வு குறித்து....?           
        
பதில் :      1970களில் கோலார் தங்கச்சுரங்கத்தில் காஸ்மிக் கதிர்கள் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டன. அங்கு காஸ்மிக் கதிர்களை உணரும் கருவிதான் வைக்கப்பட்டது. காஸ்மிக் கதிர்கள் குறித்த உலக அறிவுத் தொகுப்பில் இந்த ஆய்வுக்கு ஒரு பெரும் பங்கு உண்டு. கோலார் தங்கச்சுரங்கம் சிதிலமடைந்து வெள்ளம் புகுந்த பின் அந்த ஆய்வுக் கூடம் மூடப்பட்டது. இன்று காஸ்மிக் கதிர் ஆராய்ச்சி விண்வெளியிலிருந்து செயல்படுகிறது. எனவே சுரங்கம் தேவையில்லை.

கேள்வி : நியூட்ரினோ திட்டத்தால் நீர்வளம் குறைந்து விவசாயம் பாதிக்குமா....? பாசனப் பற்றாக்குறை ஏற்படுமா....?            
                
பதில் :    இந்தத் திட்டத்திற்கு நீர் அவசியம்தான். அங்கு ஏற்படுத்தப்போகும் அலுவலர் குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு நீர் தேவை. மின்காந்தத்தை குளிர்விக்க நீர் தேவை. ஆனால் இந்தத் திட்டத்திற்கு தேவைப்படும் நீர், முன்னூறு குடும்பங்களுக்கு குடிக்க, குளிக்க, சமைக்கத் தேவையான நீரின் அளவு மட்டுமே. இன்று இருக்கும் விவசாய நீருக்கு இந்தத் திட்டத்தால் எந்த பாதிப்பும் இருக்காது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கேள்வி : வெடிபொருள் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்ற கருத்து நிலவுகிறதே...?

பதில் :       இந்த ஆய்வுக் காலம் முழுவதும் வெடிபொருள்கள் பயன்படுத்தப்போவது இல்லை. இரண்டு கிலோமீட்டர் நீளத்திற்கு மலையில் பக்கவாட்டில் சுரங்கப்பாதை அமைக்க மட்டுமே பயன்படுத்தப்படும். கல் குவாரிகளில் செய்வது போல வெடி வைத்து பாறைகளை வெடித்துத் தகர்ப்பது அல்ல. சுரங்கம் அமைப்பதுதான் இலக்கு. எனவே controlled explosions என்கிற முறையில் வெடிப்பு ஒரு சில நொடிகள் மட்டுமே இருக்கும். சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் அதிர்வு உணர்வுகூட உணர முடியாது. ஆகவே சுரங்கம் தோண்டுவதால் சூழல் பாதிப்பு எதுவும் இருக்காது.

கேள்வி : குகையை உருவாக்க வெடி வைப்பதால் அணைகளுக்கு பாதிப்பு உண்டா....?                

பதில் : சுரங்கம் தோண்டும்போது தினமும் இரண்டு முறை மட்டுமே வெடிபொருள் வெடிக்கப்படும். இதனால் ஏற்படும் இரைச்சல் மற்றும் அதிர்வுகள் வெளிப்பகுதியில் உணராத வகையில் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தடுக்கப்படும். இந்த அதிர்வுகளால் அணைகளுக்கு பாதிப்பு ஏற்படாது. சென்னையிலும் தில்லியிலும் நிலத்தடி மெட்ரோ ரயிலுக்காக தினமும் சுரங்கம் தோண்டிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

கேள்வி : கதிர் வீச்சு ஆபத்து இருக்கிறது என்று சொல்கிறார்களே....?       

பதில் : இது அறியாமை. உண்மையில் இங்கு எந்த உற்பத்தியும் நடக்கப்போவதில்லை. நியூட்ரினோவை பொறுத்தவரையில் கதிர்வீச்சு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் நியூட்ரினோ என்பது ஒரு அணுத்துகள் அல்ல, அடிப்படைத்துகள். இது எதிர்வினையாற்றாத ஒரு அடிப்படைத்துகள். எனவே இதனால் பாதிப்பு எதுவும் இல்லை. மேலும் இந்த நோக்குக் கூடத்தில் இயல்பாக பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் நியூட்ரினோவைப் பற்றிய ஆய்வுதான் நடக்கப் போகிறது. அந்த ஆய்வால் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. ஆய்வு நடந்தாலும் நடக்காவிட்டாலும் ட்ரில்லியன் ட்ரில்லியன் நியூட்ரினோக்கள் பூமியில் விழுந்து கொண்டுதானே இருக்கின்றன? இன்று நேற்றல்ல, பூமி பிறந்தது முதல் இவ்வாறு நியூட்ரினோ அடைமழை பெய்த வண்ணம்தான் உள்ளது.

கேள்வி : சுரங்கம் தோண்டுவதால் வெளியேறும் கழிவுகளை அந்தப்பகுதியில் கொட்டும்போது சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படாதா....?

பதில் :  சுரங்கத்துக்காக வெட்டியெடுக்கப்படும் பாறைகளில் 90 சதவீதம் முழுப் பாறைகளாகக் கிடைக்கும். அவை அதிக தரமும், மதிப்பும் மிக்க கிரானைட் பாறைகளாகும். அந்த கிரானைட் பாறைகள் முழுவதும் தமிழக அரசுக்குச் சொந்தமானது என்பதால், அவற்றை வெளிச்சந்தையில் அரசு விற்பனை செய்யும். இதனால் அரசுக்கு பெரும் வருவாய் கிடைக்கும். மீதமுள்ள 10 சதவீதம் மட்டுமே தூளாகக் கிடைக்கும். இந்தத் தூளில் 20 சதவிகிதம் கட்டுமானப் பணிகளில் பயனாகும். மீதமுள்ள கழிவு மட்டுமே நான்குபக்க சுவர் எழுப்பி அதற்குள் கொட்டி வைக்கப்படும். எனவே, பாறைகளை உடைப்பதால் தூசு மண்டலம் ஏற்படும் என்பதற்கோ, அண்டைப் பகுதிகள் பாதிக்கப்படவோ வாய்ப்பு இல்லை.


கேள்வி : ஏன் இரசியமாக குகைக்குள் ஆய்வு...? வெளிப்படையாக நடத்தவேண்டியதுதானே....? இந்த கருவியில் எதோ ஆபத்து இருப்பதால் தானே குகைக்குள் வைக்கப்படுகிறது...?                   

பதில் :  குகை என்றதுமே இது ரகசிய ஆய்வு என்று சிலர் கற்பனை செய்ய துவங்கிவிட்டனர். உள்ளபடியே இந்த ஆய்வுத் திட்டம், நியூட்ரினோ என்ற அடிப்படையான துகளின் குணங்கள் குறித்தான ஆராய்ச்சியே தவிர, அணுசக்தி ஆராய்ச்சியோ, கதிரியக்கம், ராணுவம், பாதுகாப்புத் துறை தொடர்பான வேறு எந்த ஆராய்ச்சியோ இல்லை. அணு உலைக் கழிவுகளை சேகரித்து வைக்கும் இடமாக இந்த ஆய்வுக் கூடம் பயன்படுத்தப்படும் என்பதும் வதந்தியே. இந்தத் திட்டத்தால் மக்களுக்கு கதிரியக்க பாதிப்புகள் வரும் என்பதும் வதந்தியே. இயல்பாக, பூமியின் மேற்பரப்பில் துகள்களின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால், அந்தச் சூழலில் நியூட்ரினோ துகள்களை ஆராய முடியாது. எனவேதான், ஏனைய துகள்களை வடிகட்டி அவற்றின் தாக்கம் இல்லாத வகையில் மலையைக் குடைந்து ஆய்வுக் கூடம் அமைக்கப்படுகிறது.

கேள்வி : இந்தக் கருவி அல்லது ஆய்வுக்கூடம் கதிர்களை வெளிப்படுத்துமா? அந்தபகுதியில் வெப்பத்தைக் கூட்டுமா....?       

பதில் :  Neutrino detector – அதாவது ‘நியூட்ரினோ உணர் கருவி’ என்பதுதான் இதன் பெயர். மழையை அளக்கும் மழைமானி வைப்பதால் மழை வந்து விடாது, வெப்ப மானி இருப்பதால் வெப்பம் ஏற்பட்டு விடாது அல்லவா? இந்தக் கருவி வெப்ப மானி, மழை மானி போல ஒரு உணர் கருவிதான். இதனால் எந்தவிதமான கதிர்வீச்சும் ஏற்படாது. புகை, கழிவு நீர் போன்ற சூழல் ஆபத்தும் இல்லை. வெப்பமும் ஏற்படாது. இரண்டு கிலோமீட்டர் உள்ளே சுரங்கத்தில் வைக்கப்படும் இந்தக் கருவியால் யாருக்கும் உயிர், பொருள், வாழ்வு, சூழல் ஆபத்து முற்றிலும் கிடையாது.

கேள்வி  : வறுமை பஞ்சம் பசி, போன்ற பல பிரச்சனைகள் உள்ளபோது இவ்வளவு செலவு செய்து இந்த ஆய்வு தேவைதானா....?              

பதில் : பசி, பட்டினி, வறுமை, போதிய மருத்துவ வசதியின்மை, கல்வியின்மை எனப் பல பிரச்சினைகளை இந்தியா சந்தித்துக் கொண்டிருக்கிறது. இவையெல்லாம் உள்ளபடியே பிரச்சினைகள்தாம். இந்த சமூக அவலங்களை களைவது நமது கடமைதான். ஆனால், இவை எல்லாவற்றையும் தீர்த்தபிறகுதான் நியூட்ரினோ போன்ற அடிப்படை ஆராய்ச்சி செய்யலாம் என்பதுதான் ஏற்க முடியாத வாதமாக இருக்கிறது. அல்லது நியூட்ரினோ ஆய்வு போன்ற “அத்தியாவசியமற்ற” ஆய்வுகளுக்கு பணம் செலவிடப்படுவதால்தான் வளர்ச்சித் திட்டங்களுக்கு காசு இல்லை என்பதும் உண்மைக்கு புறம்பான கூற்றுகள். கடந்த நிதியாண்டில் மத்திய அரசின் மொத்த செலவு 17,94,892 கோடி ரூபாய்கள். இதில் வெறும் 1,500 கோடி ருபாய் என்பது வெறும் தூசு. எனவே இந்தச் செலவால்தான் சமூக வளர்சிக்கு நிதியில்லாமல் போயிற்று என்பதில்லை. எனவே இந்த திட்டச் செலவை வறுமை - ஏழ்மை - வளர்ச்சியின்மைக்குக் காரணமாகக் காட்டுவது அறீவீனம். மொத்த பட்ஜெட்டில் பெரும் தொகை இது போன்ற திட்டங்களுக்குச் செல்கிறது என்றால் நாம் கேள்வி கேட்பது சரியாக இருக்கலாம். மொத்தச் செலவில் எல்லா விதமான அறிவியல் ஆய்வுக்கும் – மருத்துவம், பொறியியல், கணிதவியல், அடிப்படை அறிவியல், தொழில்நுட்பம் – சேர்த்து நாம் செலவழிக்கும் தொகை GDPயில் ஒருசதவிகிதம் கூட இல்லை! அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுக்கு இந்தியா செலவிடும் தொகை மிகச் சொற்பமே.
          குறிப்பிட்ட குளிர்பானம் மட்டும் ஆண்டுதோறும் ஈட்டும் வருவாய் 2,21,000 கோடி ரூபாய். இந்தியாவில் ஆண்டுதோறும் திரைப்படத் துறையின் வருவாய் 15,000 கோடி. தமிழகத்தில் மட்டும் ஆண்டுதோறும் டாஸ்மாக் வருவாய் 23,401 கோடி.   சிகெரட் பீடி போன்ற புகையிலைப் பொருள்களின் விற்பனையில் கிடைக்கும் கலால் வரி மட்டும் 10,271 கோடி.   அவ்வளவு ஏன், நமது நாட்டில் வெடிக்கப்படும் தீபாவளி பட்டாசு 3,300 கோடி.
           எது வீண் செலவு? அறிவைப் பெருக்குவது செலவா, இல்லை முதலீடா? இந்த நிலையில், ஆய்வுகளுக்குச் செய்வது வீண் செலவு என்பது போலவும், இதனால்தான் வளர்ச்சி ஏற்படவில்லை, ஏழ்மை ஒழியவில்லை என்பது போலவும் வாதம் செய்வது வியப்பாகத்தான் இருக்கிறது. தகவல் தெரியாத சாதாரண மக்கள், ஏழை விவசாயிகள், வீட்டுப் பெண்கள் ஆயிரத்து ஐநூறு கோடி என்றதும் ஆவென வாயைப் பிளந்து ஆச்சரியத்துடன் இவ்வளவு செலவா என கருதுவதில் வியப்பில்லை. ஆனால் இதையே சில அரசியல் அமைப்புகளும் சமூக நிறுவனங்களும் வாதமாக முன்வைக்கும் போது வியக்கத்தான் தோன்றுகிறது.

கேள்வி : இத்திட்டத்தால் என்ன லாபம்? என்ன பயன்....?         

பதில் :    இந்த ஆய்வுத் திட்டம் அடிப்படை ஆய்வு. அடிப்படை ஆய்வு வழி உடனடி பொருளாயத லாபம் எதுவும் இராது. ஆயினும் அடிப்படை அறிவியல் ஆய்வு இல்லாமல் பயன்பாட்டு அறிவியல் – தொழில்நுட்பம் சாத்தியம் இல்லை. இன்று அடிப்படை ஆய்வு – நாளை பயன்பாடு என்பதே அறிவியல் வரலாறு.
             நேரடி உடனடி லாபம் எதுவும் இத்திட்டத்தால் விளையாது என்றாலும் மறைமுகப் பயன்கள் உண்டு. இத்திட்டத்திற்கு என உலகின் மிகப்பெரிய மின்காந்தம் உருவாக்கப்படும். இதற்கு வேண்டிய தொழில்நுட்பம் மற்றும் பொருட்கள் உட்பட எல்லா கருவிகளும் இந்தியாவில் தயாரிக்க இருக்கிறார்கள். இந்தக் கருவிகளை, பொருட்களை இந்தியக் கம்பெனிகள் உற்பத்தி செய்யும்போது அதன் வழி இந்நிறுவனங்களின் தொழில்திறன் கூடும். இவ்வாறு சில மறைமுகப் பயன்கள் உள்ளன. அதுமட்டுமல்ல. இந்தக் கருவி வேலைசெய்ய பல சென்சார்கள் – தரவு பதியும் கருவிகள், கணினி அமைப்புகள் போன்ற பல மின்னணுவியல் கருவிகள் தேவை. இவை அனைத்தும் இந்தியாவில் செய்யப்படுவதால் இந்தத் துறை மேலும் வளரும். சுமார் 20 ஆண்டுகள் நூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மாணவர்கள் முதலானோர் நோடிப் பயன்பெறுவர். இதன் வழியாக நமது நாட்டில் அறிவியல் தொழில்நுட்ப மனித வள மேம்பாடு காண முடியும்.

கேள்வி  : இந்தத் திட்டத்தால் வேலை வாய்ப்பு உள்ளதா....?            
        
பதில்   :           இத்திட்டத்தின் விளைவாக வெகுவான வேலைவாய்ப்பு எதுவுமிராது. குறிப்பாக, பகுதி வாழ் மக்களுக்கு வேலைவாய்ப்புத் தரவல்ல திட்டம் அல்ல. துப்புரவுப் பணி, காவல் பணி, ஓட்டுநர் பணி, கட்டுமானப்பணி போன்ற ஒருசில பணிகளில் மட்டுமே வாய்ப்பு உள்ளது. இத்திட்டம் ஆய்வுநோக்கம் கொண்டது, வேலை வாய்ப்பு நோக்கம் கொண்டதல்ல. வேலைவாய்ப்பு இல்லை என்பதற்காக இத்திட்டம் எதிர்க்கப்பட்டால் எல்லாவித ஆய்வுத் திட்டங்களையும் கிடப்பில்தான் போட வேண்டும். எந்த அறிவியல் அடிப்படை ஆய்வையும் செய்ய இயலாது போகும்.

கேள்வி : ஆழ்துளைக் கிணறை அதிக ஆழமாகப் போடுவதால் நிலத்தடி நீர்வளத்திற்கு ஆபத்து உண்டா....?               

பதில் :      இந்தத் திட்டத்தில் ஆழ்துளைக் கிணறு போன்றவை இடுவதாக திட்டமே இல்லை. அப்படி அங்கு ஏதாவது ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்பட்டு வந்தால் அதற்கும் இந்தத் திட்டத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

கேள்வி : கிராம மக்கள் வெளியேற்றப்படுவார்களா? ஆடு மாடுகள் மேய்ச்சல் செய்ய தடை உண்டா....?                 

பதில் :   இந்தத் திட்டத்திற்கான இடத்தேர்வு செய்யும்போதே அடர்த்தியான காடுகளை வெட்டக் கூடாது, விவசாய-கிராம நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என கருதித்தான் இடத்தேர்வு செய்யப்பட்டது. எனவேதான் எந்த விவசாய நிலமும் குடியிருப்பும் அடர்ந்த காடும் இல்லாத பொட்டிபுரம் மலையும் அதில் உள்ள 66 ஏக்கர் புறம்போக்குத் தரிசு நிலமும் தேர்வு செய்யப்பட்டது. எனவே யாரையும் அப்புறப்படுத்த வேண்டியதே இல்லை. இந்த ஆய்வுக் கூடம், வெறும் அளவை மானி கொண்டது, ஆகவே ஆபத்து அற்றது. எனவே யாரும் வெளியேற்றப்பட மாட்டார்கள்.

கேள்வி : நியூட்ரினோ ஆய்வுகள் உலகின் பல பகுதிகளில் தோல்வியில் முடிந்து மூடப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் துவங்கப்படுவது ஏன்....?         
                    
பதில் :      இது மிகவும் தவறான செய்தி. ஆய்வு தோல்வி என எந்த நியூட்ரினோ ஆய்வும் இதுவரை மூடப்படவில்லை. சீனா, தென் கொரியா போன்ற நாடுகளில் புதிதாக மேலும் ஆய்வு மையங்கள் உருவாக இருக்கின்றன.

கேள்வி : இத்தாலியில் க்ரான் சாஸ்ஸோ மையத்தில் ரசாயனக் கசிவு ஏற்பட்டு மூடப்பட்டதாகச் சொல்கிறார்களே....?                 

பதில் : க்ரான் சாஸ்ஸோ மையத்தில் ஒருகாலத்தில் இராசயனங்கள் பயன்படுத்தி ஆய்வு செய்யப்பட்டது. ஊழியர் ஒருவரின் தவறால் 50 லிட்டர் ரசாயனம் கொட்டிவிட்டது. ஐரோப்பிய நாடுகளில் சுற்றுச்சூழல் விதிகள் மிகக் கடுமையானவை. உடனே இந்த ஆய்வு நிறுத்தப்பட்டது. இப்போதைய ஆய்வுகளில் இரசாயனங்கள் ஏதும் இல்லை. மின்காந்தம் பயன்படுத்தி ஆய்வு செய்யப்படுகிறது. தவிர, அதே க்ரான் சாஸ்ஸோ மையம் மீண்டும் செயல்பட்டு வருகிறது, கடந்த சில ஆண்டுகளில் நியூட்ரினோ துகள்களை தொடர்ந்து கண்டறிந்திருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ளலாம்.
தேனி.தே.சுந்தர்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
அழைக்க: 94880 11128

வெள்ளி, 23 ஜனவரி, 2015

ஒபாமாவுக்கு இன்சூரன்ஸை படையல் வைக்கும் மோடி...!


 இன்று தீக்கதிர் நாளிதழில் பிரசுரிக்கப்பட்ட நான் எழுதிய கட்டுரை :-        

 இன்சூரன்ஸ் அவசர சட்டம் - அன்றும் இன்றும்           
           
                   1956 - ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ஆம் தேதி வியாழக்கிழமை மாலை - புதுடெல்லி அகில இந்திய வானொலியில் ஓர்  அறிவிப்பு வந்தவண்ணம் இருக்கிறது. ''இன்னும் சற்று நேரத்தில் நமது நாட்டின் நிதியமைச்சர் திரு.சி.டி.தேஷ்முக் வானொலியின் மூலம் மக்களிடம் உரையாற்றப்போகிறார். அவரது உரையை நாட்டின் அனைத்து வானொலி நிலையங்களும் அஞ்சல் செய்யும்'' என்ற அறிவிப்பு மட்டும் அவ்வப்போது  இடைவெளி விட்டு அறிவிக்கப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் எதைப்பற்றிப் பேசப்போகிறார் என்ற தகவல் அந்த அகில இந்திய வானொலி  நிலைய இயக்குனருக்குக்கூட தெரிவிக்கப்படவில்லை. இன்னும் சொல்லவேண்டுமென்றால், நேருவும்  தன் அமைச்சரவையில் உள்ள மற்ற அமைச்சர்களுக்கே கூட தேஷ்முக் எதைப்பற்றி பேசப்போகிறார் என்ற தகவலை  தெரிவிக்கவில்லை. ஆனால்  அறிவிப்பு மட்டும் வந்துகொண்டே இருக்கிறது. மக்களும் என்னவென்று புரியாமல் ஆவலாய் காத்திருக்கிறார்கள்.
              இரவு சரியாக 8.30 மணி - மத்திய நிதியமைச்சர் வானொலியில் பேசினார். மக்கள் எல்லோரது காதுகளும் வானொலியில் பொருந்தியிருக்கிறது. பேசத்தொடங்கிய நிதியமைச்சர் வானொலியை கேட்டுக்கொண்டிருந்த இந்திய மக்களின் காதுகளில் தேனைப் பாய்ச்சினார். ''இந்த நிமிடம் முதல் தனியார்வசமிருக்கின்ற இன்சூரன்ஸ் துறை அவசர சட்டத்தின் மூலம் தேசவுடைமை செய்யப்படுகிறது'' என்ற வரலாற்று சிறப்புமிக்க செய்தியை அறிவித்தார். அந்த நேரத்தை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் தங்களது கணக்கு வழக்குகளை முடித்து அலுவலகங்களை மூடும் வரையில் நேருவும், தேஷ்முக்கும் காத்திருந்தார்கள். அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டதை உறுதி செய்யப்பட்டபிறகே நிதியமைச்சர் வானொலியில் அறிவித்தார். அதற்காகவே அவர்கள் இரவு 8.30 மணி வரை  காத்திருக்கவேண்டியிருந்தது. நேரு இந்த அவசரசட்டத்தை பற்றிய அறிவிப்பை வெளியிடுவதில் அவசரம் காட்டாமல், மிகவும் புத்திசாலித்தனத்துடனும் நிதானத்துடனும் செயல்பட்டார். அனைத்து தனியார் இன்சூரன்ஸ் அலுவலகங்களும் தங்களது  கணக்கு வழக்குகளை முடித்துவிட்டு அலுவலகத்தை மூடியபிறகு, அவசர சட்டத்தின் அறிவிப்பு வானொலியில் வெளியிடப்பட்டது. அப்படி அறிவிப்பு வெளியானவுடன், அதுவரையில் இரகசியமாக தயார்நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மத்திய காவல்துறையினர் பூட்டப்பட்ட தனியார் இன்சூரன்ஸ் நிறுவன அலுவலகங்களை கைப்பற்றி சீல் வைத்துவிட்டார்கள். அதனால் அந்த நிறுவனங்கள் அதுவரை சேர்த்துவைத்திருந்த  சொத்துகளும், மக்களின் நிதியும் சேதாரம் இல்லாமல் காப்பாற்றப்பட்டன.  இந்த விஷயத்தில் நேரு மற்றும் தேஷ்முக் இருவரும் சேர்ந்து செயல்படுத்திய தந்திரம் பாராட்டுதற்குரியது.

ஏன் அந்த அவசர சட்டம்...?              

                 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி அன்று தேசம் சுதந்திரம் அடைந்தபிறகு சுதந்திர இந்தியாவில் 245 தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் டாட்டா, பிர்லா, கோயங்கா போன்ற அன்றைய பெருமுதலாளிகளால் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டன. இதில் பெரும்பாலான தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு  தரவேண்டிய உரிமங்களை சரியான முறையில் தருவதில்லை என்பது மட்டுமல்ல. குவிந்திருக்கும்  மக்களின்  சேமிப்பு நிதியை  ஒரு நாள் இரவோடு இரவாக சுருட்டிக்கொண்டு கம்பெனியையே  காலி செய்து ஊரைவிட்டே ஓடிவிடுவார்கள். மக்களை ஏமாற்றுவதும், அவர்கள் பணத்தை கொள்ளையடிப்பதும் தான் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி முதலாளிகளின் வேலையாக இருந்தது. அப்போது தான் 1907-ஆம் ஆண்டு அன்றைய கல்கத்தாவில் ரவீந்தரநாத் தாகூரினால் தொடங்கப்பட்ட ஹிந்துஸ்தான் கோ-ஆபரேடிவ் லைப் அஷ்யூரன்ஸ் சொசைட்டி என்ற இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை செய்துவந்த ஊழியர்கள் தோழர்.சரோஜ் சவுத்ரி போன்ற தலைவர்களின் தலைமையில் மற்ற இன்சூரன்ஸ் கம்பெனிகளில் பணிபுரிந்துவந்த ஊழியர்களையும் இணைத்து, 1951-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதியன்று அன்றைய பம்பாயில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் என்ற தொழிற்சங்கத்தை தொடங்கினார்கள். ஊதிய உயர்வு வேண்டும், போனஸ் வேண்டும், பதவி உயர்வு வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்து அந்த தொழிற்சங்கத்தை தொடங்கவில்லை. ''இன்றைக்கு நாட்டிலிருக்கும் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி முதலாளிகள் தனது வாடிக்கையாளர்களுக்கு சரியான முறையில் உரிமங்களை தருவதில்லை. மக்களின் சேமிப்பு நிதியை கொள்ளையடித்து சென்றுவிடுகிறார்கள். அதனால் தனியார்வசமிருக்கும் இன்சூரன்ஸ் துறை தேசவுடைமை செய்யப்படவேண்டும்'' என்றக் கோரிக்கையுடன் தான் அன்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தை தொடங்கினார்கள்.
              அதேப்போல் பாராளுமன்றத்திலும் அன்றைய ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியும் இதே கருத்தை வலியுறுத்தி இன்சூரன்ஸ் துறை தேசவுடைமை செய்யப்படவேண்டும் என்று போராடினார்கள். அதே நேரத்தில் இன்னொரு பக்கம் Dr.அம்பேத்கர் அவர்களும் இன்சூரன்ஸ் துறை தேசவுடைமையை வற்புறுத்தினார். அன்றைய பிரதமர் நேருவும் முதலாளிகளின் பக்கம் தான் என்பதால் இந்த கோரிக்கைகளையோ, போராட்டங்களையோ அவர் கருத்தில் கொள்ளவில்லை. ஆனால் 1955-ஆம் ஆண்டு இறுதி வாக்கில் நேரு இன்சூரன்ஸ் துறை தேசவுடைமைப் பற்றி யோசித்தார். ஆனால் தனியார் முதலாளிகள் மக்களின் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். வாடிக்கையாளர்களை ஏமாற்றுகிறார்கள் என்றெல்லாம் அவர் சிந்திக்கவில்லை. மக்களுக்கு இன்சூரன்ஸ் சேமிப்பின் மீது ஏராளமான நம்பிக்கை இருக்கிறது. 245 தனியார் கம்பெனிகளிலும் நிறைய பேர் சேருகிறார்கள். அனைத்து கம்பெனிகளிலும் மக்களின் சேமிப்பு நிதி நிறைய குவிகிறது. இந்த 245 கம்பெனிகளும் ஒரே அரசுத்துறை நிறுவனமாக இருந்தால் குவியும் மக்களின் சேமிப்பு நிதியை அரசின் நலத்திட்டப் பணிகளுக்கு பயன்படுத்தலாமே என்ற நோக்கத்தோடு தான் நேரு தேசவுடைமையை  பற்றி யோசித்தார். கிராமப்புற மக்களுக்கும் இன்சூரன்ஸ் -இன் பலன்களை கொண்டு சேர்க்கலாம் என்பதும் தேசவுடைமைக்கான இன்னொரு காரணமாக நேரு யோசித்தார்.

வரலாற்று சிறப்புமிக்க நாள்                

               ஆனால் நேரு தனது யோசனையை தனது கேபினெட் கூட்டத்தை கூட்டி தெரிவிக்கவில்லை. காரணம் தனது மந்திரிகளும் முதலாளிகளின் பக்கம் தான் நிற்பார்கள். அதனால் தனது இந்த முயற்சியை தடுத்து நிறுத்திவிடுவார்கள் என்ற அச்சத்தில், அவரது நிதியமைச்சர் திரு.சி.டி.தேஷ்முக் அவர்களிடம் மட்டுமே தெரிவித்தார். திரு.தேஷ்முக் அவர்களும் இன்றைய நிதியமைச்சர்களை போலல்லாமல், தேசத்தின் மீதும், மக்களின் மீதும் அக்கறையுள்ள நிதியமைச்சர் என்பதால் நேருவின் யோசனையை வரவேற்றார். ஏற்றுக்கொண்டார். பிறகு தான் நேரு மற்றும் தேஷ்முக் இருவர் மட்டும் இந்த யோசனையை தங்களுக்குள் இரகசியமாக வைத்திருந்து,  முதலில் மக்களிடம் தெரிவித்துவிடவேண்டும். அப்போது தான் இந்த முயற்சியை யாராலும் தடுக்கமுடியாது என்று இருவருமாக முடிவெடுத்தார்கள். அந்த நாள் தான் 1956 - ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 - ஆம் தேதி என்பதை மக்களின் மீது அக்கறையுள்ள யாராலும் மறக்கமுடியாத நாள். ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள். இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளில் தான் தனியார்வசமிருந்த இன்சூரன்ஸ் துறை ''அவசர சட்டத்தின்'' மூலம் தேசவுடைமை செய்யப்பட்டது. அதன் பிறகு பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு அனைவரின் வரவேற்புடனும், பாராட்டுகளுடனும் நிறைவேற்றப்பட்டு, வெறும் ரூ.5 கோடி மத்திய அரசின் முதலீட்டுடன் ''இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம்'' அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி தொடங்கப்பட்டு, கடந்த 58 ஆண்டுகளாக  மக்கள் நலப்பணிகளையும், தேச நலப்பணிகளையும் மிகச் சிறப்பாக மக்களின் பாராட்டுகளோடும், திருப்தியோடும் செய்து ஒரு அரசு நிறுவனமாக திகழ்ந்துவருகிறது. அதன் ஊழியர்களும் எந்த நோக்கத்தோடு சங்கம் அமைத்துப் போராடினார்களோ அதில் சிதைவில்லாமல் அர்ப்பணிப்புணர்வுடன் சேவை கலந்து  பணியாற்றி வருகிறார்கள்.
              வெறும் 5 கோடியில் உருவான எல்.ஐ.சி இன்று ரூ.18,00,000 கோடி அளவிற்கு மக்கள் சொத்துகளை கோபுரமாய் குவித்திருக்கிறது. வங்கியில் ஆயுள் நிதியாக ரூ.16,00,000 கோடி அளவிற்கு சேமித்து வைத்திருக்கிறது. சென்ற ஆண்டு மட்டும் எல்.ஐ.சி மத்திய அரசிற்கு இலாபத்தில் பங்காக (டிவிடெண்ட்) ரூ.1629 கோடிகளை அள்ளிக்கொடுத்திருக்கிறது. இது மத்திய அரசின் 5 கோடி முதலீட்டிற்கானது. ரூ.1629 கோடி என்பது அரசின்  5 கோடி முதலீட்டிற்கு  32,000 சதவீதம் ஆகும். இதுவே ஒரு உலக சாதனையாகும். உலகில் எந்த நிறுவனமும் தன்னுடைய முதலீட்டாளருக்கு தனது இலாபத்தின் பங்காக இவ்வளவு சதவீதம் கொடுத்திருக்கிறார்களா தேடிப்பாருங்கள். அதுமட்டுமல்ல எல்.ஐ.சி கடந்த 58 ஆண்டுகளாக மத்திய அரசிற்கு ரூ.5 கோடிக்காக கொடுத்த மொத்த டிவிடெண்ட்  ரூ.12,500 கோடியை தாண்டும் என்பது மலைப்பானது. இவ்வளவு வளத்திற்கும், வளர்ச்சிக்கும்  எல்.ஐ.சி-யில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் முகவர்களின் அர்ப்பணிப்புணர்வுடனும் சேவை உணர்வுடனும் கூடிய  இலஞ்சமும், ஊழலும் இல்லாத அயராத பணிகளே மிக  முக்கிய காரணமாகும்.

இன்று புதிய அவசர சட்டம் ஏன்....?               

                 இன்றைக்கு இந்திய தேசத்தின் வளங்கொழிக்கும் பொதுத்துறை நிறுவனங்களில் எல்.ஐ.சி-யும் ஒன்று. வெறும் 5 கோடியில் எல்.ஐ.சி என்ற ஒரே இன்சூரன்ஸ் நிறுவனம் இத்தனை வளர்ச்சி பெற்றிருக்கிறது. மக்களின் பங்களிப்போடு கொழுத்து வளர்ந்த இந்திய இன்சூரன்ஸ் துறையை அப்படியே விழுங்கி அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது தனியார்மய - தாராளமய அகோரப்பசியை தீர்த்துக்கொள்ள நினைத்தது. அந்த அகோரப்பசிக்கு 1999 -ஆம் ஆண்டு அன்றைய பாரதீய ஜனதாக்கட்சி தலைமையிலான வாஜ்பாய் அரசு தீனிப் போட்டது. அரசிடம் மட்டுமிருந்த இன்சூரன்ஸ் துறை மீண்டும் தனியாருக்கு திறந்துவிடப்பட்டது. அதில் 26 சதவீதம் அளவிற்கு அந்நிய நேரடி முதலீடும் மனசாட்சியில்லாமல் அனுமதிக்கப்பட்டது. ஆனால் அது ''யானைப்பசிக்கு சோளப்பொறி'' போலானது.   அதனால் அமெரிக்காவின் அகோரப்பசி தீரவில்லை. 100 சதவீதத்தை நோக்கியே  அமெரிக்காவின் வெறிபிடித்த கோர நாக்கு நீண்டது. ஆனால் அன்று நேரு நிறைவேற்றிய அன்றைய சட்டம் ஒரேயடியாக 100 சதவீதம் என்பதை அனுமதிக்கவில்லை. 26, 49, 74 என்றளவில் படிப்படியாக தான் 100 சதவீதத்தை அடையமுடியும். எனவே தான் வாஜ்பாய் 26 சதவீதத்திற்கு பிள்ளையார் சுழிப்போட்டு, பிறகு 49 சதவீதத்திற்கு முயற்சி செய்தார். எல்.ஐ.சி ஊழியர்கள், இடதுசாரி கட்சிகள் போராட்டத்தின் காரணமாக அவரால் முடியவில்லை. பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான மன்மோகன் சிங் அரசும் 49 சதவீதத்திற்கு முயற்சி செய்தது. ஆனால் 2004-2009 ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு இடதுசாரி கட்சிகளின் ஆதரவோடு நடத்தப்பட்ட ஆட்சி என்பதால், 49 சதவீத அந்நிய நேரடி முதலீட்டு உயர்வை இடதுசாரிகள் தடுத்து நிறுத்தினார்கள். அந்த ஐந்து ஆண்டுகளில் எவ்வளவோ முயற்சி செய்தபோதும் மன்மோகன் சிங்கினால் 49 சதவீதத்தை எட்டமுடியவில்லை.
            இதனால் அமெரிக்காவிற்கு இடதுசாரிக்கட்சிகளின்  மீது எரிச்சலும் கோபமும்  உண்டாகியது. அமெரிக்கன் இன்சூரன்ஸ் கவுன்சில் எரிச்சலுடன், ''49 சதவீத உயர்வுக்கே இவ்வளவு காலத்தையும் நேரத்தையும் எடுத்துகொண்டால், 100 சதவீதத்தை எப்போது எட்டுவது'' என்று கேள்வி எழுப்பியது. அன்றைய தினம் இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக பணிபுரிந்து வந்த டேவிட் முல்போர்டு என்பவரும் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் மிகுந்த எரிச்சலுடன், ''இந்திய அரசு  இன்சூரன்ஸ் துறையில்  அந்நிய நேரடி முதலீட்டினை 49 சதவீதமாக உயர்த்தவில்லையென்றால்  அது அமெரிக்காவிற்கு செய்கிற துரோகம்'' என்று வெளிப்படையாக பேசினார். 2008-ஆம் ஆண்டு இறுதியில் மன்மோகன் சிங் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் விளைவாக அவரது அரசுக்கு கொடுத்துவந்த ஆதரவினை இடதுசாரிகள் திரும்பப்பெற்றுக்கொண்டார்கள். எதை எடுத்தால் இடதுசாரிக்கட்சிகளுக்கு கோபத்தை தூண்டுமோ, அதே சமயத்தில் அமெரிக்காவிற்கு சந்தோஷத்தை வரவழைக்குமோ அதை மன்மோகன் சிங் கையில் எடுத்தார். ''இன்சூரன்ஸ் திருத்த மசோதா 2008'' என்ற இன்சூரன்ஸ் துறையில் 49 சதவீத அந்நிய நேரடி முதலீட்டினை அனுமதிக்கும் புதிய மசோதா ஒன்றை, பாராளுமன்றத்தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் புத்திசாலித்தனமாக மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தோழர்.டி.கே.ரங்கராஜன் அவர்கள் எழுந்து சென்று மசோதாவை தாக்கல் செய்து படித்துக்கொண்டிருந்த அமைச்சரின் கையிலிருந்து பிடுங்கி கிழித்து எறிந்தார். அவர் ஒன்றும் எல்.ஐ.சி-யில் பணிபுரியும் ஊழியரோ அல்லது முகவரோ அல்ல. இந்த தேசத்து உழைப்பாளி மக்களின் சேமிப்பு நிதியை அந்நிய முதலாளிகள் கொள்ளை கொண்டுபோக சட்டத்தின்  மூலம் அரசே ஏற்பாடுகளை செய்கிறதே என்ற கோபம் அவரை அப்படி செய்யவைத்தது. பிறகு இடதுசாரிகளின் எதிர்ப்பின் காரணமாக அந்த மசோதா பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பட்டது. அப்போதைக்கு அந்த மசோதா நிறைவேற்றப்படாமல் இடதுசாரிக்கட்சிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.
            தனது அகோரப்பசி தீராதற்கு இடதுசாரிகளே காரணம் என அமெரிக்கா கருதியது. அதனால்  2009 -ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் தன்னுடைய திட்டங்களுக்கு இடையூறாக இருக்கக்கூடிய இடதுசாரிகளின் எண்ணிக்கையை குறைக்கவேண்டும் என்ற வெறித்தனத்துடன்   இந்திய பாராளுமன்றத்தேர்தலில் அமெரிக்கா திட்டமிட்டு தனது மூக்கை நுழைத்தது. அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ-வும், அமெரிக்க தூதர்களும் கைகோர்த்து காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் வேலை பார்த்தார்கள். பாராளுமன்றத்தில்  இடதுசாரிகளின் எண்ணிக்கை குறைந்து போனாலும், 2009-2014 ஆண்டுகளில் மன்மோகன் சிங் 49 சதவீதமாக  உயர்த்த முயற்சி செய்தபோதெல்லாம் இடதுசாரிகள் பாராளுமன்றத்தில் அரசின் செயலை எதிர்த்து போராடினார்கள். அதன் காரணமாக மன்மோகன் சிங்கினால் 49 சதவீதத்தை  நெருங்கக்கூட முடியவில்லை. அவரால்  மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. அதனால் அமெரிக்கா அவரை ''இயங்காத பிரதமர்'' என்று வசைபாடியது.
                     பிறகு தான் 2014- ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தல் வந்தது. தேர்தல் வேலைகளை இந்திய பெருமுதலாளிகள் தங்கள் கையில் எடுத்துக்கொண்டார்கள். தாங்கள் நினைப்பது போல் ''வேகமாக செயல்படக்கூடிய பிரதமர்''  யார் என்பதை முதலில் அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். பிறகு அதையே ஊடகங்களை பயன்படுத்தி மக்களின் மூளைகளிலும் திணித்தார்கள். பல கோடிகளை  செலவு செய்து தேர்தல் முடிவை  அவர்களுக்கு சாதகமாக நிறைவேற்றிக்கொண்டார்கள். இப்போது நரேந்திர மோடி என்ற ''சாகசக்காரர்'' தலைமையில் பாரதீய ஜனதாக்கட்சி பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சிக்கு வந்தது. பிரதமர் பதவியேற்றதும் மோடி தேர்தலின் போது ஓட்டுக்காக மக்களின் முன் வைத்த ''அஜெண்டாவை'' தூக்கி எறிந்தார். தேர்தலின் போது திரைக்குப்பின்னால் அமெரிக்கா, இந்திய பெருமுதலாளிகள், மதவெறிபிடித்த ஆர்.எஸ்.எஸ் போன்றவர்கள் தனக்கு கொடுத்த ''அஜெண்டாக்களை'' தூக்கிப்பிடித்தார். பதவியேற்றவுடனேயே இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவீதமாக பாராளுமன்ற முதல் கூட்டத்தொடரிலேயே உடனடியாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு தனது அமெரிக்க எஜமான விசுவாசத்தை காட்டிக்கொண்டார். ஆனால் பாராளுமன்றத்தின் உள்ளே இடதுசாரிக்கட்சிகள் நடத்திய போராட்டங்களின் காரணமாகவும், வெளியே எல்.ஐ.சி ஊழியர்கள் மற்றும் முகவர்கள் மக்களை இணைத்து நடத்திய போராட்டங்களின் காரணமாகவும் முதல் கூட்டத்தொடரில் மட்டுமல்ல, முடிந்துபோன குளிர்கால கூட்டத்தொடரில் கூட 49 சதவீத உயர்வுக்கான அந்த மசோதாவை மோடி தலைமையிலான அரசு நிறைவேற்றமுடியாமல் திணறிப்போனது.
                 அந்த மசோதா நிறைவேற்ற முடியாமல் போனதால், தனது ''தனது எஜமான விசுவாசத்தை'' காட்டமுடியாமல் மோடி ஏமாற்றமடைந்தார். அதுமட்டுமல்ல முன்னெப்போதும் இல்லாத வழக்கமாக, வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்திய குடியரசு தின விழாவின் ''சிறப்பு விருந்தினராக'' அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை நரேந்திரமோடி அழைத்திருக்கிறார். அப்படியாக இந்தியாவிற்கு வருகைபுரியும் ஒபாமாவிற்கு தனது சார்பில் அளிக்கப்படும் விருந்தில் ''49 சதவீத இன்சூரன்ஸ்'' என்ற ''கெடாவை'' வெட்டி விருந்தளித்து ஒபாமாவை குஷிப்படுத்த முடியவில்லையே என்ற ஏமாற்றம் பிரதமர் மோடியை வெறியாக்கியது. நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரிலும் இன்சூரன்ஸ் மசோதாவை நிறைவேற்றமுடியவில்லை. வரும் 26-ஆம் தேதிக்குள் வேறு கூட்டத்தொடருக்கும் வாய்ப்பில்லை. எனவே பிரதமர் மோடி ஒபாமா வருகைக்கு முன்பே இன்சூரன்ஸ் துறையை பலி கொடுக்க துணிந்தார். குளிர்கால கூட்டத்தொடர் முடிந்த அடுத்தநாளே ஜனநாயகத்தை குழித்தோண்டி புதைத்து குறுக்கு வழியில் செல்ல முடிவெடுத்தார். மந்திரிகளை கூட்டி இன்சூரன்ஸ் துறையில் 49 சதவீத அந்நிய நேரடி முதலீட்டு உயர்வை ''அவசர சட்டத்தின்'' மூலம் நடைமுறைப்படுத்தி ஒபாமாவிற்கு படையல் வைப்பது என்று முடிவெடுத்து அனுப்பப்பட்டு, சென்ற 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று இந்திய குடியரசு தலைவர் இன்சூரன்ஸ் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார். அப்போதும் கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர். சீத்தாராம் யெச்சூரி அவர்கள், அவசர சட்டத்தில் உள்ள அபாயத்தை எடுத்துரைத்து, நாட்டின் நலன் கருதி அதில் கையெழுத்திடவெண்டாம் என்று குடியரசுத்தலைவருக்கு ஆலோசனை வழங்கி கடிதம் அனுப்பினார். அதையும் மீறி குடியரசுத்தலைவர் கையெழுத்திட்டுவிட்டார். 
                 ''மக்கள் பணம் மக்களுக்கே'' என்ற அடிப்படையில் மக்களின் சேமிப்பு நிதியை பாதுகாத்து அவர்களுக்கே செலவிடப்படவேண்டும் என்று கருதி 1956-ஆம் ஆண்டு கொண்டுவந்த இன்சூரன்ஸ் அவசரசட்டம் எங்கே...? ''இந்திய மக்கள் பணம் அந்நியருக்கே'' என்று கூசாமல் எடுத்துக்கொடுக்க 2014-ஆம் ஆண்டில் கொண்டுவந்த இந்த அவசரசட்டம் எங்கே...? நீங்களே சிந்தியுங்கள். இன்றைய மோடி தலைமையிலான அரசு யாருக்காக ஆட்சி செய்கிறது...?                                     
நன்றி : தீக்கதிர் / 22.01.2015

சனி, 17 ஜனவரி, 2015

பெருமாள் முருகனின் “மாதொருபாகன்'' சொல்லும் உண்மை...!

                      தமிழனுக்குத் தமிழின் பெருமையை ஆங்கிலத்தில் சொன்னால்தான் புரியும் போலிருக்கிறது. வெளியாகி 4 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது ஆங்கில மொழிபெயர்ப்பு வந்த பிறகுதான் கொங்கு மண்டலத்தில் உள்ள சிலருக்கு பெருமாள் முருகன் எழுதிய “மாதொருபாகன்‘ நாவல் புரிகிறது. கோபம் வருகிறது.
            திருச்செங்கோட்டில் கடையடைப்பு, ஆர்.டி.ஓ.வுடன் பேச்சுவார்த்தை, காவல் துறையின் வேண்டுகோளுக்கு இணங்கி, பாதுகாப்பு கருதி, எழுத்தாளர் தன் குடும்பத்துடன் சற்று வெளியே இருத்தல் போன்ற எல்லாமும் நடக்கின்றன.கொங்கு மண்டலத்தின் பெருமைகளை, கலாச்சார விழுமியங்களை, பழக்கவழக்கங்களைப் பதிவு செய்த பாராட்டுக்குரிய எழுத்தாளர் பெருமாள் முருகன், மனம் நொந்து, தனது பேனாவை இனி திறப்பதில்லை என்று மூடி வைத்துவிட்டார்.
           தன்னுள் இருக்கும் இலக்கியவாதிக்கு மரண சாசனம் எழுதவும் முற்பட்டிருக்கிறார். பிள்ளைச்செல்வம் இல்லாத பெண்கள் தெய்வத்தை வேண்டி, யார் எனத் தெரியாமல் “கண்மூடி’ ஏற்றுக் கருவுறுகிற, சாமி தந்த பிள்ளையாக அக்குழந்தையைப் பார்க்கிற, ஒரு பழைய நடைமுறையை அந்த நாவலில் பெருமாள் முருகன் பதிவு செய்திருக்கிறார் என்பதுதான் எதிர்ப்புக்குக் காரணம். அவர் எழுதியது பொய் அல்ல.
             சமூகத்தில் இருந்த பழக்கம்தான். கோயிலில் இரவு தங்கி இருத்தல், குறிப்பிட்ட நாளில் இரவு முழுவதும் கோயில் வளாகத்தில் கண்விழித்து மண்சோறு சாப்பிடுதல், தீர்த்தமாடுதல் இவை யாவும், “இத்தனை நாள் இல்லாமல் எப்படி இப்போது?’ என்கிற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக சமூகம் தந்த அங்கீகாரச் சடங்குகள் என்பதை நாம் மறுத்துவிடலாகாது. 
             மலையாளத்தில் எம்.டி. வாசுதேவன் நாயர், “இரண்டாம் இடம்‘ என்கிற நாவலை எழுதியிருக்கிறார். அதனை சாகித்ய அகாதெமி தமிழிலும் வெளியிட்டுள்ளது. பீமன் எப்போதும் தான் இரண்டாம் இடத்தில் வைக்கப்படுவதற்காக ஆதங்கப்படுவதுதான் கதை. “நான் அறியாப் பருவத்தில் தேரோட்டியுடன் கலந்து பெற்ற மகன்தான் கர்ணன். பாண்டுவை மணந்த பிறகு, பாண்டு மகாராஜா கலவிக்கும் தகுதியில்லாமல் இருதயமும் பலவீனமாக இருந்ததால், விதுரருக்கு பெற்ற மகன்தான் தருமன்.
            ''மிகத் திடகாத்திரமான காட்டுவாசிக்குப் பிறந்தவன்தான் நீ...'' என்று குந்தி சொல்வதாகக் கதை செல்கிறது.இந்த நாவலை மலையாள உலகம் எதிர்க்கவில்லை. பல பதிப்புகள் கண்ட நாவல் இது. இலக்கியத்தை இலக்கியமாகப் பார்க்கத் தெரிந்த சமுதாயம் அது. படைப்பிலக்கியவாதியின் கற்பனைக்குக் கடிவாளம் போடாத நாகரிக சமுதாயம் அது.இலக்கியத்தை, கோயில் வழிபாட்டுச் சடங்குகளை எல்லாம் விட்டுவிடுவோம். இன்று “ஃபெர்டிலிடி சென்டர்’ எனப்படும் கருகூட்டு மருத்துவமனையில் என்ன நடக்கிறது? ஓர் ஆண், மலடு. பெண்ணோ கருவுறத் தகுதி படைத்தவள்.
              அவர்கள் பெர்டிலிடி மருத்துவமனைக்குச் செல்லும்போது, “உங்கள் குடும்ப மரபினி தொடர விரும்பினால், உங்கள் சகோதரர் யாரிடமாவது விந்து தானம் பெற்று, உங்கள் மனைவியை கருவுறச் செய்யலாம். இல்லையென்றால், விந்து வங்கியில் பெற்று கருவுறச் செய்யலாம். உங்களுக்குச் சம்மதமா’ என்பதுதான் நேர்மையான, நல்லிதயம் படைத்த மருத்துவரின் முதல் கேள்வி. பல லட்சம் ரூபாய் செலவு செய்ய வசதி இல்லாத ஒரு தம்பதி, தங்களுக்கு பிள்ளை வரம் வேண்டும் என்பதற்காக சமூகம் அங்கீகரித்த, கோயில்கள் உருவாக்கித் தந்த, யார் யாருடன் என்றறியாத கண்மறைப்பு நடைமுறைகள் இன்று வழக்கத்தில் இல்லாததால், ஒரு பெண் தனக்கான விந்து தானத்தை, தானே தன் விருப்பப்படி, மகாபாரதக் குந்தியைப் போலத் தேர்வு செய்து கொள்கிறாளே,
                  அதைத் தவிர்க்க முடியுமா, மறுக்க முடியுமா அல்லது தடுக்கத்தான் முடியுமா?சங்க காலத் தமிழனின் காதல் வாழ்க்கையைப் பதிவு செய்ததுதானே அகநானூறு. தான் வாழ்ந்த காலத்தில், அதற்கு முற்பட்ட காலத்தில் இருந்த நடைமுறையை, தான் எழுதும் கதையில் பதிவு செய்வது என்பது படைப்பிலக்கியவாதியான பெருமாள் முருகனின் உரிமை, கடமை. இல்லாததையேகூட எழுதியிருந்தாலும் அது அவரது கற்பனைக்குத் தரப்பட வேண்டிய சுதந்திரம். அதைத் தடுக்க முற்படுவது எப்படி சரியாகும்? எதைச் சொன்னாலும் அது யாராவது ஒருவர் மனதைப் புண்படுத்துகிறது என்கிற பெயரில் போராட்டம் நடத்துவது தற்போது வழக்கமாகிவிட்டது.
              ஒரு கருத்து ஏற்புடையதல்ல என்றால் அதற்கு மாற்றுக் கருத்தை முன்வைக்கலாம். மாறாக, யாரும் கருத்தே கூறக்கூடாது என்றால் எப்படி சரி? பெருமாள் முருகனுக்குப் பக்கபலமாக நின்றிருக்க வேண்டிய அரசு நிர்வாகம் போராட்டக்காரர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததேகூட மிகப்பெரிய தவறு.சமீபத்தில் ஒரு திரைப்படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது, நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் தெளிவாக வழங்கிய தீர்ப்பு, “தணிக்கைக் குழுவால் சான்றிதழ் வழங்கப்பட்ட திரைப்படத்தை வெளியிடாமல் தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. அந்தத் திரைப்படம் வெளிவருவதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு உண்டு’ என்பது. அதுவே பெருமாள் முருகனின் “மாதொருபாகன்‘ பிரச்சனைக்கும் பொருந்தும். சாதியும், சமயமும், கணவனும் ஏற்றுக்கொண்டாலும் ஆணாதிக்க மானுடம் ஏற்க மறுக்கிறது.
            இது சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் மற்றொரு பாகம். இதுவே வெளிமாநிலத்திலோ, வெளிநாட்டிலோ நடந்திருந்தால் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவாக உலகமே திரண்டெழுந்திருக்கும். ஆனால் தமிழனாய் பிறந்தது பெருமாள் முருகனின் தவறு....!      
நன்றி : தினமணி

புதன், 14 ஜனவரி, 2015

எழுத்தாளனுக்கு என்றும் மரணமில்லை....!

இப்போது உங்கள் கையில் ''மாதொருபாகன்''
க்ளிக் செய்து படியுங்கள்... சிந்தியுங்கள்....
விவாதம் செய்யுங்கள்... மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள்...!
கலை, இலக்கியம் மக்களுக்கே...
அவைகளே அழிக்கும் உரிமை படைத்த படைப்பாளிகளுக்கு
கிடையாது.... திண்ணைப் பேச்சு வீனர்களுக்கும் கிடையாது....
படைப்பாளிகள் தங்கள் தூரிகையையும், எழுதுகோலையும்
தூக்கியெறிந்து விடலாம்... ஆனால் அவர்களின் மனதில்
தானாக - தன்னெழிச்சியாக வெள்ளமாக பெருக்கெடுக்கும்
உணர்வுகளையும், கருத்துகளையும், கற்பனைகளையும் 
யாராலும் அணைபோட்டு தடுத்துவிடமுடியாது.
ஆகவே படைப்பாளிகளுக்கு என்றும் மரணமில்லை...
அவன் சாகமாட்டான்... அவனை யாராலும் சாகடிக்கமுடியாது....
 
மின்நூலாக மாதொருபாகன்....!

https://dl.dropboxusercontent.com/u/602…/Mathoru%20Pagan.pdf

''மாதொருபாகன்'' படைத்த பெருமாள் முருகனை வாழ்த்துவோம்...!

ஞாயிறு, 11 ஜனவரி, 2015

''மாதொருபாகன்'' நாவலை அரசியல் ஆக்குவதா...?

பத்திரிகைச் செய்தி : தோழர். ஜி.ராமகிருஷ்ணன்                  
                                               மாநிலச்செயலாளர்,                 
                                               மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி                   
          நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த எழுத்தாளர் - பேராசிரியர் பெருமாள்முருகன் எழுதிய ‘மாதொருபாகன்‘ என்கிற நாவல் நான்கு ஆண்டுகளுக்கு முன் வெளியானது. இந்த நாவலின் சில பக்கங்களை மட்டும் எடுத்து, அது கோவிலுக்கு இழிவு செய்வதாகவும், பெண்களை இழிவு செய்வதாகவும் சங் பரிவார் அமைப்புகள் அரசியல் செய்து வருகின்றனர்.
               கடந்த ஜனவரி 7 ஆம் தேதி எழுத்தாளர் பெருமாள்முருகன் வெளியிட்ட செய்தியில் பெண்களையோ, கோவிலையோ இழிவுபடுத்தும் நோக்கம் தனக்கில்லை என்று சொன்னதுடன், ஆட்சேபிக்கப்பட்ட பகுதிகளை நீக்குவதாகவும் அறிக்கை விடுத்தார். ஆனால், அதன் அடிப்படையிலான பேச்சுவார்த்தைக்கு கூட மேற்கண்ட அமைப்புகள் தயாராக இல்லை. மாறாக வர்த்தகர்களை கட்டாயப்படுத்தி கடையடைப்பு செய்வதிலேயே குறியாக இருந்தனர். இதிலிருந்து, சங் பரிவார் அமைப்புகள், மதத்தைப் பயன்படுத்தி அரசியல் செய்யும் உள்நோக்கத்துடனே செயல்படுகிறார்கள் என்பது தெளிவாகிறது.
              நான்கு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ‘மாதொருபாகன்‘ நாவலை இப்போது ஆட்சேபிக்க வேண்டிய காரணம் என்ன வந்தது? படிக்கவே முடியாத ஆபாசமானவை என குறிப்பிட்ட பகுதிகளை ஆயிரக்கணக்கில் பிரதியெடுத்து விநியோகித்தது ஏன்? என்ற கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாதது.
    தமிழகத்தில் நிலவும் சாதி ஆதிக்கத்தையும், தீண்டாமைக் கொடுமைகளையும் அம்பலப்படுத்தும், எளியமக்கள் வாழ்க்கையைச் சொல்லும் படைப்புகளை கொடுத்துவரும் எழுத்தாளர்களில் பெருமாள் முருகன் குறிப்பிடத்தக்கவர். அவர் தொகுத்த ‘சாதியும் நானும்‘ கட்டுரைத் தொகுப்பு சாதிக் கொடுமைகளின் யதார்த்தத்தை பதிவு செய்தது. படைப்புகள் சுட்டிக்காட்டும் உண்மைகளை நேர்மையாக எதிர்கொள்ள முடியாத சக்திகளே, இப்படி திரிக்கப்பட்ட பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர்.
     எனவே, மதவெறி, சாதிவெறி சக்திகளின் தூண்டுதலுக்கும், நிர்ப்பந்தத்திற்கும் இரையாக வேண்டாம் என அப்பகுதி மக்களை அன்போடு வேண்டுகிறோம். படைப்பாளியின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் இத்தகைய முயற்சிகளை மார்க்சிஸ்ட் கட்சி ஒருபோதும் ஏற்காது. கொலைமிரட்டல் உள்ளிட்ட அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியுள்ள எழுத்தாளர் பெருமாள்முருகனுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. அரசு நிர்வாகம் செயலற்று இருந்தால் சாதி, மத வெறி சக்திகள் ஆட்டம் போடும் என்பதற்கு சான்றாக திருச்செங்கோடு நிகழ்வுகள் அமைந்துள்ளன.
        தமிழக அரசின் பாராமுகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. தமிழகத்தின் அனைத்துப்பகுதி மக்களும், எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் மற்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும், இந்தத் தாக்குதலைக் கண்டித்து ஒன்றுபட்டு குரல் எழுப்புமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
      மேலும் தேவையற்ற வகையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. 

நன்றி : Venpura Saravanan

சீன கம்யூனிஸ்ட் கட்சியும், ''MISSED CALL'' கட்சியும்...!

                 
                  அண்மையில் செய்தித்தாள்களில் நகைச்சுவை ஊட்டும் செய்தி ஒன்று வந்திருந்தது. ''இந்தியாவில் உள்ள பாரதீய ஜனதாக்கட்சியில் உறுப்பினர் சேர்ப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பா.ஜ.க-வின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை என்பது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையையே மிஞ்சி உலக சாதனைப்படைக்கும்'' என்பது தான் அந்த நகைச்சுவைத் ததும்பும் செய்தி.
                முதலில் இந்தியாவில் பாரதீய ஜனதாக்கட்சி எப்படி உறுப்பினர்களை சேர்க்கிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்து வைத்திருப்பீர்கள். ஏழு மாதத்திற்கு முன்பு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த ''எதிர்பாராத'' வெற்றி மற்றும் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட எட்டமுடியாத காங்கிரஸ் கட்சியின் தோல்வி இவைகளெல்லாம் மோடியை உற்சாகப்படுத்தியது. அதனால் தனது கட்சியை இப்போது இருக்கும் சூழ்நிலையில் ஒரு ராட்சச பலத்துடன் வளர்த்துவிடவேண்டும்  என்ற கனவில்,  தன் மனம் அறிந்து நடந்துகொள்ளும் தனது கூட்டாளியான அமித் ஷாவை பா.ஜ.க-வின் தலைவர்  ஆக்கினார். பிறகு இருவரும் சேர்ந்து கட்சியை ஊதி பெரிதாக்கப்போறோம் என்று முடிவெடுத்து உலக அளவில் இதுவரையில் யாரும் செய்யாத - ''உலக அரசியல் வரலாற்றிலேயே முதல்முறையாக'' மாபெரும் கட்சி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கினார்கள். அந்த தகவல்கள்  நாடு முழுதும் அனைத்து மொழி தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும், வார மற்றும்  மாதாந்திர பத்திரிக்கைகளிலும், வானொலிகளிலும் கடந்த இரண்டு மாதகாலமாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.    
                அவர்கள் கொடுத்திருக்கும் எண்ணிற்கு  ஒரு ''missed call'' கொடுத்தால் போதும் பா.ஜ.க-வின் உறுப்பினராகிவிடலாமாம். missed call கொடுத்து மத்திய மந்திரி ஆன அதிசயமெல்லாம் நடந்திருக்கிறது. உலக அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக மிக சுலபமான முறையில் கட்சி உறுப்பினர் சேர்க்கை பா.ஜ.க-வில் நடைபெற்று வருகிறது. புதிதாக சேருகிற உறுப்பினர் யார்...? எப்படிப்பட்டவர்...? எங்கிருக்கிறார்...? என்ன செய்கிறார்...? என்பதை பற்றி எல்லாம் கவலையில்லை. கட்சித் தலைமைக்கோ அல்லது ஏற்கனவே உள்ள சாதாரண உறுப்பினருக்கோ கூட அறிமுகமானவர்களாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. இது போல் உறுப்பினர்களை சேர்ப்பதை இந்திய தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கிறது என்று தான் தெரியவில்லை. இதைப்பற்றியே தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவே இல்லை என்பது தான் உண்மை. ஆக இப்படியாக கடந்த இரண்டு மாதங்களில் missed call கொடுத்தவர்கள் எண்ணிக்கை என்பது இதுவரையில்  மூன்று கோடியை தொட்டிருக்கிறது என்று பெருமையாக சொல்கிறார்கள். 
             சரி அதோடு விட்டிருந்தால் கூட பரவாயில்லை. பத்து கோடிக்கு மேல் உறுப்பினர்களை சேர்த்து, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையையும் தாண்டி பாரதீய ஜனதாக்கட்சி உலக சாதனை படைக்கும் என்று பா.ஜ.க-வின் தலைமையில் உள்ளவர்கள் பீற்றிக்கொள்கிறார்கள் என்பது தான் விழுந்து  விழுந்து சிரிக்க வைக்கும் இன்றைய தலைசிறந்த நகைச்சுவையாக கருதப்படுகிறது. 
              மக்கள் சீனம் உட்பட உலகத்தில் எல்லா நாடுகளிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளில் இவர்கள் போல் missed call கொடுத்து உறுப்பினர் ஆகமுடியாது. கம்யூனிஸ்ட் கட்சியில் ஒருவர் சேரவேண்டுமென்றால் அவரைப்பற்றி அறிந்த ஏற்கனவே  கட்சியில் உள்ள உறுப்பினர் ஒருவர் அவரை முன்மொழிய வேண்டும். அதேப்போல் அவரைப்பற்றி அறிந்த கட்சியில் உள்ள வேறொரு உறுப்பினர் வழிமொழிய வேண்டும். குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு அவர் நேரடியாகவும், மறைமுகமாகவும் கண்காணிக்கப்படுவார். அவர் பெயர் முன்மொழியப்பட்ட நாளிலிருந்து கட்சியில் அவர் காட்டும் ஈடுபாடு, இயக்கங்கள் மற்றும் போராட்டங்களில் அவரது பங்களிப்பு, கட்சிக்கல்வியில், மக்கள் பிரச்சனைகளில் அவர் காட்டும் அக்கறை, நேர்மை, நன்னடத்தை, தனிமனித ஒழுக்கம் இப்படியாக கம்யூனிஸ்ட் கட்சியில் சேருவதற்கு நிறைய அளவுகோள்கள் இருக்கின்றன.  இந்தியா போன்ற நாடுகளில் இது போன்ற சோதனைக்கட்டங்களை வெற்றிகரமாக கடந்தபின் தான் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். 
          சீனா போன்ற நாடுகளில் இன்னும் கடுமையான பரிசோதனைகள் நடைபெறும். சீன நாட்டை சேர்ந்தவர்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேரவேண்டுமென்றால் குறைந்தது நான்கு ஆண்டுகளாவது ஆகும். அங்கு உறுப்பினராவதற்கு மேலே சொன்ன அளவுகோள்கள் மட்டுமல்லாது, அவர்களுக்கு கட்சியினால் ஏதாவது ஒரு பகுதி கொடுக்கப்பட்டு மக்கள் நலத்திட்டப்பணிகளில்  கடுமையாக உழைக்கவேண்டும். அவரது திட்டப்பணிகளினால் மக்களுக்கு கிடைத்திருக்கும் பலன்கள் கணக்கிடப்படும். இவ்வளவு சோதனைகளில் வெற்றிபெற்ற பிறகு தான் அங்கு கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக முடியும். அதற்கு குறைந்தது நான்கு ஆண்டுகளாகும். சீன கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக உள்ள 10கோடி பேர்களில் ஆறு ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள்  சோதனைக்கு பிறகு உறுப்பினர்களாக ஆனவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இப்போதும் நான்கு ஆண்டுகளுக்கு மேல் - ஆறு ஆண்டுகளுக்கு மேல் கடந்தும் கட்சியின் உறுப்பினர்களாக சேர்வதற்கு காத்திருப்பவர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. 
          எனவே இங்குள்ள missed call கட்சியை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியோடு ஒரு சிறு துளி கூட ஒப்பிட முடியாது. அந்த எண்ணிக்கையை எட்டக்கூட முடியாது என்பதும் உண்மை.

வெள்ளி, 9 ஜனவரி, 2015

இலங்கையில் ஆட்சி மாற்றம் - அரசியல் மாற்றம் நிகழுமா...?

                         இலங்கையில் நேற்று நடந்த ஜனாதிபதி தேர்தலில் ''மாற்றத்தை'' விரும்பிய இலங்கை மக்கள் ராஜபட்சேவை தோற்கடித்து, மைத்ரிபால சிறிசேன என்ற எதிர்க்கட்சியின் பொது வேட்பாளரை வெற்றிபெற செய்திருக்கிறார்கள். வழக்கமாக இந்திய அரசியலை போன்று ஊழல், குடும்ப ஆதிக்க அரசியல், அதிகார குவிப்பு போன்ற ராஜபக்சேவிடம் இருந்த பலகீனங்கள் மட்டுமன்றி, தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மத்தியில் இவர் ஏற்பட்டுள்ள நம்பிக்கை இழப்பும் தான் ராஜபக்சேவின் தோல்விக்கு மிகப்பெரிய காரணம். 
               ராஜபக்சே தோல்வி கண்டதும், தமிழகத்திலிருக்கும் கருணாநிதி, வைகோ, சீமான் போன்ற   ''ஈழ விடுதலையை பற்றிப்  பேசும் தமிழினத்தலைவர்கள்'' தாங்கள் வெற்றிகண்டது போல் துள்ளிக்குதிக்கிறார்கள். ராஜபக்சே தோல்வி கண்டிருக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் அவரோடு நெருங்கி இருந்து அமைச்சராக பணியாற்றியவர் தான்  வெற்றிபெற்று இப்போது ஜனாதிபதியாக அமர்ந்திருக்கிறார் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. 
                இது அரசியல் மாற்றமா... அல்லது  வெறும் ஆட்சி மாற்றம் தானா... காட்சி மாற்றம் தானா என்பது இனிமேல் தான் தெரியும். கடந்த ராஜபக்சேவின் ஆட்சியில் நொந்துபோன தமிழ் மக்களும், இஸ்லாமிய மக்களும் நம்பிக்கையுடன் அரசியல் மாற்றத்தை தான் எதிர்நோக்கியுள்ளனர். மாற்றத்தை விரும்பிய மக்கள் எதிர்ப்பார்ப்பது போல் அரசியல் மாற்றம் நிகழுமா...? அல்லது காட்சி மாற்றத்தோடு - ஆட்சி மாற்றத்தோடு நின்று போய் விடுமா...? பொறுத்திருந்து பார்ப்போம்.

மூடர்கள் கையில் சிக்கித்தவிக்கிறது தேசம்...!

                     பாரதீய ஜனதாக்கட்சி ஆட்சிக்கு வந்தவுடனேயே... அதுவும் அதீத பலத்துடன் ஆட்சிக்கு வந்தவுடனேயே, இனி நம்  தேசம் பின்நோக்கி அழைத்துச்செல்லப்படும் என்ற அச்சம் நம் எல்லோருக்குமே இருந்தது. பழங்கதைகளையும், பழமைவாதத்தையும் இவர்கள் உளறித் திரிவார்கள் என்பது நாம் எதிர்ப்பார்த்தது தான். ஆனால் பதவியேற்று ஆறு மாதத்திற்குள்ளாகவே   ஏகப்பட்ட மூடர்களும், கிறுக்கர்களும் பேசுவதை கேட்டால் நமக்கு கிறுக்கு புடிச்சிடும் போல இருக்கு. தாங்க முடியல. அறிவியலுக்கு அப்பாற்பட்டு சிந்திக்கும் இந்த அறிவிலிகளின் அறிவார்ந்த அற்புத உளறல்களை கேட்க நாம் என்ன தவம் செய்தோம்...? 
              முன்பு ஒரு அறிவியல் மாநாட்டில் இந்த நாட்டின் பிரதமர் தன்னுடைய ''அரிய கண்டுபிடிப்புகளை'' வெளியிட்டார். பிள்ளையார் உருவத்தை பார்க்கும் போது அந்தக்காலத்திலேயே ''பிளாஸ்டிக் சர்ஜரி'' முறை இருந்திருப்பதை நம்மால் உணரமுடிகிறது என்றும், அதேப் போல் கவுரவர்கள் குளோனிங் முறையில் தான் பிறந்தார்கள் என்றும் தன்னுடைய ''அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளை உளறித் தள்ளினார். ''என்ன தவம் செய்தனையோ யெசோதா இவரை உன் கண்ணாளனாய் பெறுவதற்கு....?'' 
                 பிரதமரே இப்படியென்றால் அவரது கட்சியில் இருப்பவர்கள் இன்னும் ''அதிபுத்திசாலிகள்'' என்று சொன்னால் அது மிகையாகாது. அண்மையில் மும்பையில் நடைபெற்றுவரும் இந்திய அரசியல் மாநாட்டில் கட்டுரை வாசித்த பிரதமரின் நண்பரும்,   கேப்டன் ஆனந்த் ஜே போடோஸ் என்ற ''அறிவார்ந்த அறிவியல் விஞ்ஞானி'' -யுமான ஒருவர் தன்னுடைய அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளை அவிழ்த்துவிட்டிருக்கிறார். சுமார் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே  இந்தியாவில் விமானப்போக்குவரத்து இருந்துச்சாமாம்... அந்த விமானங்கள் கண்டம் விட்டு கண்டம் தாண்டி போச்சாமாம்... கிரகம் விட்டு கிரகம் தாண்டிக்கூட போச்சாமாம்... அந்த அளவிற்கு அன்றைய இந்தியர்கள் வல்லமை பெற்றிருந்தாங்களாமாம். இப்படியாக போடோஸ் உளறித் தள்ளியிருக்கிறார். அதுமட்டுமா... ஜம்போ ரக விமானங்கள் கூட அக்காலத்தில் இருந்ததாமாம்...! 40 இன்ஜின்கள் அந்த விமானங்களில் பயன்படுத்தப்பட்டதாமாம்...! இதை எல்லாம் கேட்டதும் அந்த அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்ட விஞ்ஞானிகளுக்கு மயக்கமே வந்துவிட்டதாம். 
              ஏழு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இராமர் கட்டிய பாலம் கடலுக்கு அடியில் செல்கிறது என்று சொல்லி சேது சமுத்திரத் திட்டத்தையே முடக்கி வைத்திருப்பவர்களாயிற்றே இவர்கள்...! இன்னும் என்னமெல்லாமும் சொல்லப் போறாங்களோ....?
                மோடி கட்சியில் இன்னும் சில கிறுக்குகள் இருக்கிறது. அண்மையில் புதுடெல்லியில் பிஜேபி எம்பியான பெண் சாமியார் ஒருவர் பாரதீய ஜனதாக்கட்சிக்கு வாக்களிப்பவர்கள் இராமனின் பிள்ளைகள் என்றும், பா.ஜ.க-விற்கு வாக்களிக்காதவர்கள் யாருக்கோ பிறந்தவர்கள் என்று உளறித் தள்ளி பெரிய சர்ச்சைக்குள் மாட்டிக்கொண்டார். அவர் தான் அப்படியென்றால், இன்னொரு சாமியார் எம்பி-யான சாக்ஷி மகாராஜ் இந்து பெண்கள் எல்லோரும் நான்கு குழந்தைகளை பெற்று இந்து மதத்தை வளர்க்கவேண்டும் என்று திருவாய் மொழிந்துள்ளார்.
            இப்படித்தான் நம்ப ''பாரத்ரத்னா'' அண்ணன் வாஜ்பாய் ஆட்சி செய்த போது, பொன்னான வாசகம் ஒன்றை திருவாய் மலர்ந்தது நினைவிற்கு வருகிறது. சமூகத்திலிருந்தும், மக்களின் மூளையிலிருந்தும் ஒழித்துக்கட்டப்பட்ட ''சதி''  என்ற பெண்கள் உடன்கட்டை ஏறும் பழக்கம் மீண்டும் வரவேண்டும் என்றும், கணவன் இறந்தபிறகு மனைவி உயிருடன் இருப்பதில் அர்த்தமில்லை என்றும் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் கருத்து கூறினார். ஒரு வாசகம் என்றால் திருவாசகம் போல் ஒலித்தார். நாடு முழுதும் எதிர்ப்பலை கிளம்பியவுடன் வாஜ்பாய் அப்படியே பம்மிட்டார்.
                 இவர்கள் ஆட்சிக்கு வந்தாலே இப்படித்தான் எதையாச்சும் அவிழ்த்து விட்டுகிட்டே இருப்பாங்க. நாம்ப தான் உஷாரா இருக்கோனோம். 

புதன், 7 ஜனவரி, 2015

தொழிற்சங்கத்தின் தேவையை உணர்ந்த ஐ.டி நிறுவன ஊழியர்கள்...!

                 
       உலகமயத்தின் இந்திய குழந்தைகளில் ஐ.டி கம்பெனிகளும் ஒன்று. புதுடெல்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் உட்பட நாடு முழுதும் பரவியிருக்கிறது. தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் கணினி அறிவியல் (CS) போன்ற பாடங்களை கொண்ட  பி.இ / பி.டெக் என வகைவகையாய் படித்துக் கொண்டிருக்கும் போதே, ''வளாக நேர்காணல்'' - Campus Interview என்ற பெயரில் தனக்கு நேரம் பாராமல் இலாபத்தை ஈட்டிக்கொடுக்க கல்லூரிகளாலும், பல்கலைக்கழகங்களாலும் தயார்செய்யப்பட்ட   ''நவீன அடிமைகளை''  IT Professionals என்ற பெயரில் தேர்ந்தெடுத்து அழைத்து சென்றுவிடுகிறார்கள். பெரும்பாலும் ஐ.டி கம்பெனிகள் வெளியூர்களிலிருந்து தான் இது மாதிரியான இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் பெற்றோர்களிடமிருந்து  பிரித்து அழைத்து சென்றுவிடுகிறார்கள். அதற்கும் காரணம் இருக்கிறது. எடுத்த எடுப்பிலேயே 30 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரையில் சம்பளம் என்றதும் பெற்றோர்களும் தங்களால் சம்பாதிக்க முடியாததை தன் பிள்ளைகள் செய்கிறார்கள் என்ற பிரமிப்புடன் சந்தோஷமாக அனுப்பிவைத்துவிடுகிறார்கள்.
               இன்றைய தனியார் பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும்   படிக்கும் போதே இந்த இளைஞர்கள் எண்ணங்களில் ''மல்டி நேஷனல் கம்பெனிகள்'' பற்றியும்,  ''ஐ.டி கம்பெனிகள்'' பற்றியும் கனவையும், இலட்சியத்தையும் மூளைச்சலவை செய்து விதைத்து விடுகிறார்கள். அரசு துறையில் வேலை செய்வது பற்றியே அவர்களின் மனதில் எண்ணம் உருவாகாமல் திசைத்திருப்பி விடுகிறார்கள். அரசுத்துறையை விட அதிக சம்பளம் கிடைக்கும் எனது மட்டுமே சொல்கிறார்களே தவிர,  பணி பாதுகாப்பு இருக்கிறது என்பதையும், 58 அல்லது 60 வயது வரை நிரந்திர வேலைவாய்ப்பு என்பதையும், Provident Fund, Gratuity, Bonus, வகைவகையான விடுப்புகள், அதையும் விரும்பும்போது எடுத்துக்கொள்ளும் உரிமைகள், குடும்பத்தினருக்கு மருத்துவ வசதி, இன்சூரன்ஸ் பாதுகாப்பு, பென்ஷன், பணிக்காலத்தில் மரணம் ஏற்பட்டால் வாரிசுதாரருக்கு வேலைவாய்ப்பு என போராடிப்பெறப்பட்ட பல்வேறு உரிமைகள் அரசு துறைகளில் வேலை செய்வதால் மட்டுமே கிடைக்கும் என்பதை திட்டமிட்டே மறைத்து விடுகின்றனர்.  மல்டி நேஷனல் கம்பெனிகளில் - ஐ.டி கம்பெனிகளில் வேலை செய்வதால் அபரிதமான சம்பளம், துரிதமான பதவி உயர்வு, வேலைக்கு ஏற்றார் போல் அவ்வப்போது சம்பள உயர்வு, வெளிநாட்டு பயணம், வெளிநாட்டு பணி போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களை சொல்லி அவற்றின் மீது ஒருவிதமான மயக்கத்தையும், ஈர்ப்பையும் உண்டாக்கிவிடுகிறார்கள். அந்த நிறுவனங்களில் நிரந்தர வேலைவாய்ப்பு என்பதே இல்லை என்பதையோ.... இவர்களின் பணிக்கு அரசு பாதுகாப்போ அல்லது பணி  பாதுகாப்போ இல்லை என்பதையோ, இவர்களின் 30 - 35 -ஆவது வயதில் நிறுவனத்திலிருந்து விரட்டியடிக்கப்படுவார்கள் என்பதையோ, இவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் என்பது சொற்பமே என்பதையோ அல்லது  இரவு நேரவேலை,  அதிக நேரவேலை மற்றும் வீட்டுவேலை போன்ற புதிய பணிக்கலாச்சாரம் பற்றியோ  அந்த இளைஞர்களுக்கு எடுத்து சொல்லாமல் திட்டமிட்டு மறைத்துவிடுகிறார்கள். 
            அவர்களும் அந்த மயக்கத்திலேயே பொறியியல் படிப்பை முடித்ததும் வீட்டை விட்டு - பெற்றோர்களை விட்டு பறந்துவிடுகிறார்கள். புதிய சூழல், புதிய கலாச்சாரம், புதிய நட்பு, தங்கள் தாய் - தந்தையர் செய்யாத புதிய பணி, புதிய நடை -உடை- பாவனை ஆகியவை தங்கள் உரிமைகள் பறிக்கப்பட்டு அடிமையாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை கூட அறியாமல் பிடித்துவிடுகிறது. கம்பெனியின் ''டிஜிட்டல் திறவுகோலை'' பெருமையுடன் கையில் வைத்துக்கொண்டு தங்களை தாங்களே சிறைப்படுத்திக்கொண்டு மணிக்கணக்காய் வேலை, எளிதில் யாரும் உள்ளே நுழையவும் முடியாத, வெளியேறவும் முடியாத  சிறைக்கதவு,  வாரத்தில் இரண்டு நாள் இடுமுறை என்றாலும் ''work at home'' என்ற பெயரில் வீட்டிலும் ஓய்வில்லாத வேலை, அவர்களின் மன இறுக்கத்தைப் போக்க ''weekend party'' என்ற பெயரில் கலாச்சார சீரழிவு, பெண்கள் மீதான பாலியல் சீண்டல்களும், தாக்குதல்களும் அவர்கள் அறியாமலேயே அவர்கள் அனுமதியின்றி ஆளுமை செய்கின்றது. 
            சென்ற வாஜ்பேயி காலத்தில் அந்நிய - இந்திய பெருமுதலாளிகளுக்கு சாதகமாக ''தொழிலாளர் நலச்சட்டங்கள்''  நாசம் செய்யப்பட்டதால், மூன்று மாத முன்னறிவிப்பு இன்றி இ-மெயில் மூலமாகவே இந்த கம்பெனிகளில் வேலை செய்துகொண்டிருந்த இளைஞர்கள் வேலையை விட்டு அனுப்பப்பட்டனர். வேலையை இழந்த இளைஞர்களும்,  நிர்வாகத்தின் இந்த மோசமான நடவடிக்கைகளை எதிர்க்கவேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாமல் இதுவரையில் அச்சத்தோடே வேலை செய்துகொண்டிருந்தார்கள். அப்படி வேலையிழந்த பல இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார்கள். இன்னும் சிலபேர் மனநிலை பாதிக்கப்பட்டு வீதிகளில் திரிந்துகொண்டிருக்கிறார்கள். அப்படியே தொடர்ந்து வேலையில் நீடிப்பவர்கள் கூட அதிகபட்சம் 35 ஆவது வயதில் சக்கையாக பிழியப்பட்டு வீதியில் தூக்கியெறியப்படுகிறார்கள். இப்படியாக கேள்விக்குறியோடு வாழ்ந்துகொண்டிருக்கும் அந்த இளைஞர்களிடம்  உங்கள் பணிப் பாதுபாப்பிற்கும், உங்களுக்கு மறுக்கப்பட்டிருக்கும் உரிமைகளுக்கும், பணியிலிருக்கும் பெண்களின் பாதுகாப்பிற்கும் உங்களுக்கென்று தனியாக ஒரு தொழிற்சங்கம் தேவையில்லையா....? ஏன் உங்களுக்கென்று ஒரு தொழிற்சங்கம் தொடங்கக்கூடாது....? என்று கேட்டால், ''தொழிற்சங்கம்'' என்றாலே ஒரு அருவருப்பான வார்த்தைபோல முகம் சுளிப்பார்கள். நாங்க நல்லாத்தான் இருக்கோம்... யூனியன் எல்லாம் தேவையில்லை... யூனியன் என்றால் சிகப்பு கொடி பிடிக்க சொல்லுவாங்க... கோஷம் போடுவாங்க... ஸ்ட்ரைக் பண்ண சொல்லுவாங்க... அதெல்லாம் எங்களுக்கு தேவையில்லை சார்.... என்று சொல்லிவிட்டு நம்மை விட்டு ஒதுங்கி ஓடிவிடுவார்கள்.
           இப்படிப்பட்ட இவர்கள் தான் இன்று தங்களுக்கென்று - தங்கள் பணி பாதுகாப்புக்கென்று தனி அமைப்பு ஒன்றை ஆரம்பித்து போராடுகிறார்கள் என்பது வரவேற்கவேண்டிய அம்சமாகும். இன்று TCS என்று சொல்லக்கூடிய டாட்டாவிற்கு சொந்தமான ஐ.டி கம்பெனியில் பணிபுரியும் 25,000 இளைஞர்களை ஒரே சமயத்தில் வெளியேற்றப்பட இருக்கிறார்கள் என்ற அநீதியை எதிர்த்து இன்று இவர்கள் துணிச்சலுடன் ஒரு தனி அமைப்பை உருவாக்கி கொடிபிடித்து போராடுகிறார்கள். போராடினால் தான் வாழ்க்கை என்பதை இப்போதாவது உணர்ந்த அந்த இளைஞர்களை நெஞ்சார வாழ்த்துவோம். உழைப்பாளி மக்களுக்காக போராடும் அமைப்பையும் இணைத்து போராடுங்கள். அப்போது தான் உங்கள் போராட்டம் வலுப்பெறும். வெற்றிபெறும்.

சனி, 3 ஜனவரி, 2015

சாவித்திரிபாய் பூலே ஏற்றிய புரட்சி விளக்கு...!

    
 கட்டுரையாளர் : தோழர். கணேஷ்       
                                       மாநில ஒருங்கிணைப்பாளர்,               
                                      Dr.அம்பேத்கர் வேலைவாய்ப்பு பயிற்சி மையம்            
          “பள்ளிக்கூடத்திற்குச் செல்கையில் நாம் பள்ளிக்கூடம் நடத்துவதை எதிர்ப்பவர்கள் என் மீது கற்கள், சாணி மற்றும் சேற்றை வீசுகிறார்கள். சேலை பாழாகி விடுகிறது. அந்த சேலையோடு மாணவிகள் முன்னால் சென்று நிற்பதற்கு ஒருமாதிரியாக இருக்கிறது” என்று தனது கணவருக்கு கடிதம் எழுதுகிறார். பதில் கடிதம் வருகிறது. “காலையில் பள்ளிக்குச் செல்லும்போது ஒரு பழைய சேலையைக் கட்டிக்கொள். பள்ளிக்குச் சென்றவுடன் நல்ல சேலையைக் கட்டிக்கொண்டுவிடு. மாலையில் மீண்டும் பழைய சேலையையே கட்டிக் கொண்டு வீட்டுக்குச் செல்” இப்படிப் பதில் எழுதுகிறார் கணவர். 
             கடிதம் எழுதியவர் நாட்டின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரிபாய்  பூலே. பதில் எழுதியவர் அவரது கணவர்  ஜோதிராவ் பூலே. ஒரு கட்டத்தில் தொல்லை தாங்காததால் எதிர்ப்பு தெரிவிப்பவர்களில் ஒருவரை நடுரோட்டில் வைத்து அறைகிறார் சாவித்திரி. அதற்குப்பிறகு தான் கற்களை எறிவதும், சாணியை வீசுவதும் அடங்கியது. ஒரு பெண் கல்வி கற்றால், அவரது கணவர் உண்ணும் உணவு புழுக்களாக மாறிவிடும் என்று பயமுறுத்தி வந்த காலக்கட்டத்தில்  தனது மனைவியை கல்வி கற்க வைத்ததோடு, ஆசிரியைக்கான பயிற்சியும் பெற வைத்திருக்கிறார் மகாத்மா ஜோதிராவ் பூலே. இருவரும் இணைந்து பெண்களுக்காக தனியாக ஒரு பள்ளிக்கூடத்தை 1848-ஆம் ஆண்டில் திறக்கிறார்கள். ஆசிரியைப் பணியைத்தானே ஏற்றுக் கொள்கிறார் சாவித்திரி. அப்போதுதான் அவருக்கு மேற்கண்ட அனுபவம் ஏற்பட்டது. சாவித்திரியோடு இணைந்து ஆசிரியைப் பணியை மேற்கொள்கிறார் பாத்திமா ஷேக் என்கிற இஸ்லாமியப் பெண். இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரி பூலேதான்.
             கணவருக்குத் துணையாக...! பள்ளிக்கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அடங்கவில்லை. பூலேயின் தந்தை கோவிந்தராவை நிர்ப்பந்திக்கிறார்கள். அவரும், எதிர்ப்புக்குள்ளாகும் நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் வீட்டை விட்டு வெளியேறுமாறு பூலேயிடம் சொல்கிறார். அந்தச் சிரமமான நிலையில், எதிர்ப்புகளைத் தாண்டி நாம் நமது பணிகளைத் தொடர வேண்டும் என்று கூறி கணவர் பூலேயை உற்சாகப்படுத்துகிறார் சாவித்திரி. 
           மராட்டியத்தின் மேற்குப் பகுதியில் உள்ள நய்காவ்ன் என்ற ஊரில் விவசாயக் குடும்பமொன்றில் ஜனவரி 3, 1830 அன்று சாவித்திரி பிறந்தார். அப்போதெல்லாம் இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுவார்கள். அப்படித்தான் ஒன்பது வயதிலேயே ஜோதிராவ் பூலேவுக்கு சாவித்திரியைத் திருமணம் செய்து வைத்தனர். பெண் கல்வி மறுக்கப்பட்ட அந்தக் காலத்தில் ஜோதிராவ், தனது மனைவியைப் கல்வி கற்குமாறு ஊக்குவித்தார். இது கடுமையான எதிர்ப்பை உருவாக்கியது. அப்போது சாவித்திரிக்கும் இருந்த மனோபலம் ஜோதிராவின் உறுதிக்கு வலிமை சேர்த்தது.
           ஆபத்தான கட்டத்திலும் தனது உறுதியைத் தளர விடாதவராக இருந்தவர் சாவித்திரி. ஒருமுறை, அவர்கள் வீட்டிற்குள் வாடகைக் கொலைகாரர்கள் ஏறிக் குதிக்கிறார்கள். சத்தம் கேட்டு பூலேயும், சாவித்திரியும் எழுகிறார்கள். நிதானமாக வெளிச்சத்தை அதிகரிக்கும் வகையில் விளக்கை ஏற்றி வைக்கிறார் சாவித்திரி. அவரது நிதானம் ஜோதிராவ் பூலேயின் தைரியத்தை அதிகரிக்கச் செய்கிறது. இறுதியில் கொலைகாரர்கள் மன்னிப்புக் கேட்டுவிட்டு நகர்கிறார்கள். 
            முடிவெட்ட மாட்டோம்...! அவர் வாழ்ந்த காலத்தில் கணவனை இழந்த பெண்கள் மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது. கணவனை இழந்து விட்டால் உலகில் கவுரமான வாழ்க்கை இல்லை என்பதால் தற்கொலை செய்து கொண்ட பெண்கள் ஏராளம். மறுமணம் என்பதை நினைத்துப் பார்த்தாலே சமூக விரோதம் என்று முத்திரை குத்தப்படும் காலமது. 1860 ஆம் ஆண்டில் விதவைகளுக்கு மொட்டை அடிப்பதற்கு எதிராக ஒரு வித்தியாசமான போராட்டத்தைத் தொடுக்கிறார் சாவித்திரி. விதவைகளுக்கு மொட்டை அடிக்க மாட்டோம் என்ற போர்க்குரலுடன் முடிதிருத்துபவர்களை அணி திரட்டுகிறார் அவர். அவருடன் பெரும் எண்ணிக்கையில் முடி திருத்துபவர்கள் அணி திரண்டதைப் பார்த்து மிரள்கிறது ஆதிக்க சக்திகள். சமூகப் பிரச்சனைகளில் உறுதியான நிலை எடுத்த சாவித்திரி, சாமான்யனின் பொருளாதார அவலத்தையும் அம்பலப்படுத்துகிறார். “கடன்“ என்கிற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில், கடன் வாங்கிப் பண்டிகை கொண்டாடும் பழக்கத்தைக் கடுமையாகச் சாடுகிறார்.
            இதனால் கடன் சுமை கடுமையாக ஏறிவிடுகிறது. தனிமைப்படுத்தப்பட்டு துன்பத்தில் உழல்கிறார்கள். ஒரு கட்டத்தில் இது இப்படித்தான் இருக்கும். இதை மாற்ற முடியாது என்று சொல்லிவிட்டு துயரத்திலேயே தங்கள் வாழ்க்கையைத் தொடர்கிறார்கள் என்று எழுதுகிறார். சாவித்திரியின் கவிதைகள் இரண்டு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. புரோகிதர் இல்லா திருமணம் சத்யசோதக் சமாஜ் என்ற சமூக-ஆன்மீக அமைப்பொன்றை செப்டம்பர் 24, 1873 அன்று பூலே நிறுவினார். இந்து மதத்தை சீர்திருத்துவதாகச் சொன்ன பிரம்ம சமாஜம், பிரார்த்தன சமாஜம் மற்றும் ஆரிய சமாஜம் ஆகிய அமைப்புகள் பிராமணியம் மற்றும் சடங்குகளைத் தொடர்ந்து பாதுகாக்கவே முயல்கின்றன என்று பூலே உறுதியாகக் கருதினார். முதல் அமைப்பு பிரம்மாவையும், இரண்டாவது பிரார்த்தனையையும் மற்றும் மூன்றாவது ஆரிய அடையாளத்தையும் முன்னிறுத்தின. பூலேயைப் பொறுத்தவரை, உண்மையில் கவனம் செலுத்தினார். இந்த அமைப்பின் மகளிர் பிரிவுத் தலைவராக சாவித்திரி பணியாற்றினார். அந்த அமைப்பின் தலைவராகப் பணியாற்றும் காலத்தில் புரோகிதர் இல்லாமல் திருமணம் செய்து வைக்கும் ஒரு புரட்சிகர முயற்சியில் சாவித்திரி இறங்கினார். டிசம்பர் 25, 1873 அன்று அந்தத் திருமணம் நடந்தது. சிறிய அளவில் எதிர்ப்பு அதற்கு இருந்தது. அதேபோன்ற திருமணம் ஒன்றை மீண்டும் செய்ய முயன்றபோது, புரோகிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், பூலே சரியான சமயத்தில் தலையிட்டு காவல்துறையின் உதவி மூலம் அந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார்.
           அந்தக் காலகட்டத்தில் புரோகிதர் இல்லாமல் திருமணம் என்பது கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாததாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கர்ப்பமாக இருந்த நேரத்தில் கணவனை இழந்ததால் தற்கொலை செய்து கொள்ள முயன்ற பிராமணப் பெண் ஒருவரைக் காப்பாற்றிய சாவித்திரி, அவருக்குப் பிறக்கும் குழந்தையைத் தானே தத்து எடுத்துக் கொள்கிறார். யஷ்வந்த் என்று பெயரிட்டு அந்தப் பையனை அவரே வளர்த்து எடுக்கிறார். கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக பூலே தம்பதியினர் ஒரு இல்லத்தைத் திறந்து அவர்களைப் பாதுகாத்தனர். இதுவும் ஆதிக்க சக்திகளின் கடும் எதிர்ப்புக்குள்ளாகிறது. தங்கள் இல்லக் குழந்தைகளுக்குத் தானே தாயாக இருந்து வளர்க்கிறார் சாவித்திரி. 
           கணவரின் உடலுக்குக் கொள்ளி...! 1870களில் மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் கடுமையான பஞ்சம் நிலவியது. இந்தப் பஞ்சத்தில் ஏராளமான குழந்தைகள் அநாதைகளாகினர். அந்தக் குழந்தைகளுக்கு 52 உறைவிடப் பள்ளிகளைத் துவக்குவதில் பூலே தம்பதியினர் குறிப்பிடத்தக்க பங்காற்றினர். குறிப்பாகப் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பில் சாவித்திரி பெரும் கவனம் செலுத்தினார். தனது கணவர் ஜோதிராவ் பூலே 1890ல் இறந்தபோது பெண்களுக்கு இருந்த கட்டுப்பாடுகளை உடைக்கும் வகையில், அவரே கணவரின் உடலுக்குத் தீ மூட்டினார். இடுகாட்டிற்குப் பெண்கள் வருவதே அபூர்வம் என்ற நிலையில், கணவரின் இறுதிச்சடங்கில் மனைவியே கொள்ளி வைத்தது மகாராஷ்டிர சமூகத்தில் பெரும் தாக்கத்தையே ஏற்படுத்தியது. கணவரின் மறைவுக்குப் பிறகு சத்யசோதக் சமாஜத்தின் தலைமைப் பொறுப்பை சாவித்திரியே ஏற்றுக் கொண்டார். 1893 ஆம் ஆண்டில் சாஸ்வத் என்ற இடத்தில் அந்த அமைப்பின் கூட்டம் நடந்தது. அப்போது தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட சாவித்திரி 1896 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பஞ்சத்திற்கான நிவாரணப் பணிகளை அரசே முறையாக ஏற்று நடத்த வேண்டும் என்று வற்புறுத்தி வெற்றி கண்டார். அடுத்த ஆண்டில் பெரும் கொடிய பிளேக் நோய் புனே நகரைத் தாக்கியது. பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற சாவித்திரியே நேரடி நிவாரண நடவடிக்கைகளில் இறங்கினார். அப்போது அவரையும் பிளேக் நோய் தாக்கியது. மார்ச் 10, 1897 அன்று நோயின் பாதிப்பால் சாவித்திரி மரணமடைந்தார். அவர் மறைந்து 100 ஆண்டுகள் தாண்டிய பிறகும் பெண் குழந்தைகளின் கல்வி என்பது சமூகப் பிரச்சனையாகவே நீடிக்கிறது.
          நாடு முழுவதும் நீடிக்கும் தீண்டாமை மற்றும் வன்கொடுமைக் பிரச்சனைகளுக்கு எதிராக உருவாகியுள்ள “தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி”, சாவித்திரிபாய்  பூலேயின் பிறந்தநாளை (ஜனவரி 3) ''பெண் குழந்தைக் கல்வி தினமாக'' அனுசரிக்க அறைகூவல் விடுத்துள்ளது. அவர் ஏற்றி வைத்த  புரட்சி விளக்கை அணையவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமே.
நன்றி : தீக்கதிர்

வியாழன், 1 ஜனவரி, 2015

''P K'' - மூடநம்பிக்கை எனும் போதை தெளிவிக்கும் திரைப்படம்


 விமர்சனம் : அ. குமரேசன், பத்திரிக்கையாளர்                            
        பேரண்டத்தையே படைத்து, உலகத்தை உருவாக்கி, அதில் உயிரினங்களை உற்பத்தி செய்து, எது எது எப்படி நடக்க வேண்டும் என்று தானே தீர்மானித்து, ஒவ்வொரு அணுவையும் இயக்குகிறவர் எனக் கூறப்படும் கடவுளை எந்த அற்ப மானிடப் பிறவியாவது அவமதித்துவிட முடியுமா...? நம்பிக்கைகளை கேள்வி கேட்பதென்பது அப்படி அவமதிக்கிற செயல்தான் என்று கூறி, அதிலிருந்து காப்பாற்றப் போவதாகக் கிளம்புவதை விடவும் கடவுளை அவமதிக்கிற வேலை இருக்க முடியுமா? ஆண்டவனைக் காப்பாற்ற அவதாரமெடுத்தவர்கள் அப்படிச் சொல்லித்தான் மக்களைக் கூறுபோடுகிறார்கள், மதங்களின் பெயரால் மோதவிடுகிறார்கள், உண்மைப் பிரச்சனைகளுக்காக ஒன்றுபட்டுப் போராட விடாமல் தடம் மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.
          இதைப்பற்றிய விழிப்புணர்வோடு பகுத்தறிவுக் கருத்துகளைக் கூறுகிற திரைப்பட ஆக்கங்கள் அவ்வப்போது வந்திருக்கின்றன. ‘3 இடியட்ஸ்’ போன்ற மாறுபட்ட படங்களால் ஆரோக்கியமான விவாதங்களுக்கு வழியமைத்த ராஜ்குமார் ஹிரானி, பொதுவெளியிலும் மனசாட்சியைத் தட்டியெழுப்பிடும் விவாதங்களை நடத்திடும் அமீர்கான் கூட்டில் இந்தப் படமும் ஒரு மாற்றுத் தடத்தைப் பதிக்கிறது. கோடிக்கணக்கான பால்வெளி மண்டலங்கள் உள்ள இந்தப் பேரண்டத்தில் ஏதோவொரு மண்டலத்தில், ஏதோவொரு சூரியனைச் சுற்றி, ஏதோவொரு கோளில், இந்த பூமியில் இருப்பது போன்றே உயிரினங்களும் சிந்திக்கத் தெரிந்த மனிதர்களும் ஏன் இருக்கக்கூடாது...? அறிவியல் உலகம் ஆர்வத்தோடு ஆராய்ந்து கொண்டிருக்கிற இந்தக் கேள்வியில் தொடங்குகிறது  படம்.
       ஏதோவொரு கோளிலிருந்து வரும் விண் வாகனத்திலிருந்து ஆராய்ச்சிக்காக ராஜஸ்தான் பாலைவனத்தில் வந்து இறங்குகிறான் நாயகன். ஆடையணிகலன்களால் கூட பாகுபாடு காட்டாத, மொழியே தேவைப்படாத கோள் அது. அவன் திரும்பிச் செல்வதற்கான ஒரே ஏற்பாடு, கழுத்தில் தொங்குகிற மின்னணுத் தகவல் பதக்கம்தான். அந்தப் பதக்கத்தை ஒருவன் வழிப்பறி செய்து தப்பித்துவிடுகிறான். அதைத் தேடிப் போகிறவனுக்கு மற்றவர்கள் சூட்டுகிற பெயர்: ‘போதைக்காரன்’ - அதன் சுருக்கெழுத்துதான் ''பி.கே.'' “கடவுள்தான் உனக்கு உதவ முடியும்” என்று மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு கடவுளின் முகவரியை விசாரிக்கிறான்.
.         அவனுக்குக் கடவுள் கிடைக்கவில்லை, மாறாக கடவுளின் பெயரால் நடக்கும் கொடுமைகளும், மோசடிகளும், திசைதிருப்பல்களும், மதவாத வெறுப்புகளும் எங்கும் பரவிக் கிடப்பதைக் கண்டறிகிறான். இந்தச் செய்திகள் தரமான நகைச்சுவையும், கலகலப்பும், விறுவிறுப்புமாகப் பரிமாறப்படுவது படத்தின் முக்கிய வெற்றி. இங்குள்ள நடைமுறைகள் எதுவும் தெரியாத அந்த போதைக்காரன் கணினியின் கோப்புகளை மற்றொரு கணினிக்கு மாற்றுவது போல் ஒரு மொழியைத் தெரிந்து கொள்கிறான் என்பது போன்ற அறிவியல் கற்பனைகளோடு கலந்து, இந்த மண் எப்படி மூடநம்பிக்கைகளும் மத வேற்றுமை அடையாளங்களுமாக போதையில் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மையைக் காட்டுகிறது படம்.
         இதை, ஒரு வேற்றுலகவாசியைக் கொண்டுதான் சொல்ல முடியும் என்ற கதாசிரியர் - இயக்குநரின் வெளிப்பாட்டு உத்தி பலனளித்திருக்கிறது. தொடக்கத்தில் அவனை மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று நினைக்கிறாள் தொலைக்காட்சி செய்தியாளரான ஜக்கு. பின்னர் அவனைப் புரிந்துகொண்டு, அவனுடைய பதக்கத்தைக் கண்டுபிடிக்க ஒத்துழைக்கிறாள். அவனிடமிருந்து பறிக்கப்பட்ட அந்தப் பதக்கம் தற்போது ஒரு பெரிய ஆன்மீக போதனை குருவிடம் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். அவரோ அது தனக்கு கடவுளால் வரமாகத் தரப்பட்டது என்று கதை விட்டுக்கொண்டிருக்கிறார். சொந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு தேடி தன்னிடம் வருகிற பக்தர்களை, எளிதில் செல்லமுடியாதபடி இமயமலைச்சாரலில் இருக்கிற ஒரு கோவிலுக்குச் சென்று வழிபட்டால் வழி பிறக்கும் என்கிறார் குரு.
        இறைவனின் கருணையைப் பெற்றுத் தருவதற்கு பல இடங்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடவுளை நோக்கி கடுமையான விரதங்களை மேற்கொண்டால்தான் வேண்டுதல்கள் நிறைவேறும் என்கிறார்கள். அந்த குரு, கடவுளிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசுவதாகக் கூறப்படுவதைப் பலரும் நம்பியிருக்க, இப்படியெல்லாம் கடினமான வழிகளைத் தான் கடவுள் சொல்வார் என்றால், குரு பேசுவது உண்மையான கடவுளின் சரியான எண்ணில் அல்ல, “ராங் நம்பரில்தான் பேசுகிறார்” என்று தொலைக்காட்சி உதவியோடு அறிவிக்கிறான் பி.கே. அவனுடன் நேரடி விவாதம் நடத்த முன்வரும் குரு, “நான் பேசுவது ராங் நம்பர் என்றால், ரைட் நம்பர் எது” என்று கேட்டு மடக்குகிறார்.
        அதற்கு பி.கே. அளிக்கிற விளக்கம் ஒரு ஆழ்ந்த தத்துவ விசாரணை. வாழ்க்கையைப் பற்றிய அச்சம் தான் ஆன்மீக வணிகத்திற்கு ஆதாரம் என்பதை பி.கே. சொல்வது, மாற்றுக் கருத்துகளை மதவெறிக்கும்பல்கள் பொறுத்துக் கொள்வதில்லை என்பதற்கு அடையாளமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிப் பொறுப்பாளருக்கு விழுந்த சூலாயுதக் குத்து பற்றிய தகவல்,
    மனிதர்களின் மத அடையாளங்கள் செயற்கையாக அணிவிக்கப்பட்டவையே என்று நிறுவுவது - இவையெல்லாம் வழக்கமான வர்த்தக சினிமாக்களில் காண முடியாத காட்சிகள். கடவுளைக் காப்பாற்றுவதற்காக நடக்கும் சண்டையின் தொடர்ச்சியாக, கொஞ்சமும் எதிர்பாராத ஒரு நொடியில் நடக்கிற அந்த குண்டு வெடிப்பும், தொடரும் அவலங்களும் மனதை உறையவைக்கின்றன. அவ்வளவு நேரம் வாய்விட்டு சிரித்ததற்கு ஈடாகக் கண்ணீரை வரவழைக்கின்றன. எந்தவொரு குறிப்பிட்ட மதத்தையும் தாக்காமல், ஆனால் உலகம் முழுவதுமே இப்படியான நம்பிக்கைகளின் பெயரால் குதறப்பட்டிருக்கிறதே என்ற எண்ணம் ஊன்றப்படுகிறது. 
          அந்த ஜக்கு பெல்ஜியத்தில் இருந்தபோது பாகிஸ்தான் நாட்டு இளைஞனைக் காதலித்தவள். அந்தக் காதல் என்ன ஆனது என்ற பின்னணி, நாடுகளின் எல்லைக்கோடுகளாலும், பகைமை வளர்க்கும் அரசியலாலும் மனித உறவுகள் சிதைக்கப்படுவது பற்றிய உறுத்தலை ஏற்படுத்துகிறது. ஜக்கு மீது காதல் கொள்ளும் பி.கே., அந்தப் பின்னணியை அறிவதோடு அதை முன்னணிக்கும் கொண்டுவருவது கவித்துவமானது. நடிப்பில் அமீர்கான் புதிய எல்லைகளைத் தொடுகிறார். ஜக்குவாக அழகிய பங்களிப்பைச் செய்திருக்கிறார் அனுஷ்கா சர்மா. கடவுள் என்ற ஒரு சக்தி இல்லை என்று சொல்வதற்கு பி.கே. முன்வரவில்லைதான். “இரண்டு கடவுள்கள் இருக்கிறார்கள். ஒரு கடவுள் நம்மைப் படைத்தவன். அவனை நம்பினால் போதும். இன்னொரு கடவுள் மனிதர்களால் படைக்கப்பட்டவன். அவனை எண்ணி அச்சப்பட வேண்டியிருக்கிறது, அவனிடம் வேண்டுகோள் விடுக்க வேண்டியிருக்கிறது, அவனுக்காகச் சண்டைபோட வேண்டியிருக்கிறது,” என்று பி.கே. கடைசியில் சொல்கிறான். அதிலே ஒரு சிறு சமரசம் இருக்கிறது, “அவன்” என்று சொல்வதன் மூலம் கடவுளை ஆணாகச் சித்தரிப்பதும் தொடர்கிறது. இருந்தபோதிலும் கூட, அவரவர் நம்பிக்கைகளைப் பின்பற்றிக்கொண்டே, மற்ற நம்பிக்கைகள் கொண்டோரைப் பகைவர்களாகப் பார்க்காமல் நேசம் வளர்க்க முடியும் என்ற உன்னதமான சிந்தனையைத் தெளித்து, “போதை” தெளிவிக்கிற கலைத்தொண்டாக வந்திருக்கிறது பி.கே. சஞ்சய்தத், சவுரப் சுக்லா, சுஷாந்த்சிங் ராஜ்புத், போமன் இரானி ஆகியோரின் ஒத்துழைப்பான நடிப்பு, அஜய் அதுல், ஷாந்தனு மொய்த்ரா, அங்கிட் திவாரி ஆகியோரின் கூட்டு இசையினிமை, சி.கே. முரளிதரன் ஒளிப்பதிவுத் தெளிவு, அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி இருவரின் திரைக்கதை உரையாடல் கூர்மை எல்லாமாக இணைந்து பி.கே.யை மறக்க முடியாத படமாக்கியிருக்கின்றன. 
        “படம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் நீங்கள் பார்க்காதீர்கள், ஆனால் மற்றவர்கள் பார்க்கிற உரிமையைத் தடுக்காதீர்கள்,” என்று, இந்தப் படத்திற்குத் தடை விதிக்கக்கோரிய ஒரு அமைப்பின் மனுவைத் தள்ளுபடி செய்து, வரவேற்கத்தக்கதொரு தீர்ப்பை அளித்திருக்கிறது உச்சநீதிமன்றம். நீதி மன்றத்தின் ஆதரவோடுதான் இத்தகைய மாற்றுக் கலைமுயற்சிகள் மக்களிடம் வர முடியும் என்பது ஜனநாயகத்தில் கவலைக்குரிய போக்குதான். அதே நேரத்தில், இப்படிப்பட்ட படங்கள் பிடிக்காதவர்களும் இதைப் பார்க்க வேண்டும், இது எழுப்புகிற கேள்விகளுக்கான பதில்களைத் தேட வேண்டும். வேலிகள் தாண்டி மானுடம் வேர் விட்டுக் கிளை பரப்பிட அந்தத் தேடல் வழிவகுக்கும்.
நன்றி : தீக்கதிர்  

தேசம் காத்தல் செய்வோம்...! புதிய சபதமேற்போம்...!

                      இன்று புத்தாண்டு... இந்த புதிய ஆண்டில் என்ன தீர்மானத்தை நிறைவேற்றுவது...? புதிதாக என்ன சபதமேற்பது...? புகைப்பவர்களும், குடிப்பவர்களும் போடுகிற வெற்று சபதம் போல் அல்லாமல் சற்று வித்தியாசமாய் சபதமேற்போம்.         தேசம் காத்தல் செய்வோம்...!           
               தேசம் என்பது வெறும் மண்ணல்ல... தேசம்... நாடு என்று சொன்னால் நம் பார்வைக்கு அது ஒரு மண்ணாக மட்டும் தான் தெரியும்.  
ஆனால் 
தேசம் என்பது வெறும் மண்ணல்ல... உயிர்...
உயிரும் உணர்வும் கலந்த மனிதம்....    
வேற்றுமையிலும் ஒற்றுமை வளர்த்த மானுடம்....  
தாயாய் சகோதரியாய் துணைவியாய் 
மகளாய் அன்பை ஊட்டிய பெண்மணிகள்...
சேரியும் நகரமும் தந்த குழந்தை செல்வங்கள்...
வீரமும், மானமும், அறிவும், காதலும்...
மக்கள் பசியாற்றும்  உழவும், உழவனும்...
ஆடை, வீடு, பள்ளி, ஆலை, தொழில், சுகாதாரம்,
இயந்திரம், ஆயுதம் என அனைத்தும்
அவை அனைத்தும் தரும் உழைப்பாளியும்...
உழவும், தொழிலும், உழைப்பும், நிர்வாகமும்,
நீரும், நிலமும், காற்றும், வானும், மழையும், 
வயலும், பயிர்களும், ஆறும், ஏரி - குளமும், மணலும், 
கற்பாறையும், குன்றும், மலையும், பூமியும், காடும், 
மரமும்,கடலும், பறவைகளும், விலங்குகளும், 
மீன்களும் ஆன இயற்கையும்...
இயற்கை தரும் தீராத வளங்களும்...
கலை - இலக்கியமும், பண்பாடு - கலாச்சாரமும்,
அறிவியலும், அதனால் விளைந்த கண்டுபிடிப்புகளும்...
இரயிலும், பேருந்தும், வானூர்தியும், துறைமுகமும், காப்பீடும், 
வங்கியும், சுரங்கமும், தொலைத்தொடர்பும், குவியும் நிதியும்...
கல்வியும், பள்ளியும், கல்லூரியும், பல்கலைக்கழகமும்,
மருந்தும், மருத்துவமனையும், இராணுவமும்...
மக்கள் குறை தீர்க்கும் நாடாளுமன்றமும், நீதிமன்றமும்,
சுதந்திரமும், ஜனநாயகமும், குடியரசும், 
அரசியல் சாசனமும், நீதியும், சட்டங்களும் ...
ஆகிய இவை அனைத்தும் நம் தேசமே... 
அவை யாவும் நம் சொந்தமே... 
நாமிருக்கும் நம்  நாடு நமதென்பதை முதலில் நாம் அறிவோம்...
உணர்வோம்.... உணர்ந்து செயல்படுவோம்...
மேலே சொன்ன அத்தனை வளங்களையும் பெற்ற 
நம் தேசத்தை அந்நியர்க்கு அள்ளிகொடுத்தல் 
என்ன நீதி...?
தேச நலனுக்கு எதிராக மதத்தின் பேரால் - 
சாதியின் பேரால் தேசத்தையே கூறு போடவும்,
தேச வளங்களை அந்நியர்க்கு அள்ளிக்கொடுத்திடவும்
நாம் அனுமதித்தல் வேடிக்கைப் பார்த்தல் நீதியாகாது.
நம் பாட்டன் பாரதி கற்றுத்தந்த பாடத்தை மறந்திடலாமோ...?
எனவே இந்த புத்தாண்டில் சபதமேற்போம்....!
தேசம் காத்தல் செய்வோம்...! 
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் தோழமையே...!