மே தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மே தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 30 ஏப்ரல், 2014

மே தின புரட்சிப் பாரம்பரியத்தை உயர்த்திப்பிடிப்போம்....!

கட்டுரையாளர் : தோழர். ஏ.கே.பத்மநாபன்                
                                 அகில இந்திய தலைவர், இந்திய தொழிற்சங்க மையம்.             

            மே தினக்கொண்டாட்டங்கள் உலகம் முழுதும் தொழிலாளர் வர்க்கத்தினிடையே போராட்ட உணர்விலும், ஒருமைப்பாட்டிலும் புத்தெழுச்சியை ஏற்படுத்திடும். இந்த ஆண்டு, உலகம் முழுதும் மே தினத்தைக் கொண்டாடுகையில், இந்தியத் தொழிலாளி வர்க்கம் மிகவும் முக்கியமானதொரு அரசியல் போராட்டத்தினை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்திய நாடாளுமன்றத்தின் 16-ஆவது மக்களவைக்கான பொதுத் தேர்தல்களில் பாதி ஏற்கனவே முடிந்துவிட்டது. இவ்வாறு நடைபெற்றுக்கொண்டிருக்கும் தேர்தல் களத்திலும், இந்தியத் தொழிலாளி வர்க்கம், உலகின் பல பகுதிகளிலும் உழைக்கும் மக்களில் பெரும் பகுதியினரின் முக்கிய கோரிக்கைகளாகவுள்ள பல அம்சங்களை உயர்த்திப் பிடித்திருக்கின்றன.
           ஊதியங்கள், வேலைப் பாதுகாப்பு, விலைவாசி உயர்வு, வேலையின்மை, சமூகப்பாதுகாப்பு போன்ற கொள்கைகளுடன், உழைக்கும் மக்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப சங்கம் அமைக்கும் அடிப்படை உரிமை ஆகிய அனைத்தும் இன்றைய தினம் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தின் முக்கிய கோரிக்கைகளாக அமைந்துள்ளன. இவற்றிலிருந்து இந்தியத் தொழிலாளி வர்க்கமும் வேறுபடவில்லை. ஏனெனில் இவை அனைத்துமே நம் நாட்டில் கடந்த 23 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் நவீன தாராளமயக் கொள்கைகளுடன் பின்னிப் பிணைந்தவைகளாகும்.
           தங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகளுடன் நேரடியாகவும், நாட்டு மக்களில் பெரும்பான்மையானவர்களின் எதிர்காலத்துடனும் சம்பந்தப்பட்ட இப்பிரச்சனைகள் மீது உழைக்கும் மக்கள் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டியிருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்தியத் தொழிலாளி வர்க்கம் மேற்கொண்டுள்ள போராட்டம் என்பது கடந்த ஐந்தாண்டுகளாக அது நடத்திவரும் பிரம்மாண்டமான ஒன்றுபட்ட போராட்டத்தின் ஒரு பகுதியேயாகும். வரலாறு படைத்திட்ட நாடு தழுவிய பொது வேலைநிறுத்தங்கள் உட்பட ஒன்றுபட்ட இயக்கம் மற்றும் பல்வேறு துறையினர் நடத்திய வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் என்பவை அரசாங்கம் பின்பற்றி வரும் கொள்கைகளை மாற்றுவதற்கான அவசியத்தின்மீது கவனம் செலுத்தும் வகையில் நடைபெற்ற போராட்டத்தின் ஒரு பகுதியேயாகும். அந்தவிதத்தில் உலகின் பல பகுதிகளிலும் நடைபெறும் பிரம்மாண்டமான போராட்டங்களுடன் இந்தியத் தொழிலாளர் வர்க்கம் நடத்திய போராட்டங்களும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டவைகளேயாகும்.

நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் முதலாளித்துவ உலகம்                 

          கடந்த சில ஆண்டுகளாக முதலாளித்துவ உலகம் கடும் நெருக்கடிக்குள் சிக்கி வெளிவரமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதன் பாதிப்புகள் உலகம் முழுதும் உள்ள சாமானிய மக்களையும் கடுமையாகத் தாக்கியுள்ளன. ஐரோப்பாவில் நடைபெறும் போராட்டங்களும் மற்றும் உலகின் பல கண்டங்களிலும் நடைபெறும் போராட்டங்களும் இந்நெருக்கடியின் ஆழமான பாதிப்புகளுக்கு எதிரானவை களேயாகும்.
         ஐரோப்பாவில் வேலையில்லாத் திண்டாட்டம் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி இருக்கிறது. வேலையின்மை கிரிஸில் 27.4 சதவீதம், ஸ்பெயினில் 26.7 சதவீதம், போர்த்துக்கல்லில் 15.5 சதவீதம், பல்கேரியாவில் 12.9சதவீதம், இத்தாலியில் 12.7 சதவீதம்என அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் நிலைமை இன்னும் மோசம். உலகம் முழுதும் உள்ள நாடுகளில் வேலையில்லாதோர் பட்டாளத்தில் இவர்கள்தான் பெரும் பகுதியினராவார்கள். இவ்வாறு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருப்பதானது, வேலையிலிருப்போரின் ஊதியங்களிலும் மற்றும் அவர்களின் சமூகப்பாதுகாப்புப் பயன்களிலும் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது.
           இவ்வாறு நிகழும் என்றுதான் வரலாறும் நமக்குச் சொல்லித்தந்திருக்கிறது. ‘சிக்கன நடவடிக்கைகள்’ என்ற பெயரில் ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் உண்மையில் நெருக்கடியை மேலும் உக்கிரப்படுத்தி, உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களின் மீது மேலும் கடுமையான முறையில் தாக்குதல்களைத் தொடுத்துள்ளன. இதுநாள்வரையில் நவீன தாராளமயக் கொள்கைகளுக்குத் தத்துவார்த்தரீதியில் ஆதரவாக இருந்தவர்கள்கூட தற்போது ஆளும் வர்க்கத்தினரும், சர்வதேச நிதியம் மற்றும் ஐரோப்பிய சென்ட்ரல் வங்கி போன்றவற்றின் கட்டளைகளை ஏற்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். ஏப்ரல் 4 அன்று பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஐரோப்பா முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வந்து கலந்து கொண்டார்கள்.
          “மாற்று ஐரோப்பா சாத்தியமே’’, என்றும், “சிக்கன நடவடிக்கைகள் ஒழிக’’ என்றும் முழக்கமிட்டவண்ணம் அவர்கள் பேரணியாகச் சென்றுள்ளார்கள். ஐரோப்பிய ஒன்றிய ஆட்சியாளர்கள் வேலையின்மை, வறுமை மற்றும் சமத்துவமின்மையை ஒழித்திட முன்வரவேண்டும் என்று பேரணியில் வந்தோர் முழக்கமிட்டுள்ளார்கள்.துரதிர்ஷ்டவசமாக, உலகின் பல பகுதிகளில் அநீதிக்கு எதிராகவும், அதிகரித்துவரும் ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவும் தொழிலாளர்கள் நடத்திடும் இத்தகைய பிரம்மாண்டமான இயக்கங்கள், “வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் இயக்கத்தில்’’ நடந்ததைப் போலவே, அரசியல் திசை தெரியாமல், தொழிலாளர்கள் தங்கள் கோபத்தைக் காட்டுவதோடு அப்படியே அமிழ்ந்து போய்விடுகின்றன.

தொழிலாளி வர்க்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சவால்                   

             மே தினம் இப்பிரச்சனைகள் அனைத்தையும் வர்க்கக் கண்ணோட்டத்தில் பார்க்குமாறு நமக்குக் கட்டளையிடுகிறது. முதலாளித்துவம் உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டிக் கொழுப்பதன் மூலமே நீடித்திருக்க முடியும். இப்போது நாம் எதிர்கொள்ளும் அனைத்துவிதமான நெருக்கடிகளும் இந்த முதலாளித்துவ அமைப்பு உருவாக்கியவைகளேயாகும். எனவே இந்த அமைப்புமுறையையே எதிர்த்திட வேண்டும். தொழிலாளி வர்க்கம் மற்றும் இதர உழைக்கும் பிரிவினர் அனைவரும் அன்றாடம் அவர்கள் மேற்கொள்ளும் ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களுடன் நன்கு இணைக்கப்பட வேண்டும்.
          ஆளும் வர்க்கங்களின் கொள்கைகளுக்குப் பின்னே இருக்கின்ற அரசியலையும் தோலுரித்துக் காட்டிடவேண்டும். இவை அனைத்தும் நம்முன் உள்ள மிக முக்கிய அம்சங்களாகும். முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டம் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று மே தின எழுச்சி கோருகிறது. இன்றைய உலகில் அல்லது இது தொடர்பாக நம் நாட்டிலும் நம் நடவடிக்கைகள் ஆட்சியாளர்களின் பொருளாதார, அரசியல் மற்றும் தத்துவார்த்தக் கொள்கைகளுக்கு எதிராக உக்கிரப்படுத்தப்பட வேண்டியிருக்கிறது. நவீன தாராளமயக் கொள்கைகளின் தாக்குதல் நம் சமுதாயத்தின் சமூக வலைப்பின்னலையே அரித்து அழித்துக் கொண்டிருப்பதை ஆழமாக ஆய்வு செய்து அதற்கு எதிராகச் செயல்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம். நாட்டில் 45 கோடிக்கும் மேலான உழைக்கும் மக்கள் இருக்கிறார்கள். இவர்களில் மிகவும் குறைந்த அளவிலானவர்களே வெகுஜன ஸ்தாபனங்களில் அணிதிரட்டப்பட்டிருக்கிறார்கள்.
          எனவே நம்முன் உள்ள பிரதான கடமை, நம் நாட்டில் தொழிற்சங்க இயக்கத்தை வலுப்படுத்த வேண்டியதாகும். மேலும் தொழிற்சங்க இயக்கம் நாட்டுப்புற விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் பிரச்சனைகளையும் தங்கள் பிரச்சனைகளாகக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் நாட்டின் உழைப்பாளர் பட்டாளத்தில் அவர்கள் பெரும் எண்ணிக்கையிலானவர்களாகும். அவர்கள் மிகவும் கருணையற்ற முறையில் சூறையாடப் பட்டுவருகிறார்கள். அதன் விளைவாக நாட்டில் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலைப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ள அவலநிலை தொடர்கிறது. உழைக்கும் மக்கள் மத்தியிலே இன்றளவும் நீடிக்கும் நிலப்பிரபுத்துவ மற்றும் சீர்திருத்த சிந்தனைகள் நம்முன் உள்ள மற்றுமொரு மாபெரும் சவாலாகும். இது நம் பணியை மிகவும் சிக்கலானதாக ஆக்கியிருக்கிறது. தொழிற்சங்கங்களை வர்க்கக் கண்ணோட்டத்தில் வலுப்படுத்த வேண்டியதும், உழைக்கும் மக்கள் மத்தியில் விஞ்ஞான சோசலிசப் புரிந்துணர்வைப் பரப்புவதும் மிகவும் அவசியமாகும்.இவற்றுடன், நம் நாட்டிற்கென்று பிரத்யேகமான சில பிரச்சனைகள் இருக்கின்றன.
           இவற்றையும் நம் பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களின் போது கையில் எடுப்பதுடன், இவற்றின்மீது ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்களையும் அதன் தலையீடுகளையும் கவனத்தில் கொள்வதும் மிகவும் முக்கியமாகும். இந்த ஆண்டு முதல் உலகப்போர் ஆரம்பித்த நூறாவது ஆண்டாகும். உலகில் 20-ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் உலகம் மற்றொரு உலக யுத்தத்தை எதிர்கொண்டு அதன் விளைவாக எண்ணற்றவர்கள் பலியானதும், அவர்களின் உடைமைகளுக்கு அபரிமிதமான இழப்பு ஏற்பட்டபோதிலும், யுத்த முஸ்தீபு மேற்கொள்ளப்படுவதற்கு இன்னமும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வில்லை. ஏகாதிபத்திய நாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல நாடுகளைத் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் அடிமைப்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. சிரியா, வெனிசுலா, பாலஸ்தீனம், கியூபா போன்ற நாடுகளில் ஏகாதிபத்திய சக்திகளின் சதிகளுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் மேற்கொண்டுவரும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக நாமும் நம் எதிர்ப்புக் குரலினை எழுப்பிட வேண்டும்.
           ஏகாதிபத்தியவாதிகளின் தாக்குதல்களால் லிபியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானம் பலியாகி இருப்பதையும் நாம் பார்த்து வருகிறோம். மே தினம் என்பது நம்முன் உள்ள பணிகளை நினைவுகூர்வதற்கான வாய்ப்பாகும். சிஐடியு-வின் நிறுவனத் தலைவரான தோழர்.பி.டி. ரணதிவே, மே தினத்தின் புரட்சிப் பாரம்பரியங்களை நினைவுகூர்ந்து நமக்குக் கூறியிருப்பதாவது:  “மே தினத்தின் புரட்சிப் பாரம்பரியம் என்பது எப்போதும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கே முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்றும், தொழிலாளி வர்க்கம் அரசியலதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்'' என்றும் சபதம் ஏற்பதுடன் ''நம் பகுதி கோரிக்கைகள் தொழிலாளி வர்க்கத்தின் சர்வதேச ஒருமைப்பாட்டுடன் இணைக்க வேண்டும்'' என்பதாகும்.
           இந்த மாபெரும் பாரம்பரியத்தை உயர்த்திப்பிடித்து, இந்தியாவில் இன்றைய தினம் தொழிலாளி வர்க்கம் சமூக விடுதலை மற்றும் சோசலிசத்திற்கான குறிக்கோளை முன்னெடுத்துச் செல்லக்கூடிய விதத்தில், பாட்டாளி வர்க்க சர்வதேசியத்துடன் பகுதி கோரிக்கைகளுக்கான போராட்டத்தையும் இணைத்திடக்கூடிய வகையில் சபதம் ஏற்போம்.     
            வர்க்கப் போராட்டத்தின் வீரர்கள் மற்றும் எண்ணற்ற தியாகிகளின் மாபெரும் தியாகம் ஆகியவற்றை நெஞ்சில் ஏந்தி, போராட்டப் பதாகையை உயர்த்திப்பிடித்து, முன்னேறுவோம்.
           வாழ்க மேதினம்...! தொழிலாளி வர்க்க ஒற்றுமை ஓங்குக...! புரட்சி ஓங்குக....!

தமிழில் : ச.வீரமணி

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

பன்முகப் போராளி சிங்காரவேலர்...!

   
கட்டுரையாளர் : தோழர். பி.சம்பத்        
                                மத்தியக்குழு உறுப்பினர்,           
                                மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி               
              'சிந்தனைச் சிற்பி' என அனைவராலும் மரியாதையுடன் அழைக்கப்பட்ட சிங்காரவேலர் ஒரு பன்முகப் போராளியாவார். 1860-ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ஆம் நாள் மிகவும் பிற்படுத்தப்பட்ட மீனவர் குடும்பத்தில் பிறந்த சிங்காரவேலர் இந்திய விடுதலைப் போராட்டம், பொதுவுடமை இயக்கம், தொழிற்சங்க இயக்கம், சமூக சீர்திருத்த இயக்கம், எழுத்தாளர் என பல துறைகளிலும் வலுவான முத்திரை பதித்தவர். பல்வேறு போராட்டங்களில் முனைப்புடன் பங்கேற்ற சிங்காரவேலர் ஆர்வம் மிக்க ஒரு படிப்பாளியாகவும் திகழ்ந்தார். அரசியல், பொருளாதாரம், சமூகம், விஞ்ஞானம் என ஏராளமான நூல்களை அவர் கற்றறிந்துள்ளார். அவரைச் சந்திக்க வருபவர்களிடம் “நேற்று என்ன புத்தகம் படித்தாய்” என அவர் கேட்பது வழக்கம் என நினைவு கூர்கிறார் குத்தூசி குருசாமி. 1946-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் நாள் தனது 86-ஆம் வயதில் மரணமடைந்த சிங்காரவேலர் இறுதி மூச்சுவரை போராட்டம் மிக்க தனது பொது வாழ்க்கையை தொடர்ந்தார். துவக்க காலத்தில் பௌத்த மதக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட சிங்காரவேலர் பின்னர் இடதுசாரி கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு ஒரு பொதுவுடமைவாதியாக மாறினார். கான்பூரில் 1925-ஆம் ஆண்டு நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாட்டிற்கு அவர் தலைமை தாங்கினார். பின்னர் கான்பூர் சதி வழக்கில் அவர் ஒரு குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். 1922-ஆம் ஆண்டு கயாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் பங்கேற்ற சிங்காரவேலர் தன்னை “உலகப் பொதுவுடமை இயக்கத்தின் பிரதிநிதி” என அறிமுகப்படுத்திக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

காந்தியின் மீது பற்றும் முரண்பாடும்           

          காந்தியின் மீது துவக்க காலத்தில் மிகப் பெரிய மரியாதையை வைத்திருந்தவர் சிங்காரவேலர். விடுதலை பெற்ற இந்தியா எவ்வாறு இருக்க வேண்டும் என அவருக்கு பல பகிரங்கக் கடிதங்கள் எழுதினார். அவ்வாறு எழுதப்பட்ட ஒரு கடிதத்தில் “நம்முடைய துரதிருஷ்ட மக்கள் தற்போதைய அந்நியர் சுரண்டலிலிருந்தும் எதிர் காலத்தில் நம்மவர் சுரண்டலிலிருந்தும் விடுபடாத வரை அவர்களுக்கு சுதந்திரம் என்பதோ மகிழ்வு என்பதோ கிடையாது என நான் நம்புகிறேன். ஆதலால் தான், பொதுவுடமை தான் நிலங்களையும் தொழிற்சாலைகளையும் பொது நன்மைக்காகவும் தொழிலாளர்களின் நன்மைக்காகவும் தன்னகத்தே கொண்டுள்ளது எனவும் நம்புகிறேன். இந்தப் பொதுவுடமை சுபிட்சத்தையும் சுதந்திரத்தையும் நல்கும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.... ஒவ்வொரு குடிமகனும் தனக்கென்று கொஞ்சம் நிலத்திற்கு சொந்தக்காரனாக இருக்க வேண்டும். அவனவன் சொந்த நிலத்தில் அவனவனே பாடுபட்டு பயிரிட வேண்டும். மேலும் ஒவ்வொரு குடிமகனும் தனக்கென்று சொந்தமான நல்லதொரு குடிசையில் வாடகையின்றி நலமுடன் வாழ வேண்டும். இந்த உறுதிமொழியை வழங்காதவரை எந்தவித சுயராஜ்யமும் சிறந்ததாக நான் நிச்சயம் கருதமாட்டேன்” என எழுதினார். இவ்வாறு காந்தியிடம் மிகவும் எதிர்பார்த்ததற்கு மாறாக அவரது பேச்சும் நடவடிக்கையும் அமைந்ததைப் பார்த்த சிங்காரவேலர் பிற்காலத்தில் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்தார்.

பொதுவுடமை போராளியாக...           

              பொதுவுடமை இயக்கச் சித்தாந்தத்தில் அவருக்கு இருந்த ஈடுபாடும் உறுதியும் ஆழமானது. மாமேதை லெனின் மரணமடைந்தபோது அவர் வெளியிட்ட உணர்ச்சிமிக்க இரங்கல் செய்தியிலும் இதனை வெளிப்படுத்தினார். அதன் ஒரு பகுதி வருமாறு. “தம் சொந்தநாட்டில் நிக்கோலாய் லெனின் அரசியல், சிந்தனை, தத்துவம் ஆகிய துறைகளில் ஏற்படுத்திய மிகப்பெரும் புரட்சி அழிக்கப்படலாம். ஒரு கால் மக்கள் சிலரின் தன்னலப்போக்கினால் ஒதுக்கி தள்ளப்படலாம். ஆனால் அது மீண்டும் உயிர் பெற்று எழுந்து இறுதியாக உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் வாழ்க்கையை மிகச் சிறப்புள்ளதாகவும், இன்பம் உள்ளதாகவும் ஆக்கும். ஏராளமானவற்றை செய்துள்ள அவருக்கு ஒவ்வொரு மனிதனும் மற்ற மனிதர்களைப் போலவே உழைக்கவும், வாழவும் உரிமை உண்டு என்ற தெளிவான தோற்றத்தை தொழிலாளிக்கு தந்த அவருக்கு, நம் அன்பையும் நன்றி உணர்வுடனான வணக்கத்தையும் காட்டுகிற முறையில் எங்கள் கரங்களை உயர்த்துகிறோம்”. பிற்காலத்தில் சோவியத் யூனியன் சுயநல சக்திகளாலும் ஏகாதிபத்திய சக்திகளாலும் சிதறுண்டதையும் சோசலிசம் பின்னடைவைச் சந்தித்ததையும் நாம் அறிவோம். ஆயினும் பின்னாளில் நடக்க இருப்பது குறித்து எவ்வளவு தீர்க்க தரிசனமாக 1924-ஆம் ஆண்டே சிங்காரவேலர் வெளிப்படுத்தினார் என்பது வியக்கத்தக்கதாகும்.
             நாடாளுமன்ற நடவடிக்கைகளில் கம்யூனிஸ்டுகள் பங்கேற்பது புரட்சிகரமானதல்ல என வாதிடுவோருக்கு 1930-களில் அவர் கீழ்க்கண்டவாறு பதிலளிக்கிறார். “சமதர்ம ஞானத்தை பொதுமேடையிலிருந்து தெரிவிப்பதுடன் சட்டசபைகளிலும் மற்ற பல தேசிய ஸ்தாபனங்களிலும் நுழைந்து பொதுமக்களிடம் நெருங்க வேண்டும். சட்ட சபைகளால் மட்டும் சமதர்மத்தை நாட்டில் ஸ்தாபிக்க முடியாது. ஆனால் அவ்விடத்தில் செய்யும் பிரச்சாரம் பல கோடி மக்களுக்கு முழுமையாக எட்டும்”. இந்தியாவில் முதல் தொழிற்சங்க இயக்கத்தை உருவாக்கிய பெருமை 1905-ஆம் ஆண்டில் ஹார்வி மில் தொழிலாளர்களுக்கான சங்கத்தை உருவாக்கிய வ.உ.சி-க்கு உண்டு. ஆனால் இந்தியாவில் 1918-ஆம் ஆண்டு வாக்கில் ஒரு இடதுசாரி தொழிற்சங்க இயக்கத்தை உருவாக்கிய பெருமை சிங்காரவேலருக்கே உண்டு. தென் இந்திய ரயில்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை தலைமையேற்று நடத்திய காரணத்திற்காக சிங்காரவேலர் கைது செய்யப்பட்டு 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றார். ஆயினும் தண்டனை முடியும் முன்பே அவர் விடுதலை செய்யப்பட்டார்.

பெரியாருடன் நட்பும் - முரண்பாடும்                     

               மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், சமூக சீர்திருத்த கருத்துகளுக்காகவும் தீவிரமாகச் செயல்பட்டவர் சிங்காரவேலர். பெரியாருடன் நட்புக் கொண்டிருந்த சிங்காரவேலர் அவரை சமதர்மக் கருத்துக்களை ஏற்க வைத்தார். இதனையொட்டித்தான் பெரியார் 1931-32-ஆம் ஆண்டுகளில் சோவியத் யூனியன் பயணம் மேற்கொண்டார். அங்கிருந்து திரும்பிய பிறகு பொதுமேடைகளில் தீவிரமாக சுயமரியாதை கருத்துக்களுடன் சமதர்மக் கருத்துக்களையும் சேர்த்து பிரச்சாரம் செய்தார். ஈரோட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க மாநாட்டை “சுயமரியாதை சமதர்ம இயக்கமாநாடாக” நடத்திய பெரியார் அதில் சிங்காரவேலரையும் பங்கேற்க வைத்தார். பெரியார் நடத்திய சமதர்ம பிரச்சாரம் கண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அச்சமடைந்தது. சுயமரியாதை இயக்கத்தில் இடம்பெற்ற கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களும் அச்சமடைந்தனர். நிர்ப்பந்தம் காரணமாக பெரியார் பிற்காலத்தில் சமதர்ம பிரச்சாரத்தை கைவிட்டு சுயமரியாதை இயக்கத்தில் மட்டும் கவனம் செலுத்தினார். இதனால் அதிருப்தியடைந்த சிங்காரவேலர், ஜீவா போன்றவர்கள் சுயமரியாதை இயக்கத்துடனான தங்கள் தொடர்பை முறித்துக் கொண்டனர். பெரியாரிடம் ஏற்பட்ட மாற்றத்திற்காக சிங்காரவேலர் பிற்காலத்தில் அவரை விமர்சனம் செய்தும் பிரச்சாரம் செய்தார். 

சமூக சீர்திருத்தத்தில் தனிக் கவனம்                

               எனினும் தன்வாழ்நாள் முழுவதும் பொதுவுடமை இயக்க கருத்துக்களோடு சமூக சீர்திருத்த கருத்துக்களிலும் தனிக் கவனம் செலுத்தி பிரச்சாரம் செய்தார் சிங்காரவேலர். இது குறித்து அவர் குறிப்பிட்டிருப்பதாவது. “நமது நாட்டில் மூன்று முக்கியமான தீமைகள் பரவியுள்ளதைக் காணலாம். அவையாவன: மதபேதம், ஜாதிபேதம், பொருளாதார பேதம். மற்ற தேசங்களில் பொருளாதார பேதம் ஒன்றே காணப்படும். இந்திய தேசத்தில் மாத்திரம் இம்மூன்றும் நிலைபெற்றுள்ளது. ஆதலின் இந்திய தேசத்தில் பொருளாதார வித்தியாசத்தை ஒழிப்பதோடு சாதி, மத வித்தியாசங்கள் ஒழிக்கப்பட வேண்டியது மிக அவசியமாகும். சிலர் பொருளாதார பேதம் ஒழிந்தால் மத பேதமும், சாதிபேதமும் தானாகஒழிந்து விடும் என்கிறார்கள்.
            ஆனால் இதுமாத்திரம் போதாதென்று தோன்றுகிறது. ஏனெனில் நமது தேசம் மற்ற தேசங்களை விட விசித்திரமானதோர் தேசமாகும். எங்குமில்லாத சமூக வித்தியாசங்கள் இங்கு தோன்றியுள்ளன”. வர்க்க ஒடுக்குமுறைக்கும் சமூக ஒடுக்குமுறைக்கும் எதிராக ஏக காலத்தில் போராட வேண்டுமென 1930களில் அவர் கூறியது இன்றளவும் பொருந்தக் கூடிய ஒன்றாகும்.தாழ்த்தப்பட்ட மக்கள் சமூக ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலை பெற அவர்கள் மென்மேலும் விழிப்புணர்வு பெற வேண்டுமென வலியுறுத்தினார் சிங்காரவேலர். இது குறித்து அவர் கூறுவதாவது. “நமது தாழ்த்தப்பட்ட மக்களின் நிலைமை அபிவிருத்தியடைய வேண்டுமானால் பஞ்சமர், பறையர் என தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியல்துறையில் இறங்கி தங்கள் சமத்துவத்தைப் பெற தாங்களே முயற்சி செய்ய வேண்டும். தாழ்த்தப்பட்ட வம்சத்தில் உதித்த இரண்டொரு முதலாளிகளால் தங்களுக்கு எதுவும் கூடி வரப்போவதில்லை. சமதர்ம ஆட்சி வரும் வரை தாழ்த்தப்பட்ட சிறுபான்மையினர் தங்கள் உரிமைகளை தாங்களே பெற வேண்டும். தீண்டாமை ஒழிக என்ற மந்திர உபதேசம் செய்வதால் 7 கோடி மக்களின் தரித்திரம் ஒழியும் என்பது வஞ்சனையே ஆகும்”.

முன்னெடுத்துச் செல்வோம்....                

            இவ்வாறு பொதுவாழ்வின் பல்வேறு தடங்களில் ஆழமான முத்திரை பதித்தவர் சிங்காரவேலர். எனினும் அவர் நடத்திய போராட்டங்கள், வெளியிட்ட கருத்துக்கள், செய்த பணிகளுக்கு ஏற்ப போதுமான அளவில் அவர் நினைவு கூரப்படவில்லை என்ற நியாயமான ஆதங்கம் பலருக்கும் உள்ளது. அதில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய கடமை இன்றைய தலைமுறைக்கு உண்டு. இடதுசாரி இயக்கம் இன்று அரசியல், சித்தாந்த, சமூக ரீதியான பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது. இந்த சவால்களை எதிர்கொள்ளும் திராணியும், உறுதிப்பாடும் அதன் கோட்பாடுகளுக்குள்ளேயே உண்டு. சிங்காரவேலரின் பல்வேறு பங்களிப்புகளை நினைவுகூர்வது மட்டுமல்ல முன்னெடுத்துச் செல்வது இடதுசாரி இயக்க வளர்ச்சிக்கு பெரிதும் உரமூட்டும்.        
நன்றி :