டெசோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டெசோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 10 மார்ச், 2013

புதுடெல்லியில் எடுபடாத கருணாநிதியின் ''டெசோ நாடகம்''....!

        தேர்தல் நெருங்க நெருங்க நமக்கெல்லாம் ரொம்ப ஜாலியா பொழுது போய்விடும்.  இனிமே திமுக தலைவர் கருணாநிதி பொழுதுபோக்கா ஏதாவது நாடகம் நடத்திகிட்டே இருப்பார்.
அவருக்கு பொழுது போகவில்லை என்ன பண்ணுவாரு பாவம்...?  இலங்கை தமிழர் விஷயத்தில் அவரும் என்னென்னமோ செய்து பார்க்கிறாரு. ஒன்னும் வேலைக்கு
ஆகமாட்டேன்னுது. ''தமிழர்களை கொன்னுபுட்டான்.. பிரபாகரனின் புள்ளைய கொன்னுபுட்டான்.. பாவின்னு'' இப்போது ஒப்பாரி வைக்கிறாரு. ஆனா இது எல்லாம் நடந்த காலம் அண்மைக்காலம் அல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவரு ஆட்சியில இருந்த போது நடந்தது தான்.
         கருணாநிதி முதலமைச்சராக ஆட்சிக் கட்டிலில் வீற்றிருந்த போது தான் இலங்கை இராணுவத்திற்கும், விடுதலை புலிகளுக்கும் கடுமையான போர் நடந்தது என்பதையும், அந்த போரில் தான் ஆயிரக்கணக்கான தமிழர்களும், விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனும், அவரது மகன் பாலச்சந்திரனும் கொல்லப்பட்டார்கள் என்பதை தமிழக மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு தமிழக மக்கள் காதில் பூ சுற்றுவதையே பொழுதுபோக்காக கொண்டிருக்கிறார் திமுக தலைவர். ''அன்று என்ன செய்துகொண்டிருந்தார்...? பூ பறித்துக் கொண்டிருந்தாரா...?  இன்று எங்கள் காதில் சுற்றுவதற்கு'' என்பது தான் தமிழக மக்களின் இன்றைய கேள்வி. 
         நாடகம் - 1: கருணாநிதி முதலமைச்சராக  இருந்தபோதே, இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, மத்தியில் இவரது ஆதரவில் ஆட்சி நடத்திக்கொண்டிருந்த மன்மோகன் சிங்கை மிரட்டியிருக்க முடியும். அதன் மூலம் அப்பாவி தமிழ் மக்களை காப்பாற்றியிருக்க முடியும். இவ்வளவு உயிர் சேதம் ஏற்பட்டிருக்காது. ஆனால் அப்படி செய்யாமல், கடற்கரையில் ஒரு மணிநேர ''உண்ணாவிரத நாடகம்'' நடத்திக்காட்டினார். மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிரூந்த தன் ''உத்தமபுத்திரனின்'' மந்திரிப்பதவியையும், பேரனின் மந்திரிப்பதவியையும் காப்பாற்றிக்கொள்வதற்காக இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் துளியும் அக்கறை காட்டவில்லை என்பது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
         நாடகம் - 2 : என்றோ காலாவதியான ''டெசோ அமைப்பிற்கு'' 2012 - ஆம் ஆண்டில் உயிர்கொடுத்தார்.  சென்ற ஆகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் உள்நாட்டு எதிர்க்கட்சித்தலைவர்கள் சிலபேரை அழைத்து போலீஸ் தடையையும் மீறி நட்சத்திர ஓட்டலில் மாநாடு நடத்தில் இலங்கை அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றினார். தமிழர்களை கொன்று குவித்த இராஜபட்சே மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐ. நா சபையை கேட்டு ஐ. நா. சபையின் பொதுச்செயலாளர் பான் கி மூனை சந்தித்து கடிதம் கொடுக்கப்படும் என்றும் அந்த மாநாட்டில் அறிவித்தார்.
         நாடகம் - 3 : ஐ. நா - வின் பொதுச்செயலாளர் பான் கி மூனை நேரில் சந்தித்து கடிதத்தை கொடுப்பதற்கு தன் ''அரசியல் வாரிசு'' ஸ்டாலினையும், கட்சியின் மக்களவை உறுப்பினர் பாலுவையும் அனுப்பிவைத்தார். ஆனால் அவர்களை பொதுச்செயலாளரை சந்திக்க அனுமதிக்கவில்லை. எனவே ஐ. நா சபையின் அதிகாரியிடம் கொடுத்துவிட்டு திரும்பினர். ஐ. நா  - வுக்கு கிளம்பும் போதும், சென்னை வந்து சேரும் போதும் அந்த இருவருக்கும் தடபுடலான வழியனுப்பும், வரவேற்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
         உண்மையிலேயே ஐ. நா.  பொதுச்செயலாளருக்கு அந்த  கடிதம் போய்  சேரவேண்டுமென்றால், அதை முறைப்படி இந்திய அரசாங்கத்தின் மூலம் தான் கொடுத்து அனுப்பியிருக்கவேண்டும். அப்படி தான் முறைப்படி கொடுக்கவேண்டும் என்கிற சின்ன விஷயம் கூட  பல காலமாக முதலமைச்சராக பணியில் இருந்தவருக்கு -  ஒரு முன்னாள் முதலமைச்சருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. என்றாலும்  தமிழ்நாட்டு மக்களின் காதில் பூச்சுற்றுவதற்காகவே நேரடியாக கொடுப்பது போன்று ஏற்பாடு செய்யப்பட்ட நாடகம் தான் அது.
         நாடகம் - 4 :  இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மீண்டும் சகஜ நிலைமைக்கு திரும்புவதற்கு உதவிப்பணிகள் சரிவரச் செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க இந்தியாவிலிருந்து சென்ற ஆளும் கூட்டணிக்கட்சிகளை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவில் சென்ற கனிமொழி, டி. ஆர். பாலு, அ. ராசா, திருமாவளவன் போன்ற தமிழக எம். பி. - க்கள் ராஜபட்சே அளித்த விருந்தில் பங்கேற்று, இராஜபட்செவிற்கு பொன்னாடைப் போர்த்தி, பரிசுப் பொருட்களை வழங்கி, அவர் அளித்த பரிசுப்பொருட்களையும் பெற்றுக்கொண்டு இந்தியா திரும்பினார்கள். அதுமட்டுமன்றி, இந்தியாவிற்கு வந்த இவர்கள், இராஜபட்சே அரசு இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சரியான முறையில் தான் உதவிப்பணிகளை செய்து வருகின்றன என்று இராஜபட்சேவிற்கு ''நற்சான்றிதழ்'' வழங்கினர்.
          அப்படிப்பட்டவர்கள் தான், அண்மையில் இராஜபட்சே இந்தியாவிற்கு வருகை தந்த போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ''டெசோ'' அமைப்பின் மூலம் ''கருப்புடை அணிந்து ஆர்ப்பாட்டம்'' செய்ததையும், நடப்பு பாராளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கையில் பாராளுமன்றத்திற்கு எதிரில் ஐ. நா. சபை இராஜபட்சே மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ''கருப்புடை அணிந்து ஆர்ப்பாட்டம்'' செய்ததையும் பார்த்து  இந்திய - இலங்கை தமிழ் மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.
        நாடகம் - 5 : இலங்கைக்கு எதிராக ஐ. நா - மனித உரிமைக்கழகத்தில் அமெரிக்கா கொண்டுவரவிருக்கிற தீர்மானத்தை ஆதரிக்க கோரி மத்திய அரசை வலியுறுத்துவதற்காக புதுடெல்லியில் ''டெசோ மாநாடு'' ஒன்று நேற்று முன் தினம்  ஏற்பாடு செய்யப்பட்டது. 40 - க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அழைக்கப்பட்டனர். ஆனால் காங்கிரஸ் கட்சி உட்பட ஒரு சில கட்சித்தலைவர்கள் மட்டுமே ஒரு சில மணிநேரம் மட்டுமே அந்த மாநாட்டில் கலந்துகொண்டு சென்றது என்பது திமுக தலைவர் கருணாநிதிக்கு மாபெரும் ஏமாற்றத்தை உண்டாக்கியிருக்கிறது. அதேப்போல் ஏற்கனவே டெசோ தலைவர் கருணாநிதி மத்திய அரசை வற்புறுத்தும் விதமாக வருகிற மார்ச் 12 - ஆம் தேதியை தமிழக பந்த் - ஆக அறிவித்திருந்தார். மாநாடு பிசுபிசுத்துப்போய் ஏமாற்றத்தைத் தந்ததால், தமிழக பந்தும் பொதுமக்களின் ஆதரவில்லாமல் பிசுபிசுத்து போய்விடுமோ என்ற அச்சத்தில் ''பந்த் இல்லை'' என்று அறிவித்துவிட்டார்.
          இலங்கைத் தமிழர்களுக்காக கருணாநிதி இத்தனை நாடகங்களை அரங்கேற்றுகிறாரே, உண்மையிலேயே இலங்கைத் தமிழர்களின் மீது பற்றுதலும், பாசமும் இருக்குமானால், அவரிடம் உள்ள ஒரு ஆயுதத்தை பயன்படுத்தலாமே...? மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசிற்கு இதுவரைக் கொடுத்துவந்த ஆதரவைத் திரும்பப்பெற்றுக்கொள்ளலாமே...? ஏன் அப்படி செய்யவில்லை...? திண்ணை எப்போ காலியாகும் என்று காத்திருக்கும் மன்மோகன் சிங் - சோனியா கூட்டத்திற்கு பெரிய வாய்ப்பைக் கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக கருணாநிதி அந்த முயற்சியில் இறங்கவில்லை. குறைந்த பட்சம் விலகுவது போல நாடகமாவது ஆடியிருக்கலாம் என்று தமிழக மக்கள் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் அப்படி செய்தால் தன் உத்தமபுத்திரனின் மந்திரிப் பதவி பறிபோய்விடுமே என்கிற பயம் அவருக்கு. அதனால் இதை மட்டும் செய்யாமல் மற்ற பூச்சுற்றும் வேலைகளில் மட்டும் இறங்கியிருக்கிறார் கருணாநிதி.
 

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

கருணாநிதி அன்று எய்த அம்பு இன்று அவர் மீதே பாய்கிறது...!

            ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு பல்வேறு இழுபறிக்குப் பிறகு ஒரு வழியா உயர்நீதிமன்றத்தின் தயவால் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. 
        ஆரம்பத்தில் மாநாட்டு வேலைகள் எந்தவித தடங்களும் இல்லாமல் தொடங்கப்பட்டு, ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் விதமாக  அரண்மனை போல் அலங்காரப் பந்தல்கள் கம்பீரமாக உயர்த்தி நிறுத்தப்பட்டு, வழியெங்கும் வரவேற்பு வளைவுகள் என ஒரே தடபுடல் ஏற்பாடுகள் தான்.
         இதற்கிடையில் மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து ''டெசோ'' மாநாட்டில்   ''ஈழம்'' என்ற வார்த்தையை உபயோகிக்கக் கூடாது என்று தடைவிதித்தது. மத்திய அரசின் இந்த செயல் டெசோ வட்டாரத்தில் அதிர்ச்சியையும், தமிழக காவல்துறை வட்டாரத்தில் உற்சாகத்தையும் அளித்தது. இந்த சூழ்நிலையில் தான், நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை இரவு  தமிழக காவல்துறை சட்டம் - ஒழுங்கு பாதிக்கும் என்று சொல்லி மாநாட்டிற்கு அனுமதி மறுத்தது.  உடனே நேற்று திமுக சென்னை உயர்நீதிமன்றத்தை நோக்கி ஓடியது. இரண்டு நீதிபதிகள் விசாரித்து இன்று ஞாயிறு நண்பகல் வரை ஒத்திப்போட்டார்கள்.
               ஏற்பாடுகளை முன்னின்று செய்யும் திமுக தலைவர் கருணாநிதிக்கு இது ஒரு சவாலாக போய்விட்டதால், மாநாட்டை நிறுத்துவதாக இல்லை என்று அறிவித்து, உற்சாகமிழந்த தொண்டர்களை உற்சாகப்படுத்தி, மாநாட்டு முந்தைய ஆய்வரங்கம் சென்னையில் ஒரு ஓட்டலிலும், மாநாடு திமுக தலைமை நிலையத்திலும் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவித்தார்.  அதன்படி ஆய்வரங்கம் தொடங்கப்paபட்டு நடந்துகொண்டிருக்கும் வேளையில் உயர்நீதிமன்றம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாநாட்டை நடத்திக் கொள்ளலாம் என்ற தீர்ப்பு தேனாய் பாய்ந்தது. தீர்ப்பை அடுத்து ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மிக உற்சாகமாய் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
            ஒரு மாநாட்டிற்கு அனுமதி மறுப்பது என்பதும், தடை செய்வது என்பதும் கருத்துரிமைக்கு எதிரானது. கருத்து சொல்லும் உரிமையை பறிப்பதாகும். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் யாரும் இதை ஏற்கமாட்டார்கள். 
            அதே சமயம் திமுக தலைவர் கருணாநிதியும், திமுகவினரும், ''டெசோ'' மாநாடு நடத்துபவர்களும் கடந்த காலங்களை பின்னோக்கிப்பார்க்க வேண்டும்.
            கடந்த 1990 - ஆம் ஆண்டு ஜூன்  பழ.நெடுமாறன் ''தமிழர் தன்னுரிமை மாநாடு என்ற ஈழத்தமிழர் ஆதரவு மாநாடு ஒன்றை நடத்த ஏற்பாடுகள் செய்திருந்தார். ஆனால் அந்த மாநாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடைக்கு அன்றைக்கு ஆட்சியில் இருந்த இதே முன்னாள் முதல்வர் தான்  என்பதை யாரும் மறந்துவிடமுடியாது.  அதுமட்டுமல்ல, அந்த 
மாநாடு தொடர்புடைய சாலை.இளந்திரையன் உள்ளிட்ட பலரையும் தமிழக போலீசார்  கைது செய்தனர். 
            மீண்டும் 1996 - ஆம் ஆண்டும் இதே முன்னாள் முதல்வர் அதிகாரத்திலிருந்த போது பா. ம. க. நடத்திய மாநாட்டில் ஈழம் குறித்து பேசியதற்காக இப்போது கருணாநிதியோடு ஒட்டிக்கொண்டிருக்கும் சுப. வீரபாண்டியன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர் என்பதையும் யாரும் மறந்திருக்க முடியாது.   
           சென்ற திமுக lஆட்சியில் இன்றைக்கு   தி.மு.க., கூட்டணியில் இருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சென்னையில், 2008 - ஆம் ஆண்டு டிசmம்பர் மாதம்  27 - ஆம்  தேதி, "ஈழ உலக அங்கீகார மாநாடு' நடத்தினார். அப்போது செய்யப்பட்ட விளம்பரங்களில் "ஈழம்'' என்ற வார்த்தையை போஸ்டர் ஒட்டியும், பெயின்ட் அடித்தும் போலீசார் மறைத்தனர். அப்போதும் தமிழக முதல்வராக இருந்தவர் கருணாநிதி தான் என்பதும் யாராலும் மறந்திருக்க முடியாது. 
             இப்படியாக ''ஈழம்'' குறித்து பேசியவர்கள் மற்றும் மாநாடு நடத்தியவர்கள் மீது தன் ஆட்சிக் காலத்தில் தான் எய்த அம்பு தான் இப்போது தன் மீது பாய்கிறது என்பதை கருணாநிதியால் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது.

புதன், 18 ஜூலை, 2012

பாவம் கருணாநிதிக்கு பொழுது போகல... அவரு என்ன பண்ணுவார்..?

உடன்பிறப்புக்களே.... உங்க கலைஞர் அய்யா 

உங்களை வெச்சி காமடி - கீமடி  பண்ணலியே...?           

            தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அய்யா இருக்காருங்களே... அவரு ஓய்வு பெற்றதிலிருந்து  கொஞ்ச நாளா ஏதாவது உளறிகிட்டே இருக்காருங்க... ஓ.. சாரி... பேசிகிட்டே இருக்காருங்க... ஓய்வுபெற்ற பின் தமிழக மக்கள் அவரை மறந்துடப் போறாங்கன்னு அவருக்கு பயம் வந்துடுது. இது மாதிரியான நேரங்களில் அவர் மக்கள் மனசில ஆழமா பதியறதுக்கு வழக்கமா ஏதாவது செய்வாரு. வழக்கமா இந்தி பிரச்சனையை தான் கையிலேடுத்துப்பார்... இந்தி பிரச்சனை - வடக்கு வாழ்கிறது - தெற்கு தேய்கிறது போன்ற இவைகள் எல்லாம் இப்ப காலாவதியாயிடுத்து. இன்றைக்கு அவருடைய பேரன் - பேத்திகளே இந்தி படிக்க ஆரம்பிச்சிட்டாங்க.... அவரு என்ன செய்வாரு பாவம்..
              அதனால இந்தி பிரச்சனையை கையிலெடுக்காமல்,  கொஞ்ச நாட்களுக்கு முன்பு   இதேப்போல் காலாவதியான வேறுவொரு பிரச்னையை கருணாநிதி கையிலெடுத்தார். சென்ற ஏப்ரல் 25 - ஆம் தேதியன்று வடசென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், இதுவரையில் தனக்கு நிறைவேறாத கனவாக இருப்பது தனி ஈழம் தான் என்றும், பக்கத்து நாடான இலங்கையில் தனி ஈழ நாடு பெற்றுத் தராமல் நான் சாகமாட்டேன் என்றும்  வீராவேசமாக பேசி, உயிரே இல்லாத இயக்கமான  ''டெசோ'' என்கிற தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்புக்கு உயிர் கொடுத்தார். இலங்கையில் தமிழினம் தலைநிமிர உடல், பொருள், ஆவி அனைத்தையும் தரத் தயங்கமாட்டேன் என்றும் நீட்டி  முழங்கினார். இப்படி எல்லாம் பேசியதன்  மூலம்  இலங்கைத் தமிழர்கள் மீது தனக்குள்ள ''நீங்காத'' பாசத்தை காட்டி ( தான் ஆட்சியிலிருக்கும் போது செய்யாமல் ) தமிழக மக்கள்  மத்தியில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் உண்டாக்கினார். தேர்தல் தோல்வியால் சோர்ந்து போன தன்னுடைய தொண்டர்களையும் இதன் மூலம்  உற்சாகப்படுத்தினார்.
            இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 30 - ஆம் தேதியன்று சென்னையில் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்புக் கூட்டத்தை கூட்டினார். அந்தக் கூட்டத்தில், இலங்கை தமிழர் பிரச்சனை தீர்வதற்கு தனித்தமிழ் ஈழம் அமைவதைத் தவிர வேறு வழியில்லை என்றும், தனித்தமிழ் ஈழம் விரைவில் அமைய தமிழர்கள் வாழும் பகுதியில் ஐ நா மன்றம் பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்றும், அதற்கு இந்திய அரசு எல்லாவிதமான முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம்  ஒன்றை நிறைவேற்றினார். அவர் முன்மொழிந்த இந்தத் தீர்மானத்தை அவரது உடன்பிறப்புக்கள் பாராளுமன்றத்தில் வழிமொழிந்தனர்.
                 முதலில்,  வரும் ஆகஸ்ட் 5 - ஆம் தேதியன்று விழுப்புரத்தில் ''டெசோ'' மாநாடு நடத்தப்படும் என்றும் அந்த மாநாட்டில் தனித்தமிழ் ஈழத்திற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அறிவித்தார். பிறகு, அந்த மாநாட்டின் தேதியையும், இடத்தையும் மாற்றி அறிவித்தார். ஆகஸ்ட் 12 - ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்று மாற்றி அறிவித்து அதற்கான வேலைகளையும் முடுக்கிவிட்டார்.
               இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சர் பானா சீனா ( ப. சிதம்பரம் தான்  ) சென்னைக்கு வந்து இந்த ''டெசோ'' தலைவரை சந்தித்துவிட்டுப் போனார். இந்த சூழ்நிலையில் தான் மத்திய அரசும் விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீட்டித்து உத்தரவு பிறப்பித்து, தமிழகத்தில் விடுதலைப்புலிகள் ஆதரவு சக்திகள் பலம்  பெற்று வருவது என்பது வருத்தமளிக்கிறது என்றும் அறிவித்தது.
         இதன் பிறகு தற்போது இவரது பேச்சில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன் தினம் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் வரும் ''டெசோ'' மாநாட்டிம் தனி ஈழம் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட மாட்டாது என்று இவ்வளவு ஏற்பாடுகளுக்குப் பின்னர் கருணாநிதி அறிவித்தது என்பது ''உடன்பிறப்புக்கள்'' மத்தியில் மீண்டும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் உண்டாகியுள்ளது.