ஞாயிறு, 10 மார்ச், 2013

அமெரிக்க கண்டனத்தீர்மானத்தை கண்மூடித்தனமாக ஆதரிப்பது பேராபத்தில் முடியும்...!




                    ஏற்கனவே சென்ற ஆண்டு இதே ஜெனிவா ஐ. நா. மனித உரிமைக்கழகத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, பிரான்ஸ், நார்வே போன்ற நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்த இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தது நினைவிருக்கலாம். அதற்கு தமிழகத்திலிருக்கும் இரு பெரும் திராவிடக்கட்சிகளும், உள்நாட்டு தமிழர்களை மறந்து விட்டு இலங்கைத் தமிழர்களுக்காக இந்திய தமிழர்களின் உயிர்களை பலி வாங்கும் தமிழக தமிழினத்தலைவர்களுமே காரணம் என்பதை தமிழக மக்கள் மறந்திருக்கமுடியாது.
         அதேப்போல் இந்த முறையும், ஜெனிவா ஐ. நா. மனித உரிமைக்கழகத்தில் நடைபெறவிருக்கின்ற கூட்டத்தில் மீண்டும் அமெரிக்கா, தமிழர்களை கொன்றுக்குவித்த இலங்கை அரசுக்கு  எதிராக இன்னொரு கண்டனத்தீர்மானத்தை கொண்டுவரவிருக்கிறது. அமெரிக்க ''பிணந்தின்னி கழுகு'' இலங்கையை வட்டமிட்டுக்கொண்டிருக்கிறது. அது இரத்தம் பார்க்காமல் விடாது. அதற்கு முன்னோட்டம் தான் இந்த கண்டனத்தீர்மானம் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். ஆப்கானிஸ்தானம், பாகிஸ்தான், இராக், பாலஸ்தீனம் போன்ற நாடுகளில் அப்பாவி மக்களை, குழந்தைகளை கொன்று குவித்த அமெரிக்காவிற்கு இலங்கையின் மீது கண்டனத்தீர்மானம் கொண்டுவர் என்ன அருகதை இருக்கிறது...? மனித உரிமை மீறல் பற்றி  பேச  அமெரிக்காவிற்கு என்ன யோக்கியதை இருக்கிறது...? ஒரு நாட்டின் இறையாண்மையை - ஜனநாயகத்தை மதிக்காத அமெரிக்காவிற்கு ஜனநாயகத்தைப் பற்றிப் பேச என்ன உரிமையிருக்கிறது...?
           ஒரு நாட்டிலுள்ள தனக்கு வேண்டிய ஒன்றை அபகரிக்கவேண்டுமேன்றால், அந்த நாட்டின் உள்ளே அத்துமீறி நுழைவதற்கு முதல் அஸ்த்திரமே இது போன்ற கண்டனத் தீர்மானங்கள் தான் என்பதை யாரும் மறந்திருக்கமுடியாது. இது தான் அமெரிக்காவின் கடந்தகால வரலாறு. அந்த வகையில் இங்கே இலங்கையில் அமெரிக்காவிற்கு தேவையான ஒன்று அதன் கண்ணை உறுத்திக்கொண்டிருக்கிறது. அது தான் இலங்கையின் வடமுனையில் உள்ள ''திருகோணமலை'' என்ற இடம். தற்போது ஆசியா மற்றும் அரபு நாடுகளை மிரட்டி தன்னுடையக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்கு, தென்முனையிலுள்ள  கன்யாகுமரிக்கு தெற்கே 2200 கி. மீ தொலைவில் உள்ள ''டியாகோ கார்ஷியா'' என்றக் குட்டித் தீவில் அமெரிக்கா கடந்த 1974 - ஆம் ஆண்டு முதல் இராணுவத்தலங்களையும், ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதக்கிடங்குகளையும் அமைத்துள்ளது. அமெரிக்காவைப் பொருத்தவரை ஆசிய நாடுகளுக்கு அருகில்  வரவேண்டும். குறிப்பாக இந்தியாவிற்கு அருகில் வரவேண்டும்  என்பது தான் அமெரிக்காவின் ஆசை - எண்ணம். அதற்காகத் தான் திருகோணமலை அமெரிக்காவிற்கு தேவைப்படுகிறது. அதுமட்டுமல்லாது, அரபு நாடுகளிலிருந்து தினந்தோறும் இலங்கை வழியாக சீன நாட்டிற்கு செல்லும் எண்ணெய்க் கப்பலை தடுத்து நிறுத்துவதற்கு அமெரிக்காவிற்கு திருகோணமலை தேவைப்படுகிறது.
         முன்பு திருகோணமலை உட்பட இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த விடுதலைப்புலிகளின் நட்பைப் பெற்றது. அதற்கு விடுதலைப்புலிகள் இராஜீவ்காந்தி மீதுகொண்டிருந்த வெறுப்பை பயன்படுத்திக்கொண்டு வலுவான நட்பைப் பயன்படுத்திக்கொண்டது.  அந்த வலுவான நட்பின் மூலம் ஒன்றுபட்ட இலங்கையை துண்டாடுவதற்கு விடுதலைப்புலிகளுக்கு துணைநின்றது என்பதை மறந்துவிடாதீர்கள். இலங்கை இராணுவத்திற்கு எதிராக உள்நாட்டுப் போர் நடத்துவதற்காக அமெரிக்கா விடுதலைப்புலிகளுக்கு கூச்சமில்லாமல் இராணுவ உதவிகளை செய்தது. போரின் மூலம் இலங்கை அரசை வீழ்த்திவிட்டு, விடுதலைப்புலிகளின் கனவு நாடான தமிழீழத்தை சுதந்திர நாடாக - தனி நாடாக பிரகடனப்படுத்தி ஐ. நா சபையின் மூலம் அங்கீகரித்து விடலாம். அதன் மூலம் தான் செய்த இராணுவ உதவிக்கு விடுதலைப்புலிகளிடமிருந்தே திருகோணமலையை பரிசாகப் பெற்றுவிடலாமென்ற கனவில் மிதந்திருந்தது அமெரிக்கா. அண்மையில் சூடான் நாட்டை இரண்டாக பிளந்து தெற்கு சூடானின் எண்ணெய்க் கிணறுகளை சுருட்டிக்கொண்டது அமெரிக்கா என்பதை அறிந்துகொள்ளுங்கள். அமெரிக்கா இலங்கையிலும் இதே பார்முலாவைத் தான் பயன்படுத்துகிறது.   ஒரு நாட்டின் ஒருமைப்பாட்டை, இறையாண்மையை சிதைப்பது என்பதும் மனித உரிமை மீறலே என்பதை அனைவரும் உணரவேண்டும்.
           இதெல்லாம் ஒரு புறமிருக்க, திருகோணமலைக்கு அமெரிக்கா  குடியேறிவிட்டால், அது இந்தியாவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். இந்தியாவின் பாதுகாப்பிற்கு, இறையாண்மைக்கு பேராபத்தாய் முடியும் என்பதை அனைவரும் புரிந்துகொண்ட செயல்படவேண்டும். வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அமைதிக் குலைந்துவிடும். எப்போதும் பதற்றமாகவே காணப்படும். இப்போது இருப்பதை விட இந்திய மீனவர்களின் நிலைமை மோசமாகிவிடும். போரையே பார்த்திராத தமிழகத்தின் அமைதிக் குலைந்து விடும்.
          இதற்கு இந்திய அரசு அமெரிக்காவிற்கு துணைப்போவது என்பதும், அதனுடைய தீர்மானத்தை ஆதரிப்பது என்பதும் பேராபத்தில் முடியும்.

2 கருத்துகள்:

அருள் சொன்னது…

ஐநாவில் தீர்மானம்: இந்தியாவின் மூக்கை உடைத்த அமெரிக்காவும் தமிழ்நாட்டு அமைப்புகளின் குழப்பமும்!

http://arulgreen.blogspot.com/2013/03/SriLanka-UNHRC-US-Resolution.html

பெயரில்லா சொன்னது…

You wrote rotten noncence.The whole world knows that India's hand is soked with Eelam Tamil's blood. India is the route cause for Tamil Eelam distruction.You have limited knowldge about Eelam problem. Read the history and then wrote about the teretorial intergrity.