புதுச்சேரியில் தேர்தல் முடிந்து, ரங்கசாமி தலைமையில் புதிய அரசு பதவியேற்று 2 மாதங்கள் ஆகியும் அரசு நிர்வாகம் செயல்படாமல் ஸ்தம்பித்து போயிருப்பது என்பது புதுவை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் 15 இடங்களிலும் அதிமுக 5 இடங்களிலும் வெற்றி பெற்றன. மொத்தமுள்ள 30 இடங்களில் இந்த அணி 20 இடங்களில் வெற்றி பெற்றதால், தேர்தல் நேர ஒப்பந்தப்படி கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என்று பத்திரிகைகளும் அரசியல் விமர்சகர்களும் மற்றும் மக்களும் எதிர்பார்த்தனர். ஆனால் தேர்தல் முடிந்த கையோடு கூட்டணி கட்சியான அதிமுகவை ரங்கசாமி கழட்டிவிட திட்டமிட்டு, காரைக்காலில் வெற்றிபெற்ற சுயேச்சை வேட்பாளர் ஒருவரை தன்னோடு சேர்த்துக்கொண்டு, தான் இரண்டு தொகுதியில் வெற்றிபெற்றவர் என்பதையும் மறந்துவிட்டு, 30- இல் 16 உறுப்பினர்கள் என்கிற பலத்துடன் தனித்து ஆட்சியமைத்தார். இது கூட்டணித் துரோகம் மட்டுமல்லாது, கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்கும் நம்பிக்கைக்கும் எதிரானது.
அது மட்டுமல்லாது, எதிர்காலத்தில் தாய்க்கட்சியோடு இணையலாம் என்கிற திட்டத்தோடு ரங்கசாமி வெளிப்படையாகவே காய் நகர்த்துவது என்பது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. கடந்த கால காங்கிரஸ்- திமுக அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக மக்கள் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக அவர் செயல்படுவது மக்களுக்கு எரிச்சலை ஊட்டுகிறது. . இதனால் இன்று அந்த சின்னஞ்சிறிய மாநிலத்தில் மிகப்பெரிய அரசியல் குழப்பம் நீடிக்கிறது.
மேலும் ரங்கசாமி வெற்றிபெற்ற இரு தொகுதிகளில் ஒரு தொகுதியின் உறுப்பினர் பதவியை ராஜனாமா செய்ததும், அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் பதினாறிலிருந்து பதினைந்தாக குறைந்ததும் ரங்கசாமிக்கே பைத்தியம் பிடிப்பது போல் ஆகிவிட்டது. தற்சமயம் சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு ஒரு இடம் குறைவாக உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கு வலை வீசிப்பார்த்தார். நரிக்கு வடை கிடைக்கவில்லை. தற்போதைக்கு யாரும் சிக்காததால் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதை தள்ளிப்போட்டுவருகிறார்.
தில்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்து பேசிப் பார்த்தார். தனக்கு ஆதரவு கோரினார். ஆனால் கட்சியை கலைத்துவிட்டு வந்தால் மட்டுமே ஆதரவு என்று அவரும் கைவிரித்து விட்டதால், அடுத்து என்ன செய்வது என்று புரியாத நிலையில் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார். தூக்கத்தில் கூட ஏதாவது உளறிக்கொண்டே இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில், மாநிலத்தில் இவ்வளவு அலங்கோலங்கள் அரங்கேறிய போதிலும் மாநில துணைநிலை ஆளுநர் இக்பால் சிங் அரசியல் சாசனத்தை நிலைநாட்டாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ரங்கசாமியை அவர் இதுவரை கேட்டுக்கொள்ளாமலேயே இருக்கிறார். . ஆளுநர் மட்டுமல்ல, புதுவை அரசை நேரடியாக கட்டுப்படுத்தக் கூடிய மத்திய உள்துறை
அமைச்சகமும் வேடிக்கை தான் பார்த்துக்கொண்டிருக்கிறது. தனது சொந்த அரசியல் லாபத்துக்காக அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் நீடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கருதுகிறது என்பது தான் உண்மை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக