அமெரிக்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமெரிக்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 20 ஜூலை, 2014

இஸ்ரேலின் அடாவடித்தனத்தை மோடி கண்டிக்காததேன்...?

                           இன்னும் கொஞ்சகாலம் போனால்  உலக வரைபடத்தில் பாலஸ்தீனம் என்ற ஒரு நாட்டை தேடவேண்டியிருக்கும். அந்த அளவிற்கு இஸ்ரேல் கரையான் அரிப்பது போல பாலஸ்தீனம் என்ற ஒரு முழு நாட்டை சட்டவிரோதமாக கொஞ்சம்கொஞ்சமாக ஆக்கிரமித்து எஞ்சியிருக்கும் இடத்திலும் பாலஸ்தீன மக்களை நிம்மதியாக வாழவிடாமல் அடாவடித்தனம் பண்ணுகிறது. அமெரிக்காவின் ''நெருங்கிய கூட்டாளி'' என்ற ஒரு  தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு, உலக நாடுகள் எவருக்கும் பயம் கொள்ளாமலும், ஐக்கிய நாடுகள் சபைக்கு பதில் சொல்லவேண்டுமே என்ற அச்சம் இல்லாமலும், அமெரிக்கா வழங்கும் ஆயுதங்களை வைத்துக்கொண்டு கடந்த 115 ஆண்டுகளுக்கும் மேலாக பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன மக்களை கொன்று குவித்து, அடாவடித்தனமாக ஆக்கிரமிப்புகளை செய்து அங்கு தங்களது குடியிருப்புகளை உருவாக்கி மனித குலத்திற்கு எதிராக இஸ்ரேல் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டு வருகிறது.
                அதன் ஒரு பகுதியாக, பாலஸ்தீனத்தில் எஞ்சியிருக்கும் சிறு பகுதியான காஸா என்ற  மக்கள் கூட்டமாக வாழும் பகுதியின் மீது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் மூர்க்கத்தனமாக குண்டுகளை வீசி 400-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை கொன்றுகுவித்திருக்கிறது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்து காயத்திற்கு மருந்தில்லாமல் தவிக்கிறார்கள். இது தவிர ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருக்கும் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டிருக்கின்றன. பாலஸ்தீன அப்பாவி மக்கள் மீதான இஸ்ரேலின் இந்த தாக்குதல் என்பது கடந்த ஐந்து ஆண்டுகளில் இது மூன்றாவது முறையாகும்.
               இவ்வளவு பெரிய நாசகர பயங்கரவாத செயலில் மனிதாபிமானமற்ற முறையில் இஸ்ரேல் ஈடுபடுகிறது. இதை எந்த சர்வதேச ஊடகங்களும் ஒரு செய்தியாகக்கூட இதுவரையில் வெளியிடவில்லை. பயங்கரவாதத்தை பற்றியும், மனித உரிமை பற்றியும் வாய் கிழிய பேசும் அமெரிக்காவும் இஸ்ரேலின் இந்த இரக்கமற்ற செயலைப்பார்த்து வாய்மூடி மவுனம் சாதிக்கிறது. உலக அமைதி - ஒற்றுமை பற்றியெல்லாம் கவலைப்படும் ஐக்கிய நாடுகள் சபையோ பாராமுகமாய் இருக்கிறது. ஆனால் உலகின் பல்வேறுப்பகுதிகளில் வாழும் மனிதாபிமானம் கொண்ட அமைப்பினரும், மக்களும் இஸ்ரேலின் அடாவடித்தனத்திற்கு எதிராக குரல் எழுப்பி ஆங்காங்கே பேரணிகளை நடத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வதைப்பார்க்கும் போது  சற்று ஆறுதலாக இருக்கிறது.
                நம் நாட்டில்  கூட இடதுசாரிக்கட்சியினரும், மனித உரிமை அமைப்பினரும் இஸ்ரேலுக்கெதிராக ஆங்காங்கே கண்டனக்குரல் எழுப்பிவருகிறார்கள். இதே நேரத்தில் புதுடெல்லியில் பாராளுமன்றம் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. இந்த நேரத்தில் மத்தியில் ஆளும் மோடி அரசு தானாகவே முன் வந்து,  நேர்மையற்ற இந்தப் போரை கண்டித்து விவாதித்து இஸ்ரேலுக்கு எதிராக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருக்கலாம். பாராளுமன்றத்தில் இடதுசாரிகள் எடுத்து சொல்லியும், சம்பந்தப்பட்ட இரண்டு நாடுகளும் நமக்கு நட்பு நாடுகள் என்பதால் கண்டிப்பதற்கில்லை என்று மோடி அரசு நழுவிவிட்டது. இஸ்ரேலை கண்டிப்பதன் மூலம் அதன் நெருங்கிய கூட்டாளியும் மோடி அரசின் ''பெரிய அண்ணனுமான'' அமெரிக்காவை பகைத்துக்கொள்ளக்கூடாது என்பதும், இதன் மூலம் அமெரிக்கா உடனான உறவில் விரிசல் வந்துவிடக்கூடாது என்பது   தான் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு உள்ள நிர்பந்தங்கள்  என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
இஸ்ரேலை கண்டிக்காததன் மூலம் மோடி தனது நீண்டநாளைய ''அமெரிக்க கனவு பயணத்தை'' நிறைவேற்றிக்கொள்ள துடிக்கிறார் என்பதும் யாருக்கும் தெரியாமல் இல்லை.

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

கார்ப்பரேட் நிறுவனங்களில் லாபவெறிக்காக போர் தொடுப்பதா...? - அமெரிக்க மக்களின் எதிர்ப்பு முழக்கங்கள்...!

  சிரியா மீது அமெரிக்கா நடத்தும் ராணுவ தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒபாமாவின் போர் முடிவிற்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பட்டன.             சிரியா நாட்டில் ஆட்சி புரிந்து வரும் பஷார் அல் அசாத் அரசிற்கு எதிராக அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டாண்டுகளாக இவர்கள் நடத்தி வரும் உள்நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், லட்சக்கணக்கான மக்கள் படுகாயமடைந்தும், அகதிகளாகவும் அருகிலுள்ள நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த ஆயுதம் தாங்கிய போராட்டக்குழுவினருக்கு எதிரான தாக்குதலில் சிரியா ராணுவம் ரசாயன குண்டு தாக்குதலை நடத்தியது என்ற பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி அந்நாட்டின் மீது போர் தொடுக்க ஒபாமா தலைமையிலான அமெரிக்கா அரசு முடிவு செய்துள்ளது.
             இதற்கு ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், சிரியாவிற்கு ஆதராகவும், அமெரிக்காவின் போர் வெறிக்கு எதிராகவும் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, சிரியா மீதான ராணுவத் தாக்குதல் குறித்த தனது முடிவிற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஆதரவு திரட்டும் பணியில் ஒபாமா தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஆனால், ஒபாமாவின் இம்முடிவிற்கு பெரும்பான்மையான அமெரிக்கர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, அந்நாட்டில் வாழும் அமெரிக்க மக்களிடம் நடத்தப்பட்ட பல்வேறு கருத்து கணிப்புகளிலும் சிரியா மீது போர் தொடுக்கும் முடிவிற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட்டில் போராட்டம் :
           இந்நிலையில், சிரியா மீது போர் தொடுப்பதற்கு எதிராகவும், உலக அமைதியை வலியுறுத்தியும் உலக புகழ்பெற்ற திரைப்பட நகரான ஹாலிவுட்டில் ஞாயிறன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
          இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சிரியா மீதான அமெரிக்காவின் ராணுவ தாக்குதலுக்கும், தலையீடுகளுக்கும் கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும், அமெரிக்கா அரசின் போர் முடிவானது ஒட்டுமொத்த அமெரிக்க மக்களின் விருப்பதற்கு மாறானது என்றும், அமெரிக்கர்களின் எண்ணங்களை ஒபாமா அரசு அலட்சியம் செய்கிறது என்றும் வலியுறுத்தும் வாசகங்களை கைகளில் ஏந்தியிருந்தனர்.
            இதேபோல், சர்வதேச வர்த்தக நகரான நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தின் முன்பு திரண்டு நூற்றுக்கணக்கான மக்கள் சிரியாவை தாக்கும் அமெரிக்க அரசின் நடவடிக்கையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும், அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வாஷிங்டன்னில் உள்ள வெள்ளை மாளிகையின் முன்பு திரண்ட மக்கள் மத்திய கிழக்கு நாடுகளை குறிவைத்து அமெரிக்க நடத்தும் மற்றொரு போருக்கு எதிராக ஆவேசமாக முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் “கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபவெறிக்கான மற்றொரு போரை அனுமதியோம்“ , “சிரியா மீது ராணுவ நடவடிக்கை என்ற தீர்மானத்தை நாடாளுமன்றம் நிராகரிக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட வாசகங்களை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர்.

சனி, 24 நவம்பர், 2012

மதவாதிகளையும் பிரிவினைவாதிகளையும் வளர்க்கும் அமெரிக்கா - துணைபோகும் இந்தியா...!

           உலக வரைப்படத்திலிருந்து சோசலிச நாடுகளை ஒழித்துக்கட்டவும், மனித குலத்தின் மாண்புகளில் இருந்து சோசலிசத்தை அழித்துவிடவும் கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்துகொண்டிருக்கும் ஏகாதிபத்தியமும், முதலாளித்துவமும் வளர்த்துவிடப்பட்டவர்  தான் தலாய்லாமா என்ற இந்த புத்தமத சாமியார்.    சீன நாட்டின் ஒன்றுபட்ட பகுதியாக இருக்கக்கூடிய திபெத் பகுதியை தனி நாடாக பிரிக்கப்படவேண்டும் என்று அங்குள்ள பிரிவினையை விரும்பும் ஒருசில மக்களை மதத்தலைவர் என்ற முறையில் ஒன்று திரட்டி தேசவிரோத செயல்களில் ஈடுபடுபவர்.    இந்தியாவிலுள்ள இமாச்சலபிரதேச  மாநிலத்திலுள்ள‌ ''தரமஷாலா'' - வில் சட்டவிரோத திபெத் நாட்டின் அரசை நடத்திக்கொண்டிருப்பவர். அவருக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது. பக்கத்து நாட்டில் தேசவிரோத செயல் புரியும் இவருக்கு இடம் கொடுத்து பாதுகாப்பு கொடுத்து வருவது இந்திய அரசு என்பதும், அதேப்போல் இவர் சட்டவிரோத அரசை நடத்துவதற்கு நிதி கொடுத்து உதவி செய்வது அமெரிக்க ஏகாதிபத்தியம் என்பதும் குறிப்படத்தக்கது. சோசலிசத்தையும் சோஷலிச நாடுகளையும் ஒழித்துக்கட்டுவதற்கு, மதவாதிகளையும், பிரிவினைவாதிகளையும் வளர்ப்பதில் என்றைக்குமே அமெரிக்க ஏகாதிபத்தியம் தயங்கியதே கிடையாது. அதற்காக எவ்வளவு நிதி வேண்டுமானாலும் செலவு செய்வார்கள். ஆனால் இவ்வாறு அமெரிக்க மற்றும் திபெத் மக்கள் நிதியில் உருவாக்கப்பட்ட  தர்மஷாலாவில் உல்லாச‌ விடுதி நடத்தும் ஒரு தொழிலதிபர் தான் இந்த தலாய்லாமா என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் இங்கு அவ்வப்போது வந்து ஓய்வெடுத்து செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்த தலாய்லாமாவிற்கும் அமெரிக்காவிற்கும் இஸ்ரேல் நாட்டிற்கும் உள்ள நெருக்கம் நன்கு விளங்கும். மேலும் இவர் பேருக்கு தான் சாமியார். மற்றபடி பகட்டான வாழ்க்கை வாழும் ஒரு சுகபோகவாதியாவார். அதனால் உலகளவில் பல திரைப்பட நட்சத்திரங்கள் இவருடைய விசிறியாக இருக்கிறார்கள் என்பது இவருடைய பகட்டு நன்கு புரியும். இந்த சாமியார் சில சமயங்களில் விளம்பரங்களில் கூட நடிக்கும் நட்சத்திரமாகவும் இருக்கிறார். 
                மேற்கத்திய முதலாளித்துவ  அரசியல் சிந்தனைக்கும், சிந்தனையாளர்களுக்கும் இவரது வார்த்தைகள்  பொன்மொழியாக பயன்படுகிறது. இவர் ''வோக்'' என்ற  ஃபாஷன் பத்திரிக்கையின் கெளவரவ ஆசிரியராகவும் வேலை செய்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் இந்தியாவில்  தஞ்சம் புகுவதற்கு முன்பு  1960 - ஆம் ஆண்டுகளிலேயே திபெத்தில் 1000 அறைகள் கொண்ட 14 மாடி ''பொட்டாலா'' அரண்மனையில் வாழ்ந்தவர்.  இவரை சுற்றி இருந்த  திபெத்தியர்கள் வறுமையில் வாடும்போது இவருக்கு மட்டும் இந்த வாழ்க்கை தேவையானதாக இருந்தது. ஏனெனில், மக்களின் பார்வையில் இவர் மிகவும் புனிதம் மிகுந்தவர். மேட்டுக்குடியினைச் சார்ந்தவர். எனவே அதில் ஒன்றும் தவறு கிடையாது என்று மக்கள் நினைத்தார்களோ இல்லையோ... தலாய்லாமா நினைத்தார்.
                  
மேலும் இவர் உலக வாழ்க்கையைத் துறந்த துறவியாகத் தானே காட்சியளிக்கிறார். அவர் ஒரு  ''புத்த பிச்சு'' - வாக அல்லவா காட்சியளிக்கிறார். ஆனால்  உலகில் எந்த மூலையில் மக்களைக் கொன்று குவிக்கும் போர்கள் நடந்தாலும் அதைப் பற்றி எவ்வித மூச்சும் விடமாட்டார். ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் போன்ற நாடுகள் உடனான அமெரிக்காவின் கொலைவெறிப் போரினை பற்றி எந்தவிதமான எதிர்ப்பும் காட்டாதவர். அமெரிக்காவை கண்டித்து ஒரு வார்த்தைக் கூட இவர் உதிர்க்கவில்லை. இருப்பினும் அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. இஸ்ரேல் எப்போதும்  பாலஸ்தீனர்கள்  மீது தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவித்தாலும், இஸ்ரேலை தட்டிக்கேட்காமல்,   இஸ்ரேலுக்கே  சென்று பாலஸ்தீனர்களிடம் ''வன்முறை வேண்டாம்'' என்று 'அமைதிப் புறா'வைப் போல் அறிவுரைக் கூறியவர் இவர் சீனாவிடமிருந்து தப்பி வருவதற்கு முன்பு, இவர் ஏதோ சீனாவினை எதிர்த்து வன்முறையில் ஈடுபடாதவர் போல  இவர் உதிர்த்த இந்த அறிவுரை என்பது சாத்தான் வேதம் ஓதுவது போல இருக்கும்.
 
             உலக அமைதி குலைவதற்கும், ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் போன்ற நாடுகள் சீரழிவதற்கும் காரணமாக இருந்த அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை பார்த்து,
''பிரெசிடெண்ட் புஷ்ஷை நேசிக்கின்றேன்'' என வெளிப்படையாக பறை சாற்றியவர் தான் இந்த தலாய்லாமா. அண்மையில் கூட  ஆப்கானிஸ்தான்  போரைப் பற்றியும், ஈராக் போரைப் பற்றியும்  பேசும் போது, ''அப்போர்கள் எந்த வகையைச் சேர்ந்தது என சொல்வது கடினம'' என  போர் வெறி பிடித்த அமெரிக்காவின் மீது அருள் பாலித்திருக்கிறார்.

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

''நீல் ஆம்ஸ்ட்ராங்'' - நிலவில் காலடி வைத்த முதல் மனிதன் - சோவியத் யூனியனுக்கு போட்டியாக ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்...!

        நிலவில் காலடி வைத்த முதல் மனிதன் நீல் ஆம்ஸ்ட்ராங் நேற்று காலமானார். இந்தியாவில் உள்ள இளைஞர்களெல்லாம் பேஸ் புக்கிலும், டிவீட்டரிலும் ஒப்பாரி வைத்திருக்கிறார்கள். இன்று பேஸ் புக்கையும் டிவீட்டரையும் திறந்தால் நம் நாட்டு இளைஞர்களின் ஒப்பாரியை தான் பார்க்க முடிந்தது. இவர்களின் அமெரிக்க அக்கறை இருக்கிறதே... அது அளவு கடந்து போகின்றது. இவர்கள் என்ன செய்வார்கள் பாவம். படிக்கும் போதும், வேலைக்குப் போகும் போதும் ''நிலாவில் முதன்முதலில் காலடி வைத்தவர் யார்..? என்ற கேள்விக்கு பதில் சொல்லியே பழக்கப்பட்டவர்கள் தானே.. சரி அது போகட்டும். நீல்  ஆம்ஸ்ட்ராங் நிலாவில் காலடி வைத்த கதையை இங்கே சொல்லவேண்டிய கட்டாயம் இருக்கிறது. 
         உலகிலேயே முதன் முதல் சந்திரனைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள் சோவியத் யூனியன் தான். 1930 - ஆம் ஆண்டிலிருந்தே அவர்கள் இந்த ஆராய்ச்சியை தொடங்கி இருக்கிறார்கள். அதேப்போல், நிலாவிற்கு விண்களம் அனுப்பியவர்களும் இவர்களே. இருபதுக்கும் மேற்பட்ட  ஆளில்லா விண்களங்களை நிலாவிற்கு அனுப்பியிருக்கிறார்கள். இப்படியாக நிலாவை நோக்கிய இந்த விண்களப் பயணமும், நிலாவைப் பற்றிய ஆராய்ச்சியும் வெற்றிகரமானதாக அமைந்தவுடன், 1957 - ஆம் ஆண்டு விண்களத்தில்  ''லைகா'' என்ற நாயை  வைத்து நிலாவிற்கு அனுப்பி வைத்தனர். ''லைகா'' நாயும் உயிர் சேதாரமின்றி நிலவிற்கு சென்று திரும்பியது. அந்த பயணம் வெற்றிகரமாக முடிந்ததை  பார்த்து உலகமே வியந்தது. 
           இத்தனைப் பயணங்களும்  வெற்றிகரமாய் அமைந்திடவே, சோவியத் யூனியன் அடுத்து சோவியத் யூனியனைச் சேர்ந்த மூன்று பேர்களை  நிலவிற்கு அனுப்பி சோதனை செய்ய முயற்சித்தது. அந்த மூன்று பேர்களையும் ஏற்றிக்கொண்டு நிலாவை நோக்கி புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே வெடித்து சிதறியது. அதனால் உலகமே அதிர்ச்சியடைந்தது. மூன்று உயிர்களை அனாவசியமாக பலியிட்டுவிட்டோமே என்று சோவியத் யூனியனும் உறைந்து போனது மட்டுமல்லாமல், இது மனித உரிமைக்கு எதிரானது என்று கூறி மன்னிப்பும் கேட்டனர். அது மட்டுமல்லாமல், நிலாவிற்கு ஆட்களை அனுப்பி செய்யும் சோதனையை இத்துடன் கைவிடுவதாகவும் அறிவித்துவிட்டனர். 
             அந்த காலங்களில், எதிலும் சோவியத் யூனியனுடன் போட்டிப்போடும் அமெரிக்கா நிலாவைப் பற்றிய சோதனையிலும்  போட்டிப்போட்டது. நிலாவிற்கு ஆட்களை அனுப்பும் சோதனையை கைவிடுவதாக சோவியத் யூனியன் அறிவித்தவுடன், ''அவர்களால் செய்யமுடியாததை வெற்றிகரமாக எங்களால் செய்து காட்டமுடியும்'' என்று அமெரிக்கா சவால் விட்டது. 
         அதன் பிறகு தான், அமெரிக்கா உலகத்திலேயே தான் விண்வெளி ஆராய்ச்சியில் சிறந்த நாடு என்று காட்டுவதற்காக, கடந்த   1969 - ஆம் ஆண்டு ஜூலை மாதம் ''அப்போலோ - 11'' என்ற விண்களத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் என்பவரையும் டேவிட் R ஸ்காட் என்பவரையும் நிலாவிற்கு அனுப்பிவைத்தது. ஜூலை 20 - ஆம் தேதி நிலாவில் இறங்கிய விண்களத்திலிருந்து, நீள் ஆம்ஸ்ராங் தான் முதன் முதல் தன் காலடியை வைத்து இறங்கினார். இந்த செய்தி உலகெங்கிலும் செய்தித்தாள்களில் வந்தது. பிறகு ''நிலாவில் முதன்முதல் காலடி வைத்தவர் யார்...?'' என்ற கேள்வியே இல்லாத  பாடப்புத்தகமும் இல்லை, வினாத்தாள்களும் இல்லை என்றாகிவிட்டது. 
               அறிவியலில், ஆராய்ச்சியில் சோவியத் யூனியனை விட தாம் தான் முன்னணி நாடு என்று அமெரிக்கா  தம்பட்டம் அடித்து கொண்டாடியது. அறிவியல் ஆராய்ச்சியில் எங்களை வெல்ல யாருமில்லை என்று கொக்கரித்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் ''நிலவில் இறங்கி நீள் ஆம்ஸ்ட்ராங் வலம் வந்த'' திரைப்படத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துப் பார்த்து சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார்கள்.

          அவர்கள் சொன்னது என்னவென்றால், நீள் ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை என்பதும், அது நிலாவிற்கு சென்றது போல் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டத் திரைப்படம் என்பதும் தான். உலக மக்களை எப்படியெல்லாம் அமெரிக்கா  மடையர்களாக ஆக்கியிருக்கிறது என்று என்னும் போது  நமக்கெல்லாம் உண்மையிலேயே கோபம் வருகிறது. 
இவர் தான் இயக்குனர் 
              ''ஹாலிவுட்டில் நிலாவைப்போன்று செட்டிங்ஸ் போட்டு படம் எடுத்தவர் என் கணவர் தான்'' என்ற உண்மையையும் அந்த படத்தை இயக்கிய அன்றைய ''science  fiction'' பட இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக் - இன் மனைவியும் வெளியிட்டிருக்கிறார்.
            அப்படி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் நிறைய விஷயங்களை கோட்டை விட்டிருக்கிறார்கள் என்பதையும் பார்த்தால் உங்களுக்கு உண்மை  விளங்கும்.
          1) முதலாவது நிலாவில் வெளிச்சமே இருக்காது. சூரியனின் ஒளி  பட்டு தான் பூமியிலிருக்கும் நமக்கு நிலா வெளிச்சமாக தெரிகிறதே ஒழிய, தானாக நிலாவில் எப்படி வெளிச்சம் வரும். அங்கு street light எல்லாம் கிடையாது.
          2 ) நீள் ஆம்ஸ்ட்ராங் நிலாவில் இறங்கி அமெரிக்கக் கொடியை நிலாவில் நடுவார். அப்போது அந்தக் கொடி  அசையும். காற்றே இல்லாத இடத்தில் கொடி  பறப்பதற்கு சாத்தியமே இல்லை. 
         3 ) அதேப்போல் காற்றே இல்லாத இடத்தில் கால் தடம் பதிக்க நடப்பது என்பதும் இயலாததே. அப்படியிருக்கையில் அவர்கள் நடந்த காலடித் தடம் இருக்கும். அவர்கள் நடக்கும் போது  புழுதி பறக்கும்.  இதெல்லாம் நிலாவில் எப்படி முடியும். 
            4 ) சுற்றிலும் focus  லைட் போட்டு படபிடிப்பு நடத்தப்பட்டதால், அந்த நிலாவில் உள்ள பொருட்களின் நிழல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணங்களில் இருக்கும். 
           5 ) நீள் ஆம்ஸ்ட்ராங்கின் முகத்தை அருகில் காட்டுவார்கள் அதில் அவருக்கு எதிரில் இருக்கும் விண்வெளிவீரர்கள் இரண்டுபேரின் உருவங்கள் தெரியும். நிலாவிற்கு சென்றதே இரண்டு பேர் எனும் போது மூன்றுவதாக இன்னொருவர் யார்...? 
           இப்படியாக அந்த படபிடிப்பில் கோட்டைவிட்டிருப்பதால் அமெரிக்கா நிலாவிற்கு செல்லவில்லை என்றும்,  நிலாவிற்கு சென்றது போல் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமே அது என்றும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.
             இவ்வளவு அறிவியல் வளர்ச்சியும், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும் உள்ள இந்த காலத்திலேயே அமெரிக்கா, இந்தியா, சீனா   உள்ளிட்ட பல நாடுகள் இன்றைக்கு  நிலாவைப் பற்றிய எந்தவிதமான முழுமையான முடிவுக்கும் வரமுடியாமலும், நிலாவிற்கு ஆட்களை அனுப்ப யோசித்துக் கொண்டும் இருக்கிறார்கள். அன்றைக்கு - அதுவும் 60 - களில்  இன்றைக்கு இருப்பது போன்ற அறிவியல் வளர்ச்சியோ, தொழிநுட்ப வளர்ச்சியோ இல்லாத நாட்களில் எப்படி நிலாவிற்கு ஆட்களை அனுப்பினார்கள்..? என்று அடிக்கடி எனக்குள்ளே கேட்டுக்கொள்வேன்.
            எது எப்படியோ நிலாவின் ( திரைப்படத்தின் ) நாயகன் மரணம் அடைந்திருக்கிறார். அவருக்கு நமது அஞ்சலி.

புதன், 21 மார்ச், 2012

அமெரிக்க வரலாற்றில் புதிய திருப்பம் - மே 1 அன்று முழு வேலை நிறுத்தம்...!


             பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமெரிக்காவில் கடந்த ஆறு மாதங்களாக ''வால் ஸ்ட்ரீட்டை  கைப்பற்றுவோம்'' போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டங்கள் மீது அமெரிக்க அரசு  கடும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது. இந்த வாரத்தில் மட்டும்  73 பேர் கைது செய்யப்பட்டனர்.           கடந்த ஆறு மாதங்களில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாயிரத்தைத் தாண்டிவிட்டது. 
          முதன்முதலில் கடந்த ஆண்டு செப்டம்பர் 17 - ஆம் தேதியன்று ''சுக்கோட்டி பூங்காவில்'' தான் இந்தப் போராட்டம் துவக்கப்பட்டது. பிறகு அந்த போராட்டம் என்பது நாடு முழுதும் பரவியது. போராட்டம் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவு பெறுவதையொட்டி, அந்தப் பூங்காவை மீண்டும் கைப்பற்றப் போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்தனர். அவர்களின் முயற்சியை முறியடிக்க கைது மற்றும் மிரட்டல் போன்ற வழிகளில் காவல்துறையினர் இறங்கினர்.
          எந்தவிதத் தொய்வும் இல்லாமல் தொடர்ந்து போராட்டம் நடந்து வருவதால், சுக்கோட்டி பூங்கா முன்பாக நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டுவிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு நீதிகோரும் அமைப்புகள் ஆகியவை ஆதரவு தெரிவித்திருந்தன. தங்கள் அமைப்புகளின் உறுப்பினர்கள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்கள். நாடு முழுவதும் நடந்து வரும் அடக்குமுறையைக் கண்டித்து வரும் ''மே 1 -  ஆம் தேதியன்று முழு வேலை நிறுத்தம்'' நடத்த பல்வேறு அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.
              அன்று அமெரிக்க மக்கள் அனைவரும் பணிகளுக்குச் செல்லாமலும், மாணவர்கள் வகுப்புகளில் பங்கேற்காமலும் இருக்க வேண்டும் என்று அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. அந்த ஒரு நாளில் மக்கள் எந்த செலவையும் செய்ய வேண்டாம் என்ற வித்தியாசமான கோரிக்கையையும் முன்வைத்திருக்கிறார்கள். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒரு பிரிவினர் ''வால் ஸ்ட்ரீட்டை கைப்பற்றுவோம்'' போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மன்ஹாட்டன் நகரைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சித் தலைவர்களில் ஒருவரான டானிஸ் ரோட்ரிக்ஸ் காவல்துறையினரின் அடக்குமுறை நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்தார். போராட்டக்காரர்களின் அடிப்படை உரிமையைப் பாதுகாக்கும் வகையில் மன்ஹாட்டன் நகரக் கவுன்சிலில், போராடுபவர் உரிமைப் பாதுகாப்பு மசோதா கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
             அவரது கருத்துக்கு தொழிற்சங்கங்கள், சமூக அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நகரக்கவுன்சில் உறுப்பினர்களும் இத்தகைய மசோதாவை நிறைவேற்றத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் பொது இடங்களை ஆர்ப்பாட்டங்களுக்கு பயன்படுத்தக்கூடாது என்ற சட்டத்தில் ஒபாமா கையெழுத்திடுகிறார். அது அமலுக்கு வந்துவிட்டால் நகர கவுன்சில் தீர்மானம் செல்லாததாகி விடும்.

ஆசிரியர்களும் போராட்டக் களத்தில்

           லாஸ் ஏஞ்சல்சில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பேரணியாக வலம் வந்துள்ளனர். கல்விக்கான பட்ஜெட்டில் எக்கச்சக்க வெட்டை ஒபாமா தலைமையிலான அரசு செய்யப் போகிறது. ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் வேலை பறிபோகப்போகிறது. இதுவரையில் 9 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணிநீக்கம் செய்யப்போகிறோம் என்கிற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில்தான் அதிகமான அளவில் ஆசிரியர்கள் வேலையிழக்கிறார்கள். இவர்களுக்குப் பதிலாக புதிதாக ஆசிரியர்களை நியமிக்கப் போவதில்லை.
         அப்படி நியமிக்காத பட்சத்தில் சுமார் 40 விழுக்காடு பள்ளிக்கூடங்கள் இழுத்து மூடப்பட்டாலும் ஆச்சரியமில்லை. இது ஒட்டுமொத்த கலிபோர்னியாவின் கல்வித்துறையையே முடக்கி விடும் என்கிறார்கள் ஆசிரியர்கள். வேலை நீக்கத்திற்கு அடையாளமாக வழங்கப்பட்டுள்ள இளஞ்சிவப்பு அட்டைகளைக் கைகளில் ஏந்தியவாறு ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்றனர்.அமெரிக்கக் கல்வித்துறை தனது சொந்த ஊழியர்களை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சமூகத்தையே மரியாதை இல்லாமல் நடத்துகிறது என்கிறார் போராடும் ஆசிரியர்களில் ஒருவரான ஜோஸ் லாரா. நடைமுறையில் என்ன பிரச்சனைகள் என்பது பற்றிக் கவலைப்படாமல் அரசு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது. ஐக்கிய ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான வாரன் பிளெட்சர், கலிபோர்னியா நிர்வாகம் மட்டும் எந்தக் கவலையும் இல்லாமல் ஆசிரியர்களை பணிநீக்கம் செய்தால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள்.
அதோடு, ஒட்டுமொத்த மாகாணத்தின் கல்வித்துறையே முடங்கிவிடும் என்கிறார். தங்களின் வேலை நீக்கம் மற்றும் வாழ்வாதாரப் பாதிப்பு என்பதோடு நிற்காமல், மாணவர்களின் கல்வி முழுமையாகப் பாதிக்கப்பட்டுவிடும் என்று எச்சரிக்கை மணியை ஒலிக்க விடுகிறார்கள் ஆசிரியர்கள். மாகாண நிர்வாகமோ, தந்திரமான மக்களை முன்னிறுத்துகிறார்கள். வரியைக் கூட்டினால் இதைச் சமாளித்துவிடலாமே என்று மக்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது. பள்ளிக்கல்வித்துறையை முடக்கும் இந்தத் திட்டத்தோடு, முதியோர் கல்வி, இளங்கலை மற்றும் சிறுவர்களுக்கான திட்டங்கள் ஆகியவற்றை இல்லாமல் போகச் செய்யும் திட்டம் அமெரிக்க அரசுக்கு உள்ளது. ஜூன் 30 - ஆம் தேதிக்குள் பட்ஜெட் பற்றாக்குறையைப் போக்குவதற்கான வேலைகளை நாங்கள் முடித்தாக வேண்டும் என்கிறது நிர்வாகம்.
       இந்நிலையில்தான் நாடு முழுவதும் நடக்கும் ''வால் ஸ்ட்ரீட்டை கைப்பற்றுவோம்'' போராட்டங்களின் ஒரு பகுதியாக கல்வித்துறை ஊழியர்களும் பங்கேற்கப் போகிறார்கள். 
         மே 1 - ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் நாடு தழுவிய முழு வேலை நிறுத்தத்தில் அவர்களும் களமிறங்குகிறார்கள். 99 சதவிகித மக்களில் நாங்களும் ஒருபகுதிதான் என்று அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு புதிய உற்சாகத்தை அளிக்கும் வகையில் பல்வேறு துறையினர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். 

வியாழன், 15 மார்ச், 2012

இலங்கையில் கால் பதிக்க துடிக்கிறது அமெரிக்கா - அதற்கு இந்தியா ஏன் அதரவு தரவேண்டும்...?

       ஜெனீவாவில் நடந்துவரும் ஐ.நா. மனித உரிமை ஆணையக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான கண்டனத்  தீர்மானம் ஒன்று  அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் ஆகிய நாடுகளில் மனித உரிமை மீறல்களை தயங்காமலும், அச்சமில்லாமலும் செய்த அமெரிக்கா தான் இந்த கண்டனத் தீர்மானத்தைக் கொண்டுவருகிறது. இதன் மூலம்  மனித உரிமைகள் மீது அக்கறையுள்ள மனித நேயமிக்க நாடாக தன்னை உலக நாடுகள் மத்தியில் காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 
           இலங்கைத் தமிழர்கள் மீது அமெரிக்காவிற்கு திடிரென்று அப்படி என்ன அவ்வளவு அக்கறை...? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. பிறகு ஏன் இலங்கை அரசின் மீது அமெரிக்கா கண்டனத் தீர்மானம் கொண்டுவரவேண்டும். 
             பொதுவாக அமெரிக்கா ஒரு நாட்டின் மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவருகிறது என்றால்,  ஒன்று அந்த நாட்டின் மீது ஆக்கிரமிப்பு செய்யப்போகிறது அல்லது போர் தொடுக்கப்போகிறது என்று பொருள் அல்லது ஒரு நாட்டில் உள்ள எதோ ஒன்றை  எதிர்ப்பார்த்து அது கிடைக்காமல் போய் அதனால் அந்த நாட்டின் மீது எரிச்சல் அடைந்திருக்கிறது அல்லது கோபம் அடைந்திருக்கிறது என்றும் பொருள். 
           இலங்கை அரசின் மீது அமெரிக்காவிற்கு அப்படி என்ன எரிச்சல்...? அப்படி என்ன கோபம்...?   அமெரிக்கா எதிர்ப்பார்த்த  ஒன்று என்ன இலங்கையில் கிடைக்காமல் போய்விட்டது...?  ஆம்... அமெரிக்கா தன் கைக்கு வரும் என்று எதிர்ப்பார்த்த ஒன்று அதன் கைக்கு கிடைக்காமல் போனது தான் இலங்கை மீதான அதன் எரிச்சல்.

             அமெரிக்கா நீண்ட காலமாகவே இலங்கையின் வடபகுதியில் உள்ள திரிகோணமலை மீது ஒரு கண் வைத்திருந்தது. அதற்கு காரணம் உண்டு...! இலங்கையின் தென் கடற்கரைப் பகுதியில் இந்தியப்பெருங்கடலில் - இந்திய தென் முனையிலிருந்து  சுமார் 2200 கிலோ மீட்டர் தொலைவில் ''டீகோ கார்சியா - DIEGO GARCIA'' என்ற தீவு உள்ளது. நீங்க உலக வரைபடத்தைப் பார்த்தால்  கண்ணுக்குத் தெரியாத தீவு ஒன்று தெரியும். அது இங்கிலாந்திற்கு சொந்தமான தீவு ஆகும். ஆனால் அந்த தீவை அமெரிக்கா தன் கைவசம் வைத்துள்ளது.  அந்த தீவில் தான் அமெரிக்காவிற்கு சொந்தமான விமானப்படை மற்றும் கடற்படை தளங்கள் உள்ளன. அதை படத்தில் காணலாம்.  அதுமட்டுமல்லாது. நிறைய ஆயுதங்களும்,  ஏவுகணைகளும் அங்கே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த படைத்தளம் என்பது  ஆசியப்பகுதியில் உள்ள இராக்,  ஈரான்,  இந்தியா, சீனா, வடகொரியா  போன்ற நாடுகளை தன் இராணுவப்பார்வைக்குள் வைத்துக்கொள்வதற்காகவே 1971 - ஆம் ஆண்டில்  அமெரிக்காவால் நிறுவப்பட்டது.  முன்பு இராக் நாட்டோடு போர் செய்த போது இங்கிருந்து தான் படைகள் எல்லாம் உடனுக்குடன் அங்கு அனுப்பப்பட்டது. இப்போதும் கூட ஈரானை தாக்குவதற்காக இங்கு படைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
              சகல வசதிகளோடு இந்த தீவு இருந்தாலும், அமெரிக்கா திருப்தியடையவில்லை. காரணம், இந்த தீவானது மேலே சொன்ன நாடுகளிலிருந்து மிக தொலைவில் உள்ளது. அதனால் அமெரிக்கா இந்த நாடுகளுக்கு அருகில் வரவேண்டும் என்று ஆசைப்பட்டது. அப்போது தான் திருகோணமலை அதன் கண்ணில் பட்டது. அந்தப்பகுதி கிடைத்துவிட்டால் இந்தியாவிற்கு பக்கத்திலேயே வந்து விடலாம் என்பது மட்டுமல்ல... அரபு நாடுகளிலிருந்து இலங்கை கடற்பகுதி வழியாக  சீனாவிற்கு செல்லும் எண்ணெய் கப்பல் போக்குவரத்தையும் நிறுத்திவிடலாம் என்பது போன்ற கனவில் அமெரிக்கா கனவு கண்டது. ஆனால் திருகோணமலையோ  அப்போது விடுதலைப்புலிகள் வசம் இருந்தது. அதனால் அமெரிக்காவிற்கு  விடுதலைப்புலிகளின் தயவு தேவைப்பட்டது. 
              எனவே விடுதலைப்புலிகளின் நட்பைப் பெறுவதற்கும்,  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மீண்டும் பிரதமராக வந்துவிடக்கூடாது என்ற அமெரிக்காவின் எதிர்ப்பார்ப்புக்கும்,   ராஜீவ்காந்தியின் உயிர் விலைப்பேசப்பட்டது. விடுதலைப்புலிகளும் பழி தீர்த்துக்கொண்டனர். அமெரிக்காவின் எண்ணமும் நிறைவேறியது. பிறகு விடுதலைப்புலிகளும் அமெரிக்காவும் நண்பர்கள் ஆனார்கள்.
              இந்த நட்பைப் பயன்படுத்தி விடுதலைப்புலிகள் வசம் இருக்கும் திருகோணமலைக்கு குடிபெயர்ந்து விடலாம் என்று வடைக்காக காத்திருந்த குள்ளநரிப் போல் காத்திருந்தது. ஆனால் இலங்கை ஒரே நாடாக இருந்தால் அது நிறைவேறாது என்பதை உணர்ந்த அமெரிக்கா, ஏற்கனவே தனி நாடு என்ற கோரிக்கையுடன் உள்நாட்டிலேயே இலங்கை அரசுடன் போராடிக்கொண்டிருந்த விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களைக் கொடுத்து இலங்கை இராணுவத்துடன் மோதவிட்டது. விடுதலைபுலிகளுக்கும், இராணுவத்திற்கும் நடைபெற்ற கடுமையான சண்டையில் விடுதலைப்புலிகள் அமைப்பு பூண்டோடு அழிக்கப்பட்டு, பிரிவினைவாதம்  ஒழிக்கப்பட்டுவிட்டது. 

              இன்று திருகோணமலை என்பது ஒன்றுபட்ட இலங்கையில் ஒரு பகுதியாக உள்ளது. அமெரிக்கா என்ற குள்ளநரி எதிர்ப்பார்த்த வடை கிடைக்காமல் போய்விட்டது. அமெரிக்காவின் நீண்ட காலக் கனவு நிறைவேறாமல் போய்விட்டது. இது தான் இன்றைக்கு அமெரிக்காவுக்கு இலங்கை மீது உண்டான எரிச்சலும் கோபமும் ஆகும். அதனால் தான் இலங்கை அரசின் மீது மனித உரிமை மீறல் எதிரான கண்டனம் என்ற பெயரில் தன் எரிச்சலையும் கோபத்தையும் அமெரிக்கா வெளிகாட்டியுள்ளது. 
                இந்த சூழ்நிலையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஏன் இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை இங்குள்ள அரசியல் கட்சிகள் சற்று சிந்திக்க வேண்டும். தேர்தல் ஓட்டுக்காக இந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று கூச்சல் போடுவது என்பது எந்த விதத்திலும் நியாயமில்லை. இந்த தீர்மானத்தை அமெரிக்கா ஏன் கொண்டுவரவேண்டும்..? என்பதை தமிழர்கள் நன்கு யோசிக்கவேண்டும். இலங்கை தமிழர்கள் மீது அமெரிக்காவிற்கு அப்படி என்ன அக்கறை என்பதையும் யோசிக்க வேண்டும்...?
            நியாயப்படிப் பார்த்தால் இந்த கண்டனத் தீர்மானத்தை இந்தியா தான் கொண்டுவந்திருக்க வேண்டும். ஏனென்றால் இலங்கையில் நடைபெற்றக் கொடுமைகளை நேரடியாகப்பார்த்து இரத்தக்கண்ணீர் வடித்தவர்கள் நாம் தான். அப்பாவித் தமிழர்கள், நம்முடைய சகோதர- சகோதரிகள், நம் வீட்டுக் குழந்தைகளும், வயதானவர்களும் தான் கொடுமையான முறையில் கொல்லப்பட்டனர். இன்றைக்கு மிச்ச மீதி இருக்கிற தமிழர்களும் தன் சொந்த நாட்டிலேயே வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். இதை நம் மத்திய - மாநில அரசுகள் கண்கூடாகப் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றன. அப்படி இருக்கையில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசுக்கு எதிராக தனியாக ஒரு தீர்மானத்தை கொண்டுவர இங்குள்ள மத்திய - மாநில அரசுகளுக்கு ஏன்  எண்ணம் வரவில்லை...? அமெரிக்கா கொண்டுவந்த இந்த தீர்மானத்தை ஆதரிக்கக் கூச்சல் போடும் எதிர்கட்சிகள், இந்திய அரசு இலங்கை அரசுக்கு எதிராக தனியாக கண்டனத் தீர்மானம் ஒன்றைக்கொண்டு வரவேண்டும்  என்று ஏன் கூச்சல் எழுப்பத் துணியவில்லை.

             ஏன் அமெரிக்காவின் வாலை பிடித்துக்கொண்டு அலைய வேண்டும்...? நமக்கென்று தனித்தன்மையும், மனித நேயமும், அநீதிகளுக்கெதிரான போர்க்குணமும் உண்டு. அதை நாம் காப்பாற்றுவோம்.

ஞாயிறு, 17 ஜூலை, 2011

அமெரிக்கா : நடுத்தெருவில் 75 ஆயிரம் முன்னாள் ராணுவத்தினர்

அமெரிக்காவில் முன்னாள் இராணுவத்தினரின் அவலநிலை..
          அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் பல்வேறு நாடுகளில் பணியாற்றிய முன்னாள் அமெரிக்க ராணுவத்தினரில் சுமார் 75 ஆயிரம் பேர் குடியிருக்க வீடில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். 
              முன்னாள் ராணுவத்தினருக்கான அமெரிக்க அரசுத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களே இதைக் காட்டுகின்றன. ஏற்கெனவே மனரீதியாகப் பாதிக்கப்படும் இவர்கள் நாடு திரும்பியவுடன் தங்குவதற்கு குடியிருப்பு இல்லாத நிலையில் கூடுதல் பாதிப்புக்குள்ளாகிறார்கள். ஜூன் மாதத்தில் எடுத்த புள்ளிவிபரத்தின்படி 75 ஆயிரத்து 700 பேர் இரவு நேரங்களில் தங்குவதற்கு சொந்த வீடு இல்லாமல் இருந்திருக்கிறார்கள்.
                “இதற்கு முன்பும் இத்தகைய நெருக்கடிகளை முன்னாள் ராணுவத்தினர் சந்தித்துள்ளார்கள். ஆனால் தற்போது இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து திரும்பிக் கொண்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு குடியிருப்புகள் இல்லை. எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் வீடுகள் இன்றி முன்னாள் ராணுவத்தினர் இருக்கிறார்கள்” என்கிறார் வீட்டுவசதித்துறை இயக்குநரான அன்னே ஒலிவா.
       ஆக்கிரமிப்புப் பணியிலிருந்து சொந்த நாட்டிற்குத் திரும்பிய பிறகு வேலை கிடைப்பதிலும் அவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியால் இருக்கும் வேலைகளையே பலரும் இழந்து கொண்டிருக்கும் நேரத்தில் புதிதாக முன்னாள் ராணுவத்தினருக்கு வேலைகிடைப்பது இல்லை. இதனால் அவர்களின் வருமானத்தில் திடீரென்று பெரும் சரிவும் ஏற்படுகிறது. இளம் வயதிலேயே வெளிநாடுகளுக்கு அமெரிக்கப் படைப் பணிக்காக சென்று திரும்பியுள்ளவர்களில் 21 விழுக்காட்டினருக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை.
        முன்னாள் ராணுவத்தினரின் நிலைமைகள் குறித்து அதிகமாக எழுதியுள்ள எட்வர்டு ஸ்பான்னஸ், இளம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இக்காலத்தில் கிடைக்கும் ஒரே வேலையே ராணுவத்தில் பணியாற்றுவதுதான். அமெரிக்கா எத்தகைய பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளது என்பதையே இது காட்டுகிறது. பட்ஜெட்டில் ஏராளமான நிதி வெட்டு வரப்போகிறது. அதற்குப் பிறகு நிலைமை மேலும் மோசமாகும் என்கிறார்.
               
ஆக்கிரமிப்புப் பணிகளுக்குச் சென்று விட்டு அமெரிக்கா திரும்பியுள்ள ராணுவத்தினரில் சுமார் 3 லட்சம் பேர் மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியுள்ளன.

வெள்ளி, 27 மே, 2011

இந்திய இளம் பெண்ணின் மீது அமெரிக்க போலீஸ் காட்டுமிராண்டித்தனம்

இந்திய தூதரக அதிகாரி மகள் கண்ணீர்....
    இந்திய பெண் என்பதால் புகார் மீது உரிய விசாரணை கூட செய்யாமல் அமெரிக்க போலீசார் கையில் விலங்கிட்டு காட்டுமிராண்டித்தனமாக  சிறையில் அடைத்து அவமானப்படுத்தியுள்ளனர் என்பது நமக்கெல்லாம் அதிர்ச்சி தரும் தகவலாகும்.
               அமெரிக்காவின் நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் இந்திய தூதரக அலுவலகம் உள்ளது. இங்கு துணைத்தூதரக அதிகாரியாக தேபாஷிஷ் பிஸ்வாஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். பதினெட்டே வயதான  இவரது மகள் கிருத்திகா பிஸ்வாஸ் நியூயார்க்கில் உள்ள குயின்ஸ் ஜான் ப்ரௌன்  பள்ளியில் கணித பாடப்பிரிவில்  படித்து வருகிறார்.
       கிருத்திகா பயிலும் பள்ளி மற்றும்  ஆசிரியர்கள் குறித்து தரக்குறைவான வாசகங்களுடன் கிருத்திகா பெயரில்  இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் மீது  போலீசில்  புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை விசாரித்த அமெரிக்க போலீசார் தூதரக அதிகாரியின் மகள் கிருத்திகா மீது சந்தேகப்பட்டனர். ஆனால் அமெரிக்க போலீசோ  கிருத்திகாவை தூதரக அதிகாரியின் மகள் என்கிற முறையிலும் - ஒரு இளம் பெண் என்கிற முறையிலும் முறையாக  உரிய விசாரணை எதுவும் மேற்கொள்ளாமல்,  உடனடியாக கிருத்திகாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அது மட்டுமல்லாமல் மகள் கைது செய்யப்பட்டிருக்கும்  தகவலை கூட அவரது தந்தை தேபாஷிஷ் பிஸ்வாஸ்க்கு  தெரியப்படுத்தவில்லை. 24 மணி நேரம் சிறையில் இருந்த பின்னர் தரக்குறைவான இ.மெயில் அனுப்பியது வேறு ஒருவர் என்பது தெரிய வந்ததும்  உடனே கிருத்திகாவை அமெரிக்கா போலீசார் விடுதலை செய்துவிட்டனர். ஆனால் கிருத்திகா பயின்ற குயின்ஸ் ஜான் ப்ரௌன்  பள்ளி நிர்வாகம் கிருத்திகாவை ஒரு மாதம் இடை நீக்கம் செய்திருந்தது. பின்னர் புகாரில் உண்மையில்லை என தெரிந்தவுடன், பள்ளி நிர்வாகம் கிருத்திகாவை இடைநீக்கம் செய்ததை வாபஸ் பெற்றதாக கிருத்திகாவுக்கு இமெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து நிருபர்களுக்கு பேட்டிளித்த கிருத்திகா கூறியதாவது:
         எனக்கு தூதரக அதிகாரி மகள் என்கிற முறையில்  அதிகார பாதுகாப்பு உள்ளது. ஆனால் அதனை அமெரிக்க போலீசார் மதிக்கவில்லை. விசாரணையின் போது என்னை “பாத்ரூம்” செல்லக்கூட அனுமதிக்கவில்லை. சக கைதிகள் முன்னிலையிலேயே  செல்லச்சொல்லி கட்டாயப்படுத்தி  கொடுமை படுத்தினார்கள். குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை என்றால் பாலியியல் தொழில் செய்து கைது செய்யப்பட்ட பெண்களோடும், HIV நோயால் பாதிக்கப்பட்ட பெண்களோடும் அடைத்து விடுவோம் என்று மிரட்டினார்கள். எனது உணர்வுகளை அவர்கள் ஒருபொருட்டாக கூட மதிக்கவில்லை. தர்ம சங்கடத்துக்குள்ளாகியதாக கூறியவாறே கண்ணீர் விட்டு அழுதார்.
     உடனே அருகில் இருந்த அவரது வழக்கறிஞர் ரவி பத்ரா செய்தியாளர்களிடம் கைது சம்பவம் குறித்து விளக்கினார். அப்போது அவர், கடந்த பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி நடந்த இந்த கொடுமையான சம்பவம் என்பது சர்வதேச தூதரகச் சட்டங்களையெல்லாம் மீறப் பட்ட செயலாகும். அவர் கைது செய்யப்பட்ட தகவல்   அவரது தந்தைக்கோ அல்லது இந்திய தூதர் பிரபு தயாளுக்கோ கூட தெரிவிக்கப்படவில்லை. கிருத்திகாவுக்கு கைவிலங்கிட்டு சிறையில் அடைத்தது தூதரக மரபுகளை மீறிய செயலாகும். உள்நோக்கத்தோடு, வேண்டுமென்றே கிருத்திகா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவருடைய வேதனைக்கு ஆறுதல் அளிக்கும் விதத்தில் நியூயார்க் நகர மேயர், தனது பொறுப்பை கிருத்திகாவுக்கு வழங்கி சாவியை ஒப்படைக்க வேண்டும் என்றும், மேலும் வேண்டுமென்றே எந்தவிதமான குற்றமும் செய்யாத  கிருத்திகாவை கைது செய்து சட்டவிரோதமாக சிறையில்  வைத்ததற்காக நஷ்டஈடாக ரூ.7 கோடி வழங்க வேண்டும் என்றும்  நியூயார்க் நகரசபை நிர்வாகத்திற்கு எதிராக கிருத்திகா சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்றும்  கூறினார்.
                 ஒரு அண்டை நாட்டு தூதரக அதிகாரியின் பெண் என்றும் பார்க்காமல், பள்ளியில் பயிலும் இளம் பெண் என்று கூட பார்க்காமல் காட்டுமிராண்டித்- தனமாக அமெரிக்க போலீஸ் நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது. இந்திய அரசும் இதைக் கண்டித்து தூதரக முறையிலான நடவடிக்கையை எடுக்கவேண்டும்.