புதன், 7 மார்ச், 2012

ராகுல் காந்தி மட்டுமல்ல... காங்கிரஸ் கட்சியே பாடம் கற்க வேண்டும்...!


வடை போச்சே...!
              நேரு.. இந்திரா காந்தி... ராஜீவ் காந்தி... அடுத்து இன்று ராகுல் காந்தி என்ற வாரிசு அரசியலை மத்தியில் மீண்டும் நிலைநாட்டுவதற்கு நேரம் பார்த்து காங்கிரஸ் கட்சியில் உள்ள நேரு குடும்ப விசுவாசிகளும் , சோனியா காந்தியும் காய் நகர்த்தினார்கள். அதற்காக ராகுல் காந்தியை முன்னிறுத்தி தான் முன்பு நடந்த பீஹார் மற்றும் ஒடிசா மாநிலத் தேர்தல்களை காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்தித்து மண்ணைக் கவ்வியது. 
               அதேப்போல் தான்  இம்முறை காங்கிரஸ் கட்சியும், சோனியா காந்தி வகையறாக்களும் நடந்து முடிந்த உத்திரபிரதேசம் உட்பட ஐந்து மாநிலத் தேர்தல்களிலும் பெரும் முயற்சி செய்தனர். வெறும் 2014 - ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கிற பாராளுமன்றத்தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதற்கு உத்திரபிரதேசத்தின் வெற்றியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று காங்கிரஸ் கட்சி பகல் கனவு கண்டது.   அதற்காக இப்போது பிரதமராக இருக்கும் மன்மோகன் சிங்கை வரவிருக்கும் குடியரசுத்தலைவர் தேர்தலில் நிற்க வைத்து குடியரசுத்தலைவராக்கி விட்டு, பிறகு இந்த இளவரசரை பிரதமராக பட்டாபிஷேகம் செய்து உட்கார வைக்கலாம் என்ற கருத்தை காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே உலாவ விடப்பட்டது. மீண்டும் நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை பிரதமர் பதவியில் உட்கார வைப்பதில் ஒருமித்தக்கருத்து உருவாக்கப்பட்டது.
                  அதற்காகவே உத்திரபிரதேச மாநில தேர்தல் பிரச்சாரங்களில் ராகுல் காந்தி மட்டுமே பிரதானமாக ஈடுபட்டார். அவருக்குத் துணையாக அவரது அன்னையும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தியும், ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்காவும் அவரது கணவரும் சூறாவளியாக பிரச்சாரம் செய்தார்கள். பிரியங்காவின் குழந்தைகளைக் கூட காங்கிரஸ் கட்சி விட்டு வைக்கவில்லை. அவர்களையும் அந்தக் கட்சி தேர்தல் பிரச்சாரத்தில் இறக்கிவிட்டது.           
              இவ்வளவு செய்தும் அந்த மாநில மக்கள் நேரு - இந்திரா குடும்ப வாரிசுகளை தூங்கி எறிந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
               அந்த அளவிற்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி காலத்தில் கடுமையான விலைவாசி உயர்வினால் மக்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர் என்பது தான் வெளிப்படையான உண்மை.               

கருத்துகள் இல்லை: