திங்கள், 15 ஏப்ரல், 2013

10 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - அலட்சியம் காட்டிய தமிழக கல்வித்துறை....!

  
           
         அண்மையில் தான் தமிழகத்தில் 10 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்திருக்கிறது. இந்த முறை ஏனோ தேர்வின் ஆரம்பத்திலிருந்தே குழப்பமான தேர்வாகத் தான் நடத்துள்ளது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. அதுவும் மாணவ- மாணவியர்களின் பல ஆண்டு கால கனவுகளை தகர்த்தெறிவது போல் இந்த தேர்வு என்பது நடந்து முடிந்திருக்கிறது என்பது வேதனைக்குரியது.
        ஆரம்பத்திலேயே தமிழ் இரண்டாம் தாள் தேர்வில் தான் முதல் குழப்பமே ஆரம்பித்தது. கேள்வித் தாளோடு கொடுக்கப்பட வேண்டிய ''வங்கிப் படிவம்'' ஒன்று அனைத்து தேர்வு மையங்களுக்கும் அனுப்பப்படாமல், அதனால் கேள்வித்தாளில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விக்கு எப்படி பதில் எழுதுவது என்று புரியாமல் இருபால் மாணவர்களும் குழம்பிப்போனார்கள். தமிழகக் கல்வித்துறை இந்த இலட்சணத்தில் இயங்குகின்றது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
        இது மட்டுமல்லாமல், கணக்குப் பாடத்தின் கேள்வித்தாளை முன்னறிவிப்பின்றி மாற்றிவிட்டதால் மாணவ- மாணவியர்கள் மிகவும் திணறிப் போயிருக்கிறார்கள்.
         இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு மாணவர்கள் தேர்வு எழுதினால், மாணவர்கள் எழுதிய பதில்கள் அடங்கிய விடைத்தாள்கள் தேர்வு மையத்திலிருந்து விடைத்திருத்தும் மையத்திற்கு இரயிலிலும் பேருந்திலும் கொண்டு செல்லும் போது எடுத்துச் செல்பவர்களின் பொறுப்பின்மையாலும் கவனக்குறைவாலும் பல பேருடைய விடைத்தாள்கள் வழியில் கீழே விழுந்து காணாமல் போயிருக்கிறது. இது கல்வித்துறையின் பொறுப்பில்லாத்தனத்தை தான் காட்டுகிறது.
        மேலும் தேர்வு சமயங்களில் மின்வெட்டு கூடாது என்ற  அரசாணை  இருக்கும் போதே  பல தேர்வு மையங்களில் தேர்வு நேரத்தில் மின்வெட்டு செய்திருக்கிறார்கள். மாணவர்கள் இருட்டில் தான் தேர்வு எழுதி இருக்கிறார்கள். இதைக்கூட கவனிக்காமல் கல்வித்துறை கேவலமாக தூங்கிக்கொண்டிருந்திருக்கிறது.
         ஒரு சில மையங்கள் தேர்வு நேரத்திற்கு முன்பே திறப்பதற்கு பதிலாக தாமதமாக 10.30 மேல் திறந்திருக்கிறார்கள்.
         இவைகள் அத்தனையுமே தமிழக அரசின் அலட்சியத்தைத் தான் காட்டுகின்றன. பல ஆண்டுகாலமாக  மாணவ - மாணவியர்கள்  தங்களுடன் தேக்கி வைத்துள்ள  கனவுகளை சிதறடிக்கச் செய்துள்ளன. அவர்கள் மன  உலைச்சலுக்கும், வேதனைக்கும் உள்ளாகி இருக்கிறார்கள். இவைகளை எல்லாம் தமிழக அரசும், கல்வித்துறையும் எப்படி சரி செய்யப்போகின்றன....? என்பது தான் நமது கேள்வி.   

கருத்துகள் இல்லை: