கணினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கணினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 26 செப்டம்பர், 2011

இளைஞர்கள் - குழந்தைகள் இன்றைய நவீன கருவிகளுக்கு அடிமையாவது ஆபத்தானது...!

பேராசிரியர் கே. ராஜு அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து...

       சென்ற ஆண்டு கொல்கத்தாவில் 10-ஆம் வகுப்பு  படித்த  ஒரு மாணவி தண்டவாளத்தைக் கடக்கும் போது ரயில் மோதியதில் அவளது உடல் கூழாகிவிட்டது. அலைபேசியைக் காதில் வைத்தபடி மூடப்பட்டிருந்த ரயில்வே கேட்டைக் கடந்து சென்ற அச்சிறுமி, 100 மீட்டர் தூரத்தில் வேகமாக ஒரு ரயில் வந்து கொண்டிருந்ததைக் கூட கவனிக்கவில்லை. மற்றவர்கள் போட்ட சத்தமும் அவள் காதில் விழவில்லை. 
      இந்த ஆண்டு ஹெளராவில் 10-வது படித்துக் கொண்டிருந்த நெருங்கிய நண்பர்களான இரு சிறுமிகளும் செல்போனைக் காதில் வைத்தபடி தண்டவாளத்தைக் கடந்தபோது வேகமாக நெருங்கிக் கொண்டிருந்த ரயிலையோ, அருகிலிருந்தவர்கள் எச்சரிக்கை செய்து போட்ட கூச்சலையோ கவனிக்கும் நிலையில் இல்லை. இவர்களெல்லாம் தங்கள் அலட்சியத்திற்கு விலையாக தங்கள் உயிரையே தர வேண்டியிருந்தது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
           சிங்கப்பூரில் ஒரு சிறு பெண் குழந்தையின் பெற்றோர்கள் கணினியில் மூழ்கியிருந்தபோது, பசியால் துடித்துக்கொண்டிருந்த   அக்குழந்தை இறந்தே போய்விட்டது. தென் கொரியாவில் கணினி விளையாட்டிலேயே நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருந்ததற்காகத் திட்டிய அம்மாவை ஒரு சிறுவன் கொலை செய்துவிட்டுப் பின்னர் தற்கொலையும் செய்து கொண்டான். உலகெங்கிலும் வயது வித்தியாசமின்றி பலரைப் பிடித்து ஆட்டும் இந்த மோகத்திற்கு ‘தொழில்நுட்ப அடிமைத்தனம்’ என்ற பெயர் கூட வைக்கப்பட்டது.
           மின்னணுக் கருவிகள் நுகர்வோர் பற்றிய ரிட்ரீவோ என்ற இணையதளம் நடத்திய ஓர் ஆய்வில் ஃபேஸ்புக் அல்லது டிவிட்டரில் மூழ்குவதைக் கட்டுப்படுத்த இயலாத பல பெற்றோர்கள் தங்களது கடமைகளைப் புறக்கணிப்பதாக ஒத்துக் கொண்டுள்ளனர். தொழில்நுட்பக் கருவிகளுக்கு அடிமைகளாவது பெரும்பாலும் இளைஞர்கள்தாம் என்பது கவலையளிக்கக்கூடிய விஷயமாகும். தங்களுடைய சமூக வலைத்தளங்களுக்குள் 15 நிமிடங்களுக்கொரு முறை செல்வதென்பது பலருக்கு பழக்கமாகிவிட்டது. சிறிது நேரம் அந்த வலைத்தளங்கள் செயலிழந்து போனாலும் அவர்களால் பொறுக்க முடிவதில்லை. உணவையும் உறக்கத்தையும் கூட இதற்காக மறப்பவர்கள் இருக்கிறார்கள். ஆன்லைன் உரையாடல்களிலோ செல்போன் விளையாட்டுகளிலோ ஈடுபட்டிருக்கும்போது, கழிப்பறைக்குச் செல்ல வேண்டிய அவசரத் தேவையைக் கூட தள்ளிப் போடக் கூடிய அளவு சிலர் கிறுக்குப் பிடித்தவர்களாக இருப்பது கவலைக்குரியது.
              இத்தகைய அளவுகடந்த தீவிரமான ஈடுபாட்டை உடற்கூறு வல்லுநர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாவதோடு ஒப்பிடுகின்றனர். தொழில்நுட்ப அடிமைகளை சிறிது நேரம் அவர்களுக்குப் பிரியமான கருவிகளிலிருந்து பிரித்து வைத்தபோது, போதைப் பொருள் கிடைக்காத போதைப் பொருள் அடிமைகள் படும் பாட்டினை ஒத்ததாக அவர்கள் நிலை இருந்ததாக வல்லுநர்கள் அந்த ஆய்வில் கண்டுபிடித்தனர். மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் ஊடகங்கள் பற்றிய சர்வதேச மையம் 10 நாடுகளைச் சேர்ந்த 1000 பல்கலைக்கழக மாணவர்களிடம் ஓர் ஆய்வை மேற்கொண்டது. கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள், செல்போன்கள், எம்.பி.3 பிளேயர்கள் போன்ற சாதனங்களிலிருந்து 24 மணி நேரத்திற்கு விலகியிருக்குமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோரால் அது இயலவில்லை. துக்கம். தனிமை, கவலை போன்ற மன அழுத்தங்களுக்கும் இதயப் படபடப்பு போன்ற உடல்நலப் பாதிப்புகளுக்கும் ஆளானதாக பல மாணவர்கள் தெரிவித்தனர். செல்போன் அருகில் இல்லாவிட்டாலும், செல்போன் ஒலி கேட்பதைப் போன்ற பிரமை ஏற்பட்டதாகக் கூட ஒரு மாணவன் தன் அனுபவத்தை விவரித்தான்! அன்றாடம் தொழில்நுட்பக் கருவிகளோடு இருக்கும் தீவிரப் பிணைப்பு காரணமாக குடும்ப உறவுகள் சீர்கெட்டு வருவதாக பிரபல உளவியல் நிபுணர் ஆண்டனி கிட்மேன் தெரிவிக்கிறார்.
                     தொழில்நுட்பமும், தொழில்நுட்பக் கருவிகளும் உலகில் பல அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, அவற்றின் அடிமைகளாக நாம் மாறிவிடக் கூடாது. அப்படி மாறினால் நம்முடைய உடல்நலம், சமூக உறவுகள், ஏன், சமயத்தில் உயிரையே கூட அதற்கு விலையாகத் தர வேண்டியிருக்கும். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷம் என்ற முதுமொழி நம் வாழ் வின் ஒவ்வோர் அம்சத்திற்கும் பொருந்தி வருவதை நாம் கவனத்தில் கொள்வது நல்லது.

(உதவிய கட்டுரை : ஆகஸ்ட் மாத சயன்ஸ் ரிப்போர்ட்டர் தலையங்கம்)