அண்மையில் தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா யாரும் எதிர்பாராத வண்ணம் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை மிகுந்த பெருமிதத்துடன் அறிவித்தார். ஆனால், முந்தைய கருணாநிதி அரசின் அதே காப்பீட்டுத் திட்டம் தான் புதிய பாட்டிலில் மீண்டும் களத்தில் இறக்கப்பட்டுள்ளது என்பதைத்தான் தமிழக அரசின் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் வெளிப்படுத்துகிறது. முந்தைய திட்டத்தில் இல்லாத கூடுதல் பயன்கள் இருக்கின்றன என்பதற்காக இத்திட்டத்தைப் பாராட்டலாம் என்றாலும், இத்திட்டத்தால் அரசு மருத்துவமனைகள் மறுவாழ்வு பெறும் வாய்ப்பை இழந்துவிட்டனவே என்று நினைக்கும்போது பாராட்ட நா எழவில்லை.
அதுமட்டுமல்லாமல், தமிழகத்திலுள்ள அனைவரும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு செல்லத் தொடங்கினால், எதிர்காலத்தில் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளும், ஆரம்ப சுகாதார நிலையங்களும் படிப்படியாக மூடப்படும் அபாயமும் இருக்கிறது என்பது தான் வேதனையான விஷயமாகும். தற்போது இயங்கிவரும் மருத்துவக்கல்லூரிகளும் நோயாளிகளின் வருகை குறைவினால் மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு மூடப்படும் என்பது மட்டுமல்லாமல் புதிய மருத்துவக் கல்லூரிகள் ஆரம்பிப்பதற்கான அங்கீகாரம் கிடைப்பதும் சிரமமாக இருக்கும் என்பதும் உண்மையாகும்.
காப்பீடு செய்வோருக்கு எந்த அளவுக்குப் பலன் அதிகரிக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு பிரீமியத் தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் உயர்த்தி நிர்ணயிக்கும் என்பது நிச்சயம். இதனால் சென்ற ஆட்சியில் காப்பீட்டுத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியைவிடக் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டால் மட்டுமே இத்திட்டம் சாத்தியம் ஆகும். அதாவது மக்கள் வரிப்பணம் அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படாமல், பிரீமியத் தொகை என்கிற பெயரில் காப்பீட்டு நிறுவனங்களையும், சிகிச்சைக்கான கட்டணம் என்கிற பெயரில் தனியார் மருத்துவமனைகளையும் வளப்படுத்த மட்டுமே பயன்படுத்தப்படும் என்பது அரசின் ஏமாளித்தனத்தை தான் காட்டுகிறது.
காப்பீட்டு நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் பல ஆயிரம் கோடி ரூபாயை அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், இலவச பரிசோதனைக்கான இயந்திரங்களையும் உபகரணங்களையும் நிர்மாணம் செய்யவும், ஏழை எளிய மக்களுக்கு இலவசமாய் மருந்துகள் வழங்கவும், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளை முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும், மாவட்டங்கள் தோறும் மருத்துவக்கல்லூரிகள் தொடங்கவும் பயன்படுத்தினால், தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும் தரமான சிகிச்சை அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கும் என்பதை அரசு சிந்திக்க வேண்டும்.
அரசு தன் சொந்த மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கு பதிலாக, நான் இப்படித்தான் செய்வேன் என்று எப்போதும் போல் அடம் பிடித்து, ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ காப்பீடு கொடுத்து, சிகிச்சைக்காக அனுப்பி வைத்தால், என் மருத்துவமனை சரியில்லை, அங்கு சரியான சிகிச்சை அளிக்கமாட்டார்கள், எனவே எல்லோரும் தனியார் மருத்துவமனைக்கே செல்லுங்கள் என்று தமிழக அரசே ஒப்புக்கொண்டு சொல்வதாகத் தான் பொருள் கொள்ளப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக