சனி, 18 ஆகஸ்ட், 2012

தன் பள்ளி மாணவனின் உயிரைக் குடித்த ஒய்.ஜி.பி. பாட்டியை ஏன் இன்னும் கைது செய்யவில்லை...?


                கல்வி வணிகமயத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டு கடந்த பல ஆண்டுகாலமாக கல்விக் கொள்ளையில் திறமையாக ஈடுபட்டு வருபவர் பத்மா சேஷாத்திரி பள்ளியின் தாளாளர் திருமதி ஒய்.ஜி.பி. பாட்டி தான். அந்த பள்ளியை வசதி படைத்தவர்கள் மட்டுமே நெருங்க முடியும். பணம் பறிப்பதற்கென்றே தன்  பள்ளிக்கூடத்தை ஒரு ஸ்டார் ஹோட்டல் மாதிரியே  நடத்துகிறார். அடுக்கு மாடி கட்டிடம். நீச்சல் குளம் இருக்கிறது. குதிரை ஏற்றம் இருக்கிறது. குழந்தைகள் சென்று வர பஸ் வசதி வேறு. இவைகள் எல்லாம் பணத்தை பறிப்பதற்கான ஏற்பாடுகள். இவைகளை எல்லாம் பார்த்து வசதி படைத்தவர்கள் முட்டி மோதி தங்கள் குழந்தைகளை இங்கே சேர்த்து விட்டு பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
             இப்படிப்பட்ட பள்ளியில் தான் அண்மையில்  காலை நீச்சல் பயிற்சியின் போது 4 - ஆம் வகுப்பு படிக்கின்ற  ரஞ்சன் என்ற மாணவன்  முறையான பயிற்சியாளர் இல்லாமல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த அதிர்ச்சிகரமான சம்பவம் என்பது நடைபெற்றது. ''தரமான கல்வி'' என்ற பெயரில் தனியார் கல்வி முதலாளிகளின் இலாபவெறி  பள்ளிக் குழந்தைகளை படுகொலை செய்வது  என்பது அன்றாடம்  நடக்கும் மிகப்பெரிய பயங்கரம். இவர்களுக்கு பணம் மட்டுமே குறிக்கோள், குழந்தைகளின் உயிர் ஒரு பொருட்டல்ல. 
          இப்படிப்பட்ட கொலை என்பது வகுப்பு  நேரத்திலேயே  தன்  பள்ளியில் நடந்திருக்கிறது. தன்  நிர்வாகத்தின் கோளாறு - அலட்சியம் -  குழந்தைகள் மீது அக்கறையின்மை இவைகள்  காரணமாகத்  தான் நடந்திருக்கிறது என்று பள்ளியின் தாளாளர்  திருமதி ஒய்.ஜி.பி. பாட்டியே  முன் வந்து கைதாகி இருக்கவேண்டும். ஆனால் அப்படி செய்யவும் இல்லை. அதேப்போல், அண்மையில் அலட்சியம் காரணமாக ஒரு பள்ளி மாணவி உயிரிழந்த போது  சியோன் பள்ளி தாளாளரை கைது செய்த தமிழக அரசு - பத்து தொழிலாளர்களை பலிகொண்ட தனியார் கல்வி நிறுவனத்தின் தாளாளர் ஜேப்பியாரை  கைது செய்த தமிழக அரசு, இந்த சிறுவன் ரஞ்சன் படுகொலைக்கு காரணமான இந்த ஒய்.ஜி.பி. பாட்டியை மட்டும் தமிழக அரசு ஏன் கைது செய்யவில்லை...? எது தடுகிறது...? 
           ''ஏதோ ஒரு உணர்வால்'' தமிழக அரசு அண்மையில்  இந்த ஒய்.ஜி.பி. பாட்டிக்கு ''அவ்வையார் விருது'' வழங்கி கவுரவப்படுத்தி இருக்கலாம். அதற்காக இவர் என்ன ''பிச்சை புகினும் கற்கை நன்றே'' என்று சொன்ன அவ்வையார் பாட்டியா - கைது செய்யாமல் இருக்க...?  இவர் யார் தெரியுமா...?  சென்ற ஆண்டு சமச்சீர் கல்வி வருவதை எதிர்த்து முழுமூச்சுடன் போராடிய பார்ப்பன - மேட்டுக்குடி கூட்டத்திற்கு  தலைமை தாங்கியவர் இவர் தான். 
             ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு சமச்சீர் கல்வி பாடத்திட்டம் சம்பந்தமாக போடப்பட்ட குழுவில் இடம்பெற்றிருந்த இந்த  ஒய்.ஜி.பி. பாட்டி சமச்சீர் கல்வி திட்டத்தில் உருவாக்கப்பட்ட புதிய பாடங்கள் எதுவும்  தரமானதாக இல்லை என்று சொல்லி அந்த திட்டத்தை நடைமுறை படுத்தப்படாமல் சீர்குலைக்கவே  வாதிட்டவர். கல்வி வணிகமயத்தின் மூலம் கல்விக் கொள்ளையை தடையின்றி செய்யும் மற்ற கல்விக் கொள்ளையர் கூட்டத்திற்கெல்லாம் இந்த பாட்டி தான் முன்னோடியானவர். 
            அதுமட்டுமல்ல,  ''அனைவருக்கும் கல்வி'' திட்டத்தின் படி 25 சதவீத வசதி குறைவான மாணவ -  மாணவியருக்கு தனியார் பள்ளிகள் இடமளிக்க வேண்டும் என்கிற மத்திய அரசின் சட்டத்தையே தூக்கி எறிந்தவர். அதை எதிர்த்து '' வசதிபடைத்த எங்கள் குழந்தைகளோடு வசதியில்லாத குழந்தைகளும் சேர்ந்து படிப்பதா..?'' என்று தன்  பயிலும் மாணவ - மாணவியரின்  பெற்றோர்களிடமிருந்து கடிதங்களை பெற்று போராடி இன்றுவரை அந்த சட்டத்தையே மதிக்காதவர். அரசியல் சாசனத்தையே மதிக்காத குற்றத்திற்காக தமிழக அரசு அந்த பள்ளியின் அனுமதியை  ரத்து செய்ய வேண்டும் அல்லது அந்தப் பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும். 

1 கருத்து:

hakeem சொன்னது…

parpanam enduru indiavai vitu thuratha padugiratho appothu than india munneaitra pathail sellum