வெள்ளி, 23 ஜனவரி, 2015

ஒபாமாவுக்கு இன்சூரன்ஸை படையல் வைக்கும் மோடி...!


 இன்று தீக்கதிர் நாளிதழில் பிரசுரிக்கப்பட்ட நான் எழுதிய கட்டுரை :-        

 இன்சூரன்ஸ் அவசர சட்டம் - அன்றும் இன்றும்           
           
                   1956 - ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ஆம் தேதி வியாழக்கிழமை மாலை - புதுடெல்லி அகில இந்திய வானொலியில் ஓர்  அறிவிப்பு வந்தவண்ணம் இருக்கிறது. ''இன்னும் சற்று நேரத்தில் நமது நாட்டின் நிதியமைச்சர் திரு.சி.டி.தேஷ்முக் வானொலியின் மூலம் மக்களிடம் உரையாற்றப்போகிறார். அவரது உரையை நாட்டின் அனைத்து வானொலி நிலையங்களும் அஞ்சல் செய்யும்'' என்ற அறிவிப்பு மட்டும் அவ்வப்போது  இடைவெளி விட்டு அறிவிக்கப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் எதைப்பற்றிப் பேசப்போகிறார் என்ற தகவல் அந்த அகில இந்திய வானொலி  நிலைய இயக்குனருக்குக்கூட தெரிவிக்கப்படவில்லை. இன்னும் சொல்லவேண்டுமென்றால், நேருவும்  தன் அமைச்சரவையில் உள்ள மற்ற அமைச்சர்களுக்கே கூட தேஷ்முக் எதைப்பற்றி பேசப்போகிறார் என்ற தகவலை  தெரிவிக்கவில்லை. ஆனால்  அறிவிப்பு மட்டும் வந்துகொண்டே இருக்கிறது. மக்களும் என்னவென்று புரியாமல் ஆவலாய் காத்திருக்கிறார்கள்.
              இரவு சரியாக 8.30 மணி - மத்திய நிதியமைச்சர் வானொலியில் பேசினார். மக்கள் எல்லோரது காதுகளும் வானொலியில் பொருந்தியிருக்கிறது. பேசத்தொடங்கிய நிதியமைச்சர் வானொலியை கேட்டுக்கொண்டிருந்த இந்திய மக்களின் காதுகளில் தேனைப் பாய்ச்சினார். ''இந்த நிமிடம் முதல் தனியார்வசமிருக்கின்ற இன்சூரன்ஸ் துறை அவசர சட்டத்தின் மூலம் தேசவுடைமை செய்யப்படுகிறது'' என்ற வரலாற்று சிறப்புமிக்க செய்தியை அறிவித்தார். அந்த நேரத்தை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் தங்களது கணக்கு வழக்குகளை முடித்து அலுவலகங்களை மூடும் வரையில் நேருவும், தேஷ்முக்கும் காத்திருந்தார்கள். அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டதை உறுதி செய்யப்பட்டபிறகே நிதியமைச்சர் வானொலியில் அறிவித்தார். அதற்காகவே அவர்கள் இரவு 8.30 மணி வரை  காத்திருக்கவேண்டியிருந்தது. நேரு இந்த அவசரசட்டத்தை பற்றிய அறிவிப்பை வெளியிடுவதில் அவசரம் காட்டாமல், மிகவும் புத்திசாலித்தனத்துடனும் நிதானத்துடனும் செயல்பட்டார். அனைத்து தனியார் இன்சூரன்ஸ் அலுவலகங்களும் தங்களது  கணக்கு வழக்குகளை முடித்துவிட்டு அலுவலகத்தை மூடியபிறகு, அவசர சட்டத்தின் அறிவிப்பு வானொலியில் வெளியிடப்பட்டது. அப்படி அறிவிப்பு வெளியானவுடன், அதுவரையில் இரகசியமாக தயார்நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மத்திய காவல்துறையினர் பூட்டப்பட்ட தனியார் இன்சூரன்ஸ் நிறுவன அலுவலகங்களை கைப்பற்றி சீல் வைத்துவிட்டார்கள். அதனால் அந்த நிறுவனங்கள் அதுவரை சேர்த்துவைத்திருந்த  சொத்துகளும், மக்களின் நிதியும் சேதாரம் இல்லாமல் காப்பாற்றப்பட்டன.  இந்த விஷயத்தில் நேரு மற்றும் தேஷ்முக் இருவரும் சேர்ந்து செயல்படுத்திய தந்திரம் பாராட்டுதற்குரியது.

ஏன் அந்த அவசர சட்டம்...?              

                 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி அன்று தேசம் சுதந்திரம் அடைந்தபிறகு சுதந்திர இந்தியாவில் 245 தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் டாட்டா, பிர்லா, கோயங்கா போன்ற அன்றைய பெருமுதலாளிகளால் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டன. இதில் பெரும்பாலான தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு  தரவேண்டிய உரிமங்களை சரியான முறையில் தருவதில்லை என்பது மட்டுமல்ல. குவிந்திருக்கும்  மக்களின்  சேமிப்பு நிதியை  ஒரு நாள் இரவோடு இரவாக சுருட்டிக்கொண்டு கம்பெனியையே  காலி செய்து ஊரைவிட்டே ஓடிவிடுவார்கள். மக்களை ஏமாற்றுவதும், அவர்கள் பணத்தை கொள்ளையடிப்பதும் தான் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி முதலாளிகளின் வேலையாக இருந்தது. அப்போது தான் 1907-ஆம் ஆண்டு அன்றைய கல்கத்தாவில் ரவீந்தரநாத் தாகூரினால் தொடங்கப்பட்ட ஹிந்துஸ்தான் கோ-ஆபரேடிவ் லைப் அஷ்யூரன்ஸ் சொசைட்டி என்ற இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை செய்துவந்த ஊழியர்கள் தோழர்.சரோஜ் சவுத்ரி போன்ற தலைவர்களின் தலைமையில் மற்ற இன்சூரன்ஸ் கம்பெனிகளில் பணிபுரிந்துவந்த ஊழியர்களையும் இணைத்து, 1951-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதியன்று அன்றைய பம்பாயில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் என்ற தொழிற்சங்கத்தை தொடங்கினார்கள். ஊதிய உயர்வு வேண்டும், போனஸ் வேண்டும், பதவி உயர்வு வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்து அந்த தொழிற்சங்கத்தை தொடங்கவில்லை. ''இன்றைக்கு நாட்டிலிருக்கும் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி முதலாளிகள் தனது வாடிக்கையாளர்களுக்கு சரியான முறையில் உரிமங்களை தருவதில்லை. மக்களின் சேமிப்பு நிதியை கொள்ளையடித்து சென்றுவிடுகிறார்கள். அதனால் தனியார்வசமிருக்கும் இன்சூரன்ஸ் துறை தேசவுடைமை செய்யப்படவேண்டும்'' என்றக் கோரிக்கையுடன் தான் அன்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தை தொடங்கினார்கள்.
              அதேப்போல் பாராளுமன்றத்திலும் அன்றைய ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியும் இதே கருத்தை வலியுறுத்தி இன்சூரன்ஸ் துறை தேசவுடைமை செய்யப்படவேண்டும் என்று போராடினார்கள். அதே நேரத்தில் இன்னொரு பக்கம் Dr.அம்பேத்கர் அவர்களும் இன்சூரன்ஸ் துறை தேசவுடைமையை வற்புறுத்தினார். அன்றைய பிரதமர் நேருவும் முதலாளிகளின் பக்கம் தான் என்பதால் இந்த கோரிக்கைகளையோ, போராட்டங்களையோ அவர் கருத்தில் கொள்ளவில்லை. ஆனால் 1955-ஆம் ஆண்டு இறுதி வாக்கில் நேரு இன்சூரன்ஸ் துறை தேசவுடைமைப் பற்றி யோசித்தார். ஆனால் தனியார் முதலாளிகள் மக்களின் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். வாடிக்கையாளர்களை ஏமாற்றுகிறார்கள் என்றெல்லாம் அவர் சிந்திக்கவில்லை. மக்களுக்கு இன்சூரன்ஸ் சேமிப்பின் மீது ஏராளமான நம்பிக்கை இருக்கிறது. 245 தனியார் கம்பெனிகளிலும் நிறைய பேர் சேருகிறார்கள். அனைத்து கம்பெனிகளிலும் மக்களின் சேமிப்பு நிதி நிறைய குவிகிறது. இந்த 245 கம்பெனிகளும் ஒரே அரசுத்துறை நிறுவனமாக இருந்தால் குவியும் மக்களின் சேமிப்பு நிதியை அரசின் நலத்திட்டப் பணிகளுக்கு பயன்படுத்தலாமே என்ற நோக்கத்தோடு தான் நேரு தேசவுடைமையை  பற்றி யோசித்தார். கிராமப்புற மக்களுக்கும் இன்சூரன்ஸ் -இன் பலன்களை கொண்டு சேர்க்கலாம் என்பதும் தேசவுடைமைக்கான இன்னொரு காரணமாக நேரு யோசித்தார்.

வரலாற்று சிறப்புமிக்க நாள்                

               ஆனால் நேரு தனது யோசனையை தனது கேபினெட் கூட்டத்தை கூட்டி தெரிவிக்கவில்லை. காரணம் தனது மந்திரிகளும் முதலாளிகளின் பக்கம் தான் நிற்பார்கள். அதனால் தனது இந்த முயற்சியை தடுத்து நிறுத்திவிடுவார்கள் என்ற அச்சத்தில், அவரது நிதியமைச்சர் திரு.சி.டி.தேஷ்முக் அவர்களிடம் மட்டுமே தெரிவித்தார். திரு.தேஷ்முக் அவர்களும் இன்றைய நிதியமைச்சர்களை போலல்லாமல், தேசத்தின் மீதும், மக்களின் மீதும் அக்கறையுள்ள நிதியமைச்சர் என்பதால் நேருவின் யோசனையை வரவேற்றார். ஏற்றுக்கொண்டார். பிறகு தான் நேரு மற்றும் தேஷ்முக் இருவர் மட்டும் இந்த யோசனையை தங்களுக்குள் இரகசியமாக வைத்திருந்து,  முதலில் மக்களிடம் தெரிவித்துவிடவேண்டும். அப்போது தான் இந்த முயற்சியை யாராலும் தடுக்கமுடியாது என்று இருவருமாக முடிவெடுத்தார்கள். அந்த நாள் தான் 1956 - ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 - ஆம் தேதி என்பதை மக்களின் மீது அக்கறையுள்ள யாராலும் மறக்கமுடியாத நாள். ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள். இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளில் தான் தனியார்வசமிருந்த இன்சூரன்ஸ் துறை ''அவசர சட்டத்தின்'' மூலம் தேசவுடைமை செய்யப்பட்டது. அதன் பிறகு பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு அனைவரின் வரவேற்புடனும், பாராட்டுகளுடனும் நிறைவேற்றப்பட்டு, வெறும் ரூ.5 கோடி மத்திய அரசின் முதலீட்டுடன் ''இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம்'' அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி தொடங்கப்பட்டு, கடந்த 58 ஆண்டுகளாக  மக்கள் நலப்பணிகளையும், தேச நலப்பணிகளையும் மிகச் சிறப்பாக மக்களின் பாராட்டுகளோடும், திருப்தியோடும் செய்து ஒரு அரசு நிறுவனமாக திகழ்ந்துவருகிறது. அதன் ஊழியர்களும் எந்த நோக்கத்தோடு சங்கம் அமைத்துப் போராடினார்களோ அதில் சிதைவில்லாமல் அர்ப்பணிப்புணர்வுடன் சேவை கலந்து  பணியாற்றி வருகிறார்கள்.
              வெறும் 5 கோடியில் உருவான எல்.ஐ.சி இன்று ரூ.18,00,000 கோடி அளவிற்கு மக்கள் சொத்துகளை கோபுரமாய் குவித்திருக்கிறது. வங்கியில் ஆயுள் நிதியாக ரூ.16,00,000 கோடி அளவிற்கு சேமித்து வைத்திருக்கிறது. சென்ற ஆண்டு மட்டும் எல்.ஐ.சி மத்திய அரசிற்கு இலாபத்தில் பங்காக (டிவிடெண்ட்) ரூ.1629 கோடிகளை அள்ளிக்கொடுத்திருக்கிறது. இது மத்திய அரசின் 5 கோடி முதலீட்டிற்கானது. ரூ.1629 கோடி என்பது அரசின்  5 கோடி முதலீட்டிற்கு  32,000 சதவீதம் ஆகும். இதுவே ஒரு உலக சாதனையாகும். உலகில் எந்த நிறுவனமும் தன்னுடைய முதலீட்டாளருக்கு தனது இலாபத்தின் பங்காக இவ்வளவு சதவீதம் கொடுத்திருக்கிறார்களா தேடிப்பாருங்கள். அதுமட்டுமல்ல எல்.ஐ.சி கடந்த 58 ஆண்டுகளாக மத்திய அரசிற்கு ரூ.5 கோடிக்காக கொடுத்த மொத்த டிவிடெண்ட்  ரூ.12,500 கோடியை தாண்டும் என்பது மலைப்பானது. இவ்வளவு வளத்திற்கும், வளர்ச்சிக்கும்  எல்.ஐ.சி-யில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் முகவர்களின் அர்ப்பணிப்புணர்வுடனும் சேவை உணர்வுடனும் கூடிய  இலஞ்சமும், ஊழலும் இல்லாத அயராத பணிகளே மிக  முக்கிய காரணமாகும்.

இன்று புதிய அவசர சட்டம் ஏன்....?               

                 இன்றைக்கு இந்திய தேசத்தின் வளங்கொழிக்கும் பொதுத்துறை நிறுவனங்களில் எல்.ஐ.சி-யும் ஒன்று. வெறும் 5 கோடியில் எல்.ஐ.சி என்ற ஒரே இன்சூரன்ஸ் நிறுவனம் இத்தனை வளர்ச்சி பெற்றிருக்கிறது. மக்களின் பங்களிப்போடு கொழுத்து வளர்ந்த இந்திய இன்சூரன்ஸ் துறையை அப்படியே விழுங்கி அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது தனியார்மய - தாராளமய அகோரப்பசியை தீர்த்துக்கொள்ள நினைத்தது. அந்த அகோரப்பசிக்கு 1999 -ஆம் ஆண்டு அன்றைய பாரதீய ஜனதாக்கட்சி தலைமையிலான வாஜ்பாய் அரசு தீனிப் போட்டது. அரசிடம் மட்டுமிருந்த இன்சூரன்ஸ் துறை மீண்டும் தனியாருக்கு திறந்துவிடப்பட்டது. அதில் 26 சதவீதம் அளவிற்கு அந்நிய நேரடி முதலீடும் மனசாட்சியில்லாமல் அனுமதிக்கப்பட்டது. ஆனால் அது ''யானைப்பசிக்கு சோளப்பொறி'' போலானது.   அதனால் அமெரிக்காவின் அகோரப்பசி தீரவில்லை. 100 சதவீதத்தை நோக்கியே  அமெரிக்காவின் வெறிபிடித்த கோர நாக்கு நீண்டது. ஆனால் அன்று நேரு நிறைவேற்றிய அன்றைய சட்டம் ஒரேயடியாக 100 சதவீதம் என்பதை அனுமதிக்கவில்லை. 26, 49, 74 என்றளவில் படிப்படியாக தான் 100 சதவீதத்தை அடையமுடியும். எனவே தான் வாஜ்பாய் 26 சதவீதத்திற்கு பிள்ளையார் சுழிப்போட்டு, பிறகு 49 சதவீதத்திற்கு முயற்சி செய்தார். எல்.ஐ.சி ஊழியர்கள், இடதுசாரி கட்சிகள் போராட்டத்தின் காரணமாக அவரால் முடியவில்லை. பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான மன்மோகன் சிங் அரசும் 49 சதவீதத்திற்கு முயற்சி செய்தது. ஆனால் 2004-2009 ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு இடதுசாரி கட்சிகளின் ஆதரவோடு நடத்தப்பட்ட ஆட்சி என்பதால், 49 சதவீத அந்நிய நேரடி முதலீட்டு உயர்வை இடதுசாரிகள் தடுத்து நிறுத்தினார்கள். அந்த ஐந்து ஆண்டுகளில் எவ்வளவோ முயற்சி செய்தபோதும் மன்மோகன் சிங்கினால் 49 சதவீதத்தை எட்டமுடியவில்லை.
            இதனால் அமெரிக்காவிற்கு இடதுசாரிக்கட்சிகளின்  மீது எரிச்சலும் கோபமும்  உண்டாகியது. அமெரிக்கன் இன்சூரன்ஸ் கவுன்சில் எரிச்சலுடன், ''49 சதவீத உயர்வுக்கே இவ்வளவு காலத்தையும் நேரத்தையும் எடுத்துகொண்டால், 100 சதவீதத்தை எப்போது எட்டுவது'' என்று கேள்வி எழுப்பியது. அன்றைய தினம் இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக பணிபுரிந்து வந்த டேவிட் முல்போர்டு என்பவரும் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் மிகுந்த எரிச்சலுடன், ''இந்திய அரசு  இன்சூரன்ஸ் துறையில்  அந்நிய நேரடி முதலீட்டினை 49 சதவீதமாக உயர்த்தவில்லையென்றால்  அது அமெரிக்காவிற்கு செய்கிற துரோகம்'' என்று வெளிப்படையாக பேசினார். 2008-ஆம் ஆண்டு இறுதியில் மன்மோகன் சிங் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் விளைவாக அவரது அரசுக்கு கொடுத்துவந்த ஆதரவினை இடதுசாரிகள் திரும்பப்பெற்றுக்கொண்டார்கள். எதை எடுத்தால் இடதுசாரிக்கட்சிகளுக்கு கோபத்தை தூண்டுமோ, அதே சமயத்தில் அமெரிக்காவிற்கு சந்தோஷத்தை வரவழைக்குமோ அதை மன்மோகன் சிங் கையில் எடுத்தார். ''இன்சூரன்ஸ் திருத்த மசோதா 2008'' என்ற இன்சூரன்ஸ் துறையில் 49 சதவீத அந்நிய நேரடி முதலீட்டினை அனுமதிக்கும் புதிய மசோதா ஒன்றை, பாராளுமன்றத்தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் புத்திசாலித்தனமாக மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தோழர்.டி.கே.ரங்கராஜன் அவர்கள் எழுந்து சென்று மசோதாவை தாக்கல் செய்து படித்துக்கொண்டிருந்த அமைச்சரின் கையிலிருந்து பிடுங்கி கிழித்து எறிந்தார். அவர் ஒன்றும் எல்.ஐ.சி-யில் பணிபுரியும் ஊழியரோ அல்லது முகவரோ அல்ல. இந்த தேசத்து உழைப்பாளி மக்களின் சேமிப்பு நிதியை அந்நிய முதலாளிகள் கொள்ளை கொண்டுபோக சட்டத்தின்  மூலம் அரசே ஏற்பாடுகளை செய்கிறதே என்ற கோபம் அவரை அப்படி செய்யவைத்தது. பிறகு இடதுசாரிகளின் எதிர்ப்பின் காரணமாக அந்த மசோதா பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பட்டது. அப்போதைக்கு அந்த மசோதா நிறைவேற்றப்படாமல் இடதுசாரிக்கட்சிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.
            தனது அகோரப்பசி தீராதற்கு இடதுசாரிகளே காரணம் என அமெரிக்கா கருதியது. அதனால்  2009 -ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் தன்னுடைய திட்டங்களுக்கு இடையூறாக இருக்கக்கூடிய இடதுசாரிகளின் எண்ணிக்கையை குறைக்கவேண்டும் என்ற வெறித்தனத்துடன்   இந்திய பாராளுமன்றத்தேர்தலில் அமெரிக்கா திட்டமிட்டு தனது மூக்கை நுழைத்தது. அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ-வும், அமெரிக்க தூதர்களும் கைகோர்த்து காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் வேலை பார்த்தார்கள். பாராளுமன்றத்தில்  இடதுசாரிகளின் எண்ணிக்கை குறைந்து போனாலும், 2009-2014 ஆண்டுகளில் மன்மோகன் சிங் 49 சதவீதமாக  உயர்த்த முயற்சி செய்தபோதெல்லாம் இடதுசாரிகள் பாராளுமன்றத்தில் அரசின் செயலை எதிர்த்து போராடினார்கள். அதன் காரணமாக மன்மோகன் சிங்கினால் 49 சதவீதத்தை  நெருங்கக்கூட முடியவில்லை. அவரால்  மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. அதனால் அமெரிக்கா அவரை ''இயங்காத பிரதமர்'' என்று வசைபாடியது.
                     பிறகு தான் 2014- ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தல் வந்தது. தேர்தல் வேலைகளை இந்திய பெருமுதலாளிகள் தங்கள் கையில் எடுத்துக்கொண்டார்கள். தாங்கள் நினைப்பது போல் ''வேகமாக செயல்படக்கூடிய பிரதமர்''  யார் என்பதை முதலில் அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். பிறகு அதையே ஊடகங்களை பயன்படுத்தி மக்களின் மூளைகளிலும் திணித்தார்கள். பல கோடிகளை  செலவு செய்து தேர்தல் முடிவை  அவர்களுக்கு சாதகமாக நிறைவேற்றிக்கொண்டார்கள். இப்போது நரேந்திர மோடி என்ற ''சாகசக்காரர்'' தலைமையில் பாரதீய ஜனதாக்கட்சி பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சிக்கு வந்தது. பிரதமர் பதவியேற்றதும் மோடி தேர்தலின் போது ஓட்டுக்காக மக்களின் முன் வைத்த ''அஜெண்டாவை'' தூக்கி எறிந்தார். தேர்தலின் போது திரைக்குப்பின்னால் அமெரிக்கா, இந்திய பெருமுதலாளிகள், மதவெறிபிடித்த ஆர்.எஸ்.எஸ் போன்றவர்கள் தனக்கு கொடுத்த ''அஜெண்டாக்களை'' தூக்கிப்பிடித்தார். பதவியேற்றவுடனேயே இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவீதமாக பாராளுமன்ற முதல் கூட்டத்தொடரிலேயே உடனடியாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு தனது அமெரிக்க எஜமான விசுவாசத்தை காட்டிக்கொண்டார். ஆனால் பாராளுமன்றத்தின் உள்ளே இடதுசாரிக்கட்சிகள் நடத்திய போராட்டங்களின் காரணமாகவும், வெளியே எல்.ஐ.சி ஊழியர்கள் மற்றும் முகவர்கள் மக்களை இணைத்து நடத்திய போராட்டங்களின் காரணமாகவும் முதல் கூட்டத்தொடரில் மட்டுமல்ல, முடிந்துபோன குளிர்கால கூட்டத்தொடரில் கூட 49 சதவீத உயர்வுக்கான அந்த மசோதாவை மோடி தலைமையிலான அரசு நிறைவேற்றமுடியாமல் திணறிப்போனது.
                 அந்த மசோதா நிறைவேற்ற முடியாமல் போனதால், தனது ''தனது எஜமான விசுவாசத்தை'' காட்டமுடியாமல் மோடி ஏமாற்றமடைந்தார். அதுமட்டுமல்ல முன்னெப்போதும் இல்லாத வழக்கமாக, வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்திய குடியரசு தின விழாவின் ''சிறப்பு விருந்தினராக'' அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை நரேந்திரமோடி அழைத்திருக்கிறார். அப்படியாக இந்தியாவிற்கு வருகைபுரியும் ஒபாமாவிற்கு தனது சார்பில் அளிக்கப்படும் விருந்தில் ''49 சதவீத இன்சூரன்ஸ்'' என்ற ''கெடாவை'' வெட்டி விருந்தளித்து ஒபாமாவை குஷிப்படுத்த முடியவில்லையே என்ற ஏமாற்றம் பிரதமர் மோடியை வெறியாக்கியது. நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரிலும் இன்சூரன்ஸ் மசோதாவை நிறைவேற்றமுடியவில்லை. வரும் 26-ஆம் தேதிக்குள் வேறு கூட்டத்தொடருக்கும் வாய்ப்பில்லை. எனவே பிரதமர் மோடி ஒபாமா வருகைக்கு முன்பே இன்சூரன்ஸ் துறையை பலி கொடுக்க துணிந்தார். குளிர்கால கூட்டத்தொடர் முடிந்த அடுத்தநாளே ஜனநாயகத்தை குழித்தோண்டி புதைத்து குறுக்கு வழியில் செல்ல முடிவெடுத்தார். மந்திரிகளை கூட்டி இன்சூரன்ஸ் துறையில் 49 சதவீத அந்நிய நேரடி முதலீட்டு உயர்வை ''அவசர சட்டத்தின்'' மூலம் நடைமுறைப்படுத்தி ஒபாமாவிற்கு படையல் வைப்பது என்று முடிவெடுத்து அனுப்பப்பட்டு, சென்ற 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று இந்திய குடியரசு தலைவர் இன்சூரன்ஸ் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார். அப்போதும் கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர். சீத்தாராம் யெச்சூரி அவர்கள், அவசர சட்டத்தில் உள்ள அபாயத்தை எடுத்துரைத்து, நாட்டின் நலன் கருதி அதில் கையெழுத்திடவெண்டாம் என்று குடியரசுத்தலைவருக்கு ஆலோசனை வழங்கி கடிதம் அனுப்பினார். அதையும் மீறி குடியரசுத்தலைவர் கையெழுத்திட்டுவிட்டார். 
                 ''மக்கள் பணம் மக்களுக்கே'' என்ற அடிப்படையில் மக்களின் சேமிப்பு நிதியை பாதுகாத்து அவர்களுக்கே செலவிடப்படவேண்டும் என்று கருதி 1956-ஆம் ஆண்டு கொண்டுவந்த இன்சூரன்ஸ் அவசரசட்டம் எங்கே...? ''இந்திய மக்கள் பணம் அந்நியருக்கே'' என்று கூசாமல் எடுத்துக்கொடுக்க 2014-ஆம் ஆண்டில் கொண்டுவந்த இந்த அவசரசட்டம் எங்கே...? நீங்களே சிந்தியுங்கள். இன்றைய மோடி தலைமையிலான அரசு யாருக்காக ஆட்சி செய்கிறது...?                                     
நன்றி : தீக்கதிர் / 22.01.2015

கருத்துகள் இல்லை: