சனி, 16 ஜூலை, 2011

அரசியல் எனக்கு பிடிக்கும்...!

அன்றாட வாழ்வில் அரசியல்
-அறிவுக்கடல்
         மாணவர்களுக்கு சொல்லித்தரப்பட வேண்டியது அன்றாட வாழ்வில் அறிவியல். எதற்காக என்றால் அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் 
நிகழ்ச்சிகள் ஏன், எப்படி, எதனால் நடக்கின்றன என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக; அது புரிந்துவிட்டால் பிரச்சனைகளை சுலபமாகக் கையாள, எதிர்கொள்ள முடியும் என்பதற்காக. வெயிலில் விளையாடக் கூடாது என்று சொல்வதைவிட, வெயிலில் விளையாடுவதால் ஏற்படும் பிரச்சனைகளை அறிவி யல் பூர்வமாக விளக்கிவிட் டால் அவர்களே அதற்கு ஏற்ப மாற்றிக் கொள்வார்கள் அல்லவா? மாணவர்களுக்குப் புரிய அறிவியல்! நமக்கு? நமக்குப் புரிய வேண்டியவை பிரச்சனைகள்! நாம் எல்லாவற்றிலும் சரியாக இருந்துவிட்டால் நமக்கு பிரச்சனை இல்லாமல் இருக்கிறதா? தனிப்பட்ட பிரச்சனைகளை விடுங்கள்! விலைவாசி உயர்வு, மின்வெட்டு போன்று நம் அனைவருக்கும் ஏற்படும் பிரச்சனைகளின் பின்னணி?

         அரசியல் பேசலாமா, கூடாதா? “எனக்கு அரசியலே பிடிக்காது சார்!”, “அரசியலே சாக்கடை சார்!”. இதெல்லாம் நம்மில் பலர் பெருமையாகக் கூறிக் கொள்ளும் சொற்கள்! ஆனால், அடுத்தமாதம் நம் வீட்டு சமையற்கட்டுக்கு வரப் போகும் கேஸ் சிலிண்டரின் விலை என்ன என்பதை முடி வெடுக்கப் போவது அரசியல் தான்! நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நாம் சந் திக்கும் பிரச்சனைகளின் அடிப்படை அரசியலாக இருக்கும்போது பேசாமல் இருப்பது சரியா?

                 ஒரு மாணவன் அரசியல் பேசினால் கேட்கப்படுகிற கேள்வி “படிக்கிற காலத்தில் அரசியல் தேவையா?”, வேலைக்குப் போனபின் பேசினால் “அரசு ஊழியருக்கு அரசியல் கூடாது!” ஓய்வு பெற்றபின் பேசினால் “காலம் போன கடைசியில் அரசியல் தேவையா?”. பின் எப்போதுதான் அரசியல் பேசுவது? உண்மையில் அதே மாணவனின் கல்வியில் இருந்து மக்களின் பொதுவான தேவைகள் அனைத்தும் அரசியல் முடிவுகளுக்குட்பட்டே கிடைக்கின்றன.

             நோய் முதல் நாடித்தான் அது தணிக்க முடியும் என்பது வள்ளுவர் வாக்கு. அது தெரியாததால்தான், மின்வெட்டுக்கு மின்வாரிய ஊழியர்கள் மீது கோபம் வருகிறது. தவறான இடத்தில் கோபப்பட்டு நம் சக்தியை வீணாக்குகிறோமே தவிர, பிரச்சனைக்குத் தீர்வு கிடைப்பதில்லை. உண்மையில் சரியான இடத்தில் தீர்வு கேட்டுப் போராடுபவர்களோடு துணை நிற்காமல் பிரச்சனையுடனே வாழப் பழகிக் கொள்கிறோம். நம் பொதுவான பிரச்சனைகள் அனைத்திலும் தீர்மானிக்கும் சக்தியாக அரசியலே உள்ளபோது, அதைப் பற்றிப் பேசாமல் ‘அது தணிக்கும் வாய்’ நாட முடியாதே?

நன்றி : சங்கக் குரல்

கருத்துகள் இல்லை: