நேற்று முன் தினம் மத்திய இரயில்வே துறை அமைச்சர் தினேஷ் திரிவேதி ஒரு ''அற்புதமான'' இரயில்வே பட்ஜெட்டை வழங்கினார். கடந்த எட்டு ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த பயணிகள் கட்டணத்தை இந்த பட்ஜெட்டில் தாறுமாறாக உயர்த்தி சாதனைப்படுத்தி இருக்கிறார். அதுமட்டுமில்லாது நடைமேடை கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சரக்கு இரயில் கட்டணம் பட்ஜெட்டுக்கு முன்பே காதும் காதும் வைத்தார் போல் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இரயில் நிலையங்கள் விமான நிலையங்கள் அளவுக்கு தரம் உயர்த்துவதற்கு இரயில் நிலையங்களை தனியாருக்கு தாரைவார்க்கப் போவதாகவும் முன்மொழிந்திருக்கிறார்.
இவைகள் அத்தனையும் தினேஷ் திரிவேதியின் சொந்தக் கருத்தில் உதித்தவையல்ல. அல்லது இது தினேஷ் திரிவேதி தன் விருப்பப்படி தனிப்பட்ட முறையில் தாயாரித்த இரயில்வே பட்ஜெட்டும் அல்ல. மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் கொள்கை முடிவில் உருவான பட்ஜெட் இது. ஏற்கனவே அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவாகி ஏற்றுக்கொள்ளப்பட்டு உருவான பட்ஜெட் தான் இது. அமைச்சரவையில் பங்கு பெற்றும் , அரசுக்கு உள்ளேயே இருந்து கொண்டும் , ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அனைத்து முடிவுகளையும் அமைச்சரவைக் கூட்டங்களில் ஏற்றுக் கொண்டும், மம்தாவின் வழி காட்டலோடும் செயல்படுகிற ஒரு அமைச்சர் தான் இந்த இரயிவே துறை அமைச்சர் தினேஷ் திரிவேதி என்பதை மக்கள் மறந்திருப்பார்கள் என்று மம்தா பானர்ஜி நினைத்துவிட்டார் போலும்.
இரயில்வே பட்ஜெட்டை தினேஷ் திரிவேதி படித்து முடித்தவுடன், மம்தா அம்மையாருக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டிருக்கிறது. கொதித்துப் போய்விட்டாராமாம். அதே கோபத்தில் பிரதமருக்கு, பயணிகள் கட்டணத்தை உயர்த்தி மக்களுக்கு சுமையை ஏற்படுத்திய இரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதியை பதவி நீக்கம் செய்யுங்கள் என்று வேகமாக ஆணையிட்டார். நல்ல வேலை தூக்கில் போடுங்கள் என்று சொல்லவில்லை.
அவர் தான் மம்தாவின் கட்சியை சேர்ந்தவராயிற்றே, பிரதமருக்கு ஆணையிட்டதற்கு பதிலாக தன கட்சியை சேர்ந்த தினேஷ் திரிவேதிக்கே பதவி விலகச் சொல்லி ஆணையிட்டிருந்தால், மாட்டேன் என்றா சொல்லிவிடுவார். அல்லது கட்டணத்தை உயர்த்தியதன் மூலம் மக்களின் தலையில் அதிக சுமையை ஏற்றிவிட்டீர்களே... அதனால் நாங்கள் அரசுக்குக் கொடுத்துவந்த ஆதரவை திரும்பப்பெருகிறோம் என்று சொல்லி கட்டண உயர்வை திரும்பப்பெற முயற்சி செய்திருக்கலாம். ஆக கட்டண உயர்வு என்ற முக்கியமான பிரச்னையை திசைத்திருப்புவதற்காக தன்னை ஒரு கம்யூனிஸ்டை போல காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறார். மம்தா இது மாதிரியான செயல்பாட்டின் மூலம் மேற்குவங்க மாநில மக்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்.
மக்களுக்கெதிரான மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்தும், அநீதிகளை எதிர்த்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குரல் கொடுப்பது போல் தாமும் கொடுத்தால் தான் மேற்குவங்கத்தில் அரசியல் பிழைப்பு நடத்த முடியும் என்ற கட்டாயம் மம்தா பானர்ஜிக்கு இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக