செவ்வாய், 6 மார்ச், 2012

உன் அண்டை வீட்டானை ( நேசி ) சந்தேகி...

இது தமிழக அரசே  கற்றுக்கொடுக்கும் பாடம்...
         
       சென்னை நகரில் வீடுகளை வாடகைக்கு விடுபவர்கள் யாருக்கு விடுகிறோம், அவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர், எங்கு பணியாற்றுகிறார் என்பது உட்பட அனைத்து விவரங்களையும் புகைப்படத்துடன் காவல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டுமென தமிழக அரசு தடாலடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
           அதேபோல கல்லூரியில் பயிலும் பிற மாநில மாணவர்கள் குறித்த விவரங்களை தெரிவிக்குமாறும் கல்வி நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. சமீபத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு நிலை மோசமடைந்து உள்ளது. கொலை, கொள்ளை அதிகரித்து உள்ளது. வங்கிக் கொள்ளை பெருகி உள்ளது.
            இந்தப் பின்னணியில் அரசின்மீது மக்களின் அதிருப்தி மேலோங்கத் தொடங்கியது. மக்களின் கவனத்தைத் திருப்பவும்; அரசு மிகவும் கறாராக செயல்படுவதாகக் காட்டவும்; வங்கிக் கொள்ளையர் என்று முத்திரைக் குத்தப்பட்டு 5 வட இந்தியர்கள் என்கவுன்டரில் போலீசாரால் கொலை செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து கொலை, கொள்ளைகளில் ஈடுபடுபவர்கள் வட இந்தியர்கள் என்ற கருத்து காவல்துறையாலும் ஊடகங்களாலும் வேகமாக பரப்பப்படுகிறது. அதன் தொடர்ச்சியாகவே வட இந்தியர்களை கண்காணிக்க வேண்டும் என்கிற ஒரு மனோநிலை சமூகத்தின் தலையில் திணிக்கப்பட்டு இப்போது அரசு உத்தரவாகவும் வந்துள்ளது.
           மேலோட்டமாகப் பார்க்கும்போது சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க இவையெல்லாம் தேவைதான் என்று அப்பாவிக் குடிமகன்/குடிமகள் நம்பவும் பேசவும் செய்கிற சூழல் உருவாக்கப்படுகிறது. ஆனால் இதன் தொடர் விளைவுகளை - ஆபத்தான பாசிச மனோநிலையை பற்றி நாம் கவலை கொண்டாக வேண்டும். கொஞ்சம் நிதானமாக சில செய்திகளை அசை போட்டு சில கேள்விகளை எழுப்பிப் பாருங்கள்! இந்திரா காந்தியை கொன்றவன் ஒரு சீக்கியன் என்பதற்காக மொத்த சீக்கியர்களையும் பகையுணர்வோடு அணுகுகிற சூழல் உருவானது நியாயந்தானா? எங்கோ குண்டு வைத்தவன் ஒரு இஸ்லாமியன் என்பதற்காக உலகெங்கும் தாடி வைத்தவனை எல்லாம் சந்தேகப்படவில்லையா? ஏன் அப்துல் கலாம் என்ற பெயரை கொண்டிருந்ததற்காக அமெரிக்க விமான நிலையத்தில் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் கேவலமான முறையில் ஒரு முறைக்கு இருமுறை சோதனைக்கு உட்படுத்தப்படவில்லையா? இவை நியாயமா? இதையெல்லாம் நாகரீக சமூகம் அனுமதிக்க முடியுமா? கொள்ளைக்காரனுக்கும் திருடனுக்கும் பயங்கரவாதிக்கும் மதம் ஏது? மொழி ஏது? இனம் ஏது? அதுபோகட்டும்.
               தமிழகச் சிறைகளில் பல்வேறு குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டிருப்பவர்கள் எல்லாமே வட நாட்டுக்காரர்களா? அல்லவே. ஆகப் பெரும்பான்மையோர் தமிழர்கள் தாமே! சரி. இங்கே வட நாட்டுக்காரர்களை சந்தேகப்படலாம் என்றால் மும்பையில் சிவசேனாக்காரர்கள் தமிழர்களுக்கு எதிராய் முழக்கமிடுவது சரியென்று ஆகிவிடாதா? பீகாரிகளெல்லாம் திருடர்கள், மும்பையை விட்டு வெளியேற வேண்டும் என நவநிர்மாண் சேனா கூறுவது நியாயமாகி விடாதா? ஆஸ்திரேலியாவில் இந்திய இளைஞர்களை சந்தேகக்கண்கொண்டு பார்ப்பது சரியென்றாகிவிடாதா? அமெரிக்காவில் இந்திய மாணவர்களை வேவு பார்க்க ஒரு கருவியைக் காலில் பொருத்திய கொடுமையை இது நியாயப்படுத்திவிடாதா? ஹிட்லரின் பாசிசமும் முசோலினியின் நாசிசமும் சூனியத்திலிருந்து உருவாகவில்லை. முதலில் யூதர்களுக்கெதிரான வெறுப்பை விதைத்துத்தானே பாசிசம் வளர்ந்தது? இங்கும் முஸ்லிம்களுக்கு எதிராக விஷம் கக்கித்தானே இந்து மதவெறி அமைப்புகள் ஆட்டம் போடுகின்றன? சமூகத்தில் எல்லோருமே திருடர்கள் அல்ல. வகுப்பறையில் பக்கத்தில் இருப்பவரை விரோதியாகப் பார்க்கத் தொடங்கினால்; தெருக்களில் ‘இது எங்க ஏரியா உள்ள வராதே’ என குரல் கொடுக்கத் தொடங்கினால்; ஒவ்வொரு வீட்டாரும் பக்கத்து வீட்டில் குடியிருப்பவரை சந்தேகக்கண்கொண்டு பார்க்கத்தொடங்கினால் அப்புறம் நிம்மதியாக வாழ முடியுமா? பக்கத்து வீட்டுக்காரன் சந்தேகத்துக்கு உரியவன்.             
            பக்கத்து மாநிலத்தவனை நம்ப முடியாது. வட நாட்டான் திருடன்.பக்கத்து நாடுகளோ நமது விரோதிகள். இப்படியே வெறுப்பை பிரச்சாரம் செய்தால் விளைவு என்ன ஆகும்? யோசித்துப் பாருங்கள்! தமிழ்நாட்டில் வேலை கிடைக்காமல் தானே வயிற்றுப் பிழைப்புக்காக தமிழன் அண்டை மாநிலங்களுக்கும், கடல் கடந்தும் ஓடுகிறான். தன் பிள்ளைகுட்டிகளை, மனைவியை, தாயை, பிறந்த மண்ணை பிரிந்து எங்கெங்கோ ஓடுகிறான். இங்கே பிழைக்க வந்திருக்கிற வட இந்தியர்களின் கதியும் அதுதானே! பெரும்பான்மையான மக்களை வறுமைப்படுகுழியில் தள்ளிவிட்டு; ஒரு சிறு கூட்டத்தை சகல வசதியும் உள்ளவர்களாக மாற்றிய அரசின் தவறான கொள்கைகள் தானே கொலை, கொள்ளைகளின் மூலாதாரம்? இதை உணராமல் அரசு தவறான பாதையில் பயணப்பட்டுக்கொண்டே இருக்குமானால் சமூக விரோதச் செயல்கள் பெருகத்தான் செய்யும்.
           ஒரு விழுக்காடு வேலையின்மை பெருகினால் 10 விழுக்காடு சமூகக் குற்றங்கள் பெருகும் என்கிற அடிப்படை சமூக அறிவியலை மறந்து வேலையின்மையை விஷக்காளானாய் வளர்த்துக் கொண்டிருப்பது யார்? மத்திய மாநில அரசுகள் அல்லவா? வேலையின்மையால் வளரும் அதிருப்தியை மக்களிடையே பகைமையைத் தூண்டி தணிக்க நினைக்கிறதா? தப்பிக்க நினைக்கிறதா? அப்படியென்றால் திருடனைக் கண்டுபிடிப்பது எப்படி? சில மேதாவிகள் கேள்வி எழுப்புகிறார்கள்? தமிழக காவல்துறையில் புலனாய்வுப் பிரிவுக்கு என்ன வேலை? முன்னாள் அமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர்கள் ஏன் ஆளுங்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட உடன்பிறவா கூட்டம் இவர்களை வேவு பார்ப்பதுதானா காவல்துறையின் ஒரே பணி? காவல்துறை லஞ்சத்துறையாக இல்லாமல் - ஆட்சியாளர்களின் எடுபிடியாக, ஏவல் நாயாக இல்லாமல் - சமூக விரோதிகளின் பங்காளிகளாக இல்லாமல் சேவை செய்தாலே சட்டம் ஒழுங்கு சரிபாதி சரியாகி விடும். செய்வார்களா? அதைவிடுத்து பிரச்சனை தலைவலி யாகும்போது திசை திருப்புவதற்காக பக்கத்து மாணவனையும், பக்கத்து வீட்டாரையும் சந்தேகிக்க தூண்டுவது பாசிசத்துக்கு தீனி போடுவதாகும். “உன் அண்டை அயலானை நேசி” என்றார் ஏசு. “உன் அண்டை அயலானை சந்தேகி” என்கிறது தமிழக அரசு. ஏன் இந்தக் கொலைவெறி?
-சு.பொ.அகத்தியலிங்கம்

கருத்துகள் இல்லை: