நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்
ஒருவரின் நிஜ முகத்தைத் தெரிந்து கொள்ள அவருக்கு அதிகாரத்தைக்
கொடுத்துப் பார்க்க வேண்டும் என்று சொல்வார்கள். மக்களுக்காக போராடுவதாக
காட்டிக் கொண்டிருந்த மம்தாவுக்கு மேற்கு வங்க மக்கள் ஆட்சி அதிகாரத்தைக்
கொடுத்து விட்டு அவஸ்தைப்படுகிறார்கள். மம்தா முதல்வரான பின்னர் மேற்கு வங்க
மக்கள் சந்திக்கும் வேதனைகள் ஏராளம். சமீபத்தில் 22 வயதான சுதிப்தா குப்தா
என்ற மாணவர் இறந்து போனார். ரவீந்திர பாரதி பல்கலைக்கழகத்தின் மாணவர்
அவர். கல்லூரிகளில் மாணவர் பேரவைகளுக்கான தேர்தல்களை மேற்கு வங்க அரசு
சமீபத்தில் ரத்து செய்தது. இதை எதிர்த்த இந்திய மாணவர் சங்கத்தினர்
களத்தில் இறங்கிப் போராடினார்கள். சுதிப்தாவும் மாணவர்களின் போராட்டத்தில்
கலந்து கொண்டார்.
மம்தா அரசின் காவல்துறை, மாணவர்கள் மீது
மூர்க்கத்தனமான தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டது. கைது செய்யப்பட்ட
மாணவர்களை வேனில் ஏற்றிச் செல்லும் போது சுதிப்தா குப்தாவை மிருகத்தனமாக
வேனிலிருந்து வெளியே தூக்கி எறிந்துள்ளனர் காவலர்கள். பலத்த காயமுற்று,
முகம் சிதைந்து, கால் முறிந்து, குற்றுயிரும் குலை உயிருமாக
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்து போனார். இதனால் மாணவர்கள் ஆவேச
முற்றனர். மாணவர் சுதிப்தாவின் உடலைப் பார்க்க வந்த முதலமைச்சர் மம்தா,
காவல்துறைக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளார். “நடந்தது ஒரு விபத்துதான்.
இதுபோன்ற விபத்துகள் திரிணாமுல் தொண்டர்களுக்கு ஏராளமாக நடந்துள்ளது” என்று
மிக அனாயசமாகக் கூறிவிட்டு காரில் ஏறிப் பறந்து விட்டார். நீதி
விசாரணைக்கு மறுத்துவிட்டார்.பள்ளி, கல்லூரிகளில் மாணவர் அமைப்புகளுக்கான
தேர்தல் கடந்த 34 ஆண்டுகால இடது முன்னணி ஆட்சியில் தொடர்ந்து நடந்து
வந்தது. இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகளின் மாணவர்
அமைப்புகளும் மற்ற அரசியல் கட்சிகளின் மாணவர் அமைப்புகளும் முறையாக
இத்தேர்தலில் பங்கேற்று வந்தனர். இத்தேர்தல்கள் அனைத்தையும் மம்தா அரசு
தற்போது ரத்து செய்து விட்டது. இதை எதிர்த்து மாணவர்கள்
கிளர்ந்தெழுந்தார்கள். இவர்களைக் கட்டுப்படுத்த காவல்துறையைப்
பயன்படுத்தியுள்ளார் மம்தா. போலீசாரும் இளம் மாணவரின் ரத்தம் பருகி
வெறியாட்டம் நடத்தி இருக்கிறார்கள். 2011 தேர்தலில் திரிணாமுல் வெற்றி
பெற்று ஆட்சிக்கு வந்ததும் கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களும் ஊடகங்களும்
கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக மணலை
கயிறாகத் திரிப்பதிலும் வானத்தை வளைப்பதிலும் திரிணாமுலும் மம்தாவும்
வல்லவர்களாக விளங்கினார்கள். ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு வழங்கிய
இடது முன்னணி அரசின் திட்டத்தை மிகவும் இழிவுபடுத்தி, ‘இது மத்திய
அரசினுடைய திட்டம் மாநில அரசினுடைய திட்டம் இல்லை’ என்று வாய் கூசாமல் பொய்
பேசியவர்தான் மம்தா, ஆனால் ஒரு கிலோ அரிசி ரூ5.65க்கு மாநில அரசுகளுக்கு
மத்திய அரசு விற்பனை செய்கிறது. ரூ.3.65-ஐ கூடுதல் மானியமாக வழங்கி இரண்டு
ரூபாய் அரிசி திட்டத்தை இடது முன்னணி அரசு அமல்படுத்தியது என்பது தான்
மறக்க முடியாத உண்மை. ‘இஸ்லாமிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது
இந்துக்களின் கோட்டாவில்தான்’ என பி.ஜே.பிக்கு ஒரு படி மேலே நின்று மம்தா
குற்றம் சுமத்தினார். பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு தவிர, முஸ்லிம்
மக்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஒதுக்கீட்டை இந்தியாவிலேயே மேற்கு வங்க
அரசுதான் செய்தது.மத்திய ஐ.மு.கூட்டணி ஆட்சியில் ரயில்வே துறை அமைச்சராக
இருந்த போது 1.80 லட்சம் பேருக்கு வேலை தந்ததாக விளம்பரப்படுத்திக்
கொண்டார். ஆனால் ரயில்வே பட்ஜெட்டில் 1.80 லட்சம் பேருக்கு புதிதாக ஊதியம்
வழங்குவதற்குரிய நிதி ஒதுக்கீடோ, அறிவிப்போ எதுவும் இல்லை என்பதுதான்
உண்மை. ‘ரயில்வே துறையில் பயணிகள் கட்டணத்தையோ, சரக்குக் கட்டணத்தையோ
உயர்த்த மாட்டேன்’ என்றும் ‘வரி போட மாட்டேன்’ என்றும் தன்னைக் காட்டிக்
கொண்டார். ஆனால் ரயில்வே துறையை பெரும் கடனாளித் துறையாக மாற்றிச் சென்றதே
மம்தா தான்.முதல் இரண்டு ஆண்டுகளில் மொத்தமாக 65,539 கோடி ரூபாய் கடன்
பெற்றுள்ளார். அதன் காரணமாகத்தான் தற்போது இரண்டு மடங்காக ரயில் கண்டணம்
உயர்த்தப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான
ரயில்வே திட்டங்களை வழங்கியதாக அள்ளி விட்டார்.
நாடு முழுமைக்கும்
இரண்டு ஆண்டுகளுக்கான பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு ரூ.1 லட்சம் கோடிக்கு
குறைவாகத்தான் இருந்தது. பிறகு எங்கே மேற்கு வங்கத்தில் மட்டும் ஒரு லட்சம்
கோடிக்கான திட்டம் வந்தது. இப்படி பல பொய்களைச் சொல்லி, தேர்தலில் மம்தா
வெற்றி பெற்றாலும் மக்களுக்கான ஆட்சி நடத்துவதில் படுதோல்வியைத்
தழுவியுள்ளார். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதில் மம்தா புதிய சாதனையே
படைத்துள்ளார். எந்த நேரத்தில் எதைப்பேசுவார். யாரை எப்படித்
தூக்கியெறிவார் என்பது யாருக்கும் தெரியாது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு
முற்றிலும் கெட்டுள்ளது.உரவிலை உயர்ந்தபோது, ‘பாரதப்பிரதமரை நான் அடிக்கவா
முடியும், அப்படியே அடித்தால் என்னை பெண் குண்டர் எனக் கூறுவார்கள்’ என
விமர்சனம் செய்தார்.மம்தா பற்றி முகநூலில் பேராசிரியர் ஒருவர்
கேலிச்சித்திரம் வரைந்ததற்கு, உடனடியாக அவரை கைது செய்தார். புத்தகக்
கண்காட்சியைப் பார்க்கச் சென்ற போது மக்கள் கூட்ட நெரிசலில் கார் சிக்கிக்
கொண்டதால் வந்து சேர தாமதமான நேரத்தில் ஆவேச முற்று காவலர்களை சவுக்கால்
அடிக்க வேண்டுமென்று கடுமையாகச் சாடினார். எந்த இடத்திலும் கோபப்படுவார்.
யாரை வேண்டுமானாலும் எப்படியும் விமர்சிப்பார். தன்னைப்பற்றிய சிறு
விமர்சனத்தையும் தாங்கிக் கொள்ள மாட்டார். இடது முன்னணி ஆட்சிக்கு எதிராக
எந்த சிங்கூர் விவசாயிகளைப் பயன்படுத்தினாரோ அவர்களுக்கு இன்னமும் நிலத்தை
மீட்டுத்தர முடியவில்லை. ஆனால் அந்த நிலங்களை விவசாயிகளிடமிருந்து பறித்து
பழைய நிலப்பண்ணையாளர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
இவர் ஆட்சிக்கு
வந்த பிறகு 93 சி.பி.எம் தோழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெண்கள் மீதான
வன்முறை அதிகரித்துக் கொண்டுள்ளது. சி.பி.எம். முன்னாள் அமைச்சர் அப்துல்
ரஜாக் முல்லாவை காவல்துறை நேருக்கு நேராக சுட்டது. கல்லூரிப்
பேராசிரியர்களை திரிணாமுல் குண்டர்கள் கல்லூரிக்குள் சென்று கடும் தாக்கதல்
நிகழ்த்தினார்கள். மருத்துவம், சுகாதாரம் மிகவும் பின்தாங்கிய நிலைக்குச்
சென்றுள்ளது. சுதிப்தா மரணத்திற்குப் பின்னால் மிட்னாப்பூர் திரிணாமுல்
மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ராஜினாமா செய்துள்ளார். ‘ இளம் மாணவர்களின்
உள்ளங்களைப் புரிந்து கொள்ளாதவர்’ என்று மம்தாவை விமர்சனம் செய்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் என்பது ஸ்ரீபரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், அன்னை
தெரசா, ராஜாராம் மோகன்ராய், சுபாஷ் சந்திரபோஸ், ரவீந்திரநாத்தாகூர், 23
ஆண்டுகள் தொடர்ந்து முதல்வராக இருந்த ஜோதிபாசு... இப்படிப்பட்ட வரலாற்றுப்
புகழ் மிக்க தலைவர்கள் வாழ்ந்தது. அப்படிப்பட்ட வங்க மண்ணில் மம்தாவின்
மலிவான அரசியல் நடவடிக்கை கேலிக்குரியதாக உள்ளது.
நிதி தருகிறேன் என்று
முதல்வர் முன் வந்தபோது சுதிப்தாவின் தந்தை வாங்க மறுத்து விட்டார். “நிதி
தேவையில்லை. நீதிதான் தேவை” என்று கூறிய அந்த தந்தையின் வீரமும் உறுதியும்
வங்க மண்ணின் வீரம் செறிந்த வரலாற்றுத் தொடர்ச்சியே ஆகும். பதவி என்பது
மக்களுக்கான சேவை, எளிமை என்பது இயல்பு நிறைந்த வாழ்க்கை என மக்களோடு
மக்களாக வாழ்பவர்களே சிறந்த தலைவர்களாக இருக்க முடியும். “இறப்பு என்பது
துரதிர்ஷ்ட வசமானது, இந்த மாணவர் இறந்ததும் துரதிர்ஷ்டவசமானதுதான்” என்று
சுதிப்தாவைப் பார்க்க வந்த முதல்வர் மம்தா சொல்லியிருக்கிறார்.உண்மை தான்!
இறப்பு என்பது துரதிர்ஷ்டவசமானதுதான்! ஆனால் அதைவிட துரதிஷ்டம் அவர் மேற்கு
வங்கத்தின் முதல்வரானதுதான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக