தணிக்கை குழு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தணிக்கை குழு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

விஸ்வரூபம் - தணிக்கை குழு உறுப்பினர் ஹசன் முகம்மது ஜின்னா விளக்கம்...!

       
















     
          ''விஸ்வரூபம்'' படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் அளித்தது பற்றி இஸ்லாமிய அமைப்புகளினால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கு தணிக்கை குழு உறுப்பினராக இருக்கக்கூடிய திரு.  ஹசன் முகம்மது ஜின்னா விளக்கம் அளித்துள்ளார்.
( தி.மு.க.வைச் சேர்ந்த இவர் கடந்த சட்டசபை தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டவர். தேர்தல் பிரசாரத்தின் போது  ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோரையும் சந்தித்து வாழ்த்து பெற்றவர்.  விஸ்வரூபம் சர்ச்சையி்ல் இவரையும் இழுத்துள்ளனர் )

ஜின்னா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
         தணிக்கைத் துறையில் பல மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. எந்த மதத்தின் உணர்வையும் புண்படுத்தப்படுவதையும் தணிக்கைத்துறை விதிகள் அனுமதிப்பதில்லை. அதே நேரத்தில், படத்தைத் தணிக்கை செய்யும் உறுப்பினர்களும் தங்கள் சொந்த மதத்தின் கண்ணோட்டத்தில் தணிக்கை முறையைக் கையாள்வதில்லை.
             வழிகாட்டும் முறைகள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், சமுதாயத்தின் அமைதியைக் குலைக்கக்கூடிய வகையிலோ, உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலோ, வக்கிரம் மற்றும் ஆபாசம் நிறைந்ததாகவோ காட்சிகள் இருப்பின் அவை நீக்கப்படுகின்றன.
           விஸ்வரூபம் படத்தைப் பொறுத்தவரை, தமிழில் அது தணிக்கை செய்யப்படுவதற்கு முன்பே இந்தி மொழியில் அப்படம் தணிக்கை செய்யப்பட்டது. அதன்பிறகே, தமிழ்ப் பதிப்பு மற்றும் தெலுங்கு தணிக்கை செய்யப்பட்டது. இந்தியிலும், தெலுங்கிலும் தணிக்கை செய்யப்பட்டபோதும் அந்தந்த மொழியறிந்த இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர்.
            ஒரு படம், வேறு மொழியில் ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்டிருந்தால் அதில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்பது ஒரு நெறிமுறையாகும்.
               அதே நேரத்தில், சம்பந்தப்பட்ட மொழியில் உள்ள வசனம் மற்றும் பாடல் வரிகளின் தன்மை, காட்சியமைப்புகளால் அந்த மொழி பேசும் பகுதியில் ஏற்படக்கூடிய தாக்கம் ஆகியவை கவனத்தில் எடுத்து கொள்ளப்படவேண்டும் என்பதும் வழிகாட்டு நெறி முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
            அதனடிப்படையிலேயே ஒவ்வொரு படமும் தணிக்கைக்குள்ளாகிறது. படத்தை தணிக்கை செய்த உறுப்பினர்களில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த நான் இடம் பெற்றிருந்தேன் என்பது எந்தளவுக்கு உண்மையோ, அதேஅளவுக்கு ஒரு படத்திற்கானத் தணிக்கை முறைகளில் அதில் பங்குபெறும் மற்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை முடிவே இறுதியானதாகும் என்பதும் உண்மை.
             தணிக்கைத் துறை உறுப்பினர், அவருடைய கருத்தைத்தான் பதிவு செய்ய முடியுமே தவிர, பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவின் அடிப்படையிலேயே சான்றிதழ் வழங்கப்படும். தலிபான், அல்கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகளை இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சகோதரர்களும் ஏற்பதில்லை. அவற்றுடன் இந்திய முஸ்லிம்களை இணைக்காதீர்கள் என்பதே இங்குள்ளவர்களின் நிலைப்பாடும் வேண்டுகோளுமாகும்.
                 இத்தகைய தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் பற்றிய காட்சிகளுடன் ஆங்கிலத்தில் ஹாலிவுட் படங்கள் பல வெளிவந்துள்ளன. வந்துகொண்டும் இருக்கின்றன. அவற்றுக்கு இந்தியா உள்பட பல நாடுகளிலும் தணிக்கைச் சான்றிதழ் அளிக்கப்பட்டு திரையிடப்பட்டு வருகின்றன.
        நான் என் கடமையிலிருந்து ஒருபோதும் தவறியதில்லை, எந்தவகையிலும் இஸ்லாத்திற்கு      எதிரானதாகவோ, அமைதியையும் அன்பையும் விரும்பும் இஸ்லாமிய சகோதரர்களைத் தவறான வகையில் சித்தரிக்கும் விதத்திலோ உள்ள காட்சிகளை மட்டுமல்ல, இந்து மதம், கிறிஸ்தவ மதம் உள்பட எந்தவொரு மதம் அல்லது ஒரு சமுதாயம், மொழி, இனம் பற்றிய தவறான உள்நோக்கம் கொண்ட சித்தரிப்புகள் இருக்குமானால் என் எதிர்ப்பு பலமாகவே வெளிப்படும்.
          அதை நான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். தணிக்கைத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையிலேயே என் கருத்தையும் முடிவுகளையும் தெரிவிக்கிறேன்.
            நான் ஏற்கனவே கூறியது போல, இறுதி முடிவு என்பது, படத்தைப் பார்க்கும் தணிக்கைத்துறை உறுப்பினர்களின் பெரும்பான்மையான கருத்துகளின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகிறது.
                 தற்போதைய நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது. அதுவரை பொறுத்திருக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது.

இவ்வாறு ஜின்னா கூறியுள்ளார்.