பொதுவிநியோக முறை மூலமாக உணவுப் பாதுகாப்பினை வலியுறுத்தி தலைநகர்
தில்லியில் நாடாளுமன்றத்திற்கு முன்பாக இடதுசாரிக் கட்சிகள் நடத்திய தர்ணா
போராட்டம் எதிர்பார்த்ததைவிட அதிகமான அளவில் மக்கள் பங்கேற்புடன் மகத்தான
வெற்றி பெற்றுள்ளது. (அன்னா ஹசாரே நடத்திய உண்ணாவிரதப் போராட்டம், பக்கத்திலேயே நடைபெற்ற போதிலும் அங்கு கூடும் மக்களைவிட மிகப் பெருவாரியான
மக்கள் நம் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த போதிலும், கார்ப்பரேட்
ஊடகங்கள் அதனைக் கண்டுகொள்ளாது வழக்கம்போலவே அடக்கி வாசித்துக்
கொண்டிருந்தன).
இந்த நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கமானது, உணவுப்
பாதுகாப்பு தொடர்பாக அமைத்திருந்த அதிகாரமளிக்கப்பட்ட மத்திய அமைச்சரவைக்
குழுவைக் கலைத்துவிட்டதாக அறிவிப்பு வந்திருக்கிறது.
உணவுப்
பாதுகாப்பு தொடர்பாக எந்த அளவிற்கு அரசாங்கம் மிகவும் மனிதாபிமானமற்ற
முறையில் சொரணையற்று நடந்து கொண்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. இதே
சமயத்தில்தான் மத்திய வேளாண் அமைச்சர், இந்த ஆண்டு வறட்சியை எதிர்கொள்ள
நாடும் நாட்டு மக்களும் தயாராய் இருக்க வேண்டும் என்று அபாய அறிவிப்பை
வெளியிட்டிருக்கிறார்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் திங்களில் பருவமழை நிலைமை எதிர்பார்த்த அளவிற்குப் பெய்ய வாய்ப்பில்லை என்று கூறிய அவர்,
வேளாண்மை உற்பத்தி அதிகமாக நடைபெறும் பஞ்சாப் மாநிலத்தில் 68 விழுக்காடு
அளவிற்கும், ஹரியானாவில் 70 விழுக்காடு அளவிற்கும் பருவமழை பெய்யாது
பொய்த்துவிடும் என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர், ராஜஸ்தானில் 61
விழுக்காடு, தென் கர்நாடகாவில் 47 விழுக்காடு, மத்திய மகாராஷ்டிராவில்
38 விழுக்காடு, குஜராத்தில் கட்ச் மற்றும் சௌராஷ்ட்ரா மண்டலத்தில் 76
விழுக்காடு மழை பெய்யாது பொய்த்துவிடும் என்றும் கூறியிருக்கிறார். இவ்வாறு
நிலைமைகளில் முன்னேற்றம் இருக்காது என்று அரசுத்தரப்பில்
அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டிருப்பதானது, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை மேலும் அதிகரிப்பதற்கு இட்டுச் சென்றுள்ளது. ஊடகங்களில் வந்துள்ள தகவல்களின்படி, மும்பையில் அரிசி விலை 18.5 விழுக்காடு
உயர்ந்திருக்கிறது. அதேபோன்று கோதுமை 12.5 விழுக்காடும், பருப்பு வகைகள்
13.8 விழுக்காடும், சர்க்கரை 8 விழுக்காடும், உருளைக் கிழங்கு 10
விழுக்காடும் அதிகரித்திருக்கின்றன.
சமையல் எண்ணெய்களின்
விலைகளும் உயரும்போது நிலைமைகள் மேலும் மோசமாகும். நாட்டின் சமையல்
எண்ணெய் நுகர்வில் சுமார் 60 விழுக்காடு இறக்குமதி மூலமாகச் சரி செய்யப்படுகிறது. சமையல் எண்ணெய்களின் சர்வதேச விலைகள் உயர்ந்து கொண்டிருப்பதும்,
நம் நாட்டின் ரூபாய் மதிப்பு வீழ்ந்து கொண்டிருப்பதும், இறக்குமதி
செய்யப்படும் சமையல் எண்ணெய்களின் விலைகளை மேலும் பன்மடங்கு உயர்த்தப்
போகின்றன. மத்திய அரசு தன் கிடங்குகளில் உணவு தானியங்களை மிகையாக இருப்பு
வைத்திருக்கிறது. இருந்தபோதிலும் அதனை மாநிலங்களுக்கு வறுமைக்
கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு அளிக்கப்படும் விலைகளில் கொடுக்க
மறுக்கிறது. மாறாக வெளிச்சந்தை விலையில் வாங்குவதற்கு மாநில அரசுகள்
மறுக்கின்றன என்றும் இதனால் பத்து மில்லியன் டன் கோதுமையை அனுப்ப
முடியவில்லை என்றும் குறைபட்டுக் கொண்டிருக்கிறது. மாநில அரசுகள்,
அவற்றைத் தங்களுக்கு வறுமைக் கோட்டுக்குக் கீழானவர்களுக்கு அளிக்கப்படும்
விலையில் அளித்திட வேண்டும் என்று நியாயமானமுறையில் கோரி வருகின்றன. மக்கள்
பட்டினியால் மடிந்தாலும் பரவாயில்லை, உணவுதானியங்கள் அழுகி
வீணாய்ப்போனாலும் கவலைப்படமாட்டோம், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள
மக்களுக்கு விநியோகிக்கப்படும் விலைகளில் இதனை மாநிலங்களுக்குத் தர மாட்
டோம் என்று மத்திய அரசு அடம் பிடித்துக் கொண்டிருக்கிறது. இவற்றின் காரணமாக
எதிர்காலத்தில் விலைகள் உயரக்கூடும் என்பதை எதிர்பார்த்து, உணவு
தானியங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கப்படுவது தற்போது
அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
அத்தியாவசியப் பொருட்களின்
மீதான ஊக வர்த்தகத்திலும் இது ஒரு பாய்ச்சல் வேகத்தை ஏற்படுத்தி
இருக்கிறது. பண்ட பரிவர்த்தனைத் தரவுகளின்படி 2012ஆம் ஆண்டு ஏப்ரல்
மாதத்திற்கும் ஜூன் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் அனைத்து வேளாண்பொருட்களின் மீதான வர்த்தகத்தின் மதிப்பு 5 லட்சத்து 1 ஆயிரத்து 866
கோடியே 18 லட்சம் ரூபாய் அளவை எட்டியிருக்கிறது. ஊக வர்த்தகத்தில் இந்த
அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றிருப்பதானது அனைத்து அத்தியாவசியப்
பொருட்களின் விலைகளையும் மேலும் அதிகரிப்பதற்கே இட்டுச் செல்லும். இவ்வாறு
விலைகள் உயராது தடுக்கப்பட வேண்டுமானால், அரசாங்கமானது அத்தியாவசியப்
பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதைத் தடுத்திட வேண்டும், வேளாண்
பொருட்கள் மீதான ஊக வர்த்தகத்தையும் உடனடியாகத் தடைசெய்யப்பட வேண்டும்.
ஆயினும் அரசாங்கம் இதனைச் செய்ய மறுப்பதானது, மக்களின் வாழ்வாதாரங்களைப்
பற்றி அரசுக்குக் கிஞ்சிற்றும் கவலையில்லை என்பதனையே, அதன் சொரணையற்ற
தன்மையினையே எடுத்துக்காட்டுகிறது. எனவே நாட்டு மக்கள் அனைவருக்கும்
உணவுப் பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்தக் கூடிய வகையில், அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கக்கூடிய விதத்தில் மக்கள் போராட்டங்களை மேலும் உக்கிரமாக
முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அத்தியாவசியமாகும். தற்போது இடதுசாரிக்
கட்சிகள் நடத்தியுள்ள ஐந்து நாள் தர்ணா போராட்டத்தை அடுத்து, எதிர்
காலத்தில் மேலும் வலுவான மற்றும் சக்தியான இயக்கங்களை முன்னெடுத்துச்
சென்றிட வேண்டும். நாட்டில் வறட்சி நிலைமை வந்து கொண்டிருக்கக்கூடிய
சூழலில், உணவுப் பொருட்களின் விலைகள் விண்ணை எட்டக்கூடிய அபாய நிலையில்,
மக்கள் மீதான சுமைகள் பன்மடங்காகும் என்பது தெளிவு.
இத்தகைய
சூழ்நிலையில், வலுவான மக்கள் இயக்கங்கள் மூலமாக மட்டுமே தான் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி -2
அரசாங்கத்தின் நாசகரக் கொள்கைகளை மாற்றியமைத்திட முடியும்.
வறுமைக்கோட்டுக்குக் கீழ், வறுமைக்கோட்டுக்கு மேல் என்று எவ்விதப்
பாகுபாடுமின்றி, நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பத்தினருக்கும் பொது
விநியோகமுறை மூலமாக கிலோ கிராம் 2 ரூபாய் விலையில் மாதம் ஒன்றுக்கு 35
கிலோ உணவு தானியங்களை அளிப்பதன் மூலம் மட்டுமே நம் நாட்டு மக்களின் உணவுப்
பாதுகாப்பை உறுதிப்படுத்திட முடியும்.
தமிழில்: ச.வீரமணி
Courtesy :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக