உலக அளவில் வறுமையில் வாடுபவர்களில்
மூன்றில் ஒருவர் இந்தியர்....!
உலக வங்கி ஆய்வறிக்கையில் தகவல்
உலக அளவில் வறுமையில் வாடுபவர்களில் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு
பங்கினர் இந்தியர்களாக இருக்கின்றனர் என்று உலக வங்கி வெளியிட்டுள்ள
ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உலக வங்கி
வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
உலக அளவில் மொத்தம் 120
கோடி பேர் வறுமையின் கோரப்பிடியில் சிக்கியிருக்கின்றனர். இவர்கள் நாள்
ஒன்றுக்கு ரூபாய் 65க்கும் குறைவான தொகையில் வாழ்க்கையை நடத்தி
வருகின்றனர். இதில் வளரும் நாடுகளில் 1981 - ஆம் ஆண்டிற்கும் 2010 - ஆம் ஆண்டிற்கும்
இடையில் வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை பாதியளவு குறைந்திருக்கிறது.
அதாவது வளரும் நாடுகளில் வறுமையின் அளவு தற்போது 21 சதவிகிதமாக இருக்கிறது.
இருப்பினும் இந்த வளரும் நாடுகளில் மக்கள் தொகை எண்ணிக்கை 59 சதவிகிதம்
அளவிற்கு அதிகரித்திருக்கிறது.
ஆப்பிரிக்காவின் தென்பிராந்திய
பகுதிகளில் 1981 - ஆம் ஆண்டு வறுமையில் வாடுவோரின் அளவு 51 சதவிகிதமாக
இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து 1999 - ஆம் ஆண்டில் 58 சதவிகிதமானது.
பின்னர் 1999 முதல் 2010 - ஆம் ஆண்டிற்கிடையில் வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை
10 சதவிகிதம் குறைந்து. தற்போது 48 சதவிகிதமாக இருக்கிறது. கடந்த
பத்தாண்டுகளில் மட்டும் பல்வேறு நடவடிக்கைளின் காரணமாக 17 சதவிகிதம்
அளவிற்கு வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இருப்பினும்
கடந்த முப்பதாண்டுகளுக்கு முன்பு வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை 2 கோடியே
50 லட்சமாக இருந்தது. ஆனால் தற்போது அது இருமடங்காக உயர்ந்து 4 கோடியே 14
லட்சமாக இருக்கிறது. இதன் மூலம் உலகில் மிகவும் ஏழ்மையாக வறுமையில்
வாடுவோரில் மூன்றில் ஒரு பங்கினர் ஆப்பிரிக்க தேசத்தை சேர்ந்தவர்களாக
இருக்கின்றனர். இருபதாம் நூற்றாண்டின் கடந்த இருபது ஆண்டுகளாக லத்தின்
அமெரிக்க நாடுகளில் வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை 12 சதவிகிதம் என்கிற
ஒரு நிலையான அளவில் இருந்து வந்தது. ஆனால் 1999 மற்றும் 2010 -ஆம்
ஆண்டிற்கிடையில் இந்த எண்ணிக்கை பாதியாக குறைந்து தற்போது 6 சதவிகிதம் என்ற
அளவில் இருக்கிறது. 1981- ஆம் ஆண்டில் இந்தியாவில் வறுமையில் வாடுவோர்
எண்ணிக்கை 12 சதவிகிதமாக இருந்தது. தற்போது உலக அளவில் வறுமையில்
வாடுவோரின் மொத்த எண்ணிக்கை 120 கோடியாக இருக்கிறது. இதில் மூன்றில்
ஒருவராக இந்தியர் இருக்கிறார். அதாவது உலக அளவில் வறுமையில் வாடும்
120 கோடி பேரில் 40 கோடி பேர் இந்தியர்களாக இருக்கின்றனர்.
ஆனால் சீனாவில்
1981 - ஆம் ஆண்டு வறுமையில் வாடுவோரின் அளவு 43 சதவிகிதமாக இருந்தது. இது
படிப்படியாக குறைந்து தற்போது 13 சதவிகிமாக குறைந்திருக்கிறது என்பது
குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வரும் 2030 - ஆம் ஆண்டிற்குள் ஏழைகளே இல்லை
என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றால் வறுமையில் வாழும் மக்களில்
வாழ்க்கைச் சூழலை முன்னேற்ற ஐ.நா வின் உறுப்பு நாடுகள் அதிக அளவில்
முயற்சிகளை மேற்கொண்டு அவர்களுக்கு உதவ வேண்டும். உலக மக்கள் தொகையில் 5ல்
ஒரு பங்கு மக்கள் வறுமையில் வாழும் இந்த சூழ்நிலையில் கடுமையான முன்னேற்ற
நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே வரும் 2030 - ஆம் ஆண்டிற்குள் ஏழ்மையை ஒழிக்க
முடியும் என்று உலக வங்கியின் பொருளாதார தலைமை நிபுணரான கௌசிக்பாசு
தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக