அதிமுக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அதிமுக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 பிப்ரவரி, 2016

மக்களை மறக்கடிக்கும் வேலையில் திமுகவும் அதிமுகவும்....!


      கடந்த இரண்டு நாட்களாக செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும், வலைத்தளங்களிளும்  திமுகவும் அதிமுகவும் மாறிமாறி ''முதலமைச்சரை அங்க பார்த்திருப்பீங்க... இங்க பார்த்திருப்பீங்க...'' - ன்னு திமுகவும், பதிலுக்கு ''திமுக தலைவரை அங்க பார்த்திருப்பீங்க... இங்க பார்த்திருப்பீங்க...'' - அதிமுகவும் லாவணி பண்ணிக்கொண்டு திரிவதைப் பார்த்திருப்பீர்கள். 
         இதில என்ன விசேஷம் என்றால்.... இவிங்க ரெண்டு பேருமே ரொம்ப சர்வ ஜாக்கிரதையா அவரவர்கள்  செய்த ஊழல்களை மட்டும் சொல்லி லாவணி பண்ணவில்லை. அதில இரண்டு  பேருமே திரை மறைவில் ஒற்றுமையை கடைபிடித்திருக்கிறார்கள். கருணாநிதியும், ஜெயலலிதாவும் மிகப்பெரிய ஊழல் பேர்வழிகள் என்று உலகத்திற்கே நன்றாக தெரியும். பிறந்த குழந்தையை கேட்டால் கூட சரியா சொல்லும். அப்படிப்பட்ட உண்மையை சொல்லி இருவருமே குற்றம் சாட்டிக்கொள்ளவில்லை என்பது திரைமறைவு உண்மை. 
           நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் திமுகவிற்கும், அதிமுகவிற்கும் - கருணாநிதிக்கும், ஜெயலலிதாவிற்கும் இரகசிய ஒப்பந்தம் இருக்கிறது என்பதும், இரகசிய கூட்டணி இருக்கிறது என்பதும் உண்மை. 
         ஊழலை ஒழிப்போம்... நல்லாட்சித் தருவோம்... என்ற முழக்கமிட்டு உதயமான மக்கள் நலக் கூட்டணி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று முன்னேறிச் சென்றுக்கொண்டிருக்கிற சூழ்நிலையில், வழக்கம் போல் தாங்கள் இருவர் மட்டுமே களத்தில் இருப்பதைப் போன்ற கருத்தாக்கத்தை மக்களின் புத்தியில் திணிப்பதற்காகவும், தங்கள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை மக்கள் மறந்துவிடுவதற்காகவும் திமுகவும் அதிமுகவும் திட்டமிட்டு யோக்கியர்களைப் போன்று இதுபோன்ற விளம்பரங்களை போட்டிப்போட்டுக்கொண்டு வெளியிடுகின்றன என்பது தான் உண்மை. 
         மக்கள் தான் புரிந்துகொண்ட இவர்களை விரட்டியடிக்கவேண்டும். 

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

தமிழகத்தில் முதல்முறையாக ஒப்பாரி வைத்து அமைச்சர்கள் பதவியேற்பு...!

              சென்ற சனிக்கிழமையன்று ''வருமானத்திற்கு அதிகமான சொத்துக்குவிப்பு'' வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை குற்றவாளி என்று அறிவித்து நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.100கோடி அபராதம் வழங்கி தீர்ப்பளித்து அன்றைய தினமே சிறைக்குள் தள்ளியது. ஜெயலலிதா சிறைக்கு சென்றது எதற்காக என்று அவரது அமைச்சர்களும், கட்சிக்காரர்களும் யோசிக்கவே இல்லை. என்ன ஆர்ப்பாட்டம்...? தமிழ்நாட்டையே கதிகலங்க வெச்சிட்டாங்க. பொது சொத்தான பஸ்களை எரிக்கிறது. திறந்திருக்கும் கடைகளை அடித்து நொறுக்கிறது. தனியார் வாகனங்களை தீயிட்டு கொளுத்துவது. சேதப்படுத்துவது. ஜெயலலிதாவின் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகள் என்னா.. அட்டகாசம் பண்றாங்க. பொது மக்கள் இவர்களுக்கு எதிராக திரும்பினால் என்னாகும். ஜெயலலிதா என்ன சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்றாரா...? அல்லது மக்கள் பிரச்சனைகளுக்காக போராடி சிறைக்கு சென்றாரா...? இல்லையே அரசு பதவியை தவறாக பயன்படுத்தி பொதுமக்களின் சொத்துக்களை அல்லவா கொள்ளையடித்து சிறைக்கு சென்றுக்கிறார். இதில் ஏன் உடன்பிறப்புகள் ஆத்திரப்படவேண்டும்... கோபப்படவேண்டும்...? இந்த கோபத்திலும், ஆத்திரத்திலும் கொஞ்சம் கூட நியாயமில்லையே. இதன் மூலம் மக்களிடம் அனுதாபத்தை பெற்றுவிடலாமென்று தப்புக்கணக்கு போடுகிறார்கள்.  அதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் அவர்களே ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு வாயசைத்திருக்கிறாரே. ''ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்'' - இந்தப்பாடல் கருணாநிதிக்கு மட்டுமல்ல. ஜெயலலிதாவிற்கு கூட பொருந்தும் தானே. ஒரு தவறை மறைப்பதற்கு இன்னொரு தவறு தீர்வாகாது என்பதை மறந்து விட்டு செய்கிறீர்கள். 
              தீர்ப்பின் காரணமாக ஜெயலலிதாவின் முதலமைச்சர் பதவி பறிபோனப் பிறகு, நேற்று அவரின் விசுவாசி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 30 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்றது. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதா இல்லாத மூன்றாவது அதிமுக அமைச்சரவை இது. இந்த பதவியேற்பு விழா முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வித்தியாசமாக நடைபெற்றது. கவர்னர் மாளிகையை ஒரு இழவு வீடாகவே மாற்றிவிட்டார்கள் அதிமுகவினர். தங்கள் தலைவி சிறையலடைக்கப்பட்டு செக்கிழுத்துக் கொண்டிருக்கும் வேளையில் நமக்கு அமைச்சர் பதவி ஒரு கேடா என்பது போல்,  பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் பொறுப்பேற்ற பன்னீர்செல்வம் முதல் எல்லோருமே பதவியேற்கும் போது  ஒப்பாரி வெச்சி அழுதாங்க. இப்படி அழுவதன் மூலம் ஜெயலலிதாவிடம் தங்களின் விசுவாசத்தை காட்டுவதற்கும், தமிழக மக்களிடம் அனுதாப அலையை உயர்த்துவதற்கும் பெரும்  முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்கள் நினைத்தது போல் அந்த நிகழ்ச்சி அனுதாபத்தை உயர்த்தவில்லை. மாறாக எரிச்சலை தான் உண்டுபண்ணியது. அதை தொலைக்காட்சி நிகழ்ச்சி என்று நினைத்துக்கொண்டார்கள். தொலைக்காட்சியில் அழுதால் தான் அதன் ''ரேட்டிங் பாய்ன்ட்'' உயரும். அதே மாதிரி இங்கும் அழுவதால் என்ன பயன்...? ஜெயலலிதாவிற்கு கிடைத்த தண்டனையிலிருந்து எதிர் காலத்தில் தவறு செய்யாமல் ஆட்சி செய்யவேண்டும் என்ற  பாடத்தை  கற்றுக்கொள்ளுங்கள். மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுங்கள். இது தான் இன்றைய தேவை என்பதை மனதில் வைத்து ஆட்சி செய்யுங்கள். மக்களும் அதை தான் உங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கிறார்கள்.

சனி, 19 ஏப்ரல், 2014

தில்லி கோட்டைக்குச் சென்று திமுகவும், அதிமுகவும் இதுவரை செய்தது தான் என்ன?



  கட்டுரையாளர் : தோழர். டி. கே. ரங்கராஜன், எம்.பி                
           தமிழகத்தில் ஆளுங்கட்சியான அதிமுகவும், எதிர்கட்சியான திமுகவும் நடத்தும் தேர்தல் பிரச்சாரத்தைக் கவனித்தால், நடப்பது நாடாளுமன்றத்தேர்தலா அல்லது சட்டமன்றத்தேர்தலா....? என்ற சந்தேகம் தான் வருகிறது. இரண்டு கட்சிகளும், பரஸ்பரம் சொத்துப்பட்டியலையும், ஊழல் பட்டியலையும் மக்கள் முன்னால் வைத்து, திகில் உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன. திமுகவைப் பொறுத்தவரை, காங்கிரஸ், பாஜகவை விட- வேறெந்த மாநிலக் கட்சியையும் விட, கூடுதலான காலம் மத்திய அமைச்சரவையில் இருந்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மூன்று தவணைகளாக 6 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இரண்டு தவணையாக 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. இதில், இரண்டு கூட்டணியிலும் மாறி, மாறி திமுக மட்டும் 14 ஆண்டுகாலம் மத்திய அமைச்சரவையில், ''வலுவான- வளமான'' இலாகாக்களைப் பெற்று, ஆட்சியில் இருந்துள்ளது.
          அதிமுக, பாஜக கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டவுடன், “அண்ணன் எப்போது சாவான்; திண்ணை எப்போது காலியாகும்?” என்று காத்திருந்த திமுக, ஓடோடிச் சென்று, அந்த ஆட்சியில் ஒட்டிக் கொண்டது. திமுக இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது என்று மறைந்த காங்கிரஸ் தலைவர் சி.சுப்பிரமணியம் சொன்னதாக கலைஞர் தன்னுடைய நிலையை நியாயப்படுத்தினார். இக்கட்டான நிலை வரும்போதெல்லாம், இறந்துபோன தலைவர்களை மேற்கோள் காட்டுவது, கலைஞருக்கு வாடிக்கை. “இந்தியா ஒளிர்கிறது” என்று கூறிய பாஜக கூட்டணி ஆட்சி மங்கிப்போனது. உடனே அணி மாறிய திமுக, காங்கிரஸ் கூட்டணி அரசில் சேர்ந்தது. காங்கிரசின் “பி” டீமாகவே, திமுக இருந்தது. எல்லா பருவநிலைகளுக்கும் ஒத்துப்போகும் ஒரு கட்சி, இந்தியாவில் உண்டென்றால், அது திமுகதான். எங்கு சேர்ந்தாலும், அதற்கான வியாக்யானங்களை, விளக்கங்களைத் தருவதில் அவர்களை மிஞ்ச முடியாது. பதினான்கு ஆண்டுகாலம் மத்திய ஆட்சிப் பொறுப்பில் தொடர்ந்து பதவி வகித்த திமுக, தமிழகத்திற்கு செய்தது என்ன...? “வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது” என்று ஒரு காலத்தில் குரல் கொடுத்தவர்கள், டாடா, பிர்லா, அம்பானிகளின் சேவகர்களாக மாறிப் போனார்கள்.
             “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்“ என்றார் அண்ணா. இவர்களோ, அம்பானியின் சிரிப்பில் அண்ணாவையே கண்டார்கள். இவர்கள் அண்ணா கண்ட கனவை நிறைவேற்றவில்லை. மாறாக, அதிகாரத் தரகர் நீரா ராடியா கண்ட கனவையே நிறைவேற்றினார்கள். மத்திய ஆட்சி அதிகாரம் கையில் இருந்ததைப் பயன்படுத்தி, தமிழை மத்திய ஆட்சிமொழிகளில் ஒன்றாக ஆக்கினார்களா? நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழைக் கொண்டுவந்தார்களா? மாநிலத்தில் சுயாட்சி,மத்தியில் கூட்டாட்சி என்று முழக்கமிட்ட வர்கள்; மாநில சுயாட்சிக்காக ஒரு துரும்பையாவது கிள்ளிப் போட்டார்களா? ராஜமன்னார் குழு பரிந்துரைகளை நிறை வேற்றப் பாடுபட்டார்களா? எதுவுமில்லை. மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருந்து, இவர்கள் சாதித்தது, அலைவரிசைக் கற்றை ஊழல் மட்டுமே.டி.ஆர்.பாலு, கப்பல்துறை அமைச்சராக இருந்தபோதுதான் சேது சமுத்திரத் திட்டத் துவக்க விழா நடைபெற்றது. இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவோடு அந்த அரசு செயல்பட்டதால்தான், அது சாத்தியமானது. ஆனால், அந்த திட்டத்தை எதிர்த்து, சுப்பிரமணியசாமியால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்ட நிலையில், திட்டம் முடக்கப்பட்டது.
         பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்த அதிமுக, அதற்குச் சொன்ன காரணங்களில் ஒன்று, ‘சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வாஜ்பாய் அரசு மறுக்கிறது’ என்பதாகும். ஆனால், அதே அதிமுக அரசு இன்றைக்கு உச்சநீதிமன்றத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று மனு போட்டிருப்பது விசித்திரமானதாகும். சேதுசமுத்திரத் திட்டம் முடக்கப்பட்டதை எதிர்த்து, திமுகவும் அங்கம் வகித்த மத்திய அரசு, நீதிமன்றத்தில் முறையாக வாதாடியதா? வாய்தா வாங்கி, அந்த வழக்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டதற்கும், திட்டம் முடக்கப்பட்டதற்கும், திமுகவுக்கும் பொறுப்பு உண்டு. இந்த திட்டம் முடங்கியதில், அதிமுகவுக்கு மட்டுமல்ல, திமுக வுக்கும் பங்கு உண்டு. 1983-ல் ‘தமிழ் ஈழத்தை ஏற்காதவர்கள் தமிழர்களே அல்ல’; என்று கலைஞர் பேசினார். ஆனால், திமுக அங்கம் வகித்த மத்திய ஆட்சி நடந்தபோதுதான், இலங்கையில் இறுதிக் கட்டப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.
        அதைத் தடுத்து நிறுத்த, தனது அதிகாரத்தை, அரசியல் செல்வாக்கை திமுக பயன்படுத்தவில்லை. இந்த குற்றச்சாட்டுக்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். அதன்பிறகு டி.ஆர்.பாலு தலைமையிலான குழு, இலங்கைக்குச் சென்று ராஜபக்சேவுடன் அளவளாவிவிட்டு வந்தது. இது என்ன தமிழர் பாசம்? என்று தமிழக மக்களுக்குப் புரியவில்லை. மத்திய அரசில் நீண்டகாலம் இருந்து விட்டு, “எங்கள் சாதனை இது” என்று எதனையும் உருப்படியாக சொல்ல முடியாத தால்தான், தேர்தல் களத்தில் அதிமுக-வை மட்டும் திமுக விமர்சிக்கிறது. கலைஞர் மட்டுமல்ல, அவருடைய மகன் - சகோதரர் மு.க.ஸ்டாலினும் இதைத்தான் செய்து வருகிறார். தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல.

நாளை நமதே; நாற்பதும் நமதே

          நாளை நமதே; நாற்பதும் நமதே என்று அதிமுகவினர் தேர்தலுக்கு முன்பிருந்தே உற்சாகமாக கூறி வந்தனர். நாடாளுமன்றத்தை வரைந்து, அதன் முன்பு, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நிற்பது போல, டிஜிட்டல் பேனர்களை வைத்து அகமகிழ்ந்தனர். இடதுசாரிக் கட்சிகளுடன் தான் எங்களது கூட்டணி என்று கூறிய அதிமுக, கடைசியில் சந்தோஷமாக பிரியலாம் என்று சென்றது. இந்த தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள், சந்தோஷமாக மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகின்றன.
        ஆனால், அதிமுகவின் சந்தோஷம்தான் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. முதல்வர் ஜெயலலிதா, ஹெலிகாப்டரில் பறந்து பறந்து சென்று சாமானிய மக்களைச் சந்திக்கிறார். ஒவ்வொரு கூட்டத்திலும், திமுகவையும், காங்கிரசையும் கடுமையாக விமர்சிக்கிறார். மோடியையும், பாஜகவின் மதவெறியையும் விமர்சிக்க மறுப்பது ஏன்..? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து கேள்வி எழுப்பியது. மோடி வேறு மாநில முதல்வர்; அவரை ஏன் விமர்சிக்க வேண்டும்? என்று அவர்களது ஏடான ‘நமது எம்ஜிஆர்’ பெட்டிச் செய்தியில் கெட்டிக்காரத்தனம் என நினைத்துக் கொண்டு பதில் எழுதியது. இந்த நிலையில் கரூர் கூட்டத்தில் பங்கேற்க, முதல்வர் ஹெலிகாப்டரில் பறந்து கொண்டிருந்த போது, நடிகர் ரஜினிகாந்த்தை மோடி சந்திக்க இருப்பதாக தகவல் வந்தது.
           உடனே பூமியில் காய்ந்து கிடந்த, காவிரி, அமராவதி நதிகளும், காவிரி பிரச்சனையில் பாஜக செய்த துரோகமும், முதல்வருக்கு நினைவுக்கு வந்துள்ளது. காவிரிப் பிரச்சனையில் காங்கிரசும், பாஜகவும் துரோகம் இழைத்ததாகப் பேசினார் முதல்வர். அடுத்து நடிகர் விஜய்யை, மோடி சந்தித்தவுடன், குஜராத்தை விட தமிழகம் பல்வேறு துறைகளில் முன்னேறியுள்ளது என்று பட்டியலிடுகிறார் முதல்வர். இப்போது கூட, குஜராத்தில் இஸ்லாமிய மக்களை மோடி நரவேட்டை ஆடியது குறித்தோ, பாஜக தேர்தல் அறிக்கையில் காணப்படும் மதவெறி குறித்தோ எதுவும் கூறவில்லை. இன்னும் சொல்லப்போனால், தன்னுடைய கட்சியின் தேர்தல் அறிக்கையில், கூறியுள்ள விஷயங்களைக் கூட அதிமுகவினரால் எடுத்துச் சொல்ல முடியவில்லை.

இருவரும் பொறுப்பு

           தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள்தான் மாறி மாறிஆட்சி செய்து வருகின்றன. ஏராளமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஆனாலும் வேலைவாய்ப்பு பெருகவில்லை. இந்த ஆண்டு ஜனவரி மாத கணக்குப்படி தமிழ்நாட்டில் 90லட்சம் பேர் வேலையின்றி காத்திருக்கின்றனர்.  இவர்களில் 45லட்சம் பேர் பெண்கள். இதில் தான் பாலின சமத்துவம் ஏற்பட்டுள்ளது. 3லட்சத்திற்கும் மேற்பட்ட பொறியியல் பட்டதாரிகள் வேலையில்லாமல் உள்ளனர். வளாகத் தேர்வில் தேர்வு பெறும் பொறியியல் பட்டதாரிகள் தவிர மற்றவர்களுக்கு நல்ல வேலைகிடைப்பதில்லை. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். சிறு, குறு தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயத்துறை நாளுக்கு நாள் நலிந்துவருகிறது.
        மின்வெட்டு தமிழகத்தை மிரட்டுகிறது. திமுக -அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஒன்றையொன்று குற்றம்சாட்டுகின்றன. ஆனால் இரண்டு கட்சிகளுமே இந்த நிலைமைக்கு காரணம். இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு இரு கட்சிகளுக்கும் உண்டு. ஆனால் இந்த கட்சிகள் தேர்தலுக்குப் பிறகு, என்ன செய்யும்? என்று யாரும் இப்போது கூற முடியாது. அனைத்து வாய்ப்புக் களுக்குமான வாசல்களை இவர்கள் திறந்தே வைத்துள்ளனர்.
        ஆனால், அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கு இடம் தராமல், மத்தியில் அமைகிற அரசு மதச்சார்பற்ற- மாற்று அரசாக அமைய வேண்டும் என்று கம்பீரமாக களத்தில் நிற்பவர்கள் இடதுசாரி வேட்பாளர்களே... அவர்களை ஆதரிப்பதன் மூலம்தான் தேச நலனை மட்டுமல்ல; தமிழக நலனையும் பாதுகாக்க முடியும்.
 

திங்கள், 4 ஜூலை, 2011

அதிமுக இன்னும் தன்னுடைய அரசியல் பாதையை செழுமைப் படுத்தவேண்டும்

                   நேற்று புதுடெல்லியில் பிரதமரின் வீட்டில் லோக்பால் மசோதா சம்பந்தமாக நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் எல்லாக்கட்சியையும் போல் தமிழக ஆளும் கட்சியான அதிமுக-வும் கலந்துகொண்டது. கட்சியின் சார்பில் அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் திரு. தம்பிதுரை அவர்களும் கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்தில் லோக்பால் மசோதா வரையறைக்குள் பிரதமரையும் கொண்டுவரவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பெரும்பாலான எதிர்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள்  வலியுறுத்தி பேசினார்கள். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பங்கெடுத்துக் கொண்டிருக்கும் திமுக கூட ( காங்கிரஸ் மேலுள்ள எரிச்சலில் ) பிரதமரையும் சேர்க்கவேண்டும் என்று வலியுறுத்தி பெறுகிறது. ஆனால் தம்பிதுரை மட்டும் 
தன் தலைவி ஏற்கனவே பத்திரிக்கையாளர் கூட்டத்தில் சொன்னதையே தான் இந்த அனைத்துக்கட்சி கூட்டத்திலும் முன்மொழிந்திருக்கிறார். பிரதமரை இந்த லோக்பால் மசோதா வரையறைக்குள் கொண்டுவரத் தேவையில்லை என்று சொன்னது அனைவருக்கும் ஆச்சரியத்தை தான் அளித்தது.
                     இந்த மாதிரியான செயல்பாடு என்பது, வழக்கமான திமுக செயல்பாட்டுக்கு எதிரான செயல்பாடு என்று எடுத்துக்கொள்வதா அல்லது காங்கிரஸ் கூட்டணிக்கான அச்சாரம் என்று எடுத்துக்கொள்வதா...? என்று ஆளும் அதிமுக-வின் செயல்பாடுகளை - போக்குகளை உன்னிப்பாக கவனிக்கும் தமிழக மக்கள்  புரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறார்கள்.