பாரதிய ஜனதா கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாரதிய ஜனதா கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 ஏப்ரல், 2014

பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை : நாம் பேசியாக வேண்டும்


 கட்டுரையாளர் : என். ராம், பத்திரிக்கையாளர்        


             இந்த 16-வது மக்களவைப் பொதுத்தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கும்வரை, பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. இந்தியத் தேர்தல் ஆணையம் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்திய போதிலும் எந்த விளக்கமும் அளிக்காத கட்சி முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கிய பின் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. தேர்தல் அறிக்கை என்பது பெரிய விஷயமல்ல என்று பா.ஜ.க. நினைப்பது போலத் தெரிகிறது. ''வளர்ச்சி நாயகன்'' என்றுஅழைக்கப்படும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பிரச்சார இயந்திரம், 2002-ல் நடந்ததைப் பற்றி விவாதிக்க விடாமல் - அல்லது அதிலிருந்து கவனத்தை வேறுதிசைகளில் இழுத்துச்செல்லும் வேலையை - தனது வரம்புக்கு உட்பட்ட வகையில் ஏற்கெனவே கச்சிதமாகச் செய்துமுடித்து விட்டது. ''மோடி மந்திரம்'' கையில் இருக்கும் போது தேர்தல் அறிக்கைக்கு என்ன தேவை என்று கட்சி நினைத்திருக்கலாம்.

  தாமதத்தின் உண்மையான பின்னணி                    

           ஏனைய தேசியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் தங்களுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகும், முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கும் வரை பாஜகவால் தேர்தல் அறிக்கையைக் கொண்டுவர முடியவில்லை என்பது சாதாரண விஷயமல்ல. யாருக்கு வாக்களிப்பது என்பதைத் தீர்மானிக்க வேண்டிய வாக்காளர்களுக்கு அவசியமான தேர்தல் அறிக்கையை வெளியிடுவதில் இவ்வளவு தாமதம் ஏற்பட உண்மையான காரணம் என்ன? இதுதொடர்பாக பாஜக தலைமையிடமிருந்து விளக்கம் ஏதும் வருவதற்கு முன்பாகவே, ஊடகங்களில் ‘பாஜக சார்புள்ளவர்கள்’ முந்திக்கொண்டு பதில் அளிக்கிறார்கள். அவர்களில் ஒருவரான ‘நெட்வொர்க் 18’ குழு வெளியீடுகளின் தலைமை ஆசிரியர் ஆர். ஜெகந்நாதன், “மோடியே தேர்தல் அறிக்கை தான்; கனமான இன்னொரு அறிக்கை பாஜக-வுக்குத் தேவையா என்ன?” என்று கட்டுரையில் வினவுகிறார்.
                 கட்டுரையின் கடைசிப் பகுதியை அவர் இப்படி முடிக்கிறார்: “தேர்தல் அறிக்கைகள் என்பவை கால்கட்டு மாதிரி, தேர்தலில் நிச்சயம் வெற்றிபெற்று ஆட்சியமைக்கப்போகும் கட்சிக்கு இம்மாதிரியான தளைகள் தேவையில்லை.” இதை வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ‘நிச்சயம் வெற்றிபெறக்கூடிய கட்சிக்கு இந்தத் தேர்தல் அறிக்கை என்பதெல்லாம் எதிர்காலத்தில் பெரிய பிரச்சனையாக மாறிவிடக்கூடும்‘ என்று தெரிகிறது. தேர்தல் அறிக்கை என்பது ‘தெரிவிப்பது குறைவாகவும் மறைப்பது அதிகமாகவும்‘ இருப்பது. அப்படி மறைக்கப்பட வேண்டியவற்றில் கட்சியின் சித்தாந்தம், குணவிசேஷம் ஆகியவை முக்கியமானவை. பாஜகவைப் பொறுத்தவரை கவனத்துக்குரியவை அதன் சங் பரிவாரங்களின் முக்கியமான செயல்திட்டங்கள், நோக்கங்கள், சித்தாந்தங்கள், ‘இந்துத்துவா’ என்று அது கருதும் விஷயங்கள் - அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமருக்குக் கோயில் கட்டுவது, காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை ரத்துசெய்வது, அனைவருக்கும் பொதுவான குடியுரிமைச் சட்டம் இயற்றுவது, மதமாற்றங்களைத் தடை செய்வது, பசுவதைத் தடை உள்பட பல. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த அம்சங்களெல்லாம் பெரும்பாலான மக்களுடைய கவனத்திலிருந்து தப்பிவிடுவதுதான். பா.ஜ.க என்பது தன்னுடைய கொள்கைகளில் பிடிப்பு உள்ள கட்சி. எந்தக் காரணத்துக்காகவும் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக்கூடிய உணர்ச்சிப் பிழம்பான அமைப்புகளைக் கொண்டது தான் சங் பரிவாரம். இவற்றையெல்லாம் ஊட்டி வளர்ப்பது ‘ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்’ என்ற தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.
                  இந்த அமைப்புகளுக்குள்ள உறவு எப்படிப்பட்டது, அவை எப்படிச் செயல்படுகின்றன என்று அறிய வேறெங்கும் போக வேண்டாம் அவற்றின் இணையதளங்களைக் கவனித்தாலே போதும். ஒரு இணையதளம் சொல்கிறது: “சங் பரிவாரத்தின் மிகவும் பிரபலமான அங்கம் பாரதிய ஜனதா கட்சி. இந்திய வரலாறு எது என்பதில் சங் பரிவாரங்கள் தெளிவாக இருக்கின்றன. இந்திய நாட்டுக்கும் சமூகத்துக்கும் இந்து மதம்தான் அடையாளம், இந்துத்துவம்தான் கலாச்சாரம்.”


 அடிநாதம் இந்துத்துவமே                  

           பாஜக 1980-86 காலகட்டத்தில் அதன்‘சாதாரணமான’ வலதுசாரிக் கருத்துகளுக்குக் கிடைத்த தேர்தல் வெற்றிகளால் துணிச்சல் பெற்று, 1989-ல் ‘தீவிரமான’ இந்துத்துவக் கருத்துக்களை முன்வைத்துச் செயல்படத் தொடங்கியது. 1996 தொடங்கி பாஜக-வின் தேர்தல் அறிக்கைகளை ஊன்றிக் கவனித்தால், 1999 தவிர பிற தேர்தல்களிலெல்லாம் இந்துத்துவக் கருத்துகளை மையமாக வைத்தே அது தேர்தல் அறிக்கை யைத் தயாரித்துவந்துள்ளது தெரியவரும். கொள்கைகளைச் சொல்லப் பயன்படுத்தும் மொழி, தொனி, பாணி வேறுபட்டாலும் பிரதான அம்சங்கள் அப்படியே தொடர்கின்றன. பாஜக-வின் 1998 தேர்தல் அறிக்கை அதனுடைய முக்கியக் கொள்கைகளை வெளிப்படையாகப் பேசுகிறது. “சனாதன தர்மம்தான் இந்திய தேசியத்துவம்” என்கிறது. “ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே தேசம்” என்ற லட்சியத்தை முழங்குகிறது. “அரசியலில் இந்துத்துவம் உருவாவது, சமுதாயத்தின் சிலருக்கு சலுகைகள் காட்டி திருப்திப்படுத்துவதற்கும், சிலரை வாக்கு வங்கிகளாக நடத்துவதற்கும் நல்ல முறிவு மருந்தாக இருக்கும்” என்கிறது.
              “இந்தியாவின் மனசாட்சியாக பகவான் ராமர் இருக்கிறார்” என்கிறது. “அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் அழகிய, பெரிய ஆலயத்தை எழுப்ப வேண்டும்” என்கிறது. இதைச் செய்ய சட்டப்பூர்வமாகவும் கருத்தொற்றுமை அடிப்படையிலும், அரசியல் சட்டம் மூலமாகவும் முயற்சிகளை மேற்கொள்வோம்” என்கிறது. மேலும், காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப் பிரிவு 370 ரத்துசெய்யப்படும் என்று எச்சரிக்கும் அந்த அறிக்கை அனைத்து மக்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் வகுக்கப்படும் வகையில் அனைத்து மரபுகளிலும் உள்ள முற்போக்கான அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்ற பொறுப்பு சட்ட ஆணையத்துக்கு அளிக்கப்படும் என்கிறது. அடுத்த பொதுத்தேர்தலில் அதாவது 1999 தேர்தலில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிடாமல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்காக, ‘நிர்வாகத்துக்கான தேசிய செயல்திட்டம்‘ வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
                அதில் இந்துத்துவத்தின் அடிப்படை அம்சங்கள் விலக்கி வைக்கப்பட்டிருந்தன. அடுத்த பொதுத்தேர்தலில் பலகட்சிகளையும் உள்ளடக்கி விரிவானகூட்டணியை ஏற்படுத்திக் கொண்ட போதிலும் இந்துத்துவக் கொள்கைகள், ‘2004-க்கான தீர்க்கதரிசனத் திட்டங்கள்’ என்ற பெயரில் அப்படியே இடம்பிடித்தன. இந்த அறிக்கையின் முக்கிய அம்சம், அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்ற தங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையை பா.ஜ.க. மீண்டும் கையில் எடுத்ததுதான். அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பதிலாக, “ஜம்மு, லடாக் ஆகிய பகுதிகளுக்கும் போதிய நிதி, நிர்வாக அதிகாரங்களுடன் கூடிய சுயாட்சி பிரதேச ஆணையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்” என்ற கோரிக்கை இதில் இடம் பெற்றிருந்தது.



   மீண்டும் இறுகிய இந்துத்துவா                      
            மீண்டும் இந்துத்துவக் கொள்கைகள் தீவிரமாக வலியுறுத்தப்பட்டன 2009 தேர்தல் அறிக்கையில். “அத்வானி தலைமையிலான அயோத்தி இயக்கம்தான் சுதந்திர இந்தியா வில் மக்களிடையே எழுச்சியைப் பெற்ற பெரியநிகழ்வு” என்று வாழ்த்துப் பாடிய அந்த அறிக்கையில், “காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை ரத்துசெய்ய வேண்டும்” என்ற பழைய பல்லவி மீண்டும் ஒலித்தது. அனைத்துமதத்தவருக்கும் பொதுவான குடி யுரிமைச் சட்டத்தை உருவாக்க உறுதி பூண்டிருப்பதாகவும் எல்லா மதங்களிலும் கடைப்பிடிக்கப்படும் உயர்ந்த அம்சங்களை ஒன்றுசேர்த்து நவீன சமூகத்துக்கு ஏற்ற வகையில் குடியுரிமைச் சட்டம் தயாரிக் கப்படும் என்றும் அது கூறியது.



   முன் தயாரிப்புகள்                         

            இந்த 2014 தேர்தல் அறிக்கைக்கான பூர்வாங்க வேலைகளை 2013 அக்டோபரிலேயே பா.ஜ.க. தொடங்கிவிட்டது. வாக்காளர்களிடமிருந்தே யோசனைகளை வரவேற்கிறோம் என்றெல்லாம், தனி இணையதளம் தொடங்கப்பட்டாலும் கட்சியின் அடிப்படை என்னவோ இந்துத்துவக் கொள்கைகள்தான். உத்தரப் பிரதேசத்தில் பாஜகவினர் நடத்தும் மதவாதம் தெறிக்கும் பிரச்சாரங்களும், அமித்ஷாவின் அனல் கக்கும் பேச்சுகளும் எதைக் காட்டுகின்றன...? பாஜகவின் குணம் மாறவே மாறாது என்பதைத்தான் வெளிப்படுத்துகின்றன.
நன்றி : தி `ஹிந்து’, தமிழில் : சாரி

வியாழன், 28 ஜூலை, 2011

நீலச் சாயம் வெளுத்துப் போச்சி - உத்தமர்கள் போல் வேஷம் போடும் பா.ஜ.க.

             உங்களுக்கு நினைவிருக்கிறதா...கர்நாடகா மாநிலத்தில்  கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் முதல்முறையாக  பாரதிய ஜனதா கட்சி  ஆட்சியை பிடித்தபோது “தென்னிந்தியாவில் தாமரை மலரத் துவங்கிவிட்டது; இனி பாஜகவுக்கு ஏறுமுகம் தான்” என்று பல பாஜக தலைவர்கள் பீற்றிக்கொண்டார்கள். இந்த முதல் பாஜக அரசின் பதவிக்காலம் இன்னும் முடியவில்லை. அதற்குள்  அந்த அரசு இன்று தனக்குத் தானே சேற்றை வாரிப் பூசிக்கொண்டு,  மக்கள் மத்தியில் களங்கப்பட்டு - அசிங்கப்பட்டு நிற்கிறது என்பது தான் உண்மை.    
          
            அம்மாநில அமைச்சரவையில் செல்வாக்கு மிகுந்த நபர்களாக விளங்கும் ரெட்டி சகோதரர்கள் ( அங்கும் ஒரு களவாணி சகோதரர்கள் ) ஆசைக்கு இன்று பாஜக அரசே பலியாகப் போவதை அந்த மாநிலம் மட்டுமன்றி இந்த நாடே பார்க்கப்போகிறது. கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மற்றும் ஆந்திராவின் எல்லைப் பகுதியில் சட்ட விரோத இரும்பு சுரங்கங்களை அமைத்து, கோடி கோடியாக கொள்ளை அடித்துவரும் ஒரு  களவாணிக் கூட்டம்தான் ரெட்டி சகோதரர்கள் கூட்டம். கடந்த  
சட்டப்பேரவைத் தேர்தலில் கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வரப்போகிறது என்றவுடன் பல ஆயிரம் கோடி ரூபாயை அக்கட்சிக்கு வாரி வழங்கி னார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..
              
                இதையெல்லாம் அவர்கள் சும்மா செய்யவில்லை. பாஜக ஆட்சி அமைந்தவுடன் வட்டியும் முதலுமாக அதை அறுவடை செய்வதற்கு தான்  மிகவும் திட்டமிட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.  அதன் பிரதிபலனாகத் தான் இன்றுவரை  தொடர்ந்து அறுவடை செய்தும் வருகிறார்கள். ஆனால் இவை அனைத்தும் சட்ட விரோதமான செயல்கள் என்பதுதான் முக்கியமானதாகும். இந்த சட்ட விரோத சுரங்கங்கள் மூலம் நாள்தோறும் டன் டன்களாக இரும்புத் தாதுவை வெட்டி எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கோடி கோடியாக சம்பாதித்தனர். இந்தக் கொள்ளையை தடுக்கவேண்டிய மாநில அரசே அதற்கு துணை போயிருக்கிறது என்பதுதான் கொடுமையிலும் கொடுமையான விஷயமாகும். 

             இந்த கொள்ளையில் கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பாவுக்கும் தொடர்பு இருக்கிறது என்றும்  அதற்கான  உறுதியான ஆதாரங்கள்  உள்ளன  என்றும்  மாநில மக்கள் நீதிமன்றம் (லோக் அயுக்தா) கூறியிருப்பதுதான் இன்றைய புதிய செய்தி. நீதி மன்றம் கூறியது வேண்டுமானால் புதிய செய்தியாக இருக்கலாம். ஆனால் கர்நாடக மக்களுக்கு - இந்திய மக்களுக்கு இது பழைய செய்தியாகும். கர்நாடகாவில் சட்ட விரோத சுரங்கங்கள் தொடர்பாக மார்ச் 2009 முதல் 2010 மே மாதம் வரை என்ன நடந்தது என்பது குறித்து நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையிலான மக்கள் நீதிமன்றம் நடத்திய விசாரணையில்தான் இது தெரியவந்தது. விசாரணை நடைபெற்ற 14 மாதங்களில் மட்டும் சட்டவிரோத சுரங்கங்களால் கர்நாடக மாநில அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ஒரு கோடியோ அல்லது இரண்டு கோடியோ அல்ல, 1800 கோடி ரூபாய். ஒராண்டு கொள்ளையே இவ்வளவு தொகை என்றால் 5 ஆண்டுகள் எவ்வளவு என்பதை சொல்லத் தேவையில்லை.

             இந்த பகல் கொள்ளையால் ரெட்டி சகோதரர்கள் கிட்டத்தட்ட அனைத்து சுரங்கங்களையும் தங்களது சாம்ராஜ்யத்தின்கீழ் கொண்டுவந்துள்ளனர். இந்த அறிக்கையால் கடந்த இரண்டு நாட்களாக கர்நாடக அரசியலில் மீண்டும் புயல் வீசத் துவங்கியுள்ளது. மக்கள் நீதிமன்ற நீதிபதியே முதலமைச்சருக்கு எதிராக ஆதாரப்பூர்வமாக குற்றம் சாட்டியுள்ளதால் முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பா விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன.

              இதில் என்னவேடிக்கை என்றால், இந்த அறிக்கையில் எடியூரப்பா பெயர் இருக்கிறது என்பதை முன்கூட்டியே அறிந்து கொண்ட பாஜக அமைச்சர்கள் சிலர், எடியூரப்பா பெயரை அறிக்கையில் இருந்து நீக்கவேண்டும் என்று நீதிபதியை நிர்பந்தப்படுத்தியுள்ளனர். அறிக்கை வரும் வரை உத்தமர் போல் நடித்தார்கள். அறிக்கை வந்தவுடன் அதை அமுக்க என்ன செய்ய முடியுமே அதை செய்யப்பார்க்கிறார்கள்.
          
             கொள்ளையைப் பொருத்தவரை இந்த காவிச்சட்டைக்  கொள்ளைக்காரர்களுக்கும் கதர்ச்சட்டைக் கொள்ளைக்காரர்களுக்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. அவர்கள் மத்திய அளவில் என்றால் இவர்கள் மாநில அளவில் என்பதே இருவருக்கும் உள்ள ஒரே வித்தியாசம் ஆகும். மத்தியிலும் தாமரை மலர்ந்தால் என்ன நடக்கும் என்பதற்கு கர்நாடகா ஒரு சின்ன உதாரணம் என்பதை நாட்டு மக்கள் மறந்துவிடக்கூடாது.