கட்டுரையாளர் : அ. குமரேசன்
ஆசிரியர், தீக்கதிர்
இன்று
தங்களது உரிமைகளைத் தக்க வைத்துக்கொள்ளப் போராடுகிற எளிய விவசாயிகள்,
விவசாயத் தொழிலாளர்கள் ஒவ்வொருவரின் மனதிலும் அழியாமல் இருக்க வேண்டிய
நினைவு, கேரளத்தின் கையூர் தோழர்கள் போராட்டம். பிரிட்டிஷ் ஆட்சியை
எதிர்த்து நடந்த நாட்டு விடுதலைப் போராட்டம், ஆட்சியாளர் ஆசியோடு வட்டார
ஜமீன்தார்களும் பண்ணையார்களும் வளைத்துப் போட்டிருந்த நிலங்களை
மீட்பதற்கான போராட்டம் இரண்டும் இணைந்த மகத்தான வரலாறு அது. 1940களில்
பரவிய அந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக கையூர் கிராமத்துக்கு
அனுப்பப்பட்ட ஒரு காவலரை மக்கள் சூழ்ந்து கொள்ள, தப்பித்து ஓடிய அவர் ஒரு
ஆற்றில் குதித்ததும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதும், அதை ஒரு
சாக்காகப் பயன்படுத்திக்கொண்ட காவல்துறையினர் பெரும்படையாக ஊருக்குள்
புகுந்து வேட்டையாடியதும், கொலைக்குற்றம் சாட்டப்பட்ட அப்பு, சிறுகண்டன்,
குஞ்ஞாம்பு நாயர், அபுபக்கர் ஆகியோர் தூக்கிலிடப்பட்டதும், இந்திய
விவசாயிகள் இயக்கத்தின் முதல் தியாகிகளாக அவர்கள் வீர முழக்கமிட்டதும்
மக்களுக்காகப் போராட முன்வருவோருக்கெல்லாம் மிகப்பெரும் ஈர்ப்பு விசையாக
அமைந்த அத்தியாயங்கள்.
இறுதி நாட்களின்போது தங்களைச் சந்திக்க
வந்த தோழர்களிடமும் குடும்பத்தினரிடமும் அவர்கள் கேட்டுக்கொண்டது:
“எங்களுக்காக யாரும் அழ வேண்டாம். ஆனால் நாங்கள் எதற்காகத் தூக்குமேடை
ஏறினோம் என்ற கதையை எல்லோருக்கும் சொல்லுங்கள்.” நாடு முழுவதும் எடுத்துச்
சொல்லப்பட வேண்டிய அவர்களது கதையை, அன்று எழுத்தாளர் நிரஞ்சனா கன்னடத்தில்
எழுதினார். கன்னடத்திலிருந்து மலையாளத்திற்குச் சென்றது, தமிழில் தோழர்
பி.ஆர். பரமேஸ்வரன் மொழிபெயர்ப்பில் ‘நினைவுகள் அழிவதில்லை’ என்ற நாவலாக
வந்தது. தமிழகத்தில் பெரும்பகுதி மக்களிடம் இவர்களது கதையைச் சொல்கிற
நோக்கத்துடன் வந்திருக்கிறது இந்தப் படம். தமிழகப் பின்னணியில் கச்சிதமாகப்
பொருத்திக் கூறப்பட்டிருப்பது படத்தின் ஒரு சிறப்பு.
தாங்கள்
கஞ்சி குடிப்பதற்கு வழியில்லாதவர்களாக, அதன் காரணம் என்னவென்றும்
தெரியாதவர்களாக இருந்த மக்களிடம் அரசியல் உண்மைகள் முதல் உழைப்புச்
சுரண்டல் ரகசியம் வரையில் விளக்குகிறார்கள் இளம்தோழர்கள். கிராமப்பள்ளிக்
குழந்தைகளின் ஆசிரியராக வருகிறவர் பள்ளிக்கு வெளியே பெரியவர்களுக்கு இந்தப்
பாடங்களை விளக்குகிறார். உண்மையின் ஒளியில் உள்ளம் தெளிவாகும் விவசாயத்
தொழிலாளிகளின் போர்க்குரல் அரசுக் கோட்டைக் கதவுகளோடு வட்டார நில முதலையின்
மாளிகைச் சுவரையும் உடைக்கவல்லதாய் எழுகிறது... அந்தப் போராளிகள்
தாக்குதல்களை எதிர்கொள்வதும், காதல் - திருமணம் - குடும்பம் ஆகிய வாழ்க்கை
இன்பங்களை இழக்க நேரிடுவதும் அன்று அவர்கள் தங்கள் முதுகைக் கொடுத்துப்
போட்ட சாலையில்தானே நாம் இன்று பயணிக்கிறோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, பல
இடங்களில் கண் கலங்கச் செய்கின்றன.
திரைப்பட ஆக்கத்தின்
முக்கியமான வெற்றி இது. எதற்காக அன்றைய தலைமுறையின் கதையை இன்றைய தலைமுறை
தெரிந்து கொள்ள வேண்டும்? இக்கால நகரம் ஒன்றில், வீட்டுமனை கொள்ளை
வர்த்தகத்துக்காக, இன்றைய சுயநல அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்தோடும், அதிகாரவர்க்கத்தின் துணையோடும் எளியவர்களின் குடியிருப்பிடங்களைக்
கைப்பற்றுகிறது ஒரு கும்பல். அதைத் தட்டிக்கேட்கும் சில இளைஞர்கள் மீது
வன்முறை வழக்கு பாய்கிறது. தப்பிப்பதற்காக ஊரைவிட்டு ஓடுகிற அந்த இளைஞர்கள்
ஒரு நண்பனின் கிராமத்தை வந்தடைந்து, அங்கே இந்த வரலாற்று வழக்கில் ஆயுள்
தண்டனை பெற்றவரான ஒரு பெரியவரைச் சந்திக்கிறார்கள். அவர், இவர்களுக்கு தன்
நினைவில் அழியாத கதையைக் கூற, வரலாறு திறக்கிறது. பெரியவர் கதையைச் சொல்லி
முடிக்கிறபோது, அந்த இளைஞர்கள் தாங்கள் தொடர்ந்து இயங்க வேண்டிய களம் எது
என்ற ஞானம் பிறந்தவர்களாக நகரத்திற்குத் திரும்புகிறார்கள். படத்தின் இந்த
முடிப்பு, இடையுறாமல் நிகழ்ந்து கொண்டிருக்கிற புரட்சிகர மக்கள்
இயக்கங்களில் பங்கேற்பதன் தேவையை உணர்த்துகிறது. “எங்கள் கதையை
எல்லோருக்கும் சொல்லுங்கள்” என்று கேட்டுக்கொண்டவர்களின் எதிர்பார்ப்பு
இதுவாகத்தானே இருக்க முடியும்?
போராளியின் காதலி போராட்டத் தகவல்களைக் கொண்டுசேர்க்கிற தொண்டராகவும் பங்களிப்பது கிராமத்துப் பசுமையின்
ஈரம். இவர்களுக்கு வழிகாட்டுகிற ஆசிரியர் எல்லா ஊர்களிலும் தேவைப்படுகிற
தோழர். போராளிகள் சம்பந்தப்பட்ட காட்சிகளை இறுக்கமாக அமைத்து, ஏழைகளின்
உழைப் பையும் அவர்கள் வீட்டுப் பெண்களையும் சூறையாடுகிற ஜமீன்தார்
சம்பந்தப்பட்ட காட்சிகளில் நகைச்சுவையை சேர்த்திருப்பது இறுக்கத்தைத்
தளர்த்த உதவுவதோடு, சுரண்டல் கும்பல்களை எள்ளலுக்கு உரியவர்களாகச்
சித்தரிப்பதாகவும் அமைந்திருக்கிறது
குகன், அருண், காயத்ரி,
அமரமணி உள்ளிட்டோர் கதாபாத்திரங்களின் முக்கியத் துவத்தை மனதில்
உள்வாங்கிக்கொண்டு நடித்திருக்கிறார்கள். கூடவே ஒத்துழைத்துள்ள கூத்துக்
கலைஞர்களும் நாடகக் கலைஞர்களும் கையூர் மக்களைக் கண்முன்
நிறுத்துகிறார்கள்.காதலின் மென்மை, செங்கொடி இயக்கத்தின் கம்பீரம்
இரண்டையும் கவித்துவச் சொற்களோடு பதிவு செய்திருக்கும் தனிக்கொடி, நா.வே.
அருள், சி.எம்.குமார் ஆகியோரின் உயிர்ப்பான பாடல்களுக்கு இசையால் உடல்
வார்த்திருக்கிறார் இசையமைப்பாளர் பி.ஆர். ரஜின். நாற்பதாம் ஆண்டுகளின்
கிராமத்தைக் காட்டியிருக்கிறார் கலை இயக்குநர் இளஞ்செழியன்.
மேலிருந்து பார்க்கிற கோணத்தில் நிகழ்வுகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
கதைமாந்தர்களின் சொந்த வாழ்க்கைக் கோணத்திலிருந்து பகிர்ந்து கொள்வதாகத்
திரைக்கதை அமைக்கப்படவில்லை. ஆயினும் செய்தியைச் சொல்கிற ஆவணப்
பதிவாகிவிடாமல் உணர்வைப் பகிர்ந்து கொள்கிற கலைப் படைப்பாக வந்திருப்பது
தொகுப்பாளர் பீ.லெனின் பங்களிப்பு.
பிரச்சாரத்திற்காகத்தான்
இந்தப் படைப்பு என்பதை ஒளிவு மறைவில்லாமல் ஒப்புக்கொண்டு, ஆனால் பிரச்சார
நெடி அளவு மிஞ்சிடாமல் உருவாக்கியிருப்பது இயக்குநர் பகத்சிங் கண்ணன்
உழைப்பு.
ஒரு பாடல் காட்சிக்கே கோடிக்கணக்கில் செலவிடப்படுகிற,
ஒரு முகத்தை நெருக்கமாகக் காட்டுவதற்கே பல்லாயிரம் ரூபாய் தேவைப்படுகிற
தொழில்நுட்ப வணிகச் சூழலில் ஒரு சவால்மிக்க பணியைச் செய்திருக்கிறார்கள்
அக்னி கலைக் கூடத்தினர்.
மக்களின் நினைவில் அழியாமல் பதிய வைக்க
வேண்டிய கதையைச் சொல்கிற இந்த ஆக்கம் மக்களிடம் பரவலாகச் செல்வது
மாற்றத்திற்காகப் போராடுகிற இயக்கங்களின் கையில் இருக்கிறது.
(‘நினைவுகள் அழிவதில்லை’ திரைப்படம் இன்று திரையரங்குகளுக்கு வருகிறது.
‘தீக்கதிர்’ ஏப்ரல் 9 இதழில் வெளியான எனது பட அறிமுகக் கட்டுரை இது.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக