சனி, 20 ஏப்ரல், 2013

இலங்கை : செய்ய வேண்டியது என்ன....?

 கட்டுரையாளர் : தோழர். ஜி. ராமகிருஷ்ணன்,                                         
                              மாநிலச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.  
        
         இலங்கைத் தமிழ் மக்களின் துயரத்துக்கு முடிவுகட்ட வேண்டும். அங்குள்ள மக்கள் அமைதியாகவும் சம அந்தஸ்துடனும் வாழ வழிவகை செய்யப்பட வேண்டும் என்ற உணர்வோடு தமிழகமே குரல் கொடுத்தது. தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மாணவர்கள் களத்தில் இறங்கிப் போராடினர். இலங்கை இனப்பிரச்சனை தொடங்கி அரை நூற்றாண்டு காலம் ஆகிவிட்டது. விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்குமான ஆயுத மோதல் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையில்கூட, இலங்கைத் தமிழர் இனப்பிரச்சனைக்கு நியாயமான தீர்வு காணப்படவில்லை. போர் முடிவுக்கு வந்த நிலையில், ராஜபக்சே அரசு தமிழ் மக்களுக்கு அளித்த எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.   
         13-வது சட்டத்திருத்தம் மற்றும் அதற்கு மேலேயும் சென்று தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்படும் என்று அவர் கூறினார். ஆனால், குறைந்த பட்ச ஜனநாயக உரிமைகள் கூட இலங்கைத் தமிழ் மக்களுக்கு மறுக்கப்படுகிறது என்பதே உண்மை. அரசியல் தீர்வுகாண ஆக்கப்பூர்வமான முன்முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்புடன் அரசுத்தரப்பில் நடத்தப்படும் பேச்சு வார்த்தை காலங்கடத்தும் உத்தியாக அங்குள்ள தமிழ் மக்களால் பார்க்கப்படுகிறதே தவிர, அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இல்லை. இலங்கை விடுதலை பெற்ற பிறகு அந்நாட்டின் பூர்வகுடிகளான தமிழ் மக்கள் பல்வேறு வழிகளில் புறக்கணிக்கப்பட்டனர். ஜனநாயக ரீதியாக தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தத் துவங்கினர். ஆனால், பண்டாரநாயகா அரசு துவங்கி தொடர்ச்சியாக வந்த அரசுகள் அதற்கு செவிசாய்க்கவில்லை.
         இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகா குமாரதுங்கா ஒரு நேர்காணலில் இலங்கையில் இதுவரை வந்த எந்த ஓர் அரசும் தமிழ் மக்களின் கோரிக்கையை நியாயமான முறையில் அணுகித் தீர்க்கவில்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில், 1975-இல் பிரிவினை கோரிக்கை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியால் முன்வைக்கப்பட்டது. நடைமுறை சாத்தியமாக இல்லாவிட்டாலும்கூட அரசியல் தீர்வுக்கான நிர்ப்பந்தமாகவே அது பார்க்கப்பட்டது. இலங்கைத் தமிழர் பிரச்சனைக்குத் தொடர்ந்து நியாயமான தீர்வு காணப்படாத நிலையில், ஆயுதந்தாங்கிய பல்வேறு குழுக்கள் உருவாகித் தொடர்ச்சியான மோதல்கள் நடந்து வந்தன. ஒரு நிலையில் இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நீண்ட நெடிய மோதல் நடந்தது. இதை முடிவுக்குக் கொண்டுவர மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சமாதான முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே கையெழுத்தான ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனே உடன்பாட்டில் பல சாதகமான அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. அந்த உடன்பாட்டையும் நடைமுறைப்படுத்தவில்லை. 
         இந்தப் பின்னணியில் 2009-ஆம் ஆண்டு இறுதிகட்ட மோதல் நடந்தது. “இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு ஆயுத மோதல் தீர்வாகாது. இப்போது நடந்து கொண்டிருக்கும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர இந்திய அரசும் ஐ.நா. சபையும் உடனடியாகத் தலையிட வேண்டும். விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடை பெறுவதன் மூலம் ஓர் அரசியல் தீர்வு காண வேண்டும். இந்த மோதலில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை உடனடியாகத் தடுக்க வேண்டும்’’ என்று இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், ஐ.நா.சபையும் இந்திய அரசும் தலையிடாத நிலையில், ஒரு மிகப் பெரிய மனிதப் பேரழிவு நிகழ்ந்தது. அது தமிழ் மக்கள் நெஞ்சில் மாறாத வடுவாக உள்ளது. இறுதிகட்ட மோதலின்போது 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா.சபை நியமித்த குழுவின் அறிக்கையே கூறுகிறது. உண்மையில் இந்த எண்ணிக்கை இன் னும் அதிகமாகவே இருக்கும். “போர் நிறுத்தப் பகுதி’ என்று அரசினால் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தஞ்ச மடைந்த மக்களின் மீது கூட கொத்து குண்டுகள் வீசப்பட்டன. காற்றில் உள்ள ஆக்சிஜனை இழுக்கும் வகையிலான வேதியியல் குண்டுகள் கூட பயன்படுத்தப்பட்டு மக்கள் மூச்சுத் திணறி சாகுமாறு செய்யப்பட்டனர். மருத்துவமனைகள், செஞ்சிலுவைச் சங்க மையங்கள் போன்றவை கூட குண்டு வீச்சிலிருந்து தப்பவில்லை. பெண்கள், குழந்தைகள் என குவியல் குவியலாக கொல்லப்பட்டனர் என்பதற்கு வலுவான சாட்சியங்கள் கிடைத்துள்ளன. 12 வயது பாலகன் பாலசந்திரன் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டது ராணுவத்தினரின் காட்டுமிராண்டித்தனத்திற்கு சாட்சியமாக உள்ளது. இலங்கை ராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்ட ஏராளமான இளைஞர்களின் கதி இன்னமும் கூட என்ன வென்று தெரியவில்லை.
இறுதி கட்ட மோதலின்போது கடுமையான மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் நடந்துள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படி எதுவும் நடக்கவில்லை என்று ராஜபக்சே அரசு கூறுவதை ஏற்க முடியாது. போரின்போது முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்ட மக்கள் இன்னமும் கூட முழுமையாக மீள்குடியமர்த்தப்படவில்லை என்றே அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் ராணுவ முகாம்கள் இன்னமும் நீடிக்கின்றன. தமிழ் மக்கள் பாரம்பரியமாக வசித்த பகுதிகளில் சிங்கள மக்கள் திட்டமிட்டு குடியமர்த்தப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசால் கட்டப்படும் வீடுகள் சிங்களவர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்ற தகவலும் கிடைத்துள்ளது. தமிழர்கள் வாழும் பகுதிகளில் திட்டமிட்டு பௌத்த ஆலயங்கள் நிறுவப்படுகின்றன. தமிழ் மக்களின் நிலம் ராணுவத்தினரால் பறிக்கப்படுகிறது என்றும் தகவல்கள் வருகின்றன. சர்வதேச நிர்ப்பந்தம் காரணமாக, இலங்கை அரசினால் அமைக்கப்பட்ட போர் படிப்பினை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் நியமித்த குழு என இந்த இரு குழுக்களும் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன. தமிழ் மக்களுக்கு எதிராக மட்டுமல்ல, உண்மையை எடுத்துரைக்க முயன்ற ஊடகத்தின் மீதும் இலங்கை அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டதை இந்த அறிக்கைகள் உறுதி செய்கின்றன. காணாமல் போன இளைஞர்கள் பட்டியலில் தமிழர்கள் மட்டுமல்ல, சில சிங்களப் பத்திரிகையாளர்களும் உண்டு. இலங்கை இனப்பிரச்சனைக்கு யுத்தம் தீர்வாகாது, அந்த மக்களின் நியாயமான உணர்வு புரிந்துகொள்ளப்பட வேண்டும், இனப்பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து கூடுதல் சுயாட்சி வழங்க வேண்டும். தமிழும் தமிழரும் அனைத்து நிலைகளிலும் சமமாக நடத்தப்பட வேண்டும். அவர்களது சமூக - பொருளாதார, பண்பாட்டு, வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கையின் அண்டைநாடு என்ற முறையிலும், “சார்க்’ கூட்டமைப்பில் இரு நாடுகளும் அங்கம் என்ற முறையிலும், அணிசாரா நாட்டு இயக்க அமைப்பின் உறுப்பினர் என்ற அடிப்படையிலும், இலங்கையில் நடக்கும் நிகழ்வுகள் தமிழகத்தில் இயல்பாகவே பிரதிபலிக்கும் என்ற முறையிலும் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வுகாண இந்திய அரசு அழுத்தம் தரவேண்டும். அதே நேரத்தில் தனி ஈழம் மட்டுமே இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வாக இருக்க முடியும் என்பது சரியல்ல. இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வழிபாடு மற்றும் கல்விக்காக வரும் பொது மக்களான சிங்களர்களைத் தாக்குவது இலங்கைத் தமிழர்களைத்தான் பாதிக்கும். சிங்களர்கள் அனைவருமே இன வெறிபிடித்தவர்கள் அல்ல.
           ராஜபக்சேவின் எதேச்சதிகார ஆட்சிக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்ளிட்ட சிங்களர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் வாக்கெடுப்பு நடந்த மார்ச் 21-ஆம் தேதியன்று ராஜபக்சே அரசு கட் டணத்தை உயர்த்தியுள்ளது. சமீபத்தில் உயர்கல்வியை தனியார் மயமாக்கிட ராஜபக்சே அரசு முடிவெடுத்த போது அதை எதிர்த்து இலங்கை முழுவதும் தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் ஒன்றிணைந்து போராடி அரசின் முடிவை முறியடித்துள்ளார்கள். இவ்வாறு ராஜபக்சே அரசுக்கு எதிராக இன வேறுபாடின்றி நடைபெறும் ஜனநாயக இயக்கம் பலப்படக் கூடிய அடிப்படையில் இங்கு நமது அணுகுமுறை அமைய வேண்டும். இலங்கைத் தமிழ் மக்களின் இன்றைய உடனடித் தேவை தொடர்ச்சியாக நடந்த போரினால் சின்னாபின்னமான அவர்களது வாழ்க்கையைச் சீரமைப்பது தான். அவர்களது பாரம்பரிய வாழ்விடங்களில் மீள்குடியமர்த்துவது, தமிழர்கள் வாழும் பகுதியிலிருந்து ராணுவத்தை விலக்குவது, போரினால் பாலைவனமாக மாறிவிட்ட பகுதிகளை புதுப்பிப்பது, நிலம், வேலை வாய்ப்பு, வழிபாட்டு உரிமை போன்றவற்றை நிலைநிறுத்துவது என்பது தான் யதார்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டதாக அமையும். மாறாக தமிழகத்திலிருந்து உணர்ச்சியைக் கிளறிவிடுவது சரியான அணுகு முறை ஆகாது. இது கடந்தகாலத்திலும் கூட எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதே அனுபவம் உணர்த்தும் பாடமாகும்.உணர்ச்சிகரமான பிரச்சனையில் உணர்ச்சிவசப்பட்டு சொல்லும் தீர்வு பல நேரங்களில் நாம் விரும்பாத இடத்திற்குச் செல்ல நேரிடும். 
            தனி ஈழம் என்ற கோரிக்கையை முன்வைத்து அதற்காக நிர்ப்பந்தம் கொடுக்க தமிழகத்தில் வரிகொடா இயக்கம் என்ற பேச்சும், தமிழக அரசு தனியாக வெளியுறவுத்துறை உருவாக்க வேண்டுமென்ற கருத்தும், ஏன் தமிழ்நாடு தனிநாடாக ஆகக் கூடாதா என்ற அளவுக்கு விபரீதமாகச் செல்வதும் கவலையளிப்பதாக உள்ளது. இந்நிலையில் இலங்கைத் தமிழர்கள் இன்று எத்தகைய பிரச்சனைகளைச் சந்திக்கிறார்களோ, அந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்துவதுதான் சரியானதாகும். இறுதிகட்ட போரின்போது நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து சுயேச்சையான நம்பகத்தன்மை கொண்ட இலங்கைக்கு வெளியில் உள்ள நீதிமான்களையும் உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதை இலங்கை அரசு ஏற்க வேண்டும். தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.ஆனால், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அமெரிக்காவின் தலையீடு தமிழ் மக்களின் பால் கொண்ட அக்கறை யினால் அல்ல. தனது ஆதிபத்திய சதுரங்க விளையாட்டில் ஒரு பகுதியே ஆகும்.
            மேலும் வளர்முக நாடுகளில் தலையிடுவதற்கான ஒரு வாய்ப்பாகவே அமெரிக்கா இந்தப் பிரச்சனையைக் கருதுகிறது. மனித உரிமை மீறலில் வேறு எந்த நாட்டையும் விட அமெரிக்காவே முதலிடத்தில் உள்ளது. இலங்கைத் தமிழர்களின் நிலைமை, அவர்களின் உடனடியான வாழ்வாதாரம் போன்ற இன்றைய யதார்த்த நிலைமையைக் கணக்கில் கொள்ளாமல் இங்கு கிளப்பப்படும் முழக்கங்கள் இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவாது. நீண்ட, நெடிய போரினால் வாழ்க்கை நிலைகுலைந்து கண்ணீரோடு வாழும் இலங்கைத் தமிழ் மக்கள் இனியேனும் நிம்மதியாக தங்களது சொந்த வாழ்விடத்தில் சமத்துவத்துடன் வாழ வேண்டும். அதற்கான அரசியல் தீர் விற்கு நாம் போராட வேண்டும்!
நன்றி: தினமணி, (19-4-2013)

கருத்துகள் இல்லை: