பாரக் ஒபாமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாரக் ஒபாமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 7 பிப்ரவரி, 2015

மோடியின் மவுனம் அபாயகரமானது - நியூயார்க் டைம்ஸ்

  அமெரிக்காவிலிருந்து வெளியாகும் பிப்ரவரி 6, 2015 தேதியிட்ட ''நியூயார்க் டைம்ஸ்'' நாளிதழில் வெளியான தலையங்கம்           
          இந்திய தேசத்தின் சிறுபான்மையினருக்கு எதிராக நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கும் வன்முறைகளுக்கு எதிராக கருத்து தெரிவிக்க பிரதமர் நரேந்திரமோடிக்கு என்ன சிரமம் இருந்துவிட முடியும்? கிறிஸ்தவர்கள் வழிபாட்டுத் தலங்களில் தாக்குதல் நடத்தப்படுகிறது... ஆனால் இந்தியர்கள் அனைவரையும் போற்றி பாதுகாக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரோ அவ்விவகாரத்திற்கு எவ்வித எதிர்வினையும் காட்டவில்லை.
         சரி இதற்குத்தான் பதில் இல்லை என்று பார்த்தால், கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் கட்டாயப்படுத்தப்பட்டோ, பணம் தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டோ கொத்து கொத்தாக மறு மதமாற்றம் செய்யப்பபடுகின்றனர். அதற்கும் மவுனமே பதிலாக இருக்கிறது.
        இந்தியாவில் நடைபெறும் மதவாத நிகழ்வுகளைக் கண்டும் காணாமல் திருவாளர் மோடி கடைபிடித்துவரும் மவுனமானது, இரண்டு முடிவுகளுக்கு நம்மைத் தள்ளுகிறது. ஒன்று, மோடியால் இந்துத்துவா அமைப்புகளை கட்டுப்படுத்த முடியாமல் இருக்க வேண்டும்; இல்லையேல், அவ்வாறு கட்டுப்படுத்த மோடி விரும்பாமல் இருக்க வேண்டும்.
         சமீபகாலமாக இந்தியாவில் உள்ள தேவாலயங்கள் சூறையாடப்படுவதும், தீக்கிரையாக்கப்படுவதும் அதிகமாக நடைபெறுகிறது. கடந்த டிசம்பர் மாதம், கிழக்கு டெல்லியில் உள்ள புனித செபாஸ்டின் தேவாலயம் ஒன்று தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. அந்த தேவாலயத்தின் பாதிரியார் அளித்த புகாரில் மண்ணெண்ணெய் ஊற்றி ஆலயம் எரிக்கப்பட்டதாக கூறியிருந்தார். திங்கள்கிழமை, (பிப்ரவரி 3-ம் தேதி) புதுடெல்லியில் உள்ள புனித அல்போன்ஸா தேவாலயம் சூறையாடப்பட்டுள்ளது. அதில் விந்தை என்னவென்றால், பிரார்த்தனைக்குப் பயன்படுத்தப்படும் புனித பாத்திரங்களை சேதப்படுத்திய விஷமிகள் அங்கிருந்த காணிக்கைப் பெட்டியில் நிரம்பி வழிந்த பணத்தை சட்டை செய்யவில்லை.
     இந்தத் தாக்குதல்களையடுத்து, கத்தோலிக்க பிஷப்புகள் மாநாட்டு சபையானது இந்திய அரசுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய தேசத்தின் மதச்சார்பற்ற தன்மையை பாதுகாக்கும்படியும், இங்குள்ள கிறிஸ்தவர்கள் மனங்களில் பாதுகாப்புணர்வை உறுதி செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
           தேவாலய தாக்குதல்களுக்கு நிகராகவே மறு மதமாற்ற நிகழ்வுகளும் கவனிக்கப்பட வேண்டியவை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆக்ரா நகரில் 200 முஸ்லிம்கள், இந்து மதத்துக்கு மாற்றப்பட்டனர். ஜனவரி மாதம், மேற்குவங்கத்தில் 100 கிறிஸ்தவர்கள், இந்து மதத்துக்கு மாற்றப்பட்டனர். இந்து மதத்தின் அடிப்படைவாத அமைப்புகளான விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி) ராஷ்டிரிய சுவயம்சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்) ஆகிய அமைப்புகள் மறு மதமாற்ற நிகழ்வுகளுக்கு பகிரங்கமாகவே ஆதரவு தெரிவிக்கின்றன.
         வி.ஹெச்.பி தலைவர் பிரவீண் தொகாடியா கூறுகையில், "இந்தியாவில் 80% மக்கள் இந்துக்கள். எங்கள் அமைப்பின் தற்போதைய இலக்கு, இந்த தேசத்தை 100% இந்து தேசமாக மாற்ற வேண்டும் என்பதே. இதை அடைய ஒரே வழி, சிறுபான்மையினருக்கு அவர்களுடைய மத நம்பிக்கை உரிமையை வழங்காமல் இருப்பதே ஆகும்" என கூறியுள்ளார்.
          இத்தகையச் சூழலில், இம்மாதம் அயோத்தியாவில் 3000 முஸ்லிம்களை, இந்து மதத்துக்கு மாற்ற விஷ்வ ஹிந்து பரிஷத் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
           1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, நாடு முழுவதும் மூண்ட இந்து - முஸ்லிம் மோதலில் 2000-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
            இப்போது, விஷ்வ ஹிந்து பரிஷத் மீண்டும் நெருப்புடன் விளையாடுகிறது. திருவாளர் மோடி, இந்தியாவின் வளர்ச்சிக்கு பல நம்பிக்கைக்குரிய திட்டங்களை முன்வைத்துள்ளார். ஆனால், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பார்வையில் இந்தியாவின் எதிர்காலம் குறித்த கணிப்பு "மதச்சார்புகளால் பிரிந்துகிடக்க வாய்ப்பு கொடுக்காத வரையில் இந்தியாவின் வெற்றி நீளும்" என்பதாக இருக்கிறது. இத்தகையச் சூழலில், மத சகிப்புத்தன்மை தேய்ந்து வருவது குறித்து திரு.மோடி தனது செவியை கூராக்கி, மவுனத்தை கலைக்க வேண்டும்."
தமிழில்: பாரதி ஆனந்த் 
நன்றி : தி இந்து - தமிழ் 

ஒபாமாவின் முதலைக் கண்ணீரும், மோடியின் மவுனமும்...!

              
                அமெரிக்க அதிபர் ஒபாமா இந்திய குடியரசு தினக் கொண்டாட்டத்திற்கு வருவதற்கு முன்பே பல்வேறு அவசர சட்டங்களும், வரவேற்புகளுமாக பிரதமர் நரேந்திரமோடி காட்டிய ஆரவாரமும் ஆர்ப்பரிப்பும், ஒபாமா இந்தியாவில் தங்கியிருந்தபோது ''நிமிட்டுக்கு நிமிட்'' இலட்சக்கணக்கில் செலவு செய்து தயாரிக்கப்பட்ட வகைவகையான புத்தாடைகளை உடுத்தி மோடி வெளிப்படுத்திய ஆரவாரமும், ஆர்ப்பரிப்பும், உற்சாகமும்  ஒபாமா இந்தியாவை விட்டு பறந்து சென்றவுடன் சத்தமில்லாமல் அடங்கிப்போய் விட்டதே ஏன்...? திருடனுக்கு தேள் கொட்டியதுபோல் மோடி சத்தமில்லாமல் அடங்கிவிட்டாரே ஏன்...?
               கடந்த மாதம் இந்திய குடியரசு தினவிழாவில் கலந்து கொள்வதற்காக மூன்று  நாள் பயணமாக இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது பயணத்தின் இறுதி நாளான ஜனவரி 27-ஆம் தேதி அன்று புதுடெல்லியில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய ஒபாமா, ''இந்தியாவின் வளர்ச்சிக்கு மத சகிப்புத்தன்மை மிகவும் அவசியம். மத சகிப்புத்தன்மை இல்லாமல் இந்தியா இல்லை'' என்று  மோடியின் தலையில் நறுக்கென்று ஒரு ''குட்டு'' வைத்தார். சாத்தான் வேதம் ஓதுகிறது என்பது வேறு விஷயம். ஆனால் சற்றும் எதிர்ப்பார்க்காத அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்தப் பேச்சு மோடியை மட்டுமல்ல ஒட்டுமொத்த பாரதீய ஜனதாக்கட்சியையே அதிரவைத்தது. காசு கொடுத்து சூனியம் வைத்துக்கொண்ட கதையா போச்சு. 
                ஒபாமாவின் இந்தப் பேச்சு துரதிர்ஷ்டவசமானவை என்று பாரதீய ஜனதாக்கட்சி தான் சொல்லியதே தவிர மோடி அதைப்பற்றி இதுவரை வாயை திறக்கவே இல்லை. இப்படியிருக்க ஒபாமா நேற்று அமெரிக்க வெள்ளை மாளிகையிலிருந்து இன்னொரு அஸ்திரத்தை மோடியின் மீது வீசினார். 
                 தனது  இந்திய சுற்றுப்பயணம் குறித்து வாஷிங்டனின் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமா  பேசும்போது, "மகாத்மா காந்தி மீது இந்தியா வைத்திருக்கும் அதே நன்மதிப்பை அமெரிக்காவும் கொண்டுள்ளது. மிக அற்புதமான, பன்முகத்தன்மை கொண்ட அழகான நாடாக இந்தியா உள்ளது. அங்கு பார்த்த ஒவ்வொரு கலாச்சாரத்தையும் கண்டு நானும் மிஷேலும் வியப்படைந்தோம். ஆனால் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மதக்கோட்பாடுகளும், அவர்களது கலாச்சார நிகழ்ச்சிகளும் தொடர்ந்து குறிவைக்கப்படுகிறது. அதனால்  இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் ''மத சகிப்புதன்மையின்மையை'' இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட மகாத்மா காந்தி கண்டிருந்தால் அதிர்ந்து போயிருப்பார்" என்ற உண்மையை சொல்லி முதலைக்கண்ணீர் வடித்திருக்கிறார். 
               ''இந்தியாவில் தற்போது மத சகிப்புத்தன்மை இல்லாததை காந்தியடிகள் காண நேர்ந்தால் அவர் அதிர்ச்சிக்குள்ளாகி இருப்பார்'' என்று ஒபாமா வெளிப்படுத்திய கருத்து மோடியின் தலையில் இடியாய் விழுந்திருக்கிறது. ஆனால் ஒபாமாவின் இந்த கருத்துக்கும் மோடி மட்டுமல்ல பாரதீய ஜனதாக்கட்சியும் இதுவரையில் வாயை திறக்கவில்லை. மவுனம் சாதிக்கின்றனர். ஒபாமாவின் இந்த கருத்துக்கு மோடி மவுனமாய் இருப்பது என்பது ஒபாமாவின் ''மதம்'' சார்ந்த கருத்தில் மோடிக்கு ''சம்மதமே'' என்று எடுத்துக்கொள்ளலாமா...?

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

கார்ப்பரேட் நிறுவனங்களில் லாபவெறிக்காக போர் தொடுப்பதா...? - அமெரிக்க மக்களின் எதிர்ப்பு முழக்கங்கள்...!

  சிரியா மீது அமெரிக்கா நடத்தும் ராணுவ தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒபாமாவின் போர் முடிவிற்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பட்டன.             சிரியா நாட்டில் ஆட்சி புரிந்து வரும் பஷார் அல் அசாத் அரசிற்கு எதிராக அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டாண்டுகளாக இவர்கள் நடத்தி வரும் உள்நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், லட்சக்கணக்கான மக்கள் படுகாயமடைந்தும், அகதிகளாகவும் அருகிலுள்ள நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த ஆயுதம் தாங்கிய போராட்டக்குழுவினருக்கு எதிரான தாக்குதலில் சிரியா ராணுவம் ரசாயன குண்டு தாக்குதலை நடத்தியது என்ற பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி அந்நாட்டின் மீது போர் தொடுக்க ஒபாமா தலைமையிலான அமெரிக்கா அரசு முடிவு செய்துள்ளது.
             இதற்கு ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், சிரியாவிற்கு ஆதராகவும், அமெரிக்காவின் போர் வெறிக்கு எதிராகவும் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, சிரியா மீதான ராணுவத் தாக்குதல் குறித்த தனது முடிவிற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஆதரவு திரட்டும் பணியில் ஒபாமா தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஆனால், ஒபாமாவின் இம்முடிவிற்கு பெரும்பான்மையான அமெரிக்கர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, அந்நாட்டில் வாழும் அமெரிக்க மக்களிடம் நடத்தப்பட்ட பல்வேறு கருத்து கணிப்புகளிலும் சிரியா மீது போர் தொடுக்கும் முடிவிற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட்டில் போராட்டம் :
           இந்நிலையில், சிரியா மீது போர் தொடுப்பதற்கு எதிராகவும், உலக அமைதியை வலியுறுத்தியும் உலக புகழ்பெற்ற திரைப்பட நகரான ஹாலிவுட்டில் ஞாயிறன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
          இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சிரியா மீதான அமெரிக்காவின் ராணுவ தாக்குதலுக்கும், தலையீடுகளுக்கும் கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும், அமெரிக்கா அரசின் போர் முடிவானது ஒட்டுமொத்த அமெரிக்க மக்களின் விருப்பதற்கு மாறானது என்றும், அமெரிக்கர்களின் எண்ணங்களை ஒபாமா அரசு அலட்சியம் செய்கிறது என்றும் வலியுறுத்தும் வாசகங்களை கைகளில் ஏந்தியிருந்தனர்.
            இதேபோல், சர்வதேச வர்த்தக நகரான நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தின் முன்பு திரண்டு நூற்றுக்கணக்கான மக்கள் சிரியாவை தாக்கும் அமெரிக்க அரசின் நடவடிக்கையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும், அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வாஷிங்டன்னில் உள்ள வெள்ளை மாளிகையின் முன்பு திரண்ட மக்கள் மத்திய கிழக்கு நாடுகளை குறிவைத்து அமெரிக்க நடத்தும் மற்றொரு போருக்கு எதிராக ஆவேசமாக முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் “கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபவெறிக்கான மற்றொரு போரை அனுமதியோம்“ , “சிரியா மீது ராணுவ நடவடிக்கை என்ற தீர்மானத்தை நாடாளுமன்றம் நிராகரிக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட வாசகங்களை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர்.

திங்கள், 24 செப்டம்பர், 2012

ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா வெற்றிபெற இந்திய தேசத்தை விலை பேசும் மன்மோகன் சிங்....!






 இந்திய மஹா ஜெனங்களே...!

மேலே உள்ள படத்தைப் பாத்தீங்களா..? மாமனும் மச்சானும் கொஞ்சி குலாவுறாங்க... இவ்வளவு கொஞ்சலும் கெஞ்சலும் எதற்கு....?
கொஞ்ச நேரம் டி. வி. பொட்டி, மெகா சீரியல், விளம்பரம், இலவசங்கள் போன்ற மாயையிலிருந்தும், மயக்கத்திலிருந்தும் கொஞ்சம்  விடுபட்டு வெளியில வாங்களேன். ஓ... வந்துட்டீங்களா...! இப்போ கொஞ்ச நேரம் கண்ணை மூடிகிட்டு... உங்க கண்ணை மூடிகிட்டு உங்களோட நினைவுகளை சற்றே பின்னோக்கி செலுத்துங்கள். ரொம்ப தூரம் போகவேண்டாம். மே 2004 முதல் நவம்பர் 2008 வரையிலான காலகட்டத்தில் நாட்டில் நடந்த சம்பவங்களை நினைவுபடுத்திப் பாருங்கள். 
         கடந்த 2004 முதல் 2008 வரையில் இடதுசாரிகளின் தயவோடு ஆட்சியிலிருந்த முதலாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் நம் நாட்டில்,  பெட்ரோல் விலை என்பது  ரூபாய் 35 - லிருந்து ரூபாய் 40 - க்குள் தான் இருந்தது. சமையல் எரிவாயுவின் விலை என்பது  ரூபாய் 280 தான் இருந்தது. மன்மோகன் சிங் - ப.சிதம்பரம் கூட்டாளிகள் பெட்ரோல் - டீசல் - மண்ணெண்ணெய் - சமையல் கேஸ் விலைகளை உயர்த்துவதற்கு முற்பட்ட போதெல்லாம், இடதுசாரிகளின் நிர்பந்தம் காரணமாக  அவர்களால் உயர்த்த முடியாமல் போனது. எண்ணெய் வகைகள், பருப்பு வகைகள், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய உணவுப்பொருட்களை ஆன்  - லைன் வர்த்தகத்தில் சேர்த்திட மன்மோகன் சிங் துடித்த போதும் இடதுசாரி கட்சிகள் நிர்பந்தம் காரணமாக அவ்வாறு அவரால் செய்ய முடியவில்லை. பொதுத்துறை பங்குகளை விற்க முயன்ற போதும், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி மூதலீட்டை நுழைக்க முயன்ற போதும், இன்சூரன்ஸ் மற்றும் வங்கி போன்ற நிதித்துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை உயர்த்த முயன்ற போதும், அமெரிக்காவின் கட்டளைப்படி தேச நலனுக்கு எதிராக - மக்கள் நலனுக்கு எதிராக செயல்பட துணிந்த போதும் அவைகளுக்கு எதிராக பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்தின் வெளியிலும் இடதுசாரி கட்சிகள்  போராட்டங்கள் நடத்தியும், மீறி செய்தால் ஆதரவை திரும்பப்பெறுவோம் என்று மிரட்டியும் ஒரு குறைந்த பட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் ஆட்சி செய்வதற்கு இடதுசாரி கட்சிகள் அந்த ஆட்சிக்கு வழிகாட்டினர் என்பதால் நாட்டில் மேலே சொன்ன இடைப்பட்ட காலங்களில் விலைவாசி உயர்வே இல்லாமல் மக்கள் நிம்மதியாக வாழ்க்கை நடத்தினர். 
             ஆனால், தான் நினைத்த படி எதையுமே சாதிக்கமுடியவில்லை  என்பது  அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எரிச்சலையும் கோபத்தையும் ஊட்டியது. 2004 - ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில், ஆட்சி செய்வதற்கு காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளுக்கு போதிய எண்ணிக்கை இல்லாததால், 62 எம்பி - க்களை கொண்ட இடதுசாரி கட்சிகளின் தயவில் ஆட்சி செய்யவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால் தான், அந்த ஆட்சியை  மக்களுக்கு எந்தவிதமான இடையூறும்  செய்யாமல் சரியான  பாதையில் செலுத்த முடிந்தது. ஆனால் தான் நினைத்தபடி எதையும் சாதிக்க முடியாமல் அமெரிக்கா  ஏமாந்துபோனது. 
              2009 - ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மீண்டும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவோடு தான் ஆட்சி நடத்த முடியும் என்ற  சூழ்நிலை அமைந்துவிடக்கூடாது என்பதில் காங்கிரஸ் கட்சியைவிட அமெரிக்கா தான் துடித்தது. அதனால் 2009 - நாடாளுமன்றத்தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவின் தலையீடு என்பது இருந்தது. மீண்டும் மன்மோகன் சிங்கே பிரதமராக வேண்டும் என்பதற்காகவும், 2004 - ஆம் ஆண்டு தேர்தலை விட காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் அதிக இடங்களில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காகவும், 2004 - ஆம் ஆண்டு தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 62 இடங்களில் வெற்றிபெற்று, அமெரிக்காவின் ஆசைகளை நடத்தவிடாமல் மன்மோகன் ஆட்சிக்கு வழிகாட்டிய இடதுசாரிக் கட்சிகளின் எண்ணிக்கையை குறைக்க  வேண்டும் என்பதற்காகவும், அவர்களது தயவில் மீண்டும் ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவும் அமெரிக்கா காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் வேலைகளை செய்தது.
           அமெரிக்க உளவுத்துறை - சி.ஐ.ஏ - வும், இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் மற்றும் துணை தூதர்களும், தூதரக அதிகாரிகளும்  காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் களத்தில் இறங்கினர். தேர்தல் அறிவிப்பு வெளியான நாட்களிலிருந்து சி. ஐ. ஏ - வின் தலைவர் வெளிப்படையாகவே புதுடெல்லியில் தங்கியிருந்து காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகங்களையும், ஆலோசனைகளையும் வழங்கிவந்தார். அவ்வப்போது அவரை இந்திய நாட்டின் அப்போதைய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் சந்தித்து ஆலோசனைகளை பெற்று வந்தார். அமெரிக்க தூதர்கள் எல்லோரும் கூட்டணிக்கட்சித் தலைவர்களோடும், மற்ற சிறு கட்சிகளின் தலைவர்களோடும் பேச்சுக்களை நடத்தி காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கை சிதராமல் பார்த்துக்கொண்டனர். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றிபெறுவதற்கு ரூபாய் ஒரு இலட்சம் கோடிக்கு மேல் அமெரிக்கப் பணம் இந்தியாவில் இறக்கிவிடப்பட்டு செலவு செய்யப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரிக் கட்சிகளின் ஆட்சி நடந்த மேற்கு வங்கம், கேரளம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் மட்டுமே இடதுசாரிகளின் எண்ணிக்கையை குறைக்கவேண்டும் என்பதற்காகவே மிக அதிகமாக செலவு செய்யப்பட்டது மட்டுமல்ல, சி. ஐ. ஏ - வும், தூதர்களும் பல்வேறு தில்லுமுல்லுகளை செய்து தீவிரமாக தேர்தல் வேலைகளையும் செய்தார்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது. 
                 அமெரிக்காவின் இத்தனை சித்து  விளையாட்டுகளின் மூலமாகத்தான் காங்கிரஸ் கட்சித் தலைமயிலான கூட்டணிக்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரமுடிந்தது. இடதுசாரிக் கட்சிகளின் தயவு இல்லாமல் மன்மோகன் சிங் மீண்டும் பிரதமராக உட்கார முடிந்தது. இடதுசாரிகட்சிகளின் எண்ணிக்கை குறைக்க முடிந்தது. இந்த சித்து விளையாட்டுகளில் இன்றைய அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவிற்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது.
           இந்த ஆண்டு இறுதியில் நவம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த தேர்தல்களில் ஜார்ஜ் புஷ் இரண்டாவது முறையாக வெற்றிபெறுவதற்கு ''ஒசாமா பின்லேடன்'' உதவினார். அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ''இரட்டை கோபுர தகர்ப்பு நாடகம்'' நடத்தி அந்த பழியை ''ஒசாமா பின்லேடன்'' மீது சுமத்தி, ஜனாதிபதி தேர்தல் நேரத்தில் ஒசாமா பின்லேடன் தொலைக்காட்சியில் தோன்றி மீண்டும் அமெரிக்காவை தாக்குவேன் என்று சொல்லுவது போல மற்றொரு நாடகத்தை நடத்தி தான் ஜார்ஜ் புஷ் இரண்டாவது முறையாக வெற்றிபெற முடிந்தது.
           ஆனால் இப்போது இந்த ஜனாதிபதி தேர்தலில் நிலைமை வேறு விதமாக இருக்கிறது. சென்ற  ஜனாதிபதி தேர்தலின் போது  வீழ்ந்துவிட்ட அமெரிக்காவின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவேன் என்று சொல்லி வெற்றிபெற்ற ஒபாமாவால் அவ்வாறு செய்யமுடியாமல் திணறினார் என்பது மட்டுமல்ல, நாட்டை முன்பைவிட மோசமான பொருளாதார நிலைமைக்கு இட்டுச்சென்றுள்ளார் என்பது தான் உண்மை. இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமை  என்பது மட்டுமல்ல பல இலட்சம் இளைஞர்களின் வேலையிழப்பு  என்பதும் ஒபாமாவிற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. அங்கும் விலைவாசி உயர்வு, வருமானத்திற்கு அதிகமான செலவு போன்ற பொருளாதார நெருக்கடிகள் மக்களின் கழுத்தை நெருக்கியது. அதனால் விழிப்படைந்த இளைஞர் கூட்டம்   கடந்த பத்து மாத காலமாக தொடர்ந்து நடத்தி  வரும் '' வால் ஸ்ட்ரீட்டை கைப்பற்றுவோம்'' போராட்டம் என்பது ஒபாவிற்கு பின்னாடி பச்சை மிளகாய் வைத்தது போல் இருக்கிறது.
            இதையெல்லாம் தாண்டி ஒபாமாவுக்கு  வெற்றி என்பது எட்டாக்கனியாக போய்விடுமோ என்ற அச்சம் தொற்றிக்கொண்டது. அவரது வெற்றிக்கு மன்மோகன் சிங்கின் ஒத்துழைப்பு மிக அவசியமாக தேவைப்படுகிறது. அதற்கு அமெரிக்க பொருளாதாரத்தை கொஞ்சமாவது தூக்கி நிறுத்துவது போல காட்டிக்கொள்ளவேண்டும். ''ஆதலினால் இந்திய பொருளாதாரத்தை நாசம் செய்வீர்'' என்று ஒபாமா மன்மோகன் சிங்கிற்கு கட்டளையிட, ஏற்கனவே தன் கட்சியின் வெற்றிக்கு ''ஒத்துழைப்பு'' கொடுத்த ஒபாமாவிற்கு அவர் எதிர்ப்பார்ப்பது போல் இந்தியாவை விலைபேசி விற்றுவிட்டால், அதையே ஒரு சாதனையாக மக்களிடம் சொல்லி ஓட்டுக்களை பெற்று வெற்றிபெற்று விடலாம் என்ற கணக்கில் தான் மன்மோகன் சிங்கும் தன்  நண்பரின் வெற்றிக்காக, சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீத அந்நிய நேரடி முதலீடு அனுமதித்தல், இன்சூரன்ஸ், வங்கி, விமானம் போன்றத் துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை உயர்த்துதல், உழைப்பாளி மக்களின் பென்ஷன் நிதியை பங்கு சந்தைக்கு திறந்து விடுதல், பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்றல் போன்ற ''பொருளாதார சீர்த்திருத்தங்களை'' செய்ய மன்மோகன் சிங் துணிந்திருக்கிறார் என்பது தான் உண்மை. இது ஒபாமாவிற்கு மன்மோகன் சிங் செய்யும் நன்றிக்கடன் ஆகும்.

            இந்திய மஹா ஜெனங்களே... ரௌத்திரம் பழகுங்கள்... கோபப்படுங்கள்... அநியாயங்களைக் கண்டு கோபப்படுங்கள்... நாமிருக்கும் நாடு நமதென்பதை அறியுங்கள்...