இஸ்ரோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்ரோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

''மங்கல்யான்'' - இந்தியாவிற்கு பெருமையளிக்கும் சாதனை...!

         
 
            ''மங்கல்யான்'' - இந்திய விண்களம் நேற்று முன் தினம் செவ்வாய் கிரகத்தை நெருங்கியது. செவ்வாயும் நாம் தொட்டுவிடும் தூரம் தான் என்பதை நமது விஞ்ஞானிகள் நிருபித்துக்காட்டியிருக்கிறார்கள். சிவப்பு கிரகத்தை வெற்றிகரமாக எட்டிப்பிடித்த நான்காது நாடாக இந்தியா பெருமையடைகிறது. இதற்கு முன்னர் சோவியத் யூனியன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகவாண்மை போன்ற நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேருகிறது. ஆனால் மேலே சொன்ன மூன்று நாடுகளுமே செவ்வாயை நோக்கிய தங்களது முதல் மற்றும் அடுத்தடுத்த பயணங்களில் தங்களது இலக்கை எட்டமுடியாமல் தோல்வியடைந்து தொடர் முயற்சிக்குப் பின்னரே வெற்றியடைந்தன. ஆனால் நமது நாடு மட்டுமே தனது முதல் முயற்சியிலேயே தனது இலக்கை சர்வசாதாரணமாக எட்டிப்பிடித்து சாதனைப்படைத்து விண்வெளி வரலாற்றில் முத்திரைப்படைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல நமக்கு முன்னரே ஜப்பான், சீனா போன்ற முன்னேறிய நாடுகளெல்லாம் செவ்வாயை நோக்கிய தங்களது முயற்சியில் இலக்கை அடையமுடியாமல் தொல்வியடைந்திருகின்றன என்பது நமக்கு மேலும் பெருமை சேர்க்கும் செய்தியாகும். 
                மேலும் இந்த மங்கல்யான் விண்கலத்தை வடிவமைத்து விண்ணில் செலுத்த, இஸ்ரோ நிறுவனம் செய்த செலவுகளை கணக்கிட்டால், மற்ற நாடுகள் இதற்காக செய்த செலவுகளை காட்டிலும் மிக மிக குறைவு என்பது மட்டுமல்ல. நம் நாட்டில் உத்திரபிரதேசத்தில் அன்றைய முதலமைச்சர் மாயாவதி தனக்காக சிலை செய்து வைத்த செலவை காட்டிலும், குஜராத் மாநிலத்தில் இன்றைய பிரதமர் நரேந்திரமோடியின் ''கனவு திட்டமான'' வல்லபாய் பட்டேல் சிலை வைக்க ஆகும் செலவை காட்டிலும்  மங்கல்யானுக்கு ஆன செலவு என்பது மிகவும் குறைவு  என்பதும் குறிப்பிடத்தக்கது. மங்கல்யான் பூமியிலிருந்து 68கோடி கிலோமீட்டர் தூரத்தில் உள்ள செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை சென்றடைய இஸ்ரோ செய்த செலவு ரூ.450 கோடி மட்டுமே. அனால் மாயாவதி சிலைக்கு ஆன செலவோ ரூ.685 கோடி என்பதும், பட்டேல் சிலைக்கு ஆகும் செலவோ ரூ.2600 கோடி என்பதும் கவனிக்கத்தக்கது.  
               உலகமே வியக்கும் வகையில் சிறப்புப்பெற்ற இந்த மாபெரும் வெற்றிக்குப்பின்னால் இஸ்ரோவில் பணிபுரியும் பல இந்திய விஞ்ஞானிகளின் அறிவும்,  ஆற்றலும், திறமையும், உழைப்பும் உள்ளன என்பதை யாராலும் மறுக்கமுடியாது. ஆண் மற்றும் பெண் விஞ்ஞானிகள் என இருபாலரும் இணைந்தே இந்த வெற்றிக்கு பாடுபட்டிருக்கின்றனர். ஆனால் ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் எப்போதும் போல் இஸ்ரோவின் இந்த வெற்றிக்குப் பின்னால் ஆண்கள் மட்டுமே இருப்பது போல் காட்டுகின்றன. வழக்கம் போல் இங்கேயும் பெண்களின் அறிவும், ஆற்றலும், திறமையும், உழைப்பும் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன என்பது தான் வருத்தமான விஷயமாக இருக்கின்றன. மங்கல்யான் வெற்றிக்குப் பின்னால் பல பெண்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரோவில் பணிபுரியும் மொத்தமுள்ள விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களில்  இருபது  சதவீதத்திற்கும் அதிகமானவர்கள்   பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே சுமார் 14,246 பெண்களின் பங்களிப்பும் மங்கல்யான் வெற்றியில் இருக்கிறது என்பதும்  நமக்கு மேலும் பெருமை சேர்க்கும் விஷயமாகும். மங்கல்யான் வெற்றிகரமாக செவ்வாயின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டவுடன் அந்த வெற்றிக்கு பங்களித்த அங்கே கூடியிருந்த பெண்களும் தங்களுக்குள் கைத்தட்டி, கைக்கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். அவர்களையும் இந்த நேரத்தில் நாம் நெஞ்சார பாராட்டவேண்டும்... வாழ்த்தவேண்டும்.

செவ்வாய், 7 ஜனவரி, 2014

ஜிஎஸ்எல்வி-டி5 - அறிவியலும் அரசியலும்...!

                      ''காற்றில் ஏறி விண்ணையும் சாடுவோம்'' என்ற மகாகவி பாரதியின் கனவுக்கேற்ப வான் வெளிப்பரப்பில் இந்தியத் திருநாடு தனது வெற்றிச்சாதனையை மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருக்கிறது. சந்திரயான், மங்கள்யான் என அடுத்தடுத்த சாதனைகளைத் தொடர்ந்து ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட்டை வெற்றிகரமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் ஏவியுள்ளனர். இதற்கு முன்பு ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்டுகளை மட்டுமே  இந்தியா வெற்றிகரமாக ஏவியிருந்த போதும், ஜிஎஸ்எல்வி-டி5 வெற்றியின் மூலம் புதியதொரு வரலாற்றை தேசபக்தி உள்ள இந்திய ''இஸ்ரோ'' விஞ்ஞானிகள் துவக்கியுள்ளனர்.            கிரையோஜெனிக் எந்திரத்தை இந்திய விஞ்ஞானிகள் தங்களது சொந்த உழைப்பு மற்றும் சொந்த தொழில்நுட்பத்தை இணைத்து இந்த ராக்கெட்டை ஏவியுள்ளனர். இதன் மூலம் கிரையோஜெனிக் தொழில் நுட்பத்தை பெற்றுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் மட்டுமே இந்தப் பட்டியலில் இதுவரை இடம்பெற்றிருந்தன. நமது விஞ்ஞானிகள் மேலும் மேலும் புதிய சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்பதே ஒட்டுமொத்த இந்திய மக்களின் விழைவாகும். இதில் அறிவியல் மட்டுமல்ல, அயல்துறை சார்ந்த அரசியலும் கலந்துள்ளது. கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா தொடர்ந்து மறுத்துவந்தது. நாம் சுயமாக விண்வெளித்துறையில் வளர்ந்துவிடக்கூடாது என்ற கெடுமதியே இதற்கு காரணம். ஆனால் அன்றைக்கு இருந்த சோவியத் யூனியன் இந்தியாவுக்கு கிரையோஜெனிக் எந்திரங்களையும் தொழில்நுட்பத்தையும் வழங்கியது.
           கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு தான் வழங்காதது மட்டுமல்ல, பிற நாடுகளும் வழங்கக்கூடாது என 1998ல் அமெரிக்கா தடைவிதித்தது. முந்தைய சோவியத்திடமிருந்து பெற்ற ஏழு கிரையோஜெனிக் எந்திரங்களைக் கொண்டே இதுவரை ராக்கெட்டுகள் ஏவப்பட்டு வந்தன. ஆனால் தற்போது இந்திய விஞ்ஞானிகள் சொந்த தொழில்நுட்ப அடிப்படையில் இந்த எந்திரத்தை உருவாக்கி, வெற்றிகரமாக செயற்கைக்கோளையும் சுமந்து சென்று புவிவட்டப்பாதையில் நிலை நிறுத்தச் செய்துள்ளனர். அண்மையில் பதவியிலிருந்து விடைபெறும் வகையில் பேட்டியளித்த பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்காவுடன் அணுசக்தி உடன்பாடு செய்துகொண்டதுதான் தமது பதவிக்காலத்தின் முக்கியமான தருணம் என்று உணர்ச்சி வசப்பட்டார்.
              ஆனால் இந்த உடன்பாடு என்பது அமெரிக்காவின் சதிவலையில் நம்முடைய நாட்டை சிக்கவைப்பதே ஆகும். விபத்துஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டை கூட அமெரிக்க முதலாளிகள் கொடுக்க இந்த உடன்பாடு வகைசெய்யவில்லை. மேலும் அணுசக்தி தொழில்நுட்பத்தையும் தரமாட்டார்களாம். ஆனால் காயலாங்கடைக்குப் போக வேண்டிய அணு உலைகளை மட்டும் நம்முடைய தலையில் கட்டுவார்களாம். சீறிப்பாய்ந்த ஜிஎஸ்எல்வி -டி5 சொல்லிச் செல்கிறது  இந்தியாவின் உண்மையான தோழன் யார் என்பதை...!
நன்றி :


வெள்ளி, 8 நவம்பர், 2013

மங்கள்யான் - செவ்வாயும் நமக்கு தொட்டுவிடும் தூரம் தான்....!

          
            இந்தியாவின் நீண்ட நாளைய கனவை நமது விஞ்ஞானிகள் நனவாக்கியிருக்கிறார்கள். நாம் முன்பு விண்ணைத் தொட்டோம். பின் நிலவைத் தொட்டோம். இப்போது செவ்வாயும் நமக்கு தொட்டுவிடும் தூரம் தான். விண்வெளி ஆராய்ச்சியில் ரஷியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுடன் போட்டிப்போடும் அளவிற்கு இந்தியாவும் வளர்ந்திருக்கிறது என்பதில் நமக்கெல்லாம் பெருமையளிக்கிறது.

             நேற்று முன் தினம் இந்தியா செவ்வாய் கிரகத்தை நோக்கி அனுப்பிய ''மங்கள்யான்'' செயற்கைக்கோள் என்பது இந்திய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல் என்றே சொல்லவேண்டும். இதற்காக பாடுபட்ட ''இஸ்ரோவில்'' பணிபுரியும்   நம் இந்திய விஞ்ஞானிகள் அனைவரையும் நெஞ்சாரப் பாராட்டவேண்டும். அவர்களின் கூரிய விஞ்ஞான அறிவையும், அயராத உழைப்பையும், திறம்பட்ட கூட்டுமுயற்சியையும் கண்டிப்பாக பாராட்டியாகவேண்டும்.
             இந்தியாவின் சொந்த முயற்சியால் செவ்வாய் கிரகத்திற்கு ''மங்கள்யான்'' செயற்கைக்கோளை உலக நாடுகள் அனைத்தும் வியந்துபோயின. உலக அரங்கில் இந்தியா உயர்ந்து நிற்க, உலகம் முழுதும் நம்மை அண்ணார்ந்து பார்க்கின்றனர். மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை அடைய இன்னும் பத்து மாதங்கள் ஆகும் என சொல்லப்படுகிறது. ஆனால் மங்கள்யான் செவ்வாயின் மேற்பரப்பில் இறங்கப்போவதில்லை என்றும்,  அதன் சுற்றுப்பாதையில் மிதந்தபடி செவ்வாய் கிரகத்தை பற்றி இதுவரை அறியப்படாத  தகவல்களை மங்கள்யான் சேகரித்து அனுப்பும் என்றும் சொல்லப்படுகிறது.
              மங்கள்யானுடன் லைமன் ஆல்பா போட்டோமீட்டர் உள்பட 5 உபகரணங்கள் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் ஒன்று மீத்தேன் வாயு இருப்பைக் கண்டறியும் என்றும், செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் இருப்பதைக் கண்டறிவதுதான் மங்கள்யானின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். மங்கள்யான் மீத்தேன் இருப்பை உறுதிசெய்தால், பின் அங்கு மனிதர்கள் வாழக்கூடிய சூழலையும் ஆய்வு செய்வதும் மங்கள்யான் திட்டத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.
           இந்த திட்டத்தில் இரண்டு கேள்விகள் நமக்கு எழுகின்றன.
           ஒன்று... செவ்வாய் கிரகத்திற்கு மங்கல்யானை அனுப்பியதால், தனிப்பட்டமுறையில் இந்திய மக்களுக்கு என்ன பயன் விளையும்....? என்ற மிகமுக்கியமான கேள்வி எழுகிறது. இஸ்ரோவின் தலைவர் ராதாகிருஷ்ணன்,  "இது ஒரு தேசியப் பெருமிதம்" என்று கருத்து சொல்கிறார். ஆனால் இன்னொரு பக்கம் அதன் முன்னாள் தலைவர்  ஜி.மாதவன் நாயர்,  "இந்தத் திட்டம் நாட்டுக்கு வீண் செலவு" என்று வேறுவிதமாக கருத்து சொல்கிறார். ஆனால் அந்த இரண்டு பேருடைய கருத்துக்களும் சரியானதே. ஏற்புடையதே.
            விண்வெளி ஆராய்ச்சிக்கு நம் நாடு செய்யும் செலவு என்பது மற்றைய நாடுகளோடு ஒப்பிட்டுப்பார்க்கும் போது மிக மிக குறைவே. எனவே ரூ.450 கோடி செலவு செய்து அனுப்பப்பட்ட மங்கள்யான் ஒரு தேசியப் பெருமிதம் தான். இந்திய விஞ்ஞானிகள் மெச்சத்தகுந்த அறிவியல் ஆற்றல் படைத்தவர்கள். இது போன்ற அறிவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சிகளை ஊக்குவித்தால் தான், நம் நாட்டிலிருக்கும் அறிவியல் ஆற்றல் படைத்த இளம் விஞ்ஞானிகள் வாய்ப்பை தேடி வேறு நாட்டிற்கு படைஎடுக்கமாட்டார்கள். என்றாலும், இந்தியா போன்ற வளரும் நாட்டின் இன்றைய சூழ்நிலையில் - தீர்க்கப்படாத மக்களின் பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் போது இந்த திட்டம் ஒரு வீண் செலவோ என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. இந்தியாவிலேயே அனைத்து மக்களுக்கும்  சுகாதாரமான குடிநீர் கிடைக்காமல், 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் உண்ண உணவில்லாமலும், தங்க இடமில்லாமலும், மின்சார வசதியில்லாமலும், கழிப்பறை வசதி இல்லாமலும் வாழமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கையில், செவ்வாயில் மனிதன் வாழமுடியுமா என்ற ஆராய்ச்சி நமக்கெல்லாம் நகைக்கும்படித்தான் இருக்கிறது. இந்தியாவிலேயே நிம்மதியா வாழமுடியலையாம். இதுல செவ்வாயில போயி என்னத்த வாழறது என்ற இரண்டாவது கேள்வியும் நமக்குள் எழுகிறது.

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

விண்வெளி அலைக்கற்றை ஊழல் - இந்த ஊழல் புகாரிலும் பிரதமர் சிக்கவில்லை...பலே...!


பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படவேண்டும்... 
             மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மற்றுமொரு மெகா ஊழல் பற்றி ஊடகங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. கடந்த ஒரு வாரமாக இது பற்றிய செய்திகள் தான் ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. 
                       இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் - இஸ்ரோ - வின்  வர்த்தகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் நிறுவனத்திற்கும், விண்வெளித்துறை தொடர்பான வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்திற்கும் இடையே கடந்த 2005ம் ஆண்டு நடந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. தனியார் நிறுவனமான தேவாஸ் மல்டிமீடியாவுடன் சாதாரண தொலைத் தொடர்பு அலைக்கற்றைகளை விட மிகவும் சக்திவாய்ந்த விண்வெளி அலைக்கற்றைகளை பகிர்ந்துகொள்வது தொடர்பான இந்த பேரத்தில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை விட மிகப்பெரிய அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் தனியார் நிறுவனமான தேவாஸ் மல்டிமீடியா 70 மெகா ஹெட்ஸ் சக்தி கொண்ட உயர்தரம் வாய்ந்த தொலைத்தொடர்பு அலைக் கற்றைகளை பயன்படுத்தும் உரிமங்களை பெற்றது என்றும், இதற்காகவே இரண்டு செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டுள்ளன  என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.  இதுதொடர்பாக வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, இந்த ஒப்பந்தத்தால் அரசுக்கு ரூ.2லட்சம் கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த  ஒப்பந்தம் கையெழுத்தான கால கட்டத்தில் இஸ்ரோ தலைவராக பணியாற்றிய விஞ்ஞானி மாதவன் நாயர் மற்றும் 3 விஞ்ஞானிகள் மீது குற்றம்சாட்டி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதையொட்டி அரசு தரப்பில் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்படி தான் செய்திகள் ஒருதலைப்பட்சமாகவே வருகின்றன. இந்த ஊழலில் இந்த குறிப்பிட்ட விஞ்ஞானிகள் மட்டுமா சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்பது தான் மக்களின் கேள்வியாக இருக்கிறது.
            ஏனென்றால், விண்வெளித்துறை பிரதமரின் கட்டுப்பாட்டிலேயே இயங்கும் துறையாகும். அவரது நேரடிப் பார்வையின் கீழ் இயங்கக்கூடிய இந்தத் துறையில் நடந்த ஊழலில் யார் யாருக்கு பங்கு உள்ளது என்பது குறித்து முழு உண்மைகள் இன்னமும் வெளிவரவில்லை என்பது தான் உண்மை.  இஸ்ரோவின் தற்போதைய தலைவர் ராதாகிருஷ்ணன், இந்த ஊழலுக்கு மாதவன் நாயர் மற்றும் 3 விஞ்ஞானிகள் மட்டுமே   காரணம் என்ற அடிப்படையில் இந்த வழக்கை முன்வைக்கிறார். ஆனால் தன் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்தக் குற்றச்சாட்டில் தன்னை சிக்க வைத்திருப்பதாக மாதவன் நாயர் மறுக்கிறார். விஞ்ஞானிகள் வட்டாரத்தைத் தாண்டி, இந்த ஊழலில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கம் - இடைத்தரகர்கள் என பலதரப்பினருக்கும் உள்ள தொடர்புகள் குறித்தும், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலைப் போலவே இந்த ஊழல் விவகாரத்திலும் அப்போதே பிரத மர் அலுவலகம் ஏன் தலையிடாமல் இருந்தது என்பது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது என பல தரப்பிலும் கருத்துக்கள் எழுந்துள்ளன. பிரதமர் அலுவலகத்தின்கீழ் நேரடி கண்காணிப்பில் செயல்படுகிற விண்வெளித்துறையில் நடந்துள்ள இந்த ஊழலுக்கு, 4 விஞ்ஞானிகளை மட்டும் பலிகடாவாக்கிவிட்டு ''முக்கியப்புள்ளிகளை''  தப்பிக்க  வைக்க  முயற்சி நடக்கிறதா என்ற சந்தேகமும் விஞ்ஞானிகள் வட்டாரத்திலும், பொது மக்கள் மத்தியிலும் பெருத்த சந்தேகம் எழுந்துள்ளது நியாயமானதே..
              இந்த விவகாரத்தில் அரசு வெளியிட்ட அறிக்கையை மட் டுமே வைத்துக்கொண்டு மூத்த விஞ்ஞானிகள் குற்றவாளிகள் என முடிவுக்கு வர முடியாது. விண்வெளி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் முழு உண்மையையும் வெளிக்கொண்டுவர சுயேட்சையான மற்றும் பாரபட்ச மற்ற விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என்பது தான் பொது மக்கள் மற்றும்  நடுநிலையாளர்களின்  எதிர்ப்பார்ப்புகளாகும்.

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

என்ன தான் அறிவியல் வளர்ந்தாலும் இன்னும் கடவுளை நம்பும் நம் நாட்டு விஞ்ஞானிகள் - நெஞ்சில் ஒரு நெருடல்

                 வழிபாடு என்பது ஒரு தனி மனிதன் சம்பந்தப்பட்டது தான்.. அது ஒரு தனி  மனிதனின் உரிமையும்  கூடத்தான்...
                 ஆனால் அண்மையில் நடந்த நிகழ்ச்சி... இஸ்ரோ - இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின்  சாதனையாக, நான்கு செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி - சி - 18  என்ற ராக்கெட்டை கடந்த 12 - ஆம் தேதி  இந்திய  விஞ்ஞானிகள் வெற்றிகரமான செலுத்தினார்கள். இந்த வெற்றிக்குப் பின்னால்  பல்வேறு விஞ்ஞானிகளும், அறிவியல் தொழில்நுட்ப வல்லுனர்களும், ஊழியர்களும், தொழிலாளர்களும்  இருக்கிறார்கள். அவர்களது கடுமையான உழைப்பும், சிந்தனையும், ஆராய்ச்சியும் அதில் நிரம்பிக் கிடக்கின்றன என்பது தான் உண்மை. 
             ஆனால், இஸ்ரோ - வின் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்த ராக்கெட் செலுத்துவதற்கு முதல் நாள், ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தவேண்டும் என்று வேண்டிக்கொள்ள  திருப்பதி சென்று வழிபாடு செய்தார் என்பதும், வெற்றிகரமாக செலுத்தப்பட்ட பின் நன்றி தெரிவித்து வழிபாடு செய்ய இன்று காலை திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டதும் பார்ப்பதற்கு நெஞ்சில் சற்று நெருடலாக தான் இருக்கிறது. 
             விஞ்ஞானமும், ஆராய்ச்சியும், கண்டுபிடிப்புகளும், அறிவியல் தொழில் நுட்பங்களும் எவ்வளவு தான் வளர்ந்தாலும், மக்களிடம் உள்ள கடவுள் நம்பிக்கையும், மூடபழக்கவழக்கங்களும் வளர்ந்துகொண்டு தான் இருக்கிறது. அறிவியல் வளர வளர, அதை விட வேகமாக இவைகள் வளர்கின்றன என்பது தான் வேதனைக்குரிய விஷயமாகும். இதில் விஞ்ஞானிகளும் விதிவிலக்கல்ல என்பது தான் இஸ்ரோ தலைவர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும்  டாக்டர் மாதவன் நாயர் போன்றோர் செய்யும் செயல்களை பார்க்கும் பொது தோன்றுகிறது.