புதன், 21 மார்ச், 2012

அமெரிக்க வரலாற்றில் புதிய திருப்பம் - மே 1 அன்று முழு வேலை நிறுத்தம்...!


             பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமெரிக்காவில் கடந்த ஆறு மாதங்களாக ''வால் ஸ்ட்ரீட்டை  கைப்பற்றுவோம்'' போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டங்கள் மீது அமெரிக்க அரசு  கடும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது. இந்த வாரத்தில் மட்டும்  73 பேர் கைது செய்யப்பட்டனர்.           கடந்த ஆறு மாதங்களில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாயிரத்தைத் தாண்டிவிட்டது. 
          முதன்முதலில் கடந்த ஆண்டு செப்டம்பர் 17 - ஆம் தேதியன்று ''சுக்கோட்டி பூங்காவில்'' தான் இந்தப் போராட்டம் துவக்கப்பட்டது. பிறகு அந்த போராட்டம் என்பது நாடு முழுதும் பரவியது. போராட்டம் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவு பெறுவதையொட்டி, அந்தப் பூங்காவை மீண்டும் கைப்பற்றப் போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்தனர். அவர்களின் முயற்சியை முறியடிக்க கைது மற்றும் மிரட்டல் போன்ற வழிகளில் காவல்துறையினர் இறங்கினர்.
          எந்தவிதத் தொய்வும் இல்லாமல் தொடர்ந்து போராட்டம் நடந்து வருவதால், சுக்கோட்டி பூங்கா முன்பாக நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டுவிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு நீதிகோரும் அமைப்புகள் ஆகியவை ஆதரவு தெரிவித்திருந்தன. தங்கள் அமைப்புகளின் உறுப்பினர்கள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்கள். நாடு முழுவதும் நடந்து வரும் அடக்குமுறையைக் கண்டித்து வரும் ''மே 1 -  ஆம் தேதியன்று முழு வேலை நிறுத்தம்'' நடத்த பல்வேறு அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.
              அன்று அமெரிக்க மக்கள் அனைவரும் பணிகளுக்குச் செல்லாமலும், மாணவர்கள் வகுப்புகளில் பங்கேற்காமலும் இருக்க வேண்டும் என்று அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. அந்த ஒரு நாளில் மக்கள் எந்த செலவையும் செய்ய வேண்டாம் என்ற வித்தியாசமான கோரிக்கையையும் முன்வைத்திருக்கிறார்கள். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒரு பிரிவினர் ''வால் ஸ்ட்ரீட்டை கைப்பற்றுவோம்'' போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மன்ஹாட்டன் நகரைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சித் தலைவர்களில் ஒருவரான டானிஸ் ரோட்ரிக்ஸ் காவல்துறையினரின் அடக்குமுறை நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்தார். போராட்டக்காரர்களின் அடிப்படை உரிமையைப் பாதுகாக்கும் வகையில் மன்ஹாட்டன் நகரக் கவுன்சிலில், போராடுபவர் உரிமைப் பாதுகாப்பு மசோதா கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
             அவரது கருத்துக்கு தொழிற்சங்கங்கள், சமூக அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நகரக்கவுன்சில் உறுப்பினர்களும் இத்தகைய மசோதாவை நிறைவேற்றத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் பொது இடங்களை ஆர்ப்பாட்டங்களுக்கு பயன்படுத்தக்கூடாது என்ற சட்டத்தில் ஒபாமா கையெழுத்திடுகிறார். அது அமலுக்கு வந்துவிட்டால் நகர கவுன்சில் தீர்மானம் செல்லாததாகி விடும்.

ஆசிரியர்களும் போராட்டக் களத்தில்

           லாஸ் ஏஞ்சல்சில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பேரணியாக வலம் வந்துள்ளனர். கல்விக்கான பட்ஜெட்டில் எக்கச்சக்க வெட்டை ஒபாமா தலைமையிலான அரசு செய்யப் போகிறது. ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் வேலை பறிபோகப்போகிறது. இதுவரையில் 9 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணிநீக்கம் செய்யப்போகிறோம் என்கிற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில்தான் அதிகமான அளவில் ஆசிரியர்கள் வேலையிழக்கிறார்கள். இவர்களுக்குப் பதிலாக புதிதாக ஆசிரியர்களை நியமிக்கப் போவதில்லை.
         அப்படி நியமிக்காத பட்சத்தில் சுமார் 40 விழுக்காடு பள்ளிக்கூடங்கள் இழுத்து மூடப்பட்டாலும் ஆச்சரியமில்லை. இது ஒட்டுமொத்த கலிபோர்னியாவின் கல்வித்துறையையே முடக்கி விடும் என்கிறார்கள் ஆசிரியர்கள். வேலை நீக்கத்திற்கு அடையாளமாக வழங்கப்பட்டுள்ள இளஞ்சிவப்பு அட்டைகளைக் கைகளில் ஏந்தியவாறு ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்றனர்.அமெரிக்கக் கல்வித்துறை தனது சொந்த ஊழியர்களை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சமூகத்தையே மரியாதை இல்லாமல் நடத்துகிறது என்கிறார் போராடும் ஆசிரியர்களில் ஒருவரான ஜோஸ் லாரா. நடைமுறையில் என்ன பிரச்சனைகள் என்பது பற்றிக் கவலைப்படாமல் அரசு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது. ஐக்கிய ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான வாரன் பிளெட்சர், கலிபோர்னியா நிர்வாகம் மட்டும் எந்தக் கவலையும் இல்லாமல் ஆசிரியர்களை பணிநீக்கம் செய்தால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள்.
அதோடு, ஒட்டுமொத்த மாகாணத்தின் கல்வித்துறையே முடங்கிவிடும் என்கிறார். தங்களின் வேலை நீக்கம் மற்றும் வாழ்வாதாரப் பாதிப்பு என்பதோடு நிற்காமல், மாணவர்களின் கல்வி முழுமையாகப் பாதிக்கப்பட்டுவிடும் என்று எச்சரிக்கை மணியை ஒலிக்க விடுகிறார்கள் ஆசிரியர்கள். மாகாண நிர்வாகமோ, தந்திரமான மக்களை முன்னிறுத்துகிறார்கள். வரியைக் கூட்டினால் இதைச் சமாளித்துவிடலாமே என்று மக்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது. பள்ளிக்கல்வித்துறையை முடக்கும் இந்தத் திட்டத்தோடு, முதியோர் கல்வி, இளங்கலை மற்றும் சிறுவர்களுக்கான திட்டங்கள் ஆகியவற்றை இல்லாமல் போகச் செய்யும் திட்டம் அமெரிக்க அரசுக்கு உள்ளது. ஜூன் 30 - ஆம் தேதிக்குள் பட்ஜெட் பற்றாக்குறையைப் போக்குவதற்கான வேலைகளை நாங்கள் முடித்தாக வேண்டும் என்கிறது நிர்வாகம்.
       இந்நிலையில்தான் நாடு முழுவதும் நடக்கும் ''வால் ஸ்ட்ரீட்டை கைப்பற்றுவோம்'' போராட்டங்களின் ஒரு பகுதியாக கல்வித்துறை ஊழியர்களும் பங்கேற்கப் போகிறார்கள். 
         மே 1 - ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் நாடு தழுவிய முழு வேலை நிறுத்தத்தில் அவர்களும் களமிறங்குகிறார்கள். 99 சதவிகித மக்களில் நாங்களும் ஒருபகுதிதான் என்று அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு புதிய உற்சாகத்தை அளிக்கும் வகையில் பல்வேறு துறையினர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். 

கருத்துகள் இல்லை: