ஜி.ராமகிருஷ்ணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜி.ராமகிருஷ்ணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 நவம்பர், 2015

வெள்ளம் கடுமையாக பாதித்த கடலூர் மாவட்டத்தை தோழர்.ஜி.ஆர் பார்வை...!

                மக்கள் நலப்பணியில் மார்க்சிஸ்ட்டுகள்...!            


அண்மையில் பெய்த மழையினால் வெள்ளம் பெருக்கெடுத்து கடுமையாக பாதித்த கடலூர் மாவட்டத்திலுள்ள பெரியகாட்டுப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளரும், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான தோழர். ஜி.ராமகிருஷ்ணன் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் அம்மக்களுக்கு பாத்திரங்கள், அரிசி, போர்வை போன்ற நிவாரணப்பொருட்களை வழங்கினார். அரசு செய்யவேண்டிய இந்த பணிகளை எந்த ஒரு பிரதிபலனும் எதிர்ப்பார்க்காமல் தனியொரு அரசியல் கட்சி செய்வது என்பது பாராட்டுதற்குரியது.  













ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

சிபிஐ(எம்) - ன் புதிய தலைமைக்குழு உறுப்பினர்களை வாழ்த்துகிறோம்...!

 

                இன்று விசாகப்பட்டினத்தில் நிறைவடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-ஆவது அகில இந்திய மாநாட்டில் வரும் மூன்று ஆண்டுகளுக்கு கட்சிக்கு வழிகாட்டும்  பதினாறு பேர் கொண்ட அரசியல் தலைமைக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. புதிதாய் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் புரட்சிகர நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறோம். 
                 அரசியல் தலைமைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக தமிழ்நாடு மாநிலச்செயலாளர்   தோழர்.ஜி.ராமகிருஷ்ணன் அவர்களும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்  என்பது நம்மக்கெல்லாம் பெருமையையும், மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது.  1998-ஆம் ஆண்டு இவரது அரசியல் வகுப்பு ஒன்று தான் நான்  செங்கொடி இயக்கத்திற்குள் நுழைவதற்கு காரணமாய் அமைந்தது. அற்புதமான ஆசிரியர். என்னுடைய அரசியல் ஆசான் கட்சியின் உச்சி வரை உயர்ந்து நிற்கிறார் என்பதில் பெருமையாய் இருக்கிறது. தமிழ்நாட்டின் ஆளுமை தேசத்தின் ஆளுமையாய் விஸ்வரூபம் எடுக்கிறது.
           தோழரின் புதிய பணி  சிறக்க எங்கள் குடும்பத்தார் அனைவரின் சார்பிலும் புரட்சிகர நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். 
         வாழ்க தோழர். ஜி. ராமகிருஷ்ணன்..!                 

புதன், 15 அக்டோபர், 2014

ஊர் கூடி ஊழலை எதிர்ப்போம்...!


 கட்டுரையாளர் : தோழர். ஜி.ராமகிருஷ்ணன்,               
                                      மாநிலச்செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி                                     
             “லஞ்சம் ஊழல் முன்பிருந்ததை விட மோசமாகிவிட்டது. அதனைத் தவிர்ப்பது என்பதற்கான முயற்சியே இல்லாமல் போய்விட்டது. லஞ்ச ஊழலில் ஈடுபடும் ஏராளமானவர்கள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். தேசம் என்பது அவர்களின் சுரண்டலுக்காக வாழவில்லை. மாறாக, அவர்கள் தேசத்துக்கு தொண்டு புரிவதற்காக வாழ்கிறார்கள்’’ என அண்ணல் காந்திஜி 26.1.1948 அன்று பிரார்த்தனை கூட்டத்தில் பேசினார். நாடு சுதந்திரமடைந்த 5 மாதங்களுக்குள் ஊழல் நடைபெற்றதைக் கண்டு மனம்நொந்து காந்திஜி பேசியது இன்றும் பொருத்தமாகயிருக்கிறது. ஆனால், கடந்த 67 ஆண்டுகளில் காந்தி கண்டதைவிட ஊழல்கள் என்பது பன்மடங்கு அதிகரித்துவிட்டது. 1991 -ஆம் ஆண்டில்  நவீன தாராளமயக் கொள்கையின் அமலாக்கம் தொடங்கிய பிறகு ஊழல்கள் புதிய பரிமாணத்தை அடைந்தது.
             மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பல தலைவர்கள் செய்த ஊழல் கணக்கிலடங்கா. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தால் சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டிக்கப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறையில் உள்ளார். சிறையில் உள்ள ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர். நீதிமன்றம் ஜெயலலிதாவிற்கு தண்டனை வழங்கப்பட்ட தேதியிலிலிருந்து இதுவரையில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் பல வடிவங்களில் இயக்கங்கள் நடத்தி வருகின்றனர். தீர்ப்பை விமர்சிப்பதோ, இயக்கம் நடத்துவதோ அவர்களது உரிமையென்றாலும், அவர்கள் முன்வைக்கும் கோஷங்கள் ஊழலை நியாயப்படுத்துவதாக அமைந்துள்ளது. “ தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்: தர்மம் மீண்டும் வெல்லும்’’ என அதிமுகவினர் தட்டி போர்டு வைத்துள்ளனர்.
                  ஊழல் செய்வதை தர்மம் என்றும், ஊழலுக்காக நீதிமன்றம் அளித்த தண்டனையை சூது என்றும் வாதிடுவதைப் போல் மேற்கண்ட வாசகங்கள் அமைந்துள்ளன. இதைப்போலவே, “ நீதிக்கு அநீதியா’’, “தெய்வத்தை மனிதன் தண்டிப்பதா’’ என்றெல்லாம் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களும், அவரது ஆதரவாளர்களும் சுவரொட்டிப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்தத் தீர்ப்பு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டதால், தேவையில்லாமல் இன அடிப்படையில் இந்தப்பிரச்சனையை திசை திருப்பவும் முயன்றனர். ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிரான தீர்ப்பை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆளுங்கட்சியான அதிமுகவினர் வன்செயல்களில் ஈடுபட்டனர். அரசுப் பேருந்துகள் கொளுத்தப்பட் டன.
                    ஆளுங்கட்சியின் நிர்ப்பந்தம் காரணமாக பல்வேறு தரப்பினர் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்தனர். இதில் தனியார் பள்ளி முதலாளிகளும் அடக்கம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக இவர்கள் பின்வாங்கினர். அதிமுக தொடங்கப்பட்ட  போது அதனுடைய நிறுவனத்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள், திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழலை விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் மனுக்கொடுத்தார். அப்படிப்பட்ட கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா தற்போது ஊழலுக்காக தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
               1970 களில் ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையில் பீகார், குஜராத் போன்ற வடமாநிலங்களில் ஊழல் எதிர்ப்பு இயக்கங்கள் நடைபெற்றன. இதில், லாலு பிரசாத் போன்ற தலைவர்கள் கலந்து கொண்டு பிரபலமானார்கள். பிற்காலத்தில், லாலு பீகார் முதல்வரானார். ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் கலந்து கொண்ட அவர், ஊழலுக்காக தண்டிக்கப்பட்டு தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளார். தங்களது கட்சி வித்தியாசமானது என்று கூறிக்கொள்ளும் பாஜகவின் அகில இந்திய தலைவராக இருந்த பங்காரு லெட்சுமணன் ஊழல் வழக்கில் சிக்கி கையும், களவுமாக பிடிபட்டு தண்டிக்கப்பட்டார். மத்தியில் பாஜக ஆட்சியின் போது கார்கில் ராணுவ வீரர்களுக்கு சவப்பெட்டி வாங்கியதில் நடைபெற்ற ஊழல் வழக்கு இன்னும் நடைபெற்று வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சியில் முதல்வராக இருந்த எடியூரப்பா, லோக் அயுக்தா நீதிமன்ற விசாரணையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். முதலமைச்சர் பதவியை இழந்த அவர் மீதான ஊழல் வழக்கு நடைபெற்று வருகிறது. ஆனால், அவர் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகியிருக்கிறார். இதைப் போலவே, எடியூரப்பா அமைச்சரவையில் இருந்த ரெட்டி சகோதரர்கள் ஊழல் வழக்கில் சிக்கி ( இரும்பு தாதுப்பொருள் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்ததில் 20ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ) சிறையில் உள்ளனர். மராட்டிய மாநிலத்தில் பாஜகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர், சட்டவிரோதமாக மின்சாரம் திருடிய வழக்கில் பதவியை இழந்து சிறையில் உள்ளார். திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த செல்வகணபதி அதிமுக ஆட்சியின் போது அவர் செய்த ஊழலுக்காக தற்போது தண்டிக்கப்பட்டுள்ளார். திராவிட முன்னேற்றக்கழகத்தினுடைய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி ஆகியோர் மீதான 2ஜி அலைக்கற்றை வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்படும் கட்டத்தில் உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் மீதான ஏர்செல் - மேக்சிஸ் ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. அவரது சொத்துக்களில் ஒரு பகுதியை முடக்கப்போவதாக செய்திகளும் வெளியாகியுள்ளன.
              தன்னுடைய கட்சி முக்கியப் பிரமுகர்கள் மீதான ஊழல் வழக்குகள் விசாரணையில் உள்ளதால் தான் கடந்த 8.10.2014அன்று நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதும், ஊழல் குறித்து ஒரு தீர்மானம் கூட வெளியிடப்படவில்லை. காங்கிரஸ் கட்சியின் ஊழலைப் பற்றிச்சொல்லத் தேவையில்லை. அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மசூது, ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு தனது பதவியை இழந்துள்ளார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் உள்ளிட்ட வழக்குகளில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சிக்கியுள்ளனர். ஏர்செல்-மேக்சிஸ் ஊழல் வழக்கில் அன்றைய மத்திய நிதியமைச்சரான ப.சிதம்பரத்தை ஏன் விசாரிக்கவில்லையென்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிக்கு வந்தவர்கள்  ஊழலில் ஈடுபடுவது தொடர்ச்சியாக நிகழ்ந்த ஒன்று.
               இருப்பினும், 1991 ஆம் ஆண்டு நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் அமலாக்கம் துவங்கிய போது, ஊழலின் பரிமாணம் புதிய வடிவத்தைப் பெற்றது. இக்காலத்தில் பெரும் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினர் கூட்டணி அமைத்து கோடி கோடியாகக் கொள்ளையடித்து வருகின்றனர். அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் உள்ள அரசியல் தலைவர்களும், அலைக்கற்றையை கையூட்டு கொடுத்து பெற்ற பெருமுதலாளிகளும், இத்தகைய வேலையில் ஈடுபட்ட அதிகாரிகளும் இணைந்தது தான் புதுவடிவிலான ஊழல். இது தான் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டிலும் நடைபெற்றது. இயற்கை வளத்தை பயன்படுத்த பன்னாட்டு, உள்நாட்டு கம்பெனிகளுக்கு உரிமம் வழங்குகின்ற போது இத்தகைய ஊழல்கள் நடைபெறுகின்றன. அன்னா ஹசாரே தலைமையிலான ஊழல் எதிர்ப்பு இயக்கம் 2 ஜி அலைக்கற்றை ஊழல் மற்றும் பிற பெரும் ஊழலை எதிர்த்து ஒரு சீற்றத்தை உருவாக்கியது. ஆனாலும், நவீன தாராளமயக்கொள்கையினால் பெரும் தொழிலதிபர்கள் - அரசியல்வாதிகள் - அதிகார வர்க்கத்தினர் இணைந்து செய்த ஊழல் குறித்து அவர் குறிப்பிடவில்லை.
               இச்சூழலில் தான், 2011 ஜுலை 15 முதல் 21 ம் தேதி வரை நாடு முழுவதும் ஜன்லோக்பால் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்றும், தேர்தல்களில் பணபலத்தைக் கட்டுப்படுத்துவதற்குத் தேர்தல் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், தேசிய நீதித்துறை ஆணையத்தின் மூலம் நீதித்துறையை மேற்பார்வையிடுவதற்கான சட்டம் கொண்டு வரவேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத் தியது.ஊழல் என்பது சமூகத்திற்கெதிரான குற்றமென்றும், அதிகாரத்தை ஊழல் செய்வதற்கான தொழிற்கூடமாகப் பயன்படுத்தக்கூடாதென்றும் உச்சநீதிமன்றம் ஊழலைப் பற்றிய தீர்ப்புகளில் கடுமையாகச் சாடியுள்ளது. ஊழலை எதிர்ப்பது மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் இயக்கத்தலைவர்கள் மாநில ஆட்சிப்பொறுப்பில் இருந்தபோது நடைமுறையில் ஊழலற்ற நிர்வாகத்தையும் அளித்துள்ளனர் என்பதற்கு மேற்குவங்கம், கேரளம் மற்றும் திரிபுரா மாநிலங்கள் சான்றாக உள்ளன.
           கேரளாவில் முதலமைச்சராக இருந்த இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், இ.கே.நாயனார், அச்சுதமேனன், வி.எஸ்.அச்சுதானந்தன், மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு, புத்ததேவ் பட்டாச்சார்யா, திரிபுராவில் நிருபன் சக்கரவர்த்தி, தசரவ்தேவ், தற்போது முதலமைச்சராக உள்ள மாணிக் சர்க்கார் உள்ளிட்டோர் அதிகாரத்திற்கு வருவது மக்களுக்குச் சேவை செய்வதற்காகத்தான் என்பதை நடைமுறையில் நிரூபித்துக் காட்டியுள்ளனர். இந்திய அரசியலில் ஊழல் கறை படியாதவர்கள் இடதுசாரி கட்சிகள் மட்டுமே. காங்கிரஸ், பாஜக, தமிழகத்தில்அதிமுக, திமுக ஆகிய அனைத்துக்கட்சிகளுமே ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளன. இந்த நிலையில் அனைத்து வகையான ஊழலுக்கு எதிராகவும் போராடும் தார்மீக தைரியம் பெற்றவர்கள் இடதுசாரிகளே ஆவர். இத்தகைய பின்னணியில், தமிழகத்தில் ஊழலை எதிர்த்து இயக்கம் நடத்துவதென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது.
          மாநிலத்தில் லோக் அயுக்தா சட்டம் கொண்டு வரவேண்டும் என்றும், தாதுமணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, மணல் கொள்ளை ஆகியவற்றை விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் ஐ.ஏ.எஸ் அதிகாரி உ.சகாயம் விசாரிக்க மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், அரசு நிர்வாகத்தில் எல்லா மட்டத்திலும் ஊழலை ஒழித்திடவும், மேலும் ஊழலின் ஊற்றுக்கண்ணாக உள்ள நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் தழுவிய பிரச்சாரத்தை நடத்த உள்ளது.
நன்றி : தீக்கதிர்

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

எச்சரிக்கை : மதவெறியை முன்மொழியும் பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை...!


 கட்டுரையாளர் : தோழர். ஜி. ராமகிருஷ்ணன்,          
                                 மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)          

           அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டுவது, பொது சிவில் சட்டம், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது, போன்ற அம்சங்களில் மட்டுமல்ல, வேறு பல கோணங்களிலும் பாஜக தனது தேர்தல் அறிக்கையில் வகுப்புவாத நிகழ்ச்சி நிரலையே மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
          வெளிநாடுகளில் வாழும் “இந்துக்கள் துன்புறுத்தப்பட்டால் அவர்களுக்கு இந்தியா அடைக்கலம் தரும்” என பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை கூறுகிறது. இந்தியர்கள் பல கோடிப் பேர் சிங்கப்பூர், மலேசியா, அரேபிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு பணிகளில் உள்ளனர். ஒரு பகுதியினர் அந்தந்த நாடுகளில் குடியுரிமை பெற்றவர்களாகவும் ஆகி விட்டனர்.
          இவர்களில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் என இந்தியாவின் அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்துக்கள் பாதிக்கப்பட்டால் மட்டும்தான் இந்திய அரசு அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் என்றால் இது ஒரு வகுப்புவாத அணுகுமுறை என்பதைத் தவிர வேறென்ன? சொந்த நாட்டு மக்களையே மதத்தின் அடிப்படையில் வேறுபடுத்திப் பார்க்கும் இந்தப் பார்வை மிகவும் ஆபத்தானது அல்லவா? தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் நிறவெறி கொடுமைக்கு ஆளானபோது, காந்திஜி அவர்கள் அனைவருக்காகவும் போராடினார். பாதிக்கப்பட்ட இந்தியர்கள் எந்த மதத்தை, எந்த சாதியைச் சார்ந்தவர்கள் என்று காந்திஜி வேறுபடுத்தி பார்க்கவில்லை.           
          தமிழக மக்களின் 150 ஆண்டு கால கனவான சேதுக்கால்வாய் திட்டத்தையும் பாஜக தடுப்போம் என கொக்கரிப்பது வகுப்புவாத கண்ணோட்டத்தோடுதான். புராணங்களின் அடிப்படையில் வளர்ச்சியை தடுப்பது முறையா?பாஜக தேர்தல் அறிக்கை வகுப்புவாத அணுகுமுறையை கொண்டதாக மட்டுமல்ல, தலித், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் நலன்களுக்கு முற்றிலும் விரோதமானதாக உள்ளது.
             நலிந்த பிரிவினருக்கு சமூக நீதி, அதிகாரம் அளித்தல் என்று துவங்கும் பாஜகவின் தேர்தல் அறிக்கை “கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் போன்றவற்றில் அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கக்கூடிய ஒரு பொருளாதார நிலைமையை உருவாக்குவதற்கு நடவடிக்கைகள் எடுப்போம்” எனக் கூறுகிறது. தலித், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தற்பொழுது அமலாகி வரும் இடஒதுக்கீடு பற்றி பாஜக அறிக்கையில் எதுவும் இல்லை. அனைவருக்கும் சம வாய்ப்பு என்ற வார்த்தை ஜாலத்தை வைத்து நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டு முறையை ஒழித்திட பாஜக சதிவலை பின்னுகிறது.
            பல ஆயிரம் ஆண்டுகள் நீடித்த அநீதியான சாதிய முறையினால்தான் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால்தான் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. அது தொடர்வதும் அவசியமாகிறது. “அரசியல் தளத்தில் ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற ஜனநாயகம் உள்ளது. ஆனால் பொருளியல் வாழ்க்கையில் இந்த ஜனநாயகம் அல்லது சமமான வாய்ப்பு இல்லை” என டாக்டர் அம்பேத்கார் கூறினார். ஒரு சிலர் டாலர் பில்லியனராக கொழுப்பதும், பெரும்பான்மையினர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாடுவதும் நீடிக்கும் தேசத்தில் அனைவருக்கும் சம வாய்ப்பு என்பது ஏமாற்று வித்தையே.
             மேலும், சமூக ரீதியிலும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை யினத்தைச் சார்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு என்பது முக்கியமான அம்சம். இதையும் பாஜக வகுப்புவாதக் கண்ணோட்டத்துடன் நிராகரிக்கிறது.சிறுபான்மை மக்கள் குறிப்பாக இஸ்லாமியர்கள் வறுமையில் வாடுவதாக கூறும் பாஜக, அவர்களுடைய முன்னேற்றத்திற்கு உருப்படியான எந்தத் திட்டத்தையும் தனது தேர்தல் அறிக்கையில் முன்வைக்கவில்லை.
              நவீன இந்தியாவில் எல்லோருக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டுமென்ற சொல்லாடலை பாஜக பயன்படுத்துகிறது. ஆனால், இஸ்லாமிய சிறுபான்மை மக்களுடைய கல்வி, வேலைவாய்ப்பு , வாழ்வாதாரம் போன்ற பிரச்சனைகளைப் பற்றி ஆய்வு செய்த நீதிபதி சச்சார் குழு அறிக்கை பற்றியோ, நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழுவின் பரிந்துரை பற்றியோ ஏதும் கூறவில்லை. இந்த பரிந்துரைகளை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்த கட்சிதான் பாஜக என்பதை மறந்துவிடமுடியாது. பொருளாதாரக் கொள்கையில் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் வேறுபாடு இல்லை என்பது மட்டுமல்ல, பாஜக ஒரு வகுப்புவாத கட்சி என்பதை அது வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையே மேலும் அம்பலப்படுத்துகிறது.
         இத்தகைய வகுப்புவாதக் கட்சியோடு மதிமுக, பாமக, தேமுதிக உடன்பாடு வைத்திருப்பதும், இதுவரையில் பாஜக தேர்தல் அறிக்கை பற்றி அதிமுக தலைமை வாய் திறக்காததும் ஏன் என்ற கேள்வி எழுகிறது. இதற்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு அந்த கட்சிகளுக்கு உண்டு.
          எனவே, வகுப்புவாதத்திற்கு எதிராக, மக்கள் விரோத பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக, உறுதியாக போராடி வரும் இடதுசாரி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டுமென வாக்காளர்களை கேட்டுக்கொள்கிறோம்.

திங்கள், 31 மார்ச், 2014

உழுகிற நாளில் ஊருக்குப் போய்விட்டு அறுக்கிற நாளில் அரிவாளோடு வருவதா?

 

 கட்டுரையாளர் :தோழர்.ஜி.ராமகிருஷ்ணன், 
               மாநிலச்செயலாளர்            
               மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி       

 
                 “நான் மின்சாரப் பிரச்சனையை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். மின்சாரத்தைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். விரைவில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழும்” மதுரையில் அஇஅதிமுக வேட்பாளருக்கு வாக்குகள் சேகரிக்கும் பிரச்சாரத்தின்  போது முதலமைச்சர் ஜெயலலிதா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
            தமிழகத்தில் கோடை வெயில் தனது உக்கிரத்தைக் காட்டத் துவங்கியுள்ள வேளையில், மக்களை மேலும் துயரத்தில் மின்வெட்டு தள்ளிவரும் நிலையில், கவலைப்படாதீர்கள் என்று ஆறுதல் வார்த்தைகளை சொல்லி வருகிறார் முதலமைச்சர். மேலும் “சில இடங்களில் மின் உற்பத்தி பிரச்சனையால், ஓரிரு நாட்கள் தமிழகத்தில் சில மணிநேரம் மின்வெட்டு இருந்தது. அந்த மின்வெட்டும் விரைந்து சரிசெய்யப்பட்டுள்ளது” என்று விளக்கம் அளித்திருக்கிறார். நான் மார்ச் 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கோவைத் தொகுதிக்கு தேர்தல் வேலையாக சென்றிருந்தேன்.
            அங்கு சுமார் நான்கு மணி நேரம் மின்வெட்டு இருந்தது. இந்த மின்வெட்டு சிறு, குறு தொழில்களைக் கூடுதலாக பாதிக்கிறது. கோவை மாநகரத்தில் மட்டுமல்ல, சென்னையைத் தவிர மாநிலம் முழுவதும் இதே நிலைமைதான். தற்போது மின்வெட்டால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. பொருளாதாரச் சுழற்சியில் ஒரு கண்ணி அறுந்தாலும் ஒட்டுமொத்த வளையமும் கழன்றுவிடும். உற்பத்தி பாதிப்பால், தொழிலாளர்களுக்கு வேலையின்மை, அதனால் அவர்களின் குடும்பங்கள் துயரில் ஆழ்தல் என்கிற துயரச் சுழற்சி அல்லவா உருவாகி வருகிறது. இந்த அவலநிலை கண்டு கவலைப்படாமல் இருக்க வேண்டும் என்று எப்படி கூறுகிறார் தமிழக முதலமைச்சர்? திருப்பூர், இந்தியாவிற்கு அதிகமான அளவில் அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் ஒன்றாகும். மின்வெட்டால் அங்கும் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
                இப்படி உற்பத்தி பாதிப்பதால், தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிப்புக்குள்ளாகிறது. மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற்று வருகிறது. மின்வெட்டு அவர்களையும் பாதிக்கிறது. பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கவலைப்பட வேண்டாம் என்று எப்படி கூறுகிறார் தமிழக முதலமைச்சர்? 2001 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம்ஆண்டு வரையில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எந்தவித மின்திட்டங்களும் நடைமுறைக்கு வரவில்லை. இந்தப் பத்தாண்டு காலத்தில் அஇஅதிமுகவும், திமுகவும் தலா ஐந்தாண்டுகள் ஆட்சியில் அமர்ந்திருந்தன. தற்போது மாறி, மாறி ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டு இருவருமே தப்பித்துக் கொள்ளும் வழியைத் தேடுகிறார்கள்.
                    ஆனால்இல்லாத மின்சாரத்திற்கு மின்கட்டணத்தை ஏற்றுவதில் மட்டும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் இருந்தனர். தனது ஆட்சியின்போது ஆண்டுதோறும் மின்கட்டணத்தை திமுக உயர்த்தியது. 2009-10 ஆண்டில் 954 கோடி ரூபாய்க்கு மின்கட்டணம் உயர்ந்தது. மின்வெட்டு இல்லாத மாநிலமாக்குவோம் என்று ஆட்சிக்கு வந்த அஇஅதிமுக, 2011 ஆம் ஆண்டில் 42 சதவிகிதம் அளவுக்கு மின்கட்டணத்தை உயர்த்தியது. மக்கள் கடும் துயரத்துக்குள்ளாகினர். மின்வாரியத்தின் வருமானம் 35 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. தனியார் நிறுவனங்களிடம் ஒரு யூனிட் மின்சாரத்தை 12 ரூபாய் கொடுத்து வாங்குவது பற்றி ஆட்சியாளர்கள் வாய் திறக்க மாட்டேன் என்கிறார்கள். மின்வாரியத்திற்கு நட்டம் என்றால், எந்தக் கல்லாவிற்கு பணம் செல்கிறது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
            2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்குக் கிடைத்த தோல்விக்கு மின்வெட்டு ஒரு முக்கியமான காரணமாகும். மின்மிகை மாநிலமாக மாற்றுவோம் என்று அஇஅதிமுக தலைமை வாக்குறுதி அளித்தது. தற்போது மக்களைப் பார்த்து கவலைப்பட வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் தமிழக முதலமைச்சர்.தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அஇஅதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இந்த அவல நிலைக்குக் காரணம் என்பதோடு, மத்திய ஆட்சியாளர்களின் பங்கையும் குறைத்து மதிப்பிட முடியாது. காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் கடைப்பிடிக்கும் பொருளாதாரக் கொள்கைகள் மின்னுற்பத்தியைக் கடுமையாகப் பாதித்துள்ளது. அனைத்து மக்களுக்கும் மின்சாரம் வழங்க தனியார் மின்னுற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் என்று அதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தனர். காங்கிரஸ், பாஜக, திமுக, அஇஅதிமுக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகளும் கைகளைத் தூக்கி ஆதரவளித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகள் மட்டுமே இதைக் கடுமையான எதிர்த்தன. தனியார்மயக் கொள்கை மக்களுக்குப் பலன் அளிக்கவில்லை. ஏற்கெனவே மின்னுற்பத்தி நடந்துவரும் மின்வாரிய மின்நிலையங்களின் ஆயுளும் முடிந்து கொண்டிருக்கிறது. தனியார் நிறுவனங்களுக்கு ஒரு யூனிட் மின்சாரத்திற்கு கூடுதலாக வாரி வழங்கத் தயாராக இருக்கும் அரசுகள் மின்வாரியத்திற்கு வழங்கினால், நட்டத்தில் ஓடுவதாக சொல்லப்படும் மின்வாரியம் அபாரமாக தனது பணியைச் செய்யத் துவங்கிவிடும். தனியார் நிறுவனங்களுக்கு அவசியமே இருக்காது.
                “உழுகிற நாளில் ஊருக்குப் போய்விட்டு, அறுக்கிற நாளில் அரிவாளோடு வந்து என்ன பயன்“ என்றொரு சொல்வடைதான் நினைவுக்கு வருகிறது. நீண்டகாலத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கையில் அதுபற்றித் திட்டமிடாமலேயே அஇஅதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இருந்துவிட்டு தற்போது அரசியல் லாவணி செய்வதில் கவனம் செலுத்துகின்றன. இந்த கடுமையான பாதிப்பு உருவாவதற்குக் காரணமான கொள்கைகளை நடைமுறைப்படுத்திய காங்கிரஸ் மற்றும் பாஜக, அதற்கு ஆதரவாக கை தூக்கிய மதிமுக, பாமக ஆகிய கட்சிகளும் மின்வெட்டிற்கான உண்மையான காரணத்தைச் சொல்லாமல் தட்டிக் கழிக்கின்றன.
              இந்த நாசகரக் கொள்கைகளைத்தான் பாஜகவும் பின்பற்றுகிறது. அதனுடன் அணி சேர்ந்துள்ள தேமுதிக தலைமை இதுபற்றி மூச்சுவிடுவதில்லை. வருகிற தேர்தலில் இந்த வெற்று லாவணிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து பிரச்சனைகளைத் தீர்க்க மாற்றுக் கொள்கைகளோடு வரும் இடதுசாரிக்கட்சி வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

புதன், 19 மார்ச், 2014

வாழும் வரலாறு தோழர். இ. எம். எஸ்...!


கட்டுரையாளர் : தோழர். ஜி. ராமகிருஷ்ணன்          
                                தமிழ் மாநில செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி                                              
                  சிலர் வரலாற்றில் இடம் பெறுவார்கள், சிலர் வரலாற்றை உருவாக்குவார்கள். இதில் இரண்டாம் வகையைச் சார்ந்தவர்தான் தோழர் இ.எம்.எஸ். ஒரு சனாதன ஜமீன் குடும்பத்தில் 1909-ல் பிறந்தவர் அவர். ஆண்டுக்கு 50,000 மரக்கால் நெல் குத்தகைதாரர்களிடமிருந்து மட்டும் அவருடைய குடும்பத்துக்கு வரும். வீட்டு வேலைகளைச் செய்ய மட்டும் 12 நாயர் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் இருந்தனர். எனில், எப்படிப்பட்ட செல்வச் செழிப்பான குடும்பத்திலிருந்து அவர் வந்தவர் என்பதை விளக்க வேண்டியதில்லை.
தன் குடும்பத்துக்கென்று எதையும் வைக்காமல், அவ்வளவு சொத்துகளையும் கட்சிக்குக் கொடுத்துவிட்டு, கட்சி கொடுத்த ஓர் அறையில் காலமெல்லாம் வாழ்ந்து மறைந்தார் அந்த மனிதர்.
                      தான் விரும்பும் மாற்றத்தைத் தன்னிடத்திலிருந்து தொடங்கியவர் இ.எம்.எஸ். தன் பள்ளிப் பருவத்தில் குடுமியை எடுத்தவர், கல்லூரிப் பருவத்தில் பூணூலை அறுத்தெறிந்தார். ‘நம்பூதிரி இளைஞர் சங்க’த்தின் தலைவர்களில் ஒருவராக இருந்த அவர், இத்தகைய சீர்திருத்தத்தை மற்றவர்களும் கடைப்பிடிக்க வற்புறுத்தினார். இதுகுறித்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று உண்டு.
                சென்னைச் சிறையில் இருந்தபோது இ.எம்.எஸ். பூணூல் அணியாததைப் பார்த்த, அப்போது அவருடன் சிறையில் இருந்த காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, இ.எம்.எஸ்-ஸுக்குப் பூணூல் ஒன்றை அளித்திருக்கிறார். அந்தப் பூணூலை வாங்கிய இ.எம்.எஸ். பிராமணர் அல்லாத ஒரு தண்டனைக் கைதியிடம் கொண்டுபோய்க் கொடுத்தார்.
              நாடு முழுவதும் திரண்ட விடுதலைப் போராட்டத்தின் எழுச்சி, தோழர் இ.எம்.எஸ்-ஸையும் இழுத்தது. 1932-ல் கல்லூரியை விட்டு வெளியேறி, காந்தி அறைகூவல் விடுத்த உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்றார். அப்போது ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருக்க நேர்ந்தது. வரலாற்றுத் துறை மாணவரான
                      இ.எம்.எஸ். கல்லூரியை விட்டு வெளியேறியபோது, அவரது பேராசிரியர் “நீ வரலாற்று மாணவன் மட்டுமல்ல; வரலாற்றை உருவாக்க வேண்டியவன்” என வாழ்த்தியிருக்கிறார். 1927-ல் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி மாநாட்டில் இ.எம்.எஸ். பங்கேற்றார். பூரண சுதந்திரம் வேண்டும் என்ற தீர்மானத்தை ஆதரித்தவர்கள் பக்கம் இ.எம்.எஸ். நின்றார்.
காந்தியால் கவரப்பட்டு, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று ஒன்றரை வருடச் சிறை வாழ்க்கைக்குப் பிறகு விடுதலையாகி வெளியே வந்தவர், இரண்டு வருடக் குடும்ப வாழ்க்கைக்குப் பிறகு மீண்டும் அவர்மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை அறிந்து தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார். 

தலைமறைவுக் காலம் கற்றுக்கொடுத்த வாழ்க்கை               
 
                    சுமார் ஆறாண்டுக் காலம் இ.எம்.எஸ். தலைமறைவு வாழ்வை மேற்கொண்டார். ஆசார அனுஷ்டானங்களில் நியதிகளைக் கடைப்பிடித்து வளர்ந்த பெரியதொரு பிரபுத்துவக் குடும்பத்திலிருந்து கட்சிக்கு வந்த தோழர் இ.எம்.எஸ்., தலைமறைவு வாழ்க்கையின்போது மிகச் சாதாரண வாழ்க்கையை நடத்தும் ஏழை மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், மீனவர்கள் ஆகியோரது குடிசைகளில், அவர்களுடன் இரண்டறக் கலந்து, அவர்கள் தந்த உணவை - அசைவம் உட்பட - உண்டு எந்தவித எதிர்ப்புமின்றி, கட்சி ஊழியம் செய்தார்.
அந்தக் காலகட்டத்தில் வரலாற்றையும் அரசியலையும் மார்க்ஸியக் கொள்கைகளையும் ஆழமாக அலசத் தொடங்கிய இ.எம்.எஸ்., மெல்ல மெல்ல காந்தியிட மிருந்து விலகி, புதிய பாதையைத் தேர்ந்தெடுத்தார். அப்போது தலித் மக்களுடன் வாழ்ந்ததுதான் தன் வாழ்வில் பெரிய தாக்கத்தை உருவாக்கிய நாட்கள் என்று அவரே தனது சுயசரிதையில் குறிப்பிடுகிறார்.
                சுதந்திரத்துக்காக ஆவேசமாக காந்தி போராடினாலும், சமுதாயச் சீர்திருத்தத்தில் அவருடைய பங்களிப்பு போதாது என்று இ.எம்.எஸ். கருதினார். இதனால் காந்தியிடமிருந்தும் நேருவிடமிருந்தும் விலகி, ஜெயப் பிரகாஷ் நாராயணன் தலைமையிலான காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1936-ல் தோழர் இ.எம்.எஸ்-ஸை கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்த்த பெருமை தோழர் சுந்தரய்யாவைச் சாரும்.
தோழர் இ.எம்.எஸ். யாரும் நம்ப முடியாத அளவுக்குப் பரந்த வாசிப்பு உள்ளவர். படித்ததைப் போலவே எல்லாத் துறைகளைப் பற்றியும் எழுதிக் குவித்தார். அவருடைய எழுத்துகள் 100 தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
                   1937-ல் மலபார் பகுதியிலிருந்து தேர்வுசெய்யப்பட்டு சென்னை ராஜதானியில் சட்டமன்ற உறுப்பினரானார். (தமிழக சட்டமன்றத்தில் முன்னோடி உறுப்பினர்களில் இ.எம்.எஸ்-ஸும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது) சென்னையைத் தலைநகரமாகக் கொண்ட அன்றைய அரசு மலபார் விவசாயிகள் பிரச்சினைபற்றி ஆய்வு செய்து அறிக்கை அளித்திட அமைக்கப்பட்ட 19 பேர் கொண்ட வல்லுநர் குழுவில் தோழர் இ.எம்.எஸ்ஸும் இடம்பெற்றிருந்தார்.
                  இந்தக் குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் அளித்த அறிக்கைக்குத் தனது மாற்றுக் கருத்தை ஒரு குறிப்பாக அளித்தார். (அன்றைய விவசாயிகள் நிலைமையும், அதற்கு இ.எம்.எஸ். அளித்த தீர்வையும் இப்போதும் பேராசிரியர்கள் பாராட்டுகிறார்கள். அவர் அளித்த தீர்வு, எதிர்காலத்தில் தேசம் தழுவிய விவசாயிகள் இயக்கங்களின் முழக்கங்களாக மாறின.)
             தோழர் இ.எம்.எஸ். தான் வாழ்ந்த காலத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் நிலவிய வரலாற்றுச் சூழலைத் தாண்டிச் சிந்தித்தவர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, மொழிவழி மாநிலப் பிரிவினைக் கோரிக்கைகள் எழுந்தபோது, ‘ஐக்கிய கேரளம்’ நூலை இ.எம்.எஸ். எழுதினார். தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் என மொழிவழி மாநிலங்கள் அமைவதற்கு வித்திட்ட பல முன்னோடிகளில் தோழர் இ.எம்.எஸ்-ஸும் ஒருவர். 

நாட்டின் முதல் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி           
 
                 1957-ல் நாட்டின் முதல் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி இ.எம்.எஸ். தலைமையில் கேரளத்தில் அமைந்தது. 28 மாதங்களே நீடித்த இந்த ஆட்சியின் குறுகிய காலத்தில், உபரி நில விநியோகம், குத்தகை விவசாயிகளின் நில வெளியேற்றத் தடுப்பு, குடியுரிமைப் பாதுகாப்பு (மனைப்பட்டா), கல்வியளிப்பதில் அரசின் பங்களிப்பை உறுதிப்படுத்துதல், பரந்துபட்ட சுகாதார அடிப்படைக் கட்டமைப்பை நிறுவுதல் போன்ற பல திட்டங்களைக் கொண்டுவந்தார்.
                கல்வி, சுகாதாரம், பிறப்பிலேயே இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது போன்ற மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகளில் இன்றும் கேரளம் முதலிடத்தில் இருப்பதற்குத் தோழர் இ.எம்.எஸ்-ஸின் பங்களிப்பு முக்கியமானது. 

கட்சி பெரிதா, தனிநபர் பெரியவரா?               
 
             தோழர் இ.எம்.எஸ். இரு முறை முதல்வராக இருந்திருக்கிறார். தவிர, கட்சியின் பொதுச் செயலாளராக 10 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். ஆனால், என்றைக்குமே தான் என்ற செருக்கோ அகங்காரமோ அவரிடம் வெளிப்பட்டது இல்லை. ஒரு சின்ன உதாரணம், அவர் முதலமைச்சராக இருந்தபோது, கேரள அரசு நிறைவேற்றிய ஒரு சட்டத்தில் தவறு இருந்தது பின்னர் தெரியவந்தது. இதற்காகக் கட்சியின் அரசியல் தலைமைக் குழு அவரைப் பகிரங்கமாகக் கண்டித்தது.
               அவர் டெல்லியிலிருந்து கூட்டம் முடிந்து திருவனந்தபுரம் வந்தபோது அவர்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைபற்றி பத்திரிகையாளர்கள் கேட்டபோது, தவறு நடந்த துறைக்கான அமைச்சர் அவர் இல்லை என்றாலும், ஒரு முதல்வராகத் தவறுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட அவர், “என் கட்சியே என்னைக் கண்டிக்காவிட்டால் வேறு யார்தான் என்னைச் சரிசெய்ய முடியும்?” என்று கேட்டார். 

வாழ்நாள் சாதனை              
 
              அவருடைய கடைசிக் காலத்தில் அவரைச் சந்தித்த பத்திரிகையாளர் ஒருவர், ‘‘உங்களுடைய வாழ்க்கையின் சாதனையாக எதைக் கருதுகிறீர்கள்?” என்று கேட்டபோது, “ஒரு சனாதன ஜமீன் குடும்பத்தில் பிறந்த என்னைப் பின்னாளில், பாட்டாளி வர்க்கம் தன் தத்துப்பிள்ளையாக ஏற்றுக்கொண்டதையே வாழ்நாள் சாதனையாகக் கருதுகிறேன்” என்று குறிப்பிட்டார் இ.எம்.எஸ். ஊழலும் யதேச்சதிகாரமும் அரசியல் யதார்த்தம் ஆகிவிட்ட சூழலில் வாழ்கிறோம். ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணராக வழிகாட்டுகிறார் தோழர் இ.எம்.எஸ். 

(இன்று இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு நினைவு நாள்).
  தொடர்புக்கு: gr@tncpim.org          
நன்றி :
Return to frontpage 

செவ்வாய், 14 ஜனவரி, 2014

சமத்துவப் பொங்கல் வைப்போம்...!

                                                     மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
தமிழ்மாநிலச் செயலாளர் தோழர்.ஜி.ராமகிருஷ்ணன்
வாழ்த்துச் செய்தி...!


       தேசத்தின் இறையாண்மை, ஒற்றுமை, மதச்சார்பின்மையை பாதுகாத்து சமத்துவப் பொங்கல் வைக்க சபதமேற்போம்...!

                  
          தமிழ்ப்பெருங்குடி மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். 
          அனைவரது குடும்பத்திலும் இன்பம் பொங்கிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. “சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்” என்று வேளாண் தொழிலை சிறப்பித்துப் பேசினார் திருவள்ளுவர். உலகம் முழுவதும் அறுவடையின் துவக்கம் விழாவாக பல்வேறு வடிவங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்கள் அறுவடையின் துவக்கத்தை பொங்கல் திருநாளாகதை முதல்நாளை கொண்டாடி வருகின்றனர். பொங்கல் திருநாள் என்பது மானுடத்திற்கும், இயற்கைக்கும் இருக்கும் ஆனந்தமான உறவை சிறப்பிக்கும் திருநாளாக அமைந்துள்ளது.
          பழைய துன்பங்கள் தொலைந்து புதிய இன்பங்கள் வந்து சேரட்டும் என்ற தளராத நம்பிக்கையின் வெளிப்பாடாக இந்த விழா அமைந்துள்ளது. உலகின் ஆதி தொழில்களில் ஒன்று உழவு. ஆனால் இன்றைக்கு தாராளமயமாக்கல் யுகத்தில் உழவுத்தொழிலின் நிலையும் அதை கைக்கொள்ளும் உழவர்களின் நிலையும் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. மனிதர்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உணவுத்தேவையை உவப்போடு நிறைவேற்றும் உழவர்களின் வாழ்க்கை நாளுக்கு நாள் நலிந்தபடி உள்ளது.
                
மாநிலச்செயலாளர் வேண்டுகோளின்படி சமத்துவப் பொங்கல் வைத்ததில் பெருமை கொள்கிறோம்
           விவசாயிகள் விவசாயத்தைக் கைவிட்டு வேறு தொழிலுக்கு மாறவேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியது நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதாக அமைந்தது. அவரது நோக்கம் கோடிக்கணக்கான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களை விளை நிலத்திலிருந்து வெளியேற்றிவிட்டு அவற்றையெல்லாம் கார்ப்பரேட் முதலாளிகளின் கைகளுக்கு மாற்றித்தர வேண்டும் என்பது தான்.
                மெய்யான நிலச்சீர்திருத்தம், வேளாண் பொருட்களுக்கு கட்டுபடியான விலை, உரம் உள்ளிட்ட இடுபொருட்களின் மானியத்தை உயர்த்துதல் போன்ற கோரிக்கைகளுக்காக நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலமே விவசாயிகளை, விவசாயத்தை பாதுகாக்க முடியும். “நீரின்றி அமையாது உலகு” என்றார் வள்ளுவர். ஆனால் இன்றைக்கு தேசிய நீர்க்கொள்கை என்ற பெயரில் நீர்வளத்தையே பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கும் சதித்திட்டம் அரங்கேற்றப்படுகிறது.
         நீர் உள்ளிட்ட இயற்கையின் சீதனம் அனைத்தையும் பொதுவில் வைப்பதற்கான போரைத் தொடர்ந்திட வேண்டியுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை போதுமான அளவு பெய்யவில்லை. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மழை மற்றும் ஆற்றுப்பாசனத்தை நம்பி பயிர் செய்த விவசாயிகள் கை முதலையும் இழந்து தவிக்கின்றனர். வறட்சி குறித்து கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் கொடுக்க தமிழக அரசு முன்வரவேண்டும்.
          மத்திய அரசும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும். கரும்பு, நெல் உள்ளிட்ட அனைத்து விளை பொருட்களுக்கும் கட்டுபடியான விலைகிடைக்கவும் பயிர் இன்சூரன்ஸ் பாதுகாப்புத் திட்டம் குறைபாடின்றி நிறைவேறவும் அரசுகளை வலியுறுத்த வேண்டியுள்ளது. அனைத்துப்பகுதி மக்களுக்கும் உணவுப்பாதுகாப்பை வலியுறுத்துகிறபோது, பெரும் பகுதி மக்களை பலன் பெறுவதிலிருந்து தடுக்கும் குறைபாடு உள்ளதான ஒருசட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் உணவுப்பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கான போராட்டத்தைத் தொடர வேண்டியுள்ளது. பொது விநியோகமுறையை பாதுகாப்பது இதன் ஒரு பகுதியாகும்.
            காடு திருத்தி கழனியும், ஊரும் செய்ததெல்லாம் உழைக்கும் மக்களே. ஆனால் பெரும் பகுதிஉழைக்கும் மக்களை சாதியின் பெயரால் ஒதுக்கி வைத்தது நிலவுடைமைச் சமூகம்.அந்தக்கொடுமை இன்னமும் தொடர்கிறது. தமிழகத்தில் இன்னமும் கூட பல்வேறு இடங்களில், பல்வேறு வடிவங்களில் தீண்டாமைக் கொடுமை தொடர்கிறது. அனைத்துவித ஒடுக்குமுறைகளையும் முறியடித்து சமத்துவப் பொங்கல் வைக்க இந்நாளில் உறுதியேற்போம். “செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” என்பது தான் ஆதித்தமிழ்ச் சமூகத்தின் அகவாழ்க்கையாக இருந்துள்ளது.
                  ஆனால் இன்றைக்கு சாதியின் பெயரால் காதலைப் பிரிப்பதும், கவுரவக்கொலை செய்வதும் நிகழ்கால சமூகத்திற்கு பெரும் களங்கமாக உள்ளது. சமூகத்தில் சரிபாதியாக உள்ள பெண்கள் தொடர்ந்து சமூக ரீதியாகவும், பொருளியல் ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் ஒடுக்குமுறைக்கு ஆளாகின்றனர். காதலை கவுரவப்படுத்துகிற, பெண்களுக்கு அனைத்து நிலைகளிலும் சமஉரிமை தருகிற சமூகம் சமைத்திட தொடர்ந்து போராடுவோம். அரிசி, வெல்லம், நெய், பருப்பு என பல்வேறு பொருட்களின் சேர்க்கையில் தான் சுவையான பொங்கல் உருவாகிறது. கரும்பு, மஞ்சள், இஞ்சி, வாழை என பல்வகை விளைபொருட்கள் வீட்டுக்கு வந்து உழவுத் திருநாளுக்கு பெருமை சேர்க்கிறது.
            அதேபோன்று பல மொழி பேசுகிற, பல்வேறு இனங்களைச் சேர்ந்த, பல்வேறு மதங்களைப் பின்பற்றுகிற பன்முக நாடாக இந்தியா விளங்குவதுதான் பெரும் சிறப்பாகும். ஆனால் இந்த ஒற்றுமையைச் சீர்குலைத்து ஒற்றைப்பண்பாட்டைத் திணிக்க முயலும் மதவெறி சக்திகள் அதிகாரத்தைப் பிடிக்க அலைவதைப் பார்க்கிறோம். இதை முறியடித்து இந்தியாவில் பன்முகப் பண்பாட்டை, மதச்சார்பின்மையை பாதுகாக்கவும் போராட வேண்டியுள்ளது. தாராளமயமாக்கல் கொள்கையால் நாடு பெரும் இன்னலைச் சந்தித்து வருகிறது.
              இந்தக்கொள்கைதான் இந்திய விவசாயத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக எழுந்துள்ளது. தேசத்தின் இறையாண்மையை, ஒற்றுமையைப் பாதுகாத்து சமத்துவப் பொங்கல் வைக்க இந்த இனிய நாளில் சபதமேற்போம்.

திங்கள், 6 மே, 2013

60 ஆண்டுகளாக நீடிக்கும் இலங்கைப் பிரச்சனை - அரசியல் தீர்வே நிரந்தரத் தீர்வு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் 
தோழர். ஜி.ராமகிருஷ்ணன் மதுரையில் ஆற்றிய உரை :-       

        தமிழ் வளர்ச்சிக்கான குரல்தமிழ் மக்களுக்கும், தமிழர் நலனுக்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் கம்யூனிஸ்ட்டுகள் ஆற்றிய பணி மகத்தானது. மொழிவழி மாநிலக் கோரிக்கை எழுப்பிய இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம். தமிழகத்தை மொழிவழி மாநிலமாக அறிவிக்கக்கோரி தோழர்கள் பி.ராமமூர்த்தி, ப.ஜீவானந்தம், என்.சங்கரய்யா ஆகியோர் பல ஆண்டுகள் போராடியுள்ளனர். அன்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இருந்தன. ஆனால், தமிழகத்தில் மொழிவழி மாநிலமாக உருவாக்கியப் பெருமை கம்யூனிஸ்டுகளைத் தான் சேரும். ஒன்றுபட்ட சென்னை ராஜதானிக்கு சென்னை எனப்பெயர் சூட்ட வேண்டும் என்று பெரும்பாலான கட்சிகள் கோரிக்கை வைத்தன. அப்போது சென்னையோடு ஆந்திராவின் பல பகுதிகள் இருந்தன. ஆனாலும், அவை சென்னைக்குச் சொந்தம் என தைரியமாக குரல் கொடுத்தவர் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர் பி.சுந்தரய்யா. மொழிவழி மாநிலம் அமைந்த போது ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினராக தோழர் பி.ராமமூர்த்தி இருந்தார். 1952 - ஆம் ஆண்டு முதல் சட்டமன்றத் தேர்தலில் மதுரைச்சிறைச்சாலையில் இருந்தே தோழர் பி.ராமமூர்த்தி வெற்றி பெற்றார். அவர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். வண்ணாரப்பேட்டை தொகுதியில் இருந்து தோழர் ப.ஜீவானந்தம் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது தமிழக சட்டமன்றத்தில் ஆங்கிலத்தில் தான் பேச முடியும். ஆனால், ஆங்கிலத்தில் பேச மாட்டோம்: தமிழில் தான் பேசுவோம் என பேசிய பெருமை பி. ராமமூர்த்தியையும், ப.ஜீவானந்தத்தையும் சாரும். சென்னை ராஜதானி என்ற பெயரை தமிழ்நாடு என அறிவிக்க வேண்டும் என்று 75 நாள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த விருதுநகர் தியாகி சங்கரலிங்கனார், தனது உடலை கம்யூனிஸ்ட்டுகளிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்தார். அவரது உடலை கே.டி.கே.தங்கமணி, கே.பி.ஜானகியம்மாள் ஆகியோர் பெற்று இறுதி நிகழ்ச்சியை நடத்தினர். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பி.ராமமூர்த்தி சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் முதல் முதலாக குரல் கொடுத்தார்.
        மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அண்ணா, நாங்கள் முன்மொழிய வேண்டிய தீர்மானத்தை பி.ராமமூர்த்தி முன்மொழிந்தார். அதை ஆதரிக்கிறேன் என்று பேசிய பேச்சுகள் நாடாளுமன்ற குறிப்புகளில் உள்ளது. தமிழ்மொழிக்கு மட்டுமின்றி தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டவர்கள் கம்யூனிஸ்டுகள். 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தைத் தரக்கூடிய நெய்வேலி அனல் மின்நிலைய துவக்கப்பணிகள் துவங்கிய போது, பீறிட்ட நீருற்றை நிறுத்த முடியாமல் பணிகளைக் கைவிட்டனர். ஜெர்மனியில் சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டிருந்த பி.ராமமூர்த்தி அந்த நாட்டின் உதவியோடு நெய்வேலி அனல் மின் நிலைய பணிகளை முடிக்க அயராது பாடுபட்டார். மேட்டூர் அணைக்கட்டு, சேலம் உருக்காலை, திருச்சி பெல் தொழிற்சாலை உருவாகியதில் கம்யூனிஸ்ட்டுகளின் மகத்தான பங்களிப்பு உள்ளது . 1967 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த என்.சங்கரய்யா, ஏ.பாலசுப்பிரமணியம், என்.வரதராஜன் ஆகியோர் ஆற்றிய பணி மகத்தானது.  
          கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கைத்தமிழர் நலனுக்காக கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 60 ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகிறது. இலங்கைத் தமிழர்களின் துயரங்களுக்கு நிரந்தத் தீர்வு காணவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 1987 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின்படி, இலங்கை தமிழர்களுக்கு சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பதை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது. இந்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் ஏற்க மறுத்துவிட்டனர். மேலும், இலங்கை அரசுடன் இணைந்து, இந்திய ராணுவத்தை வெளியேற வைத்தனர். அதன்பிறகு, நார்வே நாட்டினர் முன்னிலையில் சமரசப் பேச்சுக்கான முயற்சியும் தோல்வியில் முடிந்ததால், போர்மூளும் ஆபத்து ஏற்பட்டது.
             2008,2009 - ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் 40 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தமிழர்களின் வீடுகள் தரை மட்டமாக்கப்பட்டன. மருத்துவமனைகள் மீது இலங்கை ராணுவம் குண்டு வீசித்தாக்கியது. ஐ.நா.மன்றத்தின் அலுவலகத்தின் மீதும் குண்டு வீசப்பட்டது. யுத்தம் முடிந்து 4 ஆண்டுகளாகியும் தமிழர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளது. பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட செய்தி அனைவரின் நெஞ்சையும் பதறவைத்தது. இலங்கையில் 50 ஆயிரம் தமிழர்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். காணாமல் போன இளைஞர்கள் பற்றிய தகவல் இல்லை. ஐ.நா. பொதுச்செயலாளர், கொழும்பு சென்ற போது ராஜ பக்சே அளித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அதிகாரபரவல் அளிக்கப்படாது. வடக்கு , கிழக்கு மாகாணங்களை இணைத்து சுயாட்சி தமிழர்களுக்கு வழங்க முடியாது என கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ராஜபக்சே திமிராக அறிவித்தார்.
          அண்மையில் தமிழகத்தில் மாணவர்கள், வாலிபர்கள் மத்தியில் போராட்ட அலை எழுந்தது. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பல இயக்கங்களை தொடர்ந்து நடத்தியுள்ளது. சாத்தியமுள்ள கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். இலங்கையில் தனி ஈழம் அமைவது தான் தீர்வு என சில அமைப்புகள் சொல்வதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. பூர்வீக தமிழர்கள், மலையக தமிழர்கள், தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் என இலங்கையில் மூன்று பகுதிகளில் தமிழர்கள் வசிக்கிறார்கள். இவர்கள் யாரும் தனி ஈழத்தை ஆதரிக்கவில்லை. இந்த நிலையில் ஈழம் என்ற கோரிக்கை சாத்தியமா? இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு சொல்வது அந்த நாட்டு மக்களின் முடிவாகும். பிரச்சனைகளைத் தீர்க்க நடை முறை சாத்தியமுள்ள கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதார முற்றுகை நடத்த வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைக்கிறார்கள்.
          இலங்கையின் தலைநகர் கொழும்புவில் நடைபெறும் ஜவுளி வர்த்தகத்தை நடத்துபவர்கள் இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் தான். இந்த பொருளாதார முற்றுகையால் அவர்கள்தான் பாதிக்கப்படுவார்கள். இந்தியா, இலங்கைக்கு நட்பு நாடு என கருதக்கூடாது என்ற கோரிக்கையையும் சிலர் முன்வைக்கிறார்கள். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் நடைபெறும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு இந்தியா உதவி செய்து வருகிறது. இலங்கை நட்பு நாடு இல்லையென்று கருதினால், தமிழர்கள் பகுதியில் நடைபெறும் புனரமைப்புப் பணிகளை எப்படி அமல்படுத்துவது? இலங்கையில் உள்ள சிங்களர்கள் அனைவரும் தமிழர்களுக்கு எதிரிகள் அல்ல.
         இலங்கையில் உயர்கல்வி தனியார் மயமாக்க நடைபெற்ற முயற்சியை எதிர்த்து சிங்களர், தமிழர் மாணவர்கள் ஒன்றிணைந்து சர்வாதிகார ராஜபக்சேயின் முடிவை மாற்றியமைத்தனர். இப்படிப்பட்ட ஒற்றுமை உணர்வு வளர்க்கப்பட வேண்டும். இலங்கையில் போர்க்குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். அதற்கு சுயேட்சையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்கு இந்தியா ராஜ்ய ரீதியான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். தமிழர்கள் வாழும் பகுதியில் அதிகார பரவல் ஏற்பட இந்தியா அரசு உதவ முன்வர வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு அரசியல் தீர்வு தான் நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். தமிழர்களுக்கு சமஅந்தஸ்து, அதி காரப்பரவல், அடிப்படை உரிமைகள் கிடைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும்.

சனி, 20 ஏப்ரல், 2013

இலங்கை : செய்ய வேண்டியது என்ன....?

 கட்டுரையாளர் : தோழர். ஜி. ராமகிருஷ்ணன்,                                         
                              மாநிலச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.  
        
         இலங்கைத் தமிழ் மக்களின் துயரத்துக்கு முடிவுகட்ட வேண்டும். அங்குள்ள மக்கள் அமைதியாகவும் சம அந்தஸ்துடனும் வாழ வழிவகை செய்யப்பட வேண்டும் என்ற உணர்வோடு தமிழகமே குரல் கொடுத்தது. தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மாணவர்கள் களத்தில் இறங்கிப் போராடினர். இலங்கை இனப்பிரச்சனை தொடங்கி அரை நூற்றாண்டு காலம் ஆகிவிட்டது. விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்குமான ஆயுத மோதல் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையில்கூட, இலங்கைத் தமிழர் இனப்பிரச்சனைக்கு நியாயமான தீர்வு காணப்படவில்லை. போர் முடிவுக்கு வந்த நிலையில், ராஜபக்சே அரசு தமிழ் மக்களுக்கு அளித்த எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.   
         13-வது சட்டத்திருத்தம் மற்றும் அதற்கு மேலேயும் சென்று தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்படும் என்று அவர் கூறினார். ஆனால், குறைந்த பட்ச ஜனநாயக உரிமைகள் கூட இலங்கைத் தமிழ் மக்களுக்கு மறுக்கப்படுகிறது என்பதே உண்மை. அரசியல் தீர்வுகாண ஆக்கப்பூர்வமான முன்முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்புடன் அரசுத்தரப்பில் நடத்தப்படும் பேச்சு வார்த்தை காலங்கடத்தும் உத்தியாக அங்குள்ள தமிழ் மக்களால் பார்க்கப்படுகிறதே தவிர, அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இல்லை. இலங்கை விடுதலை பெற்ற பிறகு அந்நாட்டின் பூர்வகுடிகளான தமிழ் மக்கள் பல்வேறு வழிகளில் புறக்கணிக்கப்பட்டனர். ஜனநாயக ரீதியாக தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தத் துவங்கினர். ஆனால், பண்டாரநாயகா அரசு துவங்கி தொடர்ச்சியாக வந்த அரசுகள் அதற்கு செவிசாய்க்கவில்லை.
         இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகா குமாரதுங்கா ஒரு நேர்காணலில் இலங்கையில் இதுவரை வந்த எந்த ஓர் அரசும் தமிழ் மக்களின் கோரிக்கையை நியாயமான முறையில் அணுகித் தீர்க்கவில்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில், 1975-இல் பிரிவினை கோரிக்கை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியால் முன்வைக்கப்பட்டது. நடைமுறை சாத்தியமாக இல்லாவிட்டாலும்கூட அரசியல் தீர்வுக்கான நிர்ப்பந்தமாகவே அது பார்க்கப்பட்டது. இலங்கைத் தமிழர் பிரச்சனைக்குத் தொடர்ந்து நியாயமான தீர்வு காணப்படாத நிலையில், ஆயுதந்தாங்கிய பல்வேறு குழுக்கள் உருவாகித் தொடர்ச்சியான மோதல்கள் நடந்து வந்தன. ஒரு நிலையில் இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நீண்ட நெடிய மோதல் நடந்தது. இதை முடிவுக்குக் கொண்டுவர மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சமாதான முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே கையெழுத்தான ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனே உடன்பாட்டில் பல சாதகமான அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. அந்த உடன்பாட்டையும் நடைமுறைப்படுத்தவில்லை. 
         இந்தப் பின்னணியில் 2009-ஆம் ஆண்டு இறுதிகட்ட மோதல் நடந்தது. “இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு ஆயுத மோதல் தீர்வாகாது. இப்போது நடந்து கொண்டிருக்கும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர இந்திய அரசும் ஐ.நா. சபையும் உடனடியாகத் தலையிட வேண்டும். விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடை பெறுவதன் மூலம் ஓர் அரசியல் தீர்வு காண வேண்டும். இந்த மோதலில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை உடனடியாகத் தடுக்க வேண்டும்’’ என்று இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், ஐ.நா.சபையும் இந்திய அரசும் தலையிடாத நிலையில், ஒரு மிகப் பெரிய மனிதப் பேரழிவு நிகழ்ந்தது. அது தமிழ் மக்கள் நெஞ்சில் மாறாத வடுவாக உள்ளது. இறுதிகட்ட மோதலின்போது 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா.சபை நியமித்த குழுவின் அறிக்கையே கூறுகிறது. உண்மையில் இந்த எண்ணிக்கை இன் னும் அதிகமாகவே இருக்கும். “போர் நிறுத்தப் பகுதி’ என்று அரசினால் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தஞ்ச மடைந்த மக்களின் மீது கூட கொத்து குண்டுகள் வீசப்பட்டன. காற்றில் உள்ள ஆக்சிஜனை இழுக்கும் வகையிலான வேதியியல் குண்டுகள் கூட பயன்படுத்தப்பட்டு மக்கள் மூச்சுத் திணறி சாகுமாறு செய்யப்பட்டனர். மருத்துவமனைகள், செஞ்சிலுவைச் சங்க மையங்கள் போன்றவை கூட குண்டு வீச்சிலிருந்து தப்பவில்லை. பெண்கள், குழந்தைகள் என குவியல் குவியலாக கொல்லப்பட்டனர் என்பதற்கு வலுவான சாட்சியங்கள் கிடைத்துள்ளன. 12 வயது பாலகன் பாலசந்திரன் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டது ராணுவத்தினரின் காட்டுமிராண்டித்தனத்திற்கு சாட்சியமாக உள்ளது. இலங்கை ராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்ட ஏராளமான இளைஞர்களின் கதி இன்னமும் கூட என்ன வென்று தெரியவில்லை.
இறுதி கட்ட மோதலின்போது கடுமையான மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் நடந்துள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படி எதுவும் நடக்கவில்லை என்று ராஜபக்சே அரசு கூறுவதை ஏற்க முடியாது. போரின்போது முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்ட மக்கள் இன்னமும் கூட முழுமையாக மீள்குடியமர்த்தப்படவில்லை என்றே அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் ராணுவ முகாம்கள் இன்னமும் நீடிக்கின்றன. தமிழ் மக்கள் பாரம்பரியமாக வசித்த பகுதிகளில் சிங்கள மக்கள் திட்டமிட்டு குடியமர்த்தப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசால் கட்டப்படும் வீடுகள் சிங்களவர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்ற தகவலும் கிடைத்துள்ளது. தமிழர்கள் வாழும் பகுதிகளில் திட்டமிட்டு பௌத்த ஆலயங்கள் நிறுவப்படுகின்றன. தமிழ் மக்களின் நிலம் ராணுவத்தினரால் பறிக்கப்படுகிறது என்றும் தகவல்கள் வருகின்றன. சர்வதேச நிர்ப்பந்தம் காரணமாக, இலங்கை அரசினால் அமைக்கப்பட்ட போர் படிப்பினை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் நியமித்த குழு என இந்த இரு குழுக்களும் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன. தமிழ் மக்களுக்கு எதிராக மட்டுமல்ல, உண்மையை எடுத்துரைக்க முயன்ற ஊடகத்தின் மீதும் இலங்கை அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டதை இந்த அறிக்கைகள் உறுதி செய்கின்றன. காணாமல் போன இளைஞர்கள் பட்டியலில் தமிழர்கள் மட்டுமல்ல, சில சிங்களப் பத்திரிகையாளர்களும் உண்டு. இலங்கை இனப்பிரச்சனைக்கு யுத்தம் தீர்வாகாது, அந்த மக்களின் நியாயமான உணர்வு புரிந்துகொள்ளப்பட வேண்டும், இனப்பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து கூடுதல் சுயாட்சி வழங்க வேண்டும். தமிழும் தமிழரும் அனைத்து நிலைகளிலும் சமமாக நடத்தப்பட வேண்டும். அவர்களது சமூக - பொருளாதார, பண்பாட்டு, வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கையின் அண்டைநாடு என்ற முறையிலும், “சார்க்’ கூட்டமைப்பில் இரு நாடுகளும் அங்கம் என்ற முறையிலும், அணிசாரா நாட்டு இயக்க அமைப்பின் உறுப்பினர் என்ற அடிப்படையிலும், இலங்கையில் நடக்கும் நிகழ்வுகள் தமிழகத்தில் இயல்பாகவே பிரதிபலிக்கும் என்ற முறையிலும் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வுகாண இந்திய அரசு அழுத்தம் தரவேண்டும். அதே நேரத்தில் தனி ஈழம் மட்டுமே இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வாக இருக்க முடியும் என்பது சரியல்ல. இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வழிபாடு மற்றும் கல்விக்காக வரும் பொது மக்களான சிங்களர்களைத் தாக்குவது இலங்கைத் தமிழர்களைத்தான் பாதிக்கும். சிங்களர்கள் அனைவருமே இன வெறிபிடித்தவர்கள் அல்ல.
           ராஜபக்சேவின் எதேச்சதிகார ஆட்சிக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்ளிட்ட சிங்களர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் வாக்கெடுப்பு நடந்த மார்ச் 21-ஆம் தேதியன்று ராஜபக்சே அரசு கட் டணத்தை உயர்த்தியுள்ளது. சமீபத்தில் உயர்கல்வியை தனியார் மயமாக்கிட ராஜபக்சே அரசு முடிவெடுத்த போது அதை எதிர்த்து இலங்கை முழுவதும் தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் ஒன்றிணைந்து போராடி அரசின் முடிவை முறியடித்துள்ளார்கள். இவ்வாறு ராஜபக்சே அரசுக்கு எதிராக இன வேறுபாடின்றி நடைபெறும் ஜனநாயக இயக்கம் பலப்படக் கூடிய அடிப்படையில் இங்கு நமது அணுகுமுறை அமைய வேண்டும். இலங்கைத் தமிழ் மக்களின் இன்றைய உடனடித் தேவை தொடர்ச்சியாக நடந்த போரினால் சின்னாபின்னமான அவர்களது வாழ்க்கையைச் சீரமைப்பது தான். அவர்களது பாரம்பரிய வாழ்விடங்களில் மீள்குடியமர்த்துவது, தமிழர்கள் வாழும் பகுதியிலிருந்து ராணுவத்தை விலக்குவது, போரினால் பாலைவனமாக மாறிவிட்ட பகுதிகளை புதுப்பிப்பது, நிலம், வேலை வாய்ப்பு, வழிபாட்டு உரிமை போன்றவற்றை நிலைநிறுத்துவது என்பது தான் யதார்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டதாக அமையும். மாறாக தமிழகத்திலிருந்து உணர்ச்சியைக் கிளறிவிடுவது சரியான அணுகு முறை ஆகாது. இது கடந்தகாலத்திலும் கூட எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதே அனுபவம் உணர்த்தும் பாடமாகும்.உணர்ச்சிகரமான பிரச்சனையில் உணர்ச்சிவசப்பட்டு சொல்லும் தீர்வு பல நேரங்களில் நாம் விரும்பாத இடத்திற்குச் செல்ல நேரிடும். 
            தனி ஈழம் என்ற கோரிக்கையை முன்வைத்து அதற்காக நிர்ப்பந்தம் கொடுக்க தமிழகத்தில் வரிகொடா இயக்கம் என்ற பேச்சும், தமிழக அரசு தனியாக வெளியுறவுத்துறை உருவாக்க வேண்டுமென்ற கருத்தும், ஏன் தமிழ்நாடு தனிநாடாக ஆகக் கூடாதா என்ற அளவுக்கு விபரீதமாகச் செல்வதும் கவலையளிப்பதாக உள்ளது. இந்நிலையில் இலங்கைத் தமிழர்கள் இன்று எத்தகைய பிரச்சனைகளைச் சந்திக்கிறார்களோ, அந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்துவதுதான் சரியானதாகும். இறுதிகட்ட போரின்போது நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து சுயேச்சையான நம்பகத்தன்மை கொண்ட இலங்கைக்கு வெளியில் உள்ள நீதிமான்களையும் உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதை இலங்கை அரசு ஏற்க வேண்டும். தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.ஆனால், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அமெரிக்காவின் தலையீடு தமிழ் மக்களின் பால் கொண்ட அக்கறை யினால் அல்ல. தனது ஆதிபத்திய சதுரங்க விளையாட்டில் ஒரு பகுதியே ஆகும்.
            மேலும் வளர்முக நாடுகளில் தலையிடுவதற்கான ஒரு வாய்ப்பாகவே அமெரிக்கா இந்தப் பிரச்சனையைக் கருதுகிறது. மனித உரிமை மீறலில் வேறு எந்த நாட்டையும் விட அமெரிக்காவே முதலிடத்தில் உள்ளது. இலங்கைத் தமிழர்களின் நிலைமை, அவர்களின் உடனடியான வாழ்வாதாரம் போன்ற இன்றைய யதார்த்த நிலைமையைக் கணக்கில் கொள்ளாமல் இங்கு கிளப்பப்படும் முழக்கங்கள் இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவாது. நீண்ட, நெடிய போரினால் வாழ்க்கை நிலைகுலைந்து கண்ணீரோடு வாழும் இலங்கைத் தமிழ் மக்கள் இனியேனும் நிம்மதியாக தங்களது சொந்த வாழ்விடத்தில் சமத்துவத்துடன் வாழ வேண்டும். அதற்கான அரசியல் தீர் விற்கு நாம் போராட வேண்டும்!
நன்றி: தினமணி, (19-4-2013)

திங்கள், 14 ஜனவரி, 2013

அநீதிக்கு எதிராக பொங்கிட உறுதியேற்போம்...!

        மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச்செய்தியில் கூறியுள்ளதாவது:-
         தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். “உழுவார் உலகத்தார்க்கு ஆணி” என்பது வள்ளுவர் வாய்மொழி. மனித குலத்தின் ஆதித் தொழில் உழவு. இயற்கையோடு இயைந்து வாழும் மனித குலத்தின் இயல்பான கொண்டாட்ட வெளிப்பாடே பொங்கல் திருநாளாகும். “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்றார் மகாகவி பாரதி. உழவையும் உழைப்பையும் வந்தனை செய்யும் விழாவாக பொங்கல் விழா விளங்குகிறது. கிழிந்த துணியாய் நைந்து கிடக்கிற வாழ்க்கையை வருகிற தைத்திருநாள் தைத்து செம்மைப்படுத்தும் என்று ஒவ்வொரு பொங்கல் திருநாளின் போதும் மக்கள் நம்பிக்கை கொள்கிறார்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்க்கைக்கான போராட்டங்களை கைக்கொள்கிறார்கள். உலகுக்கே உணவு படைக்கும் உழவர்களின் வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது என்று இந்த நாளில் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. காவிரி பாசனப்பகுதி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயிர்கள் காய்ந்து போவதை பொறுத்துக் கொள்ளமுடியாமல் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியாலும் உழவர்கள் மாண்டு போகும் செய்தி வேதனையளிக்கிறது. இதுவரை விவசாயத்தைப் பற்றி மட்டுமே விவாதித்து வந்தோம். இனி மேல் விவசாயிகளைப் பாதுகாப்பது குறித்தும் விவாதிக்க வேண்டும் என்கிறார்       பிரபல வேளாண்விஞ்ஞானி  
எம்.எஸ்.சுவாமிநாதன். கட்டுப்படியாகாத தொழிலாக மாறிக் கொண்டிருப்பதால் உழவுத்தொழிலை விட்டு வெளியேறும் உழவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. உழவையும் உழவர்களையும் பாதுகாப்பதற்கான தொலைநோக்கு திட்டங்களை உருவாக்குவதோடு மட்டுமின்றி, இந்திய பாரம்பரிய உழவுக்கு உலை வைக்கும் கொள்கைகளை எதிர்த்து போராட வியூகம் வகுப்பதன் மூலமே உழவர் திருநாள் என்பது உண்மையில் அர்த்தம் பெறும். காவிரி பாசன விவசாயிகள் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துப் பகுதி விவசாயிகளும் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். வாழ்விழந்து வழிதெரியாமல் தவிக்கும் விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்களைப் பாதுகாக்க உடனடி நிவாரணம் வழங் கவதும், நீண்ட கால தொலைநோக்கு திட்டங்களை உருவாக்குவதும் இன்றியமையாதது.
             மெய்யான நிலச் சீர்திருத்தம், பாசன பாதுகாப்பு, உரத்திற்கு மானியம், விதை உரிமையை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்நோக்கு திட்டமாக அது அமைந்திடல் வேண்டும். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்ற முடிவின் மூலம் வால்மார்ட் போன்ற பன்னாட்டு பகாசுர நிறுவனங்களுக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறது மத்திய ஐக்கிய முற்போக்கு கூட் டணி அரசு. இந்த முடிவு கோடிக்கணக்கான சில்லரை வர்த்தகர்களின் வாழ்வை மட்டுமின்றி, கோடானுகோடி விவசாயிகளின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து ரத்தம் சிந்தி போராடி பெற்ற விடுதலையை பாதுகாக்க வேண்டுமானால், கண்மூடித்தனமான அந்நிய மூதலீட்டு நுழைவை எதிர்த்து போராடுவது அவசியமாகும். உழவை மட்டுமின்றி, உணவின் தேவையையும் வலியுறுத்தும் உணர்வு மிக்க விழா பொங்கல். ஆனால், மத்திய ஆட்சியாளர்கள் வறுமைக்கோடு என்ற மோசடியான அளவீட்டின் மூலம் மக்களின் உணவுக்கான உரிமையையே பறிக்க முயல்கின்றனர். இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகள் தீயின் தீவிரத்தோடு போராடி வருகின்றன. ஒவ்வொரு இந்திய குடிமகனின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது காலத்தின் தேவையாகும். அதற்கு பொது விநியோக முறையை பாதுகாப்பதும், பலப்படுத்துவதும் அவசியமாகும்.    
               நிலவுடைமை சமூகத்தின் தீய விளைச்சலாக விளங்கும் சாதியம் தனது கோரமுகத்தை மேலும் மேலும் வெளிப்படுத்தி வருகிறது. நாடு விடுதலை பெற்று இத்துணை ஆண்டுகள் ஆனபின்னும் கூட தீண்டாமைக் கொடுமை தீரவில்லை என்பதையே தருமபுரி மாவட்டத்தில் நடந்த கோரத் தாக்குதல்கள் உணர்த்துகின்றன. அகம், புறம் என வாழ்வை பகுத்த தமிழர்கள் காதலையும் வீரத்தையும் பிரிக்க முடியாத பண்பாட்டு கூறுகளாக கொண்டிருந்தனர். அதிலும் அகவாழ்க்கையில் களவுநெறி என்ற பெயரில் காதல் வாழ்க்கை போற்றப்பட்டது. ஆனால் இன்றைக்கு சில சாதி அமைப்புகள் காதல் திருமணங்களே கூடாது என்று வெளிப்படையாக வெறிக்கூச்சல் போட்டு வருகின்றன. சாதிமறுப்பின் முதல் படியாக விளங்குகிற காதல் திருமணங்களை ஆதரிப்பதும், ஊக்குவிப்பதும் தமிழ் பண்பாட்டின் தவிர்க்க முடியாத கூறாகும்.
         தலைநகர் தில்லி துவங்கி தமிழகத்தின் கடைக்கோடி கிராமங்கள் வரை பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான தாக்குதல்கள் அதிர்ச்சி தரும் வகையில் அதிகரித்து வருகின்றன. பெண் விடுதலை இன்றி மண் விடுதலை அர்த்தம் பெறாது. அனைத்து நிலைகளிலும் பெண்கள் விடுதலை பெற, ஒடுக்குமுறைகளை உடைத்தெறிய போராட வேண்டியுள்ளது. தமிழகத்தில் அனைத்து நிலைகளிலும் தமிழ் தலைமையேற்பதை உறுதி செய்ய வேண்டும். மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் உள்ளிட்ட மொழிகள் மாறுவது ஜனநாயகத்தின் வேரை மேலும் பலப்படுத்தும். பல்வேறு பொருட்களின் கூட்டுச் சேர்க்கையால் எவ்வாறு பொங்கல் இனிக்கிறதோ அவ்வாறு பன்முகப் பண்பாட்டால் நம்முடைய இந்தியத் திருநாடு நிமிர்ந்து நிற்கிறது. மக்கள் ஒற்றுமையை, மதச்சார்பின்மையை கெடுக்க முயலும் குறுகிய நோக்கம் கொண்ட மதவெறி சக்திகளை முறியடிக்க வேண்டும். அநீதிக்கு எதிராக, அக்கிரமத்திற்கெதிராக - மக்கள் வாழ்வை நாசம் செய்யும் தீய கொள்கைகளுக்கு எதிராக பொங்கிட இந்த பொங்கல் நாளில் உறுதியேற்போம். எத்தகைய சோதனைகளை சந்தித்தாலும் துயர் அகலும் என்ற நம்பிக்கையுடன் உழவர் திருநாளாம் பொங்கல் விழாவை கொண்டாடிட வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.
நன்றி :

புதன், 2 ஜனவரி, 2013

திமுக முயன்றிருந்தால் முடிந்திருக்கும்...!

தோழர். ஜி.ராமகிருஷ்ணன்,
மாநிலச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 
   

         காங்கிரஸ் மற்றும் பாஜக தலை மையிலான மத்திய கூட்டணி அரசுகளில் திமுக மாறி மாறி அங்கம் வகித்து வருகிறது. ஆனால், தமிழக மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் மத்திய அரசின் அங்கம் என்ற முறையில் திமுக உரியமுறையில் தலையிடுவதில்லை. மக்களை பாதிக்கக் கூடிய பல்வேறு முடிவுகளை திமுகவும் அங்கம் வகிக்கும் மத்திய அரசுகள் எடுக்கும் போது, அதை எதிர்ப்பதுபோல திமுக அறிக்கைவிடும். அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாடு, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு, விலைவாசி உயர்வுக்கு காரண மாக உள்ள ஆன்லைன் வர்த்தகத்திற்கு அனுமதி, மானியங்கள் வெட்டு என பல்வேறு பிரச்சனைகளில் திமுக முதலில் எதிர்ப்பு காட்டுவதும், ஆனால் அரசில் அகலாது அங்கம் வகித்து அந்த முயற்சிகளையெல்லாம் மறைமுகமாக ஆதரிப்பதும் அந்தக் கட்சி பின்பற்றி வரும் அணுகுமுறையாக உள்ளது. தற்போது தமிழக மக்களின் பிரச்சனைகளாக முன்னுக்கு வந்துள்ள காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பு அரசிதழில் வெளியிடுவது, கேபிள் டிவி பிரச்சனை, மக்களை வாட்டி வதைக்கும் மின்வெட்டு ஆகிய பிரச்சனைகளில் மத்தியஅரசின் அணுகுமுறை தமிழக மக்களுக்கு சாதகமாக இல்லை என்பது மட்டுமல்ல, பாதகமாக இருக்கிறது என்பதே உண்மை.
            மத்திய அரசில் பங்கேற்றிருக்கும் திமுக இந்தப் பிரச்சனைகளில் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி நிர்ப்பந்தம் செய்யவில்லை. மாறாக, மவுனம் காக்கிறது. அனுசரித்துப் போகிறது என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கருத்து. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் திமுக தலைவர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் ஏற்புடையதாக இல்லை.தமிழகத்து மக்களை பாதிக்கக்கூடிய பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் மத்திய அரசினுடைய தலையீடு போதுமானதல்ல என்பதோடு, பாதகமாக இருக்கிறது. மத்திய அரசில் பங்கேற்றிருக்கும் திமுக தலைமை தமிழகத்து மக்களைப் பாதிக்கும் பிரச்சனைகளில் போதுமான அளவுக்கு தலையீடு செய்யவில்லை என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக தலைவரின் விளக்கம் ஏற்புடையதாக இல்லை.நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள காவிரி நதிநீர் பிரச்சனைக்கு நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு ஓரளவு ஆறுதல் அளிப்பதாக அமைந்தது. எனினும், இத்தீர்ப்பு வெளியாகி பல ஆண்டுகள் ஆனாலும் மத்திய அரசு அரசிதழில் வெளியிடவில்லை. இதற்கு மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த திமுக கடந்த காலத்தில் என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தன என்பதை அந்தக் கட்சிதான் கூற வேண்டும். தற்போது மாநில அதி முக அரசு தொடுத்த வழக்கில் உச்சநீதி மன்றமே நடுவர் மன்ற தீர்ப்பை அரசித ழில் வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து மத்திய நீர் வளத்துறைச் செயலாளர் டிசம்பர் மாத இறுதிக்குள் நடுவர் மன்றத் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்படும் என்று டிசம்பர் 7 ஆம் தேதி அறிவித்தார். ஆனால், ஜனவரி துவங்கிவிட்டது இன்னும் வெளியிடப்படவில்லை. இத்தகைய முக்கியப் பிரச்சனையில் நாங்களும் மத்திய அரசாங்கத்தை வலியுறுத்திவிட்டோம், எங்களை யாரும் குறை சொல்லக்கூடாது என்று திமுக தலைவர் கூறுவது ஏற்க முடியாதது. எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவது என்பது வேறு, ஆனால் ஆளும் கூட்டணியிலேயே இருக்கும் திமுக தலைமை மேற்கண்ட பிரச்சனைக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கவில்லை என்பதைத் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக் காட்டியது. நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டுமென்ற பிரச்சனை உள்ளிட்டு காவிரி நதிநீர் பிரச்சனையில் மாநில அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு பிரதமரை சந்திக்க மாநில அரசு ஏற்பாடு செய்யவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில அரசை வலியுறுத்தியது. 
         இன்றும் மாநில அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. காவிரி டெல்டா பிரதேசத்தில் நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் குறுவை சாகுபடியே செய்யப்படவில்லை. தற்பொழுது சம்பா பயிர் கருகிவிட்டது. இச்சூழலில் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் அளிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் உள்ளது. பேரிடர் பாதிப்பு சட்டப்படி டெல்டா பிரதேசத்தையும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மற்ற மாவட்டங்களை யும் மத்திய அரசினுடைய நிபுணர் குழு பார்வையிட்டு, பாதிப்பு எவ்வளவு என்று நிர்ணயித்து மத்திய அரசு நிவாரணத் தொகை அறிவிக்க வேண்டும். மத்திய அரசு அறிவிக்கும் நிவாரணத் தொகையோடு மாநில அரசும் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து, தற்கொலை செய்து கொண்ட விவசாய குடும்பங்கள் உள்ளிட்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதி விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் அளிக்க வேண்டும். மத்திய அரசையும் மாநில அரசையும் வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கமும் போராட்டம் நடத்த இருக்கிறார்கள்.
       மத்திய அரசில் இடம் பெற்றுள்ள திமுக இப்பிரச்சனையில் தலையிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. தலையிட வேண்டும் என்பதன் பொருள், தங்கள் கருத்தை பதிவு செய்வது என்பதல்ல, ஆளும் கூட்டணியின் அங்கம் என்கிற முறையில் இதை நிறைவேற்றும் முறையில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதுதான். தமிழக மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் கருத்தை கூறிவிட்டதாக கூறும் திமுக, மத்திய அமைச்சரவையில் பொறுப்புகளை பெறுவதில், சிக்கல்கள் வந்தபோது, அதிலிருந்து மீள்வதில் காட்டிய அக்கறையை, அணுகுமுறையை தமிழக மக்கள் நன்கறிவார்கள். 
           அரசு கேபிள் நிறுவனத்திற்கு அனுமதி என்பதைப் பொறுத்தமட்டில் திமுக அரசாங்கம் தானே அதை முதலில் முன்மொழிந்தது. இப்போது அதிமுக அரசாங்கம் அரசு கேபிள் நிறுவனத்திற்கு அனுமதிகோரி அது மத்திய அரசால் வழங்கப்படாமல் இருக்கிறது. திமுக தலைவர் இதற்கு காரணம் டிராய்-ன் பரிந்துரைதான் என்கிறார். பரிந்துரை, ஆணை, தீர்ப்பு இவற்றிற்கெல்லாம் வேறுபாடு அறியாதவரல்ல திமுக தலைவர். ஒரு பரிந்துரையை ஏற்பதற்கும் மறுப்பதற்கும் அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை என்கிறாரா?. எனவே, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பான பிரச்சனையில் எதிர்ப்பது போல் போக்கு காட்டி, உண்மையில் எதிர்க்க வேண்டிய மன்றத்தில் ஆதரித்து வாக்களித்ததைப் போல வாய்வார்த்தையில் அரசு கேபிள் நிறுவனத்திற்கு மத்திய அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும் என்று நானும் தான் கோரிக்கை வைத்தேன் என்று கூறிவிட்டு, டிராய்-ன் பரிந்துரையை காரணம் காட்டி திமுகவின் நிலைபாட்டை நியாயப்படுத்த முயற்சிக்கிறார்.
            நடுநிலையோடு சிந்திக்கிற யாரும் திமுக தலைவரின் இந்த வாதத்தை ஏற்க மாட்டார்கள். டிராய் என்பதெல்லாம் மத்திய அரசை விட அதிகாரமிக்கதல்ல என்பதும், மத்தியஅரசு நினைத்தால் இதில் மாற்றம் செய்ய முடியும் என்பதும் பெரிய ரகசியம் அல்ல. கடந்த காலத்தில் அப்படி நடந்தும் இருக்கிறது. இது மட்டுமல்ல, தமிழகத்தில் நிலவும் வரலாறு காணாத மின்வெட்டிற்கு திமுக, அதிமுக, மத்திய அரசு அனைவருமே காரணம். இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறது. இந்தப் பிரச்சனையில் உடனடி தீர்வாக மின் உற்பத்திக்கான டீசலுக்கு மானியம் வழங்குவது, இதர மாநிலங்களில் உள்ள உபரி மின்சாரத்தை தமிழகத்திற்கு பெறுவது ஆகியவற்றை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்து வருகிறது. வட மாநிலங்களில் உபரியாக உள்ள மின்சாரத்தை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு மின் பாதை உரிய வலுவற்றதாக உள்ளது என்கிற வாதத்தை மத்திய அரசாங்கம் முன்வைக்கிறது. இந்த வாதம் மத்திய அரசாங்கத்தின் மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துவதாகும். உபரி மின்சாரத்தை அருகில் உள்ள வேறு மாநிலங்களுக்கு அளித்துவிட்டு, அந்த மாநிலங்களிலிருந்து தமிழகம் மின்சாரம் பெறுவதற்கும் மத்திய தொகுப்புக்கு தமிழகத்திலிருந்து செல்லும் மின்சாரத்தை தமிழகமே பயன்படுத்திக் கொண்டு வேறு மாநிலங்களிலிருந்து கிடைக்கும் உபரி மின்சாரத்தை மத்தியத் தொகுப்பிலிருந்து பெற வேண்டிய மாநிலங்களுக்கு கொடுப்பதன் மூலம் தமிழக மின்வெட்டை போக்குவதற்கு மத்திய அரசாங்கம் உதவ முடியாதா?. இதைச் செய்ய மத்திய அரசு மறுத்து வருகிறது. இந்த ஓரவஞ்சனையான அணுகுமுறையை ஆளும் கூட்டணியில் அங்கம் என்கிற முறையில் முடிவுக்குக் கொண்டு வர திமுக என்றேனும் முயற்சித்ததுண்டா?. இப்படி தமிழக மக்களின் நலனை வலியுறுத்திட திமுக தலைமை கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண் டும், மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு போதுமான அளவுக்கு திமுக தலைமை முயற்சி செய்யாததை விமர்சித்தால், பிரச்சனையை திசை திருப்புவது, தமிழக மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உதவாது. மீண்டும் சொல்கிறோம், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடவும், அரசு கேபிளுக்கு உரிமம் பெறவும், தமிழகத்திற்கு மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் பெறவும் திமுக தலைமை முயற்சி எடுத்தால் முடியும். அத்தகைய முயற்சி எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு, திமுக தலைமையை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.