உள்ளாட்சித் தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உள்ளாட்சித் தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

உச்சக்கட்டத்தில் மம்தாவின் வெறியாட்டம்

         

 
             









               மேற்குவங்க மாநிலத்தின் ஆட்சிப்பொறுப்பை ஏற்று நான்கு ஆண்டுகள் முடியுறும் வேளையில் மாநிலத்திற்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் அறிவிக்கப்பட்டு சென்ற வாரம் அதற்கான தேர்தல்கள் கட்டம் கட்டமாக நடைபெற்றன. தேர்தல்களை ஜனநாயகத்திற்கு உட்பட்டு, நியாயமான முறையிலும், நேர்மையான முறையிலும் அமைதியுடன் நடத்தவேண்டிய மம்தாவின் தலைமையிலான அரசு ஜனநாயகத்தையும், நியாயத்தையும், நேர்மையையும் காற்றில் பறக்கவிட்டு, அராஜகத்தையும், அட்டுழியங்களையும் கட்டவிழ்த்து விட்டு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நடத்தியிருக்கிறது. 
            பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் தன் மீது நம்பிக்கை வைத்து, கடந்த 36 ஆண்டுகளாக மாநிலத்தில் கோலோச்சியிருந்த இடதுசாரிகளை இறக்கிவிட்டு, மம்தாவை அரியணையில் ஏற்றிய மக்கள்  இன்று மம்தாவின் மீது அதிருப்தியில் இருப்பதால் வெற்றிபெறுவது சிரமம் என்ற நிலையில் மம்தா இந்த உள்ளாட்சி தேர்தலை அராஜகமான தேர்தலாக நடத்தி சாதனை புரிந்திருக்கிறார்.
  வாக்காளர்கள் ஓட்டுப்போடாத வண்ணம் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். மீறி ஓட்டுப்போட வரும் பொதுமக்கள் மீது   மம்தா கட்சியை சேர்ந்த ரவுடிகளே கையெறி குண்டுகளை வீசுவதும், துப்பாக்கிகளால் சுடுவதுமான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டனர். அந்த ரவுடிகளுக்கு மம்தாவின் காவல்துறையே துணைக்கு நின்றது. காவல்துறையினரே அமைதியான முறையில் ஓட்டுப்போட வரும் பொதுமக்களை தடியடி நடத்தி விரட்டியடித்தனர். பல இடங்களில் பொதுமக்களே இந்த அராஜக கும்பலுக்கு எதிராக வெகுண்டெழுந்திருக்கிறார்கள்.
                அதுமட்டுமல்லாமல் மம்தாவின் ரவுடிகள் ஓட்டுச்சாவடிகளை கைப்பற்றுவது, துரத்தியடிக்கப்பட்ட வாக்காளர்களுக்கு கள்ளவோட்டு போடுவது போன்ற அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். மம்தா கட்சியின் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் வேட்பாளர்களை மிரட்டியிருக்கின்றனர். இவர்கள் பேச்சை மீறி நிற்கும் இடதுசாரி வேட்பாளர்களை கொலை வெறியுடன் தாக்கியிருக்கின்றனர்.
           இப்படியாகத்தான் மம்தா உள்ளாட்சித் தேர்தலை மிக அருமையாக நடத்திஇருக்கின்றார். முதல்வராக பதவியேற்ற நாளிலிருந்து வெளிப்பட்ட மம்தாவின் வெறியாட்டம் இன்று உச்சத்தை தொட்டுயிருக்கிறது.
               அவசர நிலை காலத்தில் மேற்குவங்க மாநிலத்தை ஆண்டு கொண்டிருந்த அன்றைய காங்கிரஸ் கட்சியின் முதல்வர் சித்தார்த்த சங்கர் ரே நடத்திய  காட்டாட்சியை விட இன்றைக்கு மம்தா நடத்தும்  ஆட்சி காட்டுமிராண்டித்தனமாகவும் அராஜகமாகவும் உள்ளது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. ஆணவத்தின் உச்சத்தில் - அராஜகத்தின் உச்சத்தில் வெறியாட்டம் போடும் மம்தாவிற்கு மக்கள் பாடம் கற்பிக்கும் காலம் வெகு தொலைவில்  இல்லை.

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

உள்ளாட்சித் தேர்தலில் ஜெயலலிதாவும் கருணாநிதியும் எப்படி ஒற்றுமையாய் ஒத்துப்போனார்கள்...?

                 தமிழக மக்களே... ஒன்றை கவனித்தீர்களா...? தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவித்த நாளிலிருந்தே இந்நாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் ஒருவரையொருவர் அடித்துக்கொள்ளவும்  இல்லை... கடித்துக்கொள்ளவும் இல்லை.... ஒருவரையொருவர் சேற்றைவாரி பூசிக்  கொள்ளவில்லை.  தேர்தல் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே இருவரும் ஒற்றுமையுடன் சமாதானமாகவே  சென்றது போலத்தான் இருந்தது.
               ''குரங்குகளும், குல்லா  வியாபாரியும்'' கதையில... அந்த குல்லா வியாபாரி தன் தலையில் இருந்த குல்லாவை கழட்டி தூக்கி எரிந்தவுடன் குரங்குகளும் தன் தலையில் இருந்த குல்லாவை கழட்டித் தூக்கி எரிந்து விடும். இந்த கதையை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். இந்தக் கதையை சரியான நேரத்தில் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டவர் கருணாநிதி தான்.  ஜெயலலிதா - விஜயகாந்த் கூட்டணியை உடைக்கவேண்டுமென்ற நோக்கத்துடன், கருணாநிதி வஞ்சகமாகவும், தந்திரமாகவும்  ''திமுக தனித்துப் போட்டி'' என்று அறிவித்து விட்டு, தன்னுடன் கூட்டணிக்கட்சிகளாக இருந்த காங்கிரஸ் போன்ற கட்சிகளை கழட்டித் தூக்கி எறிந்துவிட்டார். அதைப்பார்த்த ஜெயலலிதாவோ...    அதுவரையில் கூட்டணிப் பற்றி பேசுவதற்கு குழு அமைத்து, கூட்டணிக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தையும் தொடங்கிவிட்ட சூழ்நிலையில், கருணாநிதி கூட்டணிக்கட்சிகளை கழட்டி தூக்கி எறிந்தது போல் இவரும் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் சத்தம் போடாமல் கூட்டணிக்கட்சிகளை கழட்டி தூக்கி எறிந்து விட்டு தனித்து நின்றார். இதில் எப்படி இருவருக்கும் இவ்வளவு ஒற்றுமை. குரங்கு குல்லா கதையை கருணாநிதி தான் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.  இந்த குரங்கு குல்லா கதையை ஜெயலலிதாவோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நான் பொறுப்பில்லை. ஆமா... சொல்லிபுட்டேன்...
               விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் அளவுக்கு உயர்ந்ததில் இந்த இருவருக்குமே  பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இருவரும் ஒன்றில் தெளிவாக இருக்கிறார்கள்... விஜயகாந்த் வளர்ந்துவிடக்கூடாது என்பதில் இருவரும் ஒத்துப்போகிறார்கள்... ஐந்து ஆண்டுகளுக்குகொரு முறை தாங்களே மாறிமாறி வரவேண்டும். இவர்களுக்கிடையில் மூன்றாவதாக இன்னொருவர் வந்துவிடக்கூடாது என்பதில் இருவரும் தெளிவாகத் தான் இருக்கிறார்கள்.
                      முடிந்துபோன   உள்ளாட்சித் தேர்தலில் கூட, தாங்கள்  வெற்றி பெறுவதற்கு, தமிழகம் முழுதும் அதிமுக வேட்பாளர்களும், திமுக வேட்பாளர்களும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதும், நிறைய பரிசுப் பொருட்கள் தருவதுமாகத் தான் இருந்தார்கள். அப்போது கூட ஒருவரையொருவர் குற்றம் சொல்லவில்லை. மாநில தேர்தல் ஆணையமும் இந்த இருவரையும் கண்டுகொள்ளாமல் தான் இருந்தது என்பதும் உண்மை. இந்த விஷயத்திலும் கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஒற்றுமையாய் ஒத்துப்போயிருக்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும்.
      இப்படியாக பணத்தையும் பொருட்களையும் கொடுத்து தான் முதல் இடத்திலும், இரண்டாவது இடத்திலும் இவர்கள் இருவரும் வந்திருக்கிறார்கள் என்பது இவைகளை வாங்கிக்கொண்டு வாக்களித்த தமிழக மக்களின் மனசாட்சிக்கு நிச்சயம் தெரியும்.
               '' அம்மாவிற்கும் அப்பாவிற்கும் 
                 சண்டை... விவாகரத்து...
                 குழந்தை 
                 அம்மாவிடம் ஐந்து ஆண்டுகள்..
                 அப்பாவிடம் ஐந்து ஆண்டுகள்..
                 நீதிமன்றத் தீர்ப்பு... 
                குழந்தையின்  பெயர் தமிழ்நாடு...''    
என்று யாரோ எழுதிய புதுக்கவிதை தான் என் ஞாபகத்திற்கு வருகிறது.

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

ஜெயலலிதா சொன்ன ''அமைதிப்பூங்கா'' இது தானோ..?

                    தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரங்களைப் பார்க்கும் போது, தமிழக மக்கள் எவ்வளவு பாவப்பட்டவர்கள் என்று நமக்குத் தோன்றும். முன்னாள் - இந்நாள் முதலமைச்சர்களும் ஒருப்பக்கம் குழாயடி சண்டைப் போட்டுக்கொள்வது வேடிக்கையாய் இருந்தாலும், இன்னொரு பக்கம் கருணாநிதியும், ஜெயலலிதாவும் சேர்ந்து சரம் சரமாய் பூக்களை தமிழக மக்களின் காதுகளில் சுற்றுவதைப் பார்க்கும் போது தான் இந்த மக்கள் ரொம்ப பாவப்பட்டவர்கள் என்று தோன்றுகிறது. அவ்வளவு பூ சுத்துறாங்கப்பா... தாங்கல... ம்ம்ம்... முடியல... அழுதுடுவேன்... 
             ''இந்த ஜெனங்க ரொம்ப நல்லவங்க.. எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாங்க''..ன்னு இந்த ரெண்டு பேரும் சேர்ந்து இவ்வளவு போடு போடுறாங்க..
        ''சட்டம்  - ஒழுங்கைப் பொறுத்த வரையில், கடந்த திமுக ஆட்சியில் ரவுடிகளின் நண்பனாக விளங்கிய ''காவல் துறை'' தற்போது பொதுமக்களின் நண்பனாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  எனது அரசு எடுத்த நடவடிக்கைகளின் பயனாக, அமளிக் காடாக விளங்கிய தமிழகத்தை நான்கே மாதங்களில் அமைதிப் பூங்காவாக, மாற்றிக் காட்டி உள்ளேன்'' என்று உள்ளாட்சி தேர்தல் கூட்டங்களில்  வாய் கிழியப் பேசும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சொன்ன அமைதிப்பூங்கா இது தானோ...?
                 அமைதிப்பூங்கா என்றால் இப்படித்தான் இருக்குமோ..?
   பரமக்குடியில் காவல் துறையினர், துப்பாக்கிச்  சூட்டில் மரணமடைந்த தன் நண்பனை ''அன்போடு'' தூக்கிவருகிறார்கள் 
''மக்களின் நண்பர்கள்'' தன் நண்பர்களை ''அன்பாய்'' துப்பாக்கியால் சுட்டு கிடத்தி வைத்திருக்கிறார்கள் 
முன்பு ரௌடிகளின் நண்பர்களாய் இருந்தவர்கள் இப்போது மக்களுக்கு எதிராக ரௌடிகளாய் மாறியிருக்கும் காவலர்கள் 
காவல் துறையினர் தன் நண்பர்களோடு ஓடிபிடித்து விளையாடுகிறார்கள்
தன் நண்பர்களை  துப்பாக்கி  குண்டுகளால் துளைத்து  ஆனந்தமாய் விளையாடுகிறார்கள்.

தன் நண்பர்களை லத்திக் கம்பால் விரட்டி விரட்டியடிக்கிறார்கள்

சேலத்தில் மூடப்பட்ட ஏழை மக்கள் பயன்படுத்தும்  மருத்துவமனையை திறக்கக்கோரி போராடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த இளைஞர்களை சினிமா வில்லனை போல் அடிக்கும் ''மக்களின் நண்பன்''
குற்றவாளிகளைக் கூட விட்டுவிடுவார்கள்.. ஆனால் போராளிகளின் கழுத்தை நெருக்குவார்கள் இந்த ''மக்களின் நண்பர்கள்''
                            கோவையில் வழக்கறிஞர் ஒருவரை ''மக்களின் நண்பர்களான'' காவல் துறையினர் ரவுண்டு கட்டி அடித்திருக்கிறார்கள்  






































               அமைதிப்பூங்கா என்றால் ஜெயலலிதா அகராதியில் இது தான் அர்த்தமோ..?
               ஆட்சி மாறினாலும்... முதல்வர் மாறினாலும்... அமைச்சர்கள் மாறினாலும்... காவல் துறையின் குணம் மட்டும் மாறாது என்பதற்கு இந்நாள் - முன்னாள் முதல்வர்களின் ஆட்சிகளின் லட்சணமே ஒரு சான்றாகும்...

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது..!

                சென்ற ஏப்ரல் 2011 - னில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில்  வெற்றி பெற்றது. அதிலும் அதிமுக அறுதிபெரும்பான்மையோடு ஆட்சிலமர்ந்தது அனைவருக்கும் தெரியும். திமுகழகமோ இரண்டாவது இடம் கூட கிடைக்காமல் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மக்கள் ஒரு பெரிய மாற்றத்தை தமிழகத்தில் அரங்கேற்றினார்கள். 
             அதிமுகவின் மாபெரும் வெற்றிக்கு என்ன காரணம்..? முதல் காரணமே.. கருணாநிதியின் குடும்ப அரசியல்.. குடும்ப ஆதிக்கம்.. 2 - ஜி ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல்..இதனால் மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பு தான் என்பதை தமிழக  மக்கள்  மறுக்கமாட்டார்கள்..அதேப்போல்,   மிகப்பெரிய பலம் வாய்ந்த மாபெரும்  கூட்டணி என்பது  இரண்டாவது காரணம்.. இதையும் யாராலும் மறுக்க முடியாது. இவைகளால்  தான் ஜெயலலிதா கூட முதலமைச்சராக அமர முடிந்தது. 
               மனசாட்சி என்று ஒன்றிருந்தால், ஜெயலலிதாவிற்கும் இந்த வெற்றியின் பின்னணி தெரியும். ஆட்சியில் இல்லாத காலத்தில் மக்களையே சந்திக்காமல், வீட்டிலேயே முடங்கி, ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தவரை கூட்டணி கட்சிகள் தான் முதலமைச்சர் பதவியில் அமரச் செய்தார்கள் என்பதை ஜெயலலிதா நல்ல மனசாட்சியோடு ஒப்புக்கொள்ளவேண்டும்.
             ஆனால் இன்றைக்கு ஆட்சிக்கு வந்தவுடன், கூட்டணி இல்லையென்றாலும்  நாங்கள் தான் வெற்றிபெற்றிருப்போம் என்று சொல்வதும், எங்களுடன் கூட்டணி வைத்ததால் தான் மற்றக் கூட்டணி கட்சிகள் வெற்றிப் பெற்றார்கள் என்று சொல்வதும் ஆணவத்தின் போக்கைத் தான் குறிக்கிறது. இது அழிவுக்கான அறிகுறி என்பதை அதிமுக மறந்துவிடக்கூடாது.
             தன் கட்சியின் பலத்தின் மீதுள்ள அலாதியான - அதீதமான  நம்பிக்கையின் காரணமாக,  உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக்கட்சிகளை கலந்தாலோசிக்காமலேயே கழட்டி விட்டது மட்டுமல்லாமல், தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டது என்பது, ஜெயலலிதாவின் ஆணவமும், திமிர்பிடித்தத் தனமும் இன்னும் குறையவே இல்லை என்பதைத் தான் காட்டுகிறது.
            எப்போதுமே கருணாநிதி செய்ததை அப்படியே எதிர்மறையாக செய்யக்கூடிய ஜெயலலிதா,  கூட்டணி கட்சிகளை கழட்டிவிடும் செயலில் மட்டும்  கருணாநிதியோடு  எப்படி ஒத்துப்போகிறார் என்பது தான் நமக்குப்  புரியவில்லை. ''வேதாளம்'' எப்படி சரியா போயிட்டிருக்குன்னு மக்கள் ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டிருந்த வேளையில், வேதாளம் மீண்டும் முருங்கை  மரத்தில் ஏறியது. எல்லாம் ''சோ'' - வுக்கு தான் வெளிச்சம்.