ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

குழந்தைகளின் சவக்குழிகளாய் மாறும் ஆழ் குழாய் கிணறுகள்!

           
நாட்டின் பலப் பகுதிகளில் கேட்பாரற்று திறந்து வைக்கப்பட்ட ஆழ் குழாய் கிணற்றுக் குழிகளில் தொடர்ந்து பல குழந்தைகள் விழுந்து உயிரிழந்து வந்ததைக் கண்ட உச்சநீதிமன்றம் 2009 - ஆம் ஆண்டு  இந்த விவகாரத்தை தானாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதையடுத்து அந்த ஆண்டிலிருந்து வழிகாட்டு விதிமுறைகளையும் உச்சநீதிமன்றம் வரையறுத்தது. இதனை அனைத்து மாநில அரசுகள், அரசு அதிகாரிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என எழுத்துப்பூர்வமான சுற்றறிக்கைகளாக அனுப்பப்பட்டன. ஆனால், அவை பின்பற்றப்படுவதில்லை என்பதையே அண்மைக்கால சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன.

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டு விதிமுறைகள் :

1. ஒரு ஆழ்குழாய் கிணறு தோண்டப்படுவதற்கு 15 நாட்களுக்கு முன் மாவட்ட ஆட்சித்தலைவர் அல்லது மாவட்ட நீதிபதி, கிராம பஞ்சாயத்து அலுவலர் அல்லது பொது சுகாதாரத்துறை சார்ந்த அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாக தெரியப்படுத்தவேண்டும்.

2.
ஆழ்குழாய் கிணறு தோண்டும் நிறுவனங்கள் தங்களைப் பற்றி மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக பதிவு செய்து அனுமதிபெற்றிருக்க வேண்டும்.

3. ஆழ்குழாய் கிணறு தோண்டப்படும் இடத்தில் கிணறு தோண்டும் நிறுவனத்தின் விவரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை நிறுவவேண்டும்.

4. ஆழ்குழாய் கிணற்றைச் சுற்றி பாதுகப்பான கம்பி வேலி அமைக்கப்படவேண்டும் அல்லது நிலமட்டத்தில் இருந்து 0.30 மீட்டர் உயரத்திற்கு கான்க்ரீட் அரண் கட்டப்படவேண்டும்.

5. ஆழ்குழாய் கிணற்று பம்பு பழுதடைந்தால், குழாயின் துளை மூடப்படவேண்டும். மேலும் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றை களிமண், மணல், கூழாங்கற்களை கொண்டு முறையாக மூடவேண்டும்.

6. ஆழ்குழாய் கிணற்றை கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்கப்படவேண்டும். மத்திய மற்றும் மாநில அரசுகள் நேரடியாகவோ அல்லது தமது அதிகாரிகள் மூலமாகவோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் வாயிலாகவோ ஆழ்குழாய் கிணறுகளை அடிக்கடி கண்காணித்து ஆய்வு செய்ய வேண்டும்.

           இந்த வழிகாட்டுதல்களை உண்மையான அக்கறையுடன் பின்பற்றினாலே ஆழ்குழாய் கிணற்று விபத்துக்களை தவிர்ப்பது மட்டுமல்ல அநியாயமான குழந்தை இறப்புகளையும் தவிர்க்கலாம்.

கருத்துகள் இல்லை: