வியாழன், 28 ஜூலை, 2011

நீலச் சாயம் வெளுத்துப் போச்சி - உத்தமர்கள் போல் வேஷம் போடும் பா.ஜ.க.

             உங்களுக்கு நினைவிருக்கிறதா...கர்நாடகா மாநிலத்தில்  கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் முதல்முறையாக  பாரதிய ஜனதா கட்சி  ஆட்சியை பிடித்தபோது “தென்னிந்தியாவில் தாமரை மலரத் துவங்கிவிட்டது; இனி பாஜகவுக்கு ஏறுமுகம் தான்” என்று பல பாஜக தலைவர்கள் பீற்றிக்கொண்டார்கள். இந்த முதல் பாஜக அரசின் பதவிக்காலம் இன்னும் முடியவில்லை. அதற்குள்  அந்த அரசு இன்று தனக்குத் தானே சேற்றை வாரிப் பூசிக்கொண்டு,  மக்கள் மத்தியில் களங்கப்பட்டு - அசிங்கப்பட்டு நிற்கிறது என்பது தான் உண்மை.    
          
            அம்மாநில அமைச்சரவையில் செல்வாக்கு மிகுந்த நபர்களாக விளங்கும் ரெட்டி சகோதரர்கள் ( அங்கும் ஒரு களவாணி சகோதரர்கள் ) ஆசைக்கு இன்று பாஜக அரசே பலியாகப் போவதை அந்த மாநிலம் மட்டுமன்றி இந்த நாடே பார்க்கப்போகிறது. கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மற்றும் ஆந்திராவின் எல்லைப் பகுதியில் சட்ட விரோத இரும்பு சுரங்கங்களை அமைத்து, கோடி கோடியாக கொள்ளை அடித்துவரும் ஒரு  களவாணிக் கூட்டம்தான் ரெட்டி சகோதரர்கள் கூட்டம். கடந்த  
சட்டப்பேரவைத் தேர்தலில் கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வரப்போகிறது என்றவுடன் பல ஆயிரம் கோடி ரூபாயை அக்கட்சிக்கு வாரி வழங்கி னார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..
              
                இதையெல்லாம் அவர்கள் சும்மா செய்யவில்லை. பாஜக ஆட்சி அமைந்தவுடன் வட்டியும் முதலுமாக அதை அறுவடை செய்வதற்கு தான்  மிகவும் திட்டமிட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.  அதன் பிரதிபலனாகத் தான் இன்றுவரை  தொடர்ந்து அறுவடை செய்தும் வருகிறார்கள். ஆனால் இவை அனைத்தும் சட்ட விரோதமான செயல்கள் என்பதுதான் முக்கியமானதாகும். இந்த சட்ட விரோத சுரங்கங்கள் மூலம் நாள்தோறும் டன் டன்களாக இரும்புத் தாதுவை வெட்டி எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கோடி கோடியாக சம்பாதித்தனர். இந்தக் கொள்ளையை தடுக்கவேண்டிய மாநில அரசே அதற்கு துணை போயிருக்கிறது என்பதுதான் கொடுமையிலும் கொடுமையான விஷயமாகும். 

             இந்த கொள்ளையில் கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பாவுக்கும் தொடர்பு இருக்கிறது என்றும்  அதற்கான  உறுதியான ஆதாரங்கள்  உள்ளன  என்றும்  மாநில மக்கள் நீதிமன்றம் (லோக் அயுக்தா) கூறியிருப்பதுதான் இன்றைய புதிய செய்தி. நீதி மன்றம் கூறியது வேண்டுமானால் புதிய செய்தியாக இருக்கலாம். ஆனால் கர்நாடக மக்களுக்கு - இந்திய மக்களுக்கு இது பழைய செய்தியாகும். கர்நாடகாவில் சட்ட விரோத சுரங்கங்கள் தொடர்பாக மார்ச் 2009 முதல் 2010 மே மாதம் வரை என்ன நடந்தது என்பது குறித்து நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையிலான மக்கள் நீதிமன்றம் நடத்திய விசாரணையில்தான் இது தெரியவந்தது. விசாரணை நடைபெற்ற 14 மாதங்களில் மட்டும் சட்டவிரோத சுரங்கங்களால் கர்நாடக மாநில அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ஒரு கோடியோ அல்லது இரண்டு கோடியோ அல்ல, 1800 கோடி ரூபாய். ஒராண்டு கொள்ளையே இவ்வளவு தொகை என்றால் 5 ஆண்டுகள் எவ்வளவு என்பதை சொல்லத் தேவையில்லை.

             இந்த பகல் கொள்ளையால் ரெட்டி சகோதரர்கள் கிட்டத்தட்ட அனைத்து சுரங்கங்களையும் தங்களது சாம்ராஜ்யத்தின்கீழ் கொண்டுவந்துள்ளனர். இந்த அறிக்கையால் கடந்த இரண்டு நாட்களாக கர்நாடக அரசியலில் மீண்டும் புயல் வீசத் துவங்கியுள்ளது. மக்கள் நீதிமன்ற நீதிபதியே முதலமைச்சருக்கு எதிராக ஆதாரப்பூர்வமாக குற்றம் சாட்டியுள்ளதால் முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பா விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன.

              இதில் என்னவேடிக்கை என்றால், இந்த அறிக்கையில் எடியூரப்பா பெயர் இருக்கிறது என்பதை முன்கூட்டியே அறிந்து கொண்ட பாஜக அமைச்சர்கள் சிலர், எடியூரப்பா பெயரை அறிக்கையில் இருந்து நீக்கவேண்டும் என்று நீதிபதியை நிர்பந்தப்படுத்தியுள்ளனர். அறிக்கை வரும் வரை உத்தமர் போல் நடித்தார்கள். அறிக்கை வந்தவுடன் அதை அமுக்க என்ன செய்ய முடியுமே அதை செய்யப்பார்க்கிறார்கள்.
          
             கொள்ளையைப் பொருத்தவரை இந்த காவிச்சட்டைக்  கொள்ளைக்காரர்களுக்கும் கதர்ச்சட்டைக் கொள்ளைக்காரர்களுக்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. அவர்கள் மத்திய அளவில் என்றால் இவர்கள் மாநில அளவில் என்பதே இருவருக்கும் உள்ள ஒரே வித்தியாசம் ஆகும். மத்தியிலும் தாமரை மலர்ந்தால் என்ன நடக்கும் என்பதற்கு கர்நாடகா ஒரு சின்ன உதாரணம் என்பதை நாட்டு மக்கள் மறந்துவிடக்கூடாது.     

1 கருத்து:

Robin சொன்னது…

//கொள்ளையைப் பொருத்தவரை இந்த காவிச்சட்டைக் கொள்ளைக்காரர்களுக்கும் கதர்ச்சட்டைக் கொள்ளைக்காரர்களுக்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. // True!