திங்கள், 18 ஜூலை, 2011

அடம் பிடிப்பது ஆட்சிக்கு அழகில்லை.. குழந்தைகளின் எதிர்காலத்தை சிதைத்துவிடாதீர்கள்..

                தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டிலேயே  சமச்சீர் கல்வித்திட்டமே தொடர வேண்டுமென்றும், 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டமே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் - பழைய பாடத்திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்றும்,  ஜூலை 22-ம் தேதிக்குள் அனைவருக்கும் சமச்சீர் கல்வி புத்தகங்களை வழங்க வேண்டுமென்றும், சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது என்பது வரவேற்கத்தக்கது. மேலும், குறைகளைக் களைய குழு அமைக்கலாம் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இப்படியாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள மேற்கண்ட தீர்ப்பினை தமிழக மக்கள் அனைவரும் நிம்மதி பெருமூச்சுவிட்டு வரவேற்கின்றனர்.   
                அதேசமயம் தீர்ப்பு குறித்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் கருத்து தெரிவிக்கையில் உச்சநீதின்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று  அறிவித்திருப்பது என்பது துரதஷ்டவசமானது. கோடை விடுமுறை முடிந்து,   பள்ளிகள் திறந்து இரண்டு மாதங்கள் முடியப் போகிற  நிலையில் மேலும் காலம் தாழ்த்துவது என்பது,  மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு மிகுந்த மனஉளைச்சலையும், நடைமுறைச் சிரமத்தையும் ஏற்படுத்தும். குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும். எனவே,  மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்வதைக் கைவிட்டு உயர்நீதிமன்ற தீர்ப்பினை ஏற்று சமச்சீர் கல்வித்திட்டத்தின் முக்கிய அம்சமான பொதுப்பாடத் திட்டத்தை இந்தக் கல்வியாண்டிலேயே உடனடியாக காலம் தாழ்த்தாமல் அமல்படுத்திட வேண்டுமென்பது தான் தமிழக மக்களின் - குறிப்பாக பெற்றோர்களின், ஆசிரியர்களின், மாணவர்களின் எதிர்பார்ப்புகளாகும்.  
                ''உண்மையான'' கல்வியாளர்கள், சமூக அக்கறையுள்ள சான்றோர்கள் ஆலோசனைபடியும், வழிகாட்டுதல்படியும் நடத்தலே சிறந்த ஆட்சிக்கு சான்றாகும். அது தான் தமக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு செல்வி ஜெயலலிதா செய்யும் நன்றிக்கடனுமாகும். அதை விடுத்து, ''போலி'' கல்வியாளர்கள், கல்வி வியாபாரிகள் விருப்பப்படி தான்தோன்றித்தனமாக கல்வி முறையை சீர்குலைக்கச் செய்தால் இன்றைய இளையத்தலைமுறையினரின் பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும்.  

1 கருத்து:

barani சொன்னது…

IT IS SHOCKING TO SEE THAT THERE IS NO PROTESTS FROM THE COMMUNISTS IN THIS BURNING EDUCATIONAL ISSUE -- BARANI