இலங்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 17 நவம்பர், 2013

உணர்வுக்கும் அறிவுக்கும் இடையிலான போராட்டம் - விக்னேஸ்வரன் சிறப்புப் பேட்டி...!

               யாழ்ப்பாணம் முதல்வர் அலுவலகத்தில் வைத்து இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், ‘தி இந்து’வுக்கு அளித்த பிரத்தியேக பேட்டி. இதில், இலங்கைத் தமிழர் நிலை பற்றியும் இந்தியத் தமிழர்களின் உணர்வுகள் குறித்தும் அடிக்கடி ஏற்படும் மீனவர் கைது குறித்தும் முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் தனது மனநிலையைப் பகிர்ந்துகொள்கிறார் விக்னேஸ்வரன். அரசியல்வாதியாக இருந்தும் அரசியலற்ற சமூகக் கண்ணோட்டத்துடன் அவர் கூறியதாவது: 

“ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு” என்பது உங்கள் நிலைப்பாடாக உள்ளது. ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தனித் தமிழீழம் குறித்து உணர்ச்சிபொங்கப் பேசி வருகின்றனர். இது உங்களுக்கு என்னவிதமான தாக்கத்தை உருவாக்குகிறது?
* உணர்வுக்கும் அறிவுக்கும் இடையிலான போராட்டமாக இதை எண்ணத் தோன்றுகிறது. உணர்வு, சுதந்திரத் தென்னிந்தியாவிலிருந்து கொந்தளிக்கிறது. அறிவோ, யதார்த்தத்தின் நிலையறிந்து நிதானமாக இலங்கையில் பயணிக்கிறது. 

தமிழக மீனவர்கள் இலங்கையிலும் இலங்கை மீனவர்கள் தமிழகத்திலும் அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர். மொத்தத்தில் இரு தரப்பிலும் பாதிக்கப்படுவது தமிழ் மீனவர்கள்தான். இதைத் தவிர்க்க நீங்கள் செய்யக்கூடியது என்ன?
* உண்மையில் பாதிக்கப்படுவது யார் என்பதை உலகுக்கு உணர்த்துவதே நான் செய்யக்கூடியது. நீங்கள் தமிழர்கள். பாதிக்கப்படுவதாகக் கூறுகிறீர்கள். ஆனால், உண்மையில் பாதிக்கப்படுவது இந்திய - இலங்கை கடற்பரப்பில் வாழும் கடல் இனங்களே. எதற்காக இந்திய மீனவர்கள் தங்கள் கடல் எல்லை தாண்டி இரவு 1 மணியளவில் நன்றாக நாங்கள் பார்க்கக்கூடிய தூரத்திலேயே பயணித்து மீன் பிடிக்கிறார்கள்? பலருக்கு இது தெரியாமல் இருக்கலாம். காரணம், இந்திய கடல் பிராந்தியத்தில் இழுவலைப் படகுகள் மூலம் கடல் வளங்களாகிய மீன்களை வாரி இழுத்து காலி செய்துவிட்டார்கள். பணத்தாசையால் பெரும் படகு முதலாளிகள் தங்கள் நாட்டுக்கும் கடல் வளத்துக்கும் செய்துள்ள துரோகம் இது. உங்கள் பகுதியில் மீன் கிடைக்காததால், இலங்கைக் கடல் பகுதியில் மீன் வாருகிறார்கள். இந்நிலை தொடர்ந்தால், இலங்கை கடல் பிராந்தியத்திலும் கடல் இனங்கள் அற்று ஒன்றுமில்லாமல் போய்விடும். எங்கள் நாட்டில் இழு படகுகள் தடைசெய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் அப்படியல்ல. இழு படகுகளால் மீன் வளங்கள் மட்டுமல்ல; பவளப்பாறைகள்கூட இழுத்துவரப்படுகின்றன. இழு படகு உபயோகத்தை இந்தியா தடை செய்ய வேண்டும். அப்படிப்பட்ட சட்டம் வருமா என்பது சந்தேகமே. தமிழகத்தின் தலைவிதியை தீர்மானிப்பவர்கள் அவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இழு படகை விட்டுவிட்டு மீண்டும் கரை வலையை மீனவர்கள் உபயோகித்தால் மீன் இனம் பெருகும். கடல் அன்னை பூரிப்பாள். இன்று பயனடைந்து கொண்டிருப்பவர்கள் இழு படகுகளுக்குச் சொந்தக்காரர்களான பெரும் பணக்காரர்களே. சிறு மீனவர்கள் அல்லர். 

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாடு குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன?
* பகிஷ்கரிப்பது ஒரு தந்திர உபாயம். பிழை செய்தவர்கள் தங்கள் பிழைகளை உணர நாடும் கருவி அது. பகிஷ்கரிப்பு எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதுதான் முக்கியம். அதுபோல மாநாடு சென்று மனத்தாங்கல்களை வெளிப்படுத்துவதும் ஒரு தந்திரம்தான். இவற்றில் எதைப் பின்பற்றுவது என்பது நாட்டுக்கு நாடு மாறுபடும். இந்நிலையில் நாங்கள் பகிஷ்கரிப்பது என தீர்மானித்துள்ளோம். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது பல கட்சிகளின் கலவையாகும். ஒவ்வொரு கட்சித் தலைவரும் ஒவ்வொரு குரலில் பேசுகின்றனர். அவர்கள் அனைவரோடும் கைகோத்து நிலையான ஆட்சியைத் தர நீங்கள் வைத்திருக்கும் வியூகம் என்ன ?
* அன்பு ஒன்றுதான். என்னதான் அவர்கள் பேசினாலும் அவர்கள் எங்கள் உடன்பிறப்புகள். அவரவர் கருத்துகளுக்கு காரணம் உண்டு. வன்முறையின் சூழலில் வளர்ந்தவர்கள் அவர்கள். ‘அடித்துப் பறித்தால்தான் கிடைக்கும். அரவணைத்தால் அனைத்தும் போய்விடும்’ என்பது அவர்கள் கொள்கை. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதற்கு ஏற்ப, அனைவரும் கைகோத்ததால், வெற்றி பெற்றோம். ஒற்றுமை குறைந்தால் கீழிறங்க வேண்டிவரும் என்ற எண்ணம் அவர்களை ஒன்றுபடுத்திவைக்கிறது. “பஞ்சமே ஆனாலும் பாரம் அவனுக்கன்னாய் நெஞ்சமே அஞ்சாதே நீ” என்பதே எங்கள் வியூகம். இறைவன் எங்களைக் கைவிடமாட்டான். 

மாகாண அதிகார வரம்பில் காவல்துறை இல்லை. சரியான அதிகாரப் பகிர்வினை அடைய நீங்கள் வைத்திருக்கும் திட்டம் என்ன?
* அதிகாரம் ஒழுங்காகப் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்பது தெரிந்தே நாங்கள் தேர்தலில் ஈடுபட்டோம். மக்கள் சக்தி எங்களுடன் உள்ளது என்பதை தேர்தல் மூலம் இலங்கை அரசுக்கு தெரிவித்துள்ளோம். பேச்சுவார்த்தை மூலமே அதிகாரப் பகிர்வைப் பெற வேண்டும். இப்போது அதிகாரம் போதுமானதாக இல்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன். 

உங்கள் ஆட்சியில் எதனை அமல்படுத்த அதிக முன்னுரிமை தருகின்றீர்கள்?
* போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணங்களுக்கு முன்னுரிமை தருகிறேன். வேலையற்றோர், விதவைகள், வீடு - நிலங்களை இழந்து நிற்போர் ஆகியோருக்கு நிவாரணம் வழங்கவேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. 

இந்திய உதவியுடன் வீடு கட்டித் தரும் திட்டம் எந்த அளவில் உள்ளது? அதை விரைவுபடுத்த நீங்கள் எடுத்திருக்கும் முயற்சி என்ன?
* குறிப்பிட்ட தொகையே வீடுகட்ட ஒதுக்கப்பட்டுள்ளது. இப்போது ஆண்டுகள் சில கடந்த நிலையில், பொருள்களின் விலையேற்றத்தால் வீடுகளை கட்டி முடிக்க இயலாமல் பலர் திண்டாடுகின்றனர். இதுகுறித்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதருடன் பேசிக்கொண்டிருக்கிறோம். குறைந்த வட்டியுடன் கடன் வசதி செய்து தரும்படி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். 

இலங்கை அரசின் மும்மொழித் திட்டம் வரவேற்பு பெற்றுள்ளதா?
* தமிழ் மக்கள் நினைக்கிறார்கள் - எங்களை சிங்களம் படிக்கவைத்துவி்ட்டு சிங்களர்கள் தமிழ் படிக்கமாட்டார்கள் என்று. மேற்படிப்பு படிப்பதற்கு தமிழும் சிங்களமும் தெரிந்திருக்க வேண்டும் என்று பள்ளியிலேயே கட்டாயப்படுத்தினால்தான் பலன் இருக்கும். அலுவலகங்களில் மட்டும் செயல்படுத்தி ஒன்றும் ஆகாது. 

யாழ்ப்பாணத்துக்கு வருமாறு இந்தியப் பிரதமரை அழைத்திருந்தீர்கள். அதுபோல இந்தியாவுக்கு, குறிப்பாக தமிழகத்துக்கு நீங்கள் வருவீர்களா? அதற்கான திட்டம் ஏதும் உள்ளதா?
* தமிழகத்துக்கு வர திட்டம் தீட்டவேண்டியதில்லை. கடந்த 25 ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் தமிழகம் வந்துபோய்க் கொண்டிருக்கிறேன். தற்போது அரசியல் நிமித்தம் நீங்கள் அழைத்து நான் வருவதுதான் பொருத்தமாக இருக்கும். நீங்கள் அழைத்தால் என் பாதுகாப்பு உங்கள் பொறுப்பு. அழைக்காமல் நானாக வந்தால் எனக்கு அவன் பொறுப்பு. 

தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான இலங்கைத் தமிழ் அகதிகள் உள்ளனர். அவர்கள் தாயகம் திரும்ப என்ன செய்யப் போகிறீர்கள்?
* தற்போது வடக்கு மாகாணத்திலிருந்து ராணுவத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவர்கள் படிப்படியாகக் குறைக்கப்பட்டால், அகதிகள் திரும்ப வழி ஏற்படும். அகதிகளுக்கு வீட்டு வசதிகள், தொழில் வாய்ப்புகள் செய்துதர வேண்டியது எங்கள் பொறுப்பு என்பதை உணர்ந்துள்ளோம். 

வடக்கு மாகாணத்தில் தொழில் வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பு பெருக்கத்துக்கும் முதலீட்டுக்கும் இந்தியாவிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
* விவசாயம், கால்நடைப் பண்ணை, கைத்தொழில்கள் ஆகியவற்றில் எங்களுக்கு இந்தியா அறிவுரை வழங்க வேண்டும். கலை - கலாச்சாரத்தில் எங்களது வரலாற்றை உலகுக்கு எடுத்துரைப்பதில் இந்தியாவின் உதவி தேவைப்படுகிறது. பெரும் முதலீட்டை மத்திய அரசிடமிருந்து எதிர்பார்க்கிறோம். 

உங்கள் குடும்பமே சிங்கள - தமிழ் இனங்களின் இணக்கமான வாழ்வுக்கு உதாரணம்தான். இலங்கையில் இரு இனங்களும் இணக்கமாக வாழ நீங்கள் முன்வைக்கும் யோசனைகள் என்னென்ன?
* என் இரு மகன்களும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். அதற்காக இரு இன மக்களும் மற்ற இனத்தில் வரன் தேட வேண்டும் என கூறமாட்டேன். புரிந்துணர்வும் பரஸ்பர நம்பிக்கையும்தான் இணக்கத்தை ஏற்படுத்தும். சிங்களர்களே சிறுபான்மையினர் மனோநிலையில்தான் வாழ்கின்றனர். மற்றவர்களைக் காட்டிலும் நாம் தாழ்ந்துவிட்டோமே என்ற எண்ணத்தில் எங்களைத் துன்புறுத்துகின்றனர். இதற்குக் காரணம் தமிழ்நாடுதான். இலங்கைத் தமிழ் மக்கள் சார்பாக தமிழக மக்கள் பேசப்பேச, இத்தனை கோடிப் பேரின் ஆதரவு இலங்கைத் தமிழர்களுக்கு இருக்கிறது. எங்களுக்கு யாரும் இல்லை என்கிற எண்ணம் மேலோங்க எங்களைத் துன்புறுத்துவதில் இன்பம் காண்கிறார்கள் சிங்களர்கள். 

ஒரு பேட்டியில் “இதற்கு முன் அரசியலில் ஈடுபட்டது இல்லை” என்று கூறியிருந்தீர்கள். இப்போது அரசியலில் இறங்கியிருப்பது ஏன்?
* பெயர், புகழ், கல்வி, அந்தஸ்து, பணம் எல்லாம் பெற்ற பின் அமைதி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தவன் நான். அரசியல் எனக்கு வேண்டாத ஒன்று. ஆனால், சேவை நமது கடமை என்று ஆன்மிகம் சொல்கிறது. உற்றார் உறவினர்கள், நண்பர்கள், மாணவர்கள், “வடமாகாணத் தமிழ் மக்களுக்கு நீ சேவை செய்தே ஆகவேண்டும்” என நிர்ப்பந்தித்தபோது இறைவன் மீது பாரத்தை போட்டுவிட்டு தேர்தலில் நிற்க சம்மதித்தேன். நான் அரசியலில் இறங்கவில்லை: இறக்கிவிடப்பட்டேன்.
 
நன்றி :

செவ்வாய், 12 நவம்பர், 2013

இந்திய வெளியுறவு கொள்கையில் தலையிடும் மாநிலக்கட்சிகளின் அதிகப்பிரசங்கிதனம்....!

        
         உள்நாட்டு பிரிவினைப்போர் முடிவு பெற்று, (மயான)அமைதியான சூழலில் 53 நாடுகளின் தலைவர்களை அழைத்து காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பின் மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்துவரும் இலங்கை அரசு, மாநாட்டின் தனி சிறப்பு மற்றும் வெற்றியின் மூலம் உலக நாடுகளின் பாராட்டுகளைப் பெற்று உலக அரங்கில் இலங்கையை நிமிர்ந்து பார்க்கும் அளவிற்கு முயற்சிகள்  செய்து வரும் இந்த சூழ்நிலையில், இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு  மட்டும் அமைதி குலைந்து ஒரே பரபரப்பாக காணப்படுகிறது.
            இலங்கையில் ''காமன்வெல்த் மாநாடு'' என்று எப்போது அறிவித்தார்களோ, அப்போதிலிருந்து நவக்கிரகங்களாக - திசைக்கு ஒன்றாக பிரிந்துகிடக்கும் தமிழக திராவிடக்கட்சிகள் ''ஒற்றுமையுடன்'' ஒரேக்குரலாக ''கோஷ்டிகானம்'' பாட ஆரம்பித்தார்கள். ''தமிழர்களை கொன்று குவித்த இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது'' என்று ஒரு கட்சியும், ''ராஜபட்சே நடத்தும் மாநாட்டை இந்தியா கலந்துகொள்ளாது புறக்கணிக்கவேண்டும்'' என்று வேறொரு கட்சியும், ''இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஒரு துரும்பும் நகரக்கூடாது'' என்று மற்றொரு கட்சியும், இன்னுமொரு படி மேலேபோய் ''மாநாட்டை இலங்கையில் நடத்தாது தடை செய்யவேண்டும்'' என்று இன்னொரு கட்சியும் என இலங்கையை தனிமைப்படுத்த வேண்டும் என்று ஒரே நோக்கத்தில் கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தின. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக அதிமுக அரசு' இலங்கை மாநாட்டில் மத்திய அரசு கலந்துகொள்ளக்கூடாது என்பதையே மிரட்டலான தொணியில்  தமிழக சட்டமன்றத்தில் இரண்டு முறை  தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது. இந்த விஷயத்தில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால், அனைத்து திராவிடக்கட்சிகளும் கட்சி வேறுபாடு இல்லாமல் ''என்றுமில்லாத'' ஒற்றுமையை காட்டுகின்றன என்பது தான்.
        ஆனால்  இலங்கை அரசுக்கு எதிரான இந்த கோஷ்டிகானமும், ஒற்றுமையும், போராட்டங்களும், தீர்மானங்களும்  எதற்காக என்பது தமிழக மக்களுக்கு தெரியாமல் இல்லை. இது தங்கள்  கையில் உள்ள வாக்குச்சீட்டை குறிவைத்து நடத்தப்படும் ''மாயாஜாலம்'' தான் என்பதை தமிழக மக்கள் புரிந்து தான் வைத்திருக்கிறார்கள். இலங்கைத் தமிழர்கள் மீது பாசத்தைப் பொழிவதில் தமிழக திராவிடக்கட்சிகளுக்குத் தான் எத்தனைப் போட்டி. இதைப்பார்க்கும் போது, ''அவ என்ன சொல்றது... நான் சொல்லுறேன்... சாப்பாடு எதுவும் இல்லை... வேற வீட்டைப்பாரு'', என்ற மாமியார், மருமகள், பிச்சைக்காரன் கதை தான் நினைவிற்கு வருகிறது.
          இது ஒரு புறமிருக்க. இன்னொரு பக்கம், இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது என்பது இலங்கை என்ற ஒரு தனி நாடு மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல. அந்த கூட்டமைப்பில் உள்ள 53 நாடுகளும் சம்பந்தப்பட்டது. அத்தனை நாடுகளும் கலந்துகொள்ளும் மாநாட்டை இந்தியா புறக்கணிக்குமானால், உலக அரங்கில் இந்தியா தனிமைப்பட்டுவிடும். மற்றைய நாடுகளுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக திகழும் நமது நாட்டின் ''வெளியுறவுக் கொள்கை'' என்பது கேள்விக்குறியாகி விடும். பாதிப்புக்குள்ளாகும்.
இந்திய நாட்டின் வெளியுறவுக்கொள்கை என்பது பிரதமரோடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. முறையான வெளியுறவுக்கொள்கையை வகுத்த இந்திய அரசியல் சாசனம் மற்றும்  பாராளுமன்றம் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்டது. உள்ளூர் அரசியலுக்காக தமிழக திராவிடக்கட்சிகளும், தமிழக அரசும் நடத்தும் உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் போராட்டங்களும், நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் ஒட்டுமொத்த இந்திய வெளியுறவுக்கொள்கைகளுக்கும், அரசியல் சாசனத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் எதிரானது மட்டுமல்ல ஒரு போதும் ஏற்கத்தக்கதுமல்ல.
          பக்கத்து நாடுகளுடனான உறவை துண்டித்துக்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கை வைப்பதும் சிறுபிள்ளைத்தனமாகும். நம் நாட்டு மக்கள் அமைதியாக நிம்மதியாக வாழவேண்டும் என்றால் பக்கத்து நாடுகளுடானான உறவையும், நட்பையும் பேணவேண்டும். வளர்க்க வேண்டும். மேம்படுத்தவேண்டும். அது தான் தலைசிறந்த வெளியுறவுக்கொள்கையாக இருக்க முடியும். அதுமட்டுமல்ல அது தான் உண்மையான இராஜதந்திரம் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.
           இனிமேலாவது சொந்த இலாபத்திற்காக - ஓட்டு அரசியலுக்காக இது போன்ற ''கோரிக்கைகளை'' வைத்து முழங்குவதை இங்குள்ள திராவிடக்கட்சிகள் கைவிடவேண்டும். அது தான் ஒட்டுமொத்த தேச அமைதிக்கு நல்லது.

ஞாயிறு, 10 மார்ச், 2013

அமெரிக்க கண்டனத்தீர்மானத்தை கண்மூடித்தனமாக ஆதரிப்பது பேராபத்தில் முடியும்...!




                    ஏற்கனவே சென்ற ஆண்டு இதே ஜெனிவா ஐ. நா. மனித உரிமைக்கழகத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, பிரான்ஸ், நார்வே போன்ற நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்த இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தது நினைவிருக்கலாம். அதற்கு தமிழகத்திலிருக்கும் இரு பெரும் திராவிடக்கட்சிகளும், உள்நாட்டு தமிழர்களை மறந்து விட்டு இலங்கைத் தமிழர்களுக்காக இந்திய தமிழர்களின் உயிர்களை பலி வாங்கும் தமிழக தமிழினத்தலைவர்களுமே காரணம் என்பதை தமிழக மக்கள் மறந்திருக்கமுடியாது.
         அதேப்போல் இந்த முறையும், ஜெனிவா ஐ. நா. மனித உரிமைக்கழகத்தில் நடைபெறவிருக்கின்ற கூட்டத்தில் மீண்டும் அமெரிக்கா, தமிழர்களை கொன்றுக்குவித்த இலங்கை அரசுக்கு  எதிராக இன்னொரு கண்டனத்தீர்மானத்தை கொண்டுவரவிருக்கிறது. அமெரிக்க ''பிணந்தின்னி கழுகு'' இலங்கையை வட்டமிட்டுக்கொண்டிருக்கிறது. அது இரத்தம் பார்க்காமல் விடாது. அதற்கு முன்னோட்டம் தான் இந்த கண்டனத்தீர்மானம் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். ஆப்கானிஸ்தானம், பாகிஸ்தான், இராக், பாலஸ்தீனம் போன்ற நாடுகளில் அப்பாவி மக்களை, குழந்தைகளை கொன்று குவித்த அமெரிக்காவிற்கு இலங்கையின் மீது கண்டனத்தீர்மானம் கொண்டுவர் என்ன அருகதை இருக்கிறது...? மனித உரிமை மீறல் பற்றி  பேச  அமெரிக்காவிற்கு என்ன யோக்கியதை இருக்கிறது...? ஒரு நாட்டின் இறையாண்மையை - ஜனநாயகத்தை மதிக்காத அமெரிக்காவிற்கு ஜனநாயகத்தைப் பற்றிப் பேச என்ன உரிமையிருக்கிறது...?
           ஒரு நாட்டிலுள்ள தனக்கு வேண்டிய ஒன்றை அபகரிக்கவேண்டுமேன்றால், அந்த நாட்டின் உள்ளே அத்துமீறி நுழைவதற்கு முதல் அஸ்த்திரமே இது போன்ற கண்டனத் தீர்மானங்கள் தான் என்பதை யாரும் மறந்திருக்கமுடியாது. இது தான் அமெரிக்காவின் கடந்தகால வரலாறு. அந்த வகையில் இங்கே இலங்கையில் அமெரிக்காவிற்கு தேவையான ஒன்று அதன் கண்ணை உறுத்திக்கொண்டிருக்கிறது. அது தான் இலங்கையின் வடமுனையில் உள்ள ''திருகோணமலை'' என்ற இடம். தற்போது ஆசியா மற்றும் அரபு நாடுகளை மிரட்டி தன்னுடையக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்கு, தென்முனையிலுள்ள  கன்யாகுமரிக்கு தெற்கே 2200 கி. மீ தொலைவில் உள்ள ''டியாகோ கார்ஷியா'' என்றக் குட்டித் தீவில் அமெரிக்கா கடந்த 1974 - ஆம் ஆண்டு முதல் இராணுவத்தலங்களையும், ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதக்கிடங்குகளையும் அமைத்துள்ளது. அமெரிக்காவைப் பொருத்தவரை ஆசிய நாடுகளுக்கு அருகில்  வரவேண்டும். குறிப்பாக இந்தியாவிற்கு அருகில் வரவேண்டும்  என்பது தான் அமெரிக்காவின் ஆசை - எண்ணம். அதற்காகத் தான் திருகோணமலை அமெரிக்காவிற்கு தேவைப்படுகிறது. அதுமட்டுமல்லாது, அரபு நாடுகளிலிருந்து தினந்தோறும் இலங்கை வழியாக சீன நாட்டிற்கு செல்லும் எண்ணெய்க் கப்பலை தடுத்து நிறுத்துவதற்கு அமெரிக்காவிற்கு திருகோணமலை தேவைப்படுகிறது.
         முன்பு திருகோணமலை உட்பட இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த விடுதலைப்புலிகளின் நட்பைப் பெற்றது. அதற்கு விடுதலைப்புலிகள் இராஜீவ்காந்தி மீதுகொண்டிருந்த வெறுப்பை பயன்படுத்திக்கொண்டு வலுவான நட்பைப் பயன்படுத்திக்கொண்டது.  அந்த வலுவான நட்பின் மூலம் ஒன்றுபட்ட இலங்கையை துண்டாடுவதற்கு விடுதலைப்புலிகளுக்கு துணைநின்றது என்பதை மறந்துவிடாதீர்கள். இலங்கை இராணுவத்திற்கு எதிராக உள்நாட்டுப் போர் நடத்துவதற்காக அமெரிக்கா விடுதலைப்புலிகளுக்கு கூச்சமில்லாமல் இராணுவ உதவிகளை செய்தது. போரின் மூலம் இலங்கை அரசை வீழ்த்திவிட்டு, விடுதலைப்புலிகளின் கனவு நாடான தமிழீழத்தை சுதந்திர நாடாக - தனி நாடாக பிரகடனப்படுத்தி ஐ. நா சபையின் மூலம் அங்கீகரித்து விடலாம். அதன் மூலம் தான் செய்த இராணுவ உதவிக்கு விடுதலைப்புலிகளிடமிருந்தே திருகோணமலையை பரிசாகப் பெற்றுவிடலாமென்ற கனவில் மிதந்திருந்தது அமெரிக்கா. அண்மையில் சூடான் நாட்டை இரண்டாக பிளந்து தெற்கு சூடானின் எண்ணெய்க் கிணறுகளை சுருட்டிக்கொண்டது அமெரிக்கா என்பதை அறிந்துகொள்ளுங்கள். அமெரிக்கா இலங்கையிலும் இதே பார்முலாவைத் தான் பயன்படுத்துகிறது.   ஒரு நாட்டின் ஒருமைப்பாட்டை, இறையாண்மையை சிதைப்பது என்பதும் மனித உரிமை மீறலே என்பதை அனைவரும் உணரவேண்டும்.
           இதெல்லாம் ஒரு புறமிருக்க, திருகோணமலைக்கு அமெரிக்கா  குடியேறிவிட்டால், அது இந்தியாவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். இந்தியாவின் பாதுகாப்பிற்கு, இறையாண்மைக்கு பேராபத்தாய் முடியும் என்பதை அனைவரும் புரிந்துகொண்ட செயல்படவேண்டும். வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அமைதிக் குலைந்துவிடும். எப்போதும் பதற்றமாகவே காணப்படும். இப்போது இருப்பதை விட இந்திய மீனவர்களின் நிலைமை மோசமாகிவிடும். போரையே பார்த்திராத தமிழகத்தின் அமைதிக் குலைந்து விடும்.
          இதற்கு இந்திய அரசு அமெரிக்காவிற்கு துணைப்போவது என்பதும், அதனுடைய தீர்மானத்தை ஆதரிப்பது என்பதும் பேராபத்தில் முடியும்.

வியாழன், 15 மார்ச், 2012

இலங்கையில் கால் பதிக்க துடிக்கிறது அமெரிக்கா - அதற்கு இந்தியா ஏன் அதரவு தரவேண்டும்...?

       ஜெனீவாவில் நடந்துவரும் ஐ.நா. மனித உரிமை ஆணையக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான கண்டனத்  தீர்மானம் ஒன்று  அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் ஆகிய நாடுகளில் மனித உரிமை மீறல்களை தயங்காமலும், அச்சமில்லாமலும் செய்த அமெரிக்கா தான் இந்த கண்டனத் தீர்மானத்தைக் கொண்டுவருகிறது. இதன் மூலம்  மனித உரிமைகள் மீது அக்கறையுள்ள மனித நேயமிக்க நாடாக தன்னை உலக நாடுகள் மத்தியில் காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 
           இலங்கைத் தமிழர்கள் மீது அமெரிக்காவிற்கு திடிரென்று அப்படி என்ன அவ்வளவு அக்கறை...? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. பிறகு ஏன் இலங்கை அரசின் மீது அமெரிக்கா கண்டனத் தீர்மானம் கொண்டுவரவேண்டும். 
             பொதுவாக அமெரிக்கா ஒரு நாட்டின் மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவருகிறது என்றால்,  ஒன்று அந்த நாட்டின் மீது ஆக்கிரமிப்பு செய்யப்போகிறது அல்லது போர் தொடுக்கப்போகிறது என்று பொருள் அல்லது ஒரு நாட்டில் உள்ள எதோ ஒன்றை  எதிர்ப்பார்த்து அது கிடைக்காமல் போய் அதனால் அந்த நாட்டின் மீது எரிச்சல் அடைந்திருக்கிறது அல்லது கோபம் அடைந்திருக்கிறது என்றும் பொருள். 
           இலங்கை அரசின் மீது அமெரிக்காவிற்கு அப்படி என்ன எரிச்சல்...? அப்படி என்ன கோபம்...?   அமெரிக்கா எதிர்ப்பார்த்த  ஒன்று என்ன இலங்கையில் கிடைக்காமல் போய்விட்டது...?  ஆம்... அமெரிக்கா தன் கைக்கு வரும் என்று எதிர்ப்பார்த்த ஒன்று அதன் கைக்கு கிடைக்காமல் போனது தான் இலங்கை மீதான அதன் எரிச்சல்.

             அமெரிக்கா நீண்ட காலமாகவே இலங்கையின் வடபகுதியில் உள்ள திரிகோணமலை மீது ஒரு கண் வைத்திருந்தது. அதற்கு காரணம் உண்டு...! இலங்கையின் தென் கடற்கரைப் பகுதியில் இந்தியப்பெருங்கடலில் - இந்திய தென் முனையிலிருந்து  சுமார் 2200 கிலோ மீட்டர் தொலைவில் ''டீகோ கார்சியா - DIEGO GARCIA'' என்ற தீவு உள்ளது. நீங்க உலக வரைபடத்தைப் பார்த்தால்  கண்ணுக்குத் தெரியாத தீவு ஒன்று தெரியும். அது இங்கிலாந்திற்கு சொந்தமான தீவு ஆகும். ஆனால் அந்த தீவை அமெரிக்கா தன் கைவசம் வைத்துள்ளது.  அந்த தீவில் தான் அமெரிக்காவிற்கு சொந்தமான விமானப்படை மற்றும் கடற்படை தளங்கள் உள்ளன. அதை படத்தில் காணலாம்.  அதுமட்டுமல்லாது. நிறைய ஆயுதங்களும்,  ஏவுகணைகளும் அங்கே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த படைத்தளம் என்பது  ஆசியப்பகுதியில் உள்ள இராக்,  ஈரான்,  இந்தியா, சீனா, வடகொரியா  போன்ற நாடுகளை தன் இராணுவப்பார்வைக்குள் வைத்துக்கொள்வதற்காகவே 1971 - ஆம் ஆண்டில்  அமெரிக்காவால் நிறுவப்பட்டது.  முன்பு இராக் நாட்டோடு போர் செய்த போது இங்கிருந்து தான் படைகள் எல்லாம் உடனுக்குடன் அங்கு அனுப்பப்பட்டது. இப்போதும் கூட ஈரானை தாக்குவதற்காக இங்கு படைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
              சகல வசதிகளோடு இந்த தீவு இருந்தாலும், அமெரிக்கா திருப்தியடையவில்லை. காரணம், இந்த தீவானது மேலே சொன்ன நாடுகளிலிருந்து மிக தொலைவில் உள்ளது. அதனால் அமெரிக்கா இந்த நாடுகளுக்கு அருகில் வரவேண்டும் என்று ஆசைப்பட்டது. அப்போது தான் திருகோணமலை அதன் கண்ணில் பட்டது. அந்தப்பகுதி கிடைத்துவிட்டால் இந்தியாவிற்கு பக்கத்திலேயே வந்து விடலாம் என்பது மட்டுமல்ல... அரபு நாடுகளிலிருந்து இலங்கை கடற்பகுதி வழியாக  சீனாவிற்கு செல்லும் எண்ணெய் கப்பல் போக்குவரத்தையும் நிறுத்திவிடலாம் என்பது போன்ற கனவில் அமெரிக்கா கனவு கண்டது. ஆனால் திருகோணமலையோ  அப்போது விடுதலைப்புலிகள் வசம் இருந்தது. அதனால் அமெரிக்காவிற்கு  விடுதலைப்புலிகளின் தயவு தேவைப்பட்டது. 
              எனவே விடுதலைப்புலிகளின் நட்பைப் பெறுவதற்கும்,  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மீண்டும் பிரதமராக வந்துவிடக்கூடாது என்ற அமெரிக்காவின் எதிர்ப்பார்ப்புக்கும்,   ராஜீவ்காந்தியின் உயிர் விலைப்பேசப்பட்டது. விடுதலைப்புலிகளும் பழி தீர்த்துக்கொண்டனர். அமெரிக்காவின் எண்ணமும் நிறைவேறியது. பிறகு விடுதலைப்புலிகளும் அமெரிக்காவும் நண்பர்கள் ஆனார்கள்.
              இந்த நட்பைப் பயன்படுத்தி விடுதலைப்புலிகள் வசம் இருக்கும் திருகோணமலைக்கு குடிபெயர்ந்து விடலாம் என்று வடைக்காக காத்திருந்த குள்ளநரிப் போல் காத்திருந்தது. ஆனால் இலங்கை ஒரே நாடாக இருந்தால் அது நிறைவேறாது என்பதை உணர்ந்த அமெரிக்கா, ஏற்கனவே தனி நாடு என்ற கோரிக்கையுடன் உள்நாட்டிலேயே இலங்கை அரசுடன் போராடிக்கொண்டிருந்த விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களைக் கொடுத்து இலங்கை இராணுவத்துடன் மோதவிட்டது. விடுதலைபுலிகளுக்கும், இராணுவத்திற்கும் நடைபெற்ற கடுமையான சண்டையில் விடுதலைப்புலிகள் அமைப்பு பூண்டோடு அழிக்கப்பட்டு, பிரிவினைவாதம்  ஒழிக்கப்பட்டுவிட்டது. 

              இன்று திருகோணமலை என்பது ஒன்றுபட்ட இலங்கையில் ஒரு பகுதியாக உள்ளது. அமெரிக்கா என்ற குள்ளநரி எதிர்ப்பார்த்த வடை கிடைக்காமல் போய்விட்டது. அமெரிக்காவின் நீண்ட காலக் கனவு நிறைவேறாமல் போய்விட்டது. இது தான் இன்றைக்கு அமெரிக்காவுக்கு இலங்கை மீது உண்டான எரிச்சலும் கோபமும் ஆகும். அதனால் தான் இலங்கை அரசின் மீது மனித உரிமை மீறல் எதிரான கண்டனம் என்ற பெயரில் தன் எரிச்சலையும் கோபத்தையும் அமெரிக்கா வெளிகாட்டியுள்ளது. 
                இந்த சூழ்நிலையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஏன் இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை இங்குள்ள அரசியல் கட்சிகள் சற்று சிந்திக்க வேண்டும். தேர்தல் ஓட்டுக்காக இந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று கூச்சல் போடுவது என்பது எந்த விதத்திலும் நியாயமில்லை. இந்த தீர்மானத்தை அமெரிக்கா ஏன் கொண்டுவரவேண்டும்..? என்பதை தமிழர்கள் நன்கு யோசிக்கவேண்டும். இலங்கை தமிழர்கள் மீது அமெரிக்காவிற்கு அப்படி என்ன அக்கறை என்பதையும் யோசிக்க வேண்டும்...?
            நியாயப்படிப் பார்த்தால் இந்த கண்டனத் தீர்மானத்தை இந்தியா தான் கொண்டுவந்திருக்க வேண்டும். ஏனென்றால் இலங்கையில் நடைபெற்றக் கொடுமைகளை நேரடியாகப்பார்த்து இரத்தக்கண்ணீர் வடித்தவர்கள் நாம் தான். அப்பாவித் தமிழர்கள், நம்முடைய சகோதர- சகோதரிகள், நம் வீட்டுக் குழந்தைகளும், வயதானவர்களும் தான் கொடுமையான முறையில் கொல்லப்பட்டனர். இன்றைக்கு மிச்ச மீதி இருக்கிற தமிழர்களும் தன் சொந்த நாட்டிலேயே வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். இதை நம் மத்திய - மாநில அரசுகள் கண்கூடாகப் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றன. அப்படி இருக்கையில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசுக்கு எதிராக தனியாக ஒரு தீர்மானத்தை கொண்டுவர இங்குள்ள மத்திய - மாநில அரசுகளுக்கு ஏன்  எண்ணம் வரவில்லை...? அமெரிக்கா கொண்டுவந்த இந்த தீர்மானத்தை ஆதரிக்கக் கூச்சல் போடும் எதிர்கட்சிகள், இந்திய அரசு இலங்கை அரசுக்கு எதிராக தனியாக கண்டனத் தீர்மானம் ஒன்றைக்கொண்டு வரவேண்டும்  என்று ஏன் கூச்சல் எழுப்பத் துணியவில்லை.

             ஏன் அமெரிக்காவின் வாலை பிடித்துக்கொண்டு அலைய வேண்டும்...? நமக்கென்று தனித்தன்மையும், மனித நேயமும், அநீதிகளுக்கெதிரான போர்க்குணமும் உண்டு. அதை நாம் காப்பாற்றுவோம்.

வெள்ளி, 8 ஜூலை, 2011

முற்போக்குத் தமிழறிஞர், இடதுசாரிச் சிந்தனையாளர் பேராசிரியர் கா.சிவத்தம்பி காலமானார்

  ''ஆயுத எழுத்து'' இதய அஞ்சலியை செலுத்துகிறது


                     புகழ்பெற்ற உலகத்தமிழறிஞரும், இடதுசாரிச்சிந்தனையாளருமான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி கொழும்புவில் உள்ள தனது இல்லத்தில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 79.
                    புதனன்று இரவு அவர் மரணமடைந்ததாக அவரது இல்லத்தினர் தெரிவித்துள்ளனர். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சிவத்தம்பிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
                   இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் கரவெட்டியில் 1932ம் ஆண்டு பிறந்தவர் சிவத்தம்பி. கரவெட்டி மற்றும் கொழும்புவில் படித்த அவர், கொழும்புவில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர் கண்டி பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையில் அவர் முனைவர் பட்டத்தைப் பெற்றார்.
                  இங்கிலாந்தின் பர்மிங்காம் பல் கலைக்கழகத்திலும் டாக்டர் பட்டம் பெற்றார். 17 ஆண்டு காலம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய சிவத்தம்பி, கிழக்குப் பல் கலைக்கழகத்திலும் 2 ஆண்டுகள் பணியாற்றினார். பல்வேறு நாடுகளின் பல்கலைக் கழகங்களில் தமிழ்த் துறையில் வருகை தரு பேராசிரியராகவும் சிவத் தம்பி பணியாற்றியுள்ளார்.
                  அக்காலத்தில் மேடை நாடகங்கள், வானொலி நாடகங்களிலும் நடித் துள்ளார். இலங்கைத் தமிழ் தொடர்பாக 70க்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதி யுள்ளதுடன், 200 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சர்வதேச மாநாடுகளில் சமர்ப்பித்துள்ளார்.
                 இவர் கடைசியாக கலந்து கொண்ட சர்வதேச மாநாடு, கோயம்புத்தூரில் இரண்டாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஆகும்.

நன்றி : தீக்கதிர்